மின்மினியின் மின்சார காதலன் அத்தியாயம் 13

0
1284

தன்னுடைய அறைக்குள் நுழைந்த அருந்ததி வெகுநேர ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு போனை எடுத்து ஒரு நம்பரை தொடர்பு கொண்டாள். சில நொடி நேர காத்திருப்பிற்கு பிறகு அவளுக்கு தொடர்பு கிடைத்தது.
“டேய்! பொறி உருண்டை” அந்தப் பக்கம் இருந்தவனின் காதில் கண்டிப்பாக இந்நேரம் ரத்தம் வந்திருக்க வேண்டும் அவளது காட்டு கத்தலில்.
“…..”
“டேய்! நானே ஏக கடுப்பில் இருக்கேன். ஒழுங்கா மரியாதையா வாயை மூடிக்கிட்டு நான் சொல்றத கேளு… நாளைக்கு… ம்ஹும்… இப்பவே ஏதாவது பஸ்ஸோ, லாரியோ பிடிச்சு எங்க வீட்டுக்கு வந்து சேர்”
“…..”
” சீட் கிடைக்கலைன்னா தொங்கிட்டு வா.. நீ எல்லாம் எனக்கு முறைப் பையன்னு வெளியே சொல்லாதே… இங்கே எனக்கு கல்யாண ஏற்பாடு நடக்குது தெரியுமா? அந்த வருங்கால மாப்பிள்ளையும் இப்போ எங்க வீட்ல தான் இருக்கார்”
“…”
“எல்லா கேள்வியும் இப்படி போன்ல தான் கேட்க போறியா? நேர்ல வா பேசிக்கலாம்” என்றவள் போனை வைத்து விட்டு நிம்மதியாக உறங்க சென்றாள் அந்த பகல் வேளையில்.
வீட்டில் இருந்து வெளியே எங்கேயும் செல்ல வேண்டாம் என்று சிவநேசன் சொல்லி இருக்க அருந்ததிக்கு அன்று வெளியே சென்று பயிற்சி செய்ய வேண்டிய அவசியம் இல்லாமல் போனது.
சற்று நேரத்திற்கு எல்லாம் அவளை ஹாலிற்கு வர சொல்லி தந்தையிடம் இருந்து அழைப்பு வர சிந்தனையுடன் அங்கே சென்றாள். அங்கே அவளுக்கு முன்னரே அங்கிருந்த அக்னியின் கோப முகத்திற்க்கான காரணம் அவளுக்குப் புரியவில்லை.
இதுநாள் வரையில் அக்னி அவளிடம் ஒன்றும் பெரிதாக சிரித்து பேசவில்லை தான். எப்பொழுதும் பேருக்கு ஏற்றார்போல் அவளை நெருப்பாய் முறைத்துக் கொண்டே தான் இருப்பான். ஆனால் இன்று அதையும் தாண்டி முகத்தில் அப்படி ஒரு கோபம் தீயாய் கனன்று கொண்டிருந்தது.
சற்றே குழம்பிய பாவனையுடன் அங்கே சென்றவள் அப்பொழுது தான் கவனித்தாள் அங்கே அமர்ந்து இருந்த அக்னியின் தந்தையை.
‘இவர் இங்கே என்ன செய்றார்? இந்த கல்யாணத்தை வேண்டாம்னு சொல்லி இருப்பானோ? ஒருவேளை இங்கே வீட்டில் நடக்கும் பிரச்சினைகள் தெரிஞ்சு அவராவே இந்த கல்யாணம் வேண்டாம்னு சொல்ல வந்து இருப்பாரோ’
நிமிடத்தில் ஆயிரம் கற்பனைகள் உதித்தது அவள் மோமோஸ் மூளையில்.
‘யாராவது வாயைத் திறந்து என்ன விஷயம்னு சொல்றாங்களா பாரு’
அவளின் நல்ல நேரம் அக்னியே பேச்சை தொடங்கி வைத்தான்.
“சார் … நான் சொன்ன எல்லாத்துக்கும் ஓகே சொன்னீங்க தானே… இப்போ வந்து இன்னும் இரண்டே நாளில் கல்யாணம்னு சொன்னா என்ன அர்த்தம்? உங்க பொண்ணு இன்னும் போலீஸ் ஆகவே இல்லை. அதுக்குள்ளே இப்படி சொன்னா.. அப்புறம் என்னோட பேச்சுக்கு என்ன மதிப்பு இருக்கு?” என்று கடுகாய் பொறிய… அருந்ததிக்கோ இந்த விஷயம் முற்றிலும் புதிது.
‘எதே இரண்டே நாளில் கல்யாணமா?’ மனதுக்குள் பிடித்தும் பிடித்தம் இல்லாத ஒரு நிலை.
கல்யாணம் முடிஞ்சுட்டா அதுக்கு அப்புறம் கண்டிப்பா போலீஸ் ஆகியே தீரணும்னு சொல்ற இவன்கிட்டே இருந்து தப்பிக்கலாம். கல்யாணம் முடியற வரை தான் அப்பாவோட பிடி இவன் கிட்டே இருக்கும். முடிஞ்சுட்டா அதுக்கு அப்புறம் இவனை நான் சமாளிச்சுப்பேன்.
ஆனா… இவனை கல்யாணம் செஞ்சுக்க வேண்டி இருக்கே.. கிரகம்.. இந்த பொறி உருண்டை சீக்கிரம் வந்தா தானே என்னோட திட்டம் பலிக்கும். ஒருவேளை அவன் வர்றதுக்குள்ளே காலம் கடந்து இருந்தால்?’
“மாப்பிள்ளை நீங்க இப்படி பேசக்கூடாது. இந்த வீட்டு நிலைமை நான் சொல்லித்தான் உங்களுக்குத் தெரியணுமா? நடந்த எல்லாத்துக்கும் முக்கிய சாட்சியே நீங்க தானே”
“அதுக்கும் உங்க அவசரத்துக்கும் என்ன சம்பந்தம்?”
“மாப்பிள்ளை இப்போ கொஞ்ச நாளா இந்த வீட்டில் நடக்கிற பிரச்சினை உங்களுக்கு நல்லாவே தெரியும்.நடக்கிறதை வச்சு பார்க்கும்போது எனக்கு என்னவோ அவங்க குறி என்னோட பொண்ணு தானோன்னு சந்தேகமா இருக்கு”
“அதுக்கு?”
“அதான் உங்க ரெண்டு பேருக்கும் சீக்கிரமே கல்யாணம் முடிஞ்சுட்டா அதுக்கு அப்புறம் அவ உங்க பாதுகாப்பில் இருப்பா.. உங்களை மீறி அவளை யார் என்ன செய்ய முடியும்?”
“அப்போ என்னோட கண்டிஷன்?” இந்த திருமணத்தை நிறுத்த அவனுக்கு மீதம் இருக்கும் ஒரே வாய்ப்பு அது மட்டும் தானே. இந்த வாய்ப்பை விட்டால் தனக்கு மீள வழியே இல்லை. அந்த பிசாசை கல்யாணம் செய்து கொண்டே தீர வேண்டும் என்பது புரிய தன்னால் முடிந்த மட்டும் தடுக்க முனைந்தான்.
ஆனால் சிவநேசன் பதில் சொல்லும் முன் அவரை முந்திக் கொண்டு அவனை பெற்றவர் பேசத் தொடங்கினார்.
“தம்பி பாவம் பெண்ணைப் பெத்தவர். அவரோட பொண்ணு உயிருக்கு ஆபத்து இருக்குனு தானே சொல்றார். இந்த நேரத்தில் அவரோட நிலைமையை புரிஞ்சுக்கிட்டு அவருக்கு உதவி செய்றது நம்ம கடமை இல்லையா?”
“அவரோட பயத்தை காரணம் காட்டி என்னோட ஆசையை தள்ளி வைக்க சொல்றீங்களா?”
“அப்படி சொல்லலை தம்பி… கொஞ்சம் இறங்கி வரலாமே…”
“முடியாது”
“நான் வாக்கு கொடுத்துட்டேன் தம்பி… நீ கல்யாணம் செஞ்சுப்பனு”
“எனக்கு கூட தான் இதுக்கு முன்னாடி ஒரு வாக்கு கொடுத்தீங்க? அது என்னாச்சு?” பார்வை அம்பாக அவரைத் துளைத்தது.
மகனுக்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமல் பெற்றவர் வாயடைத்து போனார்.
“காஷ்மீர்ல இருந்து என்னை உடனே வர சொல்லி சொன்னப்போ ஜெனிபரை உங்க கிட்டே தானே ஒப்படைச்சுட்டு போனேன். பத்திரமா பார்த்துக்கிறதா எனக்கு வாக்கு கொடுத்தீங்களே… அதை காப்பாத்துனீங்களா? இல்லையே… பிண…”
“ராஜா” உணர்ச்சிவசப்படும் தருணங்கள் தவிர மற்ற நேரங்களில் அவர் அப்படி அழைப்பது இல்லை என்பது புரிய பேச்சை நிறுத்தி விட்டு வேகமாக அவர்புறம் திரும்ப, நெஞ்சைப் பிடித்த படி சேரில் சரிந்தார்.
ஆயிரம் தான் அவர் மீது வருத்தம் இருந்தாலும் பெற்ற தந்தை இல்லையா? பதறிப்போய் வேகமாக அவர் அருகில் ஓடினான் அக்னிபுத்திரன்.
“அப்பாஆஆ” கண்கள் சொருக.. சோபாவில் விழுந்தவரை தாங்கிப் பிடித்தவனை பார்த்து பெற்றவரின் கண்கள் குளமாகியது.
“சாரிப்பா… ஏதோ வாய் தவறி…”என்று சொல்லி அவரை தன் மீது சாய்த்து கொண்டு மெல்ல முதுகை தடவிக் கொடுத்தான். அதேநேரம் நீமோ வேகமாக செயல்பட்டு அவரது பையில் இருந்து மருந்துகளை வாயில் கவ்விக்கொண்டு வந்து நீட்ட, கண்களால் பாராட்டை தெரிவித்தபடி அதில் இருந்த மாத்திரையை எடுத்து அவருக்கு புகட்டினான்.
அவனது தோளிலேயே அப்படியே சோர்ந்து சரிந்தவரை கைகளிலேந்தியவன் அவனுக்கு ஒதுக்கப்பட்ட அறையில் படுக்க வைத்தான்.
‘தேவையில்லாமல் பேசி அவரை வருத்துகிறேனா நான்?’ நிலை கொள்ளாமல் தவித்தது அவன் மனம்.
ஜெனிபர் இறந்த நேரத்தில் வீட்டில் சண்டை போட்டு தான் வெளியே வந்த தினத்தன்று அவருக்கு முதல் அட்டாக் வந்தது அவன் நினைவில் வந்து போனது. அவரது தலைக்கு அருகிலேயே சோர்ந்து போய் அமர்ந்து விட்டான்.
கண்களில் ஒருவித இறுக்கத்துடன் இருந்தவனை ஆராய்ச்சியாக பார்த்தாள் அருந்ததி. அவள் மனதில் புதிதாக கேள்வி ஒன்று முளைத்து இருந்தது.
‘யார் அந்த ஜெனிபர்’ விடையை தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருந்தாலும் சூழல் கட்டிப் போட்டது அவளை. அக்கினியின் சோர்ந்த தோற்றம் ஏதோ ஒரு விதத்தில் அவளை பாதித்தது. அறிமுகமான இந்த சில நாட்களில் அவனை ஒருநாளும் இப்படி பார்த்தது இல்லை அவள்.
‘இவ்வளவு தூரம் அவனை ஆட்டிவைக்கும் அந்த ஜெனிபர் யார்’ என்ற கேள்வி அவள் மனதில் விஸ்வரூபம் எடுத்து நின்றது.
நேசமணி சோர்வு நீங்கி எழுந்து அமரும் வரை அவருக்கு அருகிலேயே இருந்தான் அக்னி. பெற்றவரின் முகத்தை கூட பார்க்காமல் , குரலிலும் எந்த பாவனையும் காட்டாமல் இயந்திரம் போல பேசத் தொடங்கினான்.
“உங்க விருப்பப்படியே இந்த கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்ங்க… ஆனா ஒரே ஒரு கண்டிஷன்… உங்க பொண்டாட்டி வரக்கூடாது.மீறி வந்தா… இந்த கல்யாணம் நடக்காது.”
“தம்பி… எங்களுக்கு நீ ஒரே புள்ளைடா… உன் கல்யாணத்துக்கு பெத்தவளை வரக்கூடாதுனு சொல்றியே… இது அவளுக்கு எவ்வளவு பெரிய வேதனையைக் கொடுக்கும்னு தெரிஞ்சு தான் பேசறியா?”
“என் முடிவில் மாற்றம் இல்லை.”
“அவ இல்லாம நான் மட்டும் எப்படி உன் கல்யாணத்துக்கு வர்றது தம்பி”
“சரி விடுங்க… எனக்குன்னு யாரும் இல்லை அப்படிங்கிறது ஏற்கனவே தெரிஞ்ச விஷயம் தானே… அனாதைக்கு எல்லாம் கல்யாணம் நடக்கிறதே இல்லையா என்ன?”அவன் நாவுகள் தீயை கக்கிக் கொண்டே இருந்தது. இவ்வளவு உரையாடலும் தந்தைக்கும், மகனுக்கும் மட்டுமே நடந்தது. மற்றவர்கள் எப்பொழுதோ வெளியேறி சென்று இருந்தார்கள்.
“இன்னும் எத்தனை தடவை தான் என்னை இப்படி குத்திக் காட்டப் போற தம்பி?” சோர்வாய் ஒலித்தது நேசமணியின் குரல்.
“இதுக்கு பயந்து தானே உங்களை விட்டு தனியே வந்தேன். நானே நினைச்சாலும் என்னால முடியல.. என்னையும் அறியாம இப்படி ஏதாவது சொல்லி உங்களை வருத்தப்பட வச்சுடுவேன்னு தானே உங்களை விட்டு இவ்வளவு தூரம் தள்ளி வந்தேன். ஆனாலும் புரிஞ்சுக்காம என்னை ஏன் நெருங்கி வர்றீங்கப்பா? உங்களை காயப்படுத்திட்டு அதுக்கும் சேர்த்து நான் தானே வருத்தப்படறேன்.
உங்களுக்கு மட்டும் இல்லை… என்னை நெருங்கி வர்ற எல்லாருக்கும் இதே நிலைமை தான். நாளைக்கு அந்த பொண்ணு அருந்ததிக்கும் இதே நிலைமை தான். அது ஏன் உங்களுக்கு புரிய மாட்டேங்குது?ஒழுங்கா நடக்கிற கல்யாணமே இந்த காலத்தில் நீடிக்கிறது இல்லை. இதுல இப்படி ஒரு மனநிலையில் இருக்கிற எனக்கு கல்யாணம் செஞ்சு வைக்கிறேன்னு சொல்றீங்களே… என்கிட்டே மாட்டிக்கிட்டு அந்த பொண்ணு என்னவாகும்னு யோசிச்சு பார்த்தீங்களா? அவளோட வாழ்க்கை?” மூச்சு விடாமல் படபடவென பட்டாசாய் பொரிந்தவனை கண்ணீர் நிறைந்த கண்களுடன் ஏறிட்டார் நேசமணி.
பெற்றவர் இந்த விஷயத்தில் தனக்கு ஆதரவாக நிச்சயம் எதுவும் செய்ய மாட்டார் என்பது புரிந்து விட மனதில் சோர்வும், ஆத்திரமும் சூழ அதை அடக்க முடியாமல் கைகளை காற்றில் குத்தினான்.
ஒரு பெண்ணின் வாழ்வை தன்னோடு இணைத்து மிகப்பெரும் தவறு செய்யப் போகிறோம் என்பதை நன்றாக அறிந்தே அதை செய்யத் துணிந்தான் அக்னி. வேறு என்ன தான் செய்வது? பெண்ணை பெற்றவருக்கு சொல்லியாயிற்று. ஒரு குழந்தைக்கு தந்தை என்று தெரிந்த பிறகும் இதற்கு ஒத்துக்கொண்ட சிவநேசனின் மீதும் அருந்ததி மீதும் ஆத்திரம் பலமடங்காகி பல்கி பெருகியது.
‘சை!’

அதற்கு மேலும் அங்கேயே இருந்தால் அவரை மேலும் புண்படுத்தி விடுவோம் என்பது புரிய வேகமாக அங்கிருந்து வெளியேறினான்.
அருந்ததி ஏற்கனவே திருமணத்திற்கு சம்மதம் சொல்லி இருந்ததால் அவளைப் பற்றி யாரும் பெரிதாக எண்ணவில்லை. ஆனால் அவள் மனதிலும் ஒரு உறுத்தல் இருந்தது. அது ‘ஜெனிபர்’ என்ற பெயர்.
‘இந்த பொறி உருண்டையை வேற இன்னும் காணோம். கல்யாணம் முடிஞ்ச பிறகு தான் வருவான் போல… போன் செஞ்சாலும் நாட் ரீச்சபிள்னு வருது. நான் ஒரு திட்டம் போட்டா… வேற ஒன்னு நடக்குது. இவனை இப்போ இருக்கிற சூழலில் கட்டிக்கிட்டா நான் இவனை வச்சு செய்ய முடியாது. இவன் தான் என்னை வச்சு செய்வான்.
கொஞ்ச நஞ்ச பேச்சா பேசி இருக்கோம். நெருப்பு, பயர் ஆபிசர், கார்ப்பரேஷன்காரன்… ஆத்தி… சும்மாவே அந்த மொறைப்பு முறைப்பான். தாலி கட்டி உரிமையும் வந்துட்டா.. அப்புறம் செத்தேன்’
ஒவ்வொருவரும் ஒவ்வொரு நினைவில் இருக்க சிவநேசன் சத்தமில்லாமல் திருமண வேலைகளை செய்தார். வீட்டிற்கே புடவை, நகைகளை வரவழைத்தார். அக்னிபுத்திரனுக்கு உடைகள் தேர்ந்தெடுக்க கூட அவன் வரவில்லை. அவனுக்கு வேண்டிய பொருட்கள் அனைத்தையும் அவனது தந்தையே பார்த்து வாங்கினார்.
அருந்ததிக்கு எதுவுமே உவப்பாய் இல்லை. மனம் கசந்து வழிந்தது.
‘என்ன கல்யாணம் இது? அவளுக்கும் அவளது கல்யாணம் குறித்து சில கற்பனைகள் இருந்தது. அவளை திருமணம் செய்து கொள்ளப் போகிறவன் அவளுக்காக உடை தேர்ந்தெடுக்க, அவனுக்கு அவள் தேர்ந்தெடுக்க வேண்டும். அவனது பார்வை அவளை ரசிக்க வேண்டும். இது எதுவுமே இல்லையே… அக்னியிடம் இருந்து ஒரு சாதாரண பார்வை கூட அவளுக்கு இதுவரை வாய்க்கவில்லையே. இதில் திருமணம் வேறா?’ சோர்ந்து போனாள் அவள்.
யாருடைய எண்ணத்திற்கும் மதிப்பு கொடுக்காமல் திருமண நாளும் வந்தது. சிவநேசனின் வீட்டிலேயே திருமண ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. நெருங்கிய உறவினர்கள் மட்டுமே அழைக்கப்பட்டு இருந்தனர்.அக்னியின் தந்தை மட்டுமே வந்து இருந்தார். அவனது தாயாரை அவர் அழைத்து வரவில்லை. அக்னியின் நிபந்தனையை மீறி அவரை அழைத்து வந்து இருந்தால் பிடிவாதக்கார மகன் திருமணத்தையே நிறுத்தி விட்டால் என்ன செய்வது என்று நினைத்தவர் அவரை அழைத்து வரவில்லை. அதற்கு பதிலாக மனைவி திருமணத்தை வீடியோ மூலமாக வீட்டில் இருந்தபடியே பார்க்க ஏற்பாடு செய்து இருந்தார். அக்னி அறியாமல் தான்.
பட்டு வேட்டி சட்டையில் முகத்தில் துளியில் மகிழ்ச்சி இல்லாமல் மணமேடையில் வந்து அமர்ந்தான் அக்னி. நிமிடங்கள் கடக்க… பட்டுப்புடவையில் எழிலாக வந்து அருகில் அமர்ந்தவளை நிமிர்ந்தும் பார்க்கவில்லை அவன். அருந்ததிக்கு அவனைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றினாலும் பதிலுக்கு அவன் தன்புறம் திரும்பவே மாட்டான் என்பது தெரிந்து இருந்ததால் அந்த எண்ணத்தை அப்படியே அழித்து விட்டாள்.
“கெட்டிமேளம்… கெட்டிமேளம்” தாலியை கையில் எடுத்தவன் தந்தையை ஒரு பார்வை பார்த்தான். அதில் இருந்தது என்ன?
ஆற்றாமையா?
கையாலாகாத்தனமா?
ஆத்திரமா?
மாங்கல்யத்தை அவளது கழுத்தில் கட்டிக் கொண்டே அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் மெல்ல முணுமுணுத்தான்.
“என்னோட வாழ்க்கையில் எப்பவும் ஜெனிபருக்குத் தான் முதல் இடம்… நீ இரண்டாவது இடம் தான்” என்றவன் அவளின் அதிர்ந்த பாவனையை சட்டை செய்யாமல் தாலியை மூன்று முடிச்சுட்டான்.
இப்படி ஒரு கொடூரமான வார்த்தையை எந்த மணமகனும் இதுவரையில் மணமேடையில் வைத்து தன்னுடைய மனைவியிடம் சொல்லி இருக்க மாட்டான். வாழ்க்கையில் முதன்முறையாக அவளின் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது.
பட்டாம்பூச்சி போல துறுதுறுவென்று ஆடித் திரிந்தவளின் வாழ்க்கை இனி அக்னியுடன்.
அக்னி… அக்னியாய் அவளை தவிக்க விடுவானா?

ஷாக்கடிக்கும்

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here