மின்னல் விழியே குட்டித் திமிரே 6

0
801
1551018907221|679x452

மின்னல் விழியே – 6

ஆபிஸிலிருந்து வந்த திரு பார்மல் டிரெஸ்சிலிருந்து நார்மல் டீ ஷர்ட் பேன்ட்க்கு மாற சரியாக., காலிங் பெல் அடித்தது… ‘யாராக இருக்கும்’ என்று எண்ணியவாறே வந்து கதவு திறந்தவன் அங்கு, .விரிந்த சிரிப்புடன் வினுவும் பயத்தில் வியர்த்த முகத்தை துடைத்தவாறு நின்ற விக்கியையும் கண்டு திகைத்தான்.

”.நீங்க இங்க என்னப் பண்றிங்க????” திரு அதிர்ச்சியாக கேட்க,

“ஹாய் அரசு” என்றவள் அவனை தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்து வீட்டை சுற்றிப் பார்க்க ஆரம்பித்தாள்…..

அந்தக் காலத்து வீடு போல் தூண்கள் வைத்து காற்றோட்டமாக இருந்தாலும் மாடர்னாகவும் இருந்தது….. ஒவ்வொரு பொருளும் நேர்த்தியாக இருக்க….. அவ்வளவு சுத்தம்…. கீழே இரண்டறைகள்… பின் கிட்சன்… ஸ்டோர் ரூம்… பூஜை ரூம் என சகல வசதிகளோடு இருந்தது…..

“வீடு ரொம்ப அழகா இருக்கு டா…. நீயே தான் வீட்டை சுத்தம் பண்ணுவியா???? வெரி குட்…. எனக்கு இவ்ளோ சுத்தமா எல்லாம் வச்சுக்க தெரியாது…. சமையல் கூட நீ தான் செய்வியா???” என்றவள் அவன் தன்னை எரிப்பது போல் பார்க்கவும், விக்கியின் பக்கம் பார்வையை திருப்பினாள்…

விக்கி இன்னும் வாசலில் நின்றுக் கொண்டு அவர்களை வேடிக்கை பார்க்க, அவன் அருகில் சென்று கைப்பற்றி இழுத்தவள்,

“விக்கி… உள்ளே வந்து பாருடா… இது தான் உன் அக்கா வீடு….” என்று முகம் மலர கூற,

‘ம்க்கும் நீ தான் சொல்லிக்கணும்… ஹிட்லர் எப்போ வேணும்னாலும் துப்பாக்கி எடுத்து சுடுற ரேன்ஞ்சுல நின்னுட்டு இருக்காரு… அது புரியாம இவ வாழ போற வீடாம்….’ இவளை என்ன தான் பண்றது என்பது போல் விக்கி பார்த்தான்…..

அதை கண்டுக் கொள்ளாமல் விக்கியின் கையை பிடித்து உள்ளிழுத்து வந்தவள் வீட்டை பற்றி பேசிக் கொண்டே போனாள்…. எப்போது வேண்டுமானாலும் இன்ஜின் வெடிக்கும் என்ற ரீதியில் காதில் புகை வராத குறையாக முறைத்துக் கொண்டு நின்றிருந்த திருவிற்கு கோபம் கரையை கடக்க.,

“போதும் நிறுத்துறியா??,…. யார் நீ??… எதுக்காக இப்படி வந்து என் உயிரை வாங்கிட்டு இருக்க… இந்த ரெண்டு நாளா என்னை ரொம்பவே டார்ச்சர் பண்றிங்க… உங்களுக்கு என்ன தான் பிரச்சனை?? நானும் சின்ன பசங்கன்னு பார்த்தா ரொம்ப தான் ஓவரா போறிங்க. நான் உங்களை கழுத்தை பிடிச்சி வெளிய தள்ளுறதுக்குள்ள மரியாதையா இங்க இருந்து கிளம்புங்க..” மதம் பிடித்த யானை போல் திரு கத்த, வினுவோ மிரட்சியில் கண்களை விரித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்…

அதை பார்த்தவனுக்கு அதில் தெரிந்த காதலும் தன்னை பார்க்கும் அந்த மருண்ட விழியும் ‘என்ன திட்டுவியா அரசு’ என்று அவள் கண்கள் அவனிடம் கேட்பது போன்ற பாவனையும் அவனை மூச்சடைக்க வைக்க தன் தலையை வேறுபுறம் திருப்பி அழுத்தமாக கோதிக் கொண்டான்.

‘ஷீ இஸ் மெஸ்மெரைசிங் மீ…’ தனக்குள் நினைத்துக் கொண்டவன் திரும்பி அவளை பார்க்க அவளோ கையில் தண்ணீர் க்ளாசுடன் நின்றுக் கொண்டிருந்தாள்.

திரு புரியாமல் அவளை பார்க்க, “ டைலாக் எல்லாம் பெருசா பேசின டா அரசு….ஆனா, பாவம் எங்களை கத்தினதுல உன்னோட எனர்ஜி வேஸ்ட்டாகிருச்சு. இதை குடி. குடிச்சிட்டு இன்னும் நல்லா திட்டு” என்றவள் தன் முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு கையில் இருந்த க்ளாஸை அவன் முன் நீட்ட.. விக்கி பக்கென்று சிரித்துவிட்டான்…

தான் திட்டியதில் கொஞ்சம் கூட பயமே இல்லாமல் தன் முன் நின்றிருப்பவளை முதலில் திகைப்பாக பார்த்தவனுக்கு அவளது பாவனையில் மெலிதாக சிரிப்பு எட்டிப் பார்க்க… அவன் உதடு சிரிப்பில் மலர துடித்தது ஆனால் முழுதாக மலர்வதற்குள் அதை மறைத்துக் கொண்டவன் அவளை பார்த்தவாறு நின்றான்…

அவன் உதடு சிரிக்க துவங்குவதை மெலிதாக தெரிந்த அவனது கண்ணத்துக் குழி காட்டிக் கொடுத்துவிட… ‘இவனுக்கு சிரிச்சா கண்ணத்துல குழி விழுமா’ என்று வினு யோசிப்பதற்குள் அதை மறைத்துக் கொண்டவனை பார்த்தவள்,

”நீ சிரிக்கிற அரசு.. உன் கண்ணத்துல குழி..”. கைகள் தாமாக எழுந்து அவன் கண்ணத்தை தொட முயல… அதில் அவன் உடல் விறைப்புற்றது….

முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டவன்.. “கெட் அவுட் வினு” என்றான்…

“ஹேய் பர்ஸ்ட் டைம் என் நேம் சொல்லியிருக்க ஆனா என்னை வெளிய போக சொல்றதுக்காக சொல்ற. பரவாயில்லை எப்படியோ என்னோட நேம் சொல்லிட்ட… அது போதும்… நான் கிளம்புறேன் அரசு…”.

உற்சாகத்துடன் கூறியவள் விக்கியை அழைத்துக் கொண்டு வெளியேற… விக்கி தான் மனதிற்குள் ‘ஏதோ ஐ லவ் யூ சொன்ன மாதிரி அட்டகாசம் பண்றத பாரு’ என்று தன் அக்காவை நினைத்து பல்லைக் கடித்தான்.

அவர்கள் சென்றதும் புயல் அடித்து ஓய்ந்தது போல் இருக்க, திருவிற்கு என்ன நடந்தது என்று கூட நம்ப முடியவில்லை… தன்னை ஏன் விடாமல் துரத்துகிறாள் என்று தெரியவில்லை. ஏன் எவ்வளவு திட்டினாலும் வம்படியாக வந்து பேசுகிறாள் என்றும் புரியவில்லை. ஆனால், அவள் செய்வதையெல்லாம் பார்க்கும் பொழுது ‘தனக்கு நெருக்கமானவள்’ என தோன்றுவதையும் தடுக்க முடியாமல் திணறியவன் அவள் சற்று முன்பு தன் முன்பு பாவமாக நின்ற தோற்றத்தை நினைத்து தன்னையுமறியாமல் புன்னகைத்தான்…

நடு ஹாலில் நின்றுக் கொண்டு தனியாக திரு சிரித்துக் கொண்டிருக்க., சரியாக அவன் தோழன் ஹரி வந்தான். கதவு திறந்திருப்பதை கூட உணராமல் தனக்குள் புன்னகைத்துக் கொண்டு இருப்பவனை பார்த்தவன் தன் கண்களை நம்ப முடியாமல் கண்ணை கசக்கி பார்த்தான்.

‘என்ன தனியா நின்னு சிரிச்சிட்டு இருக்கான்… இவன் சிரிக்கிறதையே மறந்துட்டான்னுல நாம நினைச்சோம்… எதுக்கும் கையை கிள்ளிப் பார்ப்போம்’ என்று மனதில் நினைத்தவன்., தன் கைகளை கிள்ள., வலித்தது….

ஏதோ அரவம் கேட்டு திரு திரும்பிப் பார்க்க… அங்கு ஹரி அவனை சுவாரஸ்யமாக பார்த்துக் கொண்டிருந்தான்…

“என்னடா…எப்போ வந்த???” கனவுலகில் சஞ்சரித்துக் கொண்டு இருந்தவன் ஹரியிடம் சிரிப்புடன் கேட்க.,.

திருவினது சிரிப்பில் மீண்டும் தன் கைகளை கிள்ளிக் கொண்டான்… திரு புரியாமல் விழிக்க.,

“நீயா டா திரு இது??? நான் வந்தது கூடத் தெரியாம., என்னடா கனவு கண்டுட்டு இருக்க??? நான் வரதுக்கு முன்னாடி மோகினி பிசாசு எதாச்சும் வந்து அடிச்சிடுச்சா உன்னை???” என்று கண்ணடித்தான்.

வினுவை அவன் மோகினிப் பிசாசு என்றதில் திரு குபீரென்று சிரிக்க ஹரிக்கு மயக்கமே வந்துவிடும் போல் இருந்தது.

“ம்ம் மோகினிப் பிசாசு இல்ல டா அந்த ரெட்டைவாலு குரங்குங்க தான் வந்து., என்கிட்ட, வாங்கி கெட்டிட்டு போய்ருக்காங்க…”

“யாரு டா??? உன்னை ஆபிஸ்ல தொல்லை பண்றாங்கண்ணு சொல்லிட்டு இருந்தியே அந்த பசங்கள???” கண்களில் ஆர்வத்துடன் ஹரி கேட்க.. திரு நடந்ததை கூறினான்…

“பாவம் டா எதுக்காக திட்டின??? சின்னப் பசங்க., நீ ஸ்ரிக்ட் ஆபிஸர்னு அவங்ககிட்டயும் காண்பிக்கணுமா??, ஆனாலும், அந்தப் பசங்ககிட்ட என்னமோ இருக்குடா., உன்னையே சுத்தி சுத்தி வர்றாங்க… அதோட, இஞ்சித் திண்ண குரங்கு மாதிரி முகத்தை எப்பவும் உர்ருன்னு வச்சுக்கிற உன்னையும் சிரிக்க வச்சிடுச்சே….” எதார்த்தமாக ஹரி கூற.,

அவ்வளவு நேரம் திருவின் முகத்தில் இருந்த மென்மை சட்டென்று துணி வைத்து துடைத்தாற் போல் காணமல் போனது….

‘ஆஹா மறுபடியும் முருங்க மரம் ஏறிட்டான் போலயே….’ திருவை நினைத்து மனதில் வருந்திய ஹரி., அவனை திசை திருப்பும் பொருட்டு., “சரிடா வா… கிளம்பலாம்., ஹனி வெய்ட் பண்ணிட்டு இருப்பா…” என்க…

அப்போது தான் ஹனியை பற்றி திருவிற்கு ஞாபகம் வந்தது. தன் தலையில் தானே அடித்துக் கொண்டவன், “சே இந்த லூசுங்களால மறந்துட்டேன் டா… வெயிட் பண்ணு டிரெஸ் சேன்ஞ் பண்ணிட்டு வரேன்” என்றவன் வேகமாக தன் அறைக்கு செல்ல…. பெருமூச்சு ஒன்றை விட்டவாறு, ஹரி அங்கு போடப்பட்டிருந்த சோபாவில் அமர்ந்தான்.

திருவின் வீட்டை விட்டு வெளியே வந்த வினுவும் விக்கியும், ஆட்டோவிற்க்காக திரு வீட்டின் எதிரில் காத்திருக்க…. வினு ஏதோ பாடல் ஒன்றை முணுமுணுத்தவாரே திரு வீட்டை பார்த்துக் கொண்டிருந்தாள்…

“வினு… இந்த ஹிட்லர், ஏன் இங்க வந்து இருக்கார்?….” திடிரென்று விக்கி கேட்கவும் என்னவென்பது போல் திரும்பி அவனை புரியாமல் வினு பார்க்க,

“இல்ல… அவ்வளவு பெரிய கம்பெனியோட வைஸ் பிரசிடென்ட் ஆனா ஒரு வாட்ச் மேன் கூட இல்லாம இந்த சின்ன வீட்டுல” என்றவன் வினுவின் முறைப்பில் “இல்ல… அது அவரோட பொசிஷனுக்கு இது சின்ன வீடு தானே…. இங்க ஏன் தனியா இருக்கார்???” மனதில் அரித்துக் கொண்டிருந்ததை விக்கி கேட்டுவிட…

“டேய் விக்கி, நாமளும் தான் பெரிய கோடீஸ்வரர் குமாரோட பிள்ளைங்க. ஆனா எப்பவாச்சும் நாம அதை வச்சி சீன் போட்டிருக்கோமா??? இப்போ கூட பாரு, ஆட்டோவுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கோம். அந்த மாதிரி தான், அவன்கிட்ட இருக்கிறதை காண்பிக்க விருப்பம் இல்லையா இருக்கும்… வீட்டைப் பார்த்தா, பழைய காலத்து வீடு மாதிரி இருக்கு, ஸோ அவன் அம்மா அப்பா வாழ்ந்த வீடாக்கூட இருக்கலாம்… சென்டியா இங்கயே இருக்கிறானா இருக்கும்…. அதோட, அவன் ஏழையாவே இருந்தாலும் எனக்கு அவன் தான் வேணும்” என்றவளின் குரலில் அவ்வளவு உறுதி.

“நீ சொல்றதும் சரி தான். ஆனா, உனக்கு ஹிட்லர பத்தி நிறைய தெரிஞ்சிருக்குதே வினு.. அது எப்படி??” சந்தேகமாக விக்கி பார்க்க….

‘என்ன சொல்வது’ என முழித்தவள் சட்டென்று திருவின் பக்கத்துவீட்டு கேட்டை பார்த்து.. “விக்கி அங்க பாரு டா..”. என்றாள்.

விக்கியும் என்னவென்பது போல் திரும்பி பார்த்தான். அந்த வீட்டின் கேட்டில் “டூ லெட்” என்ற போர்ட் தொங்கிக் கொண்டிருக்க, ‘அந்த போர்டில் என்ன’ என புரியாமல்., வினுவின் முகத்தை பார்த்தவன்., அது பிரகாசமாக ஒளிர்வதை பார்த்ததும் அவளின் எண்ணவோட்டம் புரிபட,

“நோ… நோ… வினு இட்ஸ் நாட் ஃபேர்..”. என அலறினான்.

“எவ்ரிதிங் இஸ் ஃபேர் இன் லவ் அன்ட் வார்….” வினு சிரிக்க.,’ இந்த வார் ல நீ சாகுறது உறுதி டா விக்கி…’ என்று விக்கி அவளை கலவரமாக பார்த்தான்.

மறுநாள் உற்சாகமாக ஆபிஸ் கிளம்பிய வினுவிற்கு, முதல் நாள் திருவின் வீட்டிற்கு சென்றதும்… அவன் சிரிக்காவிட்டாலும் அவனின் சிரித்த கண்களை பார்த்ததும் நினைவிலாட., மனம் ரெக்கை கட்டிக் கொண்டு பறந்தது.. அதற்கு நேர் எதிராக விக்கியோ ‘நேத்து அவர் வீட்டுக்கே போய் டென்ஷன் பண்ணிருக்கோம்… கண்டிப்பா வச்சி செய்ய போறாரு. அது தெரியாம., இந்த லூசு வேற சந்தோஷமா கிளம்புது’ மனதில் தன் சகோதரியை எண்ணி., தலையிலடித்தவாறே கிளம்பினான்.

விக்கி நினைத்தது போல் திரு அவர்களுக்கான ஆப்பை தயார் நிலையில் வைத்திருந்தான்…. மூச்சு விடக் கூட நேரம் இல்லாதது போல் அத்தனை வேலை அளித்தான்… அவனது டீம் மெம்பர்ஸ் கூட வினுவையும் விக்கியையும் பரிதாபமாக பார்க்க, வினு., அதையெல்லாம் ஊதி தள்ளிவிட்டு கர்ம சிரத்தையாக அனைத்தையும் முடித்தாள்… ஒரு வழியாக அன்றைய வேலையை முடித்து., திருவிற்கு மெயில் அனுப்ப., அவனிடமிருந்து அடுத்த ரிப்போர்ட்டிற்க்கான வேலை வந்தது….

“அடியேய் வினு…. உன்னால பாரு டி… அந்த ஹிட்லர் என்னையும் பழி வாங்குறார்… காலையில் இருந்து. ஒரு கப் காஃப்பி கூட நான் சரியா குடிக்கலை. பார்த்துக்கோ… இப்போ அதுக்குள்ள அடுத்த வொர்க்… என்னால முடியாது….” காலையில் இருந்து கம்பியூட்டருக்குள் தன் தலையை அடமானம் வைத்திருந்த விக்கி., கோபத்தில் எரிச்சல் பட….

“நானும் தான்டா காலையில இருந்து., அங்க.. இங்க.. நகராம இருக்கேன்… இது முடிஞ்சதும், அரசுவ போய் பார்த்து சைட் அடிச்சிட்டு வந்துடலாம்னு பார்க்கிறேன்,…. எங்க???. அடுத்த வேலைய முடிக்கனுமாம்… இன்னும் ரெண்டு நாள்ல பிரசென்டேஷன்க்கு சப்மிட் பண்ணணும்னு சொல்லி மெயில் பண்ணியிருக்கான்….” காலையில் இருந்து திருவை பார்க்க முடியாத சோகத்தில் புலம்பியவளை விக்கி முறைக்க.,

“ஏன் டி இப்போ உனக்கு அவரை பார்க்க முடியலைன்னு தான் கவலையா???”

“ஆமாம் டா…” வருத்தமாக கூறியவள் தன் கைகளை கொண்டு கழுத்தை நீவி விட்டுக் கொள்ள., விக்கிக்கு அவளை பார்க்க பாவமாக இருந்தது.

“ரொம்ப கழுத்து வலிக்குதா அக்கா????” சோர்ந்திருந்த கண்களை பார்த்து விக்கி கேட்க.

“ம்ம் லைட்டா வலிக்குது டா…. ஆனாலும்., உன் மச்சான் ரொம்ப தான்டா நம்மள வச்சி செய்றான்….பட் இந்த வினு., இதுக்கெல்லாம் அசர மாட்டா… அவன் எவ்வளவு வொர்க் கொடுத்தாலும் தாங்குவேன்..” மீண்டும் தன் கணினிக்குள்., அவள் தலையை நுழைத்துக் கொள்ள… விக்கி அவளை பிரம்பிப்பாக பார்த்தான்..

‘ஒரே நாள்ல காதல் வருமா??? அதுவும்., யாரு என்னன்னுக் கூட தெரியாம எப்படி??? வினு லவ் பண்றாளா??? என்னால நம்பக் கூட முடியலை… உனக்கு அந்த ஹிட்லரை அவ்வளவு பிடிக்குமா அக்கா??…. உன்ன திட்டுறார்…. தொரத்துரார்… இப்போ வொர்க் பிரஷர்., இதெல்லாம் தாண்டி., உனக்கு அவரை பிடிச்சிருக்கா.???? அவர்., என்ன செஞ்சாலும் தாங்கிப்பேன்னு சொல்கிற அளவுக்கு காதலா????’ வினுவை பார்த்துக் கொண்டிருந்தவன்., அவளுக்காக தானும் வேலையை கவனிக்கலானான்….

அடுத்த இரண்டு நாட்களும் திரு அவர்களை மற்றதை பற்றி யோசிக்கக் கூட விடாத அளவுக்கு வேலைகளை கொடுத்து வெளுத்து வாங்க…. வினுவும் விக்கியும் தளராமல்., அவன் கொடுத்த வேலைகளை முடித்தனர்…. ஒரு வழியாக விக்கி தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த வேலைகளை முடிக்க… வினு திணறிக் கொண்டே இருந்தாள்…

முக்கியமான பிராஜக்ட் ஒன்று முடிக்கப்பட வேண்டியதால் அவர்களின் டீம் பரபரப்பாகவே இருக்க… வினுவிற்கு தான்., வேலை முடிந்தபாடில்லை…

அனைத்தையும் முடித்து விட்டாள் ஆனால்., ப்ரோகிராமில் ஏதோ ஒரு சிறிய குளறுபடியால்., நினைத்த அவுட்புட் வராமல்..அவளுக்கு சடுகுடு காட்டியது,.

மாலை அனைவரும் கிளம்பிவிட வினுவும் விக்கியும் மட்டுமே இருந்தனர்… தன் கேபினை விட்டு வெளியே வந்த திரு இவர்கள் இன்னும் வேலை செய்வதை புருவம் சுருக்கி பார்த்தவன்., அவர்களை நோக்கி சென்றான்…

“என்ன… வேலை இன்னும் முடியலை போல இருக்கே ???” நக்கல் தொனியில் திரு கேட்க.. இருவரும் திரும்பிப் பார்த்தனர்…

“இல்ல சார் அது… இன்னும் கொஞ்சம் பேலென்ஸ் இருக்கு…” விக்கி தான் பதிலளித்தான்…

“ஹம்ம்… நாளைக்கு கம்பெனி சீ.இ.ஓ முன்னாடி பிரசென்ட் பண்ணனும்… எதாச்சும் சொதப்பிச்சின்னா ரெண்டு பேரும் வெளிய தான்” எச்சரிக்கை போல் கூறியவனின் கண்களில்., என்ன இருந்தது என இருவருக்குமே புரியவில்லை…

“சோ சேட் டா அரசு… பட் பாரு., நீ நினைக்கிறது நடக்காது… எனிவேய்ஸ்… ரெண்டு நாளா உன்னை சரியா பார்க்கக் கூட முடியலை… இப்போ நீயே என்னைத் தேடி வந்திருக்க.,. உன்னை பார்த்த அப்புறம் தான் எனக்கு பூஸ்ட் குடிச்ச மாதிரி இருக்கு” என்றவள் அவனை பார்த்து கண்ணடிக்க, திருவிற்கு ஆத்திரமாக வந்தது…

“டோன்ட் கால் மீ அரசு… யூ இடியட்…” என்றவன் திரும்பியும் பாராமல் சென்றுவிட வினுவும் விக்கியும் சிரித்தனர்.

“பாவம் டி ஹிட்லர்… உன்னை வெறுப்பேத்தலாம்னு வந்தார்… பாவம் மனுஷன்… நீ பண்ற சேட்டைல ஓடிட்டாரு…” விக்கி திருவை நினைத்து சிரிக்க….

“விடுடா… மச்சான அப்புறம் பார்த்துக்கலாம்…இப்போ இந்த கோடிங்க என்னப் பன்றது???,” மீண்டும் கவலை வந்து அமர்ந்துக் கொண்டது அவள் முகத்தில்.

“எதாச்சும் பண்ணுவோம்… இப்போ வா கிளம்பலாம்….” என்றவன் வினுவை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு கிளம்பினான்.

வீட்டிலும் வினு தன் மூளையை கசக்கிப் பிழிந்து,, குடைந்து பார்த்தும் எந்த பயனில்லாமலும் போனது… தலையில் கை வைத்து அமர்ந்து இருந்தவளை பார்த்து விக்கியும் முயன்று பார்க்க., அவனாலும் முடியாமல்., வினுவின் அருகில் அமர்ந்திருந்தான்…

நேரம் நள்ளிரவை தாண்டியும் என்ன செய்வது எனப் புரியாமல் விழித்தவளுக்கு., கடைசி நொடியில் அகிலின் நினைவு வர, அவசரமாக அவனுக்கு அழைத்தாள்…

முதல் ரிங்கிலே அகில் எடுத்துவிட, “வினு குட்டி!! இந்த டைம் எதுக்கு டா போன் பண்ற?? எதாச்சும் பிரச்சனையா????” வினு நள்ளிரவை தாண்டி அழைத்ததால்., அகில் பதட்டமாக கேட்டான்…

“அண்ணா..!!. நீ தூங்காம என்னப் பண்ற???” முதல் ரிங்கிலேயே போனை அட்டென்ட் செய்திருக்கிறான் என்றால் அவன் தூங்காமல் விழித்திருக்க வேண்டும் என்று கணித்து வினு கேட்க., அதற்கு மௌனத்தை மட்டுமே பதிலாக அளித்தவன்., வினு எதற்க்காக அழைத்தாள் என தெரிந்துக் கொள்ள வேண்டி.,.

“அத விடுடா குட்டி… நீ ஏன் இந்த டைம் கால் பண்ற??? “ என்றான்.

ஆபிஸில் தனக்கு கொடுத்திருக்கும் வேலையை அவனிடம் விளக்கியவள், “அண்ணா., உன்னால எதாச்சும் ஹெல்ப் பண்ண முடியுமா????”

அகிலும் பி.இ படித்து எம்.பி.ஏ முடித்திருந்தான். அவனை ரோல் மாடலாக நினைத்து தான் வினுவும் விக்கியும்., எம்.பி.ஏ முடித்தார்கள்… அதனால் தான் அவனது நினைவு வந்ததும் வினு அகிலிற்கு அழைத்தது…

வினு கூறியதை அமைதியாக கேட்டவன், “இதை நீ முடிக்காட்டி என்னாகும் வினு????” என்க.,

“என்ன வேலைய விட்டு அனுப்பிடுவாங்க…” வருத்தத்துடன் வினு உரைக்க…

“அப்போ சரி… இந்த வேலை உனக்கு வேண்டாம்…. நீ தம்பிய கூட்டிட்டு கிளம்பிடு….” சலனமே இல்லாமல் தங்கையிடம் கூறியவன்., அவள் பதிலுக்காக காத்திருக்க., வினுவோ தன் அகில் அண்ணாவா இப்படி கூறுவது என போனை வெறித்தவாறு பார்த்தாள்.

விழிகள் தொடரும்……

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here