
அத்தியாயம் 5
அக்னிபுத்திரன் இரண்டு நாட்களாகவே கொஞ்சம் மனம் சரியில்லாமல் கலங்கிப் போய் இருந்தான். அருந்ததியை ஓட வைத்தது, அவளை துரத்திக் கொண்டே ஓடும் படி நீமோவை ஏவியது. எல்லாமே அவன் மனக்கண்ணில் மாறி மாறி வந்து போனது. தன்னுடைய சுய லாபத்திற்காக ஒரு பெண்ணை இப்படி செய்து விட்டோமே என்ற தவிப்பு அவனை தூங்கவிடாமல் செய்தது. அவளை அப்படி நடத்தியதற்காக மகிழ்ந்து போவதற்கு அவன் ஒன்றும் மனசாட்சியே இல்லாத அரக்கன் இல்லையே…
அவளது முகத்தில் அந்த நேரம் தோன்றிய உணர்வலைகளால் அவனது உடலோடு சேர்ந்து மனமும் அதிர்ந்தது. அந்த நொடி அவனை அவள் பார்த்த பார்வை அவனால் இந்த ஜென்மம் முழுக்க மறக்க முடியாது என்றே தோன்றியது.
‘நீயா இப்படி’ என்று அதிர்ச்சியும், கேள்வியும் கலந்து இருந்த அந்த பார்வையில் இருந்து அவனால் வெளிவரவே முடியவில்லை.
அதே நேரம் அவன் மனசாட்சி அவனுக்காக வக்காலத்து வாங்கவும் தவறவில்லை.
‘அதுல உன்னோட தப்பு எதுவும் இல்லையே… இந்த கல்யாணத்தை நிறுத்த சொல்லி நேரடியா எதுவும் பேச முடியாத சூழ்நிலை… அப்படி இருக்கும் பொழுது கொஞ்சம் கடுமை காட்டித் தானே ஆகணும். அப்படி நடந்து கொண்டதால் தானே நினைச்ச மாதிரியே அந்த வீட்டு ஆட்களின் வெறுப்பையும் சம்பாதிக்க முடிந்தது.
பிடிக்காத திருமணத்தை செய்து கொண்டு.. தானும் வருந்தி அந்த பெண்ணையும் வருத்துவதற்கு பதிலாக… இப்படி முளையிலேயே கிள்ளி விடுவது தான் அந்த பெண்ணின் எதிர்காலத்துக்கு நல்லது என்று சொல்லி மனதை தேற்றிக் கொண்டவன் மெல்ல அடுத்தடுத்த வேலைகளில் ஈடுபடத் தொடங்கினான். மனதும் ஓரளவுக்கு சமனப்படத் தொடங்கியது. அந்த நேரத்தில் தான் அருந்ததி அவனுக்கு பேசினாள்.
அவள் பேசிய பேச்சில் அவனது மனதில் அவளுக்காக தோன்றி இருந்த இரக்கம்… இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய் இருந்தது.
‘என்ன பேச்சு பேசுகிறாள்? அந்த அளவுக்கு செய்தே இவள் இந்த பேச்சு பேசுகிறாளே… அப்படின்னா அன்னைக்கு நான் நடந்துகிட்டது இவளுக்கு கம்மி போலவே…’ என்ற எண்ணம் அவனுக்கு தோன்றியது.
‘என்கிட்டேயே இவ்வளவு திமிரா பேசுறியே… இனி உனக்காக கொஞ்சமும் இரக்கம் பார்க்கப் போறதில்லை நான்… உனக்காக நான் பாவம் பார்த்தா நீ என்னையே சீண்டிப் பார்க்க துணிஞ்சுட்டே இல்லே…உன்னை…
ஹ… எவ்வளவு தைரியம் இருந்தா.. நீ அப்படி பேசி இருப்ப… அந்த மைதானத்தை நாலு முறை கூட ஓட முடியாத உனக்கு இத்தனை ஆணவமா? நான் கொடுக்கிற டார்ச்சரில் ஐயோ! எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம்னு நீ கதறிக்கிட்டு ஓடுற மாதிரி நான் செய்யல… என் பேரு அக்னிபுத்திரன் இல்லைடி…
அவள் தன்னுடைய பேரையும் அவளது பேரையும் இணைத்து நக்கலடித்தது நினைவுக்கு வரவும் அவனது ரத்தத்தின் வேகம் இன்னும் அதிகரித்தது.
‘பேரில் மட்டும் நெருப்பு இருந்தா போதாதுடி…. உள்ளுக்குள்ளே இருக்கணும்… நீ பேசாமலே இருந்து இருந்தா கூட பரவாயில்லை.. இந்த அளவுக்கு பேசின பிறகு உன்னை சும்மா விட்டா நான் எல்லாம் என்னடி ஆண்பிள்ளை…’ என்று கறுவிக் கொண்டவனுக்கு சற்று முன்னர் அவள் மேல் தோன்றி இருந்த இளக்கம் காணாமல் போய் இருந்தது.
அவன் பார்வை அவனது காலின் கீழ் அமர்ந்து இருந்த நீமோவின் புறம் பாய்ந்தது.
‘நான் நாய் பிடிக்கிறவனா? ஆர்மியில் இருந்தப்போ… எதிரிகள் அத்தனை பேரையும் ஓட வச்சேன்டி… தனியா நின்னு சமாளிச்சு இருக்கேன் சிங்கம் மாதிரி… என்னைப் பார்த்தா உனக்கு கார்ப்பரேஷன்காரன் மாதிரி இருக்கா?’ ஆத்திரம் கட்டுக்குள் அடங்க மறுத்தது அவனுக்கு.
இனி வரும் நாட்களில் அவன் கொடுக்கும் தொல்லை தாங்க முடியாமல் “விட்டா போதும்டா சாமின்னு அவ ஓடணும்… அப்படி செய்யலை என் பேரு அக்னிபுத்திரன் இல்லை” என்று அவசர உறுதிமொழி ஒன்றை எடுத்துக் கொண்டான்.
அதே நாளிலேயே சிவநேசன் நேரிலேயே அவனது வீட்டுக்கு வந்து சந்தித்து பேசினார்.
அவரை அத்தனை சீக்கிரம் எதிர்பாராமல் இருந்ததால் சில நொடிகள் அவரிடம் என்ன பேசுவது என்று தெரியாமல் தயங்கி நின்றான் அக்னிபுத்திரன்.
‘அவ்வளவு தூரம் அன்னைக்கு பேசிட்டு வந்து இருக்கேன்…. அவர் வீட்டில் அந்த குதி குதிச்சார்.. இப்போ எதுக்கு இங்கே வந்து இருக்கார்? ஒருவேளை அந்த பிசாசு சொன்ன மாதிரி கல்யாணத்தை நடத்தப் போறாரா? சே சே அதுக்கு வாய்ப்பே இல்லை… அவ்வளவு மோசமா நான் நடந்த பிறகு இவருக்கு தன்னோட பெண்ணை எனக்கு கல்யாணம் செஞ்சு கொடுக்க மனசு வராது. இந்த கல்யாணம் வேண்டாம்னு நேரில் சொல்லிட்டு போக வந்து இருப்பார் போல’ என்று தனக்குள்ளாகவே எண்ணிக் கொண்டான்
‘அன்னைக்கு அப்படி பேசினதுக்காக வருத்தப்படறார் போல’ என்று அவனது மௌனத்தைக் கூட நல்லவிதமாகவே எடுத்துக் கொண்டார் சிவநேசன்.
“உள்ளே போய் பேசலாமா மாப்பிள்ளை” என்று அவர் கேட்க… அவர் மாப்பிள்ளை என்று அழுத்தி உச்சரித்த விதத்திலேயே அவரது மனநிலை அவனுக்கு புரிந்து போனது.
‘இனி இவரிடம் மறுத்து பேச முடியாது ‘ என்று சோர்வுறும் பொழுதே அவன் மூளையில் மின்னலடித்தது.
‘இன்னும் ஒரு வழி இருக்கே… முக்கியமான விஷயம்…அதை எப்படி மறந்து போனேன்’என்று எண்ணியவன் சிரித்த முகமாகவே அவரை வரவேற்றான்.
“உள்ளே வாங்க..உட்காருங்க…” என்ற அவரை உபசரித்தவன் பிரிட்ஜில் இருந்து ஜூஸை அவருக்கு ஒரு கிளாசில் கொண்டு வந்து கொடுத்தான்.
“இங்கே வேலைக்கு யாரும் ஆட்கள் இல்லை… எல்லா வேலையும் நான் தான் செஞ்சுப்பேன்… இப்போ வீட்டில் ஜூஸ் மட்டும் தான் இருக்கு” என்று சொல்லி அவரிடம் நீட்ட… அவருக்கு வகை வகையாக எதுவும் உண்ணக் கொடுக்க முடியாமல் இருப்பதை அவன் கோடு காட்டி பேச… புரிந்து கொண்டதாக மெல்லியதாக தலை அசைத்தார்.
“பரவாயில்லை மாப்பிள்ளை…அதனால என்ன?”
“கல்யாணத்திற்கு பிறகு உங்க பொண்ணு தான் இங்கே வீட்டு வேலை எல்லாம் செய்ய வேண்டி இருக்கும்…”
“வேலைக்கு ஆள் வச்சிடலாம் தம்பி… சம்பளம் நான் கொடுத்திடறேன்”
“என்னை கையாலாகாதவன்னு நினைச்சீங்களா?” என்றவனின் குரலில் இருந்த உக்கிரத்தை கண்டதும் அவர் வாய் மூடி மௌனியானார்.
அருந்ததிக்கு இவரை பிடித்து இருக்கிறது. இவரது மனம் புண்படும்படியாக எதையும் பேசி விடக் கூடாது’ என்று எண்ணியவர் தழைந்து பேசினார்.
“அப்படி சொல்வேனா மாப்பிள்ளை… அங்கே வீட்டில் அத்தனை வேலையாள் இருக்காங்க.. ஆனா வீட்டில் இருக்கிறது நாங்க மூணு பேர் தான். பாப்பாவுக்கு கல்யாணம் ஆகி இங்கே வந்துட்டா அப்புறம் நானும் , உங்க அத்தையும் தானே… இரண்டு பேருக்கு எதுக்கு அத்தனை வேலையாள்? ..அது தான் சொன்னேன்”
“அதுக்கு அவசியமில்லை.. ரெண்டு பேருக்காக மட்டும் வேலைக்கு ஆள் வைக்கிற அளவுக்கு நான் வசதியானவன் கிடையாது. இங்கே வந்தா உங்க பொண்ணு தான் எல்லா வேலையையும் செஞ்சாகணும்…”
“ஆகட்டும் தம்பி”
“எந்த தைரியத்தில் உங்க பொண்ணை எனக்கு கல்யாணம் செஞ்சு வைக்கப் போறீங்க? நான் என்னோட வேலையை ரிசைன் செஞ்சுட்டேன்… இப்போ எனக்கு எந்த வேலையும் இல்லை… உங்க வீட்டோட மாப்பிள்ளை ஆக்கிக்க எதுவும் திட்டமோ?” என்றான் சுளித்த புருவத்துடன்.
“சே!…சே! இல்லை தம்பி… உங்க அப்பா கிட்டே பேசினப்போ சொன்னார்.. நீங்க சொந்தமா ஏதோ தொழில் தொடங்கப் போறதா?”
“ஓ.. தொழில் தொடங்கப் போறேன்னு தெரிஞ்சதால தான் தேடி வந்து பொண்ணு கொடுக்கறீங்களோ” என்றவனின் இடக்கான கேள்வியில் அவர் வாயடைத்துப் போனார்.
‘எந்தப் பக்கம் போனாலும் கேட் (Gate) போடுறானே’ என்று நொந்து போனார் சிவநேசன்.
அவரின் முகத்தைப் பார்த்தே மன நிலையை ஊகித்தவன் மீண்டும் பேசத் தொடங்கினான்.
“இதோ பாருங்க… உங்களுக்கு என்னைப் பத்தி முழுசா எந்த விவரமும் தெரிஞ்சு இருக்க வாய்ப்பில்லை… நான் என்னோட வேலையை ரிசைன் செஞ்சுட்டேன். இராணுவத்தில் எனக்கு எவ்வளவோ சலுகைகள் இருந்தது தான்… இன்னும் கொஞ்ச நாள் இருந்து இருந்தா இன்னும் பெரிய பதவி எல்லாம் கிடைச்சு இருக்கும் தான். ஆனா… அது எல்லாத்தையும் உதறி தள்ளிட்டு நான் வந்ததற்குக் காரணம் என்னோட ஜெனி” வார்த்தைகளுக்கு வலிக்குமோ என்பது போன்ற பாவனையில் மென்குரலில் பேசியவனை அதிசயமாகப் பார்த்தார் சிவநேசன்.
‘கொஞ்ச நேரம் முன்னாடி எகிறி எகிறி பேசினவன் இவன் தானா?’ என்ற சந்தேகமும் அவருக்கு வந்தது.
“எனக்கு தெரியும் தம்பி… இந்த கல்யாண விஷயம் பேச ஆரம்பிக்கும் பொழுதே… இதை உங்க அப்பா என்கிட்டே சொல்லிட்டார்…”
‘என்ன அப்பா சொல்லிட்டாரா?’ இப்படி ஒரு அதிர்ச்சியை அவன் எதிர்பார்க்கவே இல்லை… எதற்கு மசியாவிட்டாலும் ஜெனிபர் விசயத்தை சொல்லி அவரை ஓட வைத்து விடலாம் என்று எண்ணியவனுக்கு முழுத் தோல்வியே.
ஆனால் இனம் புரியாத வகையில் அவன் மனதின் ஒரு ஓரத்தில் அவனுக்கு சந்தோசமாக இருந்தது.
‘பின்னே அந்த அருந்ததியை பழி வாங்குவதற்கு எப்பேர்பட்ட வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. அதை எண்ணி எப்படி மகிழாமல் இருக்க முடியும்’ என்று தன்னைத்தானே சமாதானம் செய்து கொண்டான்.
“நீங்க ஆரம்பிக்கப் போற தொழிலுக்கு ஏதாவது உதவி?” என்று கேட்க ஆரம்பித்தவர் அக்னியின் சூடான பார்வையில் வாயை மூடிக் கொண்டார்.
“உங்களோட தன்மானத்தை நான் ரொம்பவே பாராட்டுறேன் தம்பி… இந்த காலத்தில் எப்படா மனுஷங்க ஏமாறுவாங்க… அவங்க கிட்டே இருந்து காசு பணம் புடுங்கலாம்ன்னு காத்து இருக்கிறவங்க மத்தியில் உங்களை நினைச்சா ரொம்பவே பெருமையா இருக்கு மாப்பிள்ளை” என்று அவர் சந்தோசம் கொள்ள அக்னிபுத்திரன் மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டான்.
‘இவர் கிட்டே கெட்ட பேர் வாங்கணும்னு நினைச்சா.. எல்லாமே அதுக்கு எதிராவே நடக்குதே… யோவ்! என்ன செஞ்சா உனக்கு கோபம் வரும்னு ஒரு க்ளுவாவது கொடுயா… சோதிக்காதீங்கடா என்னை ’ மனதுக்குள் அவரை திட்டித் தீர்த்தான்.
சிவநேசனின் பார்வை வீட்டை கண்களால் அளந்து கொண்டு இருந்தது.
‘வீடு சின்னதா இருக்கே… அருந்ததிக்கு இத்தனை சின்ன வீடு பிடிக்குமா?’ என்ற யோசனையில் இருந்தார். மாளிகை போன்ற அவரது வீட்டின் முன்னால் இரண்டு படுக்கை அறைகளை மட்டுமே கொண்ட அந்த வீடு குடிசை போலத் தான். இருந்தாலும் இது குறித்து அக்னியிடமும் பேச முடியாது. மகளிடமும் சொல்ல முடியாது.
மகள் பரவாயில்லை இல்லை என்பாள்…
கூடிய சீக்கிரம் மருமகன் ஆகப் போகிறவன் மேலே பாய்ந்து கடித்து குதறி விடுவான் என்பது தோன்ற மேலும் சில நிமிடங்கள் வரை இருவரும் தங்களுக்குள்ளேயே அமைதியில் கழித்தார்கள்.
சிவநேசனின் பார்வை அக்னியின் காலடியில் சுருண்டு படுத்திருந்த நீமோவின் புறம் பாய்ந்தது.
“உங்களுக்கு நாய்னா ரொம்ப இஷ்டமோ?”
“ஆமா.. மனுஷங்களைப் போல இல்லாம உண்மையான அன்பைக் காட்டும் ஜீவன்கள்” என்று சொன்னபொழுது அவன் குரலில் வெளிப்பட்ட கசப்பை உணர்ந்து சிவநேசன் சிந்தனையானார்.
“அருந்ததிக்கு நாய் னா கொஞ்சம் பயம்… சின்ன வயசில் ஒருமுறை ஒரு நாய் அவளை கடிச்சுடுச்சு… அதுல இருந்தே…..” என்று அவர் பேசிக் கொண்டே போக எரிச்சலுடன் அவரை முந்திக் கொண்டு பேசினான்.
“மகாராணிக்கு நாய் பிடிக்காது அப்படிங்கிறதுக்காக எல்லாம் என்னால் நீமோவை துரத்த முடியாது.அவன் என்னோடு தான் இருப்பான்… உங்க பொண்ணை பழகிக்க சொல்லுங்க”
“அதைத் தான் மாப்பிள்ளை நானும் சொல்ல வந்தேன்… அவள் கொஞ்ச நாளில் பழகிப்பா.. அதுவரை அன்னைக்கு நடந்த மாதிரி எதுவும் செய்ய வேண்டாம்…பாவம் குழந்தை…”
‘குழந்தைக்கு எதுக்கு கல்யாணம்? முப்பத்திரெண்டு பல்லையும் தட்டி கையில் கொடுக்கிறேன்… தொட்டியில் போட்டு தாலாட்டு பாடுங்க’ இன்னதென்று இனம் பிரிக்க முடியாத எரிச்சல் தோன்றியது அவனுக்கு.
“அப்புறம் அவளோட ட்ரைனிங்க்கு எல்லா ஏற்பாடும் செஞ்சுட்டேன் மாப்பிள்ளை… நாளைக்கு அவ வந்துடுவா… இடம் தான் எங்கேனு இன்னும் நீங்க சொல்லலை…” என்றவர் தயக்கத்துடன் இழுக்க…சில நொடிகள் யோசித்த அக்னிபுத்திரன் அழுத்தமான குரலில் பேசினான்.
“உங்க வீட்டிலேயே தங்கிக்கிறது தான் சரியா இருக்கும்.. நாளைக்கு நான் கிளம்பி வர்றேன்… வேற எதுவும் சொல்லணுமா?”அங்கேயே இருந்தால் அவளுக்கு அதிக நேரம் தொல்லை கொடுக்க முடியும் என்பது அவனது கணிப்பு. அவர் மறுத்து பேச இடம் கொடுக்காமல் வேகமாக முடித்துவிட… அப்பொழுதும் கூட சிவநேசன் தயங்கவே செய்தார்.
“இரண்டு பேரும் ஒரே வீட்டில் எப்படி மாப்பிள்ளை?”
“எனக்கு அதுதான் வசதி”
‘எதுக்குடா… நீ என்ன அங்கே வந்து அவளை சைட்டா அடிக்கப் போற’ (ஹி ஹி… இது என்னோட மைண்டு வாய்ஸ்)
“சரி மாப்பிள்ளை.. நான் ஏற்பாடு செய்றேன்.. நாளைக்கு வந்துடுங்க…” என்று சொல்லிவிட்டு அவர் கிளம்ப…. அடுத்து என்ன செய்வது ? எப்படி எல்லாம் அவளை பழி வாங்கலாம்? என்ன செய்து அவளாகவே இந்த திருமணத்தை நிறுத்தும்படி செய்வது? என்றெல்லாம் தீவிரமாக யோசிக்கத் தொடங்கினான் அக்னிபுத்திரன்.
அவன் யோசித்துக் கொண்டிருந்த அதே நேரத்தில் அருந்ததி அடுத்த நாள் அவனை சந்திக்கும் பொழுது என்னவெல்லாம் செய்து அவனை வெறுப்பேற்றுவது என்ற தன்னுடைய திட்டத்தை முழுதாக தீட்டி முடித்து விட்டாள் என்று தான் சொல்ல வேண்டும்.
அக்னிபுத்திரனை சமாளித்து இந்த கல்யாணத்தை நல்ல முறையில் நடத்த வேண்டுமெனில் அவனை விட அவள் ஒரு அடி முன்னே எடுத்து வைத்தால் மட்டுமே சாத்தியம் என்பது அவளுக்குத் தெரியும். அவனை எதிர்கொள்ள தயாராக எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட்டு அடுத்த நாளின் விடியலுக்காக காத்திருக்கத் தொடங்கினாள் அருந்ததி.
ஷாக்கடிக்கும்…
Superb update. Thanks.
Arundhathi oru form ku vanthutta pola🔥