மின்மினியின் மின்சார காதலன் 31 tamil novels

0
971

அத்தியாயம் 31

சிபியும், தாராவும் தங்களது வழக்கம் போல உயர்தர நட்சத்திர ஹோட்டலில் தனியாக ஒரு இடத்தை பதிவு செய்து அங்கே அமர்ந்து இருந்தார்கள். சும்மா பேருக்கு எதையோ ஆர்டர் செய்து விட்டு தாரா வேடிக்கை பார்த்தபடி  அமர்ந்து இருக்க, சிபியின் முகமோ தீவிரமாக இருந்தது.

“தாரா…”

“சொல்லுங்க” அவள் குரலில் சிரத்தை இல்லை. ஏதோ கடனே என்று அங்கே வந்து அமர்ந்து இருந்தாள். அவளுக்கு இப்பொழுதெல்லாம் சிபியை சந்திக்க அவ்வளவாக விருப்பம் இருப்பதில்லை. அதற்காக அவன் வர சொன்னால் வர முடியாது என்று மறுத்து பேசும் தைரியமும் அவளிடத்தில் இல்லையே. அவனிடம் மறுத்து பேசினால் அவன் சும்மா விட்டு விடுவானா? அவனை பார்க்கும் பொழுதெல்லாம் அவளுக்கு ஏதோவொரு உறுத்தல்… சரியாக இனம் காண முடியாவிட்டாலும் அவனிடம் ஏதோவொரு தவறு இருப்பதை அவள் உணர்ந்து கொண்டாள்.

பாம்பின் கால் பாம்பறியுமே… அதைப் போல…

இப்பொழுதும் அவனோடு தான் இருக்கிறாள். அவனுக்கு பயந்து தான்… ஆனால் விருப்பமின்மையை அப்பட்டமாக முகத்தில் காட்டினாள். ஆனால் அதை எல்லாம் கண்டு கொள்ளும் மனநிலையில் அவன் இல்லை.

“நாம நினைச்சது கூடிய சீக்கிரம் நடக்கப் போகுது தாரா”

“…”

“அக்னியும், அருந்ததியும் ஒருத்தரை ஒருத்தர் நெருங்க ஆரம்பிச்சுட்டாங்க.. இதே வேகத்தில் எல்லாமே நடந்தா… மிஞ்சிப் போனா இன்னும் இரண்டு மாசம் போதும். அவங்க கதையை முடிக்க” என்று உற்சாகமாய் அவன் பேச, தாராவோ கொட்டாவி விட்டாள்.

“தாரா” அவளை எச்சரிக்கும் விதமாய் அவன் குரல் உயர்ந்தது.

“கேட்டுட்டு தான் இருக்கேன்”என்றாள் அசிரத்தையாய்.

“உன் கவனம் இங்கே இல்லையே தாரா” தாடையை தடவிக் கொண்டே அவளை உற்று நோக்கினான் அவன்.

அவனும் கொஞ்ச நாட்களாய் தாராவைக் கவனித்துக் கொண்டு தானே இருக்கிறான். அவளின் நடவடிக்கையில் நிறைய மாற்றங்கள்.

“இருக்கலாம்… கொஞ்சம் வேற யோசனை…” எல்லாம் தெரிந்து கொண்டே கேட்கும் அவனிடம் விளக்க அவளுக்கு பிடிக்கவில்லை.

“வேற யோசனையா? நான் என்னவோ அந்த இரண்டு பேரை கொல்றதுல என்னை விட நீ தான் ரொம்ப ஆர்வமா இருப்பனு நினைச்சேன்.”

 “சாரி சிபி… எனக்கு அதுல ஒருத்தர் செத்தா போதும்… இன்னொன்னு என்னோட கணக்கில் வராது”

“அதுக்கும் தான் நீ இப்போவெல்லாம் ஆர்வமே காட்ட மாட்டேங்கிற தாரா..”

“கொலை பண்ணுறதுக்கு எதுக்கு சிபி ஆர்வம் வரணும்… நான் என்ன பரம்பரை கொலைகாரியா? காசு கொடுத்தா கொலை செய்ய ஆயிரம் பேர் வருவாங்க… அவங்க யார்க்கிட்டயாவது சொன்னா நம்ம வேலை ஈசியா முடிஞ்சுடும்… அதை விட்டுட்டு…”

“என்ன தாரா அவ்வளவு ஈசியா சொல்லிட்ட…”

“பின்னே? வேற எப்படி சொல்ல சொல்றீங்க?”

“சும்மா எவனோ ஒருத்தன் கொன்னா நமக்கு எப்படி மனசு திருப்தி வரும் தாரா?”

“நமக்குன்னு என்னையும் இதுல கூட்டு சேர்க்காதீங்க… எனக்கு அவங்க சாகணும்… அவ்வளவு தான்”

“ஆனா எனக்கு அப்படி இல்லை தாரா…அவங்க துடிக்கிற துடிப்பையும், தவிப்பையும் கண்ணால பார்க்கணும். சாகப் போற கடைசி நிமிஷம் அவங்க கண்ணுல தெரியற பயம், பரிதவிப்பு இதை எல்லாம் அவங்களுக்கு எதிர்ல உட்கார்ந்து ரசிக்கணும்.  அவங்க செத்ததும் பார்க்கப் போற கடைசி முகம் என்னோடதா தான் இருக்கணும். கடைசி சொட்டு ரத்தம் வெளியாகி, உயிருக்கு போராடி… அவங்க உடம்பில் இருந்து உயிர் பிரியறதை நான் பார்க்கணும்.” என்று கண்கள் பழி வெறியில் மின்னப் பேசியவனைக் கண்டு அவளுக்கு உள்ளுக்குள் உதறல் எடுத்தது.

“நீங்க ரொம்ப கொடூரமா  யோசிக்கிற மாதிரி இருக்கு சிபி”

“கொடூரமாவா? ஹ… நான் அனுபவிச்ச  வலியும் வேதனையும் என்னை விட நூறு மடங்கு அதிகமா என் எதிரிக்கு கொடுப்பேன். அப்போ தான் எனக்கு நிம்மதி.”

அவனை பழி வாங்க காத்திருக்கும் சிறுத்தை என்று அவள் நினைத்திருக்க அவனோ உலகில் உள்ள அத்தனை கொடூர விலங்குகளின் கூடாரமாய் திரிந்தான்.

புலி, சிங்கம் கூட பசிக்காக உணவை வேட்டையாடி உண்ணும். இவனோ கழுதைப்புலி போல தோன்றினான் அவளுக்கு.

அவள் பார்வை அவனை பயத்தோடு வெறித்தது.

அவளுக்கு நன்றாகத் தெரிந்தது. இவனிடம் வசமாக தான் வந்து சிக்கிக் கொண்டோம் என்று. ஆனால் தப்பும் வழி தெரியவில்லை.

அருந்ததியை தேடிக் கொண்டு கீழே சென்ற அக்னி அங்கே தனியாக அமர்ந்து போனில் யாரிடமோ ரகசியமாக பேசிக் கொண்டிருந்தவளை கண்டதும் புருவங்கள் முடிச்சிட சத்தமில்லாமல் மெதுவாக அவள் பின்னால் போய் நின்றான்.

“கண்ணா… நான் சொன்னது ஞாபகம் இருக்கட்டும். யாருக்கும் சந்தேகம் வராம காரியத்தை செய்யணும்…”

“…”

“வேலையை முடிச்சுட்டு என்கிட்டே தான் முதல்ல சொல்லணும்..”

“…”

“உன் போலீஸ் வேலையை எதுவும் இதுல காட்டின… கொன்னுடுவேன்.. ஜாக்கிர…” என்று அவள் அவனை மிரட்டிக் கொண்டிருக்கும் பொழுதே அவள் கரங்களில் இருந்து போனை பறித்த அக்னி, போனை எடுத்து தன்னுடைய காதில் பொருத்திக் கொண்டான். தன்னை முறைத்துப் பார்த்து போனை மீண்டுமாய் பறிக்க முயன்ற அருந்ததியைப் பார்த்து கண் சிமிட்டிக் கொண்டே போனில் கவனத்தை செலுத்தினான்.

“நீ கொலை கூட பண்ணிக்கோ… தயவு செஞ்சு உன் புருசன் கிட்டே மட்டும் கோர்த்து விட்டுடாதே… மனுசனா அந்த ஆளு” அந்தப் பக்கம் கண்ணன் கடுகாய் பொறிய, அக்னியின் முகத்தில் அடக்கப்பட்ட புன்னகை.

“கண்ணாஆஆ” சிவாஜி கணேசனை போல இழுத்து பேச, எதிர்முனையில் இருந்த கண்ணன் ஜெர்க் ஆனான்.

‘ஆத்தி… அவனா?’

“என்கிட்டே பேசாம உன்னால இருக்க முடியலை தானே கண்ணா…” அவனை சீண்டத் தொடங்கினான். ‘இன்னிக்கு நல்லா பொழுது போகும் போலவே’

“மண்ணாங்கட்டி…நீ இருக்கிற திசை பக்கம் கூட நான் திரும்ப மாட்டேன். உங்க பொண்டாட்டி தான் எனக்கு போன் செஞ்சா”

“என் பொண்டாட்டி என்ன சொன்னா.. உன்னை எதுவும் மிரட்டினாளா சொல்லு… அவளை உண்டு இல்லைன்னு ஆக்கிடறேன். ஏன்னா இந்த உலகத்துல எனக்கு முக்கியமான ஒரு ஆளுன்னா அது நீ தான்.” என்று பேசியபடி அருகில் முறைத்துக் கொண்டு நின்ற அருந்ததியின் தோளில் கையை போட்டு தனக்கு அருகில் இழுத்துக் கொண்டான்.

“அ…அதெல்லாம் ஒண்ணுமில்லை… நாங்க சும்மா பேசிட்டு இருந்தோம்” என்று அவன் கொஞ்சம் தடுமாற்றமாக பேச அதுவே சொன்னது அவன் எதையோ மறைக்கிறான் என்று. தெரிந்தும் அக்னி ஒன்றும் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.

“எதுவா இருந்தாலும் தயங்காம சொல்லு கண்ணா… நீ என்னோட ஆளு… என்னோட முழு சப்போர்ட் உனக்குத் தான். உனக்குப் பிறகு தான் யாரா இருந்தாலும்” என்று கிண்டலாக சொல்லி விட்டு அருந்ததியைப் பார்த்து கண் சிமிட்ட, அவள் அவனது கைகளை தள்ளி விட்டு கொஞ்சம் தள்ளிப் போய் நின்று கொண்டாள்.

“அதான் ஒன்னுமில்லைன்னு சொல்றேன்ல”

“நீ எதுவும் யோசிக்க வேண்டாம் கண்ணா.. என்ன தான் இருந்தாலும் நீ நாளைக்கு என்னோட பொண்டாட்டி ஆகப் போற… இவளுக்காக உன்னை கஷ்டபடுத்திடுவேனா” குரலை குறைத்து பேசினான் அக்னி.

“உவ்வேக்… கருமம்… யோவ்! என்ன கண்றாவி இதெல்லாம்? நீ எல்லாம் மாறவே மாட்டியா?”

“ஏழேழு ஜென்மம் எடுத்தாலும் என் காதல் மாறாது கண்ணா” என்று காதல் வசனம் பேசியவனை ஒன்றும் செய்ய முடியாமல் போனை வைத்து விட்டான் கண்ணன்.

இந்தப்பக்கம் அக்னி முகம் முழுக்க சிரிப்புடன் அருந்ததியின் அருகில் சென்றான்.

“என்ன ரெண்டு பேரும் எனக்குத் தெரியாம ரகசியமா ஏதோ வேலை செய்றீங்க போல” என்றான் அவளது தோளோடு தோளை இடித்தபடி.

“ஹுக்கும்… உங்க கிட்டே எல்லாம் சொல்ல முடியாது…”

“ஏனாம்?” கொஞ்சலாய் கேட்டான்.

“ம்ம்ம்.. அக்னினு பேர் வச்சவங்க கிட்டே எல்லாம் சொல்றது இல்லை” என்று வீம்பாக சொன்னவள் கழுத்தை நொடித்த படி நகர, அவளது ஜடையை பிடித்து இழுத்து தனக்கு அருகில் வைத்துக் கொண்டான் அக்னி.

“இதோ பாரு… நானும் உன்கிட்டே நல்லபடியா நடந்துக்கணும்ன்னு எனக்கு வராத ரொமான்ஸ் எல்லாம் இழுத்து பிடிச்சு வரவழைக்கிறேன். நீ கொஞ்சமும் மதிக்க மாட்டேங்கிற” குற்றப்பத்திரிக்கை வாசிக்கத் தொடங்கினான்.

“அது தான் வரலையே … விட்டுட வேண்டியது தானே” என்றாள் அவளும் சளைக்காமல்.

“ரொமான்ஸ் எல்லாம் வருது… ஆனா உன் முகத்தைப் பார்த்தா தான்…”

“ம்ம்ம்… ஏன் நிறுத்திட்டீங்க?..”மூக்கு நுனி சிவக்கத் தொடங்கியது அவளுக்கு.

“என்னத்த சொல்ல… நான் மட்டும் ரொமான்டிக்கா இருந்தா போதுமா… நீ எருமை மாட்டில் மழை பெய்ஞ்ச மாதிரி அப்படியே நின்னா… கமலஹாசனே வந்தாலும் லவ் பண்ணுறது கஷ்டம்” அவளின் கோபத்தை உள்ளுக்குள் ரசித்தபடியே பேசினான்.

“ஓஹோ… அப்புறம்” அவள் பல்லைக் கடிக்கும் சத்தம் வெளியே வரை கேட்டது.

“வேற என்ன செய்றது? குரங்குக்கு வாக்கப்பட்டா மரத்துக்கு மரம் தாவித் தான் ஆகணும்… இந்த ஜென்மத்துல எனக்கு வாய்ச்சது அவ்வளவு தான்னு மனசை தேத்திக்க வேண்டியது தான்”

“ம்ம்ம்… சொல்லி முடிங்க…” பற்களை அழுந்த கடித்துக் கொண்டு அவள் பேச அக்னிக்கு உள்ளுக்குள்  கொண்டாட்டமாக இருந்தது.

“கிழவியோ, பேயோ… இந்த ஜென்மத்துல நீ தான் பொண்டாட்டின்னு ஆகிடுச்சு… என்னத்த செய்ய… மனசை தேத்திக்கிட்டு வாழ வேண்டியது தான்.” என்று அவார்ட் வாங்கப் போகும் தியாகி ரேஞ்சுக்கு அவன் பேச, அருந்ததி பொறுத்தது போதும் என்று பொங்கி விட்டாள்.

“உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா என்னை இவ்வளவு தூரம் திட்டுவ” என்று கேட்டபடி அவன் தலைமுடியை கைகளால் இறுக்கிப் பிடித்தாள்.

“ஆஆஆ… நான் எங்கே திட்டினேன்?” வலிப்பது போல பொய்யாய் நடித்தான் அக்னி.

“எருமை, குரங்கு, கிழவி, பேய்… இதெல்லாம் என்னைத் தானே சொன்னீங்க… அதெல்லாம் புகழ்ந்து பேசுறதா?” இப்பொழுதும் அவள் கை அவன் தலை முடியை இழுத்து மாவாட்டுவதை நிறுத்தவில்லை.

“இது என்ன வம்பா இருக்கு… சட்டியில் இருந்தா தானே அகப்பையில் வரும்… என்ன இருக்கோ அதைத்தானே நான் சொல்ல முடியும்” வலியில் பேசினாலும் அவன் குரலில் இருந்த சிரிப்பு அவனைக் காட்டிக் கொடுத்தது.

கைகள் ஓயும் வரை அவனை அடித்தவள் சோர்ந்து போய் அமர்ந்து விட, அவளை உரசியபடி அவனும் அமர்ந்து கொண்டான்.

“எனக்குத் தெரியாம கண்ணன் கூட சேர்ந்து என்ன கூட்டு களவாணித்தனம் பண்ணுற?”

“சொல்ல மாட்டேன் போடா…”என்றாள் மூச்சு வாங்கியபடி…

“ரூமுக்கு வா… உன்னை கவனிச்சுக்கிறேன்”என்று அவள் காதோரம் மெல்ல முணுமுணுத்தவன் அவளை கைகளில் ஏந்திக் கொண்டான்.

கோபமாக முகத்தை வைத்துக் கொண்டிருந்தாலும் அவன் கரங்களில் விரும்பியே தவழ்ந்தாள் அருந்ததி. இருவரின் கண்களும் ஒன்றை ஒன்று கவ்விக் கொண்டது. தங்களுக்கான தனி உலகில் இருவரும் நுழைந்து கொண்டனர்.

காரியத்தை செய்து முடிக்கும் படி ஏவி விட்ட அருந்ததிக்கும் சரி, அதை செய்யப் போகிற கண்ணனுக்கும் சரி அதற்கு பின்னால் இருக்கும் பூதத்தைப் பற்றி தெரியாமல் கிணறை வெட்டக் கிளம்பி விட்டார்கள்.

பூதம் வெளியே வந்தால் மொத்தமாக அக்னி உடைந்தே போவானே…

 

அது தெரிந்து இருந்தால் அருந்ததி அதை செய்யவே சொல்லி இருக்க மாட்டாளே.

 

அக்னியும் அவர்கள் இருவரும் எதைப் பற்றி பேசிக் கொண்டார்கள் என்பதில் பெரிதாய் அக்கறை காட்டவில்லை. ஏனெனில் அவன் நினைத்தது வேறு ஒன்று. அடுத்த வாரம் அக்னியின் பிறந்த நாள் வருவதால் அதற்கு இரண்டு பேருமாக சேர்ந்து ஏதோ சர்பிரைஸ் பிளான் போடுவதாக எண்ணிக் கொண்டான். ஆனால் உண்மை அதுவல்ல.

அடுத்த வாரம் அவனது பிறந்த நாளின் பொழுது வெடிக்கப் போவது ஊசி பட்டாசு இல்லை… கன்னி வெடி. கால் பட்டாலே போதும். உயிரை பறித்து விடும். அவனது பிறந்த நாளை அவன் மறக்க முடியாதபடி செய்வதற்கு இறைவன் பெரும் திட்டம் ஒன்றை தீட்டி இருப்பதை அவன் மட்டுமல்ல, அவனை சார்ந்தவர்கள் ஒருவருமே அறியவில்லை.

எப்பொழுதுமே நாம் போடும் திட்டங்கள் எல்லாமே அப்படியே நடப்பதில்லையே.

அருந்ததி பிள்ளையார் பிடிக்கத் தான் நினைத்தாள். அது குரங்காய் வந்து இருந்தாலும் பரவாயில்லை. வந்ததோ…. பூகம்பம்.

Facebook Comments Box
What’s your Reaction?
+1
4
+1
0
+1
2
+1
0
+1
0
+1
2
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here