மின்மினியின் மின்சார காதலன் 35 tamil novels

0
246

அத்தியாயம் 35

சிவநேசன் குற்ற உணர்வுடன் தலையை கவிழ்ந்து இருக்க, மொத்த குடும்பமும் அவரை அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தது.

“இதுக்கே ஷாக் ஆனா எப்படி? இன்னும் எவ்வளவோ இருக்கே?” மேலே இருந்தபடியே அவர்களை கிண்டல் செய்தான் சிபி.

அக்னி யாரையும் கவனிக்கவில்லை. அவன் பார்வை முழுக்க அவரை மட்டுமே முகாமிட்டது.

“எல்லாரும் நினைக்கிற மாதிரி இந்த கதையோட வில்லன் நான் கிடையாது. அங்கே ஒண்ணுமே தெரியாத மாதிரி உட்கார்ந்து இருக்காரே… அவர் தான்”

“இன்னும் அமைதியா இருந்தா தப்பிச்சுக்கலாம்ன்னு பார்க்கறீங்களா?” என்று அக்னி எகிற.. அவனுக்கு அருகில் நின்ற கண்ணனும் அருந்ததியும் அவனை பிடித்து பின்னால் இழுத்தார்கள்.

“ப்ளீஸ்!”

“பொறுமை ப்ரோ”

“அவர் சொல்ல மாட்டார்… சொன்னா அப்புறம் அவர் குடும்ப கௌரவம் என்னாகிறது?”

சிபி பேசிக் கொண்டிருக்கும் பொழுதே அவன் கண் அசைக்க பக்கவாட்டில் இருந்த அறையில் இருந்து கையில் ஒரு பெட்டியுடன் இருவர் வர அக்னி எச்சரிக்கையுடன் அவர்களை பார்த்தான்.

“ஆர்மி ஹீரோ… போலீஸ் ஹீரோ இரண்டு பேரும் கொஞ்சம் அமைதியா இருங்க. ஏதாவது வேலை காட்ட நினைச்சா உங்களை சுத்தி துப்பாக்கியோட இருக்கிற என்னோட ஆட்களையும் ஒரு பார்வை பார்த்துக்கோங்க”

அவர்கள் இருவரும் பார்த்துக்கொண்டே இருக்கும் பொழுதே அந்த ஆட்கள் அருந்ததியை நெருங்கி அவள் உடலில் ஒரு பையை பொருத்தினார்கள்.

“டேய்! என்னடா இருக்கு அந்த பையில” பயத்தில் வேர்த்து வழிந்த அருந்ததியை பார்த்துக் கொண்டே பதறினான் கண்ணன்.

“ஒண்ணுமில்லை கண்ணா… கொஞ்சமா பட்டாசு வச்சு இருக்கேன்… என்ன கொஞ்சம் பெரிய சைஸ் பட்டாசு. அது வெடிக்க பத்த வைக்க வேண்டாம். ரிமோட்டை அழுத்தினா போதும். அடுத்த நிமிசம் அஞ்சு கிலோமீட்டர் க்ளோஸ்” அசட்டையாக தோள் குலுக்கி சொல்ல… அக்னி, அருந்ததி இருவரின் பார்வையும் ஒருவரையொருவர் பயத்துடன் பார்த்துக் கொண்டது.

“என்ன புருசன் பொண்டாட்டி இரண்டு பேரும் லவ் லுக் விட்டுக்கறீங்க போல”பரிதாபப்படுவது போல பேசினான் சிபி.

“டேய்! யாருடா நீ? எதுக்கு இப்படி எல்லாம் செய்ற?” அக்னி ஆத்திரத்துடன் கேட்டபடி அவனை நோக்கி முன்னேறத் துடிக்க… சிபியின் அடியாட்கள் அவனை தடுத்து நிறுத்த … அங்கே பெரும் சண்டைக்கான அறிகுறி தெரிய… சிபியோ ஏதோ விளையாட்டை ரசிப்பதைப் போல சுவாரசியமாக கன்னத்தில் கை வைத்து வேடிக்கைப் பார்க்கத் தொடங்கினான்.

“என்ன தான் மிலிட்டரிக்காரனா இருந்தாலும் பொண்டாட்டி உடம்புல பாம் கட்டின பிறகாவது கொஞ்சமாச்சும் பயம் வரணும் தானே. உன்னோட கண்ணுல இன்னும் அந்த பயம் எனக்குத் தெரியலையே… எப்படியாவது அவளை காப்பாத்திடலாம்ன்னு நினைக்கிறியோ”அளவில்லாமல் நக்கல் வழிந்தோடியது அவன் குரலில்.

“என்னடா என்கிட்டேயே ஆட்டம் காட்டுறியா? இங்கே இருக்கிறவங்க எல்லாரும் என்னை சேர்ந்தவங்க… அவங்க யார் மேலயாவது ஒரு சின்ன கீறல் விழுந்துச்சு… மவனே இங்கே இருந்து ஒருத்தனும் உயிரோட வெளியே போக முடியாது.”சீறி பாய்ந்து எல்லாரையும் கொல்லத் துடிக்கும் ஆக்ரோஷத்துடன் அக்னியின் குரல் இருந்தது.

“ப்ரோ … கொஞ்சம் அமைதியா இருங்க. இந்த நேரத்துல பொறுமையா இருக்கணும். கொஞ்சம் பாப்பாவை பாருங்க”கண்ணன் சூழலை அக்னிக்கு உணர்த்த முயன்றான்.

அக்னி, அருந்ததியைப் பார்க்க, உடலில் வயிற்றுப் பகுதியில் ஏதோ ஒன்றை வைத்து கட்டி இருந்தார்கள். அசைந்தால் கூட ஏதேனும் ஆகி விடுமோ என்று பயந்து போய் உடல் நடுங்க நின்று கொண்டு இருந்தாள் அருந்ததி.

“அரும்மா..”

“டேய்!.. ஒரு அடி எடுத்து வச்ச… ரிமோட்டை அழுத்திடுவேன்… ஒழுங்கா அங்கேயே நில்லு…”சிபியின் கோபக் குரலில் அப்படியே நின்று விட்டான் அக்னி.

‘அவ்வளவு தானா? நான் சாகப் போகிறேனா?’ என்ற கேள்வியை கண்களில் தாங்கிக் கொண்டு நின்ற மனைவியை நெருங்கி சமாதானம் செய்து.. அவளது உயிரை காக்க முடியாத சூழல்… கொடிய நரகத்தில் விழுந்ததைப் போல அவனை துடிக்க வைத்தது.

“இப்போ எதுக்குடா அவ மேல பாம் கட்டி வச்சு இருக்கிற … பரதேசி.. எதுவா இருந்தாலும் என்கிட்டே வாடா…”

“அதெல்லாம் பொறுமையா .. விளக்கமா சொல்றேன்… நீ கொஞ்சம் அடங்கி உட்கார்” என்றவன் அவனது ஆட்களுக்கு கண் அசைக்க, சிலர் வந்து அருந்ததியை மட்டுமாக எங்கேயோ அழைத்து செல்ல முயன்றனர்.

அருந்ததி வராமல் அழுதபடி அங்கேயே தேங்கி நிற்க… அவர்களில் ஒருவன் அவள் கன்னத்தில் அறைந்தான்.

“டேய்!”

“பாப்பா”

“என்னடா.. அவ மேல கையை வச்சா ரெண்டு பேரும் பொங்கறீங்க? மரியாதையா நான் சொல்றதை கேட்டு நடந்தா அடி வாங்க தேவை இல்லை. இப்படி சும்மா முரண்டு பிடிச்சா முதல்ல அடி விழும்… அப்புறம் ரிமோட்டை அழுத்தி ஆளை முடிச்சிடுவேன்” என்று சிபி கூலாக சொல்ல…அக்னியும், கண்ணனும் கோபத்தை அடக்க தங்களுக்குள் போராடுவது வெளியே நன்றாகத் தெரிந்தது.

“டேய்! ரொம்ப துள்ளாதீங்க எனக்குத் தேவை இவளோட உயிர் இல்லை.. நான் ஹீரோவாகணும். அவ்வளவு தான். இந்த பாம் அவ உடம்புல கட்டி இருக்கிறது உங்க எல்லாரையும் என்னோட கண்ட்ரோலில் வைக்கிறதுக்குத் தான்..தேவை இல்லாம ஏதாவது வேலை பார்த்து என்னை சீண்டிப் பார்த்தா.. அடுத்த நிமிசமே பட்டனை அழுத்திட்டு போயிட்டே இருப்பேன். என்னை ஒருத்தனும் கேள்வி கேட்க முடியாது. புரிஞ்சுதா?” ஒற்றை விரலால் சொடுக்கிட்டு பேசினான்.

கண்ணன் வெகுவாக போராடி, அக்னியை பிடித்து வைத்தான். சிபி அதே நேரம் அருந்ததியிடம் கணீர் குரலில் பேசத் தொடங்கினான்.

“இதோ பார். இப்போ என்னோட ஆட்கள் உன்னை ஒரு இடத்துக்கு அழைச்சிட்டு போவாங்க. அவங்க கூட சத்தமே இல்லாமல் போகணும். என்னோட ஆட்கள் எந்நேரமும் என் கூட போனில் தொடர்பில் இருப்பாங்க. இங்கே சில வேலைகள் முடிக்க வேண்டியது இருக்கு. அது முடிச்சதும் நான் கிளம்பி வருவேன். அங்கே வந்து உன்னோட உடம்புல இருக்கிற பாமை ரிமூவ் பண்ணி எல்லார் முன்னாடியும் நான் ஹீரோவா நிற்ப்பேன். எல்லாம் முடிஞ்சதும் நீ பத்திரமா வீட்டுக்கு வந்துடலாம். இதுல சின்னதா ஏதாவது சொதப்பல் நடந்துச்சு.. இங்கே இருக்கிற எல்லாரையும் கொன்னுடுவேன். புரிஞ்சுதா?” என்று கேட்க அருந்ததி பாவமாக தலை ஆட்டினாள்.

அக்னியை பார்த்தபடியே அவள் நிற்க, அவளுக்கு பின்னால் வந்து நின்ற நபர்கள் அவளது தோளில் கை வைத்து தள்ளி அவளை வெளியே செல்லும்படி பணித்தனர். அறையின் வாயிலை கடக்கும் வரையிலும் அவள் பார்வை அக்னியை விட்டு வேறெங்கும் செல்லவில்லை.

‘இது தான் கடைசி பார்வை’ என்று நினைத்தாளோ என்னவோ அவனை அத்தனை உருக்கத்துடன்… கண்களில் வழியும் நேசத்துடன் பார்த்தபடியே அவன் பார்வையில் இருந்து மறைந்து போனாள்.

அக்னிக்கு அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் கண்ணைக் கட்டி விட்டது போலிருந்தது. கடத்தியவன் அவள் மீது பாமை கட்டுவான் என்பது அவன் துளியும் எதிர்பாராத ஒரு சம்பவம். அதே நேரம் இரு வீட்டு ஆட்களையும் கடத்தி வைப்பான் என்பதையும் அவன் எதிர்பார்க்கவில்லை. அவன் மட்டுமாக இருந்திருந்தால் இந்நேரம் அந்த இடத்தையே நொறுக்கி விட்டு தன் உயிரானவளை காப்பாற்ற புறப்பட்டு இருப்பான். இப்பொழுது அதற்கும் வழி இல்லாமல் துப்பாக்கி முனையில் இரு வீட்டு பெரியவர்களும் நிற்க வைக்கப்பட்டு இருக்க, முதன்முதலாக வாழ்வில் பயந்தான் அக்னி.

அவனின் மனநிலையை தெளிவாக புரிந்து கொண்டதாலோ என்னவோ கண்ணன் அவனுக்கு பதிலாக பேசத் தொடங்கினான்.

“ஏன்டா.. உனக்கு ஹீரோவாகணும்னு ஆசை இருந்தா சொந்தமா படம் எடுத்து.. அதுல நீயே ஹீரோவா நடி.. அதுவும் இல்லையா சீரியல் ஹீரோவாகி டெய்லி எல்லாரையும் அழ வைடா.. நாசமா போறவனே… அதை விட்டுட்டு எங்க வீட்டு பொண்ணு மேல எதுக்குடா பாம் கட்டி விட்டு இருக்கே”

“எனக்கு ஹீரோ ஆகணும் தான். ஆனா அது இந்த சமுதாயத்துக்கு முன்னாடி ஆகணும். திரையில் இல்ல…அருந்ததி கெட்ட பேர் வாங்கி… அந்த இடத்துல எல்லார் முன்னாடியும் நான் நல்ல பேர் எடுக்கணும். அதுதான் முக்கியம்.”

“அவ என்னடா செஞ்சா உன்னை?” அக்னி பல்லைக் கடித்துக்கொண்டு பேசினான். விட்டால் இந்த நிமிடமே அவனை கொன்று விடும் துடிப்பு அவனிடம்.

“அவளா? அவ ஒண்ணுமே செய்யலையே…”

“அப்போ வேற யார் மேல தான் உனக்கு கோபம்?”

சிபியின் பார்வை ஒரே ஒரு நொடி நேசமணியின் மீது படிந்து மீண்டது. அதை உணர்ந்து கொண்ட அக்னி அவர் புறம் வேகமாக திரும்பினான்.

“என் பொண்டாட்டி உயிர் ஆபத்துல இருக்கு. இப்போ கூட வாயை திறக்க மாட்டீங்களா? அவளுக்கு மட்டும் ஏதாவது ஆச்சு? மாமனார்னு எல்லாம் பார்க்க மாட்டேன். முதல் பலி நீங்க தான்”

“ஹே.. நீ அவரை கொன்னுட்டா.. அப்புறம் நான் எப்படி அவரை பழி வாங்குறது? அப்படி அவரை கொல்றது என்னோட நோக்கமா இருந்திருந்தா பாமை இவர் மேல கட்டி அனுப்பி இருக்க மாட்டேனா?”ஏதோ ஜோக் சொன்னதைப் போல சொல்லி முடித்து விட்டு அவனாகவே சிரித்துக் கொண்டான். ஆனால் அந்த சிரிப்பில் பழி வாங்கும் வெறி அத்தனை தெளிவாய் மின்னியது.

“சைக்கோ… நீ எல்லாம் நல்லாவே இருக்க மாட்டேடா” சிவநேசன் முதன்முதலாய் வாய் திறந்து பேசினார்.

“இது கலிகாலம்.. நல்லவங்க வார்த்தையே பலிக்கிறது இல்ல.. இவர் வந்துட்டார்.. பெரிய கண்ணகி வாரிசு.” என்றவன் அவரை தீர்க்கமாக பார்த்துக் கொண்டே போனை எடுத்து பேசினான்.

“டேய்! அருந்ததி உன் பக்கத்துல இருக்காளா?”

“…”

“சந்தோசம்… அவ பின்னாடி தனியாவே ஆட்களோடு இருக்கட்டும். நீ முன் சீட்டிலேயே இரு. நாம பேசுறது அவளுக்கு கேட்க வேண்டாம்”

“…”

“இன்னும் அரை மணி நேரத்துல அந்த ***** ஹோட்டலுக்கு அவளை கூட்டிட்டுப் போ. அங்கே வாசலில் ஆள் எல்லாம் ரெடி பண்ணிட்டேன். யாரும் அவளை செக் பண்ண மாட்டாங்க. அவளை கொண்டு போய் உள்ளே விட்டுடு. அப்புறம் ஒரு முக்கியமான விஷயம். அங்கே இருக்கிற எந்த கேமராவிலும் நீங்க அவளோட வந்த மாதிரி பதிவாகாம பார்த்துக்கோங்க. அவ காதில் ஒரு ஹாண்ட்ஸ் ப்ரீ (hands free) செட் பண்ணி அது வழியா அவளுக்கு இன்ஸ்ட்ரக்ஷன் கொடுங்க. ஏடாகூடமா ஏதாவது செஞ்சா பாம் வெடிச்சிடும்ன்னு பயத்துலயே அவளை சுத்த விடுங்க. அவளோட வித்தியாசமான நடவடிக்கை எல்லார் கண்ணுலையும் படனும். சரியா இன்னும் ஒரு மணி நேரத்துல அங்கே மினிஸ்டர்ஸ் எல்லாரும் வந்துடுவாங்க. அந்த நேரம் அவ அங்கே தான் இருக்கணும். அதுக்குள்ளே நானும் அங்கே வந்துடுவேன். அதுக்கு அப்புறம் எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன். அவளை ஹோட்டலுக்கு உள்ளே பத்திரமா இறக்கி விட்டுட்டு எனக்கு தகவல் கொடுங்க. அதுக்கு அப்புறம் தான் நான் இங்கே இருந்து கிளம்புவேன்.” பேசி முடித்து விட்டு போனை வைத்தவன் தன்னுடைய ஆட்களிடம் எதையோ எடுத்து வர சொல்ல… கையில் ஒரு ட்ரேயுடன் வந்த ஆட்கள் அக்னியின் முன் நின்றார்கள்.

“டேய்! இதுல ஒன்னை எனக்கு செலக்ட் பண்ணிக் கொடு”

“எதுக்குடா உன்னை குத்துறதுக்கா?”

“முதல்ல எடுத்து கொடு.. அப்புறம் சொல்றேன்.”

அக்னி வேறு வழியின்றி தன் முன்னே இருந்த ட்ரேயில் பார்க்க… அத்தனையும் சிறிய கத்திகள்.. விதவிதமாய் இருந்தது. அதில் ஒன்றை அவன் கையிலெடுத்தான்.

“ஓ!… அந்த கத்தியா?.. ம்ம்ம்.. குட் சாய்ஸ்” என்றவன் பத்திரமாக அந்த கத்தியை வெகு கவனத்துடன் தன்னுடைய கோட் பாக்கெட்டினுள் வைத்துக் கொண்டான்.

“உன்கிட்டே ஒரு விஷயம் சொல்லியே ஆகணும் அக்னி… இந்த உலகத்துலேயே தான் காதலிக்கிற தன்னோட பொண்டாட்டியை குத்துறதுக்கு கத்தி எடுத்துக் கொடுத்த ஒரே புருசன் நீயா தான்  இருப்ப?” என்று சொல்லி முடிக்க.. அவனை அடிக்க பாய்ந்து விட்டான் அக்னி. ஆயினும் அவனது சுண்டு விரல் சிபியை தொடும் முன் அவனது ஆட்கள் துப்பாக்கியோடு முன்னே வந்து மறித்து நின்று கொள்ள… சிபியின் புன்னகை இன்னும் அதிகமானது.

“அடேய்! படுபாவி.. அவளை ஒன்னும் செய்ய மாட்டேன்னு சொன்னியே டா?” சிவநேசன் கதறினார்.

“ஆமா.. அவளை பக்கத்துல வச்சுக்கிட்டே அப்படி சொன்னா அவ மனசு கஷ்டப்படாது. சாகப் போற ஒவ்வொரு நிமிஷமும் துடிப்பாளே. சாகப் போறப்போ அவ தெரிஞ்சுக்கிட்டா போதும். ஏதோ என்னால முடிஞ்ச அளவுக்கு அவளுக்கு ஒரு சின்ன உதவி… அதே நேரம் உங்களுக்கு எல்லாம் தெரியணுமே.. அப்போ தானே அவ சாகப் போறான்னு தெரிஞ்சும் காப்பாத்த முடியலையேன்னு நீங்க எல்லாம் துடிப்பீங்க?”

“ஏன் அக்னி… எனக்கு ஒரு சந்தேகம்? இப்போ அவளை நான் அந்த கூட்டத்துல யாருக்கும் தெரியாம கழுத்தை அறுத்து கொன்னுட்டு பக்கத்துல உன்னோட கை ரேகை பதிஞ்ச இந்த கத்தியை வச்சுட்டு வந்தா நல்லா இருக்குமா? இல்லை அவ மேல கட்டி இருக்கிற  பாமை  வச்சு உடம்பு துண்டு துண்டா சிதறடிச்சு கொல்றது சரியா இருக்குமா?” என்று தாடையை தடவி யோசனை கேட்டவனை கண்டு அங்கு உள்ள எல்லாருமே அதிர்ந்து தான் போனார்கள்.

 

ஷாக்கடிக்கும்…

Free download novels
Madhumathi Bharath
Facebook Comments Box
What’s your Reaction?
+1
8
+1
0
+1
3
+1
3
+1
2
+1
5
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here