மின்மினியின் மின்சார காதலன் அத்தியாயம் 29 tamil novels

0
436

அத்தியாயம் 29
அக்னியின் கரங்களுக்குள் அருந்ததி வாகாய் பொருந்தி இருந்தாள். எந்த வித கவலையும், சஞ்சலமும் இன்றி சில நொடிகள் அந்த அணைப்பு நீடித்தது. இருவருமே ஒருவரிடம் மற்றவர் ஆறுதல் தேடுவதாய் அமைந்தது. முதலில் சுதாரித்தது அருந்ததி தான். அவள் விலக, அக்னியும் அவளை வற்புறுத்தாமல் அவளை அருகில் அமர்த்திக் கொண்டு அவள் கரங்களை தன்னுடைய கரத்துடன் இறுகப் பற்றிக் கொண்டான்.
“ஜெனிபர் என்கிட்டே இருந்த ஒரு வருசம் நான் அவ்வளவு சந்தோசமா இருந்தேன் அதி… ஆம்பிளை நான் என்னை அவ ஒரு அம்மாவா தாய்மையை உணர வச்சா… அந்த பீலே தனி. இந்த உலகத்துல யார் இருந்தாலும் அவ கண்ணு என்னைத் தான் தேடும். அப்போ தான் பேசவே ஆரம்பிச்சா… அவ முதன்முதலா சொன்ன வார்த்தை அப்பா தான். அப்போ எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா?
அவ என்கிட்டே வந்த பிறகு நான் வேற ஒரு வாழ்க்கையைப் பத்தி யோசிச்சதே இல்லை. அப்பா கூட நிறைய முறை பேசினார். கடைசியா என்கிட்டே வந்து கல்யாணத்தைப் பத்தி பேசினப்போ கூட அவர் கிட்டே நான் சொன்னது ஒன்னே ஒன்னு தான். ஜெனிபரைப் பத்தியும், என்னைப் பத்தியும் எல்லா உண்மையும் தெரிஞ்சு எந்த பொண்ணாவது வந்தா பார்க்கலாம்.
கல்யாணத்துக்கு அப்புறமா ஜெனிபரை ஹாஸ்டலில் சேர்க்கிறேன், அனாதை இல்லத்தில் சேர்க்கிறேன்னு அப்படிங்கிற பேச்செல்லாம் வரக்கூடாதுன்னு ரொம்ப தெளிவா சொல்லிட்டேன். அவரும் அதுக்கு சம்மதிச்சார். என்னோட கண்டிஷனுக்கு எல்லாம் ஒத்துவர்ற மாதிரி பொண்ணையே பார்க்கிறேன்னு தான் சொன்னார். ஆனா… அம்மா… அம்மாவுக்கு அதெல்லாம் பிடிக்கலை போல… இந்தப்பக்கம் என்கிட்டே நல்லபடியா பேசி அனுப்பிட்டு அந்தப்பக்கம் ஜெனிபரை… ஜெனிபரை…”தொண்டை அடைக்க குரல் கமற அப்படியே நிறுத்தி விட்டான் அக்னி.
“நீங்க தேவை இல்லாம யோசிச்சு உங்களை நீங்களே வருத்திக்கறீங்களோன்னு எனக்கு தோணுது. அது ஒரு ஆக்சிடென்ட்… ஒரு நிமிஷத்துல நடந்த ஒரு விஷயம். உங்க அம்மா ஒன்னும் அதை வேணும்னு செய்யலையே. எதிர்பாராம நடந்த ஒரு விஷயத்துக்கு அவங்களை தண்டிக்கறதோட மட்டுமில்லாம நீங்களும் மனசளவுல ஒவ்வொரு நாளும் இதையே நினைச்சு வருத்தப்பட்டு உங்களுக்கு நீங்களே தண்டனை கொடுத்துக்கறீங்க.”அவன் மனதில் இருக்கும் காயத்திற்கு மருந்திட முயன்றாள் அருந்ததி.
“இருக்கலாம். ஆனா அவங்க இன்னும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்து இருக்கலாமே. போனா போகட்டும்னு விட இது என்ன சாதாரண விஷயமா? ஒரு உயிர்” இயல்பாக பேசத் தொடங்கியவனின் குரல் இறுதியில் கரகரத்துப் போனது.
“இப்படி எல்லாம் யோசிச்சா எப்படி? ஒருவேளை உங்க பாதுகாப்பில் இருக்கும்போது இப்படி அந்த குழந்தை தவறி விழுந்து இறந்து இருந்தா?”
“நான் ஜெனிபரை விட்டு ஒரு நிமிஷம் கூட பிரிய மாட்டேன். தெரியுமா?”அவன் குரலில் இன்னதென்று இனம் பிரிக்க முடியாத உணர்வுகள் கலவையாய் இருந்தது. பரிதவிப்பு, கசப்பு, வெறுப்பு, கோபம், வலி,ஆற்றாமை எல்லாமே நிறைந்து இருந்தது. அருந்ததிக்கு அவன் உணர்வுகள் புரியாமல் இல்லை. ஆனால் இன்னும் எத்தனை காலம் தான் அவர்களை வேதனைப்படுத்திக் கொண்டே இருப்பான். இதற்கு என்ன தான் தீர்வு என்று சிந்திக்கத் தொடங்கி விட்டாள்.
அதே நேரம் ஊரில் தாரா சிபியை கோபமாக திட்டிக் கொண்டிருந்தாள்.
“உண்மையை சொல்லுங்க… நீங்க நிஜமாவே அந்த அருந்ததியை கொல்ல நினைக்கறீங்களா?”
“ஏன் தாரா இப்படி ஒரு கேள்வி?”
“எனக்கு என்னவோ சந்தேகமா இருக்கு”
“ஹா ஹா… என்ன சந்தேகம்?”
“என் கூடவே சுத்தி எனக்கு எதிரா எல்லா ஆதாரத்தையும் திரட்டி வைச்சுக்கிட்டு என்னை பிளாக்மெயில் செஞ்சு பணம் வாங்கப் போறீங்களா?”
“பணமா? ஹ.. அது என்கிட்டே தேவைக்கு அதிகமாவே இருக்கு. இன்னும் சொல்லணும்னா நான் நினைச்சா உன்னையே விலைக்கு வாங்குவேன் அந்த அளவுக்கு என்கிட்டே பணம் இருக்கு”
“ஸோ… உங்க நோக்கம் பணம் கிடையாது இல்லையா?” என்றாள் அவன் முகத்தையே கூர்மையாக அளவிட்ட்படி.
“அப்படியும் வச்சுக்கலாம்” பிடி கொடுக்காமல் நழுவினான் சிபி.
“உங்ககிட்டே என்னைப் பத்தின எதையும் நான் மறைக்கலை”
“ஹா ஹா… மேடம் பக்காவா உங்களைப் பத்தி எல்லா தகவலையும் விசாரிச்சு, நீங்க மறுக்கவே முடியாதபடி உங்களை லாக் பண்ணி உன்னை சம்மதிக்க வச்சேன் தாரா. நீயும் இனி தப்பிக்க முடியாதுங்கிற நிலைமையில் தான் ஒத்துக்கிட்ட. அதை மறந்துட்டு பேசாதே”
“எப்படியோ… நான் உங்களை நம்பி நீங்க சொல்றதை எல்லாம் கேள்வி கேட்காம செய்றேன் தானே…” என்று கேட்க சிபியோ அவளை பார்வையால் துளைத்தான்.
“இப்போ உனக்கு என்ன வேணும் தாரா? எதுவா இருந்தாலும் நேரடியா கேளு”
“உங்களைப் பத்தி நீங்க எதையோ மறைக்கிற மாதிரி எனக்கு தோணுது.”
“நான் எதை மறைக்கப் போறேன்? நீயா கண்டதையும் கற்பனை செஞ்சுக்கற?” பிடி கொடுக்காமல் நழுவினான் சிபி.
“அந்த அக்னியையும், அருந்ததியையும் எதுவுமே செய்யாம ஏன் விட்டு வச்சு இருக்கீங்க? இப்போ அவங்க இரண்டு பேர் மட்டும் தனியாத் தானே இருக்காங்க.”
“நான் சொன்னதை மறந்துட்டியா தாரா? இன்னும் கொஞ்ச நாள் ஆகட்டும்… அவங்க இரண்டு பேரும் மனசளவுல நெருங்கணும்.”
“அது இப்போதைக்கு நடக்கிற விஷயமா? இந்த அக்னி சரியான திமிர் பிடிச்சவன். அதுவும் கல்யாணமே வேண்டாம்னு சொல்லிட்டு இருந்தவன். அப்படிப்பட்டவன் அருந்ததி கிட்டே காதல் வந்து உருகி வழியப் போறானா?”
“அவனுக்கு அருந்ததியைப் பிடிக்காதுன்னு உனக்கு யார் சொன்னா? அதெல்லாம் அவளைப் பிடிக்கும். அவளைப் பிடிக்கலைனா அவன் அந்த வீட்டில் தங்கவே சம்மதிச்சு இருக்க மாட்டான்.”
“ஹ… அது அவங்க வீட்டில் எல்லாரும் வற்புறுத்தி… வேற வழியில்லாம….”
“உனக்குத்தான் அக்னியைப் பத்தி சரியா தெரியலை… ரொம்ப அழுத்தக்காரன். தலைகீழா நின்னாலும் அவனுக்கு பிடிக்காததை செய்ய வைக்க யாராலும் முடியாது”
“நீங்க சொல்றது?…”
“முழுக்க முழுக்க நிஜம்… எனக்குத் தெரிஞ்சு அக்னி இந்நேரம் அவளை விரும்ப ஆரம்பிச்சு இருப்பான். இன்னும் கொஞ்ச நாள் ஆகட்டும். அவங்க இரண்டு பேரும் நெருங்கி பழகணும். ஒருத்தர் மேல ஒருத்தர் உயிரா இருக்கணும். அப்போ தன்னோட கண் எதிர்ல தான் நேசிக்கிறவங்களுக்கு ஏதாவது ஆச்சுனா அந்த வலி எப்படி இருக்கும் தெரியுமா?” பழி வெறியில் கண்கள் பளபளக்க பேசியவனைக் கண்டு தாராவிற்கு உள்ளுக்குள் குளிர் எடுத்தது.
“அதெல்லாம் சரி தான். ஆனா அவங்க இரண்டு பேரும் ஏதோ பிரண்ட்ஸ் மாதிரி தான் பேசிக்கிறாங்க… புருசன், பொண்டாட்டி மாதிரி இருக்கலையே”
“அப்படின்னு உனக்கு யார் சொன்னது?” என்று கேட்டவன் தன்னுடைய ஆள் எடுத்து அனுப்பிய போட்டோவை தாராவிற்கு காட்டினான்.
பூங்காவில் அவளை கையில் ஏந்தியபடி கண்களில் பொங்கி வரும் நேசத்துடன் அக்னியும், அருந்ததியும் அதில் இருக்க, தாரா வாயைப் பிளந்தாள்.
“நான் என்னவோ இந்த அக்னி சரியான சாமியார்னு நினைச்சேன்.”
“அதெல்லாம் உனக்குப் புரியாது. ஆம்பிளைக்கு மனசுல காதல் வர்றதுக்கு பத்து வருசம் தேவை கிடையாது. நொடிக் கணக்கே போதும். அதுவும் அக்னிக்கு ஒருமுறை அவ மேல காதல் வந்துட்டா.. ஜென்மத்துக்கும் பின் வாங்க மாட்டான். ஒருவேளை என்னால அவனை கொல்ல முடியாட்டியும் அருந்ததியைக் கொன்னாக் கூட போதும். தன்னோட வாழ்க்கை முழுக்க அவளை நினைச்சே வாழ்வானே தவிர வேற கல்யாணம் பண்ணிக்க மாட்டான்”
“உன்னோட நோக்கம் அக்னிபுத்திரனை கொல்றதா… அவன் தனியாவே யாரோட துணையும் இல்லாம வாழுறதா.. என்கிட்டே அருந்ததியை கொல்லணும்னு தானே ஆரம்பத்தில் சொன்ன?” என்று கேட்க சிபி சுதாரித்தான்.
“ஒரே கல்லில் இரண்டு மாங்காய். நான் அருந்ததியை முடிச்சுட்டா உனக்கு வேலை ஈசி தானே? அருந்ததியை கொன்னுட்டா அக்னி மனசளவுல ரொம்ப வீக்கா மாறிடுவான். உனக்குத் தான் லாபம். முதல்ல பிளான் ஏ முயற்சி செய்வேன். முடியாதபட்சத்தில் பிளான் பி. இரண்டுமே நமக்கு லாபம் தான்.”அசட்டையாக தோள் குலுக்கினான் சிபி.
“ஒருவேளை உங்களைப் பத்தி அக்னிக்கு தெரிய வந்துட்டா?”
“ஹ… அதுக்கு வாய்ப்பே இல்லை… என்னைப் பத்தி முழுசா தெரிஞ்ச ஒரே ஆள் அந்த சிவநேசன் தான். ஆனா அந்தாளு என்னைப் பத்தி வாயைத் திறக்கவே மாட்டார். அருந்ததிக்கும் என்னைப் பத்தி எதுவும் தெரியாது. அப்புறம் எப்படி அவனுக்கு என்னைப் பத்தி தெரிய வரும்?”
“ரொம்ப ஓவர் தைரியத்துல இருக்கிற மாதிரி தோணுது எனக்கு… நீங்க அந்த அக்னியை குறைவா எடைப் போட்டு இருக்கீங்க”
“இல்லை தாரா.. நான் எல்லாரைப் பத்தியும் சரியா கணிச்சு வச்சு இருக்கேன். என்னோட கணிப்புப்படி தான் இதுவரைக்கும் எல்லாமே நடந்து இருக்கு. இனியும் அப்படித் தான் நடக்கும்” என்று முழு நம்பிக்கையோடு சொன்னவனை கொஞ்சம் பயத்துடன் தான் பார்த்தாள் தாரா.
“எனக்கு ஒரு கேள்வி கேட்கணும்?”
“கேள்வியா? சந்தேகமா? என்றான் அவளை அறிந்தவனாய்.
“எப்படி வேணா வச்சுக்கோங்க”
“ம்ம்ம்… கேளேன்”
“உங்க காரியம் முடிஞ்சதும் என்னை.. எ.. எதுவும் செஞ்சிட மாட்டீங்க தானே?” குரலில் அவளையும் மீறி பயம் தெரிந்தது. இத்தனை நாட்களில் அவள் சிபியைப் பற்றி ஓரளவிற்கு நன்றாகவே அறிந்து வைத்து இருக்கிறாள். அவனுக்கு தேவை இருக்கும் வரை தான் அவர்களை வைத்து இருப்பான். வேலை முடிந்த பிறகு தூக்கி எறிந்து விடுவான். பின் நாளில் அவர்களால் ஆபத்து வரும் என்று துளி அளவு சந்தேகம் வந்தால் கூட யோசிக்காமல் ஆளை முடித்து விடுவான். அதற்கெல்லாம் ஒரு நாள் கூட அவன் வருந்தியது இல்லை. அப்படிப்பட்டவன் தன்னை மட்டும் விட்டு வைப்பானா என்ன? தன்னையும் கொன்று விட்டால் என்ன செய்வது என்ற பயம் சமீப காலமாக தாராவிற்கு தோன்ற ஆரம்பித்து இருந்தது.
“ஹா ஹா” பதில் சொல்லாமல் சிரித்தான் சிபி.
“கேள்விக்கு பதில் சொல்லாம இப்படி சிரிச்சா என்ன அர்த்தம்?” கோபமாகத் தான் கேட்க முயன்றாள். ஆனால் அவளது குரல் அவளுக்கு எதிராக சதி செய்தது.
“உன்னை நினைச்சு தான் சிரிக்கிறேன் தாரா… ஹே.. உடனே பயப்பட ஆரம்பிச்சுடாதே… நீ இப்படி என்னைப் பார்த்து பயப்படுறதை நினைச்சு தான் சிரிக்கிறேன். நீ இவ்வளவு ஷார்ப்ன்னு நான் நினைக்கலை”
“கிண்டல் செய்றீங்களா?”
“பின்னே… என் கூட கூட்டணி வச்சுக்கிறதுக்கு முன்னாடி உனக்கு இந்த சந்தேகம் வந்து இருக்கணும். அதை விட்டு இத்தனை நாள் கழிச்சு வந்து இருக்கு… என்னை வேற எப்படி பேச சொல்ற?”
“ அப்போ என்னை ஏதாவது செஞ்சுடுவீங்களா?”
“இதோ பார்… நான் பாம்பு மாதிரி… நான் பாட்டுக்கு ஒரு ஓரமா சுருண்டு கிடப்பேன். என்னை யாரும் சீண்டாத வரை… என்னோட உயிருக்கு ஆபத்து வராத வரை நான் சிவனேன்னு தான் இருப்பேன். சீண்டினா கண்டிப்பா உயிரை எடுத்துடுவேன். ஆனா நீ பயப்படாதே.. நீ தான் எப்பவும் எனக்கெதிரா எதுவும் செய்யப் போறது இல்லையே” என்றவன் நிதானமாக தன்னுடைய கையில் இருந்த காபியை ரசித்து குடிக்கலானான்.
அவன் சொல்வதில் உள்ள சேதி புரியாத அளவிற்கு தாரா ஒன்றும் குழந்தை இல்லையே. அவனுக்கு எதிராக ஒரு அடி எடுத்து வைத்தாலும் நிச்சயம் தன்னுடைய உயிரை எடுத்து விடுவான் என்பதை அவளுக்கு தெளிவாக சொல்லி விட்டானே.
‘அவசரப்பட்டு இவனிடம் வந்து மாட்டிக் கொண்டோமோ’ என்று காலம் கடந்து சிந்தித்தாள் தாரா. ஆனால் இனி வேறு வழியில்லை. பின் வாங்க முடியாது. இவனிடம் இருந்து தப்ப முடியாது. தாரா வசதியான வீட்டுப் பெண் தான். ஆனால் அவளை விடவும் இவன் அதிக வசதி படைத்தவன் என்பதை இத்தனை நாட்களில் அவள் அறிந்து வைத்து இருந்தாள்.
காவல் துறையில் உள்ள சில உயர் அதிகாரிகளும், சில முக்கிய அரசியல் பிரமுகர்களும் அவனது கைப்பாவையாக ஆடுவதை இத்தனை நாளில் கண் கூடாக கண்டு இருக்கிறாள்.
வீட்டு ஆட்களிடம் சொல்லி உதவி கேட்கலாம் என்றால் அதுவும் அவளால் முடியாது. வீட்டில் என்னவென்று சொல்ல முடியும் அவளால். நான் கொலை செய்து பழி வாங்க இவனுடன் கூட்டு சேர்ந்தேன். இப்பொழுது இவன் என்னையும் சேர்த்து கொன்று விடுவானோ என்று பயமாக இருக்கிறது எப்படியாவது காப்பாற்றுங்கள் என்றா? அவள் வீட்டினர் அவளை பார்க்கும்வெறுப்பு நிறைந்த பார்வையிலேயே அவள் உயிர் போய் விடாதா?
அவளால் நிச்சயம் அவனை எதிர்க்க முடியாது. அவன் சொல்வதை எல்லாம் மறுபேச்சின்றி செய்வதைத் தவிர தனக்கு வேறு எந்த வழியும் இருப்பதாக அவளுக்கு தோன்றவில்லை.
அவன் சொல்வது எல்லாவற்றையும் உருப்படியாக செய்தாலும் கூட தன்னை உயிரோடு விட மாட்டனோ என்ற சந்தேகம் முன்னைக் காட்டிலும் இப்பொழுது வலுக்கத் தொடங்கியது அவளுக்கு.
பாம்பு புற்றுக்குள் கையை விட்டால் தப்பிக்கலாம். தலையை விட்டால் தப்பிக்க வழியேது?

Free download novels
Madhumathi Bharath
Facebook Comments Box
What’s your Reaction?
+1
4
+1
0
+1
3
+1
0
+1
0
+1
1
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here