மின்மினியின் மின்சாரக் காதலன் எபி 22 tamil novels

0
418

அத்தியாயம் 22

எல்லோரும் கிளம்பி தயாராக இருந்தனர். கண்ணன் அங்கிருப்பது தெரியாததால் சிவநேசன் நால்வர் மட்டும் அமரக் கூடிய சிறிய காரை எடுத்து வந்திருந்தார். முன் சீட்டில் டிரைவரும், அவரும் அமர்ந்து கொள்ள பின் சீட்டில் தான் கொஞ்சம் கலவரமாக இருந்தது.

முதலில் அருந்ததி அமர்ந்து கொள்ள அவளுக்கு அருகில் அக்னி அமர்ந்து கொண்டு அவனுக்கு பக்கத்தில் கண்ணனை அமர்த்திக் கொண்டான்.

நீமோவும் அவர்களுடன் காரில் ஏற அருந்ததிக்கும், தனக்கும் இடையில் அமர்த்திக் கொண்டான் அக்னி. ஏற்கனவே அருந்ததி கொஞ்சம் பூசினாற் போல உடல்வாகு உடையவள் என்பதால் மூவர் அமர்ந்து வர கொஞ்சம் சிரமமாக இருக்க… நான்காவதாக நீமோவும் அமர பின் சீட்டில் எல்லாரும் கொஞ்சம் நெருக்கியடித்துக் கொண்டு அமர வேண்டிய சூழ்நிலை.

கண்ணன் அமர்ந்ததுமே சூழலை கணித்து விட்ட சிவநேசன் வீட்டுக்கு அழைத்து வேறு கார் கொண்டு வருவதாக சொல்ல அக்னி மறுத்து விட்டான்.

“அந்த கார் இங்கே வர்றதுக்கு எப்படியும் ஒரு முக்கால் மணி நேரம் ஆகிடும். அதுக்குள்ளே நல்ல நேரம் போயிடுமே. பரவாயில்லை கொஞ்ச நேரம் தானே.. அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்” என்று மறுத்து விட்டான்.

அவன் சொல்வது அவருக்குமே சரியென்று பட்டது.

அதையும் விட இப்பொழுது அவன் என்ன சொன்னாலும் சரி சரி என்று அவர் தலையாட்டி தான் ஆக வேண்டிய மனநிலையில் இருந்தார். அவனுக்கு கோபம் வராத வண்ணம் நடந்து கொண்டு அவனை வீட்டிற்கு அழைத்து வரும்படி அவரது மனைவி நூறுமுறை சொல்லி அனுப்பி இருக்க , அவரும் அவன் எது சொன்னாலும் தலையாட்டி வைத்தார்.

பெண்களைப் பெற்று அவர்களை திருமணம்  செய்து கொடுத்த பெரும்பாலான அப்பாக்களின் நிலை அது தான். யாரோ ஒருவன்… வயதிலும், அனுபவத்திலும் தன்னை விட சிறியவனாக இருப்பான். அவனுக்கு எல்லா விதத்திலும் பணிந்து போக வேண்டும். அதையும் தாண்டி அவன் எவ்வளவு அவமானப்படுத்தினாலும் பொறுத்துக் கொள்ள வேண்டும். பெற்ற பெண்ணுக்காக தவறே செய்யாவிட்டாலும் இறங்கிப் போக வேண்டும்.

இங்கே அக்னியைப் பொறுத்தவரை அவனுக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்பது எல்லாருமே அறிந்த ஒன்று. அதனையும் மீறி எல்லாரும் சேர்ந்து தான் இந்த திருமணத்தை செய்து வைத்து இருக்கிறார்கள். அப்படி இருக்கையில் அவனது கோபம் யாருக்குமே தவறாக தோன்றவில்லை. பொறுத்துக் கொள்வதென ஏற்கனவே முடிவு செய்து இருந்தார்கள். இப்பொழுதும் அதன்படியே அமைதி காத்து, அவன் சொல்வதற்கு எல்லாம் பூம் பூம் மாடு போல தலையாட்டி வைத்தார் சிவநேசன்.

அருந்ததி , நீமோவை தன்னோடு அமர்த்திக் கொண்டு வெளியே தெரிந்த காட்சிகளை காட்டி ஏதேதோ பேசிக் கொண்டே வந்தவள் வரும் வழியில் கிட்டத்தட்ட பத்து இடத்திலாவது காரை நிறுத்தி இருப்பாள்.

இளநீர், ஜூஸ், ஐஸ் கிரீம், வடை,டீ,தென்னங்குருத்து, தேங்காய் பூ, சான்ட்விச், என்று கண்ணில் பட்டதை எல்லாம் வாங்கி தின்று கொண்டே வந்தவள் வேறு யாரையும் பெரிதாக கண்டு கொள்ளவில்லை.

 

நீமோவுக்கு கொஞ்சம் கொடுத்து விட்டு அவள் பாட்டிற்கு உணவை உண்டு கொண்டே வந்தாள். சிவநேசனும் கொஞ்சமும் முகம் சுளிக்காமல் சிரித்த முகத்துடன் அவள் கேட்டதை எல்லாம் வாங்கி கொடுத்துக் கொண்டே வந்தார்.

காரின் பின்னால் இருந்த கண்ணனை அக்னி ஒரு வழி ஆக்கிக் கொண்டிருந்தான்.

அவனது கைகளை கண்ணனின் தோளை சுற்றி போட்டுக் கொண்டவன் இடப் பற்றாக்குறையை சாக்காக சொல்லிக் கொண்டு அவனோடு நெருங்கி அமர்ந்து கொண்டான்.

“அக்னி ப்ரோ கொஞ்சம் தள்ளி உட்காருங்க…”

“இடம் இல்லை கண்ணா…” என்றவன் அவனைப் பார்த்து கண் சிமிட்ட.. கண்ணனுக்கோ தூக்கி வாரிப்போட்டது.

“ப்ரோ விளையாடாதீங்க… நான் வேணும்னா முன்னாடி உட்கார்ந்துக்கிறேன்…அங்கிளை பின்னாடி உட்கார சொல்றேன்”

“நம்மளே இங்கே நெருக்கியடிச்சுகிட்டு உட்கார்ந்து இருக்கோம். அவர் வயசானவர் அவரால இப்படி உட்கார்ந்து வர முடியுமா? அதுவுமில்லாம…”

“அதுவுமில்லாம…”

“இந்த மாதிரி வாய்ப்பை எல்லாம் மிஸ் பண்ணிடக் கூடாது கண்ணா… கிடைச்ச அளவுக்கு யூஸ் பண்ணிக்கணும்… முடிஞ்சா இது மாதிரி நெருக்கமான வாய்ப்புகளை நாமளே உருவாக்கணும்” என்று சொல்ல கண்ணன் திருத்திருத்தான்.

 

“இனி அடிக்கடி இப்படி நடந்தா தான் நமக்குள்ளே ஒரு நெருக்கம் வரும்… ஒருத்தரை ஒருத்தர் இன்னும் நல்லா புரிஞ்சுக்கலாம்” என்று சொன்னபடி அவன் தோளைப் பிடித்து லேசாக அழுத்த… கண்ணனின் முகம் வேப்பெண்ணெய் குடித்ததைப் போலானது.

“ப்ரோ… இதெல்லாம் நீங்க அந்த குந்தாணி கிட்ட பேச வேண்டிய டயலாக்…”

“எனக்கு உன்னைத் தான் பிடிச்சு இருக்கு கண்ணா”

“கருமம்.. கருமம்…”

“ஆரம்பத்துல அப்படித் தான் இருக்கும் கண்ணா.. அப்புறம் பாரேன்.. நீயும் என்னை மாதிரி மாறிடுவ”

“உவாக்”

கண்ணனின் முக பாவனைகள் அக்னிக்கு உள்ளுக்குள் அப்படி ஒரு சிரிப்பைக் கொடுத்தது.

“எங்கே என்னை டார்லிங்க்னு கூப்பிடு பார்ப்போம்…”

“ப்ரோ உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சு… அதோ இருக்காளே… அந்த டொமேட்டோ தான் உங்க பொண்டாட்டி…”

“அது ஊருக்கு… இது எனக்கு.. இன்னும் தெளிவா சொல்றதுனா எனக்காக… உனக்காக… நமக்காக…” என்ற ரீதியில் பேசிக் கொண்டே போக கண்ணனின் முகம் அழுவதைப் போல மாறி விட்டது.

‘என்னையா கே ன்னு சொன்ன… செத்தடா மகனே… ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்…’

‘அடியே குந்தாணி… உன் புருசன் இங்க என்னை பாடாய் படுத்தி வைக்கிறான்… கொஞ்சமாவது இந்தப் பக்கம் திரும்பறியா? எப்பப்பாரு தின்னுக்கிட்டே தான் இருப்பா’ என்று அருந்ததியைத் திட்டித் தீர்த்தான் கண்ணன்.

அவனது திட்டுக்களை எல்லாம் உணர்ந்தோ அல்லது எதேச்சையாகவோ அருந்ததி திரும்பி கண்ணனைப் பார்க்க… அவனோ தன்னால் முயன்ற விதத்தில் எல்லாம் அவளிடம் கண் ஜாடை காட்டினான். தீவிரமாக சமோசாவில் சாஸை முக்கித் தின்று கொண்டிருந்தவளுக்கோ அவன் சொல்ல வருவது எதுவும் புரியவில்லை.

திருமணம் முடிந்து அக்னியின் வீட்டிற்கு வந்ததில் இருந்தே அவளுக்கு சரியான சாப்பாடு இல்லை. வெளியில் தந்தையுடன் வந்ததும் அவளது வயிறு தன்னுடைய இருப்பை உணர்த்த வெகுநாட்களுக்கு பிறகு உணவை கண்டவன் உண்பதைப் போல எல்லாவற்றையும் வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தாள். இதில் அவள் எங்கேயிருந்து கண்ணனின் கண் ஜாடையை புரிந்து கொள்வதாம்.

‘பர்ஸ்ட் சோறு… அப்புறம் தான் எதுவா இருந்தாலும்’ என்ற ரீதியில் முகத்தை திருப்பிக் கொண்டு அவள் உண்பதில் ஆர்வமாகி விட கண்ணனோ நொந்தே போனான்.

‘அடியே இப்படியே போனா உனக்கு நான் சக்களத்தி ஆகிடுவேன்டி குந்தாணி… ஐயோ ஆண்டவா… எங்கயாவது இப்படி ஒரு அநியாயம் நடக்குமா? இவளுக்கு சக்களத்தியா வர்றதா இருந்தா ஒரு பொண்ணு தானே வரணும்… என்னை ஏன் இந்தாளுக்கு கிட்டே கோர்த்து விடப் பார்க்கிறே’

கண்ணனின் ஜாடைகளையும், முக மாற்றத்தையும் பார்த்துக் கொண்டிருந்த அக்னிக்கு அப்படி ஒரு சிரிப்பு… வெளியே காட்ட முடியவில்லை அவனால்.

‘இன்னும் எவ்வளவோ இவனை செய்ய வேண்டி இருக்கிறதே’ என்று எண்ணியபடி இன்னும் கொஞ்சம் அவனை நெருங்கி அமர்ந்து அவனைப் பார்த்து கண் சிமிட்ட கண்ணனோ கார் கதவோரம் போய் பல்லி போல ஒட்டிக் கொண்டான்.

‘அம்மே! என் கற்பு’ என்று பதறியவன் அதன்பிறகு மறந்தும் அக்னியின் புறம் பார்வையை திருப்பவில்லை. அக்னியும் இதற்கு மேலும் ஏதாவது செய்தால் கண்ணனின் முக சேஷ்டைகளில் தன்னையும் அறியாது சிரித்து விடுவோம் என்று உணர்ந்து கொண்டு அத்தோடு நிறுத்திக் கொண்டான்.

மேலும் சில நிமிடங்கள் பயணம் அமைதியாக கழிய…அருந்ததியின் வீடும் வந்தது.கோகிலா புதுமண தம்பதிகள் இருவருக்காகவும் வாசலிலேயே காத்து இருந்தார்.

ஒரு பக்கத்தில் இருந்து அருந்ததி இறங்க… மறுபக்கத்தில் இருந்து கண்ணனும், அக்னியும் ஜோடியாக இறங்க கோகிலா கண்ணனை வியப்பாக பார்த்தார்.

“கண்ணா… நீ எப்படிடா இவங்களோட” என்று கேட்டபடியே ஆரத்தியை எடுக்க முன்வர நகர முற்பட்டவனை அக்னியின் கரங்கள் அழுத்தமாக பற்றிக் கொண்டது.

“ஜோடியா நிற்கலாம் கண்ணா”

“ப்ரோ… நான் மறுக்கா மறுக்கா சொல்றேன்… அதோ நிற்கிறாளே அந்த குந்தாணி தான் உங்க பொண்டாட்டி”

“அது ஊருக்கு”

“அய்யே!” என்றவன் அக்னி அசந்த சமயம் கோகிலாவிடம் பேசுவதைப் போல நகர்ந்து அந்தப்பக்கம் நின்று கொண்டான். அக்னி ஏமாற்றம் அடைந்தவனைப் போல முகத்தை வைத்துக் கொள்ள கண்ணன் ‘தப்பிச்சோம்டா சாமி’ என்று எண்ணிக் கொண்டான்.

அருந்ததியும், அக்னியும் ஜோடியாக நிற்க ஆலம் கரைத்து வீட்டிற்குள் அழைத்து வரப் பட்டனர்.

“வெயிலில் வந்தது களைப்பா இருக்கும்… முதல்ல டிபன் சாப்பிட்டுட்டு கொஞ்சம் ஓய்வெடுங்க” என்று கோகிலா சொல்ல மறுத்து பேசாமல் அப்படியே செய்தான் அக்னி. அருந்ததியும் வீட்டினுள் வந்ததில் இருந்தே அவனைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

வேண்டுமென்றே ஏதாவது செய்வான் என்று அவனையே உன்னிப்பாக பார்த்துக் கொண்டிருக்க, அவனது பார்வை முழுக்க கண்ணனையே சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருந்ததை உணர்ந்தவள் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.

கண்ணன் எப்பொழுதும் கொஞ்சம் கலகலப்பான பேர்வழி.எல்லாரையும் சுலபமாய் பேசி சிரிக்க வைத்து தன்னுடைய நட்பு வட்டத்தில் இணைத்து விடுவான். அக்னியும் அதே போல கண்ணனின் நட்பை விரும்ப ஆரம்பித்து விட்டான் என்று எண்ணி அவள் அமைதியாகி விட்டாள்.

மகளுக்காகவும், மருமகனுக்காகவும் வீட்டில் விதவிதமாக சமைத்து வைத்து இருந்தார் கோகிலா. உணவு உண்ணும் வேளையிலும் கண்ணனை பாடாய்படுத்தி வைத்தான் அக்னி.

“பூரி இன்னும் ஒன்னு வச்சுக்கோ கண்ணா… கொஞ்சம் பொங்கல் வைக்கவா…இந்த சட்னி சாப்பிட்டுப் பாறேன்… டேஸ்ட் நல்லா இருக்கு” என்று கண்ணனையே கவனிக்க அருந்ததிக்கு காதில் புகை வந்தது.

‘கட்டின பொண்டாட்டி குத்து கல்லாட்டம் இருக்கேன்… என்னை கவனிக்கிறானா பாரு.. அடேய்! பயர் எஞ்சின் இருடா உனக்கு ஆப்பு வைக்கிறேன்.’ என்று எண்ணியவள் முகத்தை சாதாரணமாக வைத்துக் கொண்டாள்.

சிவநேசனும், கோகிலாவும் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அந்த வீட்டில் மற்ற எல்லாரிடமும் அளந்து அளந்து பேசும் அக்னி, கண்ணனிடம் கொஞ்சம் சகஜமாக இருப்பது எல்லாருக்கும் மகிழ்ச்சியையே கொடுத்தது.

‘கண்ணன் மூலமாக அக்னியிடம் பேசி கொஞ்சம் கொஞ்சமாக அருந்ததியின் வாழ்வை மலர செய்து விடலாம்’ என்று எண்ணி அவர்கள் கொஞ்சம் நிம்மதி அடைந்தார்கள்.

சாப்பிட்டு முடித்ததும் எல்லாரையும் அறைக்கு சென்று ஓய்வெடுக்குமாறு சொல்ல, கண்ணன் ஒரே ஓட்டமாக தப்பி ஓட முயன்றவனை தடுத்து நிறுத்தினான் அக்னி.

“நீ எங்கே போற கண்ணா?”

“கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கப் போறேன் ப்ரோ”

“ஓ! உனக்கு டயர்டா இருக்கா? கொஞ்ச நேர்மை உன்னோட பேசிட்டு இருக்கலாம்னு நினைச்சேன்”

‘உன் சங்காத்தமே வேண்டாம். ஆளை விடுடா சாமி’

“சரி… எந்த ரூமில் தங்கப் போற…”

“கீழே கெஸ்ட் ரூம் இருக்கு மாப்பிள்ளை… அங்கே தான் தங்க வைக்கப் போறேன்” மருமகனுக்கு பதில் அளித்தார் கோகிலா

“அருந்ததி ரூம் மாடியிலே தானே இருக்கு.. அதுக்கு பக்கத்திலேயே ஏதாவது ரூம் கொடுங்களேன்”

“நான் எதுக்கு மாடிக்கு.. அங்கே எல்லாம் வர மாட்டேன்…” வேகமாக அலறினான் கண்ணன். எல்லாரும் அவனை வித்தியசமாக பார்க்க அக்னியோ நமுட்டு சிரிப்பு ஒன்றை யாரும் அறியாமல் உதிர்த்தான்.

“அது வந்து இவங்க புதுசா கல்யாணம் ஆனவங்க… நான் பக்கத்தில் இருந்தா இவங்களுக்கு தொந்தரவா இருக்குமேன்னு…”

“அதெல்லாம் ஒரு தொந்தரவும் இல்லை. நீ பக்கத்துல இருந்தா எனக்கு கொஞ்சம் வசதியா இருக்கும் கண்ணா” என்றவன் அவனைப் பார்த்து கண் சிமிட்ட… கண்ணன் அரண்டு போனான்.

“ப்ரோ நான் மறுக்கா மறுக்கா சொல்றேன். உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சு… அவ தான் உங்களுக்கு பொண்டாட்டி” மற்றவருக்கு கேட்காத வண்ணம் மென் குரலில் கிசுகிசுத்தான்.

“அவ பொண்டாட்டி… நீ ஸ்டெப்னி” அதே போல அவனும் கிசுகிசுப்பாய் பதில் சொல்ல கண்ணன் வேகமாக இரண்டடி தள்ளி நின்றான்.

‘உடனே ஊருக்கு ஓடிடணும்.. இங்கே இருந்தா என் கற்பு பறி போய்டும். இந்த அக்னி ப்ரோ பேச்சு, செயல் எதுவுமே சரியில்லை. எல்லாமே குண்டக்க மண்டக்க இருக்கு. அடுத்த பஸ் எப்போன்னு தெரியலையே’என்று தனக்குள் புலம்பித் தள்ளினான்.

அவனது புலம்பலை எல்லாம் கண்டு கொள்ளாது அக்னியின் வேண்டுகோளின் படி அவனுக்கும் மாடியில் அருந்ததி அறைக்கு பக்கத்து அறையே கொடுக்க ஊரில் உள்ள எல்லா கடவுளையும் வேண்டிக் கொண்டு மாடிக்கு சென்றவன் அக்னி மாடியேறி வரும் முன் வேகமாக கதவை அடைத்துக் கொண்டான்.

‘யப்பா… தப்பிச்சேன்டா சாமி’

 

 

அருந்ததியும் தன்னுடைய அறைக்குள் சென்று விட, அக்னி அந்த வீட்டின் சிசிடிவிகளின் கண்காணிப்பு அறைக்கு சென்றான்.

இடைப்பட்ட நாட்களில் ஏதேனும் வித்தியாசமான நிகழ்வுகள் நடந்து இருக்கிறதா என்று அலசி ஆராய்ந்தான். அப்படி எதுவும் இல்லை என்பதால் அவனால் ஓய்ந்து நிம்மதியாக அமர முடியவில்லை.

‘நான் எதிர்பார்க்கிற விஷயம் நடக்கலைனா என்ன அர்த்தம்? எதிராளி நான் நினைச்சதுக்கு மாறா வேற ஏதோ ஒன்னு செய்யப் போறான்னு தானே அர்த்தம். என்னவா இருக்கும்?’ என்று வெகுநேரம் சிந்தித்தவன் அறையை விட்டு வெளியேறி மாடியை நோக்கி சென்றான்.

அதே நேரம் தண்ணீர் குடிப்பதற்காக அறையை விட்டு வெளியே வந்த கண்ணன் அக்னி கண்காணிப்பு அறையில் இருந்து வெளியே வருவதை பார்த்து புருவம் உயர்த்தினான்.

அக்னியும் கண்ணனைப் பார்த்து விட ஒரு நொடி தடுமாறினாலும் அடுத்த நொடி சமாளித்துக் கொண்டான்.

“என்ன டார்லிங் மாமாவை பார்க்காம இருக்க முடியலையா…  உடனே தேடி வந்துட்ட… வா… வா நாம உன்னோட ரூமுக்கு உள்ளே போய் தனியாஆஆஆ நம்ம எதிர்காலத்தைப் பத்தி பேசலாம்” என்று சொன்னபடி வேகமாக படியேற… தண்ணியாவது… மண்ணாவது என்று வேகமாக கதைவை பூட்டிக் கொண்டு உள்ளேயே அமர்ந்து கொண்டான் கண்ணன்.

‘தண்ணி குடிக்க வந்தது ஒரு குத்தமாடா’ தலையில் கை வைத்து அமர்ந்து விட்டான் கண்ணன்.

சிரித்துக் கொண்டே படியேறிய அக்னியின் கண்களில் நொடியில் சிரிப்பு மறைந்து ஒரு வித தீவிரம் வந்தது. அதே நேரம் அவனது வீடு அங்கே தீயிற்கு இரையாகிக் கொண்டிருந்தது.

 

 

Free download novels
Madhumathi Bharath
Facebook Comments Box
What’s your Reaction?
+1
4
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here