
அத்தியாயம் 4
நடு வீட்டில் ஒரு பெரிய போர் ஆரம்பம் ஆவதற்கான அறிகுறிகள் தெரிந்தது அருந்ததிக்கு . சிவநேசன் கொதித்துப் போய் இருந்தார். அவருக்கு கோபம் வருவது வெகு அரிதான நேரங்களில் மட்டுமே… அப்படியே வந்தால் எதிரில் இருப்பவர்களின் கதி அதோகதி தான்.
அவர் மட்டும் அல்ல… படுக்கையில் தளர்வாக படுத்து இருந்த மகளை மடியில் தாங்கி இருந்த கோகிலாவின் நிலைப்பாடும் அதுவே தான் என்பதை அருந்ததியால் ஊகிக்க முடிந்தது. அவளது தலையால் கையால் வருடிக் கொண்டிருந்த அன்னையின் கை நடுக்கம் அந்த நொடியில் அவளுக்கு அளித்த ஆறுதலை வார்த்தைகளால் விவரித்து விட முடியாது.
அருந்ததி அந்த வீட்டின் செல்ல இளவரசி… அவளை அந்த வீட்டில் யாரும் கண்டித்துக் கூட பேசியதில்லை. அப்படிப்பட்டவள் இன்று காரில் இருந்து இறங்கவே முடியாமல் தடுமாறி நடந்து வந்தவள் வாசல்படியில் கால் வைக்கும் முன்னரே கால் பிசகி கீழே விழுந்து வைத்தாள்.
“அருந்ததி” என்று ஒரே குரலில் தாயும் , தந்தையும் பதட்டத்துடன் ஓடி வந்தது கண்டு உருகித் தான் போனாள் அவள்.
‘இவர்களின் அன்பில் ஒரு துளி கூட அவனிடம் இல்லையே… ராட்சசன்.. அரக்கன்…’ மனதுக்குள் வசைமாரி பொழிந்தாள்.
‘அவன் வரட்டும்… அப்பா பேசுற பேச்சில்.. கதறிக்கிட்டு வந்து என்கிட்டே மன்னிப்பு கேட்கணும்… எவ்வளவு திமிரு இருந்து இருந்தா என்னை ஓட வச்சு இருப்பான்.. அதுவும் நாயை விட்டு துரத்தி…’ அவளால் இன்னமும் அந்த சம்பவத்தின் தாக்கத்தில் இருந்து வெளியேற முடியவில்லை.
அருந்ததி கொஞ்சம் பூசினாற் போல உடல்வாகு உடையவள். அவளுக்கு இப்படி ஓடி எல்லாம் பழக்கமே கிடையாது. சாதாரணமாக இருப்பவர்களுக்கே அந்த மைதானத்தை நான்கு முறை சுற்றி வருவது கடினம் எனும் பொழுது… அவளுக்கு அது எப்படி சாத்தியம்? நாய் துரத்துகிறது என்ற பயத்தில் அளவுக்கு மீறிய வேகத்தில் ஓடினாள் அருந்ததி. அதன் விளைவு கை, காலில் ஆங்காங்கே தசைபிடிப்பு ஏற்பட்டு கால்களை அசைக்கக் கூட முடியாமல் படுத்திருந்தாள் அவள்.
ஹாலை ஒட்டி இருந்த படுக்கை அறையில் படுத்து இருந்தபடியே அக்னிபுத்திரனின் வருகைக்காக அவள் காத்திருக்கத் தொடங்கினாள். மருத்துவர் வந்து அவளை பரிசோதித்து விட்டு சென்ற பிறகும் கூட சில மணி நேரங்கள் கழித்து வேண்டுமென்றே தாமதமாகவே வந்து சேர்ந்தான் அக்னி.
அவன் முகத்தில் தவறு செய்து விட்டோம் என்ற பயமோ, பதட்டமோ இல்லை என்பதை குறித்துக் கொண்டார் சிவநேசன்.
தீர்க்கமான பார்வையுடன் அவரை எதிர் கொண்டவன் அவரது குற்றம் சாட்டும் பார்வைக்கு கொஞ்சமும் அசையவில்லை.
“உங்களை நம்பி தானே தம்பி பொண்ணை அனுப்பினேன்… இப்படியா செய்வீங்க?”
“உங்க பொண்ணை பத்திரமா வீடு வரை கொண்டு வந்து விட்ட பிறகு தான் நான் கிளம்பினேன் சார்” என்றான் ஒன்றுமறியாதவன் போல
“தம்பி… உங்களை பொறுப்பானவர்ன்னு நினைச்சேன்…”
“என்னிடம் என்ன பொறுப்பில்லாத் தனத்தை கண்டுட்டீங்க?”குரலை உயர்த்தத் தொடங்கினான் அக்னி
“நேரில் வேற பார்க்கணுமா? என் பொண்ணு வீட்டுக்கு வந்து சேர்ந்த கோலமே சொல்லுதே உங்க பொறுப்பைப் பற்றி”
“அது உங்க பொண்ணா இழுத்து விட்டுகிட்டது… அதுக்கு நான் எப்படி பொறுப்பாளி ஆவேன்?”
“உங்களால என்னோட பொண்ணு எழுந்திரிக்க முடியாம படுத்துக் கிடக்கிறா”
“நான் ஏற்கனவே சொல்லிட்டேன்.. இது உங்க பொண்ணா விரும்பி செஞ்சது… இதில் என்னோட தப்பு எதுவும் இல்லைன்னு”
“நாயை விட்டு துரத்தும்படி என்னோட பொண்ணு தான் உங்ககிட்டே சொன்னாளா?” அவரது கூர்மையான கேள்வி அவனை ஒரு துளி கூட அசைக்கவில்லை. அப்படியே கல்லைப் போல இறுகிப் போய் அமர்ந்து இருந்தான்.
“இதோ பாருங்க சார்… என்னை கல்யாணம் செஞ்சுக்கப் போற பொண்ணு காக்கி யூனிபார்மில் இருக்கிற பொண்ணா இருக்கணும். அப்படிங்கிறது என்னோட ஆசை. அதுல என்ன தப்பு இருக்கு?… நான் எத்தனையோ முறை திரும்ப திரும்ப கேட்டும் உங்க பொண்ணு என்னால முடியும்… செஞ்சு காட்டுறேன் அப்படின்னு வாய் சவடால் அடிச்சுக்கிட்டே இருந்தாங்க.. நிதர்சனம் என்னனு அவங்களுக்கு புரிய வேண்டாம்.. அதுக்காகத் தான் இப்படி செஞ்சேன்…
நான் என்ன உங்க பொண்ணை கல்யாணம் செஞ்சுக்க வரதட்சணை கேட்டேனா? இல்லை சொத்து கேட்டேனா… இந்த கல்யாணம் உங்க அப்பாவின் கடைசி ஆசைக்காக நடப்பது. அதுக்காக என்னுடைய வருங்கால மனைவியைப் பற்றிய கற்பனைகளை நான் மாற்றிக் கொள்ள முடியுமா? இதுக்கு உங்க பொண்ணு சம்மதித்தால் இந்த கல்யாணம் நடக்கும்.. இல்லைனா இந்த பேச்சை இப்படியே விட்டுடுங்க” என்று அவன் கறாராக பேசியதில் அந்த இடத்தில் அசாத்திய அமைதி நிலவியது.
“அதாவது உங்களுக்கு நீங்க தப்பு செஞ்ச உறுத்தலே இல்லை.. அப்படித்தானே?”
“ சார் மறுபடி மறுபடி என்னை ஒரே விஷயத்தை சொல்ல வைக்காதீங்க.. உங்க அப்பாவோட கடைசி ஆசைக்காக நான் எதுக்கு என்னோட கனவுகளை அழிச்சுக்கணும்? எனக்கு ஒரு போலீஸ்காரி தான் பொண்டாட்டியா வரணும்.உங்களுக்கு எப்படி உங்க அப்பாவோட ஆசை முக்கியமோ அது மாதிரி எனக்கு என்னோட ஆசை முக்கியம். உங்களுக்கு உங்க அப்பாவோட கடைசி ஆசையை நிறைவேத்தணும்ன்னு அவ்வளவு ஆசை இருந்தா உங்க பொண்ணை போலீசா ஆக சொல்லுங்க… இல்லேன்னா இந்த பேச்சை இனி எப்பவுமே பேசாதீங்க…
உங்க பொண்ணு கிட்டேயே இந்த விஷயத்தை நேரில் சொல்லிடறது தான் நல்லதுன்னு எனக்கு தோணுச்சு… அதுக்காகத் தான் கூட்டிக்கிட்டு போனேன். ஆனா உங்க பொண்ணு போலீஸ் வேலையை சுலபமா காசு கொடுத்து வாங்கிடலாம்ன்னு நினைச்சு நான் சொன்ன விஷயத்தின் சீரியஸ்நெஸ் புரியாம பேசினாங்க…. அவங்க நினைக்கிற அளவுக்கு அது அத்தனை சுலபமான விஷயம் இல்லைன்னு அவங்களுக்கு புரிய வைக்க நினைச்சேன். அவ்வளவு தான்.” என்று சொன்னவன் அதற்கு மேலும் அங்கே நிற்க விரும்பாதவன் போல நீமோவை பார்வையால் அழைத்தபடி அங்கிருந்து புறப்பட்டு விட்டான்.
அவன் சென்று வெகுநேரம் ஆன பின்பும் கூட சிவநேசனிடம் அசைவில்லை. அவர் நிலையை பார்த்து அருந்ததி மனம் வருந்தினாள்.
“அம்மா… அப்பாவை வர சொல்லுங்களேன்” என்ற மகளின் வார்த்தையை கேட்ட கோகிலா கணவரை அழைக்க.. தளர்ந்த நடையோடு தன்னை நோக்கி வந்த தந்தையைக் கண்டதும் பதறித் தான் போனாள் அருந்ததி.
“அப்பா எனக்கு ஒண்ணுமில்லை அப்பா…. லேசான சுளுக்கு தான்.. ஒரு இரண்டு நாளில் சரியாகிடும். நீங்க வீணா கவலைப் படாதீங்க…” தந்தையை தேற்ற முயன்றாள்.
“உன்னை எவ்வளவு செல்லமாக வளர்த்தோம்… கடைசியில் உன்னோட கல்யாண விஷயத்தில் உனக்கு பிடிச்ச மாதிரி… நம்ம வசதிக்கு ஏத்தவனா பார்த்து கல்யாணம் செஞ்சு வைக்க முடியாம தாத்தா இப்படி செஞ்சுட்டாரே பாப்பா” என்று அவர் வருத்தத்தோடு பேச… இதழ் கடித்து உணர்வுகளை அடக்கினாள் அருந்ததி.
“அப்படி என்னடா உனக்கு தலை எழுத்து? இவன் சொல்றபடி ஆடணும்னு… உன்னை மாதிரி ஒருத்தியை கல்யாணம் செஞ்சுக்க அவன் கொடுத்து வச்சு இருக்கணும் பாப்பா… ஆனா அவன் எவ்வளவு திமிரா பேசுறான்… அப்பா உயிலில் சொன்னார்னு ஒரே வார்த்தைக்காக இவனுக்கு உன்னை கட்டி வச்சிட்டு அதுக்கு பின்னாடி உனக்கு ஏதாவது ஆச்சுனா என்னால தாங்க முடியாது பாப்பா…
இப்படி அவன் சொல்ற எல்லாத்துக்கும் தலை ஆட்டித் தான் என்னோட பொண்ணை நான் அவனுக்கு கல்யாணம் செஞ்சு கொடுக்கணும்னு என்ன அவசியம் பாப்பா? அந்த அளவுக்கா என்னோட பொண்ணு நிலைமை தரம் தாழ்ந்து போச்சு! என் பொண்ணு எப்பவுமே இளவரசி தான்.
செத்துப் போன ஒருத்தரோட ஆசைக்காக உயிரோட இருக்கிற என்னோட பொண்ணு வாழ்க்கையை பாழாக்கிற அளவுக்கு நான் ஒண்ணும் மோசமானவன் இல்லை பாப்பா… என்ன ஒண்ணு.. அந்த பையனை உனக்கு கல்யாணம் செஞ்சு வைக்கலைன்னா ஊரில் எல்லாரும் நான் எங்க அப்பாவுக்கு நல்ல பையனா நடந்துக்கலைன்னு சொல்வாங்க… அப்பாவோட கடைசி ஆசையை பணத்துக்காக நிறைவேற்றாமல் போயிட்டேன்னு சொல்வாங்க…
சொல்றவங்க சொல்லிட்டு போகட்டும் பாப்பா… இப்போ நான் ஒரு நல்ல பையனா நடந்துக்கிறதை விட ஒரு நல்ல அப்பனா நடந்துக்கிறது தான் சரின்னு எனக்குப் படுது.. நான் சொல்றது சரி தானே கோகிலா?” என்று மனைவியிடமும் அபிப்ராயம் கேட்க… கோகிலாவின் தலை தானாகவே ஆடியது.
“அவ்வளவு தான் பாப்பா … நீ படுத்து தூங்கு… இனி அந்த பையனைப் பத்தின பேச்சு வேண்டாம்… கூடிய சீக்கிரமே உனக்கு ஏத்த மாதிரி பொருத்தமான ஒரு பையனா பார்த்து நான் உனக்கு கல்யாணம் ஏற்பாடு செய்றேன் பாப்பா… இப்போ நீ படுத்து தூங்கு…” என்று சொன்னவர் மனைவியிடம் மகளை பார்த்துக் கொள்ளுமாறு கண்ஜாடை காட்டி விட்டு நகர… அருந்ததி யோசனையானாள்.
இரண்டு நாட்கள் அருந்ததியின் வீடே அமைதியாக இருந்தது. எப்பொழுதும் அருந்ததி இருக்கும் இடத்தில் கலகலப்புக்கு பஞ்சம் இருக்காது… ஏதாவது செய்து எல்லாரையும் சிரிக்க வைத்து விடுவாள். அவள் படுக்கையில் இதற்கு முன்னால் சில நாட்கள் காய்ச்சல் வந்து படுத்து இருக்கிறாள் தான். ஆனால் அப்பொழுதெல்லாம் அவள் இப்படி அமைதியாக இருந்தது இல்லை. உடம்பு சரி இல்லாவிட்டாலும் எதையாவது பேசி சிரித்துக் கொண்டிருப்பாள்.
ஆனால் இப்பொழுது நிலைமை அப்படி இல்லையே… அவளது உடலோடு சேர்த்து மனமும் அல்லவா காயப்பட்டு இருக்கிறது.
அவளிடம் பேசி விட்டு சென்ற பிறகு அவளது அப்பாவின் நடவடிக்கைகளை ஆராய்ச்சியாக பார்த்தாள்.
இரண்டு நாட்களாக அவர் அதிகம் பேசாதது மட்டும் இல்லாமல் ஹாலில் மாட்டி இருந்த அண்ணாமலையின் புகைப்படத்திற்கு எதிரில் அமர்ந்து கொண்டு வெகுநேரம் தந்தையின் போட்டோவையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். சிவநேசனின் கண்கள் போட்டோவில் இருந்த தந்தையிடம் மன்னிப்பை யாசித்துக் கொண்டிருந்தது. தந்தையின் கலக்கத்தை காணப் பிடிக்கவில்லை அவளுக்கு.
படுக்கையில் இருந்தவாறே தீவிரமாக யோசித்தாள் அருந்ததி.
சாப்பாடு கொடுக்க வந்த அன்னையிடம் மெதுவாக பேச்சுக் கொடுத்தாள்.
“அம்மா… அப்பா ஆபிசுக்கு போயாச்சா?”
“இன்னும் இல்லை பாப்பா… ரெண்டு நாளா அவர் முகமே சரியில்லை.. சரியா சாப்பிடவும் இல்லை… பேசவும் இல்லை… உன்னை நினைச்சு தான் கவலைப்படுறார் போல…” என்று அன்னை கூறினாலும் அருந்ததியால் தந்தையின் கவலைக்கான காரணத்தை ஊகிக்க முடிந்தது.
அவளை தந்தை வருந்துவதா? அதற்கு ஏதோ ஒரு வகையில் அவளும் காரணம் என்ற எண்ணமே அவளை நெருஞ்சி முள்ளாக குத்தத் தொடங்கியது.
“அம்மா… அப்பாவை கொஞ்சம் இங்கே வர சொல்லுங்களேன்’’ என்று சொன்னவள் படுக்கையில் இருந்த தலையணையில் சாய்ந்து அமர்ந்து கொண்டாள்.
“என்ன பாப்பா? எதுவும் வேணுமா? வலி எதுவும் இருக்கா? டாக்டரை வர சொல்லட்டுமா?” என்று கனிவுடன் பேசிய தந்தையின் கரங்களை பிடித்துக் கொண்டவள் மென் குரலில் பேசத் தொடங்கினாள்.
“ அப்பா… நா… எ… எனக்கு அவரோட போன் நம்பர் வேணும் பா… உங்ககிட்ட இருக்கா?”
“ யாரோடது…” என்று கேட்கும் பொழுதே மகள் யாரைப் பற்றி கேட்கிறாள் என்பது புரிந்து விட , கேள்வியாக மகளின் முகம் பார்த்தார்.
“அதுதான் முடிஞ்சு போச்சே பாப்பா… மறுபடியும் ஏன் தொடர நினைக்கிற..”அவர் முகத்தில் இருந்த வேதனை மகளின் கண்களுக்கு தப்பவில்லை.
“இல்லைப்பா… நானும் யோசிச்சு பார்த்தேன்… அவர் அவரோட ஆசையைத் தானே சொன்னார்… அதுல என்ன தப்பு இருக்கு… எனக்கு அவரோட கண்டிஷனுக்கு முழு சம்மதம் அப்பா… நீங்க மேற்கொண்டு என்ன செய்யணுமோ செய்ங்க…”
“வேண்டாம் பாப்பா… அந்த பையன் நடவடிக்கை எதுவும் எனக்கு சரியா பிடிக்கலை… உன் மேலே அக்கறை இருக்கிற மாதிரியே இல்லை…” என்றவரின் குரல் கரகரத்தது.
“அது எப்படிப்பா இருக்கும்… நான் இப்போ வரை அவருக்கு யாரோ ஒரு பெண்… அவ்வளவு தானே? நாளைக்கு கல்யாணம் ஆன பின்னாடி அப்படி அலட்சியமா இருக்க மாட்டார்னு எனக்குத் தோணுதுப்பா…”
“பாப்பா… விளையாடாதே.. போலீஸ் ஆகிறதுனா ஒண்ணும் சாதாரணம் இல்லை.. அதுக்கு நிறைய பயிற்சி வேணும்…ரொம்ப கஷ்டப்படணும்… உன் உடம்பு பூ மாதிரிடா… உன்னால் தாங்க முடியாது” என்று மறுத்துப் பார்த்தார் சிவநேசன்.
“அப்பா… ப்ளீஸ்! நான் வரும் வாரத்தில் இருந்து ட்ரைனிங் ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்…”
“பாப்பா… அப்பாவுக்காக இதை செய்றியா?” என்று கேட்டவரின் கண்கள் மகளின் கண்களை உற்றுப் பார்க்க… தலையை குனிந்து கொண்டாள் அருந்ததி.
“அப்படி ஏன் நினைக்கறீங்க அப்பா? எனக்கே அவரை ரொம்ப பிடிச்சு இருக்கிறதால கூட அப்படி செய்யலாம் இல்லையா?” என்ற அவளின் அமைதியான பதிலில் சிவநேசனுக்கு மகிழ்ச்சியானது.
என்ன பாப்பா சொல்ற? அந்த பையனை உனக்கு பிடிச்சு இருக்கா? நிஜமாவா ? அப்பா கிட்டே சொல்லிட்டே இல்ல… இனி நான் பார்த்துக்கிறேன்… அவன் …இல்லை இல்லை… அவர் தான் உனக்கு மாப்பிள்ளை.. நீ ஓய்வெடு பாப்பா.. இனி எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன்” என்று சொன்னவர் உற்சாகத்தோடு அறையை விட்டு செல்ல தந்தையின் முதுகையே சில நொடிகள் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவள் தந்தை கிளம்பும் பொழுது அவள் கையில் கொடுத்து விட்டு போன அவனது கார்டை எடுத்து அவனுடைய எண்ணுக்கு அழைப்பு விடுத்தாள்.
“ஹலோ…”அந்த குரலின் கம்பீரத்தில் ஈர்க்கப் பட்டவள் இதழ் சுளித்து தேன் குரலில் அவனிடம் பேசினாள்.
“ஹலோ… ஃபயர் ஆபிசுங்களா?” குரலில் பவ்யத்துடன் கேட்க…
“வாட்… சாரி ராங் நம்பர்”
“எல்லாம் ரைட் நம்பர் தான் நெருப்பு… அக்னினா நெருப்பு தானே?” என்று ஒன்றுமறியாக் குரலில் அவள் பேச… எதிர்முனையில் அவன் பல்லைக் கடிப்பது அவளுக்கு நன்றாகவே கேட்டது.
“ஹலோ யார் நீ? யார்கிட்டே பேசுறன்னு தெரிஞ்சு தான் பேசறியா?”அவன் குரலில் இருந்தே அவனது ஆத்திரத்தின் அளவை அவள் உணர.. அவள் நெஞ்சம் குதூகலித்தது.
“எனக்குத் தெரியும் நெருப்பு… உங்களுக்குத் தான் நான் யாருன்னு தெரியலை… அது தான் இப்படி செய்ய கூடாததை எல்லாம் செஞ்சு என்கிட்டே வசமா மாட்டிக்கிட்டீங்க” என்றவளின் நக்கல் குரலில் அவனது கோபம் இன்னும் அதிகரித்தது.
“ஏய்!… யார் நீ?”
“அய்யோ…. கோபத்தை பாரேன் என் ராசாவுக்கு… நானும் உங்களை மாதிரி தான்… தீ… அருந்ததீ…” என்று கித்தாய்ப்பாக சொல்லி முடிக்க.. அந்தப் பக்கம் எந்த சத்தமும் இல்லை.
“ஹலோ… லைனில் இருக்கீங்களா?”
“எதுக்காக எனக்கு போன் செஞ்ச??” அவன் குரலில் இருந்த அடக்கப்பட்ட ஆத்திரத்தை உணர்ந்து கொண்டாள்.
“வரும் வாரத்தில் இருந்து நம்ம ட்ரைனிங் ஆரம்பிக்கலாம்… இடம், நேரம் எல்லாம் உங்க விருப்பம்…”
…..
“ஹலோஓஓஓஓ”
“யூ மீன்…”
“ஐ கருவாடு…”
“ஏய்!….”
“அதே தான் நெருப்பு சார்… நம்ம கல்யாணம் நடக்கப் போகுது… அதுக்கு நீங்க சொன்ன கண்டிஷன் எனக்கு ஓகே… அடுத்த வாரத்தில் இருந்து நீங்க ஏற்கனவே சொன்ன மாதிரி ட்ரைனிங்கை ஆரம்பிக்கலாம்” என்று அவள் அமர்த்தலான குரலில் சொல்ல… அக்னிபுத்திரன் அதிர்ந்து போய் இருந்தான்.
“அப்புறம் ஒரு முக்கியமான விஷயம்.. ட்ரைனிங்க்கு வரும் பொழுது… கார்ப்பரேஷன் ஆள் மாதிரி நாயோட வராம… மிலிட்டரி மேன் மாதிரி தனியா வாங்க… வச்சிடட்டுமா நெருப்பு” என்றவள் அந்தப் பக்கம் அவன் கத்துவதை கேட்டதும் திருப்தியான மனதுடன் போனை வைத்து விட்டாள்.
‘நெருப்பு… இனி இருக்கு உனக்கு ஆப்பு’ என்று எண்ணத்துடன் அடுத்து செய்ய வேண்டிய வேலைகள் குறித்து சிந்திக்கத் தொடங்கினாள் அருந்ததி.
ஷாக்கடிக்கும்….
Superb. Let’s see what happens.
தேங்க்ஸ் மா
Nice ud sis… Very Swt aru kutty ???