மின்னல் விழியே குட்டித் திமிரே 5

0
805
1551018907221|679x452

மின்னல் விழியே குட்டித் திமிரே 5

ஆர்வமாக கேட்கும் அனுவிடம் என்ன சொல்வது என்று முழித்தவள், “அது அண்ணி இன்னைக்கு தானே ஜாய்ன் பண்ணிருக்கேன் சீக்கிரம் கண்டுப்பிடிக்கிறேன் நீங்க கவலைபடாதிங்க….” என்றவள் அனு வேறு எதுவும் கேட்கும் முன் வேலை இருப்பதாக கூறி போனை அணைத்துவிட்டாள்…. சிறிது நேரம் கழித்து சுதா, நிகில் என அனைவரும் போன் செய்து முதல் நாளை பற்றி விசாரிக்க அகில் போன் பண்ணவேயில்லை…. அகில் போன் செய்ய மாட்டான் என தெரிந்தாலும் ஏமாற்றமாக தான் இருந்தது…. அதை நினைத்து கவலை படுவதை விட சமைக்கலாம் என தனக்கு தெரிந்த சமையலை சமைக்க தொடங்க விக்கியும் வந்து அவளுக்கு உதவினான்….

ஆபிஸிலிருந்து அசுர வேகத்தில் கிளம்பிய திருவின் கார் நேராக வந்து நின்றது அவனது தோழனின் வீடான ஹரியின் வீட்டில்…. ஹரியும் திருவும் பள்ளி காலத்து நண்பர்கள்… ஹரி மேற்ப்படிப்புக்காக லண்டன் சென்றுவிட திரு பெங்களூரிலேயே படித்தான்… இப்போது ஹரி ஒரு பெரிய எம்.என்.சி கம்பெனியில் சீப் எக்ஸியூட்டிவ்வாக இருக்கிறான்… ஒரு வருடத்திற்கு முன்பு தான் திருமணமாகியிருக்க மனைவி மது ஏழாம் மாத கருவை சுமந்துக் கொண்டு தாயின் வீட்டிற்கு இப்போதே பிள்ளைபேறுக்காக சென்றுவிட்டாள்…. அதனால் ஹரி மட்டுமே இப்போது அவனது அப்பார்ட்மென்டில் இருக்கிறான்…. அது தெரிந்ததுனால் தான் திரு இங்கு வந்தது இல்லையென்றால் ஹரி எவ்வளவு முறை வருந்தி அழைத்தாலும் திரு வர மாட்டான்….

ஹரியின் வீட்டு காலிங் பெல்லை அழுத்தியன் ஹரிக்காக காத்திருக்க, கதவை திறந்து ஹரி எதோ அதிசயத்தை பார்ப்பது போல் திருவை மேலும் கீழும் பார்க்க… அவனை தள்ளிக் கொண்டு திரு உள்ளே நுழைந்தான்…. இதற்கு முன்பு ஒரே ஒரு முறை தான் ஹரியின் வீட்டிற்கு வந்திருக்கிறான்… சோபாவில் சென்று அமர்ந்தவன் சோபாவில் சாய்ந்தவாறு அமர்ந்துக்கொண்டு நெற்றியில் கை வைத்துக் கொள்ள… ஹரி அவனுக்காக டீ போட சென்றான்….

எந்த சத்தமும் இல்லாததால் கண் திறந்து பார்த்த திரு, ஹரி உள்ளே டீ போடுவதை உணர்ந்து எதிரில் இருந்த சுவற்றை பார்த்தான்… அதில் அவனும் ஹரியும் சேர்ந்து ஐந்து வருடங்களுக்கு முன்பாக ஹரி வெளிநாட்டிலிருந்து ஊருக்கு வந்திருந்த போது எடுத்த புகைப்படம் தொங்கிக் கொண்டிருந்தது… அதன் அருகே சென்றவன்…. அதில் வாய்கொள்ள சிரிப்புடன் ஹரியின் தோளில் கைப் போட்டவாறு தான் நின்றிருந்த படத்தை பார்க்க…. காலையில் வினு கேட்ட… நீங்க எப்பவுமே இப்படி தான… சிடு சிடுன்னு… கோபமா… என்ற வார்த்தை ஞாபகம் வர அவன் உதட்டில் ஒரு கசந்த முறுவல் தோன்றியது….

பின்னாடி எதோ அரவம் கேட்க, திரும்பி பார்த்தவன் கையில் டீயோடு நின்றுக் கொண்டு கூர்மையாக தன்னை அளந்துக் கொண்டிருந்த ஹரியை பார்த்து தடுமாறி பின சுதாரித்து சோபாவிலையே சென்று அமர்ந்துக் கொண்டான்….

திரு டீயை குடித்து முடிக்கும் வரை அமைதியாக இருந்த ஹரி, “என்னடா திரு எதுக்காக ரெஸ்ட்லெஸ்சாக இருக்க???” என்றான் கேள்வியாக…

“எல்லாம் அந்த ரெட்ட வாலு குரங்குங்க பண்ற டார்ச்சர்ல தான் டா… இம்சைங்க…. காலையில இருந்து என் மண்டைய காய விடுறாங்க..”..என்றவனின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.

திரு இதுவரை எதற்க்காகவுமே ஹரியை தேடி வந்தது இல்லை…. ஐந்து வருடங்களுக்கு முன்பு வாழ்க்கையே தொலைத்துவிட்டு அவன் நின்றிருந்த கோலத்தை கண்டு ஹரி தான் அவன் பின் சுற்றிக் கொண்டிருக்கிறான்…. ஆனால் திரு வாழ்க்கையை எதிர்த்து யார் துணையுமின்றி போராட ஆரம்பித்தான்… அதன் முதற்படி ஹரியிடம் எந்த உதவியும் எதிர்ப்பார்க்காமல் தன்னை சுற்றி ஒரு வட்டம் போட்டு அந்த வட்டத்திற்குள் வாழ தொடங்கினான்…எப்போதும் முகத்தில் ஒரு கடுமை என்னிடம் நெருங்காதே என கண்கள் அனைவரையும் தள்ளியே நிறுத்தும்… யாரையும் நம்ப மாட்டான்… இது தான் நான் என வாழ தொடங்கினான். எப்போதும் சிரிச்சிட்டே தான் இருப்பியா டா என்று கேட்டவர்கள் கூட திருவின் இம்மாற்றத்தை கண்டு ஒதுங்கினார்கள்… அவர்கள் ஒதுங்கினார்கள் என்பதை விட அவன் ஒதுக்கினான் என்பது தான் சரி. ஆனால் ஹரி மட்டுமே என்றாவது தான் தொலைத்த தன் நண்பன் கிடைத்துவிடுவான் என்ற நம்பிக்கையில் திருவின் பின் சுற்றிக் கொண்டிருக்கிறான்……

திரு கோபமாக பேச… ஹரி அவனை சுவாரஸ்யமாக பார்த்தான்… அதில் கடுப்புற்று திரு முறைக்க… சட்டென்று தன் பார்வையை மாற்றிக் கொண்டவன், “உன்னையே புலம்ப வச்சிட்டாங்களா மச்சான்… இன்ட்ரஸ்டிங்…. யாருடா அவங்க… ??,”

காலையில் இருந்து நடந்ததை கூறியவன் வினு தன்னை அடித்ததையும் கடைசியாக கிளம்பும் போது தன் மீது மோதியதையும் கூறவில்லை அதை ஏன் தன்னால் ஹரியிடம் சொல்ல முடியவில்லை என்பதற்கு அவனிடம் பதிலில்லை…..

அனைத்தையும் கேட்ட ஹரி வாய்விட்டு சிரிக்க….. இவன் என்ன பைத்தியமா என்பது போல் திரு அவனை பார்த்தான்…..

ஹரி சிரிப்பதில் எரிச்சலானவன், “என்னடா எதுக்கு சிரிக்கிற??? சொல்லிட்டு சிரி இல்ல இப்போ நான் கிளம்பிடுவேன்..”

“மச்சான் உன்னையும் ஒரு பொண்ணு டென்ஷன் பண்ணிட்டா பார்த்தியா… சோ ஸ்வீட் டா மச்சான்… எனக்கே இப்போ அந்த பொண்ண பார்க்கணும் போல இருக்குடா…. நீ ஏன் அந்த பொண்ணு சொல்றத கன்ஸிடர் பண்ணக் கூடாது… நீயும் வாழ்க்கையோட அடுத்த ஸ்டெப்க்கு போகணும் டா….” என்றவனின் குரலில் கவலை நிரம்பி வழிந்தது….

“வாழ்க்கையே போன அப்புறம் என்னடா அடுத்த ஸ்டெப்….” இகழ்ச்சியாக சொன்னவன் அதற்கு மேல் பேச விரும்பாமல் கிளம்பிவிட்டான்… அவனை நினைத்து ஹரிக்கு பாரம் ஏறியது… அவனது இந்த நிலைமைக்கு காரணமானவர்களை கண்டுபிடித்து கொல்ல வேண்டும் என ஆத்திரம் பொங்கினாலும் எதுவும் தெரியாமல் ஹரியாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை…… பெருமூச்சு ஒன்றை விட்டவன் வினுவையும் விக்கியையும் பார்க்க வேண்டும் என மட்டும் மனதில் குறித்துக் கொண்டான்.

இரவு உணவை அடித்து பிடித்து சமைத்து உண்ட வினுவும் விக்கியும் ஹால் சோபாவில் அமர்ந்து இருவருக்குமே பொதுவாக பிடித்த நின்ஜா ஹட்டோரியை வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருக்க… விக்கியின் போன் நானும் இருக்கிறேன் என்று அலறியது…. அதை எடுத்துக் காதுக்கு கொடுத்தவன் டீ,வி சத்தத்தில் எதுவும் கேட்காததால் பால்கனிக்கு சென்றான்….

“அகி அண்ணா????”

“விக்கி…. வினு எப்படி இருக்கா டா????” அவள் மேல் இருக்கும் பாசத்தில் அவளுக்கு அழைக்காமல் விக்கிக்கு அழைத்திருந்தான்…

“அவளுக்கு என்னனா… ரொம்ப பேஷா இருக்கா ஆனா என் உயிர தான் வாங்குறா… நான் கூட பரவாயில்ல ஆனா பாவம் யார் பெத்த பிள்ளையோ அந்த ஹிட்லர் தான் முதல் நாளே இவகிட்ட மாட்டிட்டு அவஸ்த்தை படுறார் மாட்டிட்டு முழிக்கிறாரு…” மனதில் நினைத்தவன் அதை வெளியே சொன்னால் வினு நிச்சயம் அடி பிச்சிவிடுவாள் என்பதால் ரொம்ப நல்லா இருக்கோம்னா என்றான் எதுவும் அறியா பிள்ளையாக….

“பர்ஸட் டே எப்படி இருந்துச்சு????”

“அமோகமா இருந்துச்சுன்னா…. மேள தாளம் இல்லாதது தான் குறை அந்த அளவுக்கு எங்க டீம் லீடர் எங்கள புகழ்ந்து தள்ளிட்டாரு எங்க திறமைய பார்த்து….” வாய் அகிலிடம் சொன்னாலும் திருவிடம் வாங்கிய திட்டுக்கள் அவன் முன் தோன்றி சிரிப்பை ஏற்ப்படுத்தியது….. ( தாரை தப்பட்டையோட செம வரவேற்புன்னு சொல்லு விக்கி…)

“என் தம்பி தங்கச்சின்னா சும்மாவா?? நீங்க திறமைசாலிங்க டா…” … உண்மை தெரியாமல் அகில் அவர்களை பற்றி பெருமையாக பேச… விக்கிக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை…

அதன் பின் வினுவை பற்றி மேலும் சில விஷசயங்களை கேட்டுவிட்டு அகில் போனை வைக்க…. விக்கி மீண்டும் வினுவிடம் சென்றமர்ந்து அகிலிடம் பேசியதை கூறினான்… அனைத்தையும் கேட்டவள் ஓ என்று மட்டுமே சொல்ல… அவள் மனம் புரிந்தாற் போல் வினுவின் கைகளை பற்றிக் கொண்டு, “அகில் அண்ணா உன்கிட்டயும் பேசுவாங்க அக்கா… அவங்க தான் போன் பண்ணணும்னு நீ நினைக்கிற…. ஆனா என்கிட்ட பேசும் போது உன்ன பத்தி மட்டும் தான் அண்ணா கேட்டாங்க… உன்ன ரொம்ப பிடிக்கும் கா அண்ணாக்கு….”

விக்கியை பார்த்து மெலிதாக புன்னகைத்தவள் அவன் தலையை கலைத்துவிட்டு தன் அறைக்குள் சென்று புகுந்துக் கொண்டாள்….

மறுநாள் வினு உற்சாகமாக ஆபிஸிற்கு கிளம்ப, விக்கி இன்று என்னவெல்லாம் செய்ய போகிறாளோ என்று பயத்தோடு கிளம்பினான்…. ஆபிஸ் வாசலிலையே திருவை இருவரும் பார்த்துவிட அவனை நோக்கி ஓடியவள்… “குட் மார்னிங் அரசு” என்று கத்தினாள்….

அவளை அழுத்தமாக ஒருமுறை அவன் பார்க்க…. ஆரஞ்சு வண்ண டாப்சு கச்சிதாமாக அவளுக்கு பொருந்தியிருக்க… கறுப்பு நிற ஜீன் அணிந்திருந்தாள்… தோளில் இருந்து சற்று கீழே வரை இருந்த முடியை தூக்கி உச்சந்தலையின் அருகே போனி டெய்ல் போட்டிருக்க அது அவள் அசைவிற்கு ஏற்ப அவளை போலவே சொல்பேச்சு கேளாமல் ஆடியது…. நெற்றியில் சிறிய கருப்பு பொட்டும்…. கண்களுக்கு மையும் இட்டிருந்தாள்… அதைவிட அவள் இதழில் இருந்த மச்சம் தான் அவனை கட்டியிழுத்தது… அவன் நெஞ்சளவே இருந்ததால் அவனை சற்று அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தாள்… ( டேய் நீ அவள சைட் அடிக்கவா செய்யுற??? உன்ன நான் நல்லவன்னு நினைச்சேனே டா….)

அவளை மேலிருந்து கீழ் வரை அவளறியாமல் அளந்தவன், அவள் தன்னை பார்ப்பதை உணர்ந்து, “பேட் மார்னிங்” என்று முனகியவாறு நகர, வினுவும் விடாமல் பின் தொடர்ந்தாள்…

“என்ன பார்த்துட்ட தானே அரசு அப்போ உனக்கு குட் மார்னிங் தான்…” புன்னகையோடு கூறியவள் அவனின் பதிலுக்காக காத்திருக்க,…. அவனோ… “டோன்ட் கால் மீ அரசு” என சிடுசிடுத்தான்…..

“வேற எப்படி கூப்பிடுறது மச்சான்…. யூ நோ நீ ரொம்ப ஹேன்ட்சம்… “கள்ளம் இல்லாமல் வினு சிரிக்க…

“உனக்கு அறிவே கிடையாதா??? இப்படி என் பின்னாடி சுத்துற???”

“ஏன் பசங்க தான் பொண்ணுங்க பின்னாடி சுத்தணுமா??? நாங்களும் சுத்துவோம்…டிரெண்ட் மாறிப் போச்சு மச்சான்….” என்றவளை நெற்றிக் கண் திறந்து அவன் முறைக்க….. இதற்கு மேல் விட்டால் ஆபத்து என உணர்ந்து விக்கி தான் வினுவை இழுத்துச் சென்றான்….

கோபமாக தன் கேபினுக்கு சென்றவன் முதல் வேலையாக சில பல பைல்களை எடுத்து அனைத்தையும் ரிப்போர்ட் ரெடி செய்து தருமாறு வினுவிடமும் விக்கியிடமும் கொடுக்க சொல்லி நவினிடம் கொடுத்தனுப்பினான்….

நவினும் அதன்படி செய்ய… வினுவிற்கும் விக்கிக்கும் வேலை நெட்டி முறித்தது…. திருவை தொல்லை செய்யாமல் தன் வேலையை செய்தவர்கள் மதிய இடைவேளைக்கு கிளம்ப…. திரு மட்டும் அவன் கேபினில் இருந்தான்…

“டேய் விக்கி… மச்சான் மட்டும் வரல டா…. வா கூப்பிட்டுட்டு போவோம்… மார்னிங் பார்த்தது அதுக்கப்புறம் பாரக்க முடியல…” என்றவள் விக்கி பதில் சொல்லும் முன்னே தங்களின் லன்ச் பாக்ஸை எடுத்துக் கொண்டு திருவின் கேபினுள் நுழைய… திரு அங்கு போடப்பட்டிருந்த மற்றொரு மேசையில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான்…

அவன் தனியாக சாப்பிடுவதை கண் விரித்துப் பார்த்தவள்…, “ஹேய் மச்சான், என்னடா தனியா சாப்பிட்டுட்டு இருக்க???” என்றவள் அவன் எதிரில் ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்தாள்…. விக்கியும் வேறு வழியில்லாமல் அவள் அருகில் அமர்ந்து தன்னுடைய லன்ச் பாக்ஸை திறந்து சாப்பிட ஆரம்பிக்க……

“ஸ்டூப்பிட்… டோன்ட் யூ ஹேவ் எனி சென்ஸ்… இப்படி தான் மேனர்ஸ் இல்லாம வந்து உட்க்கார்ந்துப்பிங்களா??? அவளுக்கு தான் அறிவில்ல உனக்குமா டா” விக்கியிடம் அவன் எகிற…. விக்கிக்கு கண்கள் கலங்கிவிட்டது… வீட்டில் அவன் செல்ல பிள்ளை…. சுதா ஊட்டிவிடாமல் அவன் சாப்பிட கூட மாட்டான்…. சட்டென்று விக்கி எழும்ப எத்தனிக்க… வினு அவன் கைகளை அழுத்தி அமருமாறு கண்ணசைக்க… விக்கி வேறு வழியில்லாமல் அமர்ந்தான்….

“என்ன திட்டு அரசு… உனக்கு உரிமை இருக்கு ஆனா என் தம்பிய திட்டாத… எனக்கு பிடிக்காது அதோட மேனர்ஸ் பத்தி பேசுற உனக்கு தான் மேனர்ஸோட ஸ்பெல்லிங் கூட தெரியலன்னு நினைக்கிறேன்..”.. சிரிப்போடு கூறினாலும் அதில் இருந்த அழுத்தம் திருவை வியக்க வைக்கத் தான் செய்தது… எதுவும் கூறாமல் அவன் சாப்பிட ஆரம்பிக்க… வினுவும் அவன் புரிந்துக் கொண்டான் என நிம்மதியாக சாப்பிட ஆரம்பித்தாள்.. விக்கி தான் சாப்பிடுவது போல் பாசாங்கு செய்தான்….

“அரசு உனக்கு ப்ரெண்ட்ஸ்னு யாரும் இல்லையா இங்க…. தனியா உட்கார்ந்து சாப்பிடுற… யார்க்கிட்டயும் பேசின மாதிரி கூட இல்ல….”

அவளை காட்டமாக பார்த்தவன், “ஃபர்ஸ்ட் என்ன அரசு, மச்சான் இப்படியெல்லாம் கூப்பிடுறத ஸ்டாப் பண்ணு… செகண்ட் ஸ்டே அவே ஃப்ரம் மீ…. என்ன மட்டும் இல்ல என்ன லைஃப்ப விட்டும் தள்ளியே இரு..”. என்றவன் தன் சாப்பாட்டை மூடி வைத்துவிட்டு வெளியே சென்றுவிட….

“ரொம்பத்தான் அலுத்துக்குறான்…. ஆனாலும் உன்ன பிடிக்குதே டா அரசு மச்சான்…..” மனதோடு அவனிடம் பேசியவள் விக்கியை பார்க்க… அவன் இன்னும் சாப்பாட்டை பிசைந்துக் கொண்டிருந்தான்…. முகம் கணிய தன் சாப்பாட்டை உருண்டையாக பிடித்தவள் அவன் வாய் முன்பு நீட்ட…. விக்கி அமைதியாக இருந்தான்….

“டேய் விக்கி சாப்பிடு டா… நீ சாப்பிடாட்டி நானும் சாப்பிடமாட்டேன்….. “

“ஐ ஹேட் ஹிட்லர்… உனக்கு அவர் தான் வேணுமா??? என்ன திட்டுறார்..”.. சிறு பையன் தாயிடம் புகார் வாசிப்பது போல் விக்கி திருவை பற்றி புகார் சொல்ல…. அவனை பார்த்து சிரித்தவள்,” சாப்பிடு டா….” அவனுக்கு ஊட்ட ஆரம்பித்தாள்…

“பக்கி குட்டி…” என்றதில் விக்கி முறைக்க… “ஹி..ஹி… விக்கி குட்டி… எனக்கு அவன ரொம்ப பிடிச்சிருக்கு டா… அவன் ரொம்ப நல்லவன்.. நீ அவன் கூட ப்ரெண்ட்டாக ட்ரை பண்ணிப் பாரேன்…. கண்டிப்பா உனக்கு பிடிக்கும்…” விக்கியை சமாதனம் செய்ய வினு முயல… அவனோ முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டு… “அவர் நல்லவர்னு உனக்கு எப்படி தெரியும்” என்க…

“அதுவா…” என்றவள் சுற்றி முற்றி பார்த்துவிட்டு விக்கியின் காதருகே சென்றவள் மெதுவான குரலில் “நாம பண்ற தொல்லை எல்லாம் தாங்கிக்கிறானே இதுல இருந்தே தெரியல அவன் நல்லவன்னு….” சொல்லிவிட்டு உலக மகா ரகசியம் கூறியது போல் வினு பார்க்க… விக்கிக்கு அவளை நினைத்து கோபம் ஏறியது, “வினுனுனு…..உன்னனன….” அவளை அடிக்க கை ஓங்க… வினு எழுந்து ஓட ஆரம்பித்தாள்… விக்கியின் கையில் மாட்டாமல் திருவின் அறைக்குள் அவர்கள் ஒடிக்கொண்டிருக்க… இருவரையும் வாசல் அருகே நின்று திரு பார்த்துக் கொண்டிருந்தான்…

“இவங்க மட்டும் எவ்வளவு சந்தோஷமா இருக்காங்க… என்னால மட்டும் ஏன் முடியல…”. தன்னை நினைத்தே சுய பட்சாபம் எழுந்தாலும் முகத்தில் இருக்கும் கடுமை அப்படியே தான் இருந்தது… இந்த இரு நாட்களாக தன்னை இவர்கள் தான் நிம்மதியிழக்க செய்கிறார்கள் என பழியையும் வினு விக்கியின் மேல் சுமத்தியவன் கோபமாகவே அங்கிருந்து அவர்கள் பார்க்கும் முன் நகர்ந்தான்.

மாலை திரு கிளம்பவும் விக்கியையும் அவசரமாக கிளப்பிக் கொண்டு வினு வெளியேற… விக்கிக்கு ஒன்றும் புரியவில்லை…

“என்னடி என்னாச்சு… எதுக்காக என்ன இப்படி இழுத்துட்டு போற???? “வினுவின் அவசரத்தில் விக்கி பதற… வினுவோ அதையெல்லாம் கண்டுக் கொள்ளாமல் எதிரில் வந்த ஆட்டோவை நிறுத்தி விக்கியையும் உள்ளே தள்ளி தானும் ஏறியவள்… ஆட்டோ ஓட்டுனரிடம் முன்னால் சென்றுக் கொண்டிருந்த திருவின் காரை ஃபலோ செய்ய சொல்ல விக்கி அவளை முறைத்தான்…

“என்னடா மறந்துட்டியா??? இன்னைக்கு நாம திருவோட வீட்ட கண்டு பிடிக்க போறோம்..” என்றவளின் குரலில் அத்தனை துள்ளல்….. அவனின் மூடை கெடுக்க விரும்பாமல் விக்கி அமைதியாக வர, வினு தான் படபடப்புடன் இருந்தாள்…

“அண்ணா சீக்கிரம் போங்க… மிஸ் பண்ணிட போறோம்…” வினு ஓட்டுனரை துரிதப்படுத்த… அவரும் வேகமாக சென்றார்… வினு தான் பொறுமையில்லாமல் தவித்தாள்…

“என் ஸ்கூட்டி எப்போ டா வரும்…. இதே என் ஸ்கூட்டியா இருந்தா சீக்கிரம் ஃபாலோ பண்ணிருக்கலாம். “

“ஆமா இவ பெரிய ராயல் என்ஃபீல்ட் பைக் வச்சிருக்கா…. அப்படியே பறந்து போய் கண்டுபிடிச்சிடுவா… அமைதியா இரு டி….” வினுவின் தொல்லை தாளாமல் விக்கி கூற, அவனை முறைத்து பார்த்தவள், “போடா என் ஸ்கூட்டிய தப்பா பேசாத… அது என் செல்லக்குட்டியாக்கும்…” என்றவள் முகத்தை திருப்பிக் கொண்டாள்..

ஒரு திருப்பத்தில் திருவின் கார் நின்றுவிட சற்றுத் தொலைவில் ஆட்டோவையும் நிறுத்தியவள் திருவை பார்க்க, திரு கேட்டை திறந்துக் கொண்டு சென்றான்….. ஆட்டோவை கட் செய்தவர்கள்… அந்த வீட்டின் கேட் முன்பு நின்று பார்க்க…. பழைய காலத்து இரண்டு மாடி வீடு…. சிட்டிக்கு சற்று வெளியே இருந்தது… வீட்டை சுற்றிலும் மரங்கள்… பூச்செடிகள்…. கேட்டின் அருகே செக்கியூரிட்டி இருந்ததாக தெரியவில்லை…. கேட்டை திறந்துக் கொண்டு வினு உள்ளே செல்ல… விக்கிக்கு பக்கென்று இருந்தது….

“ஹேய் வினு என்னடி பண்ற???? உள்ள ஏன் டி போற??? ஹிட்லர் மட்டும் பார்த்தாரு அப்புறம் நாம செத்தோம்… வா டி ……”

“இவ்வளவு தூரம் வந்துட்டு எப்படி டா நாம உள்ள போகாம இருக்கிறது???? வா வா….. அக்கா வாழ போற வீட்ட போய் சுத்திப் பார்ப்போம்… “

“நீ வாழுறதுக்குள்ள என்ன சமாதிக் கட்டிட போற போல இருக்கே டி… உன்ன நம்பி நான் இங்க வந்திருக்வே கூடாது….. “விக்கி புலம்பிக்கொண்டே வர, வினு திருவின் வீட்டு காலிங் பெல்லை அழுத்திவிட்டு காத்திருந்தாள்….

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here