மின்மினியின் மின்சார காதலன் 16 tamil novels

0
334

அத்தியாயம் 16
“அப்புறம் என்ன ஆச்சு?” ஆவலாய் கதை கேட்கும் பாவனை அருந்ததியிடம்.
“ஹா ஹா… என்னம்மா கதை கேட்க ரொம்ப பிடிக்குமா?” கிண்டல் வழிந்தது அவர் குரலில்.
“பின்னே இதுல என்னோட வாழ்க்கையும் அடங்கி இருக்கே” என்றாள் ஆர்வத்தை உள்ளடக்கிய குரலில்.
“இதுக்கு அப்புறம் கதையை தொடர்ந்து சொல்லணும்னா அதுக்கு முன்னாடி என்னோட கேள்விக்கு பதில் சொல்லு.”என்றார் அவளையே பார்வையால் ஆராய்ந்தவாறே.
“கேளுங்க… மாமா”
“உனக்கு என் பையனை பிடிக்குமா?”
“ஆங்.. அது”
“ம்ம்ம்.. சொல்லுமா”
“இதுக்கு பதில் சொல்லியே ஆகணுமா?” என்னவோ ஒரு தயக்கம் அவளிடத்தில்.
“சொல்லியே ஆகணும்னு கட்டாயம் இல்லை. தெரிஞ்சுக்கிட்டா என் மனசுக்கு கொஞ்சம் தெளிவு கிடைக்கும்”அக்னியின் பிடிவாதம் யாரிடம் இருந்து வந்திருக்கக்கூடும் என்பது அவளுக்கு புரிந்தது.
‘இந்த கேள்விக்கு பதில் சொல்லாமல் மனுசன் விடமாட்டார்’
“கொஞ்சம் முரடன்… ரொம்ப முசுடு… ஆனா கெட்டவன் இல்லை…”
“எனக்கு புரியலையே…” வேண்டுமென்றே தாடையை தடவியபடி யோசித்தார். அவருக்கு இன்னும் கொஞ்சம் தெளிவான பதில் வேண்டியதாக இருந்தது.
“காதலிக்கிறேனானு கேட்டா இல்லை தான். ஆனா நிச்சயம் வெறுப்பு இல்லை… இப்போதைக்கு இந்த அளவுக்கு தான் எனக்கே தெளிவு இருக்கு… இதுக்கு மேலே கேட்டாலும் எனக்கே பதில் தெரியாது மாமா.” என்றாள் உண்மையாக.
அவள் முகத்தையே ஊன்றிப் பார்த்தார். அதில் பொய்யில்லை என்பதை அறிந்து கொண்டதும் சமாதானம் அடைந்தவராய் தொடர்ந்து பேச முற்படும் பொழுது இடைஞ்சலாய் காலிங்பெல் ஒலித்தது.
“ம்ச்!… யாரது இந்த நேரத்துல?…”சலிப்பும், கோபமும் சரிபாதியாய் இருந்தது அவள் குரலில்.
“இரும்மா.. யாருன்னு பார்க்கிறேன்” என்று சொல்லியபடி அவர் செல்ல… உடனே எழுந்து அவரை தடுக்க முடியாமல் அவளது மடியில் இருந்த உணவுப்பொருட்கள் அவளை தடுத்தது.
(பின்னே சாப்பிடாமல் கொள்ளாமல் பட்டினி கிடந்து அக்னியின் முன்கதையை அவள் கேட்டுக் கொண்டிருப்பாள் என்று நீங்கள் எதிர்பார்த்தால் அது அவள் தவறு இல்லை.)
கதவை திறந்து பார்த்த நேசமணி அங்கே யாரும் இல்லாமல் போகவும் குழப்பத்துடன் கதவை சாத்தி விட்டு உள்ளே திரும்ப அப்பொழுது தான் அவர் பார்வையில் பட்டது அந்த பார்சல்.
‘யார் இதை வச்சுட்டுப் போய் இருப்பாங்க?’ என்ற கேள்வியுடன் அதை எடுத்தவருக்கு மனதில் ஏதோ நெருட…சரியாக மூடக்கூட படாத அந்த அட்டைப்பெட்டியை கையில் எடுத்த அடுத்த நிமிடம் கீழே விழுந்திருந்தார்.
அட்டைப் பெட்டியில் இருந்து பாம்பு ஒன்று தலையை வெளியே நீட்டிக் கொண்டிருந்தது.
“பா.. பாம்பு…” என்று தன்னை மீறிய பயத்தில் அவர் கத்த.. அவரின் சத்தம் கேட்டு அங்கே வந்த அருந்ததி அவரது நிலையைப் பார்த்து அதிர்ந்து போனாள்.
“மாமா… என்ன ஆச்சு?” என்று பதறியபடியே வந்தவள் அப்பொழுது தான் அருகில் இருந்த பெட்டியை கவனித்தாள்.
‘என்ன பெட்டி?’ என்ற எண்ணத்துடன் அருகில் செல்ல முயன்றவளை தடுத்தார் நேசமணி.
“கிட்டே போகாதே மா… உ…உள்ளே பா.. பாம்பு” என்று குரலில் நடுக்கத்துடன் சொல்லவும் பயந்து போனவள் வீட்டின் உள்ளே சென்று ஒரு குச்சியை எடுத்து வந்து பெட்டியின் மீது தட்ட ஆரம்பித்தாள்.
இதற்குள் ஓரளவிற்கு சுதாரித்துக் கொண்ட நேசமணி அவளை அருகில் செல்ல விடாமல் தடுத்தார்.
“வேண்டாம் மா… கிட்டே போகாதே… இரு நானே வர்றேன்” என்று தடுமாறி எழுந்தவர் மீண்டும் அந்த பெட்டியின் அருகில் செல்ல முயல கண்களில் பயத்துடன் அவரின் பின்னால் நின்று கொண்டு எட்டிப் பார்த்தாள் அருந்ததி.
அட்டைப் பெட்டியை குச்சியால் தட்ட அதில் எந்த அசைவுமில்லை. அதை திருப்பிப் போட உள்ளிருந்து ரப்பர் பாம்பு வெளியே வந்து விழுந்தது.
“டம்மி பாம்பு மா” அவர் குரலில் இப்பொழுது பதட்டம் குறைந்திருந்தது.
“யார் செஞ்சு இருப்பா இதை?” என்று கேட்டவாறு யோசனையில் இருக்க, அருந்ததியோ கண்களை சுழற்றி பார்வையை நாலாபுறமும் பார்வையை செலுத்தினாள். அவள் கண்களில் இப்பொழுது பயம் இல்லை. மாறாக தேடல் இருந்தது.
அவளது நினைப்பை மெய்யாக்குவதைப் போல அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்து கொஞ்சம் தள்ளி மறைவான இடத்தில் ஒரு ஜோடி பாதங்கள் தெரிய அவளது கண்கள் தீப்பிழம்பானது. நேசமணியின் கைகளில் இருந்த குச்சியை வேகமாக வாங்கியவள் மறைந்து கொண்டிருந்த அந்த கால்களை நோக்கி வேகமாக சென்றவள் அங்கே மறைந்திருந்தவனை குச்சியால் வெளுக்கத் தொடங்கினாள்.
“சாவுடா”
“ஆ… அய்யோ… அம்மா… ராட்சசி… அடிக்காதேடி…” என்ற கத்தியபடி வெளியே ஓடி வந்த இளைஞன் தப்பிக்கும் பொருட்டு நேசமணியின் பின்னால் ஒளிய முற்பட.. அங்கும் விடாமல் அவனை துரத்தி வந்தவள் குச்சியால் கை வலிக்கும் மட்டும் அடித்து ஓய்ந்தாள்.
“சார்.. காப்பாத்துங்க சார்… இந்த ராட்சசி என்னை அடிச்சே கொன்னுடுவா…”இறுதியாக நேசமணியின் காலில் விழுந்து விட்டான் அவன்.
இவர்கள் அடிக்கும் கூத்துக்களை கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த நேசமணி அப்பொழுது தான் சுயநினைவுக்கு வந்தவரைப் போல தலையை குலுக்கிக் கொண்டார்.
“சார்..அப்புறமா பொறுமையா வேடிக்கை பார்க்கலாம்.முதல்ல என்னைக் காப்பாத்துங்க.. என்னவோ டி ட்வென்டி (T 20) நடக்குற மாதிரி இப்படி வாயை பிளந்துக்கிட்டு வேடிக்கை பார்க்கறீங்க.”
“டேய்! அவர் என்னோட மாமனார்… அவர் கிட்டே உனக்கு என்னடா பேச்சு…” அடிகளுக்கு இடையிலும் கொஞ்சம் பேசினாள் அருந்ததி.
“ஏய்! ரொம்ப அடிக்காதடி… அப்புறம் அவரோட புள்ளையோட நீ குடும்பம் நடத்தப் போற லட்சணம் இப்பவே அவருக்கு தெரிஞ்சுடும்.”
“என்னடா தெரியும்?” அடிகளை நிறுத்தவில்லை அவள்.
“சொந்தக்காரன் எனக்கே இந்த அடின்னா.. கட்டின புருசனுக்கு எத்தனை சட்டை கிழியுமோனு தான்.” சொல்லி விட்டு அடக்க மாட்டாமல் சிரிக்க ஆரம்பித்தான் அவன். அவன் சொன்ன காட்சியை கற்பனை செய்து பார்த்தாரோ என்னவோ நேசமணியின் முகத்திலும் லேசான சிரிப்பு எட்டிப் பார்த்தது.
“தம்பி யாரும்மா?”
“என்னோட முறைப்பையன் மாமா.. எங்க அம்மாவோட அண்ணன் மகன்.”
“சரிம்மா.. வீட்டுக்குள்ளே அழைச்சுட்டு வந்து பேசு… பாவம் தம்பி அடி வாங்கி களைச்சு போயிருப்பார். குடிக்க ஏதாவது கொடு”
“சாரி அங்கிள்… அந்த பார்சல் நான் இவளுக்கு தான் ரெடி செஞ்சேன். நீங்க வந்து திறப்பீங்கனு எதிர்பார்க்கலை.”
“ஏன்டா தடிமாடு… மாமா பார்சலை எடுக்கும் பொழுதே தடுத்து இருக்கலாம்ல.”
“இல்லடி… நீ பார்த்திடக் கூடாதுன்னு வீட்டுக்கு வெளியே தான் ஒளிஞ்சுக்கிட்டு இருந்தேன்.இவர் வருவார்னு எதிர்பார்க்கலை. அவரை தடுத்துடலாம்னு தான் வேகமாக வந்தேன்.பட் அதுக்குள்ளே அங்கிள் அதை திறந்துட்டார். நிஜமாவே சாரி அங்கிள்” அவன் கண்களில் நிஜமாகவே வருத்தம் தெரிந்தது.
“சரி விடுப்பா… ஆமா மருமகளே தம்பி பேரென்ன?”
“பொறி உருண்டை” என்றாள் பற்களை கடித்துக்கொண்டே
“அப்போ உன் பேர் தர்பூசணி” இரண்டு பேரும் வழக்கடித்துக் கொள்ள நேசமணி அவர்களைப் பார்த்து சிரித்துக் கொண்டார்.
“நல்ல பிள்ளைங்க… இன்னமும் இப்படி சின்ன பிள்ளைகள் மாதிரி விளையாடிட்டு இருக்கீங்க?”
“உங்களுக்குத் தெரியாது மாமா.. இவனைப் பத்தி… சரியான பிராடு… கல்யாணத்தப்போ இவன் வரவே இல்லை பார்த்தீங்களா? கல்யாணம் முடிஞ்ச பிறகு வந்து இருக்கான்.”
“ஹே! நிஜமா என்னால உடனே கிளம்ப முடியலைடி.. இப்போ தான் வர முடிஞ்சது. நேரா வீட்டுக்குக் கூட போகாம இங்கே தான் வர்றேன்”
“பேசாதடா… கொன்னுடுவேன்”முகத்தை திருப்பிக் கொண்டாள் அருந்ததி.
“காபி சாப்பிடறீங்களா தம்பி…நான் போட்டு எடுத்துட்டு வர்றேன்” நேசமணி எழுந்து கொள்ள முயல அவருக்கு முன்பாக அவள் எழுந்து கொண்டாள்.
“நான் போட்டு எடுத்துட்டு வர்றேன் மாமா.. நீங்க பேசிட்டு இருங்க” என்றவள் அவனை முறைத்து விட்டு செல்ல அவனோ வெளிப்படையாகவே அலறினான்.
“ஐயோ! இந்த ராட்சசியை நம்பி எப்படி காபி குடிப்பேன்… கொலைகாரி எலி மருந்தை கலந்தாலும் கலந்திடுவா”
“ஹா ஹா… உன் பேர் என்னப்பா?”
“கண்ணன் அங்கிள்… நீங்க”
“என் பேர் நேசமணிப்பா”
“யூ மீன் காண்ட்ராக்டர் நேசமணி?” என்று முகத்தை சீரியசாக வைத்துக் கொண்டு கேட்க.. அவன் முகத்திற்கு ஒரு தலையணை பறந்து வந்தது.
“வாயை மூடுடா குரங்கு”
அவர்கள் இருவரின் சண்டையையும் வேடிக்கைப் பார்த்த நேசமணி சத்தம் போட்டு சிரிக்கத் தொடங்கினார்.
“அண்ணன் , தங்கச்சியா பிறக்க வேண்டிய பிள்ளைங்க…”
“என்னது?” திறந்த வாயை மூடாமல் அவரையே பார்த்தாள் அருந்ததி.
“பார்த்து அஞ்சு நிமிஷம் கூட ஆகலை.. உங்களுக்கு புரியுது.. இந்த லூசுக்கு புரியலை பாருங்க…”அவள் தலையில் செல்லமாக குட்டினான் கண்ணன்.
“ஏய்! என்னை எதுக்குடா லூசுன்னு சொல்ற…”
“பின்னே உன்னோட கல்யாணத்தை நிறுத்த என்னை எதுக்கு வர சொல்ற?”
“லூசு… உன்னை வச்சு அந்த ஃபயர் எஞ்சினை கடத்தி ஒளிச்சு வைக்கலாம்னு நினைச்சேன்” என்று ஒரு வேகத்தில் தன்னுடைய திட்டத்தை விவரித்தவள் அப்பொழுது தான் கவனித்தாள் அங்கே நேசமணியும் இருப்பதை.
‘அச்சச்சோ தப்பா எடுத்துப்பாரே’
அவரோ முகத்தில் இருந்த புன்னகை துளியும் மாறாமல் இருவரையும் பார்த்துக் கொண்டு இருந்தார்.
“அப்போ என்னை கல்யாணம் பண்ணிக்க வர சொல்லலையா?”
“எதே! உன்னை கல்யாணம் பண்ணிக்க வர சொன்னேனா?… அதுக்கு பாழுங்கிணத்தில குதிச்சுடுவேன்”
“அப்புறம் ஏன் என்னை கூப்பிட்ட… உங்க ஊர்ல பாழுங்கிணறு இல்லையா?” விடாமல் வம்பிழுத்தான் கண்ணன்.
“டேய்! ரொம்ப ஓவரா பேசுறடா…”
“ஏய்! மரியாதை முக்கியம்டி… உன்னை விட பெரியவன் நான். அரைமணி நேரம் முன்னாடி பிறந்தா… பெரிய இவனா நீ…”
“அரைமணி நேரமோ, அஞ்சு மணி நேரமோ உனக்கு முன்னாடி உலகத்தை பார்த்தவன் நான்.. எனக்கு மரியாதை வேணும்…”
“மரியாதை தானே? கிட்டே வா.. உனக்கு இறுதி மரியாதையே செய்றேன்” என்றவள் மீண்டும் அவனை துரத்திக் கொண்டு ஓட அவனை பிடிப்பதிலேயே குறியாக இருந்தவள் வீட்டினுள் நுழைந்து கொண்டிருந்த அக்னியை கவனிக்கத் தவறினாள்.
கையில் தலையணையுடன் அவனை துரத்தி ஓடிக் கொண்டிருந்தவள் கால் இடறி சரிய… மிக சரியாக அக்னியின் மீது விழுந்தாள்.
‘ஐயோ நெருப்பு’ அவள் பதறி விலக முற்பட… அவர்கள் இருவருக்கும் பின்னால் இருந்து குரல் கொடுத்தான் கண்ணன்.
“நம்தன நம்தன தாளம் வரும்..
புது ராகம் வரும்…
அதில் சந்தன மல்லிகை வாசம் வரும்”
“இப்போ நீ ஒழுங்கா வாயை மூடல.. உன் தலையை உடைக்க அம்மிக்கல்லு பறந்து வரும்” என்றவள் சமாளித்துக் கொண்டு விலக… அக்னியும் எல்லாரையும் ஒரு மௌனப் பார்வையால் அளந்து விட்டு அறைக்குள் சென்று கதவடைத்துக் கொண்டான்.

“ஏன்டா… உன் அண்டா வாயை வச்சுக்கிட்டு சும்மாவே இருக்க மாட்டியா? சும்மாவே கதகளி ஆடுவான். இப்போ நீ செஞ்சு வச்ச வேலைக்கு குச்சிபுடியும் சேர்ந்து ஆடுவான்” என்று சொல்லிவிட்டு திரும்ப நேசமணி வாசலை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
“என்ன அங்கிள் கிளம்பிட்டீங்க?” பதறினாள் அவள்.
“அவன் வந்துட்டானேமா.. அப்புறம் வர்றேன்.”
“அய்யயோ அப்போ மிச்ச கதை..”
“நாளைக்கு அவன் வெளியே போனதும் வர்றேன்”
“அங்கிள்.. எனக்கு சஸ்பென்ஸ் தாங்காது… ப்ளீஸ் பார்ட் டூ… சீ! மிச்ச கதையையும் சொல்லிட்டு போங்க” கிட்டத்தட்ட கெஞ்சினாள் அருந்ததி.
“அவ்வளவு அவசரம்னா… அந்த ரூமுக்குள்ளே ஒருத்தன் இருக்கானே… அவனுக்கு மிச்ச கதை எல்லாமே முழுக்க முழுக்க தெரியும். வேணும்னா அவனை கேளு” என்று முகம் கொள்ளா சிரிப்புடன் சொன்னவர் அவளது பதட்டத்தை கிண்டலாக பார்த்தவாறே அங்கிருந்து வெளியேறினார்.
‘எதே சும்மா இருக்கிற டைனோசரை வாயைத் திற… உன் வயித்துக்குள்ள போகணும்னு சொல்லணுமா?’ திறந்த வாயை மூடாமல் அதிர்ந்து நின்றாள் அருந்ததி.
“என்ன கதை தர்பூசணி?” கண்ணன் ஆவலாக அவளிடம் வந்து கேட்டான்.
“ஹும்…பொன்னியின் செல்வன் பார்ட் டூ… போடா மலைக் குரங்கு… எல்லாம் உன்னால தான்.. ஒன்னு முன்னாடியே வந்து கல்யாணத்தை நிறுத்தி இருக்கணும். அதுதான் இல்லை… அட்லீஸ்ட் இன்னிக்கு அங்கிள் முழுக் கதையையும் சொல்லி முடிச்ச பிறகாவது வந்து இருக்கலாம்.” சரமாரியாக அவனை அடிக்கத் தொடங்கினாள்.
“ஏய்! வந்தாலும் தப்பு… வரலைனாலும் தப்பா?” அவளது அடிகளில் இருந்து தப்பிக்க முயன்றவாறே பேசினான்.
“தப்பு தான் டா”
“ஹே.. பசிக்குதுடி.. முதல்ல சாப்பிட ஏதாவது கொடு…”
“ஹுக்கும்… பிள்ளையாரே பெருச்சாளியில போறாராம்… பூசாரிக்கு புல்லட்டு கேட்குதா?”
“ஹே… செம பசியில இருக்கேன்டி.. சத்தியமா புரியல…”
“எனக்கே கொட்டிக்கிறதுக்கு இனிமே தான் ஏதாவது செய்யணும்”
“வாட்! செய்யணுமா? இங்கே சமைக்க ஆள் யாரும் இல்லையா?”
“இப்போ உனக்கு சாப்பிட ஏதாவது வேணுமா? இல்ல உன்னோட கேள்விக்கு பதில் வேணுமா?”
“நமக்கு சோறு முக்கியம் அமைச்சரே…”
“அப்போ வாயை மூடிக்கிட்டு என் பின்னாடி வா” என்றவள் வேகமாக எழுந்து கிச்சனுக்குள் நுழைய அவள் பின்னோடு கண்ணனும் வந்தான். அவனுடன் பேசிக்கொண்டே அவள் பிரட்டில் ஜாம் தடவ.. அவள் முகத்தையே ஆராய்ச்சியாக பார்த்தவன் எதுவுமே பேசாமல் பிரிட்ஜை திறந்து ஆராய்ந்தவன் அதில் இருந்த சில முட்டைகளை எடுத்து இருவருக்கும் உணவு தயாரித்தான்.
“நீ நல்லா சாப்பிட்டு பழகினவளாச்சே… உன் ஹஸ்பன்ட் கிட்டே சொல்லி சமையலுக்கு ஆள் வைக்க சொல்ல வேண்டியது தானே” சாப்பிட்டுக் கொண்டே இயல்பாக கேட்பது போல கேட்டான் கண்ணன்.
“எல்லாம் கேட்டாச்சு…” அவள் சாப்பிடுவதில் முனைப்பு காட்டினாள்.
“பாப்பா…” கனிவு சொட்டிய அந்த குரல்… கண்ணன் இளகிப் போய் இருக்கும் நேரத்தில் மட்டுமே வரும் அழைப்பு. அவனது அந்த அழைப்பு அவளது மனதை அசைத்துப் பார்த்தது. கண்களில் இருந்து கண்ணீர் விழப் போவதன் அறிகுறி அவளுக்குத் தெரிய ஆரம்பிக்க..சாப்பிடுவதை நிறுத்தி விட்டு அவனை முறைத்தாள்.
“சாப்பிட விடுடா… குரங்கு” என்று திட்டியவள் அவனது முகத்தையே பார்க்காமல் வேகமாக உண்டு முடித்தாள்.
“பாப்பா…”
மீண்டும் கண்ணன் ஏதோ பேசத் தொடங்க.. அறையின் வாயிலில் நிழல் தெரிந்தது.

அக்னி தான் நின்று கொண்டிருந்தான்.

அவர்கள் இருவரையும் கண்டு கொள்ளாமல் கிச்சனுக்குள் நுழைந்தவன் நீமோவிற்கான உணவை அவன் தட்டில் எடுத்து வைத்தவன், தனக்காக ஜூஸையும், காய்கறி சாலட்டையும் தயாரித்தவன் எதுவும் பேசாமல் அங்கே அமர்ந்து சாப்பிட்டு விட்டு மீண்டும் அறைக்குள் சென்று முடங்கிக் கொண்டான்.
‘இங்கே இவனால எவ்வளவு கலவரம் நடந்துகிட்டு இருக்கு… இதுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்ங்கிற மாதிரி மிக்சர் தின்னுட்டு பொறானே… என்ன மேக் இவன்’ ஆத்திரமாக அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் அருந்ததி.

Free download novels
Madhumathi Bharath
Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here