மின்மினியின் மின்சார காதலன் 36 tamil novels

0
124

அத்தியாயம் 36

அருந்ததி கிளம்பி அரை மணி நேரம் தாண்டி இருந்தது. அவள் அந்த ஹோட்டலை சென்று அடைந்து விட்டாள் என்ற தகவலும் வந்து சேர அடியாட்களிடம் நூறு முறை எச்சரித்தான் அவளை பத்திரமாக பார்த்து கொள்ளும்படி.

“இதோ பாருங்க. நான் அந்தப்பக்கம் நகர்ந்ததும் ஏதாவது ஹீரோ வேலை செஞ்சு இவங்களை காப்பாத்தணும்ன்னு நினைச்சே.. அங்கே இருக்கிற உன் பொண்டாட்டி உயிர் உடம்புல தங்காது. ஒரு வேளை உன்னோட போலீஸ் புத்தியை பயன்படுத்தி வெளியே இருக்கிற அருந்ததியை காப்பாத்தணும்னு நினைச்சா இங்கே இருக்கிற எல்லாரையும் கொன்னுடுவேன். ஸோ… நல்லபிள்ளையா நடக்கிறதை வேடிக்கை மட்டும் பாருங்க… புரிஞ்சுதா?

டேய்! இவனுங்களை நம்ப முடியாது எதுக்கும் இவனுங்களையும் தனியா கட்டி வைங்க… ஜாக்கிரதை” என்று அக்னி, கண்ணன் இருவரையும் மிரட்டி விட்டு  உற்சாகத்துடன் விசில் அடித்தவாறு அங்கிருந்து கிளம்பினான் சிபி.

அக்னி, கண்ணன் இருவரில் ஒருவர் அசைந்தாலும் சுட்டு விடத் தயாராக அவனின் ஆட்கள் துப்பாக்கியுடன் நிற்க, தலையை அழுந்த கோதிக் கொண்டே கண்ணனைப் பார்த்தான் அக்னி.

கண்ணன் தலையை கவிழ்ந்து கொள்ள, அக்னியோ நிலை கொள்ள முடியாமல் புழுவாய் துடித்தான். அக்னி , கண்ணன் இருவரையும் தனித்தனியாக ஒரு சேரில் கட்டி வைத்தார்கள்.

சிபி தான் நினைத்தபடியே எல்லாம் நடக்கிறது என்ற மகிழ்ச்சியில் அந்த ஹோட்டலை நோக்கி விரைவாக காரில் சென்று சேர்ந்தான்.

அவன் மீட்டிங் நடைபெறும் அந்த ஹாலுக்குள் நுழைந்ததுமே அவனது ஆட்கள் அவனை நோக்கி வந்தனர்.

“சார்.. எல்லாமே நீங்க சொன்ன மாதிரி தான் நடந்துட்டு இருக்கு. நீங்க எப்போ சொல்றீங்களோ அப்போ இந்த ரிமோட்டை அழுத்திடறேன்”

“முட்டாள்.. அந்த பாமை வெடிக்க வைக்கிற ரிமோட் இது இல்லை..”

“அப்புறம் வேற எங்கே இருக்கு பாஸ்?” என்றான் ஒட்டிக் கொண்ட பரபரப்புடன்

“அது எதுக்கு உனக்கு? உனக்கு சொல்ற வேலையை மட்டும் செய்… என்னை கேள்வி கேட்டா… நாக்கை துண்டா அறுத்துப் போட்டுடுவேன்” மற்றவர் காதில் விழாத வண்ணம் முகத்தை சிரித்தபடி வைத்துக் கொண்டே பேசினாலும் அதில் உள்ள வன்மத்தை அவனது ஆட்களால் உணர முடிந்தது.

அவன் ஆட்கள் அவனது அருகில் நின்றாலும் தூரத்தில் இருந்த அருந்ததியைத் தான் கண்காணித்துக் கொண்டிருந்தனர். அவள் கொஞ்சம் வேறு திசை நோக்கி அசைந்தாலும் போன் வழியே அவளை மிரட்டத் தொடங்கினார்கள்.

“ஏய்! அந்த இடத்தை விட்டு நகரக் கூடாதுன்னு ஏற்கனவே சொன்னேன்ல”

“எனக்கு பாத்ரூம் போகணும்… வாமிட் வர்ற மாதிரி இருக்கு”

“பரவாயில்லை.. இங்கேயே வாந்தி எடு”

“…”

“என்ன முழிக்கிற… என் கண் பார்வையில் இருந்து நீ நகரக் கூடாதுன்னு பாஸ் உத்தரவு போட்டு இருக்கார். நீ என்னோட பார்வையை விட்டு கொஞ்சம் மறைஞ்சாலும் நான் ரிமோட்டை அழுத்திடுவேன்.”

“இன்னும் எவ்வளவு நேரம் தான் இப்படி என்னை கொடுமைப்படுத்துவீங்க”

“எங்க பாஸ் வந்து சொல்ற வரை… உன்னோட நிலை இது தான்” என்றவன் அவளை தனியே அங்கிருந்த ஒரு சேரில் அமர பணித்து விட்டு அங்கிருந்து நகர்ந்தான்.

“பாஸ் எல்லாம் ரெடி… நீங்க போய் ஆக வேண்டியதை பாருங்க”

கேமராக்கள் சுற்றிலும் கண்காணிப்பு பணியில் தீவிரமாக இருந்தது. எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டே அருந்ததியின் அருகில் நெருங்கினான் சிபி. அருந்ததி இன்னும் அவனை பார்த்து இருக்கவில்லை. மற்றவர்கள் கருத்தை கவராத வண்ணம் அவளுக்கு அருகில் இருந்த மற்றொரு  டேபிளில் அமர்ந்தவன் இப்பொழுது அவளிடம் இருந்த போன் மூலமாகவே தொடர்பு கொண்டான்.

“என்ன மேடம்! யாருக்காகவோ காத்திருக்கீங்க போல?” அவன் குரலை போன் வழியாக காதில் கேட்டதும் அவளையும் அறியாமல் அவள் உடல் பதறத் தொடங்கியது.

“நீ.. நீ..”

“நானே தான்.. பத்திரமா வந்து சேர்ந்துட்டேன்.”

“அ…அவங்களை எல்லாம் என்ன செஞ்ச?”

“இப்போ வரைக்கும் ஒண்ணும் செய்யலை… இனிமே எதுவும் செய்யாம இருக்கணும்னா.. நான் சொல்றபடி கேட்டு இம்மி பிசகாம நீ அப்படியே செய்யணும்”

“இதுவரைக்கும் நீயும், உன்னோட ஆட்களும் ஆட்டுவிக்கிற பொம்மை  மாதிரி தானே எல்லாத்தையும் செஞ்சுட்டு இருக்கேன். அவங்களை எல்லாம் விட்டுடு”

“எதுக்கு.. அவங்களை எல்லாம் அனுப்பி வச்சுட்டா.. உன் புருசன் வந்து உன்னை காப்பாத்திடுவான்னு நம்புறியா? ஹ… அதெல்லாம் என்கிட்டே நடக்காது. உனக்கொரு ரகசியம் சொல்லட்டுமா? என்னோட வேலை முடிஞ்சதும் உன்னோட அப்பாவையும், அம்மாவையும் தவிர மத்த எல்லாரையும் கொல்லப் போறேன்”

அடுத்து என்ன பேச வேண்டும் என்பதைக் கூட மறந்து விட்டு அதிர்ச்சியில் சிலையானாள் அருந்ததி.

“எதுக்கு அவங்களை மட்டும் உயிரோட விடறேன்னு யோசிக்கிறியா? இவ்வளவு நடந்த பிறகு உங்க அப்பாவை உங்க அம்மா கொஞ்சமும் மன்னிக்க மாட்டாங்க. கடைசி காலத்துல அந்தாளு தனி ஆளா தவிச்சு, துடிச்சு, தனிமையில வெந்து  சாகணும்.”

“அ… அப்போ என்னையும் கொல்லத் தான் போற.. இல்லையா?”

“ஹம்.. உறுதியா சொல்ல முடியாது. நீ நல்ல பிள்ளையா நடந்துக்கிட்டா உன்னை உயிரோட விட்டாலும் விடுவேன்” என்றவனின் பேச்சில் அவளுக்கு துளியும் நம்பிக்கை இல்லை.

“இப்போ இந்த இடத்துல இருக்கிற போலீஸ், செக்யூரிட்டி யார் கிட்டயாவது போய் நான் இந்த பாமை பத்தி சொல்லிட்டா..” அவனை மிரட்ட முயன்றாள் அருந்ததி.

“நீ யார் பக்கத்திலயாவது  நெருங்கினா அடுத்த நிமிஷம் பாமை வெடிக்க வச்சிடுவேன். சுத்திப் பார். எத்தனை குழந்தைங்க இருக்காங்கனு. அவங்களும் சேர்ந்து சாகணுமா?” என்றவனை கொல்வதற்கு அவள் கைகள் துடித்தன.

வெவ்வேறு பள்ளியை சேர்ந்த  குழந்தைகள் தங்களது பெற்றோர்களுடன் அங்கே வந்து இருந்தார்கள். ஏதோ அரசாங்க விழா போல தோன்றியது. ஒவ்வொரு பள்ளியிலும் போட்டியில் கலந்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசை அளிக்கும் விழா என்பது பார்த்த அளவில் புரிந்தது அவளுக்கு.

“நீ எல்லாம் மனுசன் தானா? எல்லாமே பச்சைக் குழந்தைகள்… பாவி உனக்கெல்லாம் இரக்கமே இல்லையா?”

“இரக்கம்…  அது தான் என்னோட மிகப் பெரிய எதிரி… சில பேர் மேல நான் இரக்கம் காட்டாம இருந்து இருந்தா இந்நேரம் என் வாழ்க்கை ரொம்பவே அழகானதா மாறி இருக்கும். ஆனா இப்போ…” குரல் இறுகி… கண்கள் சிறுத்தையென ஜொலிக்க… அவனைப் பார்க்கவே அருந்ததிக்கு பயமாக இருந்தது.

கண்களை இறுக மூடி தன்னை சமன் செய்து கொண்டாள்.

“இப்போ நான் என்ன செய்யணும்? அதை மட்டும் சொல்லு” வறண்டு போய் ஒலித்தது அவள் குரல். அவள் கண்களில் ஒரு துளி கூட பயம் இல்லை. மாறாக ஒரு பற்று அற்ற நிலை வந்து இருந்தது. ஏதாவது செய்யப் போய் அங்கிருக்கும் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தாகி விடுமோ என்று அஞ்சினாள்.

நேசத்துக்கு உரியவன் அங்கே அடைபட்டு இருக்க… அவளோ இன்னொருவரின் சொல்லுக்கு கட்டுப்பட்டு நடக்கும்  பொம்மையாக துணிந்து களத்தில் இறங்கி விட்டாள்.

“சொல்றேன்.. சொல்றேன்… இன்னும் கொஞ்ச நேரத்துல அமைச்சர் வந்ததும் விழா தொடங்குவாங்க. ஒவ்வொரு குழந்தையா மேடைக்கு அப்பா, அம்மாவோட போய் பரிசை வாங்கிட்டு வருவாங்க. நான் சொல்லும் பொழுது நீயும் மேடைக்கு போகணும். அதுல ஒரு குழந்தையோட அம்மா மாதிரி..”

“நான் எப்படி போக முடியும்? அந்த குழந்தையோட அம்மா வந்து இருப்பாங்க தானே?”

“அதெல்லாம் நான் ஏற்கனவே ஏற்பாடு பண்ணிட்டேன். நான் சொல்றதை மட்டும் நீ செய்.. குறுக்கே கேள்வி கேட்காதே… எனக்குப் பிடிக்காது”

“…”

“நீ அமைச்சர் கிட்டே நெருங்கினதும் உன்னை தள்ளி விட்டு நான் அவரை காப்பாத்துவேன். உன்னை போலீஸ் அரெஸ்ட் பண்ணிடுவாங்க. நீ நல்லபடியா ஜெயிலுக்குள்ளே போகலாம். நான் ஒரே நாளில் ஹீரோவாகிடுவேன்”

“இதனால உனக்கு என்ன லாபம்? கண்டிப்பா பணத்துக்காக இல்லை”

“குட்… எனக்கு உன் பேர் கெடணும்… உங்க அப்பாவோட வளர்ப்பைப் இந்த ஊர் உலகமே காறித் துப்பணும். அந்தாளோட மரியாதை எல்லாம் காத்துல பறக்கணும்.”

“போலீசுக்கு போனதும் நான் நடந்த உண்மையை எல்லாம் சொல்லி வெளியே வந்துட்டா என்ன செய்வ?”

“அப்படி ஒரு எண்ணம் உனக்கு வராத வரை தான் உனக்கு உடம்புல உயிர் மிஞ்சும். ஒருவேளை எனக்கு எதிரா நீ யோசிக்க ஆரம்பிச்சுட்டனு தெரிஞ்சா அடுத்த நிமிசமே உனக்கு காவலா இருக்கிற போலிசே உனக்கு எமனாகவும் மாறுவாங்க. என்னோட ஆட்கள் எல்லா இடத்துலயும் இருக்காங்க.”

“உன்னோட ஆட்கள் தவிர நல்லவங்களும் இந்த உலகத்துல இருக்காங்க”

“உண்மை தான். அப்படி இருக்கிறவங்களையும் என்னோட பணத்தால விலைக்கு வாங்கிடுவேன். பணத்துக்கு மசியலைனா உன்னை மாதிரி அவங்களுக்கு வேண்டிய யாரையாவது தூக்கிட்டு வந்தா தன்னால என்னோட பேச்சுக்கு கட்டுப்பட்டு நடக்கப் போறாங்க”

“…”

“என்னைப் பார்த்தா முட்டாள் மாதிரியா இருக்கு. அவ்வளவு சுலபமா நீ என்கிட்டே இருந்து தப்பிச்சிட முடியாது. ஒருவேளை நீ தப்பிக்கிறதா இருந்தா அதுக்கு ஒரே வழி உன்னோட மரணம் மட்டும் தான். நியாபகத்தில் வச்சுக்கோ”

திக் திக் மனதுடன் அடுத்து அவன் உத்தரவிடும் நொடிக்காக காத்திருக்கத் தொடங்கினாள் அருந்ததி.

அக்னி தான் அமர்ந்திருந்த சேரில் இருந்து விடுபட முடியுமா என்று முயன்று கொண்டிருந்தான். அடியாட்களுக்குத் தெரியாமல் தான்.

அவனது பாக்கெட்டில் சிறிய கத்தி ஒன்றை பாதுகாப்பிற்காக எப்பொழுதும் வைத்திருப்பான். கை கட்டுகளை  கழட்டி அதை எடுத்து விட்டால் காலில் கட்டி இருக்கும் கயிறுகளையும் அறுத்து விடலாம் என்று எண்ணியவன் கண்ணனைப் பார்த்தான்.

கைகள் இரண்டும் பின் பக்கமாக கட்டப்பட்டு இருக்க, கையை மெதுவாக அசைத்து கட்டை அவிழ்க்க முயன்று கொண்டிருந்தான் கண்ணன்.

இருவரும் கண்ணாலேயே ஏதோ ரகசியத்தை பேசிக் கொண்டனர். அதையும் அங்கிருந்த ஆட்களில் ஒருவன் கவனித்து விட்டு அவர்கள் இருவருக்கும் பொதுவில் வந்து நின்று கொண்டு அதட்டலாக பேசினான்.

“என்னடா ரெண்டு பேரும் கண்ணாலேயே பேசிக்கிறீங்க? என்ன திட்டம் போடுறீங்க?”

“கட்டிப் போட்டு இருக்கிறோம்ங்கிற மிதப்புல எவன் வந்து முதல்ல மரியாதை இல்லாம பேசுறானோ அவன் வாயை எப்படி உடைக்கிறதுன்னு பேசிட்டு இருக்கோம்” என்றான் அக்னி அசால்ட்டாக.

“ப்ரோ… கொஞ்சம் சும்மா இருங்க ப்ரோ… இவனுங்க வெப்பன் எல்லாம் வச்சு இருக்கானுங்க”

“நீ எல்லாம் போலிஸ்னு வெளியே சொல்லிக்காதே”

“சரி ப்ரோ சொல்ல மாட்டேன். நீங்க கொஞ்சம் அமைதியா இருங்க…”

“நீ எல்லாம் என்ன தான்டா ட்ரைனிங் எடுத்த?”

“நான் எங்கே  ப்ரோ ட்ரைனிங் எடுத்தேன். தினமும் போய் துப்பாக்கி துடைச்சு வைப்பேன். அவ்வளவு தான் எனக்குத் தெரியும்.”

“தூ…”

“துப்பிட்டு போங்க.. நான் துடைச்சுப்பேன். உசுர் முக்கியம் ப்ரோ… இதோ பாருங்க அடியாள் ப்ரோ… அந்தாளு ஏதாவது பேசினா அந்தாளை என்ன வேணா செய்ங்க.. அந்தாளு மிலிட்டரி..உடம்பு தாங்கும். நான் எல்லாம் பச்சை மண்ணு”

“மானங் கெட்டவனே”

“ஹுக்கும்.. மானங் கெட்டவனே… மச்சான் கெட்டவனேனு கட்டபொம்மன் டயலாக் பேசுற நேரமா ப்ரோ இது”

“உன்னை எல்லாம் வைச்சுக்கிட்டு”

“இரண்டு பேரும் அமைதியா இருங்க.. இல்லைனா வாய்க்கும் சேர்த்து பிளாஸ்டர் போட்டுடுவேன்”என்று அடியாள் மிரட்டி விட்டு போக அக்னி கோபமாக கண்ணனைப் பார்த்தான்.

“ப்ரோ… ஆரம்பத்துல இருந்தே நான் அமைதியா தான் இருக்கேன். அவன் திட்டினா என்னை ஏன் முறைக்கறீங்க?”

“நீ தான்டா திருட்டு முழி முழிச்சு காட்டிக் கொடுக்கிற…கொஞ்சமாவாது போலீஸ் மாதிரி நடந்துக்கறியா?”

“கை கட்டு மட்டும் அவிழட்டும் ப்ரோ அப்புறம் பாருங்க…”

“கிழிச்ச”

“டேய்! இரண்டு பேரும் வாயை மூடிட்டு இருங்கடா…” மீண்டும் அடியாள் வந்து கத்த… இருவரும் ஒருவரையொருவர் முறைத்துக் கொண்டார்கள்.

“ப்ரோ மறுக்கா மறுக்கா சொல்றேன்… சும்மா என்னை முறைக்காதீங்க”

“சை! உன்கிட்டே எல்லாம் மனுசன் பேசுவானா?” ஒருவரையொருவர் திட்டிக் கொண்டே சத்தம் போடாமல் இருவரும் தங்களது கட்டுக்களை மெல்ல அவிழ்த்துக் கொண்டிருந்தார்கள்.

கண்ணனோடு பேசிக் கொண்டிருந்தாலும் அவ்வபொழுது அக்னியின் பார்வை தன்னுடைய மாமனாரையே பாசமாக(!) சுற்றி வந்தது.

‘இவ்வளவு தூரம் நடக்குது. பெத்த பொண்ணு உடம்புல பாமை கட்டி எங்கேயோ இழுத்துட்டு போய் இருக்காங்க. மொத்த குடும்பமும் இங்கே துப்பாக்கி முனையில் நிக்குது. இந்த மனுசன் வாயைத் திறக்கறாரா பார்… சரியான கருங்கல் ஜென்மம்’.

அவரைப் பார்க்க , பார்க்க அவனின் ஆத்திரம் அதிகமாக அதன் விளைவாகவோ என்னவோ அவனது கயிறு சீக்கிரம் கழண்டு விட்டது. கயிறு அவிழ்ந்தது வெளியே தெரியாமல் ஒரு கையால் அதை பிடித்துக் கொண்டு மற்றொரு கையால் பாக்கெட்டில் இருந்த கத்தியை எடுத்துக் கொண்டான் அக்னி.

அவனின் நடவடிக்கைகளை கவனித்துக் கொண்டே இருந்த கண்ணன், அதே நேரம் அடியாட்களின் கவனம் முழுவதும் தன் மீது மட்டுமே இருக்கும்படி பார்த்துக் கொண்டான்.

அருந்ததி தனியாக உடல் வியர்த்து அமர்ந்திருக்க அவளது காதில் மீண்டும் சிபியின் குரல்.

“எழுந்திரு…”

“ஆங்…”

“குயிக்… அங்கே பச்சை கவுன் போட்டுட்டு ஒரு பாப்பா இருக்கே… அவ கூடவே நீயும் மேடை ஏறு..” சரசரவென்று உத்தரவுகளை பிறப்பித்தான் அவன்.

மொத்த உடலும் நடுங்க… பந்தயக் குதிரையாய் துடித்த இதயத்தை ஒரு கையால் அழுத்தி பிடித்தபடி மெல்ல எழுந்து நடக்கத் தொடங்கினாள் அருந்ததி. மேடைக்கு செல்லும் படிக்கட்டில் ஏறியதும் திரும்பி ஒருமுறை பார்த்தாள்.

யாருக்கும் தெரியாதவண்ணம் கண்ணில் மிரட்டலோடு , கையில் ரிமோட்டை ஆட்டிக் காட்டினான் சிபி. ஆழ்ந்து மூச்சை வெளியேற்றிக் கொண்டு மேடையை நோக்கி முன்னேறினாள்.

Free download novels
Madhumathi Bharath
Facebook Comments Box
What’s your Reaction?
+1
2
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here