அத்தியாயம் 24
வீடே அதிரும்படி அலறினார் கோகிலா. அவரின் சத்தம் கேட்டு ஓடி வந்த சிவநேசனுக்கும் அதிர்ச்சியாகத் தான் மகள் இருந்த கோலம். என்ன ஏதேன்று புரியாமல் சில நொடிகள் குழம்பியவர் வேகமாக மருத்துவமனைக்கு மகளை தூக்கி சென்றார். மருத்துவமனை சென்றதும் அவளது நாடியை சோதித்த மருத்துவர் இருவரையும் சரமாரியாக திட்டத் தொடங்கினார்.
“இப்படியா கேர்லஸ்ஸா இருப்பீங்க? உங்க பொண்ணுக்கு பல்ஸ் ரொம்ப வீக்கா இருக்கு” என்று கடிந்து கொண்டு அவளுடன் சிகிச்சை செய்யும் அறைக்குள் செல்ல, வெளியே கோகிலா கணவரை திட்டித் தீர்த்து விட்டார்.
“ஒரு நாள் தானேங்க உங்க பொறுப்பில் விட்டுட்டு போனேன். என் பொண்ணை இந்த கதிக்கு ஆளாக்கி வச்சு இருக்கீங்களே? இவளைப் பார்க்கிறதை விட அப்படி என்னங்க உங்களுக்கு வேலை முக்கியமா போச்சு. வெளியே எதுவும் போனீங்களா?”
“இ… இல்லை கோகிலா.. நான் வீட்டில தான் இருந்தேன்…”
“பாப்பாவுக்கு வேணும்கிறது எல்லாம் சாப்பிட கொடுத்தீங்களா இல்லையா?”
“வே…வேலைக்காரி கிட்டே சொல்லி இருந்தேன் கோகிலா”
“இது என்ன பதில்? நான் உங்களை நம்பி தானே அவளை வீட்டில விட்டுட்டு போனேன். நீங்க என்னடான்னா வேலைக்காரி மேல பழியை போடறீங்க? அவ கூட கடைசியா எப்போ சாப்பிட்டீங்க” என்று அழுத்தி கேட்க சிவநேசனின் தலை தானாய் தாழ்ந்தது.
“நான் எனக்கு வேண்டியதை ரூமுக்கு கொண்டு வந்து சாப்பிட்டுகிட்டேன் கோகிலா. வேலைக்காரி கிட்டே கேட்டதுக்கு பாப்பா வேணும்னா வந்து சாப்பிட்டுகிறேன்னு சொன்னதா சொன்னாங்க. அதான் நான்” என்று சொன்ன கணவரை முறைத்த கோகிலா பேச்சோடு பேச்சாக போனை எடுத்து முன்னரே அக்னிக்கு தகவல் கொடுத்து விட்டார்.
“மாப்பிள்ளை… உடனே கிளம்பி கொஞ்சம் *** ஹாஸ்பிடல் வாங்க… பாப்பாவை அட்மிட் செஞ்சு இருக்கோம்”
“…”
“காயமெல்லாம் எதுவும் இல்லை மாப்பிள்ளை. நான் காலையில் ரூமுக்கு போய் பார்த்தப்போ மயங்கி விழுந்து இருந்தா. எனக்கு எதுவுமே புரியல. ஹாஸ்பிடல் தூக்கிட்டு வந்துட்டோம். டாக்டர் செக் பண்ணிட்டு இருக்கார். எனக்கு பயமா இருக்கு. நீங்க கொஞ்சம் கிளம்பி வர்றீங்களா?” என்று அவனிடம் தவிப்புடன் பேசி விட்டு போனை வைத்து விட குற்ற உணர்வு அதிகரித்தது சிவநேசனுக்கு.
“கோகி…”
“ஒரு வார்த்தை பேசாதீங்க” என்று ஆத்திரமாய் சொல்லி விட்டு சற்று தள்ளி போய் அமர்ந்து கொண்ட மனைவியை எப்படி சமாதானம் செய்வதென்று தெரியாமல் மலைத்துப் போனார் சிவநேசன்.
மருத்துவர் அறையை விட்டு வெளியே வருவதற்கும். அக்னி வருவதற்கும் சரியாக இருந்தது. புயல் வேகத்தில் கிளம்பி வந்திருந்தான் அவன். ஊருக்கு கிளம்பும் முன் அவளை திட்டியது வேறு ஏற்கனவே அவன் மனதை போட்டு வாட்டி எடுத்துக் கொண்டிருந்தது.
“அவங்க கடைசியா எப்போ சாப்பிட்டாங்க?” என்று கேட்க சிவநேசன் பதில் தெரியாமல் முழித்தார்.
அக்னியும், கோகிலாவும் அவர் முகத்தை வைத்தே பதிலை அறிந்து கொண்டார்கள். எனினும் மருத்துவர் முன் எதையும் பேச வேண்டாம் என்று அமைதி காக்க, அவரோ மூவரையும் பார்வையால் அளந்தார்.
“எனக்குத் தெரிஞ்சு இரண்டு நாளா அவங்க சரியா சாப்பிடலை… அதான் மயங்கி இருக்காங்க.” என்று சொல்ல சிவநேசன் வேகமாக பேசினார்.
“பாப்பாவை வீட்டுக்கு உடனே அழைச்சுட்டு போய்டலாமா சார்” என்று கேட்க அவர் தலை மறுப்பாக தலை அசைந்தது.
“ அவசரப்படாதீங்க… உங்க பொண்ணுக்கு சில டெஸ்ட் எடுத்து இருக்கோம். அதோட ரிப்போர்ட் வந்தா தான் எதையும் சொல்ல முடியும்” என்றவரின் கரத்தில் நர்ஸ் ஒருவர் சில பேப்பர்களை திணிக்க, அவற்றை பார்வையிட்டுக் கொண்டே தன்னுடைய அறைக்குள் நுழைந்து கொண்டார்.
“நான் நினைச்ச மாதிரி தான் இருக்கு… உங்க பொண்ணு எப்பவும் அதிகமா சாப்பிடுவாங்களா?”
“ஆமா டாக்டர்…” எதற்கு இப்படியொரு கேள்வி என்று புரியாமலே பதில் சொன்னார் கோகிலா.
“எப்போதிருந்து?”
“அவளுக்கு ஒரு பதினைஞ்சு வயசு இருக்கும். அதுக்கு அப்புறம் தான்”
“எப்பவும் சாப்பிட்டுக்கிட்டே இருப்பாங்களா? எவ்வளவு சாப்பிட்டாலும் பசிக்குது… வயிறு நிறையவே இல்லைன்னு சொல்வாங்களா?” என்று கேள்விகளை அதிகப்படுத்திக் கொண்டே போக எதிரில் இருந்த மூவருக்கும் பயம் தொற்றிக் கொண்டது.
“டாக்டர் இதெல்லாம் ஏன் கேட்கறீங்க? எனி ப்ரோப்ளம்?” அக்னி வெளியே பதட்டத்தை காட்டிக் கொள்ளாமல் கேட்டான். உண்மையில் டாக்டர் அவள் சாப்பிடாமல் உணவை தவிர்த்தது குறித்து சொல்லத் தொடங்கும் பொழுதே அவளது இந்த நிலைக்குத் தான் மட்டும் தான் முழுக் காரணம் என்ற உண்மை அவனது நெஞ்சை வாளால் கிழித்து உள்ளிறங்கியது.
“வெல்… இதை நீங்க எப்படி எடுத்துப்பீங்கன்னு தெரியலை. அவங்களுக்கு பிஞ்ஜி ஈட்டிங் டிஸ்ஆர்டர் (Binge eating disorder) இருக்கு”
“அப்படினா? என்ன டாக்டர்”மூவருக்கும் புரியவில்லை.
“ஹ்ம்ம்… இந்த வியாதி இருக்கிறவங்க எப்பவும் எதையாவது சாப்பிட்டுக் கிட்டே இருப்பாங்க. சாப்பிடாம இருந்தா இவங்களுக்கு பைத்தியம் பிடிச்சிடும். அந்த அளவுக்கு சாப்பிடுவாங்க. இதுதான்னு இல்லை. எது கிடைக்குதோ எல்லாத்தையும் சாப்பிடுவாங்க. அவங்களுக்கு இட்லி, தோசை, கம்மங்கூழ், பிரியாணி, எல்லாமே ஒன்னு தான். அவங்க ருசிக்காக சாப்பிடறவங்க இல்லை. பசிக்காக சாப்பிடறவங்க”
“சாப்பிடறது எப்படி டாக்டர் வியாதி ஆக முடியும்? நீங்க எதையோ தப்பா புரிஞ்சுக்கிட்டு சொல்றீங்க?”
“இதை புரிஞ்சுக்கிறது உங்களுக்கு கொஞ்சம் கஷ்டம் தான். ஆனா நிஜத்தை நீங்க ஏத்துக்கிட்டு தான் ஆகணும்” என்றார் அழுத்தத்துடன்
“இதுக்கு என்ன தீர்வு டாக்டர்” வருவித்த அமைதியான குரலில் கேட்டான் அக்னி.
“டயட், பாடி எக்ஸ்ஸர்சைஸ் இப்படித் தான் இதை கண்ட்ரோலுக்கு கொண்டு வர முடியும். அதுக்குன்னு எடுத்த உடனே ஹெவியா ஆரம்பிக்க வேண்டாம். அது இன்னும் ஆபத்துல கொண்டு போய் விட்டுடும்.” என்று சொல்ல அக்னிக்கு உள்ளுக்குள் எதுவோ வலித்தது.
ஆரம்ப நாட்களில் திருமணத்தை நிறுத்துவதற்கு அருந்ததிக்கு போலீஸ் ட்ரைனிங் கொடுக்கிறேன் என்ற பெயரில் மொட்டை வெயிலில் ஓட விட்டதும், அவளது உணவை அடியோடு மாற்றி அவளுக்கு கம்மங்கூழ் கொடுத்ததும், அதையும் அவள் பல முறை கேட்டு வாங்கி குடித்ததும் அவன் நினைவில் வந்து போனது.
அவள் சாப்பிடும் பொழுதெல்லாம் அவளை மனதுக்குள் திட்டியதும், உடலை வளைத்து உடற்பயிற்சி செய்ய முடியாத தருணங்களில் அவளை மனதுக்குள் இகழ்ச்சியாக நினைத்துக் கொண்டதும் இப்பொழுது மனகண்ணில் வந்து போனது.
கடைசியாக அன்றைய தினம் வாய்க்கு வந்ததை எல்லாம் சொல்லி அவளை திட்டிய பொழுது வாயில் ஓட்டி இருந்த கேக்கோடு அடிபட்ட குழந்தை போல கண்களில் வலியுடன் நின்ற அவளின் தோற்றம் கண் முன்னே வந்து செல்ல அவனுக்கு தன் மீதே ஆத்திரம் வந்தது.
ஆரம்பத்தில் இருந்தே அவனுக்கு தன் மேல் கோபம் எழுந்தாலும் சரி… வேறு யார் மேல் கோபம் எழுந்தாலும் சரி அதை எல்லாம் அவளிடம் தான் காட்டி இருக்கிறான்.
வலிக்கும்படி செய்தான். சில நேரம் உடலை… சில நேரம் மனதை…
யாரோ செய்தற்கு அவளை திட்டி என்ன பயன்? திருமணம் செய்து கொள்ளவே கூடாது என்று இவன் சபதம் எடுத்து இருந்தால் அதை காப்பாற்ற வேண்டிய பொறுப்பும் அவனுக்குத் தானே இருக்கிறது. அவனின் சபதத்துக்காக அவள் அவளது தந்தையின் பேச்சை மீறி நடக்க வேண்டும் என்று எதிர்பார்த்தது எவ்வளவு பெரிய முட்டாள்த்தனம்.
பெற்றவர்கள் இருவரும் உள்ளே நுழைந்து பார்த்து விட்டு வந்த பிறகு, வெகுவாக தயங்கிக் கொண்டே உள் நுழைந்தான்.
மருந்துகளின் உதவியுடன் தூங்கிக் கொண்டிருந்தாள். ஒரே நாளில் அவள் தோற்றத்தில் அப்படி ஒரு மாற்றம். கலைந்து போன ஓவியம் போல.
எப்பொழுதும் துள்ளித் துள்ளி ஓடிக் கொண்டே இருப்பவள் இன்று படுக்கையில்… மனதை பிசைந்தது அவனுக்கு.
‘அன்று அப்படி பேசி இருக்கக் கூடாதோ?
நீ சரியான முட்டாள்டா அக்னி’ இலட்சத்து பத்தாயிரத்து எட்டாம் முறையாக தன்னைத் தானே திட்டிக் கொண்டான்.
கோகிலா கணவர் மீதிருந்த கோபத்தில் அவரே எல்லா வேலைகளையும் செய்தார். மருந்து வாங்க கீழே செல்ல, மனைவியை சமாதானம் செய்யும் நோக்கில் சிவநேசனும் அவர் பின்னோடு சென்று விட்டார்.
அறைக்குள் அக்னியும், அருந்ததியும் மட்டும்.
அவன் பார்வை அவள் முகத்தை விட்டு எங்கும் நகரவில்லை. சந்தித்த முதல் நாளில் இருந்தே தன்னை சீண்டிக் கொண்டே திரிந்த அருந்ததி குறும்பு சிரிப்புடன் அவன் மனக்கண்ணில் வந்து போனாள்.
அவளுக்கு அருகில் சேரைப் போட்டு அமர்ந்தவன் அவள் கைகளை தன்னுடைய கைகளுக்குள் பொத்தி வைத்துக் கொண்டான்.
பஞ்சு போல இருந்த அவளின் உள்ளங்கை மென்மை அவனுக்கு ஜெனிபரின் கரங்களை நினைவூட்ட ஒரு நொடி அதிர்ந்து போனான்.
ஜெனிபருக்கும், இவளுக்கும் பெரிதாக எந்த வித்தியாசமும் இல்லை. இவளும் அவளைப் போல குழந்தை தான். கொஞ்சம் வளர்ந்த குழந்தை என்று எண்ணியவன் ஏதோ எண்ணத்தில் அவளது முகத்தருகில் கையை கொண்டு செல்ல, கதவு திறக்கும் சத்தம் கேட்டு சுய உணர்வுக்கு வந்தான்.
நேசமணி தான் உள்ளே வந்தார். அவரைப் பார்த்ததும் அவனது பிடிவாதம் மீண்டும் மலை மேல் ஏறி உட்கார்ந்து கொண்டது.
“என்னாச்சு தம்பி”
“ஹம்… ஒரு வியாதிக்காரியை என் தலையில் கட்டி வச்சு இருக்கீங்க… ஏற்கனவே இவளால தினம் தினம் பயந்து பயந்து வாழ வேண்டியதா இருக்கு. எந்த நேரம் எவன் கடத்துவானோ, எப்போ எவன் சாகடிப்பானோன்னு இருக்கு. இப்போ இது வேற… இந்த தொல்லைக்குத் தான் நான் கல்யாணமே வேண்டாம்னு இருந்தேன். என் பேச்சை எங்கே கேட்டீங்க… எல்லாரும் சேர்ந்து இவளை என் தலையில் கட்டிட்டீங்க… இப்போ நான் தான் அவஸ்தை படுறேன்.
பின்னே செஞ்ச பாவம் சும்மா விடுமா? உங்களை நம்பி ஜெனிபரை விட்டுட்டு போனேன்ல அதுக்கு நானும் கொஞ்சம் அனுபவிக்கணும் இல்லையா? எல்லாம் என் தலை எழுத்து. இப்போ எதுக்கு இங்கே வந்தீங்க? அதெல்லாம் குத்துக்கல்லாட்டம் நல்லா தான் இருக்கா…நல்லா நாலு ப்ளேட் பிரியாணி வாங்கி கொடுங்க. அது போதும்” என்று பேசிக் கொண்டே போனவனின் பேச்சு பாதியில் தடைப்பட்டது. அவரது பார்வை தன்னைத் தாண்டி தனக்கு பின்னே செல்வதைப் பார்த்து.
அவசரமாக திரும்பிப் பார்க்க, அருந்ததி கண் விழித்து அவனைத் தான் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
‘அச்சோ! எல்லாத்தையும் கேட்டு இருப்பாளோ? ம்ச்! டேய்! அக்னி மறுபடி மறுபடி அதே தப்பை செய்றடா… யாரோ செஞ்ச தப்புக்கு அவளுக்கு தண்டனை கொடுக்கிற நீ’ என்று எண்ணியவன் அவர் முன்னே அவளிடம் இறங்கிப் பேச விரும்பாமல் அறையை விட்டு வெளியேறி விட்டான்.
“இப்போ எப்படி இருக்க மருமகளே?” பாசமாய் கேட்டபடி தலை கோதிய மாமனாரிடம் முகம் சுளிக்காது பதில் சொன்னாள் அருந்ததி.
அவனிடம் அவள் பெரிதாக எந்த மாற்றத்தையும் எதிர்பார்த்து விடவில்லை. ஆனால் படுக்கையில் கிடக்கும் இந்த நேரத்தில் கூடகொஞ்சம் கூட அனுசரணை இல்லாத அவனது பேச்சு அவளுக்கு வலித்தது.
அவனுக்கு தன்னைப் பிடிக்காது என்று தெரியும். ஆனால் இந்த அளவிற்கு என்று அவளுக்கு இப்பொழுது தான் புரிந்தது.
அவன் அவளை நோக்கி ஓரடி முன்னெடுத்து வைக்க… அவளோ அவனை விட்டு விலகி ஈரடி பின்னே சென்றாள்.
தகவல் அறிந்து கண்ணனும் வந்து விட ஏனோ அங்கிருக்க பிடிக்காமல் தூரத்தில் இருந்து அவளைப் பார்த்தபடியே மருத்துவமனைக்கு வெளியே வந்து விட்டான். அவளுக்கு ஒன்று என்றதும் இத்தனை பேர் ஓடி வருகையில் தான் அங்கே தேவை இல்லையோ என்ற எண்ணம் அவன் மனதில் தோன்றத் தான் செய்தது.
அங்கிருந்த அனைவரும் அவளை உள்ளங்கையில் வைத்து தாங்கினார்கள். தான் அருகில் இல்லாமல் இருந்தாலே அவள் கொஞ்சம் நிம்மதியாக இருப்பாள் என்று தோன்ற அந்த எண்ணமே அவனுக்கு கசப்பாய் இருந்தது.
ஏனோ அவளுக்கு அருகில் இருக்க வேண்டும் போல தோன்றியது அவனுக்கு.
அந்த உணர்வுக்கு என்ன பெயர் சூடுவது என்று அவனுக்கு புரியவில்லை.
அது காதலா அல்லது குற்ற உணர்வா? தடுமாறினான் அவன். அவனுக்கு அவளைப் பிடிக்கும் என்பதை கொஞ்சம் தாமதமாகவே அவன் மூளை அவனுக்கு உணர்த்த முயற்சி செய்து கொண்டிருந்தது. ஆனால் அவன் எடுத்த சபதம்? அதனால் அவள் வாழ்வும் அல்லவா வீணாகக் கூடும்.
ஜெனிபரின் மரணத்துக்கு தன்னுடைய குடும்பமே முழுமுதற் காரணம் என்று தெரிந்த பிறகு, தான் மட்டுமாக திருமணம் செய்து கொண்டு குடும்பம், குழந்தை என்று வாழ்வது ஜார்ஜ், அமிர்தா,ஜெனிபர் மூவருக்கும் செய்யும் துரோகமாகவே அவனுக்குத் தோன்றியது. அதற்காக மட்டும் தான் ஆரம்பத்தில் இருந்தே அவளை விலக்கி நிறுத்தினான். இனியும் வேறு வழி இல்லை. அவளை விலக்கத் தான் வேண்டும்.
ஆனால் அவளை ஒதுக்கி வைக்க வேண்டும் என்று நினைக்கும் பொழுதே நெஞ்சில் எழும் வழி அவனுக்கு புதிதாய் இருந்தது.
நேசமணி கொஞ்ச நேரம் இருந்து விட்டு கிளம்பி விட மருத்துவர் அழைப்பதாக சொல்ல, கண்ணனுக்கு மருத்துவரிடம் இன்னும் கொஞ்சம் விளக்கமாக கேட்டுக் கொள்ள நினைத்திருக்க அவனும் அவர்கள் உடன் கிளம்பி விட்டான் மருத்துவரைப் பார்க்க.
அருந்ததி தனியே இருக்க, வேகமாக அவளது அறைக்குள் சென்றான் அக்னி. அவன் உள்ளே நுழைவதைப் பார்த்ததும் கண்களை மூடி தூங்குவதை போல படுத்துக் கொண்டாள் அருந்ததி.
அவனுக்கு அவளிடம் பேசியே ஆக வேண்டும் போல இருந்தது. தயக்கத்தையும், தடுமாற்றத்தையும் மீறி பேசினான்.
“இ…இப்போ எப்படி இருக்கு. பரவாயில்லையா?”
“ம்”
“உடம்புல எங்கேயாவது வலி இருக்கா? அசதி இருக்கா?”
“…”இப்பொழுது வெறும் மறுப்பான தலையாட்டல் மட்டுமே பதிலாக கிடைத்தது. அதுவும் விட்டத்தை பார்வையால் அளந்தபடி.
“ப… பசிக்குதா? ஏதாவது சாப்பிட வாங்கிட்டு வரணுமா?” என்று தயங்கி தயங்கி கேட்க… அவள் கண்களில் நிற்காமல் கண்ணீர் வழிந்தது.
அவள் கண்ணீர் அவனை வேரோடு பிடுங்கி எரிந்தது.
“அ… அழாதே… ப்ளீஸ்!”இறைஞ்சுதலாய் ஒலித்த அவன் குரலில் வித்தியாசம் கண்டு அவன் முகத்தை உற்றுப் பார்த்தாள்.
கைகளில் மறைத்து வைத்திருந்த கவரை எடுத்து அவள் முன் நீட்டினான்.
பிளாக் பாரஸ்ட் கேக் ஒன்று ‘சாரி’ என்ற வாசகத்தை தாங்கியபடி அவன் கரங்களில் இருந்தது. அவள் அதை வாங்கவும் இல்லை… மறுத்து பேசவும் இல்லை. அவனையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“நீங்க என்ன வேணா பேசலாம். பேசிட்டு ஒரு கேக்கை கொடுத்தா நாக்கை தொங்க போட்டுட்டு அதை வாங்கி தின்னுட்டு நீங்க பேசினதை எல்லாம் மறந்துடுவேன்னு நினைக்கறீங்களா?” அவள் சரியாகத் தான் போட்டுத் தாக்கினாள். ஆனால் அவனிடம் தான் பதில் இல்லை.
“…”
“உங்களைப் பொறுத்தவரை நான் சரியான சாப்பாட்டு ராமி… சோத்து மூட்டை.. என்னைப் பத்தி வேற எப்படி உயர்வா நினைக்க முடியும்?” கேள்வி கேட்டு அவளே பதிலும் சொல்லிக் கொள்ள அக்னிக்கோ முதல் முறையாக அவளிடம் பதில் பேச வார்த்தை வராமல் போனது.
“என்ன பதிலைக் காணோம். இன்னும் நீங்க குட்ட குட்ட குனிவேன்னு நினைச்சுட்டு ஆசையா வந்தீங்களோ?”
“…”
“இப்போ என்ன உங்களுக்கு என்னையும், இந்த கல்யாணத்தையும் பிடிக்கலை… ஏத்துக்க முடியலை அவ்வளவு தானே? கூடிய சீக்கிரம் இதுக்கு ஒரு ஏற்பாடு செய்றேன். இப்போ நீங்க கிளம்புங்க” என்று சொன்னவளின் உடல் தளர்வாக இருந்தாலும் கரங்கள் கொஞ்சம் கூட அசராமல் வாயிற்பக்கம் காட்டியபடி வெகுநேரம் நின்றது.
அருந்ததியின் இந்த முகம் அவன் எதிர்பாராதது.
அவள் மின்மினி…
அவனோ மின்சாரம்…
இன்று இருவரும் கூடு விட்டு கூடு பாய்ந்ததைப் போல இருந்தது சூழல். இருவரும் தத்தமது இயல்பை தொலைத்து நின்றார்கள்.
இவர்களுக்கு இடையில் வெளியே தெரியாத… சொல்லப்படாத அவர்களின் காதல் என்னாகும்?
