மின்மினியின் மின்சார காதலன் 25 tamil novels

0
641

அத்தியாயம் 25
அக்னி மருத்துவமனை விட்டு வெளியே எங்கும் செல்லாமல் அங்கேயே இருந்தான். அருந்ததி இருந்த அறைக்குள் போகாமல் வெளியில் இருந்தபடியே அவளுக்கு வேண்டியது அனைத்தும் அவளுக்கு கிடைக்கும்படி பார்த்துக் கொண்டான். அவனுக்கு அவளின் மன்னிப்பு வேண்டியதாய் இருந்தது. ஆனால் அதை நேரடியாக அவளிடம் கேட்க அவனது ஈகோ ஒத்துழைக்கவில்லை.
அதே நேரம் மருத்துவமனைக்கு எதிரில் இருந்த ஹோட்டலில் நான்கு பேர் கொண்ட கும்பல் ஒன்று மருத்துவமனையையே இமைக்காமல் பார்த்தபடி தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தது.
“இது சரியா வருமா டா?”
“கண்டிப்பா சரியா வரும்.”
“எப்படிடா எவ்வளவு பெரிய ஹாஸ்பிடல்… சிக்குனா வச்சு செஞ்சுடுவாங்க”
“பெரிய ஹாஸ்பிடல் தான் நம்ம வேலைக்கு வசதி… எல்லாரும் தன்னோட வேலையை பார்த்துக்கிட்டு இருப்பாங்க. மத்தவங்களை கவனிக்க யாருக்கும் நேரம் இருக்காது. நம்ம பாட்டுக்கு நம்ம வேலையை பார்க்கலாம்”
“சரி அந்த அக்னியை தூக்குறதுக்கு என்ன பிளான்”
“முட்டாள் அவனை எல்லாம் அவ்வளவு ஈசியா தூக்க முடியாது. ஆளைப் பார்த்தே தானே… மிலிட்டரிக்காரன்.. உடம்பை இரும்பாட்டம் வச்சு இருக்கான். அவன் கையால ஒரு அடி வாங்கினா கூட நமக்கு சிவலோக பதவி கன்பர்ம்”
“அப்போ என்ன தான் செய்றது?”
“அவனுக்கு வேண்டியவங்க யார் வெளியே வர்றாங்களோ அவங்களை தூக்கினா அவன் தானா வரப் போறான்” என்றான் முதலாமவன் அசால்ட்டாக.
“டேய்! அதுலயும் ஒரு சிக்கல் இருக்கு. அந்த கண்ணன் பயலும் அங்கே தான் இருக்கான். அவனும் எமகாதகன் தான். அவனுக்கு விஷயம் தெரியாம அக்னியை மட்டும் தனியா வரவழைக்கணும். வெளியே யாருக்காவது தெரிஞ்சா அவங்க வந்து குட்டையை குழப்பவும் வாய்ப்பு இருக்கு”
“சரி எல்லாரும் கவனமா இருக்கலாம்”
“நாலாபக்கமும் ஆளுக்கு ஒருத்தர் காவல் நில்லுங்க. வெளியே யார் முதல்ல வர்றாங்களோ அவங்களை தூக்கலாம்” மெல்லிய குரலில் அவர்கள் பேசிக் கொண்டது யாருக்கும் கேட்காததால் அவர்கள் மீது யாருக்கும் சந்தேகம் வரவில்லை.
அதே நேரம் ஒரு உயர்தர நட்சத்திர ஹோட்டலில் தனியாக அமர்ந்து நகம் கடித்துக் கொண்டிருந்த பெண்ணின் முன் வந்து அமர்ந்தான் சிபி.
“ஹாய்”
“மிஸ்டர்…. இந்த டேபிள் ரிசர்வ்டு… நீங்க வேற டேபிள் போங்க” என்றாள் அவன் முகம் கூட பார்க்காது.
“புக் செஞ்சதே நான் தான் மிஸ். தாரா” என்று அழுத்தமாக சொன்னபடி அவளுக்கு எதிரில் அமர அவள் பார்வை வேகமாய் அவனை ஆராய்ந்தது.
“உங்களை இதுக்கு முன்னாடி நான் பார்த்ததே இல்லை. என்னை எதுக்காக வர சொன்னீங்க”
“பேசத் தான்” அமர்த்தலாய் சொன்னவனைக் கண்டு அவளுக்கு கோபம் வர, வெளியே தெரியாத வண்ணம் பற்களை நறநறவென்று கடித்தாள்.
“உங்ககிட்டே பேச எனக்கு ஒண்ணும் இல்லை. நான் கிளம்புறேன்”என்று சொல்லியபடி அவள் எழ முற்பட்டாள்.
“உண்மை தான்…எனக்கும் உங்ககிட்டே தனியா பேசுற அளவுக்கு எதுவும் இல்லை”
“அப்புறம் எதுக்கு தேவை இல்லாம என்னை போன் செஞ்சு இங்கே வரவழைச்சீங்க”
“வெயிட் வெயிட்… நான் சொல்றதை கொஞ்சம் கோபப்படாம கேளுங்க தாரா. நம்ம இரண்டு பேருக்கும் தனியா பேசுற அளவுக்கு எதுவும் இல்லை தான். ஆனா நம்ம இரண்டு பேருக்கும் இடையில் ஒரு விஷயம் காமனா (common) இருக்கு”
“…”
“அக்னி புத்திரன்” என்றவன் சொல்லி முடிக்கும் முன் அவள் தேகம் விறைப்புற அதை அவன் கவனித்தாலும் வெளியே காட்டிக் கொள்ளவில்லை.
“…”
“என்ன தாரா பேச்சையே காணோம்”
“ஹலோ மிஸ்டர்… நீங்க யாரு? உங்களுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? திடீர்னு எனக்கு போன் செஞ்சு உங்களோட ரகசியம் எனக்குத் தெரியும்.**** ஹோட்டலுக்கு வந்தா மேற்கொண்டு பேசலாம்னு சொன்னீங்க. நான் ஏதோ என்னோட பிரண்ட்ஸ் தான் பிரான்க்ங் (prank) பண்றாங்கன்னு நினைச்சு வந்தேன். நீங்க என்னென்னவோ சொல்றீங்க… எனக்கு ஒன்னும் புரியல. நீங்க வேற யாரோன்னு தப்பா புரிஞ்சுக்கிட்டு என்கிட்டே பேசறீங்கனு நினைக்கிறேன்” என்று சொன்னபடி வெளியேற முயல… அவளை தடுத்து நிறுத்தினான் சிபி.
“என்னை நம்புறது உங்களுக்கு கொஞ்சம் கஷ்டம்னு புரியுது. என்னோட பேர் சிபி. அதை விட முக்கியம் எனக்குத் தேவை அந்த அருந்ததி. இன்னும் தெளிவா சொல்லணும்னா அக்னியோட வைப் அருந்ததி.” என்று சொல்ல தாரா அப்படியே அமர்ந்து விட்டாள்.
மேற்கொண்டு எதையும் அவள் பேசி தன்னை காட்டிக் கொள்ள அவள் விரும்பவில்லை. எனவே அமைதியாக அவன் முகம் பார்த்தாள்.
“நாம கொஞ்சம் ஓபனா பேசலாம் தாரா.. என்னோட நோக்கம் அந்த அருந்ததியோட உயிரை எடுக்கிறது. உங்களுக்கு தேவை அக்னியோட உயிர் தானே”
“…”
“உங்களுக்கு என் மேல இன்னும் நம்பிக்கை வரலைன்னு தெரியுது…” என்று சொன்னவன் அருந்ததியை கொல்ல நினைப்பதற்கான காரணத்தை அவளிடம் பகிர்ந்து கொண்டான். அதே நேரம் அக்னியை அவள் கொல்லத் துடிப்பதற்கான காரணத்தையும் அவளிடமே சொல்ல, அவள் கண்களில் வந்து போன மெல்லிய அதிர்வை துல்லியமாய் கண்டு கொண்டான்.
“நம்ம இரண்டு பேருக்கும் நோக்கம் ஒண்ணா இருக்கும் பொழுது ஏன் தனித்தனியா பயணிக்கணும்? இரண்டு பேரும் ஒண்ணு சேர்ந்து களத்தில் இறங்கினா சீக்கிரமே நம்ம நோக்கம் நிறைவேறிடும்”
“நீங்க சொல்றது எதுவுமே எனக்குப் புரியல” அப்பொழுதும் நடிப்பை விடாமல் தொடர்ந்தாள் அவள்.
“உப்ப்ஹ்… இன்னும் எதுக்கு நடிக்கறீங்கனு எனக்கு புரியலை தாரா. இப்போ கூட உங்க ஆளுங்க அந்த அருந்ததியை அட்மிட் செஞ்சு இருக்கிற ஹாஸ்பிடல் பக்கத்துல தான் அக்னிக்காக வெயிட் பண்ணிட்டு இருக்காங்கனு எனக்குத் தெரியும்”
“அது… அது எப்படி?” பயத்தில் தடுமாறினாள் தாரா.
“இது மட்டும் இல்லை. இன்னும் நிறைய விஷயம் எனக்குத் தெரியும். இதுக்கு முன்னாடி ஒருமுறை அருந்ததி வீட்டில் இருந்த கார் டயரை பஞ்சர் பண்ணி அவனை கடத்த நீங்க பிளான் செஞ்சதும் தெரியும்”
“என்னை பாலோ பண்ணுறீங்களா?”
“இப்போ கொஞ்ச நாளா” அவனும் உடனே ஒத்துக் கொண்டான்.
“வாட்ட்ட்! எவ்வளோ தைரியம்”
“கோபப்படாதீங்க தாரா.. என்னோட டார்கெட் அருந்ததி… அவளை காப்பாத்த நினைக்கிற அக்னி… அவனையே அழிக்க நினைக்கிற நீங்க… இப்படி அருந்ததியோட சம்பந்தப்பட்ட எல்லாரும் என்னோட கண்காணிப்பில் தான் இருக்காங்க.”என்று சொல்ல தாராவுக்கு கையும், களவுமாக மாட்டிக் கொண்ட உணர்வு.
“இப்போ நான் என்ன செய்யணும்”
“முதல்ல உங்க ஆளுங்களை திரும்பி வர சொல்லுங்க”
“ஏன்?”என்றாள் கண்களில் சந்தேகத்துடன்.
“உங்களோட நோக்கம் அக்னிக்கு வலிக்க வச்சு அவனை கொல்லணும். அப்படித்தானே?” என்று கேட்க அவளது தலை தானாய் ஆடியது.
“அப்போ அதுக்கு இன்னும் கொஞ்ச நாள் ஆகணும். வெயிட் பண்ணுங்க.” என்று சொல்ல அவளோ புரியாமல் பார்த்தாள்.
“பசி மயக்கத்தில் இருக்கிறவனை கொன்னா அவனுக்கு வலி தெரியாது. வயிறு நிறைய சாப்பாட்டை போடுவோம். அதுக்கு அப்புறம் அடிச்சா தான் உச்சி மண்டைக்கு வலி ஏறும்”என்று வஞ்சத்தில் கண்கள் பளபளக்க கூறியவனைப் பார்த்து அவளுக்கு உள்ளுக்குள் சில்லிட்டது.
அவர்கள் தங்களுக்குள் பேசி முடிவெடுத்த சில நிமிடங்கள் கழித்து மருத்துவமனைக்கு வெளியில் அக்னியை சேர்ந்தவர்களுக்காக காத்திருந்த கும்பல் காணாமல் போனது.
அதே நேரம் அருந்ததி தங்கி இருந்த அறையில் எல்லார் முன்னிலையிலும் கண்ணன் அவளை கேள்வி கேட்டு குடைந்தெடுத்துக் கொண்டிருந்தான்.
“எவ்வளவு நேரம் தான் அமைதியா இருப்ப அருந்ததி? என்னோட கேள்விக்கு பதிலை சொல்லு… ஏன் ஒருநாள் முழுக்க சாப்பிடாம இருந்த?” என்று கேட்க அவள் வாயே திறக்கவில்லை.
அக்னியும் அவளுக்கு ஜூஸ் வாங்கிக் கொண்டு வந்திருந்தவன் கண்ணனது பேச்சில் அறைக்கு வெளியிலேயே நின்று விட்டான்.
‘இவ மட்டும் இப்போ என்னோட பேர் சொன்னா… அவ்வளவு தான். சோலி முடிஞ்சது. மொத்த குடும்பமும் ஒண்ணா இருக்காங்க. என்னை வச்சு பிரியாணி கிண்டிடுவானுங்க’
கண்ணன் ஆரம்பித்து வைத்த கேள்வியை வீட்டினர் அனைவரும் பிடித்துக் கொண்டனர். மாறி மாறி அதே கேள்வியை வேறு வேறு விதத்தில் கேட்டு வைத்தார்கள்.
யாரும் தன்னை கேள்வி கேட்பதை எண்ணி அக்னி ஒன்றும் பயந்து விடவில்லை. ஏனோ மற்றவர்களின் குற்றம் சாட்டும் பார்வையை தன்னால் இப்பொழுது எதிர்கொள்ள முடியும் என்று அக்னிக்கு தோன்றவில்லை.
“இத்தனை பேர் கேட்கிறாங்க தானே மருமகளே… சொல்லலாமே?” என்று கேட்ட தந்தையின் குரலில் அவனுக்கு இன்னும் பதறியது.
‘இவருக்கு மட்டும் நான் பேசினது தெரிஞ்சா அவ்வளவு தான்’
“எல்லாத்துக்கும் உங்க மகன் தான் காரணம் மாமா” என்று வெகுநேர அமைதிக்குப் பின் வாய் திறந்தாள் அருந்ததி.
“என்னம்மா சொல்ற? அந்த பய உன்னை எதுவும் சொன்னானா?”என்று கோபத்துடன் அவர் இருக்கையை விட்டு எழுந்திரிக்க அருந்ததி வீட்டினரின் முக பாவனையோ சொல்லவே வேண்டியதில்லை.
“அதுக்காவது அவர் என்கிட்டே பேசி இருக்கணுமே?” என்று சொல்லி விட்டு சோர்வாக அவள் கண்களை மூடிக் கொள்ள அறைக்குள்ளே அவர்கள் குழம்ப, வெளியே அக்னி குழம்பினான்.
“என்னம்மா சொல்ற? தம்பி உன்கிட்டே பேசுறது இல்லையா? எப்போ இருந்து?” என்று பதறினார் கோகிலா.
“அவர் எப்போ என்கிட்டே சிரிச்சு பேசி நீங்க பார்த்தீங்க… அவருக்கு நான் கொஞ்சமும் பொருத்தம் இல்லையே மா. அவருக்கு தன்னை மாதிரியே ஒருத்தியை…ஒரு ராணுவத்தில் வேலை பார்க்கிற பொண்ணை கல்யாணம் செஞ்சுக்கணும்ன்னு ஆசை. அது தான் நடக்கலை. அட்லீஸ்ட் என்னை போலிசாவது ஆக்கிடணும்னு நினைச்சார். அதுக்குள்ளே எல்லாரும் அவசரப்பட்டு அவருக்கும், எனக்கும் கல்யாணம் செஞ்சு வைச்சுட்டீங்க.
உங்க எல்லாருக்கும் நல்லா தெரியும் தானே? போலீஸ் வேலைக்கு உடம்பு எவ்வளவு ஃபிட்டா வச்சு இருக்கணும்னு. ஆனா என்னைப் பாருங்க…”என்று கம்மிய குரலில் பேசியவள் தன்னுடைய குண்டான உடலை சுட்டிக் காட்டினாள்.
“அதுக்காக அந்த ராஸ்கல் உன்னை எதுவும் திட்டினானா தாயி” நேசமணியின் குரலில் அத்தனை கோபம் இருந்தது.
“மறுபடி மறுபடி அதே தப்பை செய்ய வேண்டாம் மாமா” என்று அழுத்தம் திருத்தமாக சொன்னவளை எல்லோரும் கேள்வியாக பார்த்தனர்.
“அவருக்கு என்னை கல்யாணம் செஞ்சுகிறதுல துளி கூட விருப்பம் இல்லைங்கிறது இங்கே இருக்கிற எல்லாருக்கும் தெரியும். அப்படி தெரிஞ்சும் நாம என்ன செஞ்சோம் சொல்லுங்க.
உங்களுக்கு உங்க அப்பா ஆசைப்பட்ட மாதிரி அவர் உயிலில் சொல்லி இருந்த பையனோட உங்க பொண்ணுக்கு கல்யாணம் நடக்கணும்.
உங்களுக்கு கல்யாணமே வேண்டாம்னு இருக்கிற பையனை இதை சாக்கா வச்சு கல்யாணம் செஞ்சு வச்சுட்டா அதுக்கு அப்புறம் அவர் மனசு மாறி குடும்பம், குழந்தைன்னு செட்டில் ஆகிடுவார்னு நினைச்சீங்க” என்று வரிசையாக தந்தை, மாமனார் எல்லாரையும் போட்டுத் தாக்கினாள்.
“ஆனா நீங்க யாருமே அவரோட மனசையோ , ஆசையோ புரிஞ்சுக்கலை. பிடிக்காத என்னோட அவர் எப்படி சந்தோசமா வாழ முடியும். அவர் ஒதுங்கி ஒதுங்கி போறார். ஒருவேளை உடம்பை குறைச்சு போலீஸ் ஆகிட்டா அவருக்கு என்னை பிடிக்க வாய்ப்பு இருக்கோன்னு முட்டாள் தனமா ஒரு எண்ணம் எனக்கு. அதான் சாப்பாட்டை குறைச்சு சாப்பிட முயற்சி செஞ்சேன். இப்போ இப்படி இருக்கேன்” என்று சொல்லி முடிக்க அறையில் அத்தனை அமைதி.
அறைக்கு வெளியே இருந்த அக்னியின் கால்கள் தடுமாற வேகமாக அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டான்.
“நீங்க யாருமே அவருக்காக யோசிக்கலை. நான் யோசிச்சேன். அதோட பலன் தான் இது. ஆனா இதுவும் என்னால முடியாதுன்னு இப்போ புரியுது. எதுக்குமே லாயக்கில்லாத ஒரு ஜென்மம் நான். வெறுமனே பணம் இருக்குங்கிற ஒரே காரணத்துக்காக மட்டும் அவர் என்னை ஏத்துக்கணும்ன்னு நினைக்கிறது முட்டாள்த்தனம் மட்டும் இல்லை அவருக்கு செய்யக் கூடிய ரொம்ப பெரிய துரோகம். அதான் நான் ஒரு முடிவு பண்ணி இருக்கேன். நாங்க இரண்டு பேரும் சட்டப்படி…” என்று பேசிக் கொண்டே போக… கதவை திறந்து கொண்டு மின்னல் வேகத்தில் உள்ளே நுழைந்தான் அக்னி.
“ஜூஸ் குடி அதி…என்ன எல்லாரும் அவளை ரெஸ்ட் எடுக்க விடாம இப்படி தொந்தரவு செஞ்சுட்டு இருக்கீங்க… எல்லாரும் வெளியே போங்க… அவ கொஞ்சம் தூங்கட்டும்” என்று சொல்ல, மொத்த குடும்பமும் எதில் இருந்தோ தப்பிப்பதைப் போல வேகமாக வெளியேறினார்கள்.
ஏனெனில் அக்னி உட்பட அங்கிருந்த எல்லாருக்கும் அவள் சொல்ல வந்தது என்ன என்பது தெளிவாக புரிந்ததே… நல்லவேளை அவள் சொல்வதற்குள் அக்னி உள்ளே புகுந்து தடுத்து விட்டான் என்பது தான் எல்லோரின் எண்ணமாக இருந்தது.
கண்ணன் மட்டும் அறையை விட்டு வெளியேறும் பொழுது அக்னியை புரியாத பார்வை பார்த்து வைத்தான். அதை எல்லாம் கண்டு கொள்ளும் நிலையில் அக்னி இல்லை. அவன் பார்வை முழுக்க அருந்ததி மீது மட்டுமே இருந்தது.
அவளோ அவனை கோபத்துடன் முறைத்துக் கொண்டிருந்தாள்.
“உங்களை யாரு இப்போ வர சொன்னா?”
“ம்ச்.. ஜூஸ் வாங்கிட்டு வந்தேன்”
“உங்களை நான் ஜூஸ் வாங்கிட்டு வர சொன்னேனா”
“எனக்கு தோணுச்சு வாங்கிட்டு வந்தேன்”
“இனி இப்படி எல்லாம் உங்களுக்கு என்னைப் பத்தின நினைப்பு எதுவும் வேண்டாம். ஆமா அது என்ன எல்லார் முன்னாடியும் அதினு புதுசா கூப்பிடறீங்க?”
“அப்படியா கூப்பிட்டேன்… ஞாபகம் இல்லை” என்று தோளை குலுக்கியவனை கொலைவெறியோடு பார்த்தாள் அவள்.
“நான் தான் எல்லார்கிட்டயும் பேசி நம்ம விஷயத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கிறேன்னு சொல்லி இருந்தேன்ல.
“முற்றுப்புள்ளி வைக்கலாம்னு நீ முடிவு பண்ணினா போதுமா? என்னை கேட்க வேண்டாமா? என்னோட வாழ்க்கையைப் பத்தின முடிவை நீ மட்டும் எப்படி எடுக்கலாம்?” என்று கேட்க அருந்ததியின் பார்வை அவனை ‘அட சண்டாளா’ என்றது.
“இப்போ என்ன தான் சொல்ல வர்றீங்க?”
“புள்ளியை அப்படியே கன்டினுயூ (continue) செஞ்சு கோலம் போடலாம்னு இருக்கேன்” என்று சொன்னவன் அவளின் குழம்பிய முகத்தைப் பார்த்து தனக்குள் சிரித்துக் கொண்டான்.

Free download novels
Madhumathi Bharath 
Facebook Comments Box
What’s your Reaction?
+1
6
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here