மின்மினியின் மின்சார காதலன் 17 tamil novels

0
418

அத்தியாயம் 17
‘கட்டின பொண்டாட்டி இன்னொருத்தன் கூட உட்கார்ந்து சாப்ட்டுட்டு இருக்காளே என்ன ஏதுன்னு கேட்கிறானா பார்’ வசை மாரி பொழிந்தாள் மனதுக்குள்.
கண்ணன் அவர்கள் இருவரையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தான். தெளிவாக சொல்வதானால் அவர்கள் இருவரின் உணர்வுகளையும் அவதானிக்க முயன்று கொண்டிருந்தான்.

அக்னியின் பார்வை அருந்ததி இருந்த திசைப் பக்கம் கூட திரும்பவில்லை. அருந்ததியின் பார்வை அவன் மீதே தீயாய் தகித்துக் கொண்டிருந்தது.

அவன் பார்வையில் காதல் இல்லை… அவள் பார்வையில் வெறுப்பில்லை.

அவன் அவளை ஒதுக்கினான்… அவள் அவன் வந்ததும் கண்ணனை ஒதுக்கினாள்.

இருவரின் செயல்களையும் பார்த்து தலையை பிய்த்துக்கொள்ள தோன்றியது கண்ணனுக்கு.
ஹாலில் அமர்ந்து சற்று நேரம் டிவி பார்த்துக் கொண்டிருந்த அக்னி அறைக்குள் செல்ல முயன்ற நேரம், ஒரு முடிவுக்கு வந்தவனாய் அவன் முன்னே சென்று நின்று பாதையை மறித்தான் கண்ணன்.
“ஹாய் ப்ரோ… நான் கண்ணன்”
‘இருந்துட்டுப் போ’ என்ற பாவனை அவனிடத்தில்.
“அவளோட மாமா பையன்”
‘இவளை காதலிச்சு இருப்பானோ’ உன்னிப்பாக அவனது பேச்சை கவனித்தான். ஒருவேளை அப்படி இருந்தால் இந்த மண வாழ்வில் இருந்து விலகுவது எளிதில்லையா?
“அவ எனக்கு தங்கச்சி மாதிரி… எங்க வீட்டில் அவளை இன்னொரு பெண் குழந்தையா தான் பார்ப்போம்” என்று சொல்ல, அவனுக்கு சொத்தென்று ஆனது.
“இதெல்லாம் எதுக்கு என்கிட்டே சொல்லிட்டு இருக்கீங்க”
“பிரண்ட்ஸ்?” ஆவலுடன் கையை நீட்டினான் கண்ணன்.
தன்னுடைய கைகளை எடுத்து பேன்ட் பாக்கெட்டுக்குள் நுழைத்துக் கொண்டவன் ‘சீக்கிரம் பேசி முடி’ என்ற பாவனையில் நிற்க… இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அருந்ததிக்கு கோபம் எல்லையை கடந்தது.
“டேய்! தடிமாடு… நீ என்னைப் பார்க்கத் தானே வந்தே… அப்புறம் அங்கே என்னடா உனக்கு பேச்சு வேண்டி இருக்கு” என்று சொல்லி… அவன் கையை பிடித்து இழுத்துக் கொண்டு அறைக்குள் நுழைந்தாள்.
“ஏய்! ஏன்டி இப்படி இழுத்துட்டு வர்ற? நாங்க தான் பேசிட்டு இருக்கோம்ல…”
“லூசா நீ… ரொம்ப நேரமா நீ மட்டும் தான் பேசிட்டு இருந்த… அந்தாளு உன்னை மதிச்சு ஒரு வார்த்தை கூட பேசலை”
“எல்லாரும் உன்னை மாதிரியே வாயை திறந்ததும் லொட லொடன்னு பேச ஆரம்பிச்சுடுவாங்களா? அவரு ஷை டைப் போல”
“யாரு? அந்த வளர்ந்து கெட்டவன் ஷை டைப்… நீ பார்த்த”
“ம்ச்! நான் தான் அவர் கூட பேசி பிரண்டு ஆக ட்ரை பண்ணிட்டு இருந்தேன்ல.. நீ ஏன்டி உள்ளே வந்த?”
“ஹே.. உனக்கு புரியுதா இல்லையா? அந்தாளு உன்னை கொஞ்சம் கூட மதிக்கவே இல்லை. அந்தாளு கிட்டே நீ எதுக்கு இறங்கிப் போய் பேசுற”
“இதோ பார்.. மாப்பிள்ளையை பத்தி நான் விசாரிச்ச வரை எல்லாரும் நல்ல மாதிரி தான் சொன்னாங்க…”
“நீ விசாரிச்சியா? இது எப்போ நடந்தது?” என்றாள் கண்களில் கூர்மையுடன்.
“அது … வந்து…”தயக்கமாக இழுத்தான் கண்ணன்.
“உண்மையை சொல்லப் போறியா? இல்லை உன் மண்டையை உடைக்கட்டுமா?”
“போன மாசம் மாமா எனக்கு போன் செஞ்சு உனக்கு கல்யாணத்துக்கு மாப்பிள்ளை பார்த்து இருக்கிறதா சொல்லி அவரைப் பத்தி விசாரிக்க சொன்னார். நானும் எனக்கு தெரிஞ்ச பிரண்ட்ஸ் மூலமா விசாரிச்சு மாமா கிட்டே தகவல் சொன்னேன்.”
“அப்போ என்னோட கல்யாணத்தைப் பத்தி உனக்கு முன்னாடியே தெரியும். அப்படித் தானே?”
“….”
“ஆக மாமனும், மருமகனும் ஒன்னா சேர்ந்து பிளான் செஞ்சு இந்த கல்யாணத்தை நடத்தி இருக்கீங்க…எங்கே கல்யாணம் முடியறதுக்கு முன்னாடி இங்கே வந்தா ஏதாவது பிரச்சினை செஞ்சு கல்யாணத்தை நிறுத்திடுவேனோனு நீ இங்கே வரவே இல்லை.அப்படித்தானே”
“சே! அப்படி எல்லாம் இல்லைடி…நிஜமாவே எனக்கு வேலை இருந்தது. என்னால கிளம்பி இப்போ தான் வர முடிஞ்சது” என்று சொல்லிவிட்டு அப்பாவியாக அவள் முகம் பார்க்க அவள் முகம் சலனமே இல்லாமல் இருந்தது.
“பாப்பா..”
“இப்போ எதுவும் பேச வேண்டாம்… நான் ரொம்ப குழப்பத்தில் இருக்கேன்… இப்போ ரெஸ்ட் எடுக்கணும்னா என்னோட ரூமுக்கு போ”
“வேற ரூம் இல்லையா?”
“இல்லை.. இங்கே ரெண்டே ரூம் தான் இருக்கு…”
“அப்போ நீ போய் படு.. நான் இங்கே ஹாலில் படுத்துக்கிறேன்.. மதியம் சாப்பாடு அத்தை இங்கே எனக்கு கொடுத்து விடறேன்னு சொன்னாங்க.. ஸோ… சமைக்க வேண்டாம்”என்று சொன்னவனை பார்த்து அமைதியாக நின்றவள் எதுவுமே சொல்லாமல் உள்ளே போய் படுத்துக் கொண்டாள்.
அவளுக்கு கொஞ்சம் யோசிக்க வேண்டி இருந்தது.
ஆரம்பத்தில் தாத்தா சொன்னதற்காக இந்த திருமணத்தை நடத்த முன் வந்தாலும் அக்னி போலீஸ் ஆக வேண்டும் என்று சொன்ன பிறகு அருந்ததி கஷ்டப்பட வேண்டி இருக்குமே என்று முடிவு செய்து திருமணத்தை நிறுத்த முடிவு செய்தவர் அவள் தந்தை. அவர் வருந்துவதை காண சகியாமல் தானே இவளே முன்வந்து அக்னியை திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறினாள்.
‘இருந்தாலும் இந்தத் தாத்தா ஏன் இவனை மணந்து கொள்ள சொல்லி சொன்னார்?’ என்ற கேள்வி பதினேழாயிரத்து எட்டாவது முறையாக அவளுக்கு தோன்றவும் செய்தது.
இவன் பணக்காரனா?… ஓரளவு வசதி படைத்தவன் தான்.ஆனால் அவளை விடவும் பெரிய பணக்காரன் ஒன்றுமில்லை.
இவன் அருமையான குணம் கொண்டவனா? …. நிச்சயம் இல்லை … சரியான சிடுமூஞ்சி சிங்காரம்.
அழகனா? கம்பீரம் நிறைந்தவன்… அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் இவனை விடவும் அழகான ஆண்கள் இருக்கிறார்களே.
வேறு என்ன தான் காரணம் இருக்கக்கூடும்… மண்டையை பிய்த்துக்கொண்டு யோசித்தாலும் ஆயிரமாவது முறையாக அவளுக்கு தோல்வி தான் கிட்டியது.
மதிய உணவு வந்ததும் சத்தமே இல்லாமல் இருவரும் உண்டு முடித்தார்கள். அக்னி தனக்கு வேண்டிய உணவை ஆர்டர் செய்து சாப்பிட்டு விட்டு ஹாலில் லேப்டாப்பை எடுத்து வைத்து ஏதோ வேலை பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனுக்கு கொஞ்சம் தள்ளியே அமர்ந்து கொண்டு இருவரும் குசுகுசுவென அவனைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தார்கள். நேசமணியிடம் தான் கேட்டுக் கொண்டிருந்த அக்னியின் முன்கதையை சொல்லி முடித்ததும் கண்ணனின் பார்வை அக்னியை அலசியது.
“கண்டிப்பா நேத்து நான் அந்த நேரத்துக்கு வந்திருக்கக் கூடாது தான்.” ஒத்துக் கொண்டான்.
“மிச்ச கதையை தெரிஞ்சுக்கலைனா எனக்கு தலையே வெடிச்சுடும் போல இருக்கு கண்ணா”
“உங்க மாமாவுக்கு போன் பண்ணி கேட்டுப் பாரேன்”
“என்னனு?”
“போன்லயே மிச்ச கதையை சொல்ல சொல்லு…”
“வாய்ப்பில்லை… இந்த பயர் எஞ்சின் இங்கே இருக்கிற வரை அவர் வாயை திறக்க மாட்டார்”
“இப்போ என்ன செய்றது?”
“எனக்கு மண்டையிலே ஒண்ணுமே ஓட மாட்டேங்குது. நீயே ஏதாவது ஐடியா சொல்லு”
“உன் ஆளை..” என்று கண்ணன் ஏதோ சொல்லத் தொடங்க… அவனை தீயாய் முறைத்தாள் அருந்ததி.
“சரி சரி… வேணும்னா உன் மாமனாரோட ஒரே பையனைனு சொல்லவா?” என்று அதி தீவிர குரலில் கேட்க… அருந்ததி அவனை அடிக்க ஆயுதத்தை தேட ஆரம்பித்தாள்.
“அப்போ உன் புருசர்ர்ர்னு சொல்லவா?”
“$*#@$$$$$”
“அம்மா தாயி போதும்.கிரீன் கீரினா திட்டாதே… சரி… அக்னினு பிக்ஸ் ஆகிக்கிறேன்”
“சொல்லித் தொலை” எரிந்து விழுந்தாள். அவளுக்கு அக்னியின் முன்கதை தெரியாமல் தலைவலி வரத் தொடங்கியது.
“அவரை கொஞ்ச நேரம் இங்கே இருந்து வெளியே எங்கேயும் அனுப்பிடுவோமா?”
“அது முடிஞ்சா நான் செஞ்சு இருக்க மாட்டேனா? அந்த நெருப்பு ஆபிசர் யார் பேச்சையும் கேட்க மாட்டார்” என்றாள் சலிப்பையும்,எரிச்சலையும் உள்ளடக்கிக் கொண்டு.
அக்னி அவர்கள் இருவரையும் கண்டு கொள்ளவே இல்லை. அவன் புதிதாக ஆரம்பிக்க இருக்கும் கம்பெனி தொடர்பாக யார் யாருக்கோ அழைத்து பேசிக் கொண்டிருந்தான். அவன் தந்தை ஒற்றை கையெழுத்து போட்டால் போதும்.சுலபமாக பேங்க் லோன் கிடைத்து விடும். அக்னி தான் அவருடைய சொத்தே வேண்டாம் என்று ஒதுக்கி விட்டானே.எந்த வித செக்யூரிட்டியும் இல்லாமல் அவனுக்கு லோன் கிடைப்பதில் நிறைய சிக்கல் இருந்தது.
ஏற்கனவே அவனுக்கு பணம் தருவதாக சொல்லி இருந்த அவனது நண்பனின் தந்தை தணிகாசலமும் இப்பொழுது பின்னடிக்கத் தொடங்கினார். காரணம் தான் அவனுக்குத் தெரியவில்லை.
போன் அடித்தாலும் எடுக்கவில்லை. நேரே போனாலும் அவரை பார்க்க முடியவில்லை. உள்ளே இருந்து கொண்டே ஆட்களை விட்டு அவர் வெளியூர் சென்று இருப்பதாக அவனிடம் சொல்ல வைத்தார். காரணம் தான் அவனுக்கு புரியவில்லை.அந்த டென்ஷனில் அவன் இருக்க… அருந்ததியையும், கண்ணனையும் அவன் கண்டு கொள்ளவே இல்லை.
அக்னியை வீட்டை விட்டு அப்புறப்படுத்த ஆன மட்டும் முயற்சி செய்து விட்டு இருவருமே வெற்றிகரமாக தோல்வியை தழுவினார்கள்.
“இந்த இட்லி குண்டான் நகரவே மாட்டேங்கிறானே.. இப்போ என்ன செய்றது கண்ணா?” என்றாள் சோகமாக.
அக்னிக்கு அவள் வைத்திருக்கும் புதிய பெயரை கேட்டதும் வந்த சிரிப்பை வாய்க்குள் மென்று முழுங்கினான் கண்ணன்.
‘ இப்போ இவ முன்னாடி சிரிச்சு வச்சா இருக்கிற ஆத்திரத்தில் குரல்வளையை கடிச்சு துப்பினாலும் துப்பிடுவா’
“ரொம்ப கஷ்டப்பட்டு ஒரு ஐடியா கண்டுபிடிச்சு இருக்கேன் சொல்லட்டுமா?”
“சொல்லு … மொக்கையா மட்டும் ஏதாவது சொன்ன… செத்த நீ” என்றாள் மிரட்டலாக.
“அவரைத் தானே வெளியே அனுப்ப முடியாது… நாம கிளம்பி உன் மாமனார் வீட்டுக்குப் போய்ட்டா?”
“ஐ! இது நல்லா இருக்கே… வா கிளம்பலாம்”
“என்ன உடனே கிளம்புற… உன் புருசர்ர்ர்… சாரி அக்னி ப்ரோ கிட்டே என்ன சொல்லிட்டு வெளியே போகப் போறோம்”
“அவர் கிட்டே எதுக்கு சொல்லணும்? வெளியே போகும் பொழுது அவர் மட்டும் சொல்லிட்டா போறார்?”
“நியாயமான கேள்வி தான்… ஆனாலும்…”
“இழுக்காதே.. வா போகலாம்”
“ஒருவேளை அவர் உன்னை காணோம்னு தேடினா…”அவன் பேசி முடிக்கும் முன் நிமிர்ந்து அவனை ஒரு பார்வை பார்த்தாள் அருந்ததி. அதில் இருந்தது என்ன?
வெறுமையா? வலியா?
“என்னை எல்லாம் அவர் தேட மாட்டார்… அவரைப் பொருத்தவரை இந்த வீட்டில் நான் ஒரு குப்பை மாதிரி தான்” ஏன் அப்படி சொன்னோம் என்று கண்ணனே வருந்தும் அளவிற்கு அவளது முகபாவனை இருந்தது.
இருவரும் கிளம்பி வெளியே செல்ல… அதுவரை அவர்களை கண்டு கொள்ளாதவன் போல இருந்த அக்னி அவர்கள் இருவரும் வெளியே சென்றதை உறுதி செய்து கொண்டு தன்னுடைய மொபைலை எடுத்து யாருக்கோ அழைத்தான்.
“இரண்டு பேரும் வீட்டை விட்டு கிளம்பியாச்சு… இனி நீங்க பார்த்துக்கோங்க” என்று கட்டளையிட்டவன் அருந்ததி வீட்டில் இல்லாத நேரத்தை பயன்படுத்தி வீட்டில் சில இடங்களில் மினி மைக் மற்றும் கேமராக்களை பொருத்தினான்.
அருந்ததியும் கண்ணனும் அவனுடைய காரிலேயே கிளம்பி உள்ளூரில் இருந்த ஒரு ஹோட்டலுக்கு செல்ல அங்கே அறையை காலி செய்து கொண்டிருந்த நேசமணி இவர்களைப் பார்த்ததும் முதலில் ஆச்சர்யம் அடைந்தவர் பின் புன்னகைக்கத் தொடங்கினார்.
“என்ன மருமகளே சஸ்பென்ஸ் தாங்க முடியாம என் பின்னாடியே கிளம்பி வந்துட்டியா?”
“நீங்க என்ன அங்கிள் ரூமை காலி செய்றீங்களா?”
“ஆமா மா.. ஊரில் உங்க அத்தை தனியா இருப்பாளே… வேலைக்கு ஆள் வச்சு இருக்கேன் தான். இருந்தாலும் அவளுக்கு நான் பக்கத்தில் இருக்கணும்.அதான் கிளம்பிட்டேன்.. நாளைக்கு மறுபடியும் வந்துடுவேன். அப்போ மிச்ச கதையும் சொல்றேனே”அவர் குரலில் கெஞ்சல் தொணித்ததோ
எழுந்து நடக்கக் கூட முடியாமல் படுக்கையில் கிடக்கும் மனைவியை உடனடியாக சென்று பார்க்க வேண்டும் என்ற பரிதவிப்பும், துடிப்பும் அவர் முகத்தில்.
‘என்ன ஒரு அருமையான கணவர் இவர்… இவரோட பிள்ளை மட்டும் ஏன் இப்படி என்னைப்பற்றி கொஞ்சமும் அக்கறை இல்லாம இருக்கார்? அக்கறை வேண்டாம் யாரோ ரோட்டில் போகிற ஒருத்தி மேல இருக்கிற நட்பு உணர்வு கூட அவருக்கு என் மேலே இல்லையே’ உள்ளுக்குள் மருகினாள் பேதையவள்.
அவளுக்கு என்ன வேண்டும் என்று அவளுக்கு புரியவில்லை. கணவனின் பாராமுகம் அவளை வதைக்கிறதே… காதல் இருக்கிறதா என்று கேட்டால் அதற்கும் அவளிடம் பதில் இல்லை.
அவளின் முகபாவனையை உள்வாங்கிய கண்ணன் அவளுக்கு பதிலாக பேசத் தொடங்கினான்.
“ஏன்ப்பா.. நீங்க வீட்டுக்குப் போக எவ்வளவு நேரம் ஆகும்?”
“ஒரு இரண்டு மணி நேரம் ஆகும் கண்ணா?”
“பஸ்சிலா போறீங்க?”
“அப்பா… நாங்க கார்ல தான் வந்து இருக்கோம்… எங்க கூடவே வாங்க.வீட்டுக்குப் போற வழியில் நீங்க இவ கிட்டே எல்லாத்தையும் சொல்லி முடிச்சிடலாம்.சரிதானே அருந்ததி”என்று அவளிடம் வேறு கருத்து கேட்க அவள் முகம் மத்தாப்பாக ஜொலித்தது. அதைப் பார்த்த பின் மறுத்து பேச நேசமணிக்கும் மனம் வரவில்லை.
“சரி தம்பி” என்றவர் அவர்களுடன் காரில் செல்ல…கார் அங்கிருந்து கிளம்பி சில நொடிகள் வரை அமைதி காத்த அருந்ததி நேசமணியின் முகம் பார்ப்பதும், பின்னர் கண்ணனின் முகம் பார்ப்பதுமாக இருந்தாள்.
நேசமணியோ ஏதோ யோசனையில் மூழ்கி இருந்தார். அவளின் தவிப்பை காண சகியாமல் கண்ணனே பேச்சை தொடங்கினான்.
“சொல்லுங்கப்பா… அதுக்கு அப்புறம் என்ன நடந்தது? நீங்க தோப்பு வீட்டுக்குப் போய் உங்க பையனை பார்த்தீங்களா”
“போனேன் தம்பி…”
“அங்கே என்ன நடந்தது?”உச்சபட்ச ஆர்வம் அருந்ததியின் குரலில்.

Free download novels
Madhumathi Bharath
Facebook Comments Box
What’s your Reaction?
+1
4
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here