மின்மினியின் மின்சார காதலன் 18 tamil novels

0
646
Free download novels
Madhumathi Bharath

அத்தியாயம் 18

“என்ன தம்பி உனக்குத் தான் அம்மாவைப் பத்தி தெரியுமே? அப்புறம் எதுக்கு இப்படி கோபப்படுற?”

“அப்பா… நீங்களும் அம்மாவுக்கே சப்போர்ட் செய்யாதீங்க.என்ன பேச வர்றேன்னு கூட கவனிக்காம அவங்க பாட்டுக்கு கத்திட்டே இருந்தா எப்படிப்பா?” அக்னியின் குரலில் இருந்த ஆதங்கம் அவருக்கு புரியாமல் இல்லை.அதே நேரம் மனைவியையும் விட்டுக் கொடுக்க முடியாமல் தடுமாறினார் அவர்.

“அவ உன் அம்மா தம்பி. நீயும் திடுதிப்புன்னு இப்படி ஒரு பொண்ணோட வந்து நின்னா பெத்தவங்க மனசு பதறாதா? நீயும் முன் கூட்டியே எனக்கு தகவல் சொல்லி இருக்கலாமே.அப்படி செஞ்சு இருந்தா… இவ்வளவு தூரம் வர விட்டு இருக்க மாட்டேன்ல.”

“சூழ்நிலை அப்படி ஆகிடுச்சுப்பா.எதையும் விளக்கி சொல்ல எனக்கு நேரம் இல்லை. அதே நேரம் அங்கே இந்த பொண்ணோட இருக்கிறதும் பாதுகாப்பா தோணலை.அதான்.”

“சரி விடு தம்பி. இப்போவாவது என்ன நடந்ததுன்னு சொல்லு.”

“அப்பா இந்த பொண்ணு பேர் அமிர்தா. இந்த பொண்ணு இவங்க கணவரோட காஷ்மீர்ல இருந்தாங்க…”

“என்னஆஆ?” தன்னை மீறிய அதிர்ச்சியில் உச்சஸ்தாயில் அலறி விட்டார் நேசமணி. ஏனெனில் அவரும் அமிர்தாவை அவனுடன் சேர்த்து தானே நினைத்துக் கொண்டிருந்தார்.

“எதுக்குப்பா இவ்வளவு ஷாக்…” கண்களில் கவனத்துடன் தந்தையை ஏறிட்டான் மகன்.

“அது வந்து தம்பி…” எப்படி சொல்வது என்று புரியாமல் கண்களில் கெஞ்சலுடன் மகனிடம் மானசீகமாக மன்னிப்பை வேண்டினார். நேசமணி.

“அப்போ நீங்களும் இந்த பொண்ணை நான் கல்யாணம் செஞ்சு கூட்டிட்டு வந்தேன்னு தான் நினைச்சீங்களா?” அக்னியின் குரலில் அப்பட்டமான வேதனை.

‘இவ்வளவு தானா நீங்க என்னை புரிஞ்சுக்கிட்டது’

“தப்பு தான் தம்பி. குழப்பத்திலயும், பயத்துலேயும் சரியா எங்களால யோசிக்க முடியலை” என்றவர் மனைவியையும் விட்டுக் கொடுக்க முடியாமல் தன்னுடன் கூட்டு சேர்த்துக் கொண்டார். அவரின் மனம் புரிந்தவனோ லேசாக இதழ் பிரியாமல் சிரித்துக் கொண்டான்.

‘நல்ல புருசன்… நல்ல பொண்டாட்டி’

“என் மேலயும் தப்பு இருக்குப்பா.. வர்றதுக்கு முன்னாடி அட்லீஸ்ட் உங்க கிட்டேயாவது தகவல் சொல்லி இருக்கணும். ஆனா சூழ்நிலை அப்படி இல்லை. சரி இங்கே வந்தே பேசிக்கலாம்னு வந்துட்டேன்”

இருவரும் பேசிக்கொண்டு இருக்க… அவர்களுக்கு சூடான காபியை  கொண்டு வந்து வைத்த அமிர்தா இருவருக்கும் இடைஞ்சலாக அங்கேயே நிற்க மனமின்றி வீட்டின் முன் வாசலுக்கு செல்ல முற்பட, அவளை தடுத்து நிறுத்தினான் அக்னி.

“இங்கேயே உட்காருங்க… உங்களைப் பத்தி தான் பேசிட்டு இருக்கோம்”

“இல்லைங்க.. நீங்க பேசுங்க. நான் மறக்க நினைக்கிற எதையும் நினைவுபடுத்த வேண்டாம். நான் கொஞ்சம் காத்தாட வெளியில் உட்கார்ந்து இருக்கேன்” என்று சொன்னவள் அவர்களின் பதிலை எதிர்பாராமல் அங்கே போய் சுவற்றில் சாய்ந்த வண்ணம் அமர்ந்து கால்களை நீட்டிக் கொண்டு தொலைவானத்தை வெறிக்கத் தொடங்கினாள்.

கண்களில் மட்டும் அசாத்திய வெறுமை.

“ரொம்ப நல்ல பொண்ணு… இல்லையாப்பா” என்று கேட்க… அதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் தலையை மையமாக அசைத்து வைத்தார் நேசமணி.

“இந்த பொண்ணும், இவங்க கணவர் ஜார்ஜும் வீட்டுக்குத் தெரியாம லவ் மேரேஜ் செஞ்சுக்கிட்டவங்க பா..”

“ஓ”

“இரண்டு பேரும் வசதியில சமம் தான்.ஆனா வேற மதம் அப்படிங்கிறதால ஜார்ஜ் வீட்டில் ஒத்துக்கலை போல… அதனால் இரண்டு பேரும் இங்கே இருந்து ஓடி வந்து கல்யாணம் செஞ்சு காஷ்மீர்ல செட்டில் ஆகிட்டாங்க.”

“அவங்களை உனக்கு எப்படி தெரியும் அக்னி… முன்னமே பழக்கமா?”

“இல்லப்பா… ஜார்ஜ் எங்க மிலிட்டரி கேம்ப் நடக்கிற இடத்துக்கு பக்கத்துல தான் ஒரு ரிசார்ட் வச்சு நடத்திட்டு இருந்தார். சின்னதா ஒரு கபேயும்[cafe] உண்டு. அங்கே போகும்போது தான் எனக்கு ஜார்ஜை பழக்கம்.”

“இப்போ ஜார்ஜ்?”

“உயிரோட இல்லைப்பா… அதுவும் என்னால தான்” என்று சொல்ல நேசமணியின் முகத்தில் அதிர்வலைகள்.

“தம்பி என்ன சொல்ற? ஜார்ஜ் எதுவும் தீவிரவாத கும்பலோட…”

“அப்பா ரொம்ப யோசிக்கறீங்க… ஜார்ஜ் ரொம்ப நல்லவர்…இன்னும் கொஞ்ச நாள் கூட இருந்து இருந்தா என்னோட பெஸ்ட் பிரண்டா ஆகி இருப்பார். குறை சொல்ல முடியாத அருமையான மனுசன். அவரோட மனைவி மேல உயிரா இருப்பார்.”

“அந்த பையனுக்கு என்ன தான் ஆச்சு?”

“ஒருநாள் விடியற்காலையில நான் ஜாகிங் போய்ட்டு அவரோட ரிசார்ட் பக்கமா போயிட்டு இருந்தேன் பா. ஜார்ஜ் என்கிட்டே வந்து அமிர்தாவை காணோம்னு சொல்லி தேடிட்டு இருந்தார். இரண்டு பேரும் சேர்ந்து தேடினோம். அன்னிக்கு பனி வேற அதிகமா இருந்ததால இரண்டு பேரும் ஆளுக்கு ஒரு பக்கமா பிரிஞ்சு தேடினோம். ஆனா கிடைக்கல.

அப்போ தான் ஜாகிங் வர்ற வழியில் இருக்கிற ஒரு அம்மா அமிர்தா மாதிரி ஒரு பொண்ணை பார்த்ததா என்கிட்டே சொல்ல… என்ன ஏதுன்னு கொஞ்சம் கூட யோசிக்காம பக்கத்துல இருந்த காட்டுப் பக்கம் ஜார்ஜை இழுத்துட்டு போனேன்.” என்று சொன்னவன் கண்களை அழுந்த மூடி அந்த நொடிகளை விட்டு வெளியேற அவன் போராடுவது அவருக்குத் தெரிந்தது.

“என்னாச்சு அக்னி”

“ஜார்ஜும் நானும் ஆளுக்கு ஒரு பக்கம் தேடிட்டு இருக்கும் பொழுது ஜார்ஜ் லேண்ட்மைன் மேல கால வச்சுட்டான் பா. அது மிலிட்டரியோட ரெஸ்ட்டிரிக்ட்டடு  ஏரியாங்கிறதே எனக்கு அப்போ தான் நியாபகம் வந்துச்சுப்பா” என்றவன் முகத்தில் ஓங்கி அறைந்து கொண்டான்.

“நான் அவனை அலர்ட் செய்றதுகுள்ளே ஜார்ஜ்… ஜார்ஜ் அங்கே இருந்து நகர்ந்துட்டான்… குண்டு வெடிச்சு அங்கேயே…என் கண்ணு முன்னாடியே அவன் செத்துட்டான் பா”என்று சொல்லி முடிக்கையில் அக்னியின் கண்களில் ஒரு துளி கண்ணீர் திரண்டு வந்து நின்றது. அழுகையை அடக்க அவன் போராடுவதை இறுகி நின்ற அவனது தோளையும் விரல்களையும் பார்க்கும் பொழுதே அவரால் உணர முடிந்தது.

அந்த நொடிகளை விட்டு வெளியே வர அக்னிக்கு சில நொடிகள் அவகாசம் கொடுத்தவர் ஆதரவாக அவன் கைகளை பற்றிக் கொண்டார்.

“அமிர்தா அப்போ எங்கே இருந்தா?”

“அவங்க வீட்டுக்கு பக்கத்துல தினமும் வாக்கிங் போவாங்க. அப்படி போகும்போது கால் பிசகி கீழே விழுந்துட்டா.. அக்கம் பக்கத்தில இருக்கிறவங்க அவங்களை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போய் சேர்த்து இருக்காங்க. அது தெரியாம நான் தான் யாரோ சொன்னதை நம்பி அவனை ரெஸ்ட்டிரிக்ட்டடு ஏரியாவுக்குள்ள கூட்டிட்டு போயிட்டேன். எல்லாமே என் தப்பு தான்”

“அமிர்தா.. உன்னோட எப்படி வந்தா?”

“எனக்கு வேற வழி தெரியலைப்பா.. மிலிட்டரி ஏரியாவுக்குள்ளே ஜார்ஜ் அத்துமீறி நுழைஞ்சதால அவன் தீவிரவாதியா இருப்பானோன்னு சந்தேகப்பட்டு அந்த ஆங்கிளில் விசாரிக்க ஆரம்பிச்சுட்டாங்க. அவங்களோட சொத்து எல்லாத்தையும் முடக்கிட்டாங்க. காதல் கல்யாணம் செஞ்சுகிட்டதால இரண்டு பேரோட வீட்டுப் பக்கமும் அவங்களால போக முடியலை. அதுலயும் ஜார்ஜ் வீட்டுக்கு அவங்களை பத்தி தெரியவே கூடாதுன்னு தான் காஷ்மீருக்கு ஓடி வந்து இருக்காங்க.. நிறைமாசமா இருக்கிற பொண்ணை எப்படிப்பா தனியா விட முடியும்? அதுதான் நானே எல்லார்கிட்டயும் பேசி அவங்களை என்னோட அழைச்சுட்டு வந்துட்டேன். நான் செஞ்சது தப்பா அப்பா?” கண்களில் குற்ற உணர்வை தேக்கி வைத்துக் கொண்டு தவிக்கும் மகனிடம் அவரால் இல்லையென்று மட்டும் தான் சொல்ல முடிந்தது.

அவருக்கும் மனசாட்சி உண்டு தானே?

“சரி தம்பி. இப்போ இவங்களை கூட்டிட்டு வந்துட்ட… அடுத்து என்ன செய்யலாம்னு இருக்கே?” பெரியவராய் அடுத்ததைப் பற்றி அவர் கேட்க.. அக்னியின் முகத்தில் தெளிவில்லாத தோற்றம்.

“என்ன கேட்கறீங்கன்னு கொஞ்சம் தெளிவா கேளுங்கப்பா…”

“இன்னும் கொஞ்ச நாளில் அமிர்தாவுக்கு குழந்தை பிறந்திடும்.அதுக்கு அப்புறம் அவங்களோட வாழ்க்கை? அந்த பொண்ணுக்கு வேற கல்யாணம்?” என்று பேசிக் கொண்டே போனவர் மகனின் முக பாவனையில் பேச்சை நிறுத்தி விட்டார்.

“நீங்க கேட்க வர்றது எனக்கு புரியுதுப்பா… ஜார்ஜ் அமிர்தாவை எந்த அளவுக்கு விரும்பினார்னு எனக்கு நல்லாவே தெரியும். அதே மாதிரி தான் அமிர்தாவும்…அவங்க இரண்டு பேர் வாழ்ந்த வாழ்க்கையை கண் கூடா பார்த்தவன் பா நான். ஒருவேளை அமிர்தா நாளைக்கே வேற ஒரு வாழ்க்கையை ஏத்துக்க தயாரா இருந்தா முதல் ஆளா நான் இருப்பேன் அங்கே. காலம் முழுக்க அவங்களுக்கும், அவங்க குழந்தைக்கும் பாதுகாப்பான வாழ்க்கையை ஏற்படுத்தி கொடுக்கணும்ங்கிறதுல நான் உறுதியா இருக்கேன். வேற யாரையும் அவங்க கல்யாணம் செஞ்சுகிட்டாலும் சரி. இல்லை என்னை கல்யாணம் செஞ்சுகிட்டாலும் சரி.

ஆனா அவங்க வாழ்க்கையில் கல்யாணம் இல்லைனா எனக்கும் கல்யாணம் கிடையாதுப்பா” என்று தீர்மானமாக சொன்ன அக்னியை பார்த்து வியந்து தான் போனார்.

“தம்பி நீ இப்போ எடுத்து இருக்கிறது ரொம்ப பெரிய முடிவுப்பா… கொஞ்சம் நிதானமா யோசிச்சு…”

“நான் ஏற்கனவே ரொம்ப யோசிச்சுட்டேன்ப்பா. இனி என்னோட முடிவில் மாற்றம் இல்லை. ஒண்ணு அமிர்தாவுக்கும் அவங்க குழந்தைக்கும் ஒரு பாதுகாப்பான வாழ்க்கை அமையணும். அப்படி இல்லைனா நான் அவங்களை பாதுகாப்பேன் வாழ்க்கை முழுக்க” என்று சொல்லிக் கொண்டே இருக்க வாசலில் அமிர்தாவின் அழுகை சத்தம்.

வேகமாக இருவரும் சென்று பார்க்க… அமிர்தா வலியில் துடித்துக் கொண்டிருந்தாள்.

“அப்பா.. டெலிவரி பெயின்னு நினைக்கிறேன். நான் ஹாஸ்பிடல் போறேன்… நீங்க உதவிக்கு நம்ம வீட்டில் வேலை செய்யும் லேடிஸ் யாரையாவது அனுப்பி வைங்க.” என்றவன் அமிர்தாவை கையில் ஏந்திக்கொண்டு காரில் ஏறி  பறந்து விட்டான்.

ராணுவ வீரன் தான். போர்க்களம் கண்டவன் தான். ரத்தம் புதிதில்லை தான். ஆனாலும் அமிர்தாவின் கதறல் அவனை அசைத்துப் பார்த்தது.

அவனையும் அறியாமல் அவன் உள்மனம் வயிற்றினுள் இருந்த சிசுவுடன் பேசியது.

‘தங்கம்… நீங்க வெளியே வந்த அடுத்த நிமிசத்தில் இருந்து உங்களை கண்ணுக்குள்ள வச்சு பார்த்துப்பேன்.காலம் முழுக்க உனக்கு ஒரு பிரண்டா இருப்பேன்.உங்க அம்மாவை கஷ்டப்படுத்தாம என்கிட்டே வந்துடு மா’ அவன் கண்கள் கலங்கி இருப்பதைப் பார்த்த அமிர்தா மெதுவாக அவன் கரங்களைப் பற்றிக் கொண்டாள். வலியை பொறுத்துக் கொண்டு பேசத் தொடங்கினாள்.

“என் வாழ்க்கை முழுசுக்கும் வேண்டிய காதலை ஜா..ஜார்ஜால் மட்டும் தான் கொடுக்க முடியும். கொடுத்துட்டார். அவர் போனப்பவே நானும் செத்துட்டேன். குழந்தைக்காக மட்டும் தான் இத்தனை நாள் இருந்தேன். இனி அந்த கவலை இல்லை. உங்களால முடிஞ்சா பாப்பாவை ஏதாவது ஆசிரமத்தில் சேர்த்துடுங்க. அதுவே போதும். உங்க அப்பா கிட்டே பேசின மாதிரி எதையும் யோசிச்சு மனசை குழப்பிக்காதீங்க. கு..குழந்தை ப..பத்திரம்” என்று சொன்னவள் அத்தோடு கண்களை மூடி மயங்கி விட காரை முன்னைக் காட்டிலும் அதிக வேகத்தில் ஓட்டி சென்று மருத்துவமனையை அடைந்தான்.

மருத்துவர்கள் பிரசவ வலி தான் என்று உறுதிபடுத்தி வலி அதிகரிக்க அவளுக்கு ஊசி போட… வலியின் தாக்கத்தில் மயக்கத்தில் இருந்து மீண்டவள் கதறத் தொடங்கினாள்.

பிரவச அறையின் வெளியிலேயே மிகுந்த பயத்துடனும், பதட்டத்துடனும் அமர்ந்து இருந்தான். துணைக்கு யாருமேயில்லை.

‘அமிர்தாவின் பேச்சை கேட்ட பிறகு அவனுக்குள் ஆயிரமாயிரம் எண்ணங்கள் சுனாமியாய் அவனை சுருட்டி அடித்துக் கொண்டிருந்தது.

‘அமிர்தாவின் பேச்சில் வாழ வேண்டும் என்ற ஆசையே இல்லையே… குழந்தையை பார்த்துக் கொள்ளும் பொறுப்பை என்னிடம் ஒப்படைப்பது என்றால்’ அதற்கு மேலே யோசிக்கவும் அவனுக்கு பயமாய் இருந்தது.

 

யாரிடம் கேட்பது? என்ன கேட்பது? குழந்தையாய் தவித்தபடி அவன் இருக்க… மருத்துவர்கள் அவனை உள்ளே அழைத்தார்கள்.

“சார்… அவங்க கோ ஆபரேட் பண்ணவே மாட்டேங்கிறாங்க. உங்க கிட்டே பேசணும்னு சொல்றாங்க.. கொஞ்சம் சீக்கிரம் வாங்க.”

வியர்வையில் நனைந்து உடல் எல்லாம் நடுங்க உள்ளே சென்றவனை நோக்கி கையை நீட்டிய அமிர்தா அவனைப் பார்த்து திக்கித் திணறி பேசினாள்.

“கு..குழந்தையை சொந்தக்காரங்க யா..யாரையும் நம்பி ஒப்படைக்க வேண்டாம். குழந்தைக்கு ஜெ..ஜெனிபர்னு பேர் வைங்க” என்றவளின் இதயம் தன்னுடைய துடிப்பை அத்துடன் நிறுத்திக் கொண்டது.

அழக் கூட தோன்றாமல் அவன் கைகளில் இருந்த அமிர்தாவின் கரங்களையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனை அந்த அறையில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றிய மருத்துவர்கள் துரிதமாக செயல்பட்டு அவளுக்கு அறுவை சிகிச்சை செய்து குழந்தையை உயிருடன் மீட்டு விட்டனர்.

ரோஜாப்பூவின் நிறத்தில் இருந்த அழகிய பெண் குழந்தையை டவலில் சுற்றி எடுத்து அவன் கரங்களில் கொடுத்தவர்கள் ஒன்றுமே சொல்லாமல் நகர்ந்து விட குழந்தையோ அவன் விரல்களை இறுக பற்றிக் கொண்டது.

உலகையே மறந்து போய் அமர்ந்து இருந்தவனின் உடலில் ஒரு சிலிர்ப்பு. பார்வையை மெல்ல குழந்தையின் புறம் திருப்பியவனின் உதடுகள் மென்மையாக அவள் பெயரை உச்சரித்தது.

“ஜெனிபர்”

Facebook Comments Box
What’s your Reaction?
+1
6
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here