அத்தியாயம் 27
அருந்ததியும், அக்னியும் தியேட்டருக்கு கிளம்பி வாசலுக்கு வர கண்ணன் வழியை மறித்து நின்று கொண்டான்.
“நானும் வருவேன்”
“டேய்! அவங்க புருசன், பொண்டாட்டி முதல்முறையா வெளியே போறாங்க… நீ எதுக்குடா கூட போற” அதட்டியபடியே வெளியே வந்தார் கோகிலா.
“அருந்ததியோட பாதுகாப்புக்கு நான் போறேன் அத்தை”
“அதான் மாப்பிள்ளை கூட இருக்கார்ல” என்று சொல்ல அவன் பார்வை ஒரு நொடி அக்னியை தழுவி மீண்டது.
“அவருக்கு எதுக்கு டென்ஷன்? அவங்க நிம்மதியா படத்தை பார்க்கட்டும்… நான் அவங்களை பார்த்துக்கிறேன்” என்று லேசாய் வற்புறுத்த கோகிலா அவனை என்ன செய்வது என்று புரியாமல் தடுமாறினார்.
‘இப்போ தான் மாப்பிள்ளை பொண்ணு கிட்டே கொஞ்சம் நல்லா பேச ஆரம்பிச்சு இருக்கார். இவன் அதையும் கெடுத்துடுவான் போல இருக்கே’
“இருக்கட்டும்மா… கண்ணனும் கூட வந்தா நல்லா இருக்கும். ஜாலியா பொழுது போகும்” என்று அருந்ததி சொல்லி விட கோகிலா மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டார்.
‘இவளை எல்லாம் வச்சுக்கிட்டு… இப்படி இவ கூறு கெட்டத் தனமா நடந்துக்கிட்டா என்னைக்கு இவ வாழ்க்கை சரியாகுறது’
அக்னியும் ஒன்றும் சொல்லாமல் அமைதியாய் இருக்கவே வேறு வழியின்றி கண்ணனை அவர்களுடன் அனுப்பி வைத்தார் கோகிலா.
அக்னிக்கு கண்ணன் தனியே அங்கே வந்ததும் அருந்ததிக்கு ஆபத்து விளைவிக்க எதுவும் திட்டம் தீட்டி இருக்கிறானோ என்ற சந்தேகம் இருக்கவே அவன் அமைதியாக அவனை கண்காணிக்கத் தொடங்கினான்.
காரில் அக்னி ஏறி டிரைவர் சீட்டில் அமர்ந்ததுமே மற்ற இருவரும் தங்களுக்குள் அடித்துக் கொள்ள தொடங்கி விட்டார்கள்.
‘வேறு என்ன யார் பின் சீட்டில் அமர்வது என்று தான்’
“அந்தாளு பக்கத்தில் நான் உட்கார மாட்டேன்” இது அருந்ததி
“எனக்கு மட்டும் என்ன தலை எழுத்தா?” இது கண்ணன்.
“டேய்! உனக்கு அந்தாளைப் பத்தி தெரியாது”
“எனக்குத் தெரிஞ்ச அளவுக்கு உங்க குடும்பத்துக்குத் தான் அவரைப் பத்தி தெரியாது” இருவரும் மென்குரலில் தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொள்ள அக்னி இருவரின் முக பாவனையையும் சுவாரசியமாய் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவர்கள் இருவரும் காரில் ஏறாமல் வழக்கடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்த கோகிலா மாடியில் இருந்து பார்த்து விட்டு சத்தமிட்டார்.
“டேய்! கண்ணா… இன்னும் கிளம்பலையா?”
“இதோ கிளம்பிட்டோம் அத்தை” என்றவன் முன்னால் ஏறப் போக, மாடியில் இருந்தே அவனை அதட்டினார் கோகிலா.
“கண்ணா… அவங்க இரண்டு பேரும் முன்னாடி உட்கார்ந்து போகட்டும். நீ பின்னாடி உட்கார்ந்து போ”
‘தப்பிச்சேன்டா சாமி’ என்று எண்ணியவன் ஒரே தாவில் பின் சீட்டில் ஓடிப் போய் அமர்ந்து கொண்டான்.
அருந்ததி அன்னையின் முன்னிலையில் ஒன்றும் பேச முடியாமல் வேண்டா வெறுப்பாய் அவனுக்கு அருகில் வந்து அமர்ந்தாள்.
காரில் பின் சீட்டில் ஏறியதுமே நிம்மதி பெருமூச்சு விட்டபடி நிமிர்ந்து கண்ணாடியைப் பார்த்த கண்ணன் அலறினான்.
அவனையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த அக்னி லேசாய் இமை சிமிட்ட… காரின் ஜன்னலின் வழி கீழே குதிக்க தயாரானான் கண்ணன்.
‘இனி மறந்தும் அவன் தன்னைப் பார்க்க மாட்டான்’ என்பதை உறுதி படுத்திக் கொண்ட அக்னி, கண்ணன் அறியாமல் அருந்ததியைப் படுத்தி வைக்கத் தொடங்கினான்.
கியர் மாற்றும் பொழுதெல்லாம் வேண்டுமென்றே அவளை உரசி வைத்தான். முறைத்து பார்த்தவளுக்கு அவன் காட்டிய பச்சை குழந்தை பாவனையில் அவள் பல்லைக் கடிக்க அவனோ அதை எல்லாம் சட்டை செய்யவே இல்லை.
எல்லாம் ஒருபுறம் இருந்தாலும் அவர்கள் காரை யாரேனும் தொடர்ந்து வருகிறார்களா என்பதை கண்காணிக்கவும் மறக்கவில்லை அவன். இடையில் அருந்ததியின் பாதுகாப்பிற்க்காக எடுத்து வந்திருந்த துப்பாக்கியை யாரும் அறியாமல் ஒருமுறை தொட்டுப் பார்த்துக் கொண்டான்.
தியேட்டர் நெருங்கியதும் ஒருமுறை நன்றாக சுற்றிப் பார்த்தவன் ஆபத்தில்லை என்பதை உறுதி செய்து கொண்டு கண்களில் கூலர்ஸ் அணிந்து கொண்டான்.
கண்களில் கருப்பு கண்ணாடியை அணிந்து இருந்ததால் அவனின் பார்வை செல்லும் திசையை யாராலும் கணிக்க முடியாமல் போனது.
தியேட்டர் உள்ளே நுழையும் முன்னரே கண்ணன் டிக்கியில் எதையோ தேட அக்னி வேகமாக வந்து அதை பார்வையிட்டவன் தலையில் அடித்துக் கொண்டான்.
டிக்கி முழுவதும் விதவிதமான தின்பண்டங்களால் நிரம்பி வழிந்தது.
“இங்கே கேன்டீன் எதுவும் ஆரம்பிக்க போறீங்களா?”
“படம் பார்க்கும் பொழுது சாப்பிட வேணாமா?” கண்ணன், அருந்ததி இருவரும் கோரஸ் பாட அக்னி இருவரையும் சேர்த்து கேவலமாய் ஒரு லுக் விட்டு அங்கிருந்து அகன்று விட்டான்.
“என்னவோ இவருக்கு மட்டும் பசியே எடுக்காத மாதிரி தான் பார்ப்பார்… உள்ளே வந்து ஏதாவது கேட்கட்டும் அப்புறம் இருக்கு” என்று அருந்ததி திட்ட, கண்ணனும் ஒத்து ஊதினான்.
“ஆமா… நாம மட்டும் சாப்பிடலாம்” என்று ஆளுக்கு ஒரு பையில் கொண்டு வந்திருந்த தீனிகளை அள்ளிப் போட்டவர்கள் ஸ்டைலாக உள்ளே நுழையப் போக வாசலிலேயே தடுத்து நிறுத்தப்பட்டார்கள் இருவரும்.
“என்ன இவ்வளவு பெரிய பை வச்சு இருக்கீங்க? உள்ளே என்ன இருக்கு?” செக்யூரிட்டி தடுத்து நிறுத்தினார்.
“வெடிகுண்டா சார் வச்சு இருக்கோம். வெறும் ஸ்நாக்ஸ் தான்” என்று பையை பிரித்து காட்ட அவர்களிடம் இருந்த பையை பறித்துக் கொண்டு அதற்கு பதிலாக ஒரு டோக்கனை கையில் கொடுத்தார்கள்.
“வெளியில் இருந்து கொண்டு வர்ற ஸ்நாக்ஸ் எதுவும் எங்க தியேட்டரில் அலோவ் பண்ண மாட்டோம் மேடம்.. உங்களுக்கு வேண்டியது எல்லாம் உள்ளே கிடைக்கும் அங்கே போய் வாங்கிக்கோங்க. இந்தப் பையை நீங்க வெளியே போகும் பொழுது வாங்கிட்டு போங்க” என்று கறாராய் சொல்லி விட இருவரும் மூஞ்சியை தொங்கப் போட்டுக் கொண்டு உள்ளே வர அவர்கள் இருவரின் முகத்தையும் பார்த்து பீறிட்டு வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு நின்றான் அக்னி.
அவன் கைகளில் ஒரே ஒரு ஜூஸ் பாட்டில் மட்டும் இருக்க, அருந்ததி வேகமாக நடந்து அவன் அருகில் வந்தாள்.
“நீங்க மட்டும் எப்படி உள்ளே இதை கொண்டு வந்தீங்க? திருட்டுத்தனமா டிரஸ் உள்ளே மறைச்சு வச்சு எடுத்துட்டு வந்தீங்களா? முன்னாடியே சொல்லி இருந்தா நாங்களும் அப்படியே கொண்டு வந்து இருப்போம்ல” என்று சொல்ல… கண்ணன் பூம் பூம் மாடாகினான்.
“ஆமா… ஆமா”
“இது அருந்ததி குடிக்க வேண்டிய ஹெர்பல் ஜூஸ். அதனால இதை தடுக்கலை” என்று சொல்லி விட்டு அருந்ததியின் கரங்களில் பாட்டிலை திணித்தான்.
“இதை உடனே குடிச்சிடு…குடிக்கலைனா நோ ஸ்நாக்ஸ்” என்று கண்டிப்பாய் உரைத்தவன் டிக்கெட் கவுண்ட்டருக்கு செல்ல, அவனை முறைத்தபடியே வாயில் வைத்தவளின் முகம் அஷ்டகோணல் ஆனது.
“என்ன மூஞ்சி மாறுது”கிண்டலாக கேட்டான் கண்ணன்.
“அந்த பனை மரத்துல பாதி வளர்ந்தவன் பாகற்காய்ல ஜூஸ் போட்டு இருப்பான் போலடா.. கசக்குது” அழுவது போல முகத்தை வைத்துக் கொண்டாள்.
“எப்படியாவது குடிச்சிடு அருந்ததி. உன் புருசன் அப்புறம் தீனியை கண்ணுலேயே காட்ட மாட்டார். நான் வேற கிளம்புற அவசரத்துல பர்சை வீட்டில் வச்சுட்டு வந்துட்டேன்” என்று கண்ணன் வேறு அவன் பங்கிற்கு ஏற்றி விட, அக்னியை மனதுக்குள் வறுத்து எடுத்துக் கொண்டே அதை கஷ்டப்பட்டு குடித்து முடித்தாள்.
“அதுக்குள்ளே குடிச்சுட்டியா? உனக்கு இவ்வளவு பிடிக்கும்னு தெரிஞ்சு இருந்தா இன்னும் நாலு பாட்டில் எடுத்துட்டு வந்து இருப்பேன்” என்று சொல்லியபடி அக்னி வர, அருந்ததி அவனை ‘அட கிராதகா’ பார்வை பார்த்து வைத்தாள்.
“என்ன கருமம் இது?”
“ஜூஸ் மா”
“உங்க ஊர்ல ஜூஸ் இப்படித் தான் கசப்பா இருக்குமா?”
“அது தெரியலை… ஆனா அருகம்புல், கத்தாழை இதை எல்லாம் ஒண்ணா போட்டு மிக்சியில் அடிச்சு இனிப்பு சேர்க்காம குடிச்சா கசக்கும்னு மட்டும் தெரியும்” என்று சொன்னவனை என்ன செய்வது என்று புரியாமல் பற்களை கடித்தாள் அருந்ததி.
“மறுபடியும் பழைய மாதிரி என்னை பழி வாங்க சாப்பாட்டில் கை வைக்கறீங்களா?” என்று கேட்டவளை ஒன்றும் பதில் பேசாது தோளை குலுக்கி விட்டு சென்று விட்டான்.
அது புதிதாக திரைக்கு வந்திருந்த பேய் படம். படம் வெளிவந்து இரண்டு வாரங்கள் கடந்து இருந்ததால் கணிசமான கூட்டம் மட்டுமே இருந்தது.
கண்ணனும், அருந்ததியும் ஒருவரை ஒருவர் வம்பிழுத்துக் கொண்டு உள்ளே நுழைய இருக்கைகளில் அமரும் பொழுது அங்கே மீண்டும் ஒரு சண்டை வந்தது.
‘வேறு என்ன மூன்று இருக்கையில் யார் எங்கே அமர்வது என்று தான். அதுவும் அக்னிக்கு பக்கத்தில் அமர மறுத்து இருவருமே சண்டை போட, பொறுத்து பொறுத்து பார்த்த அக்னி, கண் இமைக்கும் நேரத்தில் அருந்ததியை தனக்கு பக்கத்தில் அமர்த்திக் கொண்டவன் நடுவில் தான் அமர்ந்து கொண்டு தனக்கு அடுத்த சீட்டை கண்ணனுக்கு கண்களால் காட்டினான்.
“நீ இங்கே உட்கார். அத்தை சொன்னது ஞாபகம் இருக்குல” என்றவன் கண்ணன் அமர்ந்ததும் லேசாக அவன் பக்கம் சாய்ந்து அமர்ந்தான்.
“அவளை மட்டும் தனியா ஓரத்தில் தள்ளிட்டு நாம படம் பார்த்தா அவ வீட்டில் அத்தை கிட்டே சொன்னாலும் சொல்லுவா. அதுதான். எப்படியும் நாம இரண்டு பேரும் ஜோடியா தானே இருக்கோம். நீ கவலைப்படாதே” என்று சொன்னபடி சேரின் மீதிருந்த அவனது கைகளை பற்ற முயல, கண்ணன் பாய்ந்து அடுத்த சீட்டுக்கு தாவி விட்டான்.
‘இது என்னடா… எனக்கு வந்த சோதனை’ என்று சோர்ந்து போன முகத்துடன் பக்கத்தில் திரும்பி பார்க்க அங்கே ஒரு இளம்பெண் ஸ்டைலாக அமர்ந்து இருந்தாள்.
அவளைப் பார்த்ததும் இவனுக்கு ஏக குஷி. தன்னைத் திரும்பி அவள் பார்க்கும் நொடிக்காக காத்திருந்தவன் அவளைப் பார்த்து ‘ஈஈஈஈ’ என்று இளித்து வைத்தான்.
அந்தப் பெண் என்ன நினைத்தாளோ வேகமாக அங்கிருந்து நகர்ந்து போய் பக்கத்து சீட்டில் அமர்ந்து கொள்ள, அந்த சீட்டில் இருந்த பாட்டி ஒருவர் அவன் பக்கத்தில் அமர்ந்து கொண்டு அவனைப் பார்த்து சிநேகமாக புன்னகைக்க, இவன் முகமோ விளக்கெண்ணெய் குடித்ததைப் போலானது.
“சை! எனக்குனு வந்து வாய்க்குதது பாரு… ஒன்னு ஆம்பிளை இல்லைன்னா கிழவியா? என்னடா கண்ணா உன் நிலைமை இப்படி ஆகிப் போச்சு. இப்படியே போனா உனக்கு லவ் லைப்னு ஒன்னு இருக்காது போலவே”என்று முணுமுணுத்தான்.
“அதான் நான் இருக்கேன்ல கண்ணா” என்று அக்னி அங்கிருந்தே கூற, கண்ணன் ஆந்தை முழி முழித்தான்.
‘இவ இந்தாளுக்கு வாக்கப்பட்டு சீரழியிறா… நான் வாக்கப்படாமலே சீரழியிறேன்’ என்று தனக்குள்ளாகவே புலம்பியவன் அதன் பிறகு சோகத்துடன் படத்தை பார்க்கத் தொடங்கி விட்டான்.
அக்னி சுற்றிலும் பார்வையிட்டுக் கொண்டே இருந்தான். எல்லாமே இயல்பாக இருந்தது. எதுவுமே தவறாக படவில்லை. அவ்வபொழுது கண்ணனையும் பார்த்தான். ஆரம்பத்தில் சந்நியாசம் போவது காசியா, ராமேஸ்வரமா என்பதைப் போல படத்தைப் பார்த்தவன், நேரம் கடக்க கடக்க படத்தில் தீவிரமாக மூழ்கி விட்டான்.
அருந்ததியை திரும்பிப் பார்க்க அவளோ பேய் படத்தை பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள். குழந்தை போல முகத்தை கைகளால் மூடிக் கொண்டு ஒரு விரல் மட்டும் நீக்கி அந்த ஓட்டை வழியே படத்தை பயந்து பயந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.
குழந்தை போல அவள் இருந்த தோற்றம் மனதைக் கவர, மெல்ல அவளை நெருங்கியவன் அவள் தோள்களில் கை போட்டு கொண்டான். அவளுக்கு இருந்த பயத்தில் அவள் அதை உணரவே இல்லை. படத்தில் பேய் வரும் காட்சிகளில் எல்லாம் அவளை அறியாமல் அவன் தோள்களில் சாய்ந்து கொண்டாள் அருந்ததி.
அக்னிக்கும் அது ஒரு புது அனுபவமாக இருந்தது.
பயத்தில் அவளுக்கு மயிர் கூச்செறிவதை அவனால் உணர முடிய, ஏதோவொரு உணர்வு உடல் முழுக்க தீயாய் பரவத் தொடங்கியது.
அவன் கைகள் மெல்ல அவள் தோள்களை வருடத் தொடங்கியது.
அவள் பயத்தில் மூழ்கியது அவனுக்கு அவஸ்தையாகவும் இருந்தது, வசதியாகவும் இருந்தது.
இடைவேளை நேரத்தில் பேயின் முகம் திரையில் பெரிதாக காட்டப்பட அலறலுடன் அவன் தோள்களில் சாய்ந்து கொண்டாள் அருந்ததி. அவன் கழுத்தில் அவள் முகம்… சூடான அவளின் மூச்சுகள் அவன் உடலில் இரசாயன மாற்றத்தை தோற்றுவித்தது.
கண்ணன் அவர்கள் இருவரும் அமர்ந்து இருந்த கோலத்தை பார்த்து விட்டு ஒன்றுமே சொல்லாமல் “அருந்ததி” என்று மட்டும் அழைத்தான்.
‘எதுக்கு வம்பு? நம்ம ஏதாவது கேட்க போய் இந்த அக்னி ப்ரோ நம்ம பக்கம் அம்பை திருப்பிடுவார். நாம பார்க்காத மாதிரியே இருந்துக்குவோம்’
அவன் சத்தத்தில் இருவரும் சுயம் உணர்ந்து விலகினர். அக்னிக்கு கொஞ்சம் உள்ளுக்குள் ஏமாற்றம் தான். ‘என்ன செய்வது பொது வெளியில் அல்லவா இருக்கிறோம்’ என்று மனதை தேற்றிக் கொண்டான்.
அருந்ததிக்கு உள்ளுக்குள் கொஞ்சம் வெட்கமாய் போனது. இத்தனை பேர் இருக்கும் இடத்தில் இப்படியா நடந்து கொள்வேன்… எத்தனை பேர் பார்த்தாங்களோ தெரியலையே’
“உனக்கு பாப்கார்ன், பப்ஸ், கோக் அப்புறம் கோல்டு காபி போதும் தானே அருந்ததி”அவளிடம் பட்டியலிட்ட கண்ணன் அக்னியிடம் கை நீட்டினான்.
‘என்ன’ என்று அவன் கண்களால் கேட்க , கண்ணனோ போலியாய் வியந்தான்.
“காசு கொடுங்க ப்ரோ… தியேட்டருக்கு நீங்க தானே கூட்டிட்டு வந்தீங்க.. அப்போ நீங்க தான் ஸ்பான்சர் பண்ணனும்”
“நான் என் பொண்டாட்டியை மட்டும் தான் கூட்டிட்டு வந்தேன். எக்ஸ்ட்ராவா கூட வந்த ஆளுக்கு எல்லாம் டிக்கெட் எடுத்ததே பெருசு…”
“அப்போ காசு தர மாட்டீங்களா?” என்று கண்ணன் முறைக்க…
“வேணும்னா டார்லிங்க்னு கூப்பிடு… ஒன்னு என்ன பத்து வாங்கித் தர்றேன்” என்று கேலி பேச… கண்ணன் கடுப்புடன் சேரில் அமர்ந்து கொண்டான். அருந்ததி தான் பாவமாய் முழித்து வைத்தாள்.
‘இப்போ பாப்கார்ன் வருமா? வராதா?’ என்று.
எல்லோரும் அவரவர் சீட்டில் அமர்ந்து இருக்க, அவர்கள் இருந்த இடம் தேடி ஒரு மினி கேண்டீனே வந்தது.
அருந்ததி ஆவலாய் பார்க்க, கண்ணன் ஆச்சர்யமும் கேள்வியுமாய் பார்த்து வைத்தான்.
“இங்கே எனக்கு தெரிஞ்சவங்க வேலை செய்றாங்க. அவங்க கிட்டே முன்னாடியே பணம் கொடுத்து இன்டர்வல் நேரத்துல கொண்டு வர சொல்லி இருந்தேன்” என்று சொன்னபடி ஆளுக்கு ஒரு பாப்கார்ன் பொட்டலத்தை நீட்டியவன் அருந்ததியை வெளியே தெரியாத வண்ணம் சீண்டிக் கொண்டே உண்ணத் தொடங்கினான்.
மெல்ல அவன் அருகில் வந்த கண்ணன் அவன் காதோரம் குனிந்து பேசினான்.
“என்னால உங்களை புரிஞ்சுக்கவே முடியலை ப்ரோ… எல்லாத்தையும் பார்த்து பார்த்து செய்றீங்க… உங்க பக்கத்துலயே வர முடியாத படி பதறவும் வைக்கறீங்க. எதையோ மறைக்கறீங்க… அது என்னன்னு தான் தெரியலை”
“ரொம்ப சிம்பிள் கண்ணா… எனக்கு அருந்ததி வேண்டாம். நானே அவளை வேண்டாம்னு சொல்லாம…. அவளே விலகிப் போகணும்னு நினைக்கிறேன். அதே சமயம் அவளுக்காக நான் உன்னை ஒதுக்க முடியாது இல்லையா? நான் பார்த்து பார்த்து செய்றது எல்லாமே உனக்காக மட்டும் தான் டார்லிங்” என்று மென்குரலில் திரைப்பட பாணியில் வசனம் பேசியவன் கண்ணனின் கைகளைப் பற்றி மெல்ல முத்தமிட வர, கண்ணன் வேகமாக கையை உருவிக் கொண்டான்.
“அய்யோ… நான் அவன் இல்லை… அவன் இல்லை” என்று கத்திக் கொண்டே வெளியே ஓடியவனை அருந்ததி குழப்பமாக பார்க்க, அக்னியோ அடக்க மாட்டாமல் சிரிக்கத் தொடங்கினான்.
