மின்மினியின் மின்சார காதலன் 32 tamil novels

0
559

அத்தியாயம் 32

கண்களை மெல்ல திறந்து பார்த்தான் அக்னி. அவன் கரங்களுக்குள் பூனையாய் சுருண்டு படுத்து இருந்தாள் அருந்ததி. சூரிய வெளிச்சம் இன்னும் பூமியை வந்தடையவில்லை என்பதால் அறை முழுக்க இருள் சூழ்ந்திருந்தது. அவளின் உறக்கம் கலையாதவாறு மெல்ல அவளை தள்ளி படுக்க வைத்தவன் ஜன்னல் அருகில் நின்று வெளியே வேடிக்கை பார்க்கத் தொடங்கினான்.

மணி விடியற்காலை நாலை காட்ட, ஜன்னலின் வழியே வேடிக்கை பார்த்தவனின் கண்கள் இருட்டில் எதையோ… யாரையோ தேடி சலித்தது.

அதோ அந்த மரத்திற்கு பின்னால்… இங்கே வந்ததில் இருந்தே தன்னையும், அருந்ததியும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் அந்த காரையும் அதில் இருக்கும் அந்த வழுக்கைத் தலை ஆசாமியையும்  அவன் கண்டு கொண்டதாகவே காட்டிக் கொள்ளவில்லை.

எங்கோ வேடிக்கை பார்ப்பது போல மேலும் சற்று நேரம் அந்த காரின் உள்ளவனையும் அவனது நடவடிக்கைகளையும் நோட்டம் விட்டவன் ஜன்னலை இழுத்து மூடி விட்டு தன்னுடைய போனை எடுத்துக் கொண்டு பால்கனியில்  மறைவாக போய் அமர்ந்து கொண்டான்.

“சத்யா… என்ன செய்ற?”

“உங்களுக்கு பக்கத்து ரூமில் தான் இருக்கோம் சார்” அந்தப் பக்கம் பதில் வெகு பவ்யமாக வந்தது.

“குட்… நீங்க எப்போ இருந்து வாட்ச் செய்ய ஆரம்பிச்சீங்க?”

“நேத்து நைட் பத்து மணியில் இருந்து என்னோட டர்ன்(turn) தான் சார்.”

“சந்தேகப்படுற மாதிரி ஏதாவது?”

“இல்லை சார்…  ஜஸ்ட் அந்த காரில் இருந்து நீங்க எங்கே போறீங்கனு அவனோட பாஸ்க்கு தகவல் சொல்றான். அது மட்டும் தான்.. வேற எதுவும் நடக்கலை.”

“அவனோட பாஸ் யாருன்னு எதுவும் தெரிஞ்சுதா?”

“இல்லை சார்… அந்த காரில் நாம போட்ட மினி மைக் மூலமா இவர் பேசுறது மட்டும் தான் நமக்கு தெரியுது. எதிரில் இருக்கிறவங்க யாரு? என்ன பேசுறாங்கனு தெரியலை… நம்ம கொஞ்சம் போலீஸ் கிட்டே போய் அவங்க மூலமா மூவ் செஞ்சா அந்தாளோட போனை டேப் பண்ணலாம்… நீங்க பர்மிஷன் கொடுத்தா”

“வேண்டாம் சத்யா… நம்ம எதிராளிக்கு ஒரு துளி அளவு சந்தேகம் வந்தா கூட இவ்வளவு நாள் நாம பட்ட கஷ்டம் எல்லாம் வீணாப் போய்டும். உங்க வேலை அந்தாளை கண்காணிச்சு, அவர் யார் கிட்டே என்ன பேசுறார்னு எனக்கு சொல்றது மட்டும் தான்.”

“சரி சார்…”

“அந்தாளுக்கு ஆர்டர் கொடுக்கிறது யாருன்னு எதுவும் தெரிஞ்சுதா?”

“பேர் எதுவும் தெரியலை சார்.. ஏன்னா மேக்சிமம் அவர் பேசும் பொழுது பாஸ்னு தான் சொல்றார்”

“ஸோ… நமக்கு எதிரி ஒரு ஆண்…”

“சார்.. அதுலயும் ஒரு சின்ன விஷயம் சார்… நேத்து அவங்க போன் பேசினப்போ யாரோ ஒரு பெண்ணைப் பத்தி பேசினாங்க. அவங்க பேசினதை வச்சு பார்க்கும் பொழுது அந்த பொண்ணும் இதுக்கெல்லாம் உடந்தைன்னு தான் நினைக்கிறேன். அவங்களைப் பத்தியும் தகவல் எதுவும் தெரியலை சார். மேடம்னு மட்டும் தான் பேசிக்கிட்டாங்க”

“பொண்ணா? நல்லா கவனிச்சீங்களா? அவங்களுக்கு தெரிஞ்ச வேற ஏதாவது பொண்ணைப் பத்தி பேசி இருக்கப் போறாங்க”

“இல்ல சார்… அவங்க பேசினதைப் பார்த்தா அப்படி தெரியலை… எதுக்கும் உங்களுக்கு அந்த ரெக்கார்டிங்கை அனுப்பறேன். நீங்களும் கேட்டுப் பாருங்க”

“ம்ம்ம்.. எனக்கு அனுப்புங்க… அப்புறம் தினமும் உங்க போனை நல்லா செக் பண்ணிக்கோங்க.. அப்புறம் உங்க ரூமையும் தான். நான் வெளியில் போய் இருக்கும் பொழுது எங்க ரூமையும் செக் பண்ணிடுங்க. எந்த இடத்துலயாவது மைக்,பக்(bug) ஏதாவது இருக்கப் போகுது”

“தினமும் செக் பண்ணிட்டு தான் இருக்கேன் சார்.”

“குட்…எல்லாத்தையும் விட முக்கியம் இதெல்லாம் யாருக்கும் சந்தேகம் வராத மாதிரி நடக்கணும். ஹோட்டல் என்னோட பிரண்டோடது. அவனுக்கு ஏற்கனவே தகவல் சொல்லிட்டேன். ஸோ அவங்க உங்களை எந்த கேள்வியும் கேட்க மாட்டாங்க”

“சரி சார்…”

“கவனம்.. சொன்னதெல்லாம் நியாபகம் இருக்கட்டும்… நான் அப்புறம் பேசுறேன்” என்று சொன்னவன் பேசிக் கொண்டே திரும்ப படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்து இருந்த அருந்ததி அவனையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

‘அய்யயோ… இவ எப்போ முழிச்சான்னு தெரியலையே’ உள்ளுக்குள் திடுக்கிட்டாலும் வெளியே காட்டிக் கொள்ளாமல் சமாளிப்பாய் பேசத் தொடங்கினான் அக்னி.

“என்ன மேடம்… இவ்வளவு சீக்கிரம் எழுந்துட்டீங்க? இன்னும் கொஞ்ச நேரம் தூங்கலாமே? பசி வந்துடுச்சா? குடிக்க ஏதாவது கொண்டு வர சொல்லட்டுமா?” ஒன்றுமே நடக்காத பாவனை அவன் குரலில்.

“அப்போ… எல்லாமே நடிப்பு தான் இல்லையா?”அவள் கண்களில் கோபம் இல்லை. ஆனால் குரலில் ஒரு வலி இருந்தது.

“ஹே… என்ன கனவு எதுவும் கண்டியா?” அவள் எதுவரை தெரிந்து கொண்டாள் என்று தெரியாமல் வாயை விடக்கூடாது என்று சமாளிக்க முயன்றான் அக்னி.

“நான் நீங்க எழுந்திருக்கும் பொழுதே நானும்  முழிச்சுட்டேன்… எல்லாத்தையும் கேட்டுட்டேன். எதையும் மறைக்க முயற்சி செய்ய வேண்டாம்” அழுத்தமான குரலில் சொன்னாள் அருந்ததி.

“இப்போ என்ன தெரியணும் உனக்கு?” அவன் குரலில் கோபம் இல்லை… ஆனால் வேறு ஏதோவொன்று இருந்தது.

“இங்கே வந்ததில் இருந்து நீங்க என்கிட்டே பேசினது , நடந்துகிட்டது எல்லாமே நடிப்பு தான் இல்லையா? யாரோ நம்மை கண்காணிக்கறாங்க. ஸோ அவங்களை நம்ப வைக்கிறதுக்காக நீங்க என்கிட்டே நடிச்சீங்க?” மனதின் கலக்கம் குரலின் வழி தெரிந்ததோ? அவளையே ஊன்றிப் பார்த்தான் அக்னி.

“உனக்கு என்னைப் பார்த்தா அப்படி உன் மேல பொய்யான அன்பை காட்டின மாதிரி தோணுதா அருந்ததி. நான் உன் கூட இருந்த நேரத்தில் நீ என்னோட நேசத்தை உணரவேயில்லையா? எல்லாமே பொய் மாதிரி தோணுதா?” கைகளை குறுக்காய் கட்டிக் கொண்டு அவன் கேள்வி கேட்ட விதம் அவளுக்கு உள்ளுக்குள் லேசாய் குளிர் பரப்பியது.

“இப்போ கேள்வி நீங்க யாரையோ ஏமாத்த என்கிட்டே நடிச்சதுல நானும் ஏமாந்து போயிட்டேனா இல்லையானு தான்”

“ஆஸ்கார் அவார்ட் வாங்கின நடிகனால கூட இருபத்து நாலு மணி நேரமும் நடிச்சுக்கிட்டே இருக்க முடியாது அருந்ததி” அவன் பார்வை இன்னமும் அவளையே தான் துளைத்துக் கொண்டிருந்தது.

“இந்த சுத்தி வளைச்சு மூக்கை தொடுறது எல்லாம் வேண்டாம். எனக்கு நேரடியான பதில் வேணும்”

அக்னி ஒன்றுமே பேசவில்லை. அழுத்தமான நடையுடன் அவளை நெருங்கினான். அவன் கண்கள் அவள் மேலேயே அப்பிக் கிடந்தது. கண்களில் இருந்த தீவிரம் அருந்ததிக்கு படபடப்பைக் கொடுக்க, அதுவரை அவனையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தவள் அவனது கண்களை எதிர்கொள்ள முடியாமல் கண்களை வேறு திசைக்கு திருப்பிக் கொண்டாள்.

“என்னைப் பார் அருந்ததி…” அவன் குரலில் அப்பட்டமான மிரட்டல். அதை அலட்சியம் செய்ய முடியாமல் அவனை நிமிர்ந்து பார்த்தவள் அவன் கண்களை பார்க்க முடியாமல் பார்வையை திருப்பினாலும் அவன் கண்டு கொள்வான் என்பதை அறிந்து இருந்ததால்  நெற்றிக்கு பார்வையை செலுத்தினாள்.

“என் கண்ணைப் பாருடி” அவள் தோளை அழுத்தமாய் பற்றி உலுக்கினான் அக்னி.

வெகுவாக சிரமப்பட்டு தன் பார்வையை அவன் கண்களுக்குள் பார்த்தவளின் உடலில் ஏதேதோ மாற்றங்கள். கண்களில் காதலை தேக்கி உயிரை உறிஞ்சும் பார்வை பார்த்துக் கொண்டிருந்தான் அக்னி.

“இங்கே பாருடி… யாருமே எனக்காக… என்னைப் பத்தி யோசிக்கவே இல்லையேனு ஒரு காலத்துல ரொம்ப நொந்து போய் இருந்தேன். பெத்த அம்மா, அப்பா எல்லாரையும் தள்ளி வச்சுட்டு தனியா போய் இருந்ததுக்கு அதுவும் ஒரு காரணம். ஆனா உனக்கு என் மேல எவ்வளவோ கோபமும், வெறுப்பும் இருந்த நேரத்தில கூட நீ எனக்காக யோசிச்சடி… என் மனசைப் பத்தி யாருமே கவலைப்படாத நேரத்துல கூட எனக்காக பரிஞ்சு பேசின ஜீவன் நீ ஒருத்தி தான்டி. அந்த நிமிசமே நீ இங்கே வந்துட்ட” நெஞ்சை தொட்டுக் காட்டினான் அழுத்தமாக.

“அந்த நிமிஷத்துல இருந்து உன்னை என் நெஞ்சுக்குள்ள வச்சு தாங்கிட்டு இருக்கேன்டி. என் கண்ணுல உனக்கான தேடலும், காதலும், அக்கறையும் உனக்கு தெரியவே இல்லையா?”அவன் கரங்களின் பிடி இன்னும் கொஞ்சம் இறுகியது.

அருந்ததிக்கு உண்மையில் என்ன சொல்வதென்று புரியவில்லை. அவன் சொல்வது எல்லாமே உண்மை தானே.. அன்றைய தினம் அவள் மருத்துவமனையில் அவனுக்காக பரிந்து பேசிய  பிறகு தானே அவனிடம் இந்த மாற்றம் எல்லாம்.

“அப்போ இப்போ நீங்க போன்ல பேசினது?”

“ம்ச்! முட்டாள். அது உன்னோட பாதுகாப்புக்காக… உன்னோட எதிரியை வெளியே கொண்டு வர வைக்க நான் செஞ்ச ஏற்பாடு… அதுக்காக என்னை… என்னோட அன்பை  சந்தேகப்படுவியா?”

“யாரோ ஒருத்தன் அவன்  பார்க்கணும்கிறதுக்காகத் தானே நீங்க என்கிட்டே”

“முட்டாள்.. முட்டாள்… ஒவ்வொரு நாளும் உன் பின்னாடியே தானேடி சுத்தி வந்தேன். ஒரு நாளைக்கு பத்து தடவை ஐ லவ் யூ சொன்னா தான் என்னோட காதலை நீ உணருவியா? அப்படின்னா… நீ காலம் முழுக்க வெயிட் பண்ணாலும் என் வாயில் இருந்து அப்படி ஒரு வார்த்தை வராது. போடி” என்றவன் அவளை பிடித்து ஒரே உலுக்கில் கீழே தள்ளி விட்டு குளியல் அறைக்குள் புகுந்து கொண்டான்.

அருந்ததிக்கு அவன் சென்ற பிறகும் கூட அவன் சொல்லி சென்ற வார்த்தைகளின் கணத்தை தாங்கிக் கொள்ள முடியவில்லை. அப்படியே அவன் தள்ளி விட்ட நிலையிலேயே ஒரு மூலையில் மடங்கி அமர்ந்து விட்டாள்.

அவள் அழவில்லை. கண்களில் சோகம் இல்லை… கோபமும் இல்லை. எதிர்பார்த்த ஏதோவொன்று கிடைக்காத பொழுது ஏமாந்து போன குழந்தையாய் அவள் மனம் தவித்தது.

சில நொடிகள் கழித்து சுயம் தெளிந்தவள் வேகமாய் பாத்ரூம் கதவை தட்டினாள்.

உள்ளிருந்து பதில் இல்லை.

“யோவ்! வெளியே வாய்யா” பலம் கொண்ட மட்டும் கதவை வேகமாக தட்டினாள் அருந்ததி.

“ம்ச்! இப்போ எதுக்குடி கதவைப் போட்டு இப்படி உடைக்கிற?” உள்ளிருந்து சத்தம் மட்டும் வந்தது.

“ஒழுங்கா மரியாதையா வெளியே வந்து  இப்பவே எனக்கு ஐ லவ் யூ சொல்லு” என்று இவள் அறைக்கு வெளியே கத்திக் கொண்டிருக்க, பாத்ரூமினுள் சத்தம் முழுதாய் அடங்கி இருந்தது.

“சொல்லலைன்னா என்னடி செய்வ?” அவன் குரலில் முன்பிருந்த இறுக்கமும் கோபமும் இல்லை. மாறாக மெல்லிய நகைப்பு இருந்தது. அருந்ததியோ அதை கவனிக்கும் மனநிலையில் இல்லை.

“ஒழுங்கா சொல்லுடா” கதவை இன்னும் வேகமாக தட்டினாள்.

அவளின் கோபத்தை எல்லாம் கண்டுகொள்ளாமல் முகத்தை துண்டால் துடைத்தபடியே வெளியே வந்தவன் கண்ணாடியைப் பார்த்து தலை வாறத் தொடங்கினான்.

வேகமாக அவனுக்கு அருகில் வந்தவள் கோபத்தில் மூச்சு வாங்க அவனை நெருக்கியடித்துக் கொண்டு வந்து நின்றாள்.

“இப்ப சொல்ல போறீங்களா இல்லையா?”

“முடியாது…”

“கட்டின பொண்டாட்டி எனக்கு சொல்ல மாட்டீங்களா?”

“முடியாது போடி…”

“டேய்! எனக்கு சொல்லாம வேற யாருக்குடா சொல்லுவ?” அவனது சட்டைக் காலரை பிடித்து கையில் வைத்து இழுத்தவள் அவனது முகத்திற்கு அருகே கோபத்துடன் அவனை முறைத்துப் பார்த்தாள்.

“நீமோவுக்கு சொல்வேன், கண்ணனுக்கு சொல்வேன்… இன்னும் இந்த உலகத்துல யாருக்கு வேணா சொல்வேன். உனக்கு மட்டும் இந்த ஜென்மத்துல சொல்ல மாட்டேன் போடி” என்றவன் அசட்டையாய் அவளை ஒற்றை கையால் தள்ளி விட்டு தன்னுடைய தினப்படி வழக்கம் போல ஹோட்டல் உள்ளேயே அமைந்திருந்த தோட்டத்தில் ஜாகிங் செய்ய சென்று விட்டான்.

அருந்ததி பேசியதில் அவனுக்கு வருத்தம் இருந்தாலும் கடைசியில் சின்னக் குழந்தை போல அவனை மிரட்டியதை நினைத்து இப்பொழுது சிரிப்பு வந்தது அவனுக்கு. முகத்தில் மென்முறுவலுடனே ஓடி முடித்தவன் அறைக்குள் நுழைய அங்கே கண்ணன் அவனுக்காக காத்திருந்தான்.

அவன் முகமே எதுவோ சரியில்லை என்று உணர்த்த, நிமிர்ந்து அருந்ததியைப் பார்த்தான். அவள் முகமும் கொஞ்சம் கலவரமாய்த் தான் இருந்தது.

“என்ன விஷயம் கண்ணா?”

“இந்த வீடியோவை கொஞ்சம் பாருங்க ப்ரோ” என்று சொல்லி அவன் கரங்களில் மொபைலை திணிக்க, புருவங்கள் முடிச்சிட அதைப் பார்க்கத் தொடங்கினான் அக்னி.

சில நொடிகள் மட்டுமே ஓடிய அந்த வீடியோவை பார்க்கும் பொழுதே அக்னியின் கண்களில் இருந்து கண்ணீர் வடியத் தொடங்கியது. அப்படியே தரையில் பொத்தென்று விழுந்து விட, அவனைத் தாங்க ஓடி வந்த அருந்ததியையோ, அவனை சமாதானம் செய்ய முன் வந்த கண்ணனையா கண்டுகொள்ளும் மனநிலையில் அவன் இல்லை.

“ஆஆஆஆஆ” என்று அவன் தலையைப் பிடித்துக் கொண்டு அவன் கத்திய கத்தலில் அந்த மொத்த ஹோட்டலும் அதிர்ந்து போனது.

 

Free download novels
Madhumathi Bharath
Facebook Comments Box
What’s your Reaction?
+1
3
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here