மின்மினியின் மின்சாரக் காதலன் 2

1
2086

அத்தியாயம் 2

வழக்கம் போல விடியற்காலை எழுந்தவன் உடற்பயிற்சிகளை முடித்துக் கொண்டு கறுப்பு நிறத்தில் ஒரு சட்டையை தேடி அணிந்து கொண்டான். அவனுக்கு நன்றாகத் தெரியும். தியாகி அண்ணாமலையின் வீட்டில் எல்லாருக்கும் தெய்வ பக்தி அதிகம். கறுப்பு நிற உடையை அபசகுனமாகவே கருதுவார்கள். அதை தெளிவாக அறிந்து கொண்டே அந்த உடையை தேர்ந்தெடுத்தான்.

தன்னுடைய பைக்கில் ஏறி நீமோவுடன் சென்னைக்கு புறப்பட்டான் அக்னி. சில மணி நேர பயணம் அவனுக்கு கொஞ்சமும் சோர்வை தரவில்லை. மாறாக அவனது சிந்தனை முழுக்க அந்த அருந்ததியையும் , அந்த வீட்டு ஆட்களையும் எப்படி கலவரப்படுத்துவது என்பதிலேயே இருக்க… அவன் முகம் கல்லாகவே இறுகிப் போய் கிடந்தது.

‘இதில் அம்மாவின் வேலை எதுவும் இருக்குமோ… ஜெனிபரை மறக்க வைக்க இதுவரை என்னென்னவோ செஞ்சு இருக்காங்க.. அது எதுக்கும் நான் மசியலைன்னு இப்படி ஒரு வேலை செய்யவும் துணிஞ்சு இருக்காங்க போல… விட மாட்டேன்… ஏற்கனவே அவங்களை நம்பி ஏமாந்தது போதும். இனியொருமுறை அவங்களை நம்பி நான் எதையும் செய்ய மாட்டேன்’ என்று உறுதி எடுத்துக் கொண்டான்.

புல்லட்டை புயல் வேகத்தில் ஓட்டினான். அவனது கோபத்தை அந்த வண்டியில் காட்ட முயல, வண்டியில் பின் சீட்டில் அவன் இடுப்போடு இணைக்கப்பட்டு இருந்த பெல்ட்டில் பாதுகாப்பாக அமர்ந்து இருந்தாலும் பயத்தில் குலைக்கத் தொடங்கினான் நீமோ.

‘சே .. இவனை மறந்துட்டோமே….‘ என்று சலித்துக்கொண்டே கணிசமாக வேகத்தை குறைத்துக் கொண்டான் அக்னி.

பாதையில் கவனமுடன் வண்டியை ஓட்டினாலும் அவன் மனம் முழுக்க இதை எப்படி செய்து முடிப்பது என்ற எண்ணமே ஆக்கிரமித்து இருந்தது.

தியாகி அண்ணாமலையின் உயிலை படித்தவரையில் அந்த திருமணத்திற்கு அவர் எந்த காரணமும் சொல்லி இருக்கவில்லை. அதே நேரம் அந்த திருமணத்தை நிபந்தனையாகவும் சொல்லவில்லை.

அருந்ததிக்கு கணவனாக அக்னிபுத்திரன் இருந்தால் அவரது ஆன்மா சாந்தி அடையும் என்ற ஒரே ஒரு வரி மட்டும் தான் அதில் இருந்தது. மற்றபடி வேறெந்த விதத்திலும் அவர் அந்த திருமணத்தை வற்புறுத்தி இருக்கவில்லை.

காலை பத்து மணி வாக்கில் அவர்கள் வீட்டை வந்து சேர்ந்தான் அக்னி. உள்ளே நுழைவதற்கு முன் அவனது மனதில் பெரும் போராட்டமே நடந்தது. இந்த வீட்டில் உள்ளவர்களிடம் கோபமாக பேசினால் அப்பாவின் மனம் தாங்காது. அதே நேரம் அப்பாவிற்காக இவர்கள் சொல்வதை செய்யவும் அவனால் முடியாது.

‘எப்படியும் சமாளித்து தான் தீர வேண்டும்’ என்று முடிவு செய்தவன் வாசலில் அமர்ந்து இருந்த வாட்ச்மேனை கொஞ்சமும் சட்டை செய்யாமல்  தன்னுடைய புல்லட்டை வீட்டிற்குள் செலுத்தினான். வெளியில் இருந்தவாறே வீட்டை கண்காணித்தான்.

அவன் கேள்விப்பட்ட வரையில் அவர்கள் வீட்டில் பணத்திற்கு பஞ்சம் இல்லை. நல்ல வசதியான வீடு. எல்லாமே பரம்பரை சொத்து… தியாகி அண்ணாமலை எப்பொழுதும் செல்வம் சேர்ப்பதில் அதிக ஈடுபாடு இல்லாதவர். மற்றவர்களுக்கு நன்மை செய்வது ஒன்றைப் பற்றி மட்டுமே தீவிரமாக யோசித்துக் கொண்டிருப்பார். தொழில் என்று எதுவும் பெரிதாக இல்லை.

அண்ணாமலை அவருடைய காலத்தில் தன்னுடைய பணத்தில் கிராமத்தில் உள்ள மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற நோக்கில் அவர்களுக்கு உபயோகப்படும் விதமாக குடிசை தொழில்களை சிலவற்றை ஆரம்பித்து ஊக்குவித்தார்.

அப்பளம், ஊறுகாய்… இப்படி பெண்களுக்கு உதவும் தொழில் தான்… அதை அவர் விற்று கிடைக்கும் லாபத்தில் குறிப்பிட்ட சதவிகிதத்தை அந்த பெண்களுக்கு பகிர்ந்து கொடுத்து விடுவார்.

அதே தொழில் இப்பொழுது பெரிய அளவில் வளர்ந்து இருந்தாலும் இப்பொழுது அதே முறையில் தான் லாபம் பகிரப்பட்டு வருகிறது. கிராமப்புறத்தில் இருக்கும் பெண்கள் அவரது தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார்கள்.. லாபத்தில் அனைவருக்கும் குறிப்பிட்ட சதவீதம் பங்கு கொடுத்து வந்தார். அவரது மகன் சிவநேசன் பொறுப்பை ஏற்றுக் கொண்ட பிறகும் அதே முறை தொடர்ந்தது.

அவர்கள் அந்த தொழிலை வருமானத்திற்காக செய்யவில்லை. ஏழைகளுக்கு உதவி செய்ய இறைவன் கொடுத்த வாய்ப்பாக கருதுகின்றார்கள். அவர்களுக்கு அது போக ஊரில் நிறைய விவசாய நிலமும், மீன் பண்ணை, கோழிப்பண்ணை போன்ற தொழில்களும் இருந்தன.

இது அனைத்தையும் எண்ணிப் பார்த்தவன் அவர்கள் வீட்டில் பணத்தை பிரதானமாக வைத்து எந்த பிரச்சினையும் செய்ய முடியாது என்ற முடிவுக்கு வந்தான். வரதட்சிணை அதிகமாக கேட்டாலும் அவர்களுக்கு இருக்கும் சொத்துக்கு அவர்கள் மறுத்து பேசாமல் செய்வார்கள். இன்னுமும் சொல்வதென்றால் முழு சொத்தையும் எழுதி வைக்க சொன்னாலும் அவர்கள் அதற்கு நொடி கூட தாமதிக்காமல் சரி என்று சொல்லி விடுவார்கள்.ஏனெனில் அருந்ததி அந்த வீட்டின் ஒரே வாரிசு.

அவர்களை பொறுத்தவரை இந்த திருமணம் அண்ணாமலை அய்யாவின் கடைசி ஆசை.. அதை நிறைவேற்றும் பொருட்டு என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருப்பார்கள்.

‘இந்த மனிதன் ஏன் என்னுடைய பெயரை சொன்னார்? சின்ன வயதில் என்னை பார்த்ததோடு சரி… நானும் அவரிடம் மரியாதை நிமித்தமாக ஒன்றிரண்டு வார்த்தைகள் தான் பேசி இருக்கிறேன்… அப்புறமும் ஏன் என்னை தேர்ந்தெடுத்தார்?’ என்று மண்டைக்குள் ஆயிரம் கேள்விகள் வண்டாய் குடைந்தது அவனுக்கு.

வெறுமனே தன்னுடைய தந்தையின் பேரில் இருக்கக் கூடிய அபிமானத்தால் மட்டுமே இந்த திருமணம் நடக்கிறது என்பதை நம்ப மறுத்தது அவன் மனம். ‘ஒருவேளை அருந்ததியின் அப்பா சிவநேசனுக்கு இந்தக் கேள்விக்கு பதில் தெரிந்து இருக்கலாம்’ என்று எண்ணியவன் இராணுவ வீரனுக்கே உரிய மிடுக்குடன் வீட்டினுள் நுழைந்தான்.

அவன் வீட்டினுள் புல்லட்டில் வருவதையும், வாட்ச்மேனை சட்டை செய்யாமல் உள்ளே நுழைந்ததையும், கம்பீர நடையுடன் உள்ளே வருபவனையும் மாடியில் இருந்த பால்கனியின் மூலம் பார்த்துக் கொண்டிருந்தார் சிவநேசன்.

‘என்ன கம்பீரம்… அப்படியே ராஜநடை… இவர் மட்டும் மாப்பிள்ளையா கிடைச்சுட்டா அருந்ததி யோகக்காரி தான்’ என்று எண்ணியவர் அவனை வரவேற்க வாசலுக்கு விரைந்தார்.

“வாங்க மாப்பிள்ளை” என்று ஆர்ப்பாட்டமான புன்னகையுடன் வரவேற்றவரை கண்டுகொள்ளாமல் வீட்டினுள் நுழைந்தவன் அவரின் பதிலை எதிர்பாராமல் தோரணையாக கால் மேல் கால் போட்டு அமர்ந்து கொண்டான். அவனுக்கு அருகிலேயே சோபாவில் குதித்து அமர்ந்த நீமோவைப் பார்த்ததும் ஒரு கணம் அவர் முகம் சுருங்கியது.

“ராமு… இந்த நாயை வாசலில் கட்டி வை” என்று வேலையாளுக்கு உத்தரவிட ஆட்சேபத்துடன் அவரை பார்த்தான் அக்னி.

“நோ… நீமோ இங்கேயே இருக்கட்டும்… அவன் ட்ரைன்டு டாக் (trained dog) தெரியாதவங்க தொட்டா… முதல் கடி குரல்வளையில் தான்” என்று எச்சரிக்க வேலையாள் பயந்து கொண்டே பின்வாங்கியதை உள்ளுக்குள் ரசித்து சிரித்துக் கொண்டான்.

செய்வதறியாது கையை பிசைந்து கொண்டு நின்ற வேலையாளை கண் ஜாடையில் உள்ளே செல்லுமாறு பணித்தார் சிவநேசன்.

“உட்காருங்களேன்” ஒற்றை கையை எதிரே இருந்த சோபாவை நோக்கி  நீட்டி வேண்டுமென்றே அவர் வீட்டில் அவரை உபசரித்தான். இதழ்க்கடையில் ஒரு நக்கல் சிரிப்புடன்…

‘சின்ன சின்ன விஷயத்தில் கூட கடுப்பேத்தணும்’ ஏற்கனவே செய்த முடிவை  செயல்படுத்தத் தொடங்கினான்.

ஆனால் அவனது அந்த உதாசீனம் எதையுமே சிவநேசர் கொஞ்சமும் கண்டு கொள்ளவில்லை. அவர் பார்வை முழுக்க அவன் முகத்தையே ஆர்வத்துடன் மொய்த்தது.

‘இவர் என்ன இப்படி பார்க்கிறார்?’ என்று நினைத்தவனுக்கு அப்பொழுது தான் புரிந்தது தன்னுடைய சட்டையின் நிறம்… ‘ஆஹா’ என்று குதூகலித்தான்.

‘இதோ இப்போ கேட்கப் போகிறார்.. இந்த நிமிஷம்… இந்த நொடி’ என்று ஆர்வமுடன் அவன் எதிர்பார்க்க அவரோ அவசரமின்றி மெதுவாக வாய் திறந்து பேசினார்.

“ராஜாத்தி தம்பிக்கு ஒரு ஜூஸ் எடுத்துட்டு வா” என்று சொன்னவர் மீண்டும் அவன் முகத்தையே ஆராய்ச்சியாய் பார்க்க… அவனுக்கோ லேசாக எரிச்சல் வந்தது.

“இன்னிக்கு வெயில் ஜாஸ்தியா இருக்கு… வீட்டில் ஏசி இல்லையா “ என்று கேட்டவாறு மீண்டும் ஒருமுறை சட்டையை காற்றுக்காக தூக்கி விடுவது போல அவர் கண் முன்னால் தூக்கி ஆட்ட… அவர் முகத்தில் சிரிப்பு வந்தது.

“தம்பிக்கும் எங்களைப் போலவே தெய்வ பக்தி அதிகமோ” என்ற அவரின் கேள்வியை அவன் மறுத்து பேசும்முன் அவரே தொடர்ந்து பேசினார்.

“இன்னிக்கு சனிக்கிழமை… சரியா சனீஸ்வர பகவானுக்கு ஏத்த மாதிரி கறுப்பு சட்டையில் வந்து இருக்கீங்களே… அதான் கேட்டேன்” என்று சொல்ல அக்னிபுத்திரனின்  முக பாவனையை சொல்லத்தான் வேண்டுமோ…

‘சனீஸ்வர பகவான் இப்படி உன் வாழ்க்கையில் விளையாடுறாரே.. நான் என்ன நினைச்சு இந்த சட்டையை போட்டேன். ஆனா இங்கே என்ன நடக்குது’ என்று எண்ணியவன் அடுத்து என்ன செய்வது என்று தீவிரமாக யோசிக்கத் தொடங்கினான்.

“அப்பா உங்களுக்கு எல்லா விவரமும் சொன்னார் தானே…”

“ம்ம்ம்”

“உங்களுக்கு சம்மதம் தானே?”

“எனக்கு அதுக்கு முன்னாடி சில விஷயங்கள் சொல்லணும்…”

“எதுவா இருந்தாலும் தயங்காம சொல்லுங்க… உங்க மனசு கோணாம அதை எல்லாம் செஞ்சு முடிக்கிறது என்னோட பொறுப்பு… ஆனா இந்த கல்யாணத்தை மட்டும் மறுத்து பேசாதீங்க… இது என்னோட அப்பாவோட கடைசி ஆசை.” என்று குரல் கம்ம பேசியவரிடம் எப்படி மறுத்து பேசுவது என்று யோசனையானான். அவனை யாராவது அடக்க நினைத்தால் அவர்களை அடக்கி விட்டே மறுவேலை பார்ப்பான்.அப்படிப்பட்ட வீரன் தான்.ஆனால் இப்பொழுது எதிரில் இருப்பது அவனது எதிரி இல்லையே… சாதுர்யமாக தான் காயை நகர்த்த வேண்டும் எண்டு முடிவு செய்தான்.

“சார் உங்க பொண்ணு எங்கே?”

“இதோ கூப்பிடறேன்…”

“அம்மாடி அருந்ததி இங்கே வா டா… “

“அப்பா… பாருங்கப்பா இந்த அம்மாவை… காலையில் பத்து இட்லி சாப்பிட்டேனாம்… மறுபடியும் பசிக்குதுன்னு சொன்னா அம்மா சாப்பிட தர மாட்டேன்கிறாங்க… என்று புகார் பத்திரம் வாசித்துக் கொண்டே வெளியே வந்தவள் புதிதாக அங்கே இருந்தவளின் கூர்ப்பார்வையில் வாய் அடைத்துப் போனாள்.

‘இவன் என்ன இப்படி பார்க்கிறான்… நாலு பணியாரம் சாப்பிட்டா தப்பா’ என்று எண்ணியபடி வாயில் திணித்துக் கொண்டு இருந்த பணியாரத்தையும்,  கையில் இருந்த இரண்டு டஜன் பணியாரத்தையும் அவனையும் மாறி மாறி பார்த்தாள்.

‘திண்ணே சொத்தை அழிச்சுடுவா போல’ என்று எண்ணியவனின் பார்வையில் எதைக் கண்டாளோ வேகமாக பணியாரத்தை மறைத்து வைத்தாள்.

‘ஹ்ம்… இவன் பார்வையே சரி இல்லை… புடுங்கி தின்னுடுவான் போல’ என்று எண்ணியவள் பணியாரம் இருந்த கிண்ணத்தை அவன் பார்வையில் படாதவாறு மறைத்து வைத்து சாப்பிடத் தொடங்கினாள்.

‘ஒத்த ரோசா… பொண்ணை ரொம்ப அருமையா பெத்து வச்சு இருக்கீங்க…  சாப்பிட்டு சாப்பிட்டே நல்லா பீப்பா மாதிரி இருக்கா? இவளை என்னோட தலையில் கட்டப் பார்க்கறீங்களா? கடவுளே உனக்கு இரக்கமே இல்லையா’ என்று ஆன மட்டும் யோசித்தவனின் மூளையில் பளிச்சென ஒரு யோசனை தோன்றியது.

“நான் உங்க பொண்ணு கிட்டே கொஞ்சம் பேசணும்… என்னோட எதிர்பார்ப்புகளை நேரடியா அவங்ககிட்டயே சொல்லிடறேன். அவங்களுக்கு ஓகேனா நாம மேற்கொண்டு இந்த விஷயத்தை பேசலாம்” என்று சொல்ல… அவன் கல்யாணத்துக்கே ஒத்துக்கொண்டதை போல சிவநேசன் முகம் மலர்ந்து விட்டது.

“அதுக்கென்ன தம்பி… மாடியில் பொண்ணோட ரூம் இருக்கு.. அங்கே போய் பேசுங்க… இல்லைனா மொட்டைமாடியில்…” என்று அவர் வேகமாக பேசிக் கொண்டே போக, அவரை இடைமறித்து பேசினான் அக்னிபுத்திரன்

“இல்ல.. இங்கே வேண்டாம்.. நான் கொஞ்சம் அவங்களை கூட்டிட்டு வெளியே போய்ட்டு வர்றேன்” என்று சொன்னவன் சிவநேசனின் முகத்தையும், அருந்ததியின் முகத்தையும் ஒருங்கே ஆராய்ச்சியாக பார்த்தான்.

அவள் முகம் மலர்ந்தது… சிவநேசனின் முகமோ ஆட்சேபனையுடன் சுருங்கியது.

“வெளியே எல்லாம் எதுக்கு தம்பி… இங்கேயே நம்ம வீட்டிலேயே…” என்று அவர் தயக்கமாக இழுக்க…

“இங்கே என்னால் ப்ரீயா பேச முடியாது” என்று அழுத்தம் திருத்தமாக சொன்னவன் திரும்பி அவளைப் பார்த்தான்.

சிவந்த நிறம் … பூசினாற் போல இருந்த உடம்பு…  இரவு உடையான பைஜாமாவிலேயே  இன்னமும் இருந்தாள். தலை கூட மேலே தூக்கி கொண்டை மாதிரி ஒரு சுற்று சுற்றி கிளிப் போட்டு இருந்தாள். இன்னமும் அவள் அந்த பணியாரத்தை பிரியாமல் தான் இருந்தாள்.

சிவநேசனும், அக்னியும் பேசிக் கொண்டிருந்த நேரத்திலும் காது அவர்களின் பேச்சை கேட்டுக் கொண்டிருந்தாலும் வாய் தன்னுடைய பணியை செவ்வனே செய்து கொண்டிருந்தது.

‘அருந்ததின்னு பேர் வச்சதுக்கு அரவை மெசின்னு பேர் வச்சு இருக்கலாம்….’ என்று மனதுக்குள் அவளுக்கு புகழாரம் சூட்டினான். அவனது பார்வையில் என்ன புரிந்து கொண்டாளோ… மறுபடியும்  அந்த பணியார கிண்ணத்தை பின்னால் மறைத்துக் கொண்டு ஈஈஈ என்று சிரித்து வைத்தாள்.

“உன்கிட்டே வேற தனியா சொல்லணுமா? போய் குளிச்சுட்டு கிளம்பு… வெளியே போகணும்” என்று சொன்னவனின் பார்வை அவள் மீது அழுத்தத்துடன் படிய… அவள் பார்வை தந்தையின் புறம் திரும்பியது.

‘போகட்டுமா’ என்று கேள்வி அதில் இருக்க… சிவநேசன் வேறுவழியின்றி பெண்ணை கிளம்ப சொன்னார்.

“நான் மிலிட்டரி மேன்… எனக்கு எல்லாமே பக்காவா இருக்கணும். சோம்பேறித்தனத்தையும், பொறுப்பில்லாதனத்தையும் எப்பவுமே நான் பொறுத்துக்க மாட்டேன்” என்று அடிக்குரலில் சொன்னவனை மிரட்சியுடன் பார்த்தாள் அருந்ததி.

“கமான்.. கிவிக்” என்று அவளை வேகப்படுத்த… அரைமணி நேரம் அவனது இரத்த அழுத்தத்தை நன்றாகவே எகிற செய்து மெதுவாகவே கிளம்பி வந்தாள் அருந்ததி.

நாவல் பழ நிறத்தில் மெல்லிய பட்டுப்புடவையை அவள்  கட்டி இருந்தாள்… ஹும்.. அது தப்போ… அவள் அந்த புடவையை சுத்தி இருந்தாள் என்று தான் சொல்ல வேண்டும்… புடவையை அத்தனை அழகாக கட்டி இருந்தாள் அந்த புண்ணியவதி.

‘கடவுளே… என்னை இன்னும் எவ்வளவு தான் சோதிப்ப’ என்று மேல் நோக்கி பார்வையை செலுத்தியவன்… கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் அடித் தொண்டையில் இருந்து உறுமலாக பேசத் தொடங்கினான்.

“உன்கிட்டே ஜீன்ஸ்  இருக்கா?” என்றான் நேரடியாக அவளைப் பார்த்து…

“ஓ… நிறைய…” என்றாள் ஆர்வத்துடன்…

“அப்போ அதையே போட்டுக்கிட்டு இன்னும் அஞ்சு நிமிஷத்தில் கீழே இறங்கி  வந்திருக்கணும் நீ” என்று கட்டளையாகவே சொன்னவன்  அதற்கு மேல் அங்கே நிற்கப் பிடித்தம் இல்லாதவனைப் போல.. தன்னுடைய பைக்கில் ஏறிக் கொள்ள… நீமொவும் அவன் பின்னாலேயே ஓடி பைக்கில் தொத்திக் கொண்டது.

ஷாக்கடிக்கும்…

Facebook Comments
Previous PostMannavan Paingili 16
Next PostMannavan Painkili 17
Hi Readers, This is Madhumathi Bharath. I am one of the Tamil romance novel writers.This page created for my novel readers.In this blog i am going to provide you link for my tamil new novels updates.This is not a writer's website,This is for you people who would like to read Tamil new novels.keep following this page for further updates.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here