மின்னல் விழியே குட்டித் திமிரே – 18

0
791
1551018907221|679x452

மின்னல் விழியே – 18

சாரலாக தூவிக் கொண்டிருந்த மழை நன்றாக பெய்ய ஆரம்பித்திருந்தது. பால்கனி கதவின் அருகே நின்று தொடுவானத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் திரு, அவன் மனம் முழுதும் வினுவே நிறைந்திருந்தாள்…. அவன் மனதிற்கு என்ன வேண்டும் என அவனால் புரிந்துக் கொள்ள முடியவில்லை…

அவள் அகிலின் தங்கை என்ற உண்மை சுருக்கென்று மனதில் தைத்தாலும், அவனால் அவளை விட்டுக் கொடுக்க முடியவில்லை… அவள் வேண்டும் என அரற்றும் மனதை தடுக்க வழி தெரியாமல், பால்கனி கதவை திறந்து மழையில் சென்று நின்றவனின், தகிக்கும் மனதை மழையாலும் குளிர்விக்க முடியவில்லை…. பால்கனி கம்பியின் அருகே நின்று தன் இரண்டு கைகளையும் கம்பியில் ஊன்றி கம்பியை அழுத்த பற்றிக் கொண்டவன், அவன் வீட்டின் அருகே இருந்த தெருவிளக்கை பார்த்தான், மழையில் அவனை போலவே நனைந்து தனியாக யாருமில்லாமல் நின்றுக் கொண்டிருந்தது.

அதனை உற்று பார்த்து அதை அவனை போல பாவித்துக் கொண்டிருந்தவன் கண்களை அழுத்த மூடிக் கொண்டான்..

‘அப்போ உன் அண்ணா காதலுக்காக தான் என்னை காதலிச்சியா புஜ்ஜி மா’ கண்களை மூடி வினுவிடம் மானசீகமாக கேட்டான்…

எவ்வளவு நேரம் அப்படி நின்றான் என்று தெரியாது, கண்களை அவன் திறந்த போது அந்த தெருவிளக்கு கம்பத்தின் அருகே ஏதோ ஒரு உருவம் தெரிய, புருவத்தை சுருக்கியவன் கூர்ந்து பார்த்தான்.. கண்களை மூடி நின்றதால் அனைத்தும் மசமசப்பாக தெரிய, கண்களை மீண்டும் ஒருமுறை மூடி திறந்தான். இப்போது பார்வை நன்றாக தெரிந்தது. இந்த நேரத்தில் யாரென்று பார்த்தவன் அந்த கம்பத்தின் அருகே வினு நிற்கவும் திகைத்தான்…

“புஜ்ஜி மா..!!!” அவன் உதடுகள் மெல்ல முனுமுனுக்க, ஏனென்று தெரியாமல் அவன் மனதில் ஒரு இதம் பரவியது.. அதுவும் தன்னை போல் தனியாக அந்த கம்பம் நிற்கிறது என்று கசப்பாக நினைத்தவன் இப்போது அதன் அருகில் வினு நிற்பதை காணவும் மனதில் ஒரு நிம்மதி படர்வதை உணர்ந்தான். ஆனால் அடுத்த நிமிடமே தன் மனதை கல்லாக்கி கொண்டவன் முகத்தை பாறையாக வைத்துக் கொண்டு அவளை பார்க்க,

இருட்டிலும் மழையிலும் அவன் முகவுணர்வுகள் அவளுக்கு சரியாக தெரியவில்லையென்றாலும், தன்னை நிச்சயம் முறைத்துக் கொண்டு தான் நிற்பான் என்று நினைத்தவள் அவனை வெற்றுப் பார்வை பார்த்தாள்… வரும் வரை இருந்த கோபம் கூட அவன் பிம்பத்தை காணும் போது குறைவது போல் இருந்தது… அவனை பார்த்தவாறே கண்களில் வழியும் கண்ணீரின் உணர்வு கூட தெரியாமல் நின்றிருந்தாள்..

“ஏன் டா என்னை விட்டுட்டு போன????” அவள் மனம் அவனிடம் ஊமையாக கேட்டது…

“உன் அண்ணா கூப்பிட்டா நீ உடனே போய்டுவியா??? நான் தான் முக்கியம்னு என்கிட்ட வந்திருக்கணும்….” அந்த நொடி அவனுக்கு அவள், தான் அகிலின் தங்கை என்று மறைத்தது எல்லாம் ஞாபகம் இல்லை.. தன்னை விட்டு செல்ல துணிந்தாள் என்பது மட்டுமே அவன் கோபத்தின் காரணமாக இருந்தது.

“நான் போனா உடனே போன்னு விட்டுட்டு இருப்பியா???? என் பொண்டாட்டிய எங்கடா கூட்டிட்டு போற ன்னு என் அண்ணாகிட்ட சண்டை போட்டிருக்கணும் அதைவிட்டுட்டு என்னை பார்த்து என்ன வார்த்தை சொல்லிட்ட…” மனதில் கோபமாக அவனிடம் சாடியவளுக்கு அவன் கூறிய ‘உன் தங்கச்சி தாலி கட்டாமலே என்கூட’ என்ற வார்த்தைகள் இன்னும் அவள் காதில் ஒலிப்பது போல் ஒரு பிரம்மை…

இருவரும் மழையில் பார்த்தவாறே நிற்க, அவர்களின் மௌன பாஷையை கலைத்தது சட்டென்று கேட்ட இடியோசை….

“ப்ச்ச்.. இங்கேயே நின்னுட்டு இருந்தா நானே அவள்கிட்ட பேசிடுவேன்… வேண்டாம் திரு… உள்ளப் போ…” அவன் மூளை அவனுக்கு அறிவுறுத்த அதற்கு மேல் அவளை அந்த நிலையில் காண முடியாமல் உள்ளே விரைந்தான்.. அவன் உள்ளே செல்வதை பார்த்தவளுக்கு மனம் கணத்தது. ஆனால் இன்று அவனோடு பேசியே ஆக வேண்டும் என்னும் முடிவில் இருந்தவள் அங்கிருந்து செல்லாமல் அங்கேயே நின்றிருந்தாள்.

திரு உள்ளே வந்து தன் கட்டிலில் அமர்ந்துக் கொண்டான்.. எங்கே அவளை பார்த்தால் அவளை மன்னித்துவிடுவோமோ என்று பயமாக இருந்தது அவனுக்கு.

இருவருமே மனம் முழுதும் காதலை சுமந்துக் கொண்டு கோபம் என்னும் திரையால் தங்கள் மனதை மூடிக் கொண்டனர்.

வெகு நேரமாக தன் மனதோடு போராடிக் கொண்டிருந்தவன் வெளியே மீண்டும் மீண்டும் கேட்ட இடியோசையிலும் மின்னல்களிலும் பயந்து வெளியே எட்டிப் பார்த்தான்.. வினு சென்றிருப்பாள் என்று நினைத்து அவன் பார்க்க, அங்கு எந்த நிலையில் அவன் அவளை பார்த்தானோ அதே நிலையில் அந்த கம்பத்தின் அருகே அவன் அறையை பார்த்தவாறு நின்றிருந்தாள்.. மழை வேறு கொட்டோ கொட்டென்று கொட்டியது..

“இவ என்னப் பண்ற??? இப்படியே நின்னுட்டு இருந்தா செத்து போய்டுவா..” காதல் கொண்ட மனது அவளுக்காக துடிக்க, வேகமாக தன் அறையில் இருந்து ஒடினான் அவளிடம்… மழையில் முழுவதுமாக நனைந்து உடல் விறைத்து போய் நின்றிருந்தாள் வினு. ஆனால் பார்வை மட்டும் அவனை துளைத்துக் கொண்டிருந்தது.

“என்னடி பண்ற??? இப்படி மழையில் நின்னுட்டு இருந்தா செத்துடுவ…” கோபமாக அவன் கூற, அவள் சலனமே இல்லாமல் பார்த்தாள்.

“இப்போ இங்க இருந்து போகப்போறியா இல்லையா??? உன் அண்ணா பின்னாடி போனவ இப்போ எதுக்காக இங்க வந்த???” அவளின் பார்வை வீச்சில் அவன் தான் தடுமாறினான். அது தவறு செய்யாதவர்களின் பார்வை..

வெகு நேரமாக மழையில் நின்றதால் நடுங்கும் உடம்பை தன் இரு கைகளால் தன்னை தானே அணைப்பது போல் பிடித்துக் கொண்டவள்,

“நான் சொல்றதை கேட்கிறதுக்கு கூட உனக்கு பிடிக்கலையா அரசு??? குளிர் ஊசியாய் உடம்பை தாக்கினாலும் அவனுக்கு கேட்கும்படி கூறினாள்..
“ஈஸியா என்னை வேண்டாம்னு தூக்கி போட்டுட்ட??? ஒரு வேளை ரொம்ப சுலபமா உனக்கு நான் கிடைச்சிட்டதுனால என்னோட அருமை உனக்கு தெரியலை அப்படிதானே??? என்ன சொன்ன??? தாலி கட்டாம உன்கூட…” அந்த வார்த்தைகளை சொல்ல முடியாமல் அழுகை வர, அதை அடக்கியவள், அழுகையை விழுங்கிக் கொண்டு,

“நீ என்னை எப்படி வேணும்னாலும் நினைச்சிருக்கலாம், ஆனா நான் உன்னை என்னோட புருஷனா தான் நினைச்சிட்டு இருக்கேன்.. தாலி பத்தி பேசுனியே இங்க பாரு நீ எனக்கு போட்டது” அவள் போட்டிருந்த சுடிதாரினுள் இருந்து ஒரு செயினை எடுத்து அவள் காட்ட, என்னவென்று பார்த்தவன் அதிர்ந்தான். இரண்டு மாதம் முன்பு நடந்த பார்ட்டியில் காணாமல் போய்விட்டதாக அவன் நினைத்துக் கொண்டிருந்த செயின் அது. A.A என்று பொறிக்கப்பட்டிருந்த அந்த செயினை அவள் கழுத்தில் கண்டதும் அவனுக்கு புரிந்து போனது. அன்று குடி போதையில் அவள் கழுத்தில் அவன் போட்டிருக்க வேண்டும் என்று. அதோடு இப்போது அந்த காட்சியும் மனக்கண்ணில் ஊர்வலம் போனது…

“இது.. நீ தான் அன்னைக்கு தாலின்னு சொல்லி என் கழுத்துல கட்டின… இது தான் அன்னைக்கு உன்கிட்ட என்னை மொத்தமா கொடுக்க வச்சிது.. ஆனா நீ அதை கேவலப்படுத்திட்ட.. அப்புறம் என்ன கேட்ட???? நான் நடிச்சி உன்னை ஏமாத்தினேனா??? என்ன பார்த்தா உனக்கு அப்படி தோணுதா???” கொட்டும் மழையை விட, வினு தன் மனதில் உள்ளதை அருவியாக கொட்ட அவளது ஒவ்வொரு வார்த்தையும் அவன் கன்னத்தில் அறைவது போல் இருந்தது…

அவளது கேள்விக்கு அவன் மனம் “இல்லை” என்று கூப்பாடு போட, அவனால் வாய் திறந்து தான் சொல்ல முடியவில்லை.. அந்த அளவுக்கு ஆவேசமாக கத்திக் கொண்டிருந்தாள் வினு..

“நான் அகில் தங்கச்சின்னு மறைச்சேன் தான்.. வாழ்க்கையே வெறுத்து போய் என் அண்ணா சுத்திட்டு இருக்கிறதை பார்த்து தான், நான் உன்னையும் உன் தங்கச்சியையும் தேடி வந்தேன்.. அப்போ கூட உன்னை காதலிச்சி தான் அவங்களை சேர்த்துவைக்கணும்னு நான் யோசிச்சதே இல்ல. ஆனாலும் உன்ன பார்த்த அன்னைக்கே ப்ரொபோஸ் பண்ணிணேன் ஏன் தெரியுமா???… உன்னை…” ஒரு நொடி நிறுத்தியவள் அவன் கண்களை நேராக பார்த்து,

“உன்னை எனக்கு சென்னைல பார்த்தப்போவே பிடிச்சிருந்துச்சு… நான் தேடி வந்த திருநாவுக்கரசு நீயா இல்லாம இருந்திருந்தா கண்டிப்பா நான் உன்கிட்ட லவ் பண்றேன்னு சொல்லிருக்க மாட்டேன்… அங்க அந்த இடத்துல உன்னை பார்த்ததும் நான் எவ்வளவு சந்தோஷப்பட்டேன்னு எனக்கு மட்டும் தான் தெரியும்… ஆனா நீ என்னவெல்லாம் சொல்லிட்ட…” குரல் கமற கூறியவள் அவன் முன்பு அழப் பிடிக்காமல், கடைசியாக அவன் முகத்தை பார்த்து,

“என் அண்ணா தொலைச்ச காதலை தேடி தான் வந்தேன் ஆனா இன்னைக்கு என்னோட காதல் தொலைஞ்சு போச்சு…“ கண்ணீர் வழிய கூறியவள் திரும்பி தன் வீட்டை நோக்கி நடக்க தொடங்கினாள்..

அவள் கூறியது அனைத்தையும் கேட்டவன் எப்படி உணர்ந்தான் என்று அவனுக்கே புரியவில்லை… அதுவும் அவள் சொன்ன ‘உன்னை தவிர வேறு யார் அந்த இடத்தில் இருந்திருந்தாலும் காதலை சொல்லியிருக்க மாட்டேன்’ என்ற வாக்கியம் அவன் காதுக்குள் ரிங்காரமிட்டுக் கொண்டிருந்தது. அந்த ஒரு வார்த்தை மாலையில் இருந்து காயப்பட்டிருந்த அவன் மனதுக்கு மயிலிறகால் ஒத்தடம் கொடுத்தது போல் இருந்தது.

அப்படியென்றால் அவள் தன்னை திருவென்று தெரிந்துக் கொள்ளும் முன்பே காதலித்திருக்கிறாள்..!! அதை புரிந்துக் கொண்டவனுக்கு இவ்வளவு நேரம் தன் மனதை மறைத்திருந்த திரை விலகியது போல் இருந்தது.. இதற்காக தானே வருந்தினான்.. அவர்களை சேர்த்து வைக்க, தன்னை காதல் என்ற பெயரில் ஏமாற்றி விட்டாளே என்று தானே மருகினான்… இப்போது அதுவே இல்லையென்று ஆகிவிட அவன் உடம்பில் புது ரத்தம் பாய்வது போல் இருந்தது…

“புஜ்ஜி மா….” தனக்குள் மூழ்கியிருந்தவன் அவளை தேட அவள் மெதுவாக அவள் வீட்டை நோக்கி சென்றுக் கொண்டிருந்தாள்..

கால்கள் இரண்டும் மழையில் மரத்துபோனது போல் இருக்க நடப்பதற்கே சிரமமாக இருந்தது வினுவிற்கு.. அதோடு தலை வேறு பாரமாக கணக்க தலையை பற்றிக் கொண்டவள் தள்ளாடியபடியே நடக்க, அவளை வேகமாக வந்து கைகளில் அள்ளிக் கொண்டான் திரு… அவன் அவளை தூக்கவும் அவள் மயக்கமாகவும் சரியாக இருந்தது…

அவளை நெஞ்சோடு அணைத்துக் கொண்டவன் அவள் முகத்தை பார்க்க… மழையில் மொத்தமாக நனைந்து வெளிரி போய் இருந்தாள்..

“மன்னிச்சிடு புஜ்ஜி… உன்னை புரிஞ்சிக்காம போய்டேன்… இனி யாரலும் என்கிட்ட இருந்து உன்னை பிரிக்க முடியாது.. நீ அகில் தங்கச்சியா இரு.. இல்ல வேற யாரா வேணும்னாலும் இரு… ஆனா இனி நீ என்னோட பொண்டாட்டி… இந்த இடியட்டை மன்னிப்பியா புஜ்ஜி???” மயக்கத்தில் இருந்தவளிடம் கேட்டவன் அவள் வீட்டிற்கே அவளை தூக்கி சென்றான்…

“அம்மா..!!!!!!” என்று அலறிக் கொண்டே வீட்டினுள் நுழைந்தான் விக்கி… அவன் அலறல் சத்தம் கேட்டு அவனது அன்னை கிட்சனில் இருந்து ஓடி வந்தார்..

“விக்கி கண்ணா…. எப்போடா வந்த??” மூன்று மாதங்கள் கழித்து பார்க்கும் மகனை ஓடிச் சென்று அணைத்துக் கொண்டார் சுதா.. அவனும் நெடு நாள் கழித்து பார்க்கும் அன்னையை கட்டிக் கொண்டு கண் கலங்கினான்..

“மிஸ்ட் யூ ம்மா..” விக்கி கூற, சுதா சிரித்தார்..

“திருடா பொய் சொல்லாத… உனக்கு என்னை விட உன் அக்கா தான் முக்கியம்… இந்த மூனு மாசத்துல ஒரு நாளாச்சும் வந்து பார்த்தியா டா??” கோபம் போல் கூறினாலும் சுதாவிற்கு மகனின் இந்த குணம் குறித்து பெருமையே.. தனக்கு எதாவது நேர்ந்துவிட்டால் கூட விக்கி தன் அக்காவை பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கை அவருக்கு எப்போதும் உண்டு…

“ம்மா… நிஜம்மா மிஸ்ட் யூ ம்மா..” குழந்தை போல் சிணுங்கியவனை உச்சி முகர்ந்தவர் இன்னும் தன் மகள் குரல் கேட்கவில்லையே என்று அவனை விலக்கி விட்டு வினுவை தேடினார்…

“வினு எங்க விக்கி???” வாசலை பார்த்தவாறு சுதா கேட்க, விக்கி திருதிருவென்று முழித்தான். வாசல் அருகே அகில் மட்டும் கடுகடு முகத்தோடு நின்றிருந்தான்.

“அகில்.. தம்பி தங்கச்சிய பார்க்க போறத சொல்லிட்டு போக மாட்டியா??? உன்னை காணோம்னு பயந்துட்டேன்.. நல்ல வேளை அனுகிட்டயாச்சும் சொல்லிட்டு போய்ருந்தியே.. ஏன் தான் இப்படி இருக்கியோ???” தன்னிடம் சொல்லாமல் போனதற்காக அவனிடம் கடிந்தவர் அவனையும் தாண்டி வினுவை தேடினார்..

“வினு எங்க அகில்????” வினுவை காணாமல் அவர் கேட்க, விக்கி அகிலின் முகத்தை பார்த்தான்…

“அக்கா. மச்சான் கிட்ட போய்ட்டா ம்மா…” தலையும் இல்லாமல் வாலும் இல்லாமல் அவன் கூற, அவனது மச்சான் என்ற அழைப்பில் அகில் கொதித்துவிட்டான்..

“யாருக்கு யாருடா மச்சான்… அவன் தான் அவளை வேண்டாம்னு சொல்லிட்டானே…” அகில் கோபப்பட, சுதாவிற்கும், இவர்களது சத்தம் கேட்டு வந்த அனுவிற்கும் ஒன்றும் புரியவில்லை..

“அகில்.. எதுக்குடா விக்கியை திட்டுற??? என்ன நடந்துச்சுன்னு ஒழுங்கா சொல்லுங்க.. என் பொண்ணு எங்க????” வினுவை நினைத்து பதறியது சுதாவிற்கு….

“உங்க பொண்ணு லவ் பண்றாளாம்… நான் சம்மதிக்கலைன்னதும் கோபத்துல பஸ்ல இருந்து இறங்கி போயிருக்கா, இவனுக்கு தெரியாம இருக்காது…” சுதாவிடம் பதில் கூறினாலும் விக்கியை முறைத்தான்.. ஆனால் அவன் பார்வையெல்லாம் ஜுஜுபி போல் ஊதி தள்ளினான் விக்கி…

“என்னது லவ் பண்றாளா??? நிஜம்மாவா டா???” லேசாக வருத்தம் தொணித்தாலும் மகள் மேல் இருக்கும் நம்பிக்கை அவரை ஆர்வமாக தான் கேட்க வைத்தது…

அதற்கு அகில் பதில் சொல்வதற்கு முன் முந்திக் கொண்ட விக்கி, “ஆமா மா… அக்கா லவ் பண்றா..மச்சான் ரொம்ப நல்லவங்க.. நல்ல கம்பெனில வொர்க் பண்றாங்க… கை நிறைய சம்பாதிக்கிறாங்க… இதுக்க மேல நம்ம அகில் அண்ணாவோட ஃப்ரெண்ட் தான்…” விக்கி அனைத்தையும் புட்டுபுட்டு வைக்க, அகில் அவனை எரிப்பது போல் பார்த்தான்..

“என்ன அகில் ஃப்ரெண்டா??? நிஜம்மாவா அகில்???? பையன் எப்படி டா அகில்??? நல்ல குடும்பமா?? நம்ம வினுவை நல்லா பார்த்துக்குவாங்களா???” அகிலின் நண்பன் என்றால் நல்லவனாக தான் இருக்க வேண்டும் என்ற நம்பிக்கையில் சுதா உற்சாகமாக கேட்க, அகில் திணறிப் போனான்.

வினுவின் காதலுக்கு தந்தையை தவிர வேறு யாரும் வீட்டில் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள் என்று அவனுக்கு தெரியும்..ஏன் அவனே கூட அந்த போன் கால் வராமலும் அது திருவாக இல்லாத பட்சத்திலும் மகிழ்ச்சியாகவே வினுவின் காதலை சேர்த்து வைத்திருப்பானே…

ஆர்வமாக பார்க்கும் அன்னையின் கண்களை சந்திக்காது வேறு திசையில் பார்த்தவன், “அந்த குடும்பம் நமக்கு செட்டாகாது மா” என்றான் மொட்டையாக…

“ஏன் டா செட்டாகாது??? ஒரு வேளை நீயும் உங்க அப்பா மாதிரி ஸ்டேட்டஸ் பாரக்கிறியா???” கோபமாக கேட்டவர் மேலும், “உங்களுக்கு வேணும்னா இந்த பணம் பெருசா இருக்கலாம் ஆனா எனக்கு என் பொண்ணு வாழ்க்கை தான் பெருசு…” என்றார் மகளின் வாழ்க்கையை மட்டுமே மனதில் வைத்துக் கொண்டு..

“அம்மா..!!! வினு லவ் பண்றவனே முதற்காரியம் அவளை கல்யாணம் பண்ணிக்க மாட்டான்.. அவனுக்கு என்னை பிடிக்காதும்மா.. என் தங்கச்சின்னு தெரிஞ்சதும் அவனே அவளை விட்டுட்டு போயிட்டான்.. ஆனா வினு தான் அவன் பின்னாடி போற…” ஆதங்கமாக கூறிய அகிலின் குரல் கடைசி வாக்கியத்தில் உள்ளே சென்றுவிட்டது.

சுதா புரியாமல் பார்க்க, விக்கியோ இது தான் சந்தர்ப்பமென்று, “ஆமா ம்மா… மச்சானுக்கு அகில் அண்ணாவை பிடிக்கல… அவனை பார்த்ததும் ரொம்ப கோபப்பட்டாங்க… அண்ணிக் கூட அகில் அண்ணா கிட்ட பேசல…” என்றான் மீண்டும் மொட்டையாக..

“என்னடா விக்கி சொல்ற, அண்ணி பேசலையா???” மேலும் மேலும் குழப்புபவனிடம் அவர் கேட்க, விக்கியோ அசராமல் “ஆமாம் மா.. சுமி அண்ணி அகில் அண்ணா கிட்ட பேசல” என்றான்..

யார் அந்த சுமி என்பது போல் சுதா விழிக்க, விக்கியோ ஓரக்கண்ணால் அகிலை பார்த்தவாறு,

“சுமி அண்ணி நம்ம அகில் அண்ணாவோட மனைவி…” என்க, அனு ஆச்சரியத்தில் கண்னை விரித்தாள்..

“டேய் அகி!!! நீ சுமியை லவ் பண்றதா தானே சொன்ன??? எப்போ டா கல்யாணம் பண்ணிக்கிட்ட” இவ்வளவு நேரம் அங்கு நடப்பதை பார்வையாளராக பார்த்துக் கொண்டிருந்த அனு நம்ப முடியாமல் கேட்க,

அகில் விக்கியை நினைத்து பல்லை கடித்தான்…

“அண்ணி.. கல்யாணம் மட்டும் இல்லை.. குழந்தை கூட இருக்கா… அச்சு அசல் நம்ம வினுவை போல தான் இருக்கா…” எரியும் தீயில் எண்ணெய்யை லிட்டர் கணக்கில் ஊற்றினான் விக்கி…

விக்கி கூறியதில் சுதாவும் அனுவும் அதிர்ச்சியாக, அகிலோ, “விக்கி நீ வாயை மூடு” என்று தம்பியை அதட்டினான்… ஆனால் அதற்கெல்லாம் அடங்குபவனா அவன்????

“அகில் கண்ணா.. விக்கி என்ன சொல்றான்??? யார் அந்த சுமி??? அந்த பொண்ணுக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்??? விக்கி சும்மா தானே சொல்றான்???” விக்கி கூறுவதையெல்லாம் கேட்க, சுதாவிற்கு இதயம் படபடவென அடித்தது.. தன் மகன் நிச்சயம் அப்படி செய்திருக்க மாட்டான் என்ற நம்பிக்கையில் அவர் அவன் முகம் பார்க்க, அவனோ தாயின் முகத்தை பார்க்க முடியாமல் தலை குனிந்தான்… அதுவே சுதாவிற்கு விக்கி கூறுவதில் உண்மை இருக்கிறது என உணர்த்திவிட மகனை வெறுமையாக பார்த்தார்…

“ஏன் அகி நீயும் சுமியும் கல்யாணம் பண்ணினதா மறைச்ச???” மனம் கேளாமல் அனு கேட்க, விக்கியோ,

“சுமி அண்ணி பாவம்… இவன் அவங்களை ஏமாத்திட்டான்” என்று உச்சுக் கொட்டினான் விக்கி.

அதில் கோபமுற்ற அகில், “விக்கி..!!!!” என்று கத்த,

அவனோ, “அப்படி தான் மச்சான் சொன்னாங்க” என்று முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு அழகாக சமாளித்தான்….

அகிலாலும் அன்னையின் முன்பு அவனை ஒன்றும் சொல்ல முடியவில்லை… சுதாவிற்கு அங்கு நடப்பது எதுவும் புரியாமல் தலையை சுற்றிக் கொண்டு வர, அருகில் நின்றிருந்த அனுவை பற்றினார்,

“விக்கி… என்ன நடந்துச்சுன்னு சொல்லு .இப்போ எனக்கு எல்லாம் தெரிஞ்சாகணும்” என்றவரின் குரலில் கடினம் வந்திருந்தது. அதற்கு மேல் தாமதிக்காமல் விக்கி அனைத்தையும் கூறிவிட்டான்… அனைத்தையும் முழுவதுமாக கேட்ட சுதா நெஞ்சில் கை வைத்து அமர்ந்துவிட்டார்… முகம் முழுவதும் திகைப்பும் அதிர்ச்சியும் என மாற்றி மாற்றி போட்டியிட அகிலின் முகத்தை கூர்ந்து பார்த்தார்… அவன் எதையும் மறுத்துக் கூறவில்லை என்பதே அவருக்கு பேரிடியாக இருக்க, அவன் அருகில் நெருங்கியவர் அவன் கன்னத்தில் சரமாரியாக அடித்தார்..

“பாவி.. பாவி.. இப்படி ஒரு பொண்ணோட வாழ்க்கையை கெடுத்துட்டியோ டா???? இதுக்காகவா உன்னை பெத்து வளர்த்தேன், உன் மேல எவ்வளவு நம்பிக்கை வச்சிருந்தேன்.. எல்லாத்தையும் கெடுத்துட்டியே… அந்த பொண்ணோட சாபம் நம்மளை சும்மா விடாதுடா.. அதுவும் ஒரு குழந்தைய கொடுத்துட்டு ஓடி ஒளிஞ்சிருக்கியே நீ என்னடா ஆம்பிளை??? உன்னால என் பொண்ணு வாழ்க்கையும் கேள்விகுறியா நிக்குதே.. அவளுக்கு என்னடா பதில் சொல்ல போற??” அவன் கையிலும், நெஞ்சிலும் தன் ஆத்திரம் தீரும் மட்டும் அடித்துக் கொண்டிருந்தவர் தன் நெஞ்சை பிடித்துக் கொண்டு சரிய, பின்னால் நின்றிருந்த விக்கி அவரை பிடித்துக் கொண்டான்…

“அம்மா!! அத்தை !!” என்று மூவரும் பதற, சுதா மயக்கமாகியிருந்தார்…

“அம்மா!!! என்னாச்சு ம்மா… எழும்புங்க ம்மா.. எல்லாரும் என்னை தப்பா புரிஞ்சிக்கிட்டாங்க. நான் யாருக்கும் எந்த துரோகமும் பண்ணல… நீங்களாச்சும் என்னை நம்புங்கம்மா… என் மேல தான் தப்புன்னு நினைச்சி குழந்தை இருக்கிறதை கூட என்கிட்ட மறைச்சிட்டாங்கம்மா….” சுதாவின் கையை பற்றிக் கொண்டு அகில் கதற, விக்கிக்கும் அனுவிற்கும் அவனை பார்க்க பாவமாக இருந்தது.

“அகில்.. போ போய் காரை எடு.. அனு அவனை அதட்ட, அவனும் வேகமாக சென்று காரை எடுத்தான்.. விக்கி சுதாவை தூக்கி வர, அனுவின் மகன் ரித்தினை வேலைக்காரர்களிடம் பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு, மூவருமாக ஹாஸ்பிட்டலுக்கு கிளம்பினர்.

ஹாஸ்பிட்டலில் அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார் சுதா… வெளியே அனு கண்ணை கசக்கி கொண்டு இருக்க… விக்கி அகிலை முறைத்துக் கொண்டு நின்றான்… அகில் அமைதியாக தன் தாயிற்கு எதுவும் ஆக கூடாது என்று கடவுளிடம் வேண்டிக் கொண்டு இருந்தான்…

நிமிடங்கள் கடந்துக் கொண்டிருக்க மூவரின் இதயமும் படபடவென அடித்துக் கொண்டிருந்தது.. அனைவரின் இதய துடிப்பையும் ஒரு மணி நேரம் எகிற வைத்துவிட்டு வெளியே வந்தார் அவர்களது குடும்ப டாக்டர் சரோஜினி.

“டாக்டர் எங்க அம்மாவுக்கு என்னாச்சு???” விக்கியின் குரலில் அகிலும் டாக்டரை நெருங்கினான்..

“மைல்ட் அட்டாக்… ரொம்ப டென்ஷன் ஆகிருப்பாங்க போல இருக்கு.. வீட்ல இவ்வளவு பேர் இருந்தும் ஏன் அவங்களை டென்ஷனாகவிடுறிங்க??? கொஞ்சம் கவனமா பார்த்துக்கோங்க.. அட்டாக் கொஞ்சம் சிவியரா இருந்திருந்தா இப்போ அவங்களை காப்பாத்துறது கஷ்டமா போயிருக்கும்…” குடும்ப டாக்டர் என்பதால் மூவரையும் திட்டியவர் மேலும் சில அறிவுரைகளை வழங்கிவிட்டு சென்றார்..

அடுத்த அரை மணி நேரத்தில் சுதா ஜெனரல் வார்டிற்கு மாற்றப்பட, மூவரும் அவரை காண சென்றனர்… மயக்கத்தில் இருந்த சுதாவும் மயக்கம் தெளிந்து பார்க்க, கலங்கிய கண்களோடு அவரின் கையை பற்றிக் கொண்டு அவர் அருகில் நின்றிருந்தான் விக்கி.. மறுபக்கம் அனு அவரை பார்த்தவாறு அமர்ந்திருந்தாள்…அவர்களை பார்த்து மெலிதாக சிரித்தவர் தன் பாதம் அருகே ஓய்ந்த தோற்றத்தில் நின்றிருந்த அகிலை கண்டதும் முகத்தை கடுமையாக வைத்துக் கொண்டார்..

“அனு..!! அவனை போக சொல்லு.. எனக்கு என் மருமகளையும் பேத்தியையும் பார்க்கணும்… கூட்டிட்டு வர சொல்லு…” அகிலின் முகம் பார்க்காமல் அவர் அனுவிடம் கூற,

“என்கிட்ட பேசமாட்டிங்களா ம்மா???” சுதாவை பரிதாபமாக பார்த்தான் அகில்.

அவனை நினைத்து இரக்கம் தோன்றினாலும் அதை மறைத்துக் கொண்டவர், “போக சொல்லு அனு… என் மருமகளை கூட்டிட்டு வந்த அப்புறம் பேசுறேன்னு சொல்லு..” என்க,

“அவங்க நான் கூப்பிட்டா வரமாட்டாங்கம்மா… அவங்களுக்கு என்னை பிடிக்காது…” அதை கூறும் போது அவன் முகத்தில் அத்தனை வேதனை…

“எனக்கு அதெல்லாம் தெரியாது.. வந்தா என் மருமகளோட வா.. அப்படி இல்லாட்டி நான் செத்துட்டதா நினைச்சிக்கோ…” என்றவர் கண்களை அழுத்தமாக மூடிக் கொள்ள,. தாயின் முகத்தையே சிறிது நேரம் பார்த்திருந்தவன் வேறு வழியில்லாமல்,

“சரிம்மா நான் போறேன்… அவங்களை கூட்டிட்டு வரேன்….” என்றவன் அனுவிடம் திரும்பி, “அம்மாவை பார்த்துக்கோ அனு… நான் நிகிலுக்கு போன் பண்ணி விஷயத்தை சொல்லிட்டேன்.. கொஞ்ச நேரத்துல வந்துடுவான்…”என்றவன் சுதாவை ஒரு முறை பார்த்துவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டான்.

அவன் செல்வதை பாவமாக பார்த்துக் கொண்டிருந்தார்கள் விக்கியும் அனுவும்…

“அங்க என்ன பார்க்கிறிங்க???” என்ற குரலில் அனுவும் விக்கியும் திரும்பி பார்க்க. இவ்வளவு நேரம் அசந்தாற் போல் பெட்டில் படுத்திருந்தவர் இப்போது சிலை போல் எழும்பி அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார்.

“அத்தை என்ன எழும்பி உட்கார்ந்துட்டிங்க??? உங்களுக்கு..” அனுவிற்கு அதிர்ச்சியில் வார்த்தைகள் வராமல் போக,.

“அம்மாவுக்கு எதுவும் இல்லை அண்ணி.. எல்லாமே ஆக்டிங்” என்று முடித்தான் விக்கி. அவன் கூறுவது உண்மையா என்பது போல் அனு பார்க்க சுதாவும் அதை ஆமோதித்தார்..

“மருந்து குடிக்க மாட்டேன்னு அடம் பிடிச்சா நோய் எப்படி சரியாகும் அனு??? அதுக்கு தான் இந்த ஷாக் ட்ரீட்மென்ட். இனி என் பையன் சந்தோஷமா இருக்கணும்.” அகிலை நினைத்து கண் கலங்கியவரை ஆறுதலாக அணைத்துக் கொண்டான் விக்கி.

நேற்று இரவு வினு பஸ்சில் இருந்து இறங்கி ஆட்டோ பிடித்த அடுத்த நிமிடமே சுதாவிற்கு அழைத்து அனைத்தையும் கூறிவிட்டாள். அவள் கூறியதை கேட்ட சுதா திகைத்துப்போனார். இனியும் தாமதித்தால் தன் பிள்ளைகளின் வாழ்வு நாசமாகிவிடும் என்று நினைத்தவர் வினு கூறியது போல் அகிலை கார்னர் செய்ய, அவர்கள் திட்டமிட்டது போல் அகிலும் சுமியை தேடி கிளம்பிவிட்டான். தங்களது திட்டம் பற்றி வினுவும், விக்கிக்கு சுருக்கமாக ஒரு மெஸேஜ் அனுப்பியிருந்தாள். அவளுக்கு அவளின் வாழ்க்கையை விட தன் அண்ணனின் வாழ்வை சரியாக்க வேண்டும் என்பது மட்டுமே மனதில் இருந்தது.

அனைத்தையும் அனுவிடம் கூறிய சுதா, “சரோஜினி கிட்ட நேத்து நைட்டே நான் தான் பேசி இதுகெல்லாம் ஏற்பாடு பண்ணினேன்…” என்க, அனு அவரை “ஆஆ…” வென்று பார்த்திருந்தாள்..

“அண்ணி போதும்… வாய்க்குள்ள ஈ போய்ட போகுது.. க்ளோஸ் பண்ணுங்க.. நான் போய் சாப்பிடுறதுக்கு எதாச்சும் வாங்கிட்டு வந்துடுறேன்…” கிண்டலாக கூறிவிட்டு விக்கி அங்கிருந்து செல்ல, அனுவும் எல்லாம் நன்மைக்கே என்று சுதாவின் அருகில் அமர்ந்துக் கொண்டாள்…

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த வினுவிற்கு முழிப்பு வர, உடம்பு முழுவதும் வலித்தது.. தலையெல்லாம் பாரமாக கணக்க, மெதுவாக கண் திறந்தாள். உடம்பு முழுவதும் குளிர் சூரம் வந்தது போல் வலியெடுக்க தன் மீது போர்த்தியிருந்த போர்வைக்குள் புதைய முயன்றவள்,

“இப்போ எப்படி இருக்கு வினு” என்று கேட்ட குரலில் நிமிர்ந்து பார்த்தாள். அவளின் ஒவ்வொரு அசைவையும் எதிரில் இருந்த சோபாவில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான் திரு. அவனை பார்த்ததும் அவள் வேகமாக எழ, ஒரு நொடி அவளை பார்த்தவன் அடுத்த நிமிடமே எழுந்து, திரும்பி நின்றுக் கொண்டான்…

“ஏன் திரும்பினான்???” என்று நினைத்தவள் குனிந்து தன்னை பார்க்க, அதிர்ந்தாள்… நேற்று அவள் அணிந்திருந்த சுடிதார் மாற்றப்பட்டு மெலிதான டி ஷர்ட் அணிந்திருந்தாள்.. அது அவளது வரிவடிவத்தை தெளிவாக காட்டிக் கொண்டிருந்தது.. வேகமாக போர்வையை இழுத்து தன்னை மறைத்துக் கொண்டவள்,

“டேய் என்னடா பண்ணின????” என்று அவனிடம் சாடினாள்…

அவள் சத்ததில் திரும்பி பார்த்தவன், “ம்ம் ரேப் பண்ணினேன்..” என்றான் கண்கள் மின்ன…

“எ..ன்..ன என்ன சொன்ன???” நம்பாமல் அவள் கேட்க, அவளின் அதிர்ந்த தோற்றத்தை கண்டு அவனுக்கு சிரிப்பு வந்தது… அவளை நெருங்கி அவளை உரசியவாறு அமர்ந்தவன்,

“என் பொண்டாட்டி நேத்து மொத்தமா நனைஞ்சிட்டா அதான் நான் டிரெஸ் சேன்ஞ்ச் பண்ணிவிட்டேன்..” அவன் கூலாக உரைக்க, வினுவிற்கு பற்றிக் கொண்டு வந்தது..

நேற்று தன்னை எவ்வளவு மட்டமாக பேசினான்.. தான் சொல்ல வருவதை கூட கேட்காமல் என்னவெல்லாம் பேசிவிட்டான்.. அவனை முறைத்தவள் அவனை விட்டு விலகி அமர்ந்தாள்.. அவனும் விடாமல் அவளை ஒட்டி அமர்ந்தான்..

“இப்போ உனக்கு என்ன தான் வேணும்???” எரிச்சலாக வினு கேட்க,

“ம்ம் நீ தான் வேணும்…” என்றவன் குறும்பாக கண்சிமிட்ட, அவள் அவனை உக்கிராமாக முறைத்துவிட்டு,

“நீ எனக்கு வேண்டாம்” என்றாள் தீர்மானமாக..!!

விழிகள் தொடரும்…….

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here