மின்மினியின் மின்சார காதலன் 23 tamil novels

0
394

அத்தியாயம் 23
அன்றைய தினம் கண்ணன் பெரும்பாலும் அறையிலேயே தான் இருந்தான். உணவு உண்ண மட்டுமே அறையை விட்டு வந்தவன் உண்டதும் வேகமாக அறைக்குள் சென்று புகுந்து கொண்டான். அருந்ததி கூட அவனது நடவடிக்கைளைப் பார்த்து அவனை கேலி பேசினாள்.
“என்னடா கண்ணா வயசுக்கு வந்த பொண்ணு மாதிரி எப்பவும் ரூமுக்குள்ளேயே அடைஞ்சு கிடக்குற?”
என்னவென்று பதில் சொல்வான் அவன். வெளியே பாவமாக பார்க்க மட்டும் தான் முடிந்தது. அக்னி செய்யும் அலப்பரைகளை எல்லாம் வெளியே சொல்லத் தான் முடியுமா?
சொன்னால் யாரும் நம்புவார்களா இல்லையா என்பது ஒருபுறம் இருக்க, கண்ணனுக்கே கொஞ்சம் சந்தேகமாக இருந்தது. அக்னி இதை எல்லாம் வேண்டுமென்றே தான் செய்கிறானோ என்று.
அவனது போலீஸ் மூளை கொஞ்சம் விழிப்படைந்து எதையாவது யோசிக்கும் நேரம் அங்கே ஆஜராகி மொத்த குட்டையையும் ஒற்றை கண் சிமிட்டலில் குழப்பி விடுவான் அக்னி.
கண்ணனை யோசிக்கவே விடாமல் அவனை சீண்டிக் கொண்டிருந்தான். அக்னியைப் பொறுத்தவரை அவன் அருந்ததி வீட்டை சேர்ந்த எல்லோரையும் தன்னுடைய சந்தேக வட்டத்தின் உள்ளே கொண்டு வந்திருந்தான்.
அந்த வீட்டைப் பற்றி நன்கு அறிந்த யாரோ தான் இதை எல்லாம் செய்கிறார்கள் என்று அவனுக்கு தோன்றியது.
அருந்ததிக்கு ஏதேனும் ஆபத்து உண்டாக்குவதால் யாருக்கு என்ன லாபம் இருக்கக்கூடும் என்று யோசித்தான். ஒருவேளை அவள் உயிருக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்தால் அதன் மூலம் யாருக்கேனும் ஆதாயம் இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ள நினைத்தான்.
அதைப் பற்றியும் பேசி தெளிவு படுத்திக் கொள்வதற்குத் தான் உண்மையில் அவன் மறுவீட்டிற்கு வர சம்மதித்ததே. மாலை நேரத்தில் இதைப் பற்றி பேசலாம் என்ற எண்ணத்துடன் அவன் சிவநேசனை மட்டும் தனியே அழைத்து அவரது ஆபிஸ் ரூமில் பேசத் தொடங்கினான்.
“இதோ பாருங்க … நான் சுத்தி வளைச்சு பேச விரும்பலை… உங்க பொண்ணு உயிருக்கு ஆபத்து இருக்கிற விஷயம் உங்களுக்கு தெரியும் தானே?”
“தெரியும் மாப்பிள்ளை. அதனால தானே அவசர அவசரமா உங்க கல்யாணத்தை நடத்தி வச்சேன்”
“நேத்து யாரோ சிலர் வெளியே போயிருந்த உங்க பொண்ணை கடத்த முயற்சி செஞ்சாங்க… அது தெரியுமா உங்களுக்கு?” என்று கேட்க அவரோ பதறினார்.
“அய்யோ.. மாப்பிள்ளை என்ன சொல்றீங்க? எனக்கு எதுவுமே தெரியாது. பாப்பாவும் என்கிட்டே இதைப் பத்தி ஒண்ணுமே சொல்லலை”
“ஆளை பிடிச்சாச்சு… விசாரிச்சுட்டு இருக்கேன். ஆனா வாயை திறக்க மாட்டேங்கிறாங்க”என்றான் கொஞ்சம் எரிச்சலுடன்.
“நாம வேணும்னா போலீசில் சொல்லி பாப்பாவுக்கு பாதுகாப்புக்கு ஆள் போடலாமா மாப்பிள்ளை”
“அப்படி செஞ்சா வாழ்க்கை முழுக்க உங்க பொண்ணை பாதுகாத்துக்கிட்டே இருக்க வேண்டியது தான்” என்றான் சுள்ளென்று
“இப்போ என்ன செய்றது மாப்பிள்ளை?” கெஞ்சல் தொனியில் கேட்டவரின் மீது கொஞ்சம் இரக்கம் வந்தது அவனுக்கு.
“அவன் யாருன்னு தெரியணும்னா இரண்டே வழி தான் இருக்கு. ஒண்ணு கிடைச்ச ஆதாரத்தை எல்லாம் வச்சு கொஞ்சம் கொஞ்சமா அவனை நெருங்கணும். இல்லைனா உங்க பொண்ணை அவன் நெருங்கிறதுக்கு நாமளே வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்து அவனை பொறி வச்சு பிடிக்கணும். எனக்குத் தெரிஞ்சு இரண்டாவது ஐடியா தான் சரியா வரும்.”
“என்ன மாப்பிள்ளை சொல்றீங்க? நீங்க அவளை பாதுகாப்பா பார்த்துப்பீங்கன்னு நினைச்சேன்” குற்றச்சாட்டு இருந்தது அவர் குரலில்.
“இதோ பாருங்க… மறுபடி மறுபடி என்னை சொல்ல வைக்காதீங்க. உங்க பொண்ணுக்கு இருபத்து நாலு மணி நேரமும் என்னால் காவல் காத்துக்கிட்டே இருக்க முடியாது. சீக்கிரமா ஆளைக் கண்டுபிடிச்சு அவனை தூக்கியாகணும்”
“அதுக்கு என்ன செய்யப் போறீங்க மாப்பிள்ளை” அவர் குரலில் கொஞ்சம் பயமும், தவிப்பும் தெரிந்தது.
“சொல்றேன்… அதுக்கு முன்னாடி என்னோட கேள்விக்கு பதில் சொல்லுங்க… உங்க சொத்து எல்லாம் யார் பேர்ல உயில் எழுதி இருக்கீங்க?”
“பாப்பா பேர்ல தான்… கோகிலா மேலயும் சில சொத்துக்கள் இருக்கு. அவ காலத்துக்கு அப்புறம் அதுவும் பாப்பாவுக்குத் தான் வரும்.”
“ஒருவேளை உங்க பொண்ணுக்கு ஏதாவது ஆச்சுன்னா அதனால யாருக்காவது லாபம் இருக்கா?”
“புரியலை மாப்பிள்ளை…”
“உங்க பொண்ணு இறந்துட்டா அதுக்கு அப்புறம் இந்த சொத்து எல்லாம் யாருக்குப் போகும்”
“எங்களுக்குப் பிறகு இந்த சொத்தெல்லாம் அனாதை ஆசிரமத்துக்குத் தான் போகும்” என்றார் தெளிவாக.
“ஸோ… சொத்துக்காக யாரும் எதுவும் செய்ய வாய்ப்பில்லை…”
“…”
“உங்க வீட்டு மேலயோ… உங்க பொண்ணு மேலயோ யாராவது கோபத்தில் இருக்காங்களா?”
“அ… அப்படி யா… யாரும் இல்லை மாப்பிள்ளை” என்றவரின் பார்வை தரையில் இருக்க… அக்னியின் பார்வை அவரை ஆராய்ந்தது.
எதையோ மறைக்கிறாரோ என்ற சந்தேகம் எழுந்தது அவனுக்கு.
“என்கிட்டே எதையாவது மறைக்கறீங்களா?”
“அ… அப்படி எல்லாம் எதுவும் இல்லை மாப்பிள்ளை” என்று சொன்னவரை ஏனோ அவன் மனம் நம்ப மறுத்தது.
“உங்க பொண்ணு உயிர் சம்பந்தப்பட்ட பிரச்சினை இது. அதுல விளையாடவோ, மறைக்கவோ மாட்டீங்கன்னு நம்புறேன்” என்றவன் விருட்டென்று எழுந்து விட சிவநேசன் வெகுநேரம் அந்த அறையிலேயே இருந்து விட்டார்.
அவர் எதையோ மறைக்கிறார் என்று அவன் உள் மனது அழுத்தமாக நம்பத் தொடங்க , அவனுக்கு உண்மையில் ஆத்திரம் வந்தது. உண்மையை சொன்னால் தானே தான் ஏதாவது செய்ய முடியும். மூடி மறைப்பதால் அருந்ததியின் உயிருக்குத் தானே ஆபத்து. இது கூட புரியாமல் என்ன மனிதர் இவர்? இது குறித்து யாரிடம் கேட்பது என்று எண்ணியவன் பார்வையை எதேச்சையாக திருப்ப, ஹாலில் இருந்த அருந்ததி அவன் பார்வையில் பட்டாள்.
யாருக்கும் தெரியாமல் ஏதோ திருட்டுத்தனம் செய்பவளைப் போல பதுங்கி பதுங்கி, முன்னும் பின்னும் திரும்பி பார்த்துக் கொண்டே நடந்தவளைப் பார்த்தவன் அருகில் இருந்த தூணின் பின்னால் ஒளிந்து கொண்டான்.
‘என்ன செய்யப் போறா?’ என்று மறைவில் இருந்து எட்டி வெளியே பார்த்தவன் தலையில் அடித்துக் கொண்டான்.
பிரிட்ஜ்ஜில் இருந்து கேக்கை எடுத்தவள் யாரும் அறியாமல் அதன் பக்கவாட்டில் அமர்ந்து வேகமாக உண்ணத் தொடங்கினாள்.
“சை! சரியான சோத்து மூட்டை… இங்கே எவ்வளவு பெரிய பிரச்சினை நடக்குது… அதைப் பத்தி எல்லாம் கொஞ்சம் கூட பயமே இல்லாம பொழுதுக்கும் தின்னுக்கிட்டே இருக்குறா பாரு. அவங்கப்பா அப்படி… இவ இப்படி.. இவங்களுக்கு நடுவுல நான் மாட்டிக்கிட்டு முழிக்க வேண்டியதா இருக்கு. இன்னிக்கு இவளை” என்று ஆத்திரத்தில் பல்லைக் கடித்தவன் வேகமாக அவள் முன்னே சென்று நின்றான்.
அந்த நொடி அவனை எதிர்பாராதவள் வாயில் இருந்த கேக்கை முழுங்க முடியாமல் அவனையே திருட்டுப் பார்வை பார்த்தாள். கையில் இருந்த கேக்கையும் மறைக்க முடியாமல் பரிதாபமாக பார்க்க அக்னியோ அவளை தீயென முறைத்தான்.
“உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா ? இல்லையா? உன்னை சுத்தி எவ்வளவு பிரச்சினை நடக்குது.. உனக்கு எதுவும் ஆகிடக் கூடாதுன்னு நான் எவ்வளவு வேலை செய்றேன் உன்னை பாதுகாக்க… ராத்திரி, பகல் தூக்கம் முழிச்சு, உடம்பை வருத்தி… ஆனா உனக்கு அதைப் பத்தி எல்லாம் கொஞ்சமும் கவலையே இல்லை அப்படித் தானே?
யார் எப்படிப் போனா எனக்கென்னன்னு மூணு வேளைக்கு பதிலா ஆறு வேளையும் கொட்டிக்குற… இல்ல நான் தெரியாமத் தான் கேட்கிறேன். சோறு திங்குறத தவிர உனக்கு எதுவுமே தெரியாதா? எப்பப்பாரு சோறு சோறு… நல்லா அண்டாலயும், குண்டாவுலயும் தின்னுத் தின்னு நீயும் அதே சைசில் தான் இருந்து தொலைக்கிற.
அப்படி என்ன பொம்பளைக்கு வாய் அடக்கம் இல்லாம சோறு கேட்குதுன்னு கேட்கிறேன். வயித்தை அடக்கவே முடியலை… அவ்வளவு தூரம் உனக்கு நாக்கு ருசி கேட்குது. கொஞ்சம் கம்மியா சாப்பிட்டா என்ன செத்தா போய்டுவ. சை! நீயும் ஒரு ஜென்மம்னு… உன்கிட்டே பேசுறதே வேஸ்ட். எப்படியும் மறுபடியும் இதே வேலையைத் தான் செய்யப் போற…நல்லா கொட்டிக்கோ…
போ… என் மூஞ்சிலயே முழிக்காதே.. என்ன பாவம் செஞ்சேனோ.. இப்படி ஒருத்தியை என் தலையில் கட்டி வச்சுட்டாங்க. திங்குறத தவிர வேற ஒண்ணும் தெரியாது.வேற எதுக்கும் லாயக்கும் இல்லை. சை!”
மாமனார் மீது காட்ட முடியாத கோபத்தை எல்லாம் மனைவியின் மீது கொட்டித் தீர்த்தவன் அழுகையை அடக்க உதடு கடித்து போராடியவாறு நின்ற மனைவியவளை திரும்பியும் பாராமல் வெளியே சென்று விட்டான்.
கையில் இருந்த கேக்கை மௌனமாக ஒரு பார்வை பார்த்தவள் அப்படியே எடுத்து ப்ரிட்ஜினுள் வைத்து விட்டு தன்னுடைய அறைக்குள் சென்று விட்டாள்.
கோபத்தோடு வீட்டு தோட்டத்தில் அக்னி உலாவிக் கொண்டிருக்க, அப்பொழுது தான் அவனுக்கு போன் வந்தது. அவன் வீடு தீப்பிடித்து எரிந்து கொண்டிருப்பதாக… யாரிடமும் சொல்லக் கூட தோணாமல் அங்கிருந்த காரை எடுத்துக் கொண்டு மின்னல் வேகத்தில் பயணித்தான்.
போகும் வழியில் காரை ஒட்டிக் கொண்டே சிவநேசனுக்கு மொபைலில் தகவலை சொல்லி விட்டான். அவரும் அவன் பின்னோடு அடித்து பிடித்து ஓடி வந்தார்.
அவர்கள் வந்து சேரும் முன் அவன் வீட்டில் எரிந்து கொண்டிருந்த தீ அணைக்கப்பட்டு இருந்தது.
நல்லவேளையாக பகல் வேளையில் நடந்ததால் உடனடியாக மற்றவர்கள் பார்வைக்கு வந்து பெரும் சேதாரம் ஆகாமல் தப்பி விட்டது அவன் வீடு. வீட்டின் பின் பகுதி கால் வாசி மட்டும் எரிந்து போய் இருந்தது. போலீஸ் வேறு வந்து விசாரணை செய்து கொண்டிருந்தார்கள். இவனைப் பார்த்ததும் எல்லோர் கவனமும் இவன் பக்கம் திரும்பியது.
பரஸ்பர அறிமுகத்திற்குப் பின் மெல்ல விசாரணையை தொடங்கினார்கள்.
“ஏன் சார் சிலிண்டரை ஆப் பண்ண மறந்துட்டீங்களா?”
“இன்னிக்கு காலையிலேயே வீட்டில் கேஸ் தீர்ந்து போச்சு இன்ஸ்பெக்டர்” என்று நிதானமாக சொன்னவனை இன்ஸ்பெக்டர் கூர்மையாக அளவிட்டார்.
“யூ மீன்?”
“எஸ்… எனக்கும் சந்தேகமாகத் தான் இருக்கு. எதுக்கும் சிசிடிவி புட்டேஜ் செக் பண்ணிட்டு சொல்றேன்… நீங்களும் வாங்க” என்று சொல்லி விட்டு முன்னே நடக்க, அவர்களுடன் சிவநேசனும் சேர்ந்து கொண்டார்.
“நீங்க இங்கேயே இருங்க” என்று அவரை நிறுத்தி விட்டு இன்ஸ்பெக்டரை மட்டும் உடன் அழைத்துக் கொண்டு சென்றான்.
அக்னி தன்னை மட்டும் வெளியே நிறுத்தியதில் அவரின் முகம் கூம்பிப் போனது. அதை அறிந்தாலும் அவன் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.
அவன் வீட்டு சிசிடிவியின் ஹார்ட் டிஸ்க் காணாமல் போய் இருக்க இன்ஸ்பெக்டர் தீவிர சிந்தனையில் ஆழ்ந்தார்.
அக்னி வெளியே தெரியாவண்ணம் தனக்குள் புன்னகைத்துக் கொண்டான்.
“என்ன சார் யாரோ வேணும்னு செஞ்ச மாதிரி இருக்கு”
“மாதிரி எல்லாம் இல்லை… உறுதியா என்னை பயமுறுத்திப் பார்க்க செஞ்சு இருக்காங்க.”
“உங்களுக்கு யார் மேலயாவது சந்தேகம் இருக்கா?”
‘வெளியே நிற்கிறாரே அவர் மேல தான் சந்தேகமா இருக்கு’ என்று நினைத்தவன் வெளியே அதை சொல்லவில்லை.
“யாருன்னு சரியா தெரியலை சார்… பட் கொஞ்ச நாளா இப்படி நடக்குது” என்றவன் பேசிக் கொண்டே வெளியேற இன்ஸ்பெக்டரும் போனை எடுத்து யாருடனோ பேசியபடி வெளியே சென்று விட்டார்.
பதட்டமாக வந்த மாமனாரை கண்டும் காணாதவன் போல வீட்டை சுற்றிலும் பார்வையை செலுத்தினான்.
வீட்டின் பின் பகுதி தான் எரிந்து இருந்தது.
‘நல்லவேளை நீமோவை என்னோட அழைச்சுட்டு போயிட்டேன். இல்லேன்னா அவனை ஏதாவது செஞ்சு இருப்பாங்க’ என்று எண்ணி பெருமூச்சை வெளியேற்றினான்.
அவனது பார்வையை தப்பாக கணித்த சிவநேசன் மெல்ல அவனிடம் பேச்சுக் கொடுத்தார்.
“ரொம்ப எரிஞ்சுடுச்சா மாப்பிள்ளை?”
“….”
“வீட்டை இன்சூர் பண்ணி இருக்கீங்களா?”
“உங்க பொண்ணை கல்யாணம் செய்றதா முடிவான உடனே எனக்கும், என் வீட்டுக்கும் பாலிசி போட்டேன். அவ கழுத்தில தாலி கட்டின பிறகு எப்போ எந்த விதத்தில ஆபத்து வரும்னு சொல்ல முடியாதே” அவருக்கு வலிக்க வேண்டுமென்றே நறுக்கென்று பேசினான்.
எதிர்பார்த்ததைப் போலவே அவர் முகம் கூம்பிப் போனது.
‘இவர் பொண்ணுக்காக நான் என்னோட லைப்பை ரிஸ்க் எடுக்கணுமாம். இவர் மட்டும் கல்லுளி மங்கன் மாதிரி வாயே திறக்க மாட்டாராம்’
“யார் செஞ்சதுன்னு எதுவும் கண்டுபிடிக்க முடிஞ்சதா மாப்பிள்ளை”
“ம்ச்! தெரியலை…”
“சிசிடிவில எதுவும் தெரியலையா?”
“இல்லை…”
“இப்போ என்ன செய்றது மாப்பிள்ளை” என்று கேட்டவரை மேலும் கீழுமாக ஒரு பார்வை பார்த்தான்.
“முனியாண்டி விலாஸ் போய் பிரியாணி சாப்பிடப் போறேன்” என்றவன் திகைத்து நின்றவரை சட்டை செய்யாது கிளம்பி விட்டான்.
சிவநேசனுக்கு உள்ளுக்குள் குற்ற உணர்வு முள்ளாய் உறுத்தியது.
அவரின் மனசாட்சி அவரை குத்திக் கிழிக்க அக்னியின் வீட்டை சரி செய்வதற்காக அவர் ஆட்களை வரவழைத்தார். அதற்குள் அக்னியின் கம்பெனி ஆட்கள் வந்து வீட்டை தங்கள் பொறுப்பில் எடுத்துக் கொண்டு எல்லாவற்றையும் சரி செய்யத் தொடங்கினார்கள்.
அக்னியின் கோபம் அவருக்கு புரிந்தது. தன்னுடைய உதவியை ஏற்கவும் அவன் தயாராக இல்லை என்பது உறைக்க, அவனை எப்படி சமாதானம் செய்வது என்று தான் அவருக்கு புரியவில்லை. அவர் மறைப்பது அவர் குடும்பப் பெயர் கேட்டு விடக் கூடாது என்பதற்காகத் தானே.
‘விஷயம் வெளியே தெரிந்தால் எவ்வளவு அசிங்கம்.’
அக்னி வீட்டைக் காரணம் காட்டி அங்கேயே தங்கி விட சிவநேசன் அங்கே தன்னுடைய தேவை அக்னிக்கு இல்லை என்பது தெளிவாக புரிய, சோர்ந்த மனதுடன் கிளம்பி விட்டார்.
அவர் செய்ய முன் வரும் எந்த உதவியையும் அக்னி மறுக்க, பெரும் பணக்காரர் சொந்த மருமகனுக்கு உதவ முடியா சூழலை அறவே வெறுத்தார்.
தொடர்ந்து மகள் வாழ்வில் பிரச்சினை மேல் பிரச்சினை வருகிறதே என்று எண்ணி கலங்கிய கோகிலா மகளை விடுத்து தான் மட்டுமாக கிளம்பி சொந்த ஊரில் இருக்கும் குல தெய்வ கோவிலுக்கு கணவரிடம் சொல்லி விட்டு கிளம்பி விட்டார்.
அருந்ததியை தற்பொழுது இருக்கும் சூழலில் வெளியே எங்கேயும் அழைத்து செல்ல வேண்டாம் என்று ஏற்கனவே அக்னி அறிவுறுத்தி இருக்க கோகிலா மனம் தாங்காமல் கிளம்பி சென்று விட்டார்.
கண்ணனும் அக்னி ஊருக்கு திரும்பும் முன் தன்னுடைய ஊருக்கு தப்பி ஓடிவிட வேண்டும் என்று எண்ணி அவனும் தன்னுடைய ஊருக்கு கிளம்பி விட்டான்.
சிவநேசனோ அக்னியிடம் சொல்வதா வேண்டாமா என்ற குழப்பத்தில் தன்னையே மறந்து மூழ்கி இருந்தார். இப்படி ஒவ்வொருவரும் வீட்டை விட்டு தனியே சென்று விட்டார்கள். ஆனால் அதன் விளைவு யாருமே எதிர்பாராத ஒன்று.
கோகிலா பூஜை முடிந்து ஒரு நாள் கழித்து வீட்டுக்கு வந்தவர் முதலில் மகளுக்கு பிரசாதம் கொடுத்து விட்டு, மந்திரித்த கயிறையும் கட்டி விட எண்ணி அவளது அறைக்கு செல்ல, அருந்ததியோ அங்கே தரையில் அலங்கோலமாக கிடந்தாள்.

Free download novels
Madhumathi Bharath
Facebook Comments Box
What’s your Reaction?
+1
5
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here