மின்னல் விழியே குட்டித் திமிரே – 15

0
734

1551018907221|679x452
மின்னல் விழியே – 15

இடுப்பில் கை வைத்து தன்னை முறைத்துக் கொண்டிருந்த குழந்தையை பார்த்த அகில், அதன் அழகில் மயங்கி தான் போனான்.. சிறு வயது வினு தன் முன்னால் நின்றிருப்பது போன்று ஒரு பிரம்மை தோன்ற., ஹனியை கண்ணெடுக்காமல் பார்த்தான். தன் பதிலுக்காக குழந்தை எதிர்பார்த்து நிற்கிறாள் என்பது புரியவும்.,

“நான்.. நான்… இந்த வீட்டுக்கு கெஸ்ட்…” என்ன சொல்வது என்று தெரியாமல் வாயில் வந்ததை கூறினான்.. அவன் கூறியதும், இடுப்பில் இருந்த வலது கையை எடுத்து கன்னத்தில் தட்டியவள்., “கெஸ்டா????” என்று தலைசாய்த்து கேட்க., அகிலின் தலை தன்னால் “ஆமாம்” என்று ஆடியது..

ஹனியின் பாவனையில் கவரப்பட்டவனாய் அவள் உயரத்திற்கு குனிந்தவன்., “நீங்க யாரு?” என்றான் அவள் யாரென்று தெரிந்தும் கொள்ளும் ஆர்வத்தில்…

“நானா???? நான் ஹனி…. உனக்கு தெரியாதா???” இருகைகளையும் அவன் முன்னால் தெரியாதா என்பது போல் ஹனி ஆட்ட., அகிலின் நாடி நரம்பு மொத்தமும் குழந்தையை வாரி அணைத்துக் கொள்ள சொல்லி அவனை உந்தி தள்ளியது. அவள் தலையை செல்லமாக கலைத்துவிட்டவன் இங்கே என்ன செய்கிறாள் என யோசித்தவாறே சுற்றும் முற்றும் பார்த்தான், அவளது அன்னை யாரவது தென்படுகிறார்களா என்று…

யாரும் இல்லாது போகவும்., “ஹனி குட்டி…. உங்க மம்மி எங்க????” அவளை கையில் தூக்கி கொண்டவன் அவளிடம் கேட்க.,

மம்மி என்றதும் ஹனிக்கு வினுவின் ஞாபகம் வந்தது. அவள் மேல் இருந்த கோபத்தில் உதட்டை பிதுக்கியவள்., “அவ பேட் கேர்ள்.. பேபிய விட்டுட்டு டேடி கூட ஊர் சுத்துற….” தன்னை அவளோடு அழைத்து செல்லவில்லை என்று ஏக கோபத்தில் இருந்தவள் அகிலிடம் வினுவை பற்றி புகார் செய்தாள்.

“ஓ… உங்க அம்மா வெளிய போயிருக்காங்களா??? ஒரு வேளை குழந்தையின் வீட்டினர் வெளியே சென்றிருப்பதால், வினுவிடம் பார்த்துக் கொள்ள சொல்லி சென்றிருப்பார்களோ என்று அவன் நினைத்தான்.,

அம்மா என்றதும் ஹனிக்கு சுமியின் ஞாபகம் வர, முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டு, “அம்மா ரொம்ப பேட் கேர்ள்.. அவ ஸ்டார்ல இருக்கா…. என்னை பாக்க வரவே இல்ல.. நீயும் ஸ்டார்ல இருந்து வர்றியா???” அவன் தோளில் தொங்கி கொண்டிருந்த பையை பார்த்தவாறு ஹனி கேட்க., அகிலுக்கு ஒன்றும் புரியவில்லை…

“என்னடா சொல்ற???? எனக்கு புரியல…” குழப்பமாக அகில் ஹனியை பார்த்தான். ஆனால் அந்த செல்ல வாண்டோ,

“உனக்கு இது கூட புரியலியா… அய்யோ அய்யோ… இடியட்” கைதட்டி சிரித்தவிட்டு, அவன் கைகளில் இருந்து இறங்கி பக்கி மாமா என்று கத்தியவாறே வீட்டுக்குள் ஓடினாள்…

ஹனியின் பக்கி மாமா என்ற அழைப்பை நினைத்து சிரித்தவன் நிச்சயம் தன் தம்பி விக்கியை தான் பக்கி என்று அழைக்கிறாள் என புரிந்தவனாக வாசல் அருகே சென்றான்.. அதற்குள் ஹனி உள்ளே சென்று விக்கியை அழைத்து வந்தாள்…

யாராக இருக்கும் என்று யோசித்தவாறே வந்த விக்கி அகிலை அங்கு கண்டதும் ஜெர்க்காகி நின்றான்…

“பக்கி மாமா… பாரு.. கெஸ்ட்..” ஹனி அவன் கையை பற்றி உலுக்க., விக்கியும் முயன்று வரவழைத்த புன்னகையுடன்.,

“வா அண்ணா… எப்போ வந்த????” அடுத்து அகில் என்ன கேள்விகள் எல்லாம் கேட்பான் என்று அவன் மனம் பட்டியல் இட ஆரம்பித்தது..

“இப்போ தான் வந்தேன் விக்கி…. வினு எங்கே???” விக்கியோடு வீட்டிற்குள் நுழைந்தவன் தங்கையை தேடினான்…

நாளை சுமி வருவதால் அவளுக்காக தனது பரிசு என்று வினு புடவை வாங்க திருவை அழைத்துக் கொண்டு சென்றிருக்க., இப்போது திடிரென்று வந்து அண்ணனிடம் என்ன சொல்வது எனத் தெரியாமல் வினுவை மனதில் சப்பித்தவன்.,

“அது அண்ணா… வினு அவ ப்ரெண்ட்ஸ் கூட வெளிய போய்ருக்கா…” என்று பொய் உரைத்தான்.

“ம்ம் சரி விக்கி… யார் குழந்தை இது…” தன் பொம்மையோடு விளையாடிக் கொண்டிருந்த ஹனியை காண்பித்து அகில் தன் அடுத்த கேள்வியை கேட்க… விக்கிக்கு பயத்தில் வியர்த்து வழித்தது..

வியர்வையை துடைத்துக் கொண்டவன்., “அது அண்ணா… இது பக்கத்து வீட்டு குழந்தை.. அவங்க வெளிய போய்ருக்காங்க… அதான் இங்க இருக்கா…” என அடுத்த பொய்யை அவிழ்த்துவிட்டான்…

அகில் எடுத்து ஏதோ கேட்க வாயெடுப்பதற்குள் விக்கியிடம் ஓடி வந்த ஹனி அவன் சட்டையை பற்றி இழுத்து.,

“பக்கி மாமா… ஐஸ்கிரிம் வாங்கி தரேன் சொன்ன… வாங்கி குடு….” வினுவை தேடி அழுதவளை விக்கி தான் ஐஸ்கிரம் வாங்கி தருவதாக சொல்லி சமாதானம் செய்து வைத்திருந்தான்.. அதை கேட்டு தான் ஹனி அவன் சட்டையை பற்றினாள்…

“ஹனி செல்லம்… ஐஸ்கிரிம் நாளைக்கு வாங்கி தரேன் டா.. இப்போ சமத்தா விளையாடுவிங்களாம்…” ஓரக்கண்ணால் தன் அண்ணனை பார்த்தவாறு விக்க கூற., ஹனியின் முகம் அழுகையில் கசங்கியது..

ஹனியின் கண்ணில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் வந்ததாக வினுவிற்கு தெரிந்தாலும், வினு விக்கிக்கு வேப்பிலை அடித்து விடுவாள். அதனால் அவன் எப்போதும் ஹனியை விளையாட்டுக்காக கூட அழ வைக்க மாட்டான்… அதிலும் இப்போது இருவரும் நண்பர்கள் வேறு… அவளை எப்படி சமாதானம் செய்வது எனத் தெரியாமல் விக்கி கையை பிசைய…

அவர்கள் இருவரையும் கவனித்த அகில்., “குட்டிமா நான் கூட்டிட்டு போய் வாங்கித் தரேன்… வர்றிங்களா????” என்றான்.

கண்களில் கண்ணீர் தேங்கி நிற்க உதட்டை பிதுக்கியவாறு நின்றிருந்த ஹனியிடம் அவன் கேட்க., ஹனி விக்கியை திரும்பி பார்த்தாள்…

விக்கியும் சரி என்பது போல் தலையசைக்க.. ஹனியின் முகம் பிரகாசமானது… சந்தோஷத்தில் துள்ளி குதித்தவள் அகிலின் கால்களை கட்டிக் கொண்டாள்.. விக்கி சென்று வினுவின் ஸ்கூட்டி சாவியை எடுத்து வந்து அகிலின் கையில் கொடுக்க, அகிலின் புருவம் யோசனையில் சுருங்கியது…

“வினு ஸ்கூட்டில போகலையா???” தான் வரும் போது வெளியே நின்றிருந்த ஸ்கூட்டியை எப்படி கவனிக்காமல் விட்டோம் என்று யோசித்தவாறே அகில் கேட்க. விக்கி விழித்தான்…

“வினு ஆபிஸ்ல வொர்க் பண்ற ஒரு ப்ரெண்ட் கூட கார்ல போயிருக்கா… அவங்க ட்ராப் பண்ணிடுவாங்க..” உண்மையும் பொய்யையும் கலந்தடித்து விக்கி கூற., அகிலும் சரியென்றுவிட்டு ஹனியை அழைத்து சென்றான்…

அவர்கள் இருவரும் செல்லவும் சோபாவில் தொப்பென்று விழுந்த விக்கி பெருமூச்சு ஒன்றை வெளியேற்றினான்…. உடனடியாக வினுவிற்கு அழைத்து கூற வேண்டும் என நினைத்தவன், அவள் அலைபேசிக்கு அழைக்க, அதுவோ நீங்கள் அழைக்கும் நபர் தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ளார் என்ற செய்தியை கூறியது….

“ப்ச்ச்… இது வேற…” ஊரில் உள்ள அனைத்து செல்போன் டவர்களையும் மனதுக்குள் வசை பாடியவன் திருவிற்கு அழைக்க… அப்போதும் அதே பதில் வந்தது..

மீண்டும் மீண்டும் விக்கி முயல., சிக்னல் கிடைக்கவில்லை… இனி என்ன செய்வது என யோசித்தவன் வினுவின் வரவுக்காக காத்திருக்க தொடங்கினான்…

அந்த துணிக்கடையை அல்லோல்படுத்திக் கொண்டிருந்தாள் வினு… கடை சிப்பந்தியும் அங்கிருந்த முக்கால்வாசி புடவைகளை காண்பித்துவிட்டார்.. எதுவும் அவளுக்கு பிடிக்கவில்லை…

அவளது தேடுதல் வேட்டையை சுவாரஸ்யமாக பார்திருந்தான் திரு…வினுவோடு இந்த கடைக்குள் நுழைந்து கிட்டதட்ட ஒரு மணி நேரம் ஆகப்போகிறது. ஆனால் இதுவரை வினு ஒரு துணியை கூட பிடித்திருப்பதாக கூறவில்லை…ஒவ்வொரு புடவையிலும் இது சரியில்லை அது சரியில்லை என்று கடுப்படித்தாள்.

அவளது செய்கையை பார்த்தவாறு இருந்தவனுக்கு அப்போது தான் ஒரு சந்தேகம் தோன்றியது… அதை அவளிடமே கேட்டுவிடுவோம் என்று நினைத்தவன்,

“வினு” என்க.,

தன் முன்னால் புடவை மலையாக குவிந்திருக்க, அதனுள் இருந்து எட்டிப்பார்த்தாள் வினு….. முகத்தில் அத்தனை எரிச்சல்…

“என்ன அரசு???”

“உனக்கு புடவை எடுக்க தெரியுமா தெரியாதா???” என்றவனின் கண்கள் சிரிப்பில் மின்னின…

அவன் கேள்வியில் கண்ணை விரித்து பார்த்தவள் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு., தாழ்ந்த குரலில் “சத்தமா சொல்லாத அரசு… எனக்கு தெரியாது தான்” என்றாள் பாவமாக..

அவள் கூறிய அழகில் சிரித்தவன்., தன் குரலை அவளை போலவே தாழ்த்தி, “அப்போ உனக்கு தெரியாதா” என்றான்…

தலையை இடமும் வலமுமாக ஆட்டியவள், “ம்ம்ஹும்… நான் புடவை அதிகம் கட்ட மாட்டேன்… அதனால அம்மா தான் புடவை செலக்ட் பண்றது.. கட்டிவிடுறதுன்னு எல்லாம் பண்ணுவாங்க..” அப்பாவியாக கூறியவள் அவனை பார்க்க., திருவிற்கு சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது..

அவன் வீட்டில் அம்மா இல்லை என்பதாலோ என்னவோ சுமி மிகவும் பொறுப்பு… அதிலும் புடவையென்றால் அவளுக்கு கொள்ளை பிரியம்… மாதம் ஒரு முறை திருவை புடவை வாங்குவதற்காக அழைத்து வந்துவிடுவாள்.. அதனால் திருவிற்கும் ஓரளவிற்கு புடவைகளை பற்றி தெரியும்.

“சரி சரி நான் ஹெல்ப் பண்றேன்” என்றவன் புடவைகளை பார்க்க துவங்க., வினு அவனை ரசிக்க துவங்கினாள்… நேற்றிலிருந்து அவளிடம் அதிகம் பேசாமல் அவள் அருகில் வந்தால் கூட ஒதுங்கி சென்றுக் கொண்டிருந்தான்.. வினு தான் அவன் மனநிலை புரிந்து, சுமிக்கு கிப்ட் வாங்க வேண்டும் என கட்டாயப்படுத்தி அழைத்து வந்திருந்தாள்…

இதழில் தோன்றிய குறுஞ்சிரிப்புடன் அவள் அவனை பார்த்திருக்க அதற்குள் திரு இரண்டு புடவைகளை தேர்வு செய்து அவள் கையில் கொடுத்தான்… ஒன்று அவளுக்கும் மற்றொன்ற சுமிக்கும்…

அவன் தேர்வு செய்த புடவையை பார்த்தவள் அசந்து போனாள்…. ஒன்று கத்தரிப்பூ கலரில் அம்சமாக இருந்தது என்றால் மற்றொன்று மயில் கழுத்து நிறத்தில் கண்ணை கவர்ந்தது…. அவளும் முதலில் இந்த புடவைகளை பார்த்தாள் தான். ஆனால் அந்த புடவையில் அவள் பார்த்த போது தெரியாத அழகு இப்போது அவன் தேர்வு செய்த போது தெரிந்தது.

“வாவ்வ்… அரசு… இட்ஸ் பியூட்டிஃபுல்…..” உற்சாகமாக கூவியவள் அவனை மெலிதாக அணைத்துக் கொள்ள, அவள் முகத்தில் தோன்றிய வர்ணஜாலங்களை ரசித்திருந்தான் திரு…

“பிடிச்சிருக்கா????”

“ரொம்ப பிடிச்சிருக்கு…” இரண்டு புடவைகளையும் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்டு வினு கூற.,

“ஹம்ம் சரி.. உனக்கு பிடிச்சதை எடுத்துக்கிட்டு, இன்னொன்றை சுமிக்கு கொடு…” என்றான்.

“சரி டா…” தலையை ஆட்டியவள் அடுத்ததாக குழந்தைகள் செக்ஷனுக்கு செல்ல.. அவள் கையை பிடித்து தடுத்தான் திரு.

“என்னடா அரசு… ஹனிக்கும் ட்ரெஸ் எடுக்கணும்…” தன் கையை பற்றியிருந்தவனிடம் வினு உரைக்க,

“வேண்டாம் புஜ்ஜி மா… வீட்ல தான் நிறைய இருக்கே…” திரு மறுத்தான். அதில் வினு அவனை உக்கிரமாக முறைத்தாள்…

“என்ன விளையாடுறியா?? அவ என்னோட பொண்ணு,,, நான் எடுத்துக் கொடுப்பேன்… நீ அதுல தலையிடாதே அரசு…” கோபமாக கூறியவள் கைகளை கட்டிக் கொண்டு நிற்க., திருவிற்கு கோபம் வரவில்லை… மாறாக அவளின் அன்பு கண்டு மனம் நெகிழந்தது…

“சரி சரி… கோபப்படாதிங்க புஜ்ஜி மா… ஹனிக்கு நம்ம வீட்டு பக்கம் இருக்கிற டிரெஸ் ஷாப்பில் தான் ரெகுலரா எடுப்பேன்… அங்க போகலாமா????” தன் இரு கைகளையும் உயர்த்தி, சரண்டர் என்பது போல் அவன் வைக்க… வினுவின் முகம் மலர்ந்தது…

இரண்டு புடவைகளையும் பேக் செய்தவள்., பணம் செலுத்த வந்த திருவை தடுத்து தானே பணத்தை செலுத்துவேன் என்க., திரு ஒத்துக் கொள்ளவில்லை…

இறுதியில் ஒரு புடவைக்கு திரு பணம் செலுத்துவதாகவும் மற்றொன்றிற்கு வினு செலுத்துவதாகவும் முடிவு செய்து பணத்தை செலுத்தினார்கள்…

அடுத்ததாக அவர்களின் வீடு இருக்கும் பகுதிக்கு வந்தவர்கள் திரு சொன்ன கடைக்கு செல்ல…. அவர்களை கூர்மையான விழிகளோடு பார்த்திருந்தான் அகில்…

ஹனியை அழைத்து வந்தவன் அந்த துணிக்கடையின் அருகே இருந்த ஐஸ்கிரிம் பார்லரில் தான் ஐஸ்கிரிம் வாங்கினான்… வீட்டில் சென்று உண்பதாக ஹனி கூறிவிட, இருவரும் வெளியே வந்தனர்…ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்தவன் தன்னை கடந்து சென்ற காரில் இருந்த பெண் வினுவை போல் இருக்கவும், அந்த காரை திரும்பி பார்த்தான்.. அவன் பின்னால் பைக் வைத்திருந்த பைக்காரன் அவனை நகர சொல்ல, அவனும் தனது ஸ்கூட்டியை ஒதுக்கி வைத்துவிட்டு மீண்டும் அந்த கார் தென்படுகிறதா என்று கண்களால் துளாவினான்.

தன் பார்வை வட்டத்தில் கார் இல்லை என்றதும், அது வேறு யாரோவாக இருக்கும் என்று நினைத்தவன், மீண்டும் தன் ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்ய, சரியாக வினு திருவோடு கடையினுள் செல்லும் காட்சி தென்பட்டது. திருவின் முகம் சரியாக தெரியவில்லை ஆனால் வினுவின் முகத்தை பார்த்தான்.

தான் கண்ட காட்சியை நம்ப முடியாமல் நின்றிருந்தான் அகில். ஆண் பெண் நட்பை தவறாக நினைக்கும் அளவிற்கு கட்டுப்பெட்டியானவன் இல்லை என்றாலும், அவள் முகத்தில் தெரிந்த சந்தோஷ மின்னல்… அது எதனால் என்பதை தெளிவாக காட்டுகிறதே.. அதோடு மனதில் காதலை சுமப்பவனால் தன் தங்கையின் முகத்தை பார்த்தே அவள் மனதை படிக்க முடிந்தது… ஒரு நொடி தான் அவள் முகத்தை பார்த்தான் என்றாலும் அதில் தெரியும் அளவு கடந்த காதல் அவனை பயமுறுத்தியது..

இதையெல்லாம் விட தனக்கு வந்த போன் மிரட்டலும் போட்டோவும் கண்முன் தோன்றி அச்சுறுத்தியது… அதற்கு மேல் அங்கு நிற்க முடியாமல் ஹனியை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்துவிட்டான்…

வந்ததிலிருந்து நெற்றியை தேய்த்தவாறே கண்மூடி ஏதோ யோசனையில் இருப்பவன் போல் இருந்த அகிலின் தோற்றத்தில் விக்கிக்கு குளிரெடுத்தது… அதிலும் வந்தவுடன் விக்கியை பார்த்து “நீயும் இதுக்கு கூட்டா???” என்று கேட்ட கேள்வியில் அவனுக்கு புரிந்து போனது… அகில் எதையோ கண்டுபிடித்துவிட்டான் என்று…

விக்கி பயத்தில் நிற்க, அதற்கு மேல் அகில் அவனிடம் பேசவில்லை.. பேச முயன்ற அவனையும் பேசவிடவில்லை. விக்கியும் அவனை தொல்லை செய்யாமல் ஹனியை கவனித்துக் கொண்டு இருந்தான்.

ஹனிக்கு உடைகள் எடுத்துவிட்டு திருவும் வினுவும் காரில் திரும்பி வந்துக் கொண்டிருந்தார்கள்…வினு திருவின் தோளில் சாய்ந்திருக்க, திரு மெதுவாக காரை செலுத்திக் கொண்டிருந்தான்…

நாளை சுமி வந்ததும் என்ன நேரும் என்று வினுவிற்கு நெஞ்சுக் குழியில் பயம் இருந்தாலும்.. இந்த நொடியை இழக்க விரும்பாமல் திருவோடு ஒன்றினாள்… அவளின் செய்கை புரியாவிட்டாலும் ஒற்றை கையால் அவளை அணைத்துக் கொண்டான்…

“அரசு…”

“என்னடா ???? ஏன் ஒருமாதிரி இருக்க???” கடையில் இருந்த போது அவளிடம் இருந்த உற்சாகம் குறைந்திருக்கவே என்னவென்று விசாரித்தான்..

“நாளைக்கு சுமி அண்ணி வந்ததும்.. நம்ம ஹனி அவங்க கூட போய்டுவாளா??? இந்த மம்மியை மறந்துடுவாளா????” என்றவளின் குரல் உள்ளே சென்றிருந்தது..

அவளை அவனால் புரிந்துக் கொள்ள முடிந்தது. இந்த ஒரு மாதமாக அவர்களின் பிணைப்பை பார்த்துக் கொண்டு தானே இருக்கிறான்.. அவனுக்கும் ஹனியை பிரிந்து இருப்பது என்பது முடியாத காரியம் தான்.. அவளை தன்னோடு இறுக்கி கொண்டவன்.,

“நம்ம ஹனி நம்மளைவிட்டு எங்கேயும் போக மாட்டா…. சுமியும் நம்ம கூட தான் இருக்க போற… நாம எல்லாரும் இனி ஒன்னாவே இருக்கலாம்… சுமி வந்ததும் முதல் வேலையா உன் வீட்ல பேசணும்..” அவன் தோளில் சாய்ந்து அவனை நிமிர்ந்து பார்த்துக் கொண்டிருந்தவளின் நெற்றியில் மெலிதாக முட்டினான்…

“அரசு… என்னை விட்டுட மாட்டியே????” மனதில் இருந்த அச்சங்களின் விளைவு அவனிடம் கேட்க வைத்தது… அவள் கேள்வியில் அவளை பார்த்தவன் அவளை தன்னிடம் இருந்து விலக்கிவிட்டு,

“உன்னை விட்டுட்டு நான் என்ன செய்வேன் புஜ்ஜி மா… இந்த ரெட்டவாலு குரங்கு இங்க இருக்கா” என்றவன் தன் நெஞ்சை தொட்டுக் காண்பித்தான்… “உன்னை விட்டு நான் பிரியுற நாள், நான் இந்த உலகத்தைவிட்டே பிரிஞ்சி போற நாளாத்தான் இருக்கும்” என்றவன் அவள் விழிகளை பார்க்க., கண்கள் கலங்க அவனை கட்டியனைத்தவள் அவன் கன்னத்தில் இதழ் பதித்தாள்.

“லவ் யூ டா அரசு… நானும் நீ இல்லாட்டி செத்து போய்டுவேன்..” அவன் கழுத்தை வளைத்து பிடித்து அவன் நெஞ்சில் முகம் புதைத்தாள்…அவனும் அவன் தாடையை அவள் உச்சந்தலையில் சாய்த்திருந்தான்.

இருவரும் ஒவ்வொரு மனநிலையில் இருக்க திருவின் அலைபேசி அடித்தது.. அதை எடுத்து பேசியவனின் முகத்தில் பதட்டம் ஏற வினு அவனிடம் இருந்து விலகி என்னானது என்பது போல் பார்த்திருந்தாள்…

படபடப்பாக பேசியவன் இறுதியில் உடனே வருவதாக கூறி போனை வைத்தான்..

“என்னாச்சு அரசு..” அவன் பதட்டம் அவளையும் தொற்றிக் கொண்டது..

“ஹரிக்கு ஆக்சிடென்டாம்…” என்றவன் காரை வேகமாக செலுத்த,

“அய்யோ அண்ணாவுக்கு என்னாச்சு??”

“சின்ன அடிதானாம்… டாக்டர் இன்னைக்கு நைட் ஹாஸ்பிட்டல்ல இருக்க சொல்லியிருக்காங்களாம்… அதனால தான் என்னை வர சொல்றான்..” மது பிரசவத்திற்காக அவள் வீட்டில் இருப்பதால் ஹரி அவளுக்கு அழைக்கவில்லை அதோடு அவளுக்கு தெரிந்தால் நிச்சயம் பயந்துவிடுவாள் என்பதால் திருவிற்கு அழைத்திருந்தான்…

“சரி நானும் வரேன்” வினு கூற, திரு மறுத்தான்…

“வேண்டாம் புஜ்ஜி மா… நான் பார்த்துட்டு வரேன் இப்போவே லேட்டாகிடுச்சு… ஹனியும் உன்னை தேடுவா…”

“ம்ம் சரி… நான் நாளைக்கு அண்ணாவை பார்க்க வரேன்…” திரு கூறியதும் சரியென்பதால் அதை ஒத்துக் கொண்டாள்…

வினுவை வீட்டில் விட்டவன் அப்படியே கிளம்பி விட, வினு திருவுடன் இருந்த நிமிடங்களை அசை போட்டவாறே வீட்டினுள் நுழைந்தாள்…

விக்கி சோபாவில் அமர்ந்து வாசலையே பார்த்துக் கொண்டிருந்தான்.. வினு வரவும் அவளிடம் அகில் வந்திருப்பதை கூறுவதற்க்காக அவன் ஏழும்ப வினுவோ,

“ஹேய் பக்கி….. என்னடா சோகமா இருக்க??? இங்க பார்த்தியா” என்றவள் அவள் கையில் இருந்த பைகளை அவனிடம் காட்டினாள்…

“என் கூடவெல்லாம் ஷாப்பிங் போன ஒன்னும் வாங்க முடியாதுன்னு சொன்ன தானே டா… இப்போ பாரு., என் மச்சான் என் கூட இருந்து பொறுமையா செலக்ட் பண்ண ஹெல்ப் பண்ணினான்… என் மச்சானை யாருன்னு நினைச்ச??? அவன் சொக்க தங்கம் டா.” தங்களோடு ஷாப்பிங் வர சொன்ன போது விக்கி அவளுக்கு புடவை எடுக்க தெரியாததை வைத்து வெறுப்பேற்றியிருந்தான் அதனால் அவனிடம், தான் எடுத்து வந்துவிட்டேன் என்று கூறி பெருமை பீற்றினாள்…

அகில் இருப்பதை உணராமல் அவள் பேசிக் கொண்டே போக விக்கி தலையில் அடித்துக் கொண்டான்.. அவளை நிறுத்துவதற்காக அவன் காண்பித்த சைகை எதையும் அவள் கண்டுக் கொள்ளவில்லை… அவளது முழு கவனமும் தன்னை வெறுப்பேற்றிய விக்கியை தானும் வெறுப்பேற்ற வேண்டும் என்பதில் குறியாக இருந்தது..

“இனியாச்சும் என்னை கிண்டல் பண்றதுக்கு முன்னாடி யோசிச்சி பேசு… இல்லாட்டி என் மச்சான் கிட்ட சொல்லி உன்னை ஆபிஸ்ல வச்சி செஞ்சிடுவேன்… பார்த்துகோ…” என்றவளை கொலைவெறியோடு நோக்கினான் விக்கி…

‘லூசு லூசு… கொஞ்சம் திரும்பி பாருடி… அண்ணன் நிற்கிறான்… உன் வாயல நீயே கொடுக்கிற வாக்குமூலத்தை வச்சி அவன் தான் உன்னை செய்ய போறான் இதுல நீ என்னை வச்சி செய்ய போறியாக்கும்…” மனதில் வினுவை கேலி செய்தவன் வெளியே…

“வினு … ஷ்ஷ்ஷ்” என்று பின்னால் நின்றிருந்த அகிலை கண் ஜாடை காட்டினான்..

அதை புரிந்துக் கொள்ளாதவளோ, “என்னடா??? கண்ணுல தூசி விழுந்திடுச்சா????” என்றவள் அவனை நெருங்க,

“ம்ம்…ஆமா மண்ணு விழுந்திடுச்சு… நீயும் ஒரு லாரி மண்ணை கொண்டு வந்து கொட்டு…” தான் சொல்வதை அவள் புரிந்தக் கொள்ளாத கோபத்தில் விக்கி சலித்துக் கொண்டான்..

“என்னடா உளறுற???? ம்ப்ச்… நானே என் லவ்வர் பாய் கூட ஷாப்பிங் போய்ட்டு வந்த சந்தோஷத்துல இருக்கேன்.. நீ அதை கெடுக்காத… என் பொண்ணு எங்க???? ஹனி குட்டி….” என்றவளின் கண்கள் ஹனியை தேடி வீட்டினுள் அலைபாய்ந்தது…

ஹனியை காணததும் தன் அறையில் இருக்கிறாளோ என்ற சந்தேகத்தில் வினு தன் அறைக்கு செல்ல திரும்ப… அவளை அழுத்தமான பார்வையுடன் பார்த்திருந்தான் அகில் குமார்.

தன் மார்புக்கு குறுக்காக கைகளை கட்டிக் கொண்டு, மாடிப்படியருகே நின்று அவளை பார்த்திருந்தவனின் விழிகள் அவளை குற்றம் சுமத்தியது… தன் அண்ணனை அங்கே எதிர்பாரதவள் அதிர்ச்சியில் சிலையாக… வாயோ… “அ..அண்..அண்ணா” என்று குழறியது….

“யார் அந்த மச்சான் வினு????” அவளது திகைப்பை கண்டுக் கொள்ளாவதவன் அவள் கண்களை நேருக்கு நேராக பார்த்தான்.

அவன் அனைத்தையும் கேட்டுவிட்டான் என்று புரிந்துவிட, இதற்கு மேல் மறைக்க வேண்டாம் என்று நினைத்தவள் அவன் பார்வையை துணிவுடன் எதிர்கொண்டாள்…

காதலிப்பது ஒன்றும் தவறில்லையே என்ற நிமிர்வு அவளிடம்… தங்கையின் திகைப்பையும் அதன் பின் அவளது நிமிர்வையும் கணக்கெடுத்துக் கொண்டது அகிலின் கண்கள்…

“அண்ணா… நான் ஒருத்தரை விரும்புறேன்…” இதயம் படபடவென அடித்துக் கொள்ள…. உண்மையை கூறினாள்…

அவள் கூறியதும் கோபத்தில் கண்கள் சிவக்க, அவளை அடிக்க கை ஓங்கியவன் விக்கியின் “அண்ணா” என்று ஓங்கி ஒலித்த சத்ததில் கையை இறக்கினான்… விக்கி வேகமாக வந்து அவளை தன் பின்னே மறைத்துக் கொண்டான்…. தவறே செய்தாலும் அவன் எப்போதும் வினுவின் பக்கம் தான்…

அகில் இதை எதிர்ப்பார்த்திருந்தாலும் வினு கூறும் போது கோபமாக வந்தது…. கோபத்தோடு சோபாவில் சென்று அமர்ந்துக் கொண்டான்.

தன் அண்ணாவா தன்னை அடிக்க கை ஓங்கியது என்று அதிர்ச்சியில் இருந்த வினு தன்னை மறைத்துக் கொண்டு நிற்கும் விக்கியிடம் இருந்து விலகி அகிலின் காலடியில் வந்து அமர்ந்தாள்…. அவன் மடி மீது தலைசாய்த்துக் கொண்டவள்.,

“அண்ணா… எனக்கு அவனை ரொம்ப பிடிச்சிருக்கு… நான் வாழ்ந்தா அவனோடு தான் வாழ்வேன்… என்னால அவனை விட முடியாதுண்ணா.. ப்ளீஸ் புரிஞ்சிக்கோ…அவன் ரொம்ப நல்லவண்ணா.. நீ ஒரு தடவை அவன்கிட்ட பேசிப் பாரேன்… நீயே புரிஞ்சிக்குவ..” என்றவளின் கண்களில் இருந்து கண்ணீர் கோடாக இறங்கியது…

வினுவை பார்க்க பாவமாக இருந்தாலும் அகிலால் எந்த முடிவும் எடுக்க முடியவில்லை… தன்னை போல் தன் தங்கையையும் இந்த பாழாய் போன காதல் துன்பப்படுத்துகிறது என்று நினைக்கும் போது இதயத்தில் வலியெடுத்தது. தன் மடியில் சாய்ந்திருக்கும் தங்கையின் தலையை ஆதுரமாக தடவியவன்.,

“சரிம்மா… நான் அவனை பார்க்கிறேன்… நாளைக்கு வர சொல்லு…” என்றான் மனதில் ஒரு முடிவோடு…

அவன் கூறியதில் வினு அவன் முகத்தை நிமிர்ந்துப் பார்த்தாள்… விக்கி சந்தோஷமாக வந்து தன் அண்ணன் பக்கத்தில் அமர்ந்துக் கொண்டான்… அவன் தோளில் சாய்ந்தவன்.,

“தேங்க்ஸ் அண்ணா… மச்சானை கண்டிப்பா உங்களுக்கு பிடிக்கும்… ஹனிக்கூட அவரோட தங்கச்சி பொண்ணு தான்… ஆனா ஹனியோட அம்மா வெளியூர்ல இருக்காங்க… நாளைக்கு வராங்க….” தன் அக்காவின் காதலுக்கு அகில் ஒத்துக் கொண்ட மகிழச்சியில் விக்கி தனக்கு தெரிந்ததை கூறினான்..

வினு எதுவும் கூறாது அவர்களை பார்த்திருந்தாள்.. அகில் நாளை திருவை பார்க்க வேண்டும் என்று கூறியதில் அவளுக்கு திக்கென்றது… அவர்கள் சந்தித்தால் அடுத்து என்னவாகும் என்று உணர்ந்தவளுக்கு பயத்தில் தலையை சுற்றிக் கொண்டு வந்தது… ஆனால் அதை எதையும் உணராத விக்கியோ உடனே திருவிற்கு அழைத்து தன் அண்ணன் அவனை சந்திக்க விரும்புவதாக கூற, வினுவிற்கு அனைத்தும் தன் கையை மீறி போவது போல் தோன்றியது..

அவள் திருவை குறித்து எதையும் விக்கியிடம் கூறவில்லை…அதனால் விக்கி தன் அண்ணணுக்கும் திருவிற்கும் உள்ள பிணக்கு தெரியாமல் திருவிடம் சம்மதம் வாங்கிவிட்டு அகிலிடம் திருவை பற்றி பெருமையாக கூறிக் கொண்டிருந்தான்… ஆனால் அகிலின் கவனம் அவனிடத்தில் இல்லை… இருந்திருந்தால் அப்போதே அவன் தனது தோழனை பற்றி தான் கூறுகிறான் என்று கண்டுபிடித்திருப்பான்… அவனோ நாளை வினுவின் காதலனை சந்தித்து அவனுக்கும், தனக்கு வந்த மிரட்டலுக்கும் சம்பந்தம் இருக்கிறதா என்று தெரிந்துக் கொள்ள நினைத்தான்… அப்படி ஏதாவது இருந்தால் அதை வினுவுக்கு எப்படி புரிய வைப்பது என ஆழ்ந்த யோசனையில் இருந்தான்…

அகிலின் யோசனையான முகத்தை பார்க்கும் நிலையில் வினுவும் இல்லை… திரு ஏற்கனவே சுமி வந்ததும் தன் வீட்டினரை சந்திக்க வேண்டும் என்று கூறியிருப்பதால் நிச்சயம் வருவான்… அதுவும் சுமியை அழைத்துக் கொண்டு வந்தாலும் வருவான் என்று நினைக்கும் போதே அவளுக்கு நடுங்கியது…

விக்கி அகிலோடு பேசிக் கொண்டிருப்பதை பார்த்தவள் சத்தமில்லாமல் அவளது அறைக்கு சென்றாள்… அங்கு ஹனி அவளது பெட்டில் தூங்கிக் கொண்டிருக்க.. அவள் அருகே சென்று அமர்ந்தாள்… அவள் தலையை கோதியவள்… மறுநாளை நினைத்து கண்ணீர் வடித்தாள்…

தன்னிடமிருந்து திருவை யாரும் பிரிக்க முடியாது என தனக்கு தானே சொல்லி மனதில் உருவேற்றிக் கொண்டிருந்தவள் அவனிடம் இருந்து அழைப்பு வரவும் அதை எடுத்தாள்.

“புஜ்ஜி மா… என்னால இன்னைக்கு வீட்டுக்கு வர முடியாது … ஹனியை பார்த்துக்கோ டா… நான் நாளைக்கு ஹரியை டிஸ்சார்ஜ் பண்ணி வீட்ல விட்டுட்டு வரேன் …” என்றவன் அவளின் அமைதியை உணர்ந்து, “என்னடா?? உங்க அண்ணா திட்டிட்டாங்களா??? விக்கி சொன்னான்.. உங்க அண்ணா என்னை பார்க்கணும்னு சொன்னாதா… நீ எதுக்கும் கவலைபடாத புஜ்ஜி நான் கண்டிப்பா உன் அண்ணாவை ஒத்துக்க வச்சிடுவேன்… ஸோ டோன்ட் வொர்ரி…” திரு நம்பிக்கையோடு கூற.,

‘என் கவலையே நீ ஒத்துக்குவியா அப்படிங்கறது தான் அரசு’ மனதில் அவனிடம் கேட்டவள் அவனிடம் “ம்ம்ம்” என்றாள்..

“சரி டா நீ ரெஸ்ட் எடு நான் மார்னிங் சுமியை பிக்கப் பண்ணிட்டு வந்துடுறேன்… ஹனி அதுவரைக்கும் உன்கூடவே இருக்கட்டும்….” வினு நிச்சயம் மனதில் தவித்துக் கொண்டு இருப்பாள் என்பதால் ஹனியை அவளிடம் வைத்துக் கொள்ள கூறியவன் போனை கட் செய்ய போக வினு அவனை அவசரமாக தடுத்தாள்..

“கட் பண்ணிடாத அரசு… என்கிட்ட பேசிட்டே இரு ப்ளிஸ்” என்றவளின் குரல் கமறியது…

அவள் பேச்சில் இருந்தே அவள் பயந்துப்போய் இருக்கிறாள் என்பதை உணர்ந்தவன் அவள் கூறியது போலவே அவளிடம் பேசியவாறு இருந்தான்…

நேரம் நள்ளிரவை தாண்டிய போதும், வினு அவனை போனை கட் செய்ய அனுமதிக்கவில்லை… பேசிக்கொண்டே இரு என்றாள்… திடிரென்று என்னை விட்டு போய்விட மாட்டியே என்று கலங்கினாள்… அவளின் நிலை அவனுக்கு வேதனையை அளிக்க., அவளுக்கு ஆறுதலாகவும் நம்பிக்கை அளிக்கும் விதமாகவும் பேசினான்… அதில் சிறிது அமைதியாகுபவள் மீண்டும் அதையே கூறி கலங்கினாள்,.. அவளின் நிலையை பார்த்து திரு தான் பயந்து போனான்…அவள் தவிப்பை அருகில் இருந்து தன்னால் குறைக்க முடியவில்லையே என்று தன்னை நினைத்தே கோபமாக வந்தது அவனுக்கு.

இரவு முழுவதும் அவளை கெஞ்சி கொஞ்சி என அதிகாலையில் தான் திரு தூங்க ஆரம்பித்தான். அதுவும் அவள் போனை கையில் வைத்துக் கொண்டே தூங்கிய பின்னர் தான்…

மறுநாள் மாலை வினு, விக்கி, ஹனி மற்றும் அகில் நால்வரும் திருவிற்காக அவர்களின் வீட்டின் அருகில் இருந்த பூங்காவில் காத்திருந்தனர்… திருவும் சுமியை அழைத்துக் கொண்டு அங்கே வருவதாக வினுவிடம் கூறியிருந்தான்… ஹனியை அழைத்துக் கொண்டு வினுவும் விக்கியும் பூங்காவின் எதிர்புறத்தில் இருந்த கடையில் பஞ்சு மிட்டாய் வாங்கி கொடுக்க செல்ல… அகில் தன் போனில் யாரிடமோ பேசிக் கொண்டிருந்தான்… பேசிக் கொண்டிருந்தவன் வினு வருகிறாளா என்று பார்ப்பதற்கு திரும்ப, அங்கு சுமியும் திருவும் ஏதோ பேசி சிரித்தவாறு வந்து கொண்டிருந்தனர்… அவர்களை எதிர்பாராமல் அகில் திகைத்து நிற்க.. அவர்களும் அவனை கண்டார்கள்…அவர்களும் அவனை எதிர்பாராமல் அதிர்ச்சியில் உறைந்தார்கள்…. திருவினுள் இத்தனை வருடங்களாக அடங்கியிருந்த கோபம் அவனை பார்த்ததும் எரிமலையாக வெடித்து சிதற ஆரம்பித்தது……. இனி அவன் வினுவின் அண்ணன் என்று தெரிந்தால்???????

விழிகள் தொடரும்………

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here