அத்தியாயம் 26
அருந்ததி மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு திரும்பி இன்றோடு ஒரு வாரம் கடந்து இருந்தது. இந்த ஒரு வாரமும் அக்னி அவளை நன்றாகவே பார்த்துக் கொண்டான். அவனது தந்தையை பார்த்தால் மட்டும் அவ்வபொழுது வேதாளம் முருங்கை மரம் ஏறிக் கொள்ளும். மற்றபடி அவனும் கொஞ்சம் கொஞ்சமாக மாற முயற்சி செய்தான். அருந்ததியை காயப்படுத்தாமல் அவளுடன் சுமூகமாக இருக்க விரும்பினான்.
அக்னியின் வீடு எரிந்து அதில் சரி செய்யும் வேலைகள் நடந்து கொண்டிருப்பதால் அந்த வேலைகள் முடியும் வரை அக்னியையும், அருந்ததியையும் தங்களுடைய வீட்டிலேயே தங்கிக் கொள்ளும் படி சிவநேசன் கேட்டுக் கொள்ள அக்னியும், அருந்ததியின் மனநிலையை கருத்தில் கொண்டு அதற்கு சம்மதித்தான்.
ஹாலில் அமர்ந்து லேப்டாப்பில் எதையோ நோண்டிக் கொண்டிருந்த அக்னியின் அருகில் தொப்பென்று குதிப்பது போல வந்து அமர்ந்தான் கண்ணன்.
இத்தனை நாட்கள் தன்னை பார்த்தாலே தெறித்து ஓடிய கண்ணன், இன்று கொஞ்சம் தைரியமாக தனக்கு அருகில் வந்து கோபமாய் வந்து அமர, ‘ என்ன’ என்று கண்களால் வினவினான் அக்னி.
“அருந்ததியோட பாதுகாப்புக்கு ஏற்பாடு செஞ்சு இருந்த ஆளுங்க யாரையும் இரண்டு நாளா காணோமே?”
“ஆமா நான் தான் வர வேண்டாம்னு சொல்லிட்டேன்.”என்றான் சிரத்தை இல்லாதவன் போல.
“வீட்டில் கூட சிசிடிவி எதுவும் ஒர்க் ஆகலை போல…”
“அதையும் நான் தான் ஆப் பண்ணி வச்சு இருக்கேன்”
“என்ன தான் நினைச்சுட்டு இருக்கீங்க… அருந்ததியை பத்தி கொஞ்சம் கூட கவலைப்படாம இப்படி இருந்தா என்ன அர்த்தம்? அவளை யாராவது ஏதாவது பண்ணிட்டா என்ன செய்வீங்க?”
“எனக்கு அது தான் வேணும்” என்று குரலை குறைத்து சொன்னவனை சந்தேகமாக பார்த்தான்.
“என்ன உளர்றீங்க?” கொஞ்சம் கோபமாகவே கேட்டான் கண்ணன்.
“அப்போ தானே நமக்கு இடைஞ்சல் இருக்காது டார்லிங்” என்று சொல்லி கண்ணை சிமிட்ட கண்ணன் அரண்டே போனான்.
‘ஆத்தே… இது அதுல்ல’
“நீயும் கொஞ்சம் என்னை புரிஞ்சுக்கிட்டு கொஞ்சம் கோஆபரெட் பண்ணு கண்ணா” என்று பேசியபடி அவனை நெருங்கி, அவன் கைகளை பற்ற முயல, அதற்குப் பிறகும் கண்ணன் அங்கே நிற்பானா?
‘எடுத்தான் பாருங்க ஓட்டம்… ஐபிஎஸ் ட்ரைனிங்ல கூட அப்படி அவன் ஓடலை’
அக்னி அருந்ததிக்கு பின்னால் ஏற்படுத்தி இருந்த கண்ணுக்குத் தெரிந்த பாதுகாப்பு வளையங்களை மட்டும் அகற்றி இருந்தான்.
அருந்ததியை கடத்த நினைப்பவர்கள் அவளுக்கு இருக்கும் பாதுகாப்புகள் அகன்று விட்டதாக எண்ணி அவளை நெருங்கும் சமயம் அவர்களை கையும், களவுமாக பிடிக்க வேண்டும் என்று அவன் முடிவு செய்து இருந்தான்.
ஆனால் இந்த ஒரு வாரம் கடந்த நிலையிலும் அருந்ததி பாதுகாப்பாகவே இருந்தாள். சந்தேகப்படும் படியான எந்த ஒரு நபரின் நடமாட்டமும் அவர்கள் வீட்டருகில் இருக்கவில்லை. இதை எல்லாம் வைத்து மட்டும் அருந்ததிக்கு ஏற்பட்ட ஆபத்து முழுமையாக நீங்கி விட்டது என்பதை நம்ப அவன் தயாராக இல்லை.
‘எதிராளி எதற்காகவோ காத்திருக்கிறான் என்பது அவனுக்கு புரிந்தது. முன்னைக் காட்டிலும் அதிக கவனத்துடன் இருந்தான்.
அன்று மாலை அருந்ததியை அழைத்துக் கொண்டு தியேட்டர் செல்வது என்று ஏற்கனவே முடிவு செய்து இருந்தான். வெளியே சென்றால் யாரேனும் தங்களை தொடர்ந்து கண்காணிக்கிறார்களா அல்லது அவளுக்கு ஆபத்து விளைவிக்க யாரேனும் முயற்சி செய்கிறார்களா என்பதை அறிய ஏற்பாடு செய்து இருந்தான்.
அக்னியைப் பொறுத்தவரை ஆபத்து அருந்ததிக்கு மட்டும் தான். தன்னுடைய உயிருக்கும் குறி வைக்கப்பட்டு இருக்கிறது என்பதை அறியாமல் போனான். அவளை காப்பாற்றுவது ஒன்றை மட்டுமே குறிக்கோளாய் கொண்டு அவன் செயல்பட, அவளை வைத்தே அவன் உயிரை குடிக்க வெளியே ஒரு கூட்டம் தயாராய் இருந்ததை அறியாமல் போனான் அவன்.
மதிய உணவு முடிந்ததும் அருந்ததி வேகமாக தங்களுடைய அறையில் ஏதோ வேலையில் இருந்த அவன் முன்னே வந்து நின்றாள்.
“இப்போ எதுக்கு என்னை சினிமாவுக்கு எல்லாம் கூட்டிட்டு போறீங்க?”
“எனக்கு படம் பார்க்க தோணுச்சு அதான்”
“உங்களுக்கு தோணினா நீங்க மட்டும் போங்க. என்னையும் ஏன் கூட்டிட்டு போறீங்க?”
“அது பேய்ப் படம்… தனியா பார்க்க எனக்கு பய்ய்ய்யமா இருக்கு” என்று சொன்னவனை அவள் முறைத்துப் பார்த்தாள்.
“உங்களுக்கு பயமா இருக்கா?” அவள் பற்களை நறநறவென்று கடித்த சத்தம் வெளியே வரை கேட்டது.
“நிஜ்ஜம்மா” என்று அழுத்தி சொன்னவனை அவள் நம்பாத பார்வை பார்த்து வைத்தாள்.
“நான் வரலை. நீங்க வேணும்னா கண்ணனை கூட்டிட்டுப் போங்க”
“ஆமா அவனுக்குத் தான் நான் தாலி கட்டி இருக்கேன் பாரு. நீ சொன்னதை அப்படியே உங்க அப்பா,அம்மா கிட்டே சொல்லட்டுமா?” என்று தோளை குலுக்கியவனை கொன்று போடும் வெறி வந்தது அவளுக்கு.
“உங்களுக்குத் தான் என்னை பிடிக்கலைல.. அப்புறம் எதுக்கு இப்படி எல்லாம் செய்றீங்க?”
“நான் எப்போ சொன்னேன்.. உன்னை எனக்கு பிடிக்காதுன்னு” என்று அசால்ட்டாக பேசியவனை கண்டு அவள் தான் ஒரு நொடி திகைத்துப் போனாள்.
“நீங்க வாய் வார்த்தையா சொல்லாட்டியும் உங்க நடவடிக்கை எல்லாம் அப்படித் தான் இருந்தது.”
“எப்படி?”
“கல்யாணத்துக்கு முன்னாடியும், பின்னாடியும் என்கிட்டே எப்பப்பாரு எரிஞ்சு எரிஞ்சு தானே விழுந்தீங்க? அது மட்டுமா? கல்யாண மேடையிலேயே என்கிட்டே வச்சு என்ன சொன்னீங்க? என் மனசுல ஜெனிபரை பத்தி மட்டும் தான் நினைப்பேன்னு நீங்க சொல்லலை..அது மட்டுமா… கல்யாணத்துக்கு அப்புறமா ஒரே வீட்டில் இருந்தப்போ கூட என்னை ஒரு மனுஷியா கூட நீங்க மதிக்கலை. ஏதோ அந்த வீட்டில் இருந்த குப்பை மாதிரி தானே என்னையும் பார்த்தீங்க? ஒரு நாள், ஒரு பொழுது என்கிட்டே சிரிச்சு பேசி இருக்கீங்களா?” மனதில் அழுத்திக் கொண்டிருந்த கேள்விகளை எல்லாம் கொட்டி கவிழ்த்தாள் அருந்ததி.
“நானா? நான் எப்போ அப்படி எல்லாம் சொன்னேன். எனக்கு எதுவும் ஞாபகம் இல்லையே.. கனவு எதுவும் கண்டியா அதி மா” என்று பச்சை குழந்தை போல முகத்தை வைத்துக் கொண்டு சொன்னவனைக் கண்டு அவளுக்கு ஆத்திரம் பெருகியதே ஒழிய குறையவில்லை.
வேகமாக அவன் அருகில் வந்தவள் பக்கத்தில் இருந்த தண்ணீர் பாட்டிலை திறந்து தண்ணீரை அவன் மேல் ஊற்றப் போக, அதை லாவகமாக தடுத்தவன் , அவள் கையைப் திருப்பி அவள் மீதே அதை கொட்டி விட்டான்.
கோபம் இன்னும் அதிகமாக அருகில் இருந்த தலையணையை எடுத்து அவனை அடிக்க முயற்சி செய்ய, உடம்பை லேசாக நகர்த்தி அந்த அடி தன் உடலில் படாதவண்ணம் தப்பியவனை பார்க்க இன்னும் அவளுக்கு கோபம் அதிகரித்தது.
அவள் அடித்து அவன் வாங்கி இருந்தால் கூட அவள் அத்தோடு நிறுத்தி இருப்பாள். அவன் விலக, விலக அவனை அடித்தே தீர வேண்டும் என்ற எண்ணம் அவளுக்குள் பெருக்கெடுத்து ஓடியது.
கோபத்தில் என்ன செய்கிறோம் என்பதையே உணராமல் படுக்கையில் அவனை தள்ளி அவன் மடி மீது ஏறி அமர்ந்து கொண்டவள் ஆத்திரத்தில் அவனது தலைமுடியை இரண்டு கைகளாலும் இறுக பற்றி உலுக்கத் தொடங்கினாள்.
“பிராடுகார பயலே… நீ எல்லாம் மிலிட்டரி காரனாடா… காண்டாமிருகம்” என்று வாய்க்கு வந்ததை எல்லாம் சொல்லி திட்டிக் கொண்டே போனாள். அக்னி எதுவுமே பேசாமல் அமைதியாய் இருப்பதை உணராதவள் அவனை போட்டு அடி வெளுத்துக் கொண்டிருந்தாள்.
அக்னியின் பார்வை நொடிக்கு நொடி மாறிக் கொண்டிருந்தது. தன் மடி மீது அமர்ந்து இருக்கும் மனையாளின் முகத்தையே கண்களால் பருகிக் கொண்டிருந்தான்.
சில நொடிகளுக்குப் பிறகே அறையில் இருந்த அமைதி வெகுவாக உறுத்த நிமிர்ந்து அக்னியின் முகம் பார்க்க அவன் முகமோ இதுவரை அவள் பார்த்திராத வகையில் வர்ண ஜாலத்தை கொட்டியது.
‘இப்போ எதுக்கு இந்த பார்வை பார்க்கிறான்?’ என்று எண்ணியவள் அவன் தலைமுடியை விடுவித்து விட்டு இறங்க முயல அது முடியாமல் போனது. குனிந்து தன்னை பார்த்தவன் அரண்டு போய் பயத்தில் கத்தி விட்டாள்.
“ஆஆஆஆ”
அக்னியை கீழே தள்ளி அவன் மீது அவள் அமர்ந்து இருந்தாள். முதன்முதலாய் அத்தனை நெருக்கத்தில் அவனுடன். இதயத்தின் ஓசை முரசின் ஓசையைப் போல ஓங்கி ஒலித்தது.
அக்னி அவளை நெருங்கவும் இல்லை. அவளை விட்டு விலகவும் முயற்சி செய்யவில்லை. அவளது தவிப்பையும், அவனை விட்டு விலக அவள் செய்யும் முயற்சிகளையும் சுவாரசியமாக வேடிக்கைப் பார்க்கத் தொடங்கினான்.
முயன்று பார்த்து முடியாமல் போகவும் அவனையே பாவமாய் பார்த்து வைத்தாள்.
‘ஹெல்ப் செய்றானா பார்’
“நீயா தானே குரங்கு மாதிரி ஏறின.. இறக்கி விட மட்டும் ஆள் வேணுமாக்கும்” அவள் மனதை படித்தவன் போல அவன் சொல்ல, அவளுக்கு ஆத்திரத்தில் பல்லைக் கடிக்க மட்டும் தான் முடிந்தது.
அவளது கால்கள் இரண்டும் அவன் முதுகுக்கு அடியில் மாட்டிக் கொண்டிருக்க, அவன் உதவி இல்லாமல் எழ முடியாது என்பது புரிபட அவஸ்தையுடன் அவனை பார்த்து கண்களால் கெஞ்சினாள்.
‘நீயா வாயைத் திறந்து கேட்டா மட்டும் தான் உதவி செய்வேன்’ என்று அவளையே கைகளை கட்டிக் கொண்டு பார்த்துக் கொண்டிருந்தவனின் கண்களில் மட்டும் கள்ளத்தனம் நிறைந்த ஒரு புன்னகை.
எவ்வளவு நேரம் தான் இப்படியே இருப்பது. வேறு வழியே இல்லை. என்ற முடிவுக்கு வந்தவள் அவனிடமே உதவி கேட்டாள்.
“ப்ளீஸ்!…” அவ்வளவு தான். அதைத் தாண்டி எப்படி கேட்பது என்று புரியாமல் தவிப்புடன் உதட்டைக் கடித்துக் கொண்டு நிறுத்தி விட அவனுக்கோ அத்தனை சிரிப்பு அவள் பாவனையில். வெளியே காட்டாமல் உதட்டுக்குள் ஒளித்து வைத்துக் கொண்டான்.
போனால் போகிறது என்ற பாவனையில் அவன் உடலை தூக்கி அவளும் எழுந்திரிக்க உதவி செய்தவன் அவளையே பார்த்து வைத்தான்.
“என்ன?” கடுகாய் பொரிந்தாள் அவன் பார்வையில்.
“உனக்கெல்லாம் ஈவு, இரக்கம் இருக்கா?”
“என்னது?” அவளுக்கு புரியவில்லை.
“ஏதோ மிலிட்டரிக்காரனா இருக்கிறதால சமாளிச்சேன். இப்படி வேற யாரையும் அடிக்க இறங்கிடாதே. அப்புறம் கொலை கேசில் உள்ளே போய்டுவ… ஒரு இருநூறு கிலோ வெயிட் இருப்பியா?” என்று கேட்டவனின் மீது மீண்டும் ஆத்திரம் பெருக, பக்கத்தில் இருந்த அவளது டிரெஸ்ஸிங் டேபிளில் மீதிருந்த அவளது பேஸ்க்ரீம் டப்பாவை அவன் அறியாமல் பின்புறமாக கையை விட்டு எடுத்தவள் அவன்அவள் செய்யப் போவதை உணர்ந்து விலகும் முன்னரே அவன் முகத்தில் அப்படியே அள்ளி பூசி இருந்தாள்.
இத்தனை முறை தப்பித்தவன் இந்த முறை அவளிடம் மாட்டவும் அத்தனை சந்தோசம் அவள் முகத்தில். சின்னப் பிள்ளை போல கைகளை தட்டி மகிழ்ந்தவள் துள்ளிக் குதித்தாள்.
அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் வேகமாக அவளைத் தாண்டி செல்ல, கோபித்துக் கொண்டு செல்லும் அவனை ஜெயித்து விட்ட மகிழ்ச்சியில் இன்னும் கொஞ்சம் சத்தமாகவே சிரித்தவள் திரும்பி பார்க்க அவனோ கைகளை பின்னால் கட்டிக் கொண்டு அவளையே பார்த்தவனின் பார்வையில் எதுவோ தெரிய… அரண்டு போனாள் அருந்ததி.
‘ஆத்தி… ஃபயர் எஞ்சின் பார்வையே சரி இல்லையே… ஓடிடு அருந்ததி’ என்று எண்ணியவள் மெல்ல அவனைத் தாண்டி செல்ல முயல, ஒரே இழுப்பில் அவன் கைகளுக்குள் சிக்கிக் கொண்டாள். மறைத்து வைத்திருந்த இன்னொரு கைகளை வெளியே எடுத்து அவள் முன்னே நீட்டினான்.
“உனக்குத் தான் வாங்கிட்டு வந்தேன். சாக்லேட் ஐஸ்கிரீம் உனக்கு ரொம்ப பிடிக்குமாமே” என்று சொன்னவனின் கைகளில் பேமிலி பேக் ஐஸ்கிரீம் டப்பா ஒன்று இருந்தது.
அவளை மெல்ல நெருங்கி… கொஞ்சமாய் நெருக்கி சுவரோரமாய் சாய்த்தவன் அவளது இரண்டு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்தி தன்னுடைய ஒரு கரத்தால் அழுத்திப் பிடித்துக் கொண்டான்.
அடுத்து அவன் என்ன செய்ய உத்தேசித்து இருக்கிறான் என்பது புரிய, அவனிடம் இருந்து விலக வெகுவாக திமிறினாள் அருந்ததி.
“பீரங்கியையே பார்த்தவன் நான்.. என்கிட்டேயா உன்னோட வேலையை காட்டுற?” என்றவன் ஐஸ்கிரீமை வழித்து அவள் முகத்தில் தடவினான். அவள் திமிற திமிற அவள் முகம் முழுக்க பூசி மொழுகி விட்டே ஓய்ந்தான்.
அவள் முகத்தில் பூசிய ஐஸ் கிரீம் அவள் கன்னங்களில் வழிந்து கீழிறங்க அவன் பார்வை மெல்ல அது செல்லும் பாதையை நோக்கி பயணிக்க, அவள் உடல் எங்கும் ரயில் தண்டவாளத்தின் அதிர்வு. ஏதோ வேகத்தில் அக்னியும் ஒற்றை விரலால் அவள் முகத்தில் இருந்த ஐஸ்கிரீமை வழித்து எடுக்க முயற்சிக்க, வேகமாக அவனை தள்ளி விட்டு அறையை விட்டு வெளியே ஓடி வந்தவள் எதிரே வந்த கண்ணனின் மீது மோதிக் கொண்டாள்.
“ஏய்! என்னாச்சு? ஏன் இப்படி ஓடி வர்ற? என்ன கோலம் இது?” என்று சிரித்துக் கொண்டே கேட்டவன் கையில் ஐஸ்கிரீம் டப்பாவோடு விரல்களை சப்பி சுவைத்தவாறே வெளியில் வந்த அக்னியைப் பார்த்ததும் அதிர்ச்சியில் வாயில் கை வைத்துக் கொண்டான்.
இருவரையும் மாறி மாறி பார்த்தான் கண்ணன். அருந்ததி வேகமாக அங்கிருந்து விலகி ஓடி விட கண்ணனோ அக்னியை இமைக்காமல் பார்த்து வைத்தான்.
“அவ்வா! இந்த பூனையும் பால் குடிக்குமாங்கிற மாதிரி இத்தனை நாளா சுத்திட்டு இருந்தீங்க. இப்போ தானே தெரியுது. இந்த பூனை கருவாட்டை பாத்திரத்தோட கவ்வும்னு” என்று வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு பேச, அக்னியின் முகத்தில் அப்படி ஒரு ரசனை, பூரிப்பு.
“சட்டை கிழிஞ்சிருந்தா
தைச்சு முடிஞ்சுடலாம்…
நெஞ்சு கிழிஞ்சுருக்கே
எங்கே முறையிடலாம்”
என்று சோகமாக நெஞ்சில் குத்திக் கொண்டே பாடிய கண்ணனைப் பார்த்து எதுவுமே சொல்லாமல் அமைதியாக மீண்டும் அறைக்குள் போய் விட்டான் அக்னி.
‘அப்பாடி… அக்னி ப்ரோ அவளைத் தான் லவ் செய்றார் போல… நம்ம தப்பிச்சோம்’ என்று மகிழ்ச்சியுடன் அங்கிருந்து நகர முயல, அறைக்கு உள்ளிருந்து அக்னியின் குரல் கேட்டது.
“கண்ணா டார்லிங் … உனக்கு பட்டர் ஸ்காட்ச் ஐஸ்கிரீம் தான் பிடிக்குமாமே… வாங்கி வச்சு இருக்கேன். உள்ளே வா நம்ம இரண்டு பேர் மட்டும் தனியா சாப்பிடலாம்.” என்று அழைக்க கண்ணனின் நிலையை கேட்கவும் வேண்டுமா?
‘அட போங்கடா நான் காசிக்குப் போறேன்’ என்று வேகமாக வாசல் பக்கம் ஓடி விட்டான் அவன்.