தன்னுடைய அறையில் அமர்ந்து இருந்த அக்னியை பெற்றவரால் கூட நெருங்க முடியவில்லை. நெருப்பாய் காய்ந்து கொண்டிருந்தான். அருந்ததியின் கழுத்தில் தாலி கட்டிய மறுநொடி மேடையை விட்டு புயலென கிளம்பியவனை தடுக்கும் வழியறியாது அனைவருமே திகைத்து நின்றார்கள். எந்நேரமும் வெடிக்க தயாராக இருக்கும் எரிமலையை போன்ற அவனதுI தோற்றம் கண்டு உள்ளுக்குள் எல்லோருமே அஞ்சி நடுங்கிக் கொண்டிருந்தார்கள். நீமோ உட்பட…
திருமணம் முடிந்ததுமே நேசமணி வீட்டிற்கு கிளம்பி விட்டார். அந்த நேரத்தில் மனைவிக்கு தன்னுடைய துணை வெகுவாக தேவைப்படும் என்பதை உணர்ந்து.
தைரியத்தை வரவழைத்து கொண்டு சிவநேசனும் அவரது மனைவியும் மெல்ல அவனிடம் நெருங்கினார்கள்.
“மாப்பிள்ளை… அம்மி மிதிச்சு அருந்ததி பார்க்கணும். பால், பழம் சாப்பிடணும்… மறுவீடு போகணும்… இப்படி நிறைய சம்பிரதாயம் இருக்கு… நீங்க இப்படி தனியா வந்து உட்கார்ந்துட்டீங்களே”குரலில் கவலையை காட்டி விடாதிருக்க வெகுவாக முயன்றார் சிவநேசன்.
“நான் என்னோட வீட்டுக்கு கிளம்பறேன்”
“சம்பிரதாயம் எல்லாம் முடிச்சுட்டு நாளைக்கு..”
“இப்பவே”
“மாப்பிள்ளை…” அப்பொழுதும் தயக்கத்துடன் இழுக்க… கணவரின் கைகளை பற்றிய கோகிலா அவருக்கு பதில் பேசத் தொடங்கினார்.
“சரி மாப்பிள்ளை… நல்ல நேரத்துக்கு இன்னும் பத்து நிமிசம் இருக்கு. அதுக்குள்ளே நீங்களும் பாப்பாவும் சாப்பிட்டு முடிச்சுட்டு கிளம்பினா சரியா இருக்கும்” என்றவர் சூழலை கையில் எடுத்துக் கொண்டார். மணக்கோலத்தில் இருந்த அருந்ததியை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தவன் வெறுப்புடன் திரும்பிக் கொண்டான்.
“இந்த அலங்காரத்தை எல்லாம் கலைச்சுட்டு ரெடியாக சொல்லுங்க… ” உணர்ச்சிகள் மறைத்த அந்த குரல் குடும்பத்தை சேர்ந்த மூவரையும் உலுக்கி போட்டது நிஜம்.
அருந்ததிக்கு இன்னமும் அவனது முன்கதை எதுவும் தெரியாது. ஜெனிபர் ஒருவேளை அவனது காதலியாக இருக்கக்கூடும் என்ற அனுமானம் மட்டும் அவளுக்கு இருந்தது. தந்தையிடமோ, தாயிடமோ இதைப்பற்றி பேசி அவர்களை வீண் சங்கடத்தில் ஆழ்த்த வேண்டாம் என்று அவள் நினைத்தாள். அதுவே அவளுக்கு வினையாகிப் போனது.
திருமணத்திற்கு வந்திருந்த விருந்தினர்கள் முதல் பந்தியை முடிக்கும் முன்னரே அக்னியும், அருந்ததியும் அங்கிருந்து கிளம்பி சென்று விட்டார்கள். அருந்ததியை அனுப்பி விட்டாலும் சிவநேசனுக்கும், கோகிலாவிற்கும் மனது கேட்காமல் அக்னியை காரில் பின்தொடர்ந்து சென்றார்கள்.
அக்னி தன்னுடைய வீட்டுக் கதவை திறக்கும் நேரம் சரியாக அங்கே வந்து சேர்ந்தவர்களைப் பார்த்து முகம் இறுகி கல்லானான்.
“உங்க பொண்ணை என்கிட்ட இருந்து பாதுகாக்க பின்னாடியே வர்றீங்களா? அவ்வளவு தூரம் என்மேல நம்பிக்கை இல்லாதவங்க எதுக்கு எனக்கு கல்யாணம் செஞ்சு கொடுத்தீங்க?”
“அதில்லை மாப்பிள்ளை… முதன்முதலா என் பொண்ணு உங்க வீட்டுக்கு வர்றா.. ஆரத்தி எடுத்து உள்ளே அனுப்பி வைக்க கூட இங்கே யாரும் இல்லையே.. அதான் வந்தோம்.. வேற ஒன்னுமில்லை.” என்று வேகமாக அவனுக்கு விளக்கம் கொடுத்தார் கோகிலா.
“அது ஒன்னு தான் குறைச்சல்” என்று வாய் முணுமுணுத்தாலும் வேண்டாவெறுப்பாக வாசலிலியே நின்றான் அக்னி.
“இரண்டு பேரும் சேர்ந்து நில்லுங்க…”அவனின் கோபத்தை கோகிலா பெரிதுபடுத்தவில்லை. இப்பொழுது மகள் வாழ்வில் முக்கியமான நாள். முடிந்த அளவிற்கு அந்த நாளை இனிமையாக்க என்ன செய்ய வேண்டுமோ அதை எல்லாம் செய்ய விரும்பினார்.
“ம்ச்”சலிப்பான தோள் குலுக்கலுடன் அசையாமல் நின்றான்.
வீட்டினுள் சென்றதும் அருந்ததியின் பார்வை வீட்டை அலசியது. இரண்டே படுக்கை அறைகள் கொண்ட கச்சிதமான வீடு… அவர்களை முந்திக் கொண்டு வீட்டினுள் நுழைந்த நீமோ சமத்து பிள்ளையாக தன்னுடைய இடத்தில் போய் படுத்துக் கொண்டது.
கோகிலா வீட்டினுள் நுழைந்த அடுத்த நிமிடமே அடுப்படிக்குள் நுழைந்து அதை கைப்பற்றிக் கொண்டார். பெண்கள் எப்பொழுதுமே செய்யும் ஒன்று. காலம் காலமாக அவர்கள் மூளையில் பதிய வைக்கப்பட்ட ஒன்று.
மணமக்கள் இருவருக்கும் பாலும், பழமும் கொடுத்தார். தொடர்ந்து பேச்சை எந்த திசையில் கொண்டு செல்வது என்று புரியாமல் எல்லாரும் அமைதி காக்க கோகிலா பேசினார்.
“கல்யாண சாப்பாட்டை கூட சாப்பிடாமல் கிளம்பியாச்சு. இங்கே கொண்டு வந்து இருக்கேன். சாப்பிட்டு விட்டு கொஞ்ச நேரம் ஓய்வெடுங்க இரண்டு பேரும்.”
“அதெல்லாம் நாங்க பார்த்துக்கிறோம்… உங்க சொந்தக்காரங்க எல்லாரும் அங்கே உங்களுக்காக காத்திருப்பாங்க. நீங்க…” அவர்களை கிளம்ப வைப்பது எப்படி என்று சிறிது தயங்கினான் அக்னி. அவனுக்கு தனிமை தேவையாய் இருந்தது.
யாரின் முகத்தையும், குரலையும் பார்க்கவோ, கேட்கவோ தேவை இல்லாத தனிமை.
“இருக்கட்டும் தம்பி… அவங்களை பார்த்துக்க ஆள் இருக்கு.. இங்கே உங்க இரண்டு பேரையும் தனியா விட்டுட்டு கிளம்ப முடியாதே… இன்னும் சில சடங்கு, சம்பிரதாயம் எல்லாம் இருக்கு. அதை எல்லாம் முடிச்சுட்டு நைட் கிளம்பறோம்” என்று சொல்ல அக்னி அதற்கு என்ன பதில் பேசுவது என்று புரியாமல் சில நொடிகள் தடுமாறினான்.
அவனது தடுமாற்றத்தையும், எண்ணத்தையும் உணர்ந்து கொண்ட அருந்ததிக்கு உள்ளுக்குள் ஆத்திரம் கனன்றது.
“அம்மா… நீங்க இரண்டு பேரும் கிளம்புங்க…” என்றாள் அழுத்தமாக… பெற்றவளுக்குத் தெரியாதா பெண்ணின் உணர்வுகள்.
“இல்ல தங்கம்.. இன்னிக்கு கொஞ்சம் வேலை எல்லாம் இருக்கு.. அதெல்லாம் பார்க்க வேண்டாமா? நீங்க இரண்டு பேரும் சின்னப் பிள்ளைங்க… உங்களுக்கு அதெல்லாம் தெரியாது”
“அம்மா… நாங்க இரண்டு பேருமே ஒண்ணும் பச்சை புள்ளைங்க கிடையாது. எங்களுக்கு எல்லாம் தெரியும். அது எல்லாத்தையும் விட இந்த சடங்கு, சம்பிரதாயத்தை எல்லாம் ரசிக்கிற மனநிலையில் உங்க மருமகன் இப்ப இல்ல. அது உங்களுக்கும் தெரியும்” என்று அழுத்தமாக சொல்ல , அக்னியின் பார்வை ஒரு நொடி அவளை தீண்டி சென்றது.
இத்தனை தெளிவுடன் பேசும் மகளிடம் என்ன சொல்வது என்று புரியாமல் பெற்றவர்கள் அமைதி காத்தார்கள்.
“நீங்க இரண்டு பேரும் கிளம்புங்க ப்ளீஸ்!. அதுதான் இப்போதைக்கு எங்களுக்கு செய்ற பெரிய உதவியா இருக்கும்” என்றவள் அதற்கு மேல் என்ன சொல்வது என்று புரியாமல் சோபாவில் மடங்கி அமர்ந்து விட்டாள்.
மகளின் வாழ்வை எப்படி சீர் செய்ய போகிறோம் என்ற குழப்பத்துடன் கணவரைப் பார்த்தவர் அவரது சோர்ந்த முகபாவத்தை கண்டு வருந்தினார். இவரை இங்கிருந்து அழைத்து செல்வது தான் இப்பொழுது சரியாக இருக்கும் என்று உணர்ந்தவர் மேற்கொண்டு பேச்சை வளர்க்காமல் கணவரை கிட்டத்தட்ட இழுத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினார்.
சற்று நேரம் அப்படியே அமர்ந்து இருந்த அருந்ததி அறையை சுற்றி பார்த்தாள். கச்சிதமான, சுத்தமான அறை.. அக்னி இருந்த அறையை மட்டும் தவிர்த்து விட்டு மற்ற இடங்களை சுற்றி வந்தவளுக்கு ஒரு கட்டத்தில் சலித்துப் போனது.
வயிறு தன்னுடைய இருப்பை உணர்த்தத் தொடங்கியது. வேகமாக டைனிங் டேபிளுக்கு சென்றவள் வீட்டில் இருந்து வந்திருந்த உணவு வகைகளைப் பார்வையிட்டாள். தாராளமாக நான்கு பேர் சாப்பிடக்கூடிய அளவில் இருந்தது. பசி வயிற்றைக் கிள்ள வேகமாக தட்டை எடுத்துக் கொண்டு உணவுண்ண அமர்ந்தவளின் காலை நீமோ வந்து சுரண்டியது.
“உனக்கும் பசிக்குதா?” என்றவளைப் பார்த்து வேகமாக வாலை ஆட்ட… லேசான சிரிப்புடன் நீமோவின் வாயில் இருந்த அவனுடைய தட்டை எடுத்து அதில் கொஞ்சம் உணவிட்டாள். சமத்து பிள்ளையாக சாப்பிட்டு முடித்தவன் அக்னி இருக்கும் அறையைப் பார்த்து குலைக்கத் தொடங்கினான்.
‘இப்போ இவனை விட்டுட்டு எப்படி சாப்பிடுறது?’ என்று எண்ணியவள் தயங்கி தயங்கி அவனது அறைக்கதவை தட்டினாள். தாழிடாத அறைக்கதவு அவள் கைப்பட்டதும் தானாக திறந்து கொண்டது.
அக்னி படுக்கையில் தளர்வாக சாய்ந்து அமர்ந்து இருந்தான். அவன் கைகளில் ஏதோ சில போட்டோ பிரேம்களை வைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.
‘என்னவாயிருக்கும்?’ என்று யோசித்தவள் அதை பின்னுக்கு தள்ளி விட்டு மெதுவாக குரலை செருமினாள்.
“ம்கும்”
அவன் கண் இமை கூட அசையவில்லை.
“மிஸ்டர் ஃபயர் என்ஜின்” என்று அழுத்தமாக அழைக்க அவன் பார்வை ஒரேயொரு நொடி அவளைத் தீண்டியது.
சற்று நேரம் ஒன்றுமே அறியா பாலகனைப் போன்றதொரு பாவனை அவன் முகத்தில்.
‘சுத்தம்… கல்யாணம் நடந்ததை மறந்தாச்சு போலவே’ என்று எண்ணி மானசீகமாக தலையில் கை வைத்தவள் இயல்பாக செய்வதைப்போல புது மஞ்சள் தாலியை எடுத்து வெளியே விட்டு நகைகளை சரி செய்து கொண்டாள்.
நொடியில் அவன் கண்களில் சிவப்பேறியது.
‘அப்பாடா!… நியாபகம் வந்துடுச்சு… அம்னிஷியா ஒன்னும் இல்லை’
“என்ன?”
“எனக்குப் பசிக்குது”
“சாப்பிட்டு தொலைக்க வேண்டியது தானே?”
“தனியாவா?”
“…”
“என்னால பசி தாங்க முடியாது”
“வந்து தொலை” என்றவன் கையில் இருந்த பிரேம்களை ஒரு சூட்கேசின் உள்ளே வைத்து நம்பர் லாக்கை போட்டவன் பத்திரமாக எடுத்து வைத்து விட்டு அவளுக்கு முன்பே போய் டேபிளில் அமர்ந்தான்.
உணவை உண்டு முடிக்கும் வரைக்கும் அவனிடம் அவள் பேசவே இல்லை.
‘எதுக்கு?… ஏதாவது பேசப் போய் சாப்பாட்டு பாத்திரத்தை தூக்கி போட்டு உடைச்சுட்டா… முதல்ல வயிறு.. அப்புறம் தான் எதுவா இருந்தாலும்’
திருப்தியாக உண்டு முடித்ததும் மெல்ல அவனை நோட்டமிட்டாள். உணவு உண்ட பிறகு அவனது தினசரி வழக்கமாக காய்கறி சாலடை தயார் செய்து கொண்டிருந்தவனை அவன் அறியாமல் பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் அறிய மாட்டான் என்ற நம்பிக்கையில்.
“என்ன விஷயம் கேட்கணுமோ கேளு… சும்மா இப்படி பார்த்துக்கிட்டே இருக்காதே”
‘எமகாதகன்… முதுகுலயும் மூஞ்சு வச்சு இருப்பான்’
“சொல்றியா… இல்லே நான் கிளம்பட்டுமா?”
“நான் வரும்போது எதையோ பார்த்துக்கிட்டு இருந்தீங்களே… அது என்ன?”
“கழுத்தில் தாலி கட்டினதாலேயே என்னை கேள்வி கேட்கிற அதிகாரம் உனக்கு வந்துடுச்சுன்னு உனக்கு நினைப்பா?” அவன் குரலில் ஆதங்கமும், கோபமும் சரிபாதியாக நிறைந்து இருந்தது.
“இதோ பாருங்க ஆபீசர்… கல்யாணம் முடிஞ்சுடுச்சு.. தாலி கட்டினதால என்னை அதிகாரம் செய்ற உரிமையை நானும் உங்களுக்கு கொடுக்கலை. உண்மையை சொல்றதுனா நான் இப்போ தெளிவா இல்லை… உங்களை மாதிரியே.. எப்படியாவது, ஏதாவது செஞ்சு இந்த கல்யாணத்தை நிறுத்திடலாம்னு உறுதியா இருந்தேன். ஆனா… ம்ச்!… இப்போதைக்கு சில விஷயங்களை நாம தெளிவுபடுத்திக்கிறது நமக்கு நல்லது. முக்கியமா நம்மளை பெத்தவங்களுக்கு” என்றாள் தெளிவாக.
“என்ன.. இந்த கதையில் எல்லாம் வர்ற மாதிரி ரெண்டு பேரும் பிரண்ட்ஸா இருப்போம்.. தனித்தனியா படுத்துப்போம்… அப்புறம் இரண்டு பேருக்கும் ஒருத்தர் மேல ஒருத்தர் லவ்வு பொத்துக்கிட்டு வந்துடும். அதுக்கு அப்புறம் வாழ ஆரம்பிக்கலாம்னு சொல்ல போறியா?” அளவுக்கு அதிகமான நக்கல் அவன் குரலில்.
“சோத்துல ஒரு துளி உப்பு போட்டு திங்குற மானம் , ரோசம் உள்ள எந்தப் பொண்ணும் அப்படி பேச மாட்டா… நானும் தான். எனக்கென்ன தலையெழுத்து” என்றாள் அவனுக்கு மிஞ்சிய ஆத்திரத்துடன்.
“சந்தோசம்… இந்த அளவுக்கு தெளிவு இருக்கிறது எனக்கும் நல்லது”
“பேச்சை மாத்தாதீங்க… நீங்க பார்த்துக்கிட்டு இருந்தது என்ன?”
“என்னோட பர்சனலை எல்லாம் உன்கிட்டே சொல்லிட்டு இருக்க முடியாது”
“ஓ… எப்படியும் இன்னும் கொஞ்ச நாள் இரண்டு பெரும் ஒன்னா தான் இருந்தாகணும். இப்படியே ஒருத்தரை ஒருத்தர் மூஞ்சை திருப்பிக்கிட்டு இருந்தா நல்லாவா இருக்கும். ஜஸ்ட் தெரிஞ்சுக்கலாம்னு கேட்டேன்”
“அது உனக்கு தெரிய வேண்டிய அவசியமில்லை”
“உங்களை அட்லீஸ்ட் ஹாஸ்டல் ரூம் மேட் மாதிரி நினைச்சுக்கலாம்னு பார்த்தேன். அதுவும் கஷ்டம் போல… நீங்க எப்படியோ போங்க. நான் சொல்ல வந்த விஷயமே வேற… எது எப்படி ஆனாலும் சரி. சாப்பாட்டு எனக்கு சரியா வந்துடணும். நீங்க சமைச்சாலும் சரி… இல்ல ஆள் வச்சுக்கிட்டாலும் சரி” என்றாள் வேகமாக.
“உனக்கு நான் சமைச்சு போடணுமா”அவன் பற்களை கடிக்கும் சத்தம் தெளிவாக கேட்டது அவளுக்கு.
“நான் தான் இன்னொரு ஆப்ஷனும் சொன்னேனே”நல்ல பிள்ளையாக நியாபகப் படுத்தினாள்.
“நான் என்ன உன்னை மாதிரி கோடீஸ்வர வீட்டு வாரிசுன்னு நினைச்சியா? வேலைக்கு ஆள் எல்லாம் வைக்க முடியாது. உனக்கு வேணும்னா நீ தான் செஞ்சுக்கணும்.”
‘எதே! நான் சமைக்கணுமா? அதை தின்னா நானும் சேர்ந்து இல்ல சாவேன். எனக்கு திங்கத் தானே தெரியும். இதென்னடா டாட்ஸ் லிட்டில் பிரின்சஸ்க்கு (dad’s little princess) வந்த சோதனை’
“எனக்கு சமைக்கத் தெரியாது”
“இத்தனை வருசமா சாப்பிட மட்டும் தான் கத்து வச்சு இருக்க போல…”
“எங்க வீட்டில் சமைக்க ஆள் இருக்கு”
“இனி அதெல்லாம் பாஸ்ட்.(past) ஒழுங்கா நீயே சமைச்சு சாப்பிடு… அது முடியாதுனா டெய்லி பிரட்டும், ஜாமும் வச்சு தின்னுக்கோ”
“இதெல்லாம் ரொம்ப அநியாயம்”
“வாய்க்கு வக்கனையா திங்கணும்னா உங்க அப்பா வீட்டிலேயே இருந்து இருக்கணும். உனக்குத் தாலி கட்டி கூட கூட்டிட்டு வந்ததே பெருசு. உனக்கு மூணு வேளையும் வடிச்சு வேற கொட்டணுமா?” அவன் குரலில் கோபம் இல்லை. ஆனால் திட்டவட்டமான மறுப்பு இருந்தது.
அடுத்து வரும் நாட்களை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்ற பயம் லேசாக அவள் மனதில் எட்டிப் பார்த்தது.
‘மூணு வேளையும் மேகி கிண்டி தின்னா நாக்கு செத்து சுண்ணாம்பு கால்வாயில அடக்கம் பண்ண வேண்டியது தான். நாளைக்கு காலையில் அம்மா கிட்டே பேசினா ஏதாவது ஐடியா கிடைக்கும்’ என்ற முடிவுக்கு வந்தவள் உறங்குவதற்காக அவனைப் பின்தொடர்ந்தாள்.
“உள்ளே எல்லாம் வராதே… பக்கத்து ரூமை நீ யூஸ் பண்ணிக்கோ” என்று சொல்லிக்கொண்டே பக்கத்து அறைக்கு அவளுடன் துணைக்கு வந்தவன் அங்கிருந்த ஒரு சில பொருட்களை எடுத்து தன்னுடைய ரூமிற்கு மாற்றி வைத்தான்.
‘ஹ்ம்… உலகத்துலேயே கல்யாண ஆன அன்னிக்கு நைட் எந்த புருசன், பொண்டாட்டியும் இந்த லட்சணத்தில் பேசிக்க மாட்டாங்க. இது எங்கே போய் முடியப் போகுதோ’ என்று தனக்குள் புலம்பிக் கொண்டாள் அருந்ததி.
“என்னுடைய பொருள் எதையும் நீ தொடுறது… ம்ஹும்… கண்ணால பார்க்கக்கூட கூடாது. எனக்கு பிரைவசி ரொம்ப முக்கியம்” என்றவன் கைகளில் ஒரு பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியே செல்ல… அதிலிருந்து சில பொருட்கள் வெளியே விழுந்தது.
கீழே விழுந்த பொருட்களை பார்த்தவள் அப்படியே அதிர்ந்து போய் நின்றாள்.
கிலுகிலுப்பை, பாலேடு, சின்னக் குழந்தையின் துணிகள், விளையாட்டு சாமான்கள் எல்லாம் கீழே இறைந்து கிடந்தது.
“இ… இதெல்லாம் யாரோடது” ஏதோ பயங்கர உண்மை வெளிவரப் போகிறது என்று அவள் மனம் படபடவென்று அடித்துக் கொண்டது.
“என் குழந்தையோடது” என்று அழுத்தம் திருத்தமாக சொன்னவன், இடி தாக்கியவள் போல அதிர்ந்து நின்றவளை திரும்பியும் பாராமல் அங்கிருந்து வெளியேறினான்.
மின்மினியின் மின்சார காதலன் அத்தியாயம் 14
Facebook Comments Box
What’s your Reaction?
+1
5
+1
+1
+1
+1
1
+1
+1