மின்னல் விழியே – 25

0
1675

தோட்டத்தில் போடப்பட்டிருந்த கல் மேடையில் அமர்ந்து சூரியன் மெதுவாக உலகினுள் பிறப்பதை பார்த்துக் கொண்டிருந்தாள் வினு… அதிகாலையிலே விழிப்பு வந்துவிட, திருவை தொந்தரவு செய்யாமல் குளித்து தயாராகி இங்கு வந்து அமர்ந்திருந்தாள் அவள்…. மனம் ஒரு வித நிம்மதியில் ஆழ்ந்திருந்தாலும் எதோ ஒரு கலக்கம் அவளை தூங்கவிட வில்லை…

அறையில் தூங்கிக் கொண்டிருந்த திருவும், வினு அருகில் இல்லை என்பதை உணர்ந்து விழித்துவிட்டான்.. அறையை சுற்றி நோட்டம் விட்டவன், அவளை காணாது போகவும் வெளியே தேடி வந்தான்.. அவள் தோட்டத்தில் அமர்ந்திருப்பதை பார்த்தவன் அவள் அருகே வந்து அமர்ந்தான்.

வினு இவ்வளவு அமைதியாக ஒரு இடத்தில் அமர்ந்து இது தான் முதல் முறை பார்க்கிறான்.. அவனோடு சண்டையிட்டு பேசாமல் இருந்த நாட்களில் கூட மற்றவர்களோடு அரட்டை அடித்துக் கொண்டு தான் இருப்பாள். இப்போது அவள் அமைதியாக இருக்கவும் அவனும் அமைதியாக அமர்ந்து அவளை ரசிக்க தொடங்கினான்…

அதிகாலையில் குளித்ததால் முடியை விரித்துவிட்டிருந்தாள், எளிமையான மஞ்சள் வண்ண காட்டன் சுடிதார் அணிந்து பேரழகியாக அமர்ந்திருந்தவளை கண்கொட்டாமல் பார்த்திருந்தான் திரு….

அவன் அவளருகில் வரும்போதே அவனது அருகாமையை உணர்ந்தவள், அவன் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கவும், அவன் பக்கம் திரும்பாமலே அவன் தோளில் சாய்ந்துக் கொண்டாள். அவனும் அவள் கைகளை பற்றிக் கொண்டு அவள் விரலோடு தன் விரல்களை கோர்த்துக் கொண்டான்..

அனைவரும் சென்னை திரும்பி நான்கு நாட்கள் கடந்திருந்தது. திருமணத்திற்காக திரு எடுத்திருந்த விடுமுறையும் இன்னும் இரண்டு நாட்களில் முடிய போவதால், நாளை பெங்களூர் கிளம்பினால் தான் சரியாக இருக்கும். ஆனால் அவனுக்கு அப்படி கிளம்ப மனமில்லை.. இப்படி ஒரு அன்பான குடும்பத்தை விட்டு தாங்கள் இருவர் மட்டும் தனியாக செல்ல மனம் வராததால் இரண்டு நாட்களாக யோசித்து ஒரு முடிவு எடுத்திருந்தான்.

அதை வினுவிடம் நேற்றிரவே கூற நினைத்திருந்தான் ஆனால் நேற்று மொத்த குடும்பமும் பீச், பார்க் என்று சுற்றவே, வீட்டிற்கு வந்ததும் வினு அலுப்பில் சீக்கிரமாகவே தூங்கிவிட்டாள்…

இப்போது இந்த தனிமை அவனுக்கு, அவன் முடிவை கூற சரியான தருணம் என்று தோன்ற, .

“புஜ்ஜி.. நான் ஒரு முடிவு பண்ணிருக்கேன்..” திரு மெதுவாக ஆரம்பித்தான்,

வினு அவன் தோளில் சாய்ந்துக் கொண்டே “ம்ம்” என்க..

“நான் இங்கேயே வேலையை மாத்திடலாமான்னு யோசிக்கிறேன்.. எல்லாரும் இங்க இருக்கும் போது, நாம மட்டும் அங்க போய் என்னப் பண்ண போறோம்???” அவள் விரல்களை பற்றி வருடிக் கொண்டே அவன் கூற, வினு அவனை நிமிர்ந்து பார்த்தாள்..

கண்களில் ஆர்வம் பொங்க அவனை பார்த்தவள், “நிஜம்மா தான் சொல்றியா அரசு??? நாம இங்க தான் இருக்க போறோமா????” என்க, திருவிற்கு தான் எடுத்த முடிவு சரியென்று தோன்றியது….

“ஆமா டா இங்கயே பக்கத்துல எங்கேயாச்சும் வீடு பார்த்து இருக்கலாம்” என்க, அவள் அவனை மகிழ்ச்சியாக பார்த்தாள்.. நிச்சயம் தன்காக தான் இந்த முடிவை எடுத்திருப்பான் என்று தோன்றவே அவனை காதலாக பார்த்தவள்,

“எனக்காகவா” என்க, அவனும் “ம்ம்” என்றான் சிரிப்போடு…

அவன் சிரிக்கவும் அவனது கன்னக்குழி தெரிய, அதை ஆசையாக வருடியவள், “ எனக்கு இந்த குழி ரொம்ப பிடிக்கும்” என்றாள் கண்களில் வழியும் நேசத்தோடு..

அவளது செய்கையில் அவனது பார்வை அவளது உதட்டில் இருந்த மச்சத்தின் மீது படிந்தது..

“எனக்கு கூட இந்த மச்சம் ரொம்ப பிடிக்கும்.. ஒவ்வொரு தடவை பார்க்கும் போதும், வா வா ன்னு கூப்பிடுற மாதிரியே இருக்கும்” என்றவன் தன் விரலால் அவள் இதழை வருட, வினு வெட்கத்தில் அவன் நெஞ்சில் சாய்ந்துக் கொண்டாள்..

அவளை தன்னிடமிருந்து பிரித்தவன், “இப்படியே இரு புஜ்ஜி,. எனக்கு உன் முகத்தை பார்த்துட்டே இருக்கணும் போல இருக்கு” என்க, அவனது பேச்சை மீற முடியாமலும், வெட்கத்தில் சிவக்கும் முகத்தை தடுக்க முடியாமலும் அவனது முகத்தை ஏறிட்டவாறு அமர்ந்திருந்தாள்..

இருவரும் மோன நிலையில் அமர்ந்திருக்க, திருவிற்கு அப்போது தான், தான் பேச வந்த விஷயம் பாதியில் நிற்பது உரைத்தது.. .

“இன்னைக்கு சென்னை ஹெட் ஆபிஸ் போய் ட்ரான்ஸ்பர் பத்தி பேசலாம்னு இருக்கேன்.. ஒத்துக்கிட்டா இங்க கன்டினியூ பண்ணணும் இல்லாட்டி தனியா தொடங்கிக்கலாம்…” திரு தன் திறமையின் மீது நம்பிக்கை வைத்துக் கூற, வினுவிற்கு மகிழ்ச்சியாக இருந்தது..

“வாவ்வ்வ்… ரொம்ப சந்தோஷமா இருக்கு அரசு.. உன் டேலன்ட் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு.. அதோட நமக்கு நல்லது நினைக்கிறவங்க மத்தியில இருக்கிறது தான் நிம்மதியா இருக்கும் அரசு.. என் அப்பா தான் அதெல்லாம் புரிஞ்சிக்காம நாலு மாசமா அமெரிக்காவுல போய் உட்கார்ந்திருக்காரு… இருக்கிற சொத்தே இன்னும் அஞ்சு தலைமுறைக்கு போதும் ஆனாலும் மனுசனுக்கு ஆசை தீரல… இங்க பாவம் நிகில் அண்ணா எல்லாத்தையும் சமாளிக்க கஷ்டப்படுறாங்க…” மகிழ்ச்சியாக ஆரம்பித்தவள், வேதனையாக முடிக்க, திரு அவளை யோசனையாக பார்த்தான்…

தான் பார்த்த அகிலுக்கு தனியாக தொழில் ஆரம்பித்து பெரிய அளவில் வர வேண்டும் என்பதே மிகப் பெரிய லட்சியம்.. அதற்காக தான் அவன் சாதரண கம்பெனியில் வேலைக்கு சென்றுக் கொண்டே லோனுக்காக அலைந்துக் கொண்டிருந்தான்.. ஆனால் இடையில் நடந்த சம்பவங்களினால் அது தடைபட்டு போயிருக்கலாம் என்று தான் திரு எண்ணியிருந்தான்..

“ஏன் உன் சாமியார் அண்ணாவும் பார்த்துக்க வேண்டியது தானே??” .

அவனும் இந்த மூன்று வாரமாக பார்க்கிறான்.. நிகில் தான் தொழில் சம்பந்தமாக அனைவரிடமும் அழைப்பேசியில் பேசிக் கொண்டிருக்கிறான். அவர்கள் ஊருக்கு வந்த அன்றே கம்பெனியில் வேலை இருப்பதாக கூறிவிட்டு நிகில் உடனே கிளம்பிவிட்டான்.. ஆனால் அகில் எதிலும் தலையிடாமல் ஒதுக்கி இருக்கிறான்.. அனைத்தையும் திரு கவனித்துக் கொண்டு தான் இருந்தான். ஆனால் அகிலிடம் இன்னும் சரியான பேச்சுவார்த்தை இல்லை என்பதால் கேட்காமல் இருந்தான்.

“அப்பாவுக்கும் அண்ணாவுக்கும் ஒத்துப் போகாது.. அதுவும் அண்ணா… சித்தப்பா வீட்ல இருந்து வந்த அப்புறம் இப்படி தான் எதுலயும் தலையீடாம ஒதுங்கியிருப்பாங்க.. ஒரு வேளை சுமி அண்ணியை நினைச்சி தான் இப்படி இருக்காங்களா இருக்கும்னு அனு அண்ணி தான் சொன்னாங்க.. அதனால தான் உன்னை தேடி வந்தேன்” என்றவள் தனக்கும் அது பற்றி தெரியவில்லை என்றாள்.

அவள் கூறியதை கேட்டவனுக்கு எதுவோ நெருடியது,

“சித்தப்பாவா?? யாரு அது??? நீ இதுவரைக்கும் இப்படி ஒருத்தரை பத்தி சொன்னது இல்லையே???” என்க,.

“அது எங்கப்பாவோட தூரத்து சொந்தம்.. சித்தப்பா முறை வரும். அமெரிக்கால இருக்காங்க.. நிகில் அண்ணா கல்யாணம் முடிஞ்ச சமயம் தான் அகில் அண்ணாவை அப்பா அங்க அனுப்பினாங்க.. அப்புறம் கிட்டதட்ட ஒரு வருஷம் அங்க தான் இருந்தாங்க.. திரும்பி வந்தப்புறம் அண்ணாவுக்கும் அப்பாவுக்கும் பேச்சு வார்த்தை கம்மியாகிடுச்சு… அப்பாவோட பிஸ்னெஸ் எதுவும் வேண்டாம்னு சொல்லிட்டு எங்களை எல்லாம் விட்டு ஒதுங்க ஆரம்பிச்சிட்டான்…” என்றவள் தன் அண்ணாவையின் வாழ்வை பற்றி கவலையாக உரைத்தாள்..

அவள் கூறியதை மனதில் ஓட்டிப் பார்த்தவனுக்கு எதுவோ புரிவது போல் இருந்தது.. ஆனால் புரிந்த விஷயம் அவனை குழப்பத்தில் ஆழ்த்தியது.. தான் எப்படி இதை இத்தனை நாள் யோசிக்காமல் போனோம் என்று எண்ணியவன்,

“ஏன் புஜ்ஜி மா.. உன் அப்பா கட்டாயப்படுத்தி தான் உங்க அண்ணாவை அமெரிக்கா அனுப்பினாங்களா??? “ என்றான் சந்தேகமாக,

அவன் கேட்டதற்கு மறுப்பாக தலையசைத்தவள், “அப்படி எதுவும் இல்ல அரசு. நிகில் அண்ணாவுக்கு பதிலா தான் அகில் போனான்.. ஆனா ஒரு வருஷம் அங்கயே இருக்க வேண்டி வரும்னு நாங்க எதிர்ப்பார்க்கல… ரொம்ப பிஸி.. அடிக்கடி பேச முடியாதுன்னு சொல்லிடுவான்… அப்படியே பேசினாலும் ஒரு ஒட்டுதல் இல்லாம பேசுவான்.. அதிலும் நிறைய சமயம் சித்தப்பா தான் அட்டென்ட் பண்ணுவாங்க.. அவங்களும் அகில் பிஸி.. அப்புறம் பேசுங்கன்னு சொல்லிடுவாறு” என்க,

அனைத்தையும் கூட்டி கழித்து பார்த்த திருவிற்கு அதிர்ச்சியாக இருந்தது. இதை பற்றி அகிலிடம் பேச வேண்டும் என முடிவு செய்துக் கொண்டான்.. அகில் தன் தங்கையிடமும் தந்தையிடமும் இப்படி பேசியதற்கு காரணம் அவனது தந்தையாக இருக்குமோ என்று தோன்றியது அவனுக்கு. அதை இப்போது வினுவிடம் கூறி அவளை கலவரப்படுத்தாமல், அகிலிடம் முதலில் பேச வேண்டும் என எண்ணிக் கொண்டான்…

அவன் தீவிரமாக யோசிப்பதை பார்த்தவள் மீண்டும் அவன் மீது சாய்ந்துக் கொண்டு, “எனக்கு ஒரு ஆசை டா அரசு” என்க,

தன் எண்ணத்தில் மூழ்கி இருந்தவனும் அதை ஒதுக்கி வைத்துவிட்டு, “என்னடா சொல்லு.. எதுவா இருந்தாலும் நான் செய்றேன்” என்றான்..

“எனக்கு சின்ன வயசுல இருந்தே எல்லாமே கிடைச்சிடும்.. அதாவது ஸ்டேட்டஸ் அப்படிங்கிறதுக்காகவே என்னோட அப்பா எனக்கு பிடிக்குதோ இல்லையோ எல்லாம் வாங்கி கொடுத்திடுவார்.. அண்ணா தம்பின்னு எல்லாருக்குமே நான் உயிர் தான். ஆனா என் அப்பாவுக்கு என்னை பிடிக்குமான்னு தெரியாது.. அதை தெரிஞ்சிக்கிறதுக்காகவே ஒரு நாள் நான் தொலைஞ்சி போயிடணும் டா…” கண்ணீல் தோன்றிய மெலிதான நீர்ப்படலத்துடன் வினு கூற, திருவிற்கு அவள் தன் தந்தையின் பாசத்திற்காக மிகவும் ஏங்கியிருக்கிறாள் என்று புரிந்தது..

அவளது விழி நீரை துடைத்தவன், “ஹேய் என்ன விளையாடுறியா?? இப்போ நீ மிஸ்சஸ் திருநாவுக்கரசு.. இனியெல்லாம் தொலைஞ்சு போக முடியாது.. அப்படி போறதா இருந்தா என்னையும் கூட்டிட்டு போ…” கண்டிப்புடன் கூறியவனை மையலாக பார்த்தவள் அவன் கன்னத்தில் தன் இதழை பதித்தாள்..

“லவ் யூ” அவனிடம் முணுமுணுத்தவள் மீண்டும் அவன் கன்னத்தில் முத்தமிட, திரு அவஸ்தையாக நெளிந்தான்..

“சும்மா இரு டி.. அப்புறம் நான் எதாச்சும் செஞ்சுட்டா என்னை உன் சாமியார் அண்ணா கூட அனுப்பிடுவேன்னு மிரட்ட வேண்டியது…” திரு அவளை சகஜமாக்கும் பொருட்டு அவ்வாறு கூற, வினு சிரித்தாள்..

அவள் சிரிப்பதை ஆசை தீர பார்த்தவன், “சரி உன் அப்பா திடிர்னு வந்துட்டா எப்படி சமாளிப்பிங்க???” என்க,

“அதெல்லாம் எங்க அம்மாவுக்கு அல்வா சாப்பிடுற மாதிரி.. அப்பா முன்னாடி எதுவும் தெரியாத மாதிரி பாவமா ஒரு லுக் விடுவாங்க பாரு.. அந்த சரோஜா தேவியே நேர்ல வந்த மாதிரி இருக்கும்..” தன் தாயின் நடிப்புத் திறமையை சிலாகித்தவள், “எப்படியாச்சும் சமாளிச்சிக்கலாம் அரசு.. எங்க நிகில் அண்ணா சொல்வான், அதிகம் பேசாட்டியும் அப்பாவுக்கு எங்க மேல பாசம் ஜாஸ்தின்னு… அதனால எனக்கு நம்பிக்கை இருக்கு..” என்றாள் புன்னகையோடு..

அவள் கூறுவது எந்த அளவிற்கு சாத்தியம் என்று தெரியாவிட்டாலும் அவளை இப்போதே குழப்ப வேண்டாம் என திரு அமைதி காத்தான்.. இந்த நொடியை தவறவிட விரும்பாமல் அவளோடு நெருங்கி அமர்ந்தவன் வேறு கதைகளை பேச, இருவருக்கும் அந்த காலை வேளை பொக்கிஷமாக அமைந்தது….

காலை பத்து மணியளவில் அகிலை அழைத்துக் கொண்டு தனது ஹெட் ஆபிஸை நோக்கி காரில் சென்றுக் கொண்டிருந்தான் திரு.. அகில் அவனது காரை ஓட்ட, திரு அருகில் அமர்ந்திருந்தான்.. அகிலால் இன்னும் நம்ப முடியவில்லை… திருவாக வந்து அவனை உடன் வருமாறு கூறுவான் என்று.. அதனால் அடிக்கடி தன் நண்பனை திரும்பி பார்த்துக் கொண்டிருந்தான் அவன்..

“என்னடா பண்ற?? உன் தம்பியும் தங்கச்சியும் தான் என்னை சைட் அடிக்கிறாங்கன்னு பார்த்தா நீயும் ஏன் டா என்னை வெறிச்சி வெறிச்சி பார்க்கிற???” அவன் பார்வையை உணர்ந்து திரு கேட்க, அகில் அவனது கேலிப் பேச்சை நம்ப முடியாமல் பார்த்தான்..

“என்னை மன்னிச்சிட்டியா டா??? நீயாவே வந்து என்கிட்ட பேசுற???” அகில் சந்தேகமாக கேட்க,

“நீ என்ன தப்பு பண்ணினன்னு நான் உன்னை மன்னிக்கணும்???” ஒற்றை புருவத்தை ஏற்றி திரு கேட்க, அகில் குழப்பமாக அவனை ஏறிட்டான்….

“எ..என்ன சொல்ற அரசு??? எனக்கு புரியல..” திரு எதையோ தெரிந்துக் கொண்டான் என்று உணர்ந்த அகில் அவன் முகம் பார்க்காமல் வேறு பக்கம் திரும்பிக் கொள்ள, திரு விடுவதாக இல்லை..

“உண்மையை கேட்கிறேன் அகில்.. சொல்லு.. உன் அப்பா ஏன் அப்படி செஞ்சாங்க?????” நேரடியாக வந்த கேள்வியில் அகில் சற்று தடுமாறித்தான் போனான்..

“அப்படி எதுவும் இல்ல டா.. நான் தான்… என் மேல தான்..” என்றவன் திருவின் கூர்மையான பார்வையை கண்டு அமைதியானான்..

“பொய் சொல்லாத.. இது வரைக்கும் நீ சொன்ன பொய்யெல்லாம் போதும்.. இப்போவாச்சும் உண்மையை சொல்லு… நான் ரொம்ப லேட்டா கேட்கிறேன்னு எனக்கு தெரியும்.. என்னை மன்னிச்சிடு.. ஆனா என்கிட்ட இதுக்க மேல உண்மையை மறைக்காதே…” இதை தான் முதலில் செய்திருக்க வேண்டுமோ என்ற குற்றவுணர்வு அவனை காலையில் இருந்தே வாட்டிக் கொண்டிருந்தது.. அதனால் அவன் அகிலிடம் அனைத்தையும் பேசி விட நினைத்தான்…

திரு மன்னிப்பு கேட்டதும் அகிலுக்கு கஷ்டமாக போக, “நீ ஏன் டா மன்னிப்பு கேட்கிற??? தப்பு என்னோடது தான்.. என் அப்பாவை பத்தி தெரிஞ்ச அப்புறம் கூட, சுமியை காதலிச்சது தப்பு தான்.. என் அப்பாவுக்கு பயந்து சுமியை கல்யாணம் பண்ணிக்கிட்டதும் தப்பு தான்.. உங்க எல்லார்க்கிட்டயும் சொல்றதுக்கு முன்னாடி அவ கூட வாழ்ந்ததும் தப்பு தான்.. எல்லாத்துக்கும் மேல, அப்பாவை எதிர்த்து நிற்க துணிவில்லாம ஓடி ஒளிஞ்சதும் தப்பு தான்” என்றவனின் கண்கள், தான் ஆண் மகன் என்பதையும் மீறி கலங்கியது…

இதற்கு மேல் வண்டியை அவனால் ஓட்ட முடியும் என்று தோன்றாததால் காரை ஒரு ஓரமாக நிறுத்தியவன் கார் கதவை திறந்துக் கொண்டு வெளியே இறங்கினான்..

அவனை பின்தொடர்ந்து இறங்கிய திருவும், காரில் சாய்ந்து நின்றுக் கொண்டு அவனை பார்க்க, அகில் பேச ஆரம்பித்தான்..

“என் அப்பாவுக்கு அவங்களோட ஸ்டேட்டஸ் தான் முக்கியம்… எங்களுக்கு பிடிச்சிருக்கான்னு கேட்காமலே எங்க மேல எல்லாத்தையும் திணிச்சிடுவாங்க.. இங்கயே இருந்தால் மூச்சு முட்டி செத்துடுவேனோன்னு பயந்து தான் பெங்களூர் வந்தேன்.. அங்க உன் அப்பாவை பார்த்தப்போ இப்படி ஒரு அப்பா எனக்கு ஏன் கிடைக்கலைன்னு ரொம்ப ஏங்கினேன்.. அதோட சுமி…” என்றவன் சற்று இடைவெளிவிட்டு தன் உயிரானவளின் பிம்பத்தை தன் கண் முன் கொண்டு வந்தான். அவளை நினைத்ததுமே அவன் உடலும் மனமும் பிராகசமாக, அனைத்தையும் திரு கவனித்துக் கொண்டு இருந்தான்…

“அவளோட வெகுளித்தனம் தான் எனக்கு அவகிட்ட ரொம்ப பிடிச்சது.. ப்ரோபோஸ் பண்ணினேன்.. அவளும் ஏத்துக்கிட்டா.. ஆனா என் அப்பாவுக்கு தெரிஞ்சா, கண்டிப்பா எங்களை பிரிச்சிடுவாங்கன்னு தான் அவசரஅவசரமா சுமி கழுத்துல தாலி கட்டினேன்.. நிகில் அண்ணா கல்யாணம் முடிஞ்சதும் என் விஷயத்தை வீட்ல சொல்லிடணும்னு தான், நான் என்னோட வீட்டுக்கு போனேன்.. ஆனா அங்க என் அப்பா எனக்கு வேற ஒரு பொண்ணு பார்த்து வச்சிருந்தாரு.. நான் முடியாதுன்னு சொல்லி என் காதல் விஷயத்தை சொன்னேன்.. அவர் ஒத்துக்கல.. உன் குடும்பத்தை பத்தி விசாரிச்சாரு.. நீ அப்போ டெல்கியில் இருந்த..” என்றவன் தொண்டையடைக்க நிறுத்த, திரு என்னவென்பது போல் பார்த்தான்…

ஒரு நிமிடம் தன் கண்களை மூடி தன்னை நிதானப்படுத்திக் கொண்டவன், “உன்னை கொண்ணுடுவேன்னு சொல்லி தான் என்னை மிரட்டினார்..” திருவின் முகத்தை காணாமல் வானத்தை வெறித்து பார்த்தவாறு அகில் கூற, அவன் கூறியதை கேட்டு திரு அதிர்ந்தான்..

“என்ன சொல்ற அகி???” அகிலின் தந்தை சுமியை எதாவது செய்துவிடுவேன் என்று தான் அகிலை மிரட்டியிருக்க வேண்டும் என்று தான் திரு எண்ணியிருந்தான் ஆனால் இப்போது அகில் கூறுவதை கேட்டதும் அவனுக்கு அதிர்ச்சியில் பேச்சு கூட வரவில்லை…

“என் அப்பா பக்கா பிஸ்னெஸ் மேன் அரசு. சுமியும் உன் அப்பாவும் என்னை பார்க்க வர்றது அவருக்கு முன்னாடியே தெரியும். அவர் முன்னாடி நான் அன்னைக்கு அவங்களை அவமானப்படுத்தாம விட்டிருந்தா உன்னை கொண்ணுருப்பார். சுமிக்கிட்ட நான் கடுமையா பேசிட்டு இருந்த அதே நேரம் உன் பின்னாடி உன்னை கொல்றதுக்காக என் அப்பாவோட ஆட்கள் நின்னுட்டு இருந்தாங்க..” கசப்பாக கூறியவன்,

“உன்னை ஃபலோ பண்றதுக்கு ஆள் போட்டுருந்தார்.. நீ என்னப் பண்ற?, எங்க போற அப்படிங்கிற வரைக்கும் அவரோட மொபைலுக்கு வந்துட்டே இருக்கும்… உனக்கு எதுவும் ஆகிட கூடாதுன்னு தான், உன் அப்பாகிட்ட அவ்வளவு மோசமா நடந்துக்கிட்டேன்.. எனக்கு அதை விட்டா வேற வழியும் தெரியலை… உன்னை எச்சரிக்க எவ்வளவோ முயற்சி பண்ணினேன் ஆனா முடியலை.. எல்லாத்தையும் என் அப்பா தடுத்திட்டார்”

“என் உயிர காப்பாத்திக்க எனக்கு தெரியாதா டா?? நீ எதுக்காக அவருக்கெல்லாம் பயந்த?? என்கிட்ட சொல்லியிருக்கலாமே நான் எதாச்சும் பண்ணிருப்பேன்..” தானும் அவர்களின் பிரிவுக்கு காரணமாக இருந்திருக்கிறோம் என்பதை திருவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை…

“இதை நான் யோசிக்காம இருந்திருப்பேன்னு நினைக்கிறியா??? எப்படியாச்சும் என் அப்பாவை மீறி உங்க கிட்ட வந்திட முயற்சி பண்ணினேன். ஆனா என் அப்பா அதுக்கு ஆப்பு வைக்கிற மாதிரி ஒரு மாசம் அமெரிக்கா போய்ட்டு வந்தா என் காதலை பத்தி யோசிக்கிறதா சொன்னார்.. நானும் ஒரு மாசத்துல என் அப்பா கொஞ்சம் அசந்த நேரமா தப்பிச்சிடலாம்னு பார்த்தேன். அமெரிக்கா போன அப்புறம் தான் தெரிஞ்சிது ஒரு வருஷம் ஹவுஸ் அரெஸ்ட்.. பாஸ்போர்ட் பொபைல்னு எல்லாமே சித்தப்பா கைவசம்.. நான் எதாச்சும் செஞ்சா உன்னை கொன்னுடுவேன்னு சொல்லியே மிரட்டினாங்க…” என்றவன் திடிரென்று சத்தமாக சிரித்தான்..

அவன் சிரிப்பதை வேதனையுடன் பார்த்தவன், “அகி???” என்க,

“இல்லை டா எல்லார் வீட்லையும் பொண்ணுங்க காதல் தெரிஞ்சா தான், இந்த மாதிரி வெளிநாட்டுக்கெல்லாம் அனுப்பி ஒளிச்சி வைப்பாங்க ஆனா என் விஷயத்துல எல்லாம் தலைகீழா நடந்திருக்கு.. என்னால எதுவுமே பண்ண முடியாத நிலைமை.. ஒரு வருஷம் கழிச்சி திரும்பி வந்தா என் வாழ்க்கையே முடிஞ்சி போச்சு..” கண்களில் வெறுமை மட்டுமே எஞ்சியிருக்க, திருவின் கண்களும் கலங்கியது…

தன் நண்பன் தனியாக எவ்வளவு வேதனையுற்றிருப்பான்… தன்னால் ஒரு நிமிடம் கூட வினுவை பிரிந்து இருக்க முடியவில்லை… அது போல தானே அவனும் தவித்திருப்பான்.. திருவிற்கு அகிலை நினைத்து மனது பாராமாக இருந்தது.. இதற்கு காரணமான அகிலின் தந்தையை சந்தித்து சண்டை போட வேண்டும் என வெறியே கிளம்பியது ஆனால் அதை அடக்கிக் கொண்டவன்,

“ஏன் டா இதை என்கிட்ட சொல்லலை.??” என்க,

“அன்னைக்கு ஏர்ப்போர்ட்ல உன்னை பார்த்தப்போ மனசுக்குள்ள ரொம்ப சந்தோஷமா இருந்தேன், ஆனா என் பக்கத்துல என் அப்பாவோட ஆள் இருந்தான்.. அதோட நீயும் என்னை திட்டி பேசவும் என்னால எதுவும் பண்ண முடியாம போச்சு.. உன்னை பத்தி அதுக்கப்புறம் விசாரிச்சேன்.. நீயும் சுமியும் ஊரைவிட்டு போய்ட்டிங்கன்னு நம்ம கூட படிச்சவங்க சொன்னாங்க.. அதோட உன் அப்பா இறந்துட்டதையும்.. கொஞ்ச நாள் உங்களை தேடினேன்.. அப்புறம் எங்க இருந்தாலும் நீங்களாச்சும் சந்தோஷமா இருங்கன்னு தேடுறதை நிறுத்திட்டேன்.. நான் தேடுறதை நிறுத்தின அப்புறம் தான் என் அப்பாவும் என்னை கண்காணிக்கிறதை நிறுத்தினார்”

திரு திடிரென்று ஞாபகம் வந்தவனாக, “ஹனியை பத்தியும் அப்போ தெரிஞ்சிருக்குமே டா” என்க,

“எனக்கும் அது தான்டா யோசனையா இருக்கு… ஒருவேளை உன்னை கண்காணிச்ச அளவுக்கு சுமியை கண்காணிக்கலையா இருக்கும்.. ஹ்ம்ம் அதுவும் நல்லது தான்… இல்லாட்டி இப்போ ஹனி இருந்திருப்பாளா அப்படிங்கிறது சந்தேகம் தான்” என்றவன் தந்தையை எண்ணி விரக்தியாக புன்னகைத்தான்…

அனைத்தையும் கேட்ட திருவிற்கு என்ன சொல்வது என்றே புரியவில்லை.. அகில் எந்த அளவிற்கு தவித்திருப்பான் என்று புரிந்தது.. ஒரு வேளை வினு மட்டும் தன்னை தேடி வராமல் இருந்திருந்தால்??? எந்த குற்றமும் செய்யாமல் அகில் ஆயுள் முழுதும் தண்டனை அனுபவித்திருப்பானே…. அதை நினைக்கையில் அவனுக்கு மொத்த உடம்பும் பதறியது..

“அகி என்னை மன்னிச்சிடுடா நான் கூட உன்னை புரிஞ்சிக்காம போய்டேன்” கலங்கிய கண்களோடு அவனை அணைத்துக் கொள்ள.. அகிலும் அவனை அணைத்துக் கொண்டான்..

“உன் மேல எந்த தப்பும் இல்லை டா… நான் தான் எங்கப்பாவ எதிர்த்து நிற்க தைரியம் இல்லாம ஓடிட்டேன்.. என்னை மன்னிச்சிடு டா.. நான் காதலிக்காம இருந்திருந்தா சுமியும் சந்தோஷமா இருந்திருப்பா… எல்லாம் என்னோட தப்பு தான்..” அகில் வருந்தவே, திரு அவன் தோளில் அடித்தான்..

“போடா சாமியார்.. இந்த விஷயம் தெரிஞ்சா.. எல்லாத்தையும் மறந்துட்டு உன் பின்னாடியே ஓடி வந்துடுவா…” இதற்கு மேலாவது இருவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதே திருவின் எண்ணமாக இருந்தது.. அதனால் தான் சுமியிடம் அனைத்தையும் கூறிவிட நினைத்தான்..

“வேண்டாம் டா அரசு.. சுமி எப்போ என்கிட்ட கேட்கிறாளோ அன்னைக்கு தான், நான் இதெல்லாம் சொல்வேன்… அவளுக்கு என் மேல சுத்தமா நம்பிக்கை இல்ல டா.. அவளுக்கு நம்பிக்கை வரும் போது கண்டிப்பா என்கிட்ட என் சுமி கேட்பா.. அப்போ நான் எல்லாத்தையும் சொல்லிக்கிறேன்..” அகில் உறுதியாக மறுத்துவிட அவனின் காதலை கண்டு திகைத்து தான் நின்றான் திரு..

அவன் தோளில் தட்டிக் கொடுத்தவன், “என் தங்கச்சி ரொம்ப லக்கி டா.. சீக்கிரம் அவ உன்னை புரிஞ்சிக்கனும்..” என்றவன் பெருமூச்சு ஒன்றைவிட, அகில் அவனை பார்த்து புன்னகைத்தான்..

“கண்டிப்பா டா.. அவளுக்கு என் மேல நம்பிக்கை தான் இல்லை.. ஆனா நிறைய காதல் இருக்கு.. அந்த காதலை எல்லாம் கோபத்துக்கு பின்னாடி ஒளிச்சி வச்சிருக்கா.. ஒரு நாள் அவளே புரிஞ்சிக்குவா…” என்றவன் குறும்பு சிரிப்போடு, “என்ன தான் நீயும் வினுவும் வெளியே அடிச்சிக்கிற மாதிரி நடிச்சாலும் ஒருத்தரையொருத்தர் விட்டுக் கொடுத்துக்கிறது இல்லையோ.. அதே மாதிரி தான் சுமியும் வெளியே நடிக்கிற” என்க, திரு பேய் முழி முழித்தான்..

“என்னடா சொல்ற?? “ திரு தெரியாதது போல் கேட்க, அகில் அவனை பார்த்து சிரித்தான்..

“எனக்கு தெரியும்… நீங்க நடிக்கிறிங்கன்னு.. அன்னைக்கு மொட்டை மாடியில வச்சி நீயும் வினுவும் பேசினதை கேட்டேன்.. அதோட சுமிக்கு என்மேல இன்னும் அன்பு இருக்கு அப்படிங்கறதையும் அன்னைக்கு தான் புரிஞ்சிக்கிட்டேன்..” என்றவன் மீண்டும் சிரிக்க,

திருவிற்கு அன்று தான் வினுவிடம் இழைந்ததையெல்லாம் அகில் பார்த்திருக்க வாய்ப்பில்லையென்றாலும் கவனித்திருப்பானோ என்று தோன்றியது… அதை எப்படி கேட்க எனத் தெரியாமல் அவன் ஓர விழியால் அகிலை பார்க்க, அகிலின் கண்ணில் தென்பட்ட சிரிப்பே அனைத்தையும் கவனித்துவிட்டேன் என்பதை பறைசாற்றியது…

அவனை பார்த்து அசடு வழிந்தவன், “ஹி..ஹி.. நீ தூங்கிட்டன்னு நினைச்சேன் மச்சான்” என்க, அகில் வாய்விட்டு சிரித்தான்.. அவன் சிரிப்பில் திருவும் சிரிக்க ஆரம்பித்தான்…

நண்பர்கள் இருவரும் ஒன்று சேர்ந்த மகிழ்ச்சியில் பழைய கதைகளை பேசியவாறு காரை கிளம்பினர்..

திருவின் ஆபிஸின் முன்னே காரை நிறுத்தியவன், “மச்சான் வேலை முடிஞ்சதும் கூப்பிடு டா.. எனக்கு பக்கத்துல ஒரு சின்ன வேலை இருக்கு… வந்துடுறேன்…” என்க, திருவும் இறங்கிக் கொண்டான்..

சரியாக ஒரு மணி நேரத்தில் திருவின் வேலை முடிய, அகிலுக்கு அழைத்தவாறே ஆபிஸை விட்டு வெளியே வந்தான்.. சாலைக்கு வந்தவன் இருபுறமும் திரும்பி திரும்பி அகில் வருகிறானா என்று பார்க்க, சாலையின் எதிர்புறத்தில் காரோடு நின்றுக் கொண்டிருந்தான் அவன்..

இருபுறத்தில் இருந்தும் வாகனங்கள் வந்துக் கொண்டிருக்க திருவே சாலையை கடந்து அகிலிடம் செல்ல எத்தனித்தான்.. சாலையின் பாதி தூரத்தை கடந்தவன் அகிலை பார்த்து சிரித்தவாறே அடுத்த பாதியையும் கடக்க முயல, எங்கிருந்தோ வேகமாக அவனை இடிக்க வந்தது அந்த கார்.. கடைசி நொடியில் காரை பார்த்து சுதாரித்த திரு நூலிழையில் தப்பித்து சாலையை கடந்துவிட, அகில் வேகமாக காரை விட்டு இறங்கி திருவிடம் வந்தான்..

கார்க்காரனை கெட்ட வார்த்தைகளால் வசை பாடியவன் திருவை ஆராய, திரு நிற்காமல் சீறிக் கொண்டு செல்லும் அந்த காரை வெறித்திருந்தான்…

“அரசு.. பார்த்து வர கூடாதா டா?? ஒரு நிமிஷத்துல உயிரே போய்டுச்சு…” நடக்க இருந்த சம்பவத்தை நினைத்து அகில் பதறிவிட்டான்.. திருவிற்கு ஒன்று என்றால் நிச்சயம் அடுத்த நிமிடம் அவன் தங்கையும் உயிரை விட்டுவிடுவாள்.

“நான் பார்த்து தான் டா வந்தேன்.. ஆனா அந்த கார் வேணும்னு வந்த மாதிரி இருந்துச்சு.. நான் வர வரைக்கும் மெதுவா வந்தவன் என் பக்கத்துல வரும் போது தான் வேகமாக வந்தான்…” திரு யோசனையாக கூற, அகிலுக்கும் அந்த சந்தேகம் வந்தது.. அவனும் காரில் இருந்து திருவை தான் பார்த்துக் கொண்டிருந்தானே..

“நானும் கவனிச்சேன் டா ஆனா உன் மேல யாருக்கு டா பகை இருக்க போகுது???” அகிலும் இது எதர்ச்சையாக நடந்ததா இல்லை திட்டமிட்டு நடந்ததா என புரியாமல் விழிக்க, அவன் அழைப்பேசி அவனை அழைத்தது…

புது எண்ணாக இருக்க, அதை எடுத்து காதுக்கு கொடுத்தவன், யாராக இருக்கும் என்று யோசித்தவாறே “ஹலோ “ என்றான்…

“என்ன மச்சான்??? உன் தங்கச்சி புருஷன் ஜஸ்ட் மிஸ்ல தப்பிச்சிட்டான்னு சந்தோஷமா இருக்கியா???” மறுமுனையில் இருந்த ராம் குத்தலாக கேட்க, அகில் அதிர்ந்தான்..

திரு கூறியது சரி தான்.. வேண்டுமென்றே செய்திருக்கிறார்கள்…ஆனால் யார் என்று புரியாமல் திகைத்தவன், “யார் டா நீ?? எதுக்காக இப்படி பண்ணின??? நீ யாரா இருந்தாலும் என் குடும்பத்து மேல கை வச்ச??? அவ்வளவு தான்…”

“ஹாஹா… இன்னும் நான் யாருன்னு கண்டுப்பிடிக்கலையா டா??? நீங்க எல்லாரும் வேணும்னா என்னை மறந்திருக்கலாம் ஆனா நான் மறக்க மாட்டேன்.,.. உன் தங்கச்சி என்னை அவமானப்படுத்திட்டு பெங்களூர் ஓடி போனதையும் மறக்க மாட்டேன்.. எனக்கு கிடைக்க வேண்டியவ வேறு யாருக்கும் கிடைக்கிறதையும் நான் விட மாட்டேன்..” கோபமாக கூறியவன் கொடூரமாக சிரிக்க, யார் யார் என தன் நினைவடுக்குகளில் தேடிக் கொண்டிருந்தவனின் கண் முன்னால் ராமின் பிம்பம் வந்து நின்றது…

“ராம்?????” அகில் அதிர்ச்சியாக வினவ, அந்த பக்கம் இருந்த ராம் நக்கலாக சிரித்தான்..

“ராமே தான் டா.. ஏன் டா என்னை என்ன காமெடி பீஸ்னு நினைச்சிங்களா??? உன் அப்பா மனசுல நல்லவனா பதிஞ்சு உன் தங்கச்சியை கல்யாணம் பண்ணிக்கலாம்னு நான் கனவு கண்டுட்டு இருக்கேன்.. நீங்க என்னை டம்மியாக்கிட்டு வேற ஒருத்தனுக்கு அவளை கல்யாணம் செஞ்சு வைக்கிறிங்களா?? விட மாட்டேன் டா… அவ எனக்கு தான்..” பைத்தியக்காரனை போல் பிதற்றியவனை என்ன செய்வது என்று தெரியாமல் அகில் போனை வெறிக்க, அருகில் நின்றிருந்த திரு அவனை ஒன்றும் புரியாமல் பார்த்திருந்தான்..

அகிலின் முகத்தில் தெரிந்த அதிர்ச்சியும் கோபமும் அவனை சிந்திக்க வைக்க, அகில் கையில் இருந்த போனை பறித்து ஸ்பீக்கரில் போட்டான்…

“ராம்??? வேணாம் டா.. என் அப்பாவை பத்தி தெரியாம பேசாத.. நீ இப்படி பண்றது எல்லாம் தெரிஞ்சிதுன்னா அவர் உன்னை சும்மா விட மாட்டார். அவர் மட்டும் இல்ல.. திருவை இந்த மாதிரி நீ ஆக்ஸிடென்ட் பண்ண பார்த்தன்னு தெரிஞ்சாலே வினு உன்னை வீட்டோட கொளுத்திடுவா…” அகில் தன் தங்கையின் குணம் தெரிந்தவனாக கூற, திருவிற்கு அந்நேரத்திலும் தன்னவளை நினைத்து சிரிப்பு வந்தது..

“என்னடா சொன்ன?? உங்க அப்பா எதாச்சும் செஞ்சிடுவாரா??? உங்க அப்பாவுக்கு தெரியாம, நீங்க பண்ணி வச்சிருக்க வேலைக்கு நீங்க தான் பயப்படனும்.. நான் இல்ல.. இன்னும் கொஞ்ச நேரத்துல எனக்கும் வினுவுக்கும் கல்யாணம்.. அதுக்கு முன்னாடி அவனை கொண்ணுடலாம்னு பார்த்தேன்.. ஆனா தப்பிச்சிட்டான்.. இட்ஸ் ஓ.கே….” என்க,

அவனது வார்த்தைகள் இருவருக்கும் பயத்தை விதைத்தது.. இன்னும் கொஞ்ச நேரத்தில் திருமணம் என்றால்???,

“என்னடா சொல்ற??” திரு தான் அதற்கு மேல் அமைதியாக இருக்க முடியாமல் கத்தினான்..

“ஓ.. நீயும் கேட்டுட்டு தான் இருக்கியா??? சரி கேட்டுக்கோ திருநாவுக்கரசு.. எனக்கும் உன் மனைவிக்கும் இன்னும் ஒரு மணி நேரத்துல கல்யாணம்.. ஆசிர்வாதம் பண்ண வந்துடு…” என்றவன் போனை அணைத்திருந்தான்…

அவன் கூறியதில் அதிர்ச்சியானவர்கள் உடனடியாக வினுவின் எண்ணிற்கு அழைக்க, அது ஸ்விட்ச் ஆஃப் என்று வந்தது.. இருவரும் ஒருவரின் முகத்தை ஒருவர் பார்த்துக் கொள்ள, மறுமுறையும் முயன்றனர்… இப்போது அதே பதில் வர, இருவரையும் பயம் ஆட் கொண்டது…

அகில் சுமிக்கு அழைத்துப் பார்க்க, அவளது எண்ணும் ஸ்விட்ச் ஆஃப் என்று வந்தது.. வீட்டில் யாருக்காவது அழைக்கலாம் என்றென்னிய அகில், விக்கிக்கு அழைக்க, அவன் முதல் ரிங்கிலே எடுத்தான்…

அகில் பேசுவதற்கு முன்பாகவே விக்கி படபடவென பேச ஆரம்பித்திருந்தான், “அண்ணா நீ எங்க இருக்க?? உனக்கும் மச்சானுக்கும் எதுவும் இல்லையே??? நாங்க இன்னும் கொஞ்ச நேரத்துல அங்க வந்துடுவோம்..” என்க, அகிலின் பதட்டம் அதிகமானது…

என்ன சொல்கிறான்?? தனக்கும் திருவிற்கும் என்ன என்று யோசித்தவன், “விக்கி என்னடா சொல்ற??? எனக்கும் திருவுக்கும் என்ன?? நீங்க எங்க போறிங்க??”

“உனக்கும் மச்சானுக்கும் விபத்துன்னு போன் வந்ததா சுமி அண்ணி சொன்னாங்க அண்ணா.. அவங்க கூட அங்க தான வந்துட்டு இருக்கிறதா சொன்னாங்க…” விக்கி இப்போது கொஞ்சம் நிதானித்து கூற, அகிலுக்கும் திருவுக்கும் ராம் சொன்ன.. இன்னும் கொஞ்ச நேரத்தில் எனக்கும் வினுவுக்கும் கல்யாணம் என்ற வார்த்தைகள் காதில் ஒலித்தது…

இருவரும் தடுமாறி நிற்க, திரு தான் அகில் கையில் இருந்த போனை வாங்கி, “விக்கி.. எங்களுக்கு ஒன்னும் இல்லை.. நீ வீட்டுக்கு போ.. நாங்க வினுவையும் சுமியையும் அழைச்சிட்டு வரோம்” என்றவன் விக்கி அடுத்தாக பேசுவதற்குள் போனை அணைத்திருந்தான்…

இது நிச்சயம் ராமின் வேலையாக தான் இருக்க வேண்டும் என இருவருக்குமே தெள்ளத்தெளிவாக புரிந்தது.. இருவரும் ஸ்தம்பித்து நிற்க, இம்முறை ராம் திருவிற்கு அழைத்தான்.. அழைப்பை பார்த்ததும் திருவிற்கு கோபம் பொங்க, அதை எடுத்தவன்,

“ராம் நீ பண்றது ரொம்ப தப்பு.. அவங்க ரெண்டு பேரையும் விட்டுடு.. இப்போ வினு என்னோட மனைவி..” என்றவன் பொறுமையை இழுத்துப் பிடித்துக் கூற, அந்த பக்கம் ராம் சிரித்தான்..

“உன்னோட மனைவியா??? இன்னும் கொஞ்ச நேரத்துல எனக்கு கூட தான் மனைவியாகப் போறா” என்றவன் எகத்தாளமாக சிரிக்க, திருவின் பொறுமை பறந்தது..

“ராஸ்கல்.. வாயை மூடு டா.. உனக்கு அசிங்கமா இல்லை இப்படி விருப்பம் இல்லாத பொண்ணை கடத்துறதுக்கு.. அவங்களை உடனடியா விட்டுடு இல்லாட்டி என் கையால தான் உன் சாவு…” திரு கர்ஜிக்க, ராமும் சிரிப்பதை நிறுத்திவிட்டு,

“அசிங்கமா தான் இருக்கு.. ஆனா என்னப் பண்றது.. எனக்கு தான் மிஸ்டர் கிருஷ்ண குமாரோட மருமகன் அப்படிங்கிற அடையாளம் வேணுமே.. அதுக்காக நான் என்ன வேணுனாலும் பண்ணுவேன்…”

ராமிற்கு வினுவின் மீது காதலோ அன்போ எதுவும் கிடையாது.. அவனுக்கு தேவையெல்லாம் எப்படியாவது வினுவின் கணவானாகி குமாரின் தொழில் சாம்ராஜியத்தை கையில் எடுத்துக் கொள்ள வேண்டும்… அவனை பொறுத்தவரை அகில் ஒரு ஊதாரி.. நிகில் சாந்தமானவன்.. தங்கைக்காக என்றால் நிச்சயம் ஒதுங்கிக் கொள்வான்.. இதையெல்லாம் கணக்கிட்டு தான் அவன் வினுவின் மேல் குறி வைத்ததே அதோடு அவள் அழகாக வேறு இருக்கவும்.. போனஸ் என்று நினைத்துக் கொண்டான்…

ராமின் கொடூர புத்தியை கண்ட திருவிற்கு அத்தனை ஆத்திரமாக இருந்தது.. வினுவும் சுமியும் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்று தெரியாமல் அவனால் நிம்மதியாக இருக்க முடியவில்லை..

அடுத்து என்ன செய்வது என திரு மனதிற்குள் சிந்தித்துக் கொண்டிருக்க, அவனது அந்த அமைதியை சாதகமாக எடுத்துக் கொண்ட ராமும்,

“என்னடா என்னை என்ன பண்றதுன்னு யோசிச்சிட்டு இருக்கியா?? உன்னால எதுவும் பண்ண முடியாது… ஏன்னா எங்க கல்யாணம் யார் தலைமையில் நடக்க போகுது தெரியுமா???” என்றவன் இடைவெளிவிட்டு, “உன் மாமனார் தலைமையில் தான் டா” என்க, அடுத்த கட்ட அதிர்ச்சியில் திரு உறைந்தே போனான்…

திருவிடமிருந்து எந்த பதிலும் வராது போகவும், அதை தனது வெற்றியாக எண்ணிக் கொண்ட ராம், “வாயடைச்சி போய்ட்டியா திருநாவுக்கரசு… இதுக்கு தான் இந்த பணக்காரங்க கூட மோதவே கூடாதுன்னு சொல்றது… ஹ்ம்ம் சரி.. எனக்கு கல்யாணத்துக்க லேட்டாச்சு… அப்புறம் முக்கியமான விஷயம்.. கல்யாணத்துக்கு இன்வைட் பண்ணிட்டு அட்ரஸ் சொல்ல மறந்துட்டேன்.. அதுக்காக தான் திரும்ப கூப்பிட்டேன்.. என்னோட கெஸ்ட் ஹவுஸ்ல தான் கல்யாணம்… வந்துடு” என்றவன் குரூரமாக சிரித்துவிட்டு போனை அணைத்திருந்தான்..

முகவரியை கூட தருகிறான் என்றால்??? அந்த அளவிற்கு வினுவின் தந்தை அவன் செயலுக்கு ஆதரவளித்திருக்க வேண்டும் என்று திருவிற்கு தோன்ற, வினுவை நினைத்து அவனுக்கு உள்ளம் பதறியது.. இன்று காலையில் தான் தன் தந்தையின் அன்புக்காக அவள் எவ்வளவு ஏங்குகிறாள் என்று புரிந்துக் கொண்டான்.. அதோடு அவளுக்கு அவள் தந்தை மீது இருக்கும் அன்பையும் தான்.. அதற்குள்ளாக அனைத்தும் தவிடுபொடியாகப் போவதை உணர்ந்தவன்,

“நான் போகணும்.. என் புஜ்ஜி எனக்காக வெயிட் பண்ணிட்டு இருப்பா… எதுவும் நடக்கிறதுக்குள்ள நான் போய் தடுக்கணும்…” என்றவன் சாலையில் இறங்கி ஓட முயல, அகில் வேகமாக அவனை பிடித்துக் கொண்டான்… ராம் தான் ஏதோ சொல்லியிருக்கிறான் என்று புரிந்துக் கொண்டவனுக்கு அப்படி அவன் என்ன கூறியிருப்பான் என்று புரியவில்லை..

“அரசு.. என்னடா என்னாச்சு??? அந்த நாய் தான் வினுவையும் சுமியையும் கடத்தினதா????” என்க, திரு தன்னை சமாளித்துக் கொண்டு அனைத்தையும் கூறினான்…. அதிலும் வினுவின் தந்தையின் தலைமையில் என்றதும் அகிலும் அதிர்ந்தான்… அவனால் நம்ப முடியவில்லை.. தன் தந்தை இந்த அளவிற்கு கீழிறங்குவாரா என்று… முன்பு திருவை காண்பித்து தன்னை மிரட்டியவர் தான் ஆனால் திருமணமான பெண்ணை வலுக்கட்டாயமாக இன்னொருவனுக்கு கட்டி வைக்கும் அளவிற்கு.. அதற்கு மேல் அவனால் சிந்திக்க முடியவில்லை…

“இல்ல டா..அப்பா அப்படியெல்லாம் பண்ண மாட்டாங்க.. அவர் அமெரிக்காவுல” என்றவனின் பேச்சை பாதியில் இடைவெட்டியது நிகிலிடம் இருந்து வந்த அழைப்பு…

இதயம் எக்குத் தப்பாக துடிக்க, அதை ஆன் செய்தவன் எதுவும் பேசாமல் இருக்க, அந்த பக்கம் நிகில் சொன்ன செய்தியில் அகில் விக்கித்து நின்றான்….

“அகி… அப்பா சென்னை வந்துட்டார் டா.. என்னை உடனே ஏர்ப்போர்ட் வர சொல்றாரு…!!!!!”

விழிகள் தொடரும்…….

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here