மின்மினியின் மின்சார காதலன் 33 tamil novels

0
868

அத்தியாயம் 33

அருந்ததி, கண்ணன் இருவரின் சமாதானங்களும் அக்னியின் மூளையை சென்று சேரவே இல்லை. வெறித்த பார்வையுடன் அந்த வீடியோவை மீண்டும் மீண்டும் பார்த்துக் கொண்டே இருந்தான். அவனது நிலையைப் பார்க்க பார்க்க அருந்ததிக்கு பயம் தொற்றிக்கொண்டது.

‘ஏதாவது செய்யேன்’ கண்களால் கண்ணனிடம் இறைஞ்சினாள்.

“ப்ரோ… அதைக் கொடுங்க… எத்தனை முறை பார்த்தாலும் அதே தான் வரப் போகுது” அவன் கரங்களில் இறுக்கமாக பிடித்திருந்த மொபைலை வெகுசிரமப்பட்டு பறித்துக் கொண்டான்.

அக்னியின் உடல் நொடிக்கு நொடி இறுகிக் கொண்டே செல்ல, அவனது அருகில் அமர்ந்து அவன் தோளை ஆதரவாய் தட்டிக் கொடுத்தான்.

கண்ணன் காட்டிய வீடியோவில் இருந்தது இது தான்.

ஜெனிபர் இறந்த அன்று அக்னியின் வீட்டிற்கு எதிர்வீட்டில் இருந்தவர்களின் வீட்டு சிசிடிவி கேமராவில் பதிவாகி  இருந்த காட்சிகள் தான் அவை.

ஜெனிபரை யாரோ வேண்டுமென்றே தண்ணீரில் தள்ளுவதும், அவளது கழுத்தில் காலை வைத்து தண்ணீரிலேயே அமிழ்த்தி, அந்த சின்னஞ்சிறு சிசு உயிருக்கு போராடுவது தெரிந்தாலும் யாரோ ஒரு ராட்சசன் குழந்தையின் கடைசி உயிர் துடிப்பு அடங்கும் வரை காலை வைத்து அழுத்தி கொல்வதும் அதில் படமாக்கப்பட்டு இருந்தது.

அந்த கொலைகாரனின் முகம் அதில் தெளிவாக தெரியவில்லை. அவன் கால்கள் மட்டுமே தெரிந்தது. ஷூ அணிந்த அந்த பாதங்கள் அவன் ஒரு ஆண் என்பதை சொல்ல… வேறு எதுவும் தெரியவில்லை. ஜெனிபர் இறந்த பிறகு அவன் அங்கிருந்து சுவடே இல்லாமல் மறைந்து விட, சில நொடிகள் கழித்து அக்னியின் தாய் அங்கே வந்து குழந்தையை தேடுவதும், சற்று நேரத்திற்குப் பிறகு அங்கே வந்த நேசமணி தண்ணீரில் இருந்த குழந்தையை வாறி எடுத்து தோளில் போட்டு கதறுவதும் அதில் பதிவாகி இருந்தது.

இத்தனை நாட்கள் அன்னையின் அஜாக்கிரதை என்று எண்ணி இருந்தவனுக்கு யாரோ வேண்டுமென்றே குழந்தையை கொன்றுவிட்டு சென்று இருப்பது புரிய, குழந்தையை எவனோ ஒருவன் கொன்றது ஒருபுறம் வெறியைக் கிளப்ப, பெற்ற தாயை இத்தனை நாட்கள் துன்பத்தில் ஆழ்த்தி, அவருடன் பேசாமல் அவருக்கு தான் கொடுத்த தண்டனைகள் ஒரு பக்கம் அவனை வாட்டி எடுக்க இப்பொழுது அவனே பெரும் குற்றவாளியைப் போல குற்ற உணர்ச்சிக்கு ஆளாகினான்.

“இந்த வீடியோ உங்களுக்கு எப்படி கிடைச்சது?”உயிர்ப்பில்லாத குரலில் கேட்டான் அக்னி.

“அருந்ததி தான் என்கிட்டே ஜெனிபர் இறந்ததால நீங்க உங்க வீட்டு ஆட்கள் மேல கோபமா இருக்கிறதா சொன்னா… அவங்க வேணும்னே இப்படி செஞ்சதா உங்களுக்கு ஒரு எண்ணம்னு… ஸோ … நீங்க ஜெனிபரை உங்க வீட்டில் விட்டுட்டு போன பிறகு அவங்க அவளை எவ்வளவு அன்போட பார்த்துக்கிட்டாங்கன்னு உங்களுக்கு தெரிஞ்சா … மே பீ உங்க கோபம் கொஞ்சம் குறைய வாய்ப்பிருக்குன்னு என்கிட்டே சொன்னா… அதான்.. நானும் அப்படி எதுவும் தகவல் கிடைக்குமானு உங்க வீட்டுக்கு அக்கம் பக்கத்துல விசாரிச்சேன். அப்போ தான் இந்த வீடியோ சிக்கிச்சு”

“போலீஸ் விசாரிச்சப்போ இந்த வீடியோ கிடைக்கலையே… உங்களுக்கு எப்படி?” தான் அந்த நேரத்தில் ஜெனிபரின் இறப்பைப் பற்றி கொஞ்சமும் விசாரிக்காமல் தன்னுடைய தாயின் மீது பழியை போட்டு விட்டு அப்படியே உறவை முறித்துக் கொண்டு வந்து விட்ட நினைவு அவன் நெஞ்சை முள்ளாய் குத்தியது.

“ப்ரோ உங்களுக்கு நியாபகம் இல்லையா? உங்க எதிர்வீட்டுக்காரர் தன்னோட மகளுக்கு டெலிவரி டைம்க்கு பொண்டாட்டியோட அமெரிக்கா போனவர் அங்கேயே செட்டில் ஆகிட்டார். திரும்பி இந்தியா வரவேயில்லை.

போலீஸ் ஜெனிபர் கேஸை விசாரிச்சப்போ அவங்க வீட்டில் ஆள் இல்லாததால அங்கே அவங்க விசாரிக்கவே போகலை. இன்னொரு விஷயம் அவர் தன்னோட வீட்டுக்கு வெளியில சிசிடிவி கேமரா வைக்கலை.. வெளியே மரம் மறைக்குதுன்னு கொஞ்சம் உள்ளே தள்ளி தான் வச்சு இருந்தார். அது சாதாரணமா பார்த்தா மத்தவங்க கண்ணுக்கு தெரியாது. அவர் உள்ளே வச்சு இருந்ததால தான் அவனோட முகம் நமக்கு தெரியலை. உங்க வீட்டோட பாதி பகுதி… அதாவது அவனது இடுப்புலருந்து கால் வரை மட்டும் தான் நம்மால பார்க்க முடியுது.

அவர் வீட்டோட பாதுகாப்புக்காக வச்சு இருந்த சிசிடிவில தான் இது பதிவாகி இருந்தது. நம்ம நல்ல நேரம் நான் போனப்போ அவர் தன்னோட வீட்டை வித்துட்டு மறுபடியும் அமெரிக்கா போறதுக்காக வந்து இருந்தார். அவர் வீட்டு கேமராவில் பதிவாகி இருந்ததை நான் கேட்டதும் எடுத்து கொடுத்தார்.

நல்லவேளை அவரோட மருமகன் இந்த ரெக்கார்டிங் எல்லாம் ஏதோ வெப்சைட்டில் சேவ் (save) ஆகுற மாதிரி செட் பண்ணி இருப்பார் போல… அதனால நமக்கு இவளோ நாள் கழிச்சும் இது கிடைச்சு இருக்கு. ஒருவேளை ஹார்ட் டிஸ்க் (Hard disk) அந்த மாதிரி எதாவதா இருந்தா நமக்கு மிஞ்சிப் போனா ஒரு ஆறு மாசத்துக்கு முந்தின வீடியோஸ் மட்டும் தான் கிடைச்சு இருக்கும்.

நிஜமா நானே இப்படி ஒரு விஷயம் கிடைக்கும்னு எதிர்பார்க்கலை ப்ரோ.. பார்த்ததும் செம ஷாக் எனக்கு. உடனே எடுத்துட்டு உங்களைப் பார்க்க ஓடி வந்துட்டேன்”

“இப்போ என்ன செய்றது கண்ணா?”கவலையுடன் கேட்டாள் அருந்ததி. அவள் பார்வை கணவனை விட்டு இம்மியும் நகரவில்லை.

“இதுல நான் எந்த முடிவும் எடுக்க விரும்பல பாப்பா… ப்ரோ சொல்லட்டும்” என்று சொன்னவன் அக்னியை கூர்ந்து பார்க்க, அக்னியோ சொல்லொணாத வேதனையில் முகம் கசங்கியபடி இருந்தான்.

அவன் மனம் முழுக்க இப்பொழுது பெற்றவர்களையே சுற்றி வந்தது.

“கண்ணா… நான் கொஞ்ச நேரம் தனியா இருக்கணும். நீ அருந்ததி கூட இங்கேயே இருக்கியா? நான் கொஞ்சம் வெளியே போய்ட்டு வர்றேன்” என்றவனின் வலி நிறைந்த முக பாவனையில் கண்ணனின் தலை தானாகவே ஆடியது.

“ப்ரோ… நீங்க இங்கேயே இருங்க. நானும் பாப்பாவும் வெளியே போய்ட்டு வர்றோம்”

“இல்ல கண்ணா.. அருந்ததிக்கு அது பாதுகாப்பு இல்லை. அவ  இங்கே இருக்கிறது தான் அவளுக்கு நல்லது. எனக்கு என்ன கேடு?” என்றவனின் வெளிப்படையான பேச்சில் அவன் எத்தனை தூரம் வலியை அனுபவிக்கிறான் என்பது புரிய, அருந்ததி கண்ணனுக்கு கண் ஜாடை காட்ட அவனும் புரிந்து கொண்டு தலை ஆட்டினான்.

“சரி ப்ரோ…ரிஷப்ஷன்ல என்னோட லக்கேஜ் வச்சுட்டு வந்துட்டேன். நான் போய் அதை எடுத்துட்டு வந்துடறேன்.”என்றவன் அவனது பதிலை எதிர்பாராமல் அங்கிருந்து சென்று விட, அருந்ததி தயங்கி தயங்கி அவனுக்கு அருகில் சென்றவள் இறுகிப் போய் கிடந்த அவனது தோள்களை மெல்ல வருடத் தொடங்கினாள்.

அவ்வளவு தான் மொத்தமாய் உடைந்து போனான் அக்னி. இறுக்கமாய் அவளை அணைத்துக் கொண்டு அவளது தோளில் சாய்ந்து கதறி அழத் தொடங்கினான்.

அருந்ததி ஒரு நொடி அதிர்ந்தே போனாள். அக்னி அழுகிறானா? எப்பொழுதும் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு யாருக்கும் தலை வணங்காமல் நிற்பவன் இப்பொழுது அவள் முன்னால் அழுகிறானா?

அவன் அழுது முடிக்கட்டும் என்று எண்ணியவளாய் சற்று நேரம்  எதுவுமே சொல்லாமல் அவன் முதுகை மெல்ல வருடிக் கொடுத்தபடி இருந்தவள் , மெல்ல கட்டிலுக்கு அழைத்து சென்றாள். அவனை அமர வைத்து விட்டு தானும் அமர, அவள் தோளில் இருந்து அவள் மடிக்கு இடம் பெயர்ந்து கொண்டான் அக்னி.

“நா… நான் ரொம்ப மோசமான மகன் தானே அதி… எவ்வளவு பெரிய கொடுமையை என்னைப் பெத்தவங்களுக்கு செஞ்சு இருக்கேன். அதுவும் தப்பே செய்யாதவங்களுக்கு.. சை! நான் எல்லாம் என்ன மனுசன்” தன்னைத் தானே முகத்தில் அறைந்து கொண்டு அழுதவனைக் கண்டு நெஞ்சம் வலித்தது அவளுக்கு.

அவன் செய்வதையோ, பேசுவதையோ தடுக்காமல் அவள் அவனை பேச விட்டாள். உள்ளிருக்கும் வலி எல்லாம் வெளியேறட்டும் என்று எண்ணியவளாக அவனது தலையை ஆதுரமாக கோதி விட்டாள் அவள்.

“அவங்க என்கிட்ட எத்தனையோ முறை பேச முயற்சி செஞ்சாங்க. ஆனா… நான் தான் அவங்க பேச்சை காது கொடுத்து கேட்கவே இல்லை. அவங்களுக்கு ஒரு வாய்ப்பு கூட கொடுக்கவே இல்லை. எவ்வளவு தூரம் துடிச்சு இருப்பாங்க இல்ல”

“…”

“தப்பே செய்யாம அவங்க எவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு இருப்பாங்க இல்லை. அவங்க கூட பேசாம அவங்களை முழுசா ஒதுக்கி இல்ல வச்சேன். அதனால தான் அப்பாவுக்கு இதயநோய் வந்ததும், அம்மா படுத்த படுக்கை ஆனதும். எனக்கெல்லாம் மன்னிப்பே கிடையாது”

மனதுக்குள் இத்தனை நாள் அழுத்தி வைத்திருந்த வலிகளை எல்லாம் அப்படியே அருந்ததியிடம் கொட்டிக் கவிழ்த்தான் அக்னி.

“ஆனா அவங்களை நான் வேணும்னு தான் ஒதுக்கி வச்சேன் அருந்ததி. ஜெனிபர் இறந்துட்டா நான் குடும்பம், குழந்தைன்னு மாறிடுவேன்னு நினைச்சு அவங்க வேணும்னே இப்படி செஞ்சதா முட்டாள்தனமா நானே ஒரு முடிவுக்கு வந்து அவங்களுக்கு ரொம்ப பெரிய கொடுமையை செஞ்சுட்டேன். என்னை இத்தனை வருசம் பெத்து வளர்த்தவங்க மேல எனக்கு கொஞ்சமாவது நம்பிக்கை இருந்து இருக்கணுமே. என்னோட கண்ணை மறைச்சது எது? ஜெனிபர் மேல நான் வச்சு இருந்த கண்மூடித்தனமான பாசமா?”

ஏதோ அவளுக்குத் தான் எல்லா கேள்விகளுக்கும் பதில் தெரியும் என்பதைப் போல அவளிடம் கேட்டுக் கொண்டிருந்தவனுக்கு என்ன பதிலை சொல்வது என்று புரியாமல் அமைதியாய் அவன் சிகையை வருடிக் கொண்டிருந்தாள் அருந்ததி.

“நான் போய் மன்னிப்பு கேட்டா கூட அவங்க என்னை மன்னிக்க மாட்டாங்க தானே” குழந்தையாய் கேவினான்.

“சும்மா மனசை போட்டு அலட்டிக்காதீங்க. அவங்க உங்களை பெத்தவங்க. நீங்க தான் அவங்க உலகமே”

“ஆனா… நான் அவங்களை எத்தனை முறை தூக்கி எறிஞ்சு பேசி இருக்கேன் தெரியுமா?”

“என்ன இது சின்னக் குழந்தை மாதிரி” லேசான கண்டிப்புடன் கண்ணீர் வழியும் அவன் கண்களை துடைத்து விட்டாள் அருந்ததி.

அக்னி அழுகிறான். இதுநாள் வரை அவளிடம் சிரித்திருக்கிறான், கோபப்பட்டு இருக்கிறான். ஆனால் அழுகை…ம்ஹும்… நிச்சயம் இல்லை. எப்பொழுதும்… என்ன நடந்தாலும் கற்பாறை போல இருந்தவன் இன்றோ மொத்தமாய் உடைந்து போய் அழுது கொண்டிருக்கிறான். அதுவும் மான அவமானம் பாராமல் மனைவி அவளின் மடியில்.

கண்ணன் இருந்த பொழுது கூட அவனது தோற்றம் இறுகிப் போய் தான் இருந்தது. அவனால் அவள் முன் மட்டுமே தன்னுடைய நிலையை விட்டு இறங்கி வர முடியும் என்று மிகத் தெளிவாய் காட்டி விட்டான். யார் முன் வேண்டுமானாலும் சிரிக்கலாம். ஆனால் அழுகை அப்படி அல்லவே. எல்லார் முன்னிலையும் அழுது விட முடியுமா? அதுவும் ஆண் பிள்ளை அழக் கூடாது என்று சொல்லி வளர்க்கப்பட்ட சமுதாயத்தில்.

அவள் மடியிலயே படுத்து இருந்தவன் மெல்ல இயல்புக்கு வர போராடிக் கொண்டிருந்தான்.

கண்ணன் அருந்ததியின் எண்ணுக்கு மெசேஜ் செய்தான். ‘இப்போ வரலாமா’ என்று கேட்டு.

ஐந்து நிமிடம் கழித்து காபியுடன் வருமாறு பதில் அனுப்பியவள் மெல்ல அக்னியை எழுப்பி அமர வைத்தாள்.

“கண்ணன் வந்துடுவான். போய் முகத்தை கழுவிட்டு வாங்க”என்று சொல்ல மெதுவாய் குளியல் அறைக்குள் சென்றவன் தன்னை சரி செய்து கொண்டு வெளியே வரவும், கண்ணன் காபியோடு உள்ளே வரவும் சரியாக இருந்தது.

“வா கண்ணா.. காபியை கொடு” என்று அவனிடம் இருந்து காபியை வாங்கி அக்னிக்கு ஒன்றை கொடுத்து விட்டு தானும் ஒன்றை எடுத்து பருகத் தொடங்கினாள்.

“ஊருக்கு போக பிளைட் புக் பண்ணட்டுமா ப்ரோ”கண்ணன் கேட்க.. அக்னியின் தலை தயக்கத்துடன் அசைந்தது.

“போகணும் கண்ணா.. அவங்களைப் பார்த்து காலில் விழுந்து நான் மன்னிப்பு கேட்கணும்” என்றவனின் குரல் கரகரப்பாய் இருந்தது.

“அடுத்த பிளைட் எப்போன்னு பார்க்கிறேன்” என்றவன் வேகமாய் மொபைலை எடுத்து ஆராய, அருந்ததி அதை தடுத்து நிறுத்தினாள்.

“நீங்க இரண்டு பேரும் ஒரு விஷயத்தை மறந்துட்டீங்க?”

“என்ன பாப்பா? இந்த நேரம் ப்ரோ அவங்க அம்மா, அப்பா கூட இருக்கிறது தான் சரி”

“நான் சரி , தப்பைப் பத்தி பேசலை… நீங்க மறந்து போன விஷயத்தைப் பத்தி பேசுறேன்” என்று சொல்ல, அக்னி அவளை கூர் பார்வையால் அளவிட்டான்.

“நீங்க போய் மன்னிப்பு கேட்கிறதெல்லாம் சரி… ஆனா ஜெனிபரை கொன்னது யார்? அதை கண்டுபிடிக்க வேண்டாமா?”என்று அவள் உச்சந்தலையில் ஆணி அடித்ததைப் போல கேட்க, அக்னி , கண்ணன் இருவருமே புருவத்தை உச்சி மேட்டுக்கு கொண்டு சென்றார்கள்.

அக்னி குற்ற உணர்ச்சியில் மறந்து இருக்க, கண்ணனோ அக்னியின் மனநிலையை எண்ணி வருந்திக் கொண்டிருக்க.. இருவருமே மறந்து போன விஷயத்தை அழகாய் எடுத்து சொன்னாள் அருந்ததி.

‘யார் அவன்? அவன் எதுக்கு ஜெனிபரை கொல்லணும்? ஒரு வயசு பச்சைக் குழந்தை… அவளை கொல்லனும்னா… எவ்வளவு பெரிய மிருகமா இருப்பான் அவன்?’

Free download novels
Madhumathi Bharath
Facebook Comments Box
What’s your Reaction?
+1
5
+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here