மின்னல் விழியே குட்டித் திமிரே – 19

0
888
1551018907221|679x452

மின்னல் விழியே – 19

அந்த பூங்காவில் சுமிக்காக காத்திருந்தான் அகில். சென்னை சென்ற வேகத்திலே மீண்டும் பெங்களூருக்கு வர வைத்த விதியை நொந்தவாறே அமர்ந்திருந்தான்.. அவனுக்கு சுமியுடன் சேருவதில் எந்த கவலையும் இல்லை ஆனால் வினுவை நினைத்து தான் வருத்தமாக இருந்தது.. தன்னை பழி வாங்குவதற்காக திரு வினுவை பகடைக்காயாய் பயன்படுத்தியதை நினைக்கையில் கோபம் எழுந்தாலும் திருவை முழுதாக தப்பாக எண்ணவும் முடியவில்லை.. ஒருவேளை தங்கையின் வாழ்வுக்காக இப்படி செய்திருந்தாலும் வினுவின் மேல் அவன் வைத்திருக்கும் காதல் உண்மையாக இருக்க வேண்டும் என்று வேண்டினான்.

திருவை நம்பும் வினுவின் மேல் வேறு கோபமாக வந்தது.. அந்த காரணத்தினாலே வினுவைக் கூட காண செல்லாமல் நேராக திருவின் வீட்டிற்கு சென்றான்.

அவனை கண்டதும் சுமி முதலில் பேசாமல் கதவை சாற்றிவிட்டு உள்ளே செல்ல முயல, அவள் காலில் விழாத குறையாக அவளிடம் கெஞ்சி அருகில் உள்ள பூங்காவிற்கு வர சொல்லியிருந்தான்..

சுமியை எதிர்பார்த்து கண்கள் அவளை தேட, அன்னநடையிட்டு ஹனியோடு வந்துக் கொண்டிருந்தாள் சுமி. அவளை கண்டதும் எழுந்தவன் அவள் கையில் இருந்த ஹனியை ஆசை தீர பார்த்தான்.. நேற்று அவன் கைகளில் கூட அவளை தராமல் சென்றது அவனை காயப்படுத்தியிருந்தது… மகளை நினைத்து ரத்த கண்ணீர் வடித்தது அவனின் உள்ளம்.

தன்னை நெருங்கிவிட்டவர்களை கண்டவன் தன்னையும் அறியாமல் குழந்தைக்காக கையை நீட்டினான். ஆனால் ஹனியோ அவனை பார்த்ததும்,

“பேட் பாய்.. என் மம்மி வேணும்… என் மம்மி குடு… என் மம்மிய ஸ்டார்க்கு அனுப்பிட்டியா?? என் மம்மி வேணும்…” உதடு அழுகையில் பிதுங்க சுமியின் தோள்களில் முகத்தை புதைத்துக் கொண்டு விசும்பினாள்.

தன் மம்மியை தன்னிடமிருந்து அகில் தான் இழுத்து சென்றுவிட்டான் என்ற கோபத்தில் ஹனி அவனிடம் போகாமல் சுமியோடு ஒன்ற, அதில் அகில் செத்துப் போனான்… தன் உதிரத்தில் பிறந்த மகளிடமிருந்து வரும் நிராகரிப்பு, எந்த தந்தையாலும் தாங்கிக் கொள்ள முடியாத ஒன்று.. அகிலும் அந்த நிலையில் தான் இருந்தான்..

“ஹனிம்மா.. உன் மம்மி வந்துடுவா டா.. என்கிட்ட பேச மாட்டியா??? என்கிட்ட வா டா…” ஹனியை நெருங்கி அவள் கைகளை பற்ற, மிஸ்டர் ஹிட்லரின் செல்ல மகளுக்கு கோபம் வந்துவிட்டது.. சட்டென்று அவன் கையை தட்டிவிட்டவள் அவன் கையில் அடித்தாள்..

“பேட் பாய்.. நீ மம்மி அழ வச்ச.. ஹனி ஹேட்ஸ் யூ…” கோபமாக கத்தியவள் சுமியின் கைகளிலிருந்து நழுவி, அங்கிருந்த பூச்செடியின் அருகே சென்று நின்றுக் கொண்டாள்..

மார்புக்கு குறுக்காக கைகளை கட்டிக் கொண்டும், முகத்தை திருப்பியவாறும், சின்ன இதழ் குவிந்திருக்க ஹனி நின்றிருந்ததே கவிதையாய் இருந்தது.. மகளின் கோப அழகை ரசித்தாலும் அந்த கோபம் அவன் மீது என்பதை தான் அவனால் தாங்க முடியவில்லை.. அவளையே கண்கொட்டாமல் பார்த்திருந்தான்..

தந்தை மற்றும் மகளின் உணர்வுகளை பார்த்த சுமிக்கு எரிச்சலாக வந்தது. அவளுக்கு ஹனியை இங்கு அழைத்து வர விருப்பமில்லை என்றாலும் திருவை வீட்டில் காணாததால், ஹனியை தனியே விட்டு வர முடியாமல் உடன் அழைத்து வந்திருந்தாள்..

“எதுக்காக என்னை வர சொன்ன??? சீக்கிரம் சொல்லு… நான் கிளம்பணும்…” பார்வையை மகள் மீது பதித்தவாறே சுமி கேட்க, அகில் அவளை பார்த்தான்..

“சுமி.. அது…” தங்கையின் வாழ்க்கை, தாயின் உயிர் என அவனுக்கு பேச ஆயிரம் காரணங்கள் இருந்தாலும் அவனுக்கு பேச்சு வரவில்லை..

“ம்ச்ச்.. என்னன்னு சொல்லு.. என் அண்ணாவோட வாழ்க்கை மேல அக்கறை இருக்கிறதுனால தான், நான் வந்திருக்கேன்.. இல்லாட்டி நான் வந்திருக்கவே மாட்டேன்..” அண்ணனின் வாழ்க்கை தன்னால் கெடுவதை விரும்பவில்லை சுமி.

அவள் கூறியதை கேட்டதும் அவன் மனம் அவனையும் அறியாமல், “அப்போ நம்மளோட வாழ்க்கை” என கேட்டது. அதையும் அவனால் மனதில் மட்டும் தான் கேட்க முடிந்தது… வெளியே சொல்ல துணிவு வரவில்லை.. இருந்தாலும் தாயின் உயிரை மனதில் வைத்துக் கொண்டு,

“என் அம்மாவுக்கு நம்ம விஷயம் தெரிஞ்சிடுச்சு… இப்போ நெஞ்சு வலின்னு ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணிருக்கோம்.. அவங்க உன்னை பார்க்கணும்னு சொல்றாங்க..” தயங்கியவாறு அகில் கூற,

சுமி அவனை கண்களில் கணல் பறக்க பார்த்தாள். “அதுக்கு நான் என்ன பண்ணணும்.. நீ தான் பெரிய பணக்காரனாச்சே.. வேற எதாச்சும் பொண்ணை கூட்டிட்டு போய் உன் அம்மாவுக்கு காட்டு..” அலட்சியமாக கூறியவளுக்கு அன்று இந்த பணத்தை வைத்து தன்னை தாழ்த்தியவனுக்கு பதிலடி கொடுத்துவிட்ட திருப்தி.

“சுமி..!! அவங்க என்னோட அம்மா.. பளீஸ் புரிஞ்சிக்கோ… அவங்களுக்கு எதாச்சும் ஆகிடுச்சுன்னா என் குடும்பத்தால தாங்கிக்க முடியாது..”

“ஓஓ… உன் அம்மான்னதும் வலிக்குதா??? அன்னைக்கு என் அப்பாவை நினைச்சி எனக்கும் இப்படி தான் வலிச்சிது.. என் வலி முன்னாடி உன் வலி எல்லாம் பெரிசில்லை..” அன்று தன் தந்தையும் இந்த மாதிரி ஒரு சூழ்நிலையில் தானே இறந்தார்.. தன் தந்தை கெஞ்சிய போது இறங்காதவனுக்காக தான் ஏன் வருந்த வேண்டும் என பூமனம் கொண்டவள் கல்லாக நின்றாள்..

“அன்னைக்கு என்ன நடந்துச்சுன்னு தெரியாம பேசாத சுமி.. ம்ச் என் அம்மா அங்க உயிருக்கு போராடிட்டு இருக்காங்க.. நீ வந்தா மட்டும் தான் அவங்க சரியாகுவாங்க… ப்ளீஸ் வா..” அன்னைக்காக மன்றாடினான் அவன்…

“முடியாது.. நான் வரமாட்டேன்.. உன் அம்மாவை காப்பத்துறது உன்னோட பொறுப்பு.. இதுல என்னை இழுக்காதே.. உன் முகத்தை பார்க்க கூட எனக்கு பிடிக்கலை.. ஏதோ என் அண்ணன் வாழ்க்கை மேல அக்கறை இருந்த வா ன்னு நீ சொன்னதுனால மட்டும் தான் நான் வந்தேன். இல்லாட்டி உன்னை பார்க்க நான் வந்திருக்கவே மாட்டேன்..” கண்களில் அத்தனை வெறுப்பை காண்பித்தவள் ஹனியை நோக்கி சென்றாள் கிளம்புவதற்காக…

ஹனியை கையில் தூக்கிக் கொண்டவள் அவனை திரும்பி பாராமல் செல்ல, அகிலுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை..

“சுமி ஒரு நிமிஷம்.. உன் அண்ணாவோட வாழ்க்கை உனக்கு வேண்டாமா??? நமக்குள்ள எதுவும் சரியாகாம உன் அண்ணன் அவன் வாழ்க்கையை பத்தி யோசிக்கவே மாட்டான்..” வேறு வழியில்லாம் கடைசி ஆயுதமாக திருவின் வாழ்வை இழுத்தான் அகில்..

அகில் கூறியதில் அவள் கால்கள் அடுத்த அடியை எடுத்து வைக்காமல் அங்கேயே நின்றது..

அவன் சொல்வது சரி தானே.. வினுவை தவிர நிச்சயம் வேறு பெண்ணை திரு கல்யாணம் செய்துக் கொள்ள மாட்டான்.. அந்த உண்மை புரிந்ததுமே அவனை கலக்கமாக திரும்பி பார்த்தாள்.

அவள் செல்வதற்குள் எப்படியாவது அவளை சம்மதிக்க வைத்துவிட வேண்டும் என நினைத்தவன், “எனக்காக வேண்டாம்.. நம்ம பொண்ணுக்காக கூட வேண்டாம் ஆனா உன் அண்ணாவை யோசிச்சி பாரு.. அவனுக்காவாச்சும் என் கூட வா.. நான் உன்னை எந்தவிதத்திலும் தொந்திரவு பண்ண மாட்டேன். ப்ளீஸ் சுமி..” அவளை எப்படியாவது அழைத்து செல்ல வேண்டும் என திருவை வைத்தே அவளிடம் பேசினான்.

ஏற்கனவே ஐந்து வருடங்கள் ஹனியை அவன் கையில் கொடுத்து அவன் வாழ்க்கையை கெடுத்தாயிற்று இனியாவது அண்ணன் திருமணம் செய்துக் கொண்டு வாழ வேண்டும் என மனதில் திருவை நினைத்து குழம்பினாள் சுமி.

அவளின் குழப்பத்தை சரியாக கண்டுக் கொண்டவன், “நீ நல்லா யோசிச்சி சொல்லு சுமி. நான் இங்க தான் இருப்பேன்.. நாளைக்கு நான் ஊருக்கு போகணும்.. அதுக்குள்ள உன் முடிவை சொல்லு…” என்றவன் அவளுக்கு, தான் பேசுவது வலிக்கும் என்று தெரிந்தும் பேசினான்..

அவனை கண்கள் கலங்க திரும்பி பார்த்தவள் அங்கிருந்து ஹனியோடு விறுவிறுவென்று சென்றுவிட்டாள்..

அவள் சென்றதும் தொப்பென்று அங்கிருந்த கல் மேடையில் அமர்ந்தான் அகில்..

“சாரி சுமி.. எனக்கு நீ வேணும்.. என் அம்மாவுக்காக நான் இங்க வந்துருந்தாலும் எனக்கு நீயும் என் பொண்ணும் வேணும்.. இனி யாருக்காகவும் நான் உங்களை விட்டுக் கொடுக்கிறதா இல்ல… நீ அந்த ஆண்டவனே வந்து சொன்னாலும் என்கூட வர்றதுக்கு ஒத்துக்க மாட்ட.. ஆனா உன்னோட அண்ணாவை வச்சி பேசினா கண்டிப்பா நீ ஒத்துக்குவ… என்னை மன்னிச்சி என்னை ஏத்துக்கோ சுமிம்மா… எனக்குன்னு யாருமே இல்லை.. ப்ளீஸ் புரிஞ்சிக்கோயேன்…” கண்களில் வழியும் கண்ணீரை துடைக்க கூட தோன்றாமல் தலையை கையால் தாங்கியவாறு அந்த பூங்காவில் அநாதையாக அமர்ந்திருந்தான் அகில்…

ஒரு கையில் போனை வைத்துக் கொண்டும் மற்றொரு கையால் திரு சுட்டுக் கொடுத்த தோசையை சாப்பிட்டுக் கொண்டும் தன் அன்னை, விக்கி மற்றும் அவளது அண்ணி அனு ஆகியோரிடம் ஸ்பீக்கரில் பேசிக் கொண்டிருந்தாள் வினு..

“ம்மா அப்புறம் என்னாச்சு??? அகில் அண்ணா கிளம்பிட்டாங்களா???” சுதா வீட்டில் நடந்த அனைத்தையும் கூற, ஆர்வமாக கதை கேட்டுக் கொண்டிருந்தாள் வினு.

“ம்ம் அதெல்லாம் அப்போவே கிளம்பிட்டான்.. இந்நேரம் அங்க வந்திருப்பான்… இனி எப்படியும் என் மருமகளை கூட்டிட்டு தான் வருவான்..” சுதா பதிலளிக்க, வினுவின் முகம் பிரகாசமானது..

“சூப்பர் மா.. அம்மான்னா அம்மா தான்.. எப்படியாச்சும் அண்ணாவும் அண்ணியும் சேரணும்.. அகில் அண்ணா சந்தோஷம் தான் நமக்கு முக்கியம்..” அண்ணனின் மேல் பாசம் கொண்டவளாக வினு கூற, அந்த பக்கம் அவளின் பாசத்தை கண்டு அனுவிற்கு புல்லரித்தது..

தான் கூறிய ஒரு வார்த்தையை வைத்துக் கொண்டு இன்று அவனது வாழ்க்கையை சரிபண்ண துடிக்கும் தன் நாத்தனாரை காணும் போது அனுவிற்கு பெருமையாக இருந்தது..

“ஆமாம் வினு.. இனி உன் அண்ணா இஞ்சி தின்ன குரங்கு மாதிரி இருக்க மாட்டான்.. அவன் வாலை பிடிச்சி ஆட்ட தான் சுமியும் ஹனியும் வரப் போறாங்களே…” அனு தனது தோழன் அகிலை கிண்டலடிக்க, விக்கியும் சுதாவும் சிரித்தார்கள்…

“போங்க அண்ணி.. அகில் அண்ணா பாவம்.. சுமியண்ணி அப்படியெல்லாம் பண்ணமாட்டாங்க.. அவங்க சீக்கிரமாவே அகில் அண்ணாவை மன்னிச்சி ஏத்துக்குவாங்க.. அதோட அண்ணாவும் இனி சுமி அண்ணியை விட்டு பிரியவே மாட்டான்..” .தன் அண்ணணுக்காக சப்போர்ட் செய்தாள் வினு.

“கண்டிப்பா வினு.. அந்தளவுக்கு அம்மா பெர்ஃபார்ம் பண்ணிருக்காங்க.. சுமி அண்ணி இல்லாம நம்ம அண்ணா ஊருக்கே வரமாட்டான் பாரேன்.. இனி அவங்களுக்குள்ள பிரிவே இல்லை” விக்கி தன் அண்ணையை புகழ, அனு அதை ஆமோதித்தாள்.. சுதாவிற்கு தான் வெட்கமாக போனது..

“ச்சூ சும்மா இருங்க… என் பசங்க நல்லா இருக்கணும்னு தான் இதெல்லாம் பண்றேன்..” என்றவர் சட்டென்று ஞாபகம் வந்தவராக, “வினு… மாப்பிள்ளை என்ன சொல்றாரு மா?? உன் மேல இன்னும் கோபமா தான் இருக்காரா??? நான் வேணும்னா பேசவா டா குட்டி…” மகளின் எதிர்காலத்தை நினைத்து கவலையாக இருந்தது சுதாவிற்கு..

சுதா கேட்டதும் என்ன சொல்வதென்று அமைதி காத்தவள், பின் ஒரு முடிவு எடுத்தவளாக, “அவன் கோபமா தான்ம்மா இருக்கான்.. நீங்க ஃபர்ஸ்ட் அகில் அண்ணாவை பாருங்க.. என்னை பத்தி கவலை படாதிங்க…” உள்ளே சென்றவிட்ட குரலில் வினு கூறினாள்..

“என்ன வினு.. அந்த ஹிட்லர் பழைய மாதிரி உன்னை கரிச்சி கொட்டுறாறா???” தன் அக்காவை அழ வைத்த திரு மீது கோபம் அடங்கவில்லை விக்கிக்கு.

“ம்ம் ஆமாம் டா.. அவனை பத்தி தெரியாதா??? உன் ஹிட்லருக்கு என்மேல அத்தனை கோபம்.. அவன் கோபத்துல நான் என்னும் பஸ்பம் ஆகாம இருக்கிறதே பெரிய அதிசயம் தான்..” பெருமூச்சு ஒன்றை விட்டவள் அலுத்துக் கொள்ள, எதிர்முனையில் இருந்த மூவருக்குமே வருத்தமாக இருந்தது..

“கவலைப்படாத வினும்மா.. மாப்பிள்ளை உன்னை கண்டிப்பா புரிஞ்சிக்குவார்.. நீ தைரியமா இரு.. அப்படி இல்லாட்டியும் நாம இன்னோரு பெர்ஃபார்மன்ஸ் பண்ணி அவரை சமாதானம் செஞ்சிடலாம்..” வினுவின் மனநிலையை மாற்றும் பொருட்டு சுதா கேலியாக கூற, வினுவுக்கு சிரிப்பு வந்தது..

“சரிம்மா.. நான் அப்புறம் பேசுறேன்.. அண்ணா எப்போ வேணும்ணாலும் வந்துடுவாங்க..” புன்னகையுடன் கூறியவள் போனை அணைத்துவிட்டு திரும்ப, அங்கே அவளை வாய் பிளக்காத குறையாக பார்த்திருந்தான் திரு..

அவனை பார்த்ததும் தான் அவனை வைத்துக் கொண்டே பேசிவிட்டோம் என்பது உரைக்க, அவள் இதயம் அடித்துக்கொண்டது.. இப்போது தன் அண்ணையோடு பேசியதையும் தப்பர்த்தம் பண்ணிக்கொண்டு சண்டையிடுவானோ என்று பயந்தவாறே அவள் அவனை பார்க்க, அவன் தன் அழுத்தமான நடையுடன் அவளை நெருங்கினான்…

“அது.. நாங்க.. சும்மா… நீ… தப்பா..” வார்த்தைகள் வராமல் வினு திணற, திரு அவளை அணைத்துக் கொண்டான்.. ஒரு கையில் போனும், மற்றொரு கை சாப்பிட்டதில் எச்சிலாக இருக்க, அவனை விலக்க முடியாமல் தடுமாறினாள்.

“விடுடா.. நான் தான் உன்னை அப்போவே உன் வீட்டுக்கு போக சொன்னேனே…”

காலை அவனை வேண்டாமென அவள் மறுத்ததும் முதலில் அதிர்ந்தவன் பின் அவள் எவ்வளவு விரட்டியும் போகாமல் அவன் பின்னாலே சுற்ற, அதில் அவள் தான் சோர்ந்து போனாள்…

அவன் மன்னிப்பை அவளிடம் வேண்டவில்லை மாறாக நான் உன்னோடு இருக்கிறேன் என்பதை அவளை உரசியவாறும் ஒட்டியவாறும் திரிந்து அவன் நிருபிக்க… அதில் அவள் கோபம் கூட பறந்து ஓடிவிடும் போல் இருந்தது.. இருந்தும் தன் கெத்தை விட்டுக் கொடுக்காமல் அவள் சிலுப்பிக் கொண்டிருந்தாள்.

இப்போதும் அவள் பசியுணர்ந்து, அவள் அவ்வளவு திட்டியும் கேளாமல் தோசை வார்த்துக் கொடுத்துக் கொண்டிருந்தான்… வினுவும் முதலில் வேண்டாமென மறுத்தாலும், தோசை மற்றும் தேங்காய் சட்னியின் மனம் அவளை மான ரோஷம் எல்லாம் பார்க்காமல் சாப்பிட வைத்தது.. சரியாக அண்ணையின் அழைப்பும் வர, அதை ஏற்றவள் திரு இருப்பதை மறந்து தங்களது ப்ளான்களை அவிழ்த்துவிட்டுவிட திரு திகைத்தான்..

“ஷ்ஷ் அமைதியா இரு டி… என் தங்கச்சி நல்லா இருக்கணும்னு நீங்க எல்லாரும் எவ்வளவு கஷ்டபடுறிங்க ஆனா நான் அதெல்லாம் புரிஞ்சிக்காமா உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன் புஜ்ஜி மா…. ஐ யம் சாரி… நான் மனுஷனே இல்ல… உன்னை பார்த்து என்ன வார்த்தை சொல்லிட்டேன்.. என்னை மன்னிச்சிடுவியா புஜ்ஜி???” அவள் தலையை தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டு, அவன் தலையை அவள் உச்சியில் பதித்து அவன் மன்னிப்பை வேண்ட, அவனின் இறுதி வாக்கியத்தில் அவள் உடல் விறைப்புற்றது..

அவளின் மாற்றம் உணர்ந்தவன் அவளை விலக்கி பார்க்க, அவள் முகமோ அழுகையில் கசங்கியது.. அவள் கண்ணீரை கண்டு பதறியவன்,

“என்னடா ஏன் அழுவுற???”

“என்னால நீ பேசினதை மறக்க முடியலை.. நான் என்ன அந்த மாதிரி பொண்ணா??? எவ்வளவு அழுதேன்.. நான் சொல்றதை கொஞ்சம் கேளுன்னு.. ஆனா ஒரு வார்த்தை கூட நீ கேட்கல.. உண்மையான காதல் இருந்த அவங்க எந்த நிலைமையிலும் ஒருத்தரையொருத்தர் விட்டுக் கொடுக்க மாட்டாங்க… நீ ரொம்ப ஈ.ஸியா என்னை தூக்கி போட்டுட்டா.. நீ எனக்கு வேண்டாம் போ…” அவன் மார்பில் அடித்தவள் அவனை அணைத்துக் கொண்டே அழுதாள்.. அவளை ஆறுதலாக அணைத்தவன் மனதளவில் தளர்ந்து போனான்..

“நான் பேசினதை என்னால மாத்த முடியாது புஜ்ஜி… ஆனா இனி ஒரு நாளும் உன்னை பிரிய மாட்டேன்…” அவளை தன்னோடு இறுக்கிக் கொள்ள, அவளும் அவன் அணைப்பில் வாகாக அடங்கிக் கொண்டாள்..

அதன்பின் அவளை சமாதானம் செய்துவிட்டு சுமியை காண வீட்டிற்கு வந்தவன், அங்கு அவள் சோபாவில் தலையை சாய்த்தவாறு நெற்றி பொட்டை தேய்த்துவிட்டுக் கொண்டு ஏதோ யோசனையாக அமர்ந்திருக்கவும் அவள் அருகில் அமர்ந்தான்…

திருவின் காலடி சத்தம் கேட்டதும் கண்விழித்துப் பார்த்தவள் தன் அருகில் இருக்கும் அண்ணன் தோளில் சாய்ந்துக் கொண்டாள்… சிறிது நேரம் அப்படி அமர்ந்தவள் பின் அவன் முகத்தில் சோர்வை கண்டு, உள்ளே சென்று டீ போட்டு எடுத்து வந்தாள்..

தங்கை தந்த டீயை வாங்கிக் கொண்டவன் தங்கையின் யோசனையான முகத்தை கண்டு புருவம் சுருக்கினான்..

“சுமி.. ஏன் ஒரு மாதிரி இருக்க???” தன்னிடம் ஏதோ சொல்ல வந்து.. சொல்ல முடியாமல் தடுமாறும் சுமியிடம் அவன் கேட்க,

“அது அண்ணா.. வினுக்கிட்ட இருந்து அவளோட அண்ணா நம்பர் வாங்கி குடு…” திரு என்ன சொல்வானோ என்ற பயத்தில் சுமி அவளை பார்க்க, திரு அவளை ஒரு ஆச்சரிய பார்வை பார்த்துவிட்டு, எதவும் பேசாமல் அவள் கூறியதை போலவே அகிலின் நம்பரை கேட்டு வினுவிற்கு மெசேஜ் செய்தான்…

அடுத்த நிமிடமே அவள் அகிலின் எண்ணை அனுப்பி வைக்க, போனை சுமியிடம் கொடுத்தான்..

அவனுக்கு தெரியும் நிச்சயம் அகில் அவளிடம் பேசியிருப்பான் என்று… அதனால் தங்கையின் முடிவு எதுவாக இருந்தாலும் ஏற்றுக் கொள்வது என்ற முடிவுடன் காத்திருந்தான்…

நடுங்கும் கையால் போனை வாங்கியவள், அகிலுக்கு டையல் செய்ய, ஒரு முழு ரிங் சென்ற பின்னே அவன் அட்டன்ட் செய்தான்…

“ஹ..ஹலோ… நான் சுமி பேசுறேன்..” மெதுவான குரலில் அவள் கூற, அகிலுக்கு மகிழ்ச்சியாக இருந்தது..

“சொல்லு சுமிம்மா.. என்ன முடிவு பண்ணியிருக்க???” சுற்றி வளைக்காமல் நேராக விஷயத்திற்கு வந்தான்…

“நான்.. நான்.. நீ சொன்னதுக்கு எனக்கு சம்மதம்…” தன் அண்ணணுக்காக அவனோடு செல்ல தயாராகினாள் சுமித்ரா…

அவள் சொல்வதை நம்ப முடியாமல் கேட்டிருந்தான் அகில்.. ஒரு நிமிடத்தில் மொத்த உலகமும் கைவசமானது போன்ற ஒரு மாயை..

“நிஜம்மாவா சுமி??? நிஜம்மா தான் சொல்றியா??” அவன் குரலில் அத்தனை சந்தோஷம்…

“ஆமா… நான் வரேன் ஆனா ஒரு கண்டிஷன்..” என்றவள் தன் அண்ணனை பார்க்க, திரு கையை கட்டிக் கொண்டு அவள் பேசுவதை பார்த்துக் கொண்டிருந்தான்..

“சொல்லு சுமி.. என்ன கண்டிஷனா இருந்தாலும் நான் பண்றேன்…” அவனது உயிரை கேட்டாலும் கொடுக்க தயாராக இருந்தான் அகில்..

“நான் உன் கூட வரணும்னா நீ உன் தங்கச்சியை என் அண்ணாவுக்கு கல்யாணம் செஞ்சுக் கொடுக்கணும் அதுவும் நான் உன்கூட வர்றதுக்கு முன்னாடி…” ஊறுதியாக கூறியவளின் வார்த்தையில் அகில் மொத்தமாக அதிர்ந்தான்..

“என்ன சொல்ற சுமி?? அது எப்படி நடக்கும்??? வினுவோட கல்யாணத்தை பத்தி என் குடும்பத்துல பெரிய கனவு இருக்கு.. அதை எப்படி என்னால உடைக்க முடியும்…” திருவின் கைகளில் வினுவை ஒப்படைக்க அவன் மனம் ஒப்பவில்லை.. தன் மேல் இருக்கும் கோபத்தில் திரு வினுவை எதாவது செய்துவிடுவானோ என்று பயமாக இருந்தது..

“என் கல்யாணத்தை பத்தி என் வீட்ல கூட பெரிய கனவு இருந்துச்சு அகில் ஆனா அதையெல்லாம் தான் நீ சிதைச்சிட்டியே… சரி விடு அதெல்லாம் எதுக்கு இப்போ பேசிட்டு… என் அண்ணா வாழ்க்கை சரியானா மட்டும் தான் என்னால நிம்மதியா இருக்க முடியும்.. உன் தங்கச்சியை என் அண்ணாவுக்கு கொடுக்க உனக்கு சம்மதமா???” வெட்டு ஒன்று துண்டு ரெண்டாக சுமி கேட்க, அந்த பக்கம் அகில் ஊமையாகி போனான்..

அவன் அருகே அமர்ந்து அவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்த வினுவை கூட சுமியின் இந்த கண்டிஷன் புருவம் ஏற்ற வைத்தது.. தன் அண்ணணின் கையை அழுத்தியவள்,

“சம்மதம் சொல்லுண்ணா.. சுமியண்ணி பாவம்.. உன் பொண்ணை யோசிச்சி பாரு.. அவளுக்காச்சும் சம்மதம் சொல்லுண்ணா.. எனக்கு கூட என் பொண்ணு வேணும்ண்ணா.. ஹனியை ரொம்ப மிஸ் பண்றேன்…நீ கற்பனை பண்ணி வச்சிருக்க மாதிரி திரு ஒன்னும் கெட்டவன் இல்லைண்ணா..” வினு வருந்த,

ஆழ்ந்த மூச்செடுத்த அகிலும், “எனக்கு சம்மதம் சுமி.. என் தங்கச்சியை அரசுவுக்கு கல்யாணம் செஞ்சு தரேன்..” பிடிக்கவில்லையென்றாலும் வினுவிற்காக ஒத்துக் கொண்டான்.. திருவை தவிர வேறு யாரையும் அவள் தன் வாழ்வில் ஏற்றுக் கொள்ள மாட்டாள் என்ற உண்மை, அவன் சுமியை சந்தித்துவிட்டு வினு வீட்டிற்கு வரும் போது, திரு மற்றும் ஹனியோடு சேர்ந்து எடுத்துக் கொண்ட போட்டோவை பார்த்து அவள் கலங்கிக் கொண்டிருக்கும் போதே அவனுக்கு புரிந்து போனது.

அகில் சம்மதம் கூறியதும் மகிழ்ந்தவள் அதற்கு மேல் பேச எதுவும் இல்லை என்பது போல் போனை அணைத்து திருவின் கைகளில் கொடுத்தாள்.

“சாரிண்ணா.. உன்கிட்ட கேட்காமலே முடிவு பண்ணிட்டேன்…” என்ற தங்கையை தோளோடு அணைத்துக் கொண்டவன்,

“ஐ கேன் அன்டர்ஸ்டான்ட் சுமி… ஆனா எனக்காக நீ உனக்கு பிடிக்காததை பண்ண வேண்டாம் டா…” சுமியின் தலையை கோதியவாறு அவன் கூற,

“இல்லண்ணா.. எனக்கும் அகில்கிட்ட தீர்த்துக்க வேண்டிய கணக்கு பாக்கி இருக்கு.. அவன் பண்ணின தப்புக்கு நான் அவனுக்கு பாடம் சொல்லி தரணும்..” என்றவளின் முகம் தெளிந்திருந்தது..

“நான் எப்போவும் உன்கூட தான் இருப்பேன். நீ எதுக்கும் கவலை படாதே..” திருவிற்கு சுமியின் முடிவில் கோபம் வரவில்லை மாறாக வினு தன் அண்ணனை நம்புவது போல் தானும் அகிலுக்கு ஒரு வாய்ப்பளிக்க முன்வந்தான்.

இதன்மூலம் வினுவை எளிதாக திருமணம் செய்துக் கொள்ளலாம் என்ற எண்ணமோ சந்தோஷமோ அவனுக்கு துளியும் தோன்றவில்லை… எத்தனை காலம் ஆனாலும் வினு தான் அவனது மனைவி என்பதில் அவன் ஆணித்தரமாக இருந்தான்… ஆனால் தன் தங்கையின் வாழ்வை சரி பண்ண ஆண்டவனாக ஏற்படுத்தியிருக்கும் இந்த வாய்ப்பை அவன் தவற விட தயாராக இல்லை…

திரு யோசித்ததை போல தான் வினுவும் எண்ணிக் கொண்டிருந்தாள்.. திரு மேல் கோபம் இருந்தாலும்.. இந்தமுறை தன்னால் அகிலின் வாழ்வு கெடுவதை அவள் விரும்பவில்லை.. அதனாலே அகிலிடம் ஒத்துக் கொள்ள கூறினாள்…

ஆக மொத்ததில் ஒவ்வொருவரும் மற்றவர்களுக்காக என்று அவர்களின் வாழ்க்கையை திருத்திக் கொள்ள தங்களது முதல் அடியை எடுத்து வைத்தனர்.

விழிகள் தொடரும்…..

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here