அத்தியாயம் 19
“அந்த சனியனை வெளியே தூக்கி எறிஞ்சுட்டு வர்றதா இருந்தா மட்டும் உள்ளே வா” சுபத்ராவின் ஆத்திரக் குரல் தெருமுனை வரை எதிரொலித்தது.
“அம்மா… ப்ளீஸ்! இந்த குழந்தையைப் பார்த்தா உங்களுக்கு பாவமா இல்லையா? பிறந்த பச்சைக் குழந்தை மா” தாயிடம் கெஞ்சினான் அக்னி.
“சொன்னா கேளுடா.. இந்த குழந்தையை நாம வளர்த்தா அது உன்னோட எதிர்காலத்தை பாதிக்கும்.”
“இல்லைமா நான் இந்த குழந்தையை வளர்க்கிறதா முடிவு செஞ்சுட்டேன்” அவன் குரலில் இருந்த அழுத்தம் அவன் எடுத்த முடிவை மாற்றிக் கொள்ள மாட்டான் என்பதை எடுத்து சொல்ல சுபத்ராவின் உள்ளம் பதைபதைத்தது.
‘இந்த குழந்தையால் மகன் வாழ்க்கை திசை மாறி விடுமோ’ பெற்ற தாயாய் அவர் மனம் பயந்து போனது.
“சொன்னா கேளுடா.. அந்த குழந்தையை ஏதாவது அனாதை ஆசிரமத்தில் சேர்த்துடலாம். எவ்வளவு பணம் வேணுமோ கொடுத்திடலாம்”
“அம்மா… ஜெனிபர் என்னோட குழந்தையா நான் தத்தெடுத்துக்க முடிவு செஞ்சு இருக்கேன்”
“நீ மட்டும் முடிவு செஞ்சா போதுமா”
“வேற யார் முடிவு செய்யணும்?”
“உன்னைப் பெத்தவங்க நாங்க…”
“உங்க சம்மதம் இந்த விஷயத்தில எனக்கு தேவை இல்லைமா. சொன்னாலும் நீங்க ஒத்துக்கவே மாட்டீங்க. அது எனக்குத் தெரியும்.”
“அப்போ பெத்தவ நான் சொன்னா கேட்க மாட்டே”
“எனக்கு வேற வழி இல்லைம்மா”
“ஏன்டா… உண்மையிலேயே அந்த குழந்தை ஜார்ஜுக்கும், அமிர்தாவுக்கும் பிறந்த குழந்தையா? இல்லை உன்னோட குழந்தையா?” என்று ஆத்திரம் அடங்காமல் கேட்டு விட அக்னியோ பெற்ற தாயை புழுவைப் பார்ப்பது போல ஒரு பார்வை பார்த்தான்.
‘இவ்வளவு தானா நீ’ என்று அவரை குற்றம் சாட்டிய அந்த பார்வையை எளிதாக கடந்து விட முடியவில்லை அவரால்.
“அக்னி… நான் சொல்றத…”
‘போதும்’ என்று ஒற்றை கை அசைவில் அவரது பேச்சை நிறுத்தியவன் கைகளில் வைத்திருந்த ஜெனிபரோடு திரும்பியும் பாராமல் அங்கிருந்து வெளியேறி மீண்டும் தோப்பு வீட்டிற்கே சென்று விட்டான்.
“என்னங்க இவன் இவ்வளவு பிடிவாதமா இருக்கான். நான் இவனோட நல்லதுக்கு தானே சொல்றேன். ஏன் புரிஞ்சுக்க மாட்டேங்கிறான்”ஆதங்கம் நிரம்பி வழிந்தது அவர் குரலில்.
“நீயும் கொஞ்சம் பொறுமையா பேசணும் சுபா… அவன் சின்ன பையன் டா..”
“சின்ன பையன் செய்ற காரியமாங்க அவன் செஞ்சுகிட்டு இருக்கான்”
“சுபா அவனே ஏற்கனவே குற்ற உணர்ச்சியில இருக்கான். நாம அவனுக்கு சப்போர்ட்டா இருக்க வேண்டிய நேரம் இது.”
“நீங்களும் என்னங்க புரியாம பேசறீங்க… அவன் சின்ன பிள்ளை போல ரோட்டில் கிடந்த தெருநாயை வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டு வளர்க்க சொன்னா பரவாயில்லை. ஆனா அவன் வளர்க்க ஆசைப்படுறது ஒரு குழந்தையை… அது அவனோட எதிர்கால வாழ்க்கையை எவ்வளவு தூரம் பாதிக்கும்னு அவனுக்குத் தான் புரிய மாட்டேங்குது. உங்களுக்காவது புரியுதா இல்லையா?”
“புரியாம இல்லை சுபா… கொஞ்ச நாள் போகட்டும் பொறுமையா பேசி அவனுக்கு புரிய வைக்கலாம்.”
“எனக்கு என்னவோ அவன் கொஞ்சம் கொஞ்சமா நம்ம பிடியில் இருந்து நழுவி போற மாதிரி தோணுதுங்க.”அவர் குரலில் ஒற்றை மகன் தங்களை பிரிந்து சென்று விடுவானோ என்ற தவிப்பு அப்பட்டமாய் தெரிந்தது.
“உன்னோட பதட்டமும் கோவமும் தான் இப்போ நம்ம பிள்ளையை நம்ம கிட்டே இருந்து பிரிச்சு வச்சு இருக்கு சுபா… ஒரு மாசம் பொறுத்துக்கோ. சின்னக் குழந்தையை தனியா சமாளிக்கிறது எவ்வளவு கஷ்டம்னு அவனும் அனுபவிச்சு தெரிஞ்சுக்கட்டும். அப்புறம் அவனே நம்மை தேடி வருவான்” என்று மனைவியை அவர் சமாதானம் செய்ய அக்னியோ அவர் நினைத்ததற்கு நேர்மாறாய் இருந்தான்.
ஊரில் இருந்த வயதான பெண்மணி மல்லிகாவை தனக்கு உதவியாய் வைத்துக் கொண்டவன் ஜெனிபரை நல்ல முறையில் பார்த்துக் கொண்டான். குழந்தை அழும் போதோ, அவன் மேலேயே மலம் கழித்தாலோ , வாந்தி எடுத்தாலோ கூட எந்த அருவருப்போ, கோபமோ இல்லாமல் சாந்தமாய் நடந்து கொண்டான்.
ஆரம்பத்தில் குற்ற உணர்ச்சியின் காரணமாக குழந்தையின் பொறுப்பை எடுத்துக் கொண்டவன் ஒரு கட்டத்திற்கு மேல் இயல்பாகவே குழந்தையின் மீது அதீத அன்பைக் காட்டத் தொடங்கினான்.
ஜெனிபர் எது செய்தாலும் அவனுக்கு அது அழகு தான். அவள் பொக்கை வாய் திறந்து சிரித்தாலும், அழுதாலும்,பசியில் ‘ங்கா’ சொன்னாலும் எல்லாமே அவன் கண்களுக்கு அழகு தான்.
ஜெனிபரை ஒரு வயது வரை மல்லிகாவின் துணையோடு வளர்த்தவனுக்கு பெற்றவர்களை பிரிந்து தனியே இருப்பது துன்பம் தராமல் இல்லை. ஆனால் தாயின் பேச்சு அவன் மனதில் முள்ளாய் தைத்து இருக்க, மீண்டும் அங்கே செல்ல மனமில்லாமல் அவ்வபொழுது தந்தையிடம் மட்டும் போனில் பேசிக் கொள்வான். நேசமணியும் அவனது கோபத்திற்கு மதிப்பளித்து அவனை வீட்டுக்கு அழைக்காமல் அவரே வந்து அவர்களை தோப்பு வீட்டிற்கே வந்து பார்த்து விட்டு செல்வார்.
அந்த நேரம் தான். அவனுக்கு ராணுவத்தில் இருந்து அழைப்பு வர… குழந்தையை எப்படி தனியே விட்டு செல்வது என்று வெகுவாக தயங்கினான் அக்னி. மல்லிகாவிற்கும் சில நாட்களாக உடம்பு சரியில்லாமல் போக அவரிடமும் நம்பி குழந்தையை விட்டு செல்ல முடியாத நிலையில் அவனது நிலை அறிந்து நேசமணி மகனுக்கு உதவ முன்வந்தார்.
அவருக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக தோன்றியது மீண்டும் மகனை வீட்டுக்குள் அழைக்கவும், மகன் தங்கள் மீது இருக்கும் கோபத்தை மறக்கவும்…
“நீ வேணும்னா குழந்தையை நம்ம வீட்டில் விட்டுட்டு போ தம்பி.” என்று சொல்ல அக்னியின் பார்வையோ பெற்றவரை அழுத்தமாக பார்த்தது.
“நீ நினைக்கிறது எனக்கு புரியுது தம்பி…இந்த ஒரு வருசத்துல அம்மாவும் நிறைய மாறிட்டா… உனக்காக அந்த குழந்தையையும் ஏத்துக்க இப்போ அவ தயாரா இருக்கா”
“இல்லப்பா… தப்பா நினைச்சுக்காதீங்க. எனக்கு என்னவோ குழந்தையை அம்மா கிட்டே விட்டுட்டு போகத் தோணலை” என்றான் முகத்தில் அடித்தது போல.
“அவ அன்னிக்கு ஏதோ கோபத்தில் பேசிட்டா தம்பி. அவளுக்கு உன் மேலயும் உன் எதிர்கால வாழ்க்கை மேலயும் எவ்வளவு அக்கறை இருக்குனு உனக்குத் தான் தெரியுமே. அந்த கோபத்தில் ஏதோ பேசிட்டா. அதை மறந்துடேன்” கிட்டத்தட்ட கெஞ்சினார் நேசமணி.
அக்னிக்கு தந்தை தன்னிடம் கெஞ்சுவதும் பிடிக்கவில்லை. அதே நேரம் தாயிடம் ஜெனிபரை விட்டு செல்லவும் மனமில்லை.
“இல்லைப்பா… எனக்கு என்னவோ மனசுல உறுத்தலா இருக்கு. இப்போ நான் போறதே என்னோட வேலையை ரிசைன் பண்ணிட்டு வரத் தான். அங்கே பார்மாலிட்டீஸ் முடிய எப்படியும் ஒரு வாரம் ஆகலாம். அது வரைக்கும் மட்டும் ஜெனிபரை பார்த்துக்கிட்டா போதும். நான் எனக்கு தெரிஞ்சவங்க சில பேர் கிட்டே வேலைக்கு ஆள் கேட்டு இருக்கேன். நாளைக்கு அவங்க வந்துடுவாங்க…”
“கடைசி வரை எங்களை மன்னிக்கவே மாட்டியா தம்பி” நேசமணியின் வருத்தம் நிறைந்த குரல் அவனை வெகுவாக பாதித்தது.
“அப்பா… எனக்கு உங்க மேல எந்த வருத்தமும் இல்லை”என்றான் உடனடியாக.
“சுபாவும் நானும் வேற வேற இல்லை தம்பி.”என்றவர் எப்போதும் எந்த சூழ்நிலையிலும் மனைவியை தனியே விட மாட்டேன் என்று சொல்லாமல் சொல்ல அவனுக்கு லேசாய் சிரிப்பு வந்தது.
மகன் சிரித்த அந்த நொடியே தனக்கு சாதகமாக எடுத்துக் கொண்ட நேசமணி
“அப்போ பாப்பாவை எங்க கூடவே அனுப்பி வைத்து விடுறியா” என்று கேட்டார்.
ஏனோ தந்தை அத்தனை முறை கேட்ட பிறகு மறுத்து பேச அவனுக்கு மனம் வரவில்லை அரைகுறை மனதுடன் சம்மதித்தான்.
” சரிப்பா ஜெனிபர் நீங்க கூட்டிட்டு போங்க. ஒரு வாரம் கழிச்சு வந்த உடனே மறுபடியும் தோப்பு வீட்டுக்கு கூட்டிட்டு வந்துடுவேன்” என்று சொல்ல நேசமணியின் முகம் ஒரு நொடி வாடியது.
” இந்த ஒரு வாரம் நீங்க அவளை சரியா பாத்துக்கிட்டாலுமே ஒரேடியா நம்ம பழையபடி இருக்கிறது சரியா இருக்காது. கொஞ்ச நாள் போகட்டும்” என்று சொல்ல நேசமணி ஆமோதிப்பாய் தலையாட்டினார். அவன் இந்தளவிற்கு இறங்கி வந்ததே அவருக்கு பெரிதாக தோன்றியது.
சுபத்ராவும் இப்பொழுது ஓரளவுக்கு மன தெளிவிற்கு வந்திருந்ததால் பழையபடி மகன் மீதோ ஜெனிபரின் மீதோ அவர் கோபத்தில் இருக்கவில்லை.
மகன் இல்லாமல் அவருக்கு அந்த வீட்டில் இருக்கவே பிடிக்கவில்லை. மகனின் குரலும், அவனது உருவெளித் தோற்றமும் அவ்வப்போது தோன்றி அவரை கலங்கடித்து கொண்டிருந்தது.
எனவே இந்த ஒரு வாரம் குழந்தையை நல்ல முறையில் பார்த்துக் கொண்டால் மேலும் சில நாட்களில் மகனின் கோபம் முற்றாக மறைந்து மீண்டும் பழையபடி தங்களுடன் வந்து இருந்து கொள்வான் என்று அவர் எதிர்பார்த்தார்.
அவரின் நினைப்பு ஒன்றாக இருக்க விதியோ முற்றிலும் வேறாக செயல்பட்டு மகனை மொத்தமாக குடும்பத்தில் இருந்து ஒதுக்கி வைத்து விடும் என்று அவர் எதிர்பார்த்து இருக்கவே மாட்டார். அந்த நேரத்தில் அப்படி ஒரு சம்பவம் அவர்கள் வாழ்வில் நடந்தது.
கொடியதொரு சம்பவம்…
அந்த குடும்பத்தை சேர்ந்த மூவருமே மறக்க நினைக்கும் ஒரு நாளாக அந்த நாள் இருந்தது.
மனமே இல்லாமல் ஜெனிஃபரை தந்தையின் கரங்களை கொடுத்து விட்டு ராணுவ தலைமை நிலையத்திற்கு சென்றான் அக்னி புத்திரன். அங்கே தன்னுடைய வேலையில் இருந்து ரிசைன் செய்வதற்கு தேவையான வேலைகளை முதலில் செய்து முடித்தான்.
வேலையை ராஜினாமா செய்ய வேண்டாம் என்று அவனுடைய மேலதிகாரிகள் எவ்வளவோ எடுத்துக் கூறியும் அவர்கள் கூற்றுக்கு செவி சாய்க்க மறுத்துவிட்டான் . அதற்கு ஒரே காரணம் ஜெனிஃபர் மட்டுமே. ஜெனிபரை விட்டு விட்டு ராணுவத்தில் இருந்து பணியாற்றுவது என்பது நடக்காத காரியம் என்றே அவனுக்கு தோன்றியது.
கையோடு ஜார்ஜின் வழக்கில் அவர்கள் என்ன முடிவுக்கு வந்து இருக்கிறார்கள் என்றும், அந்த கேஸ் எந்த அளவில் இருக்கிறது என்றும் பார்த்து அதையும் முடித்து வைக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தான்.
மீண்டும் மீண்டும் இது குறித்து அலைவதற்கு அவனுக்கு நேரம் இருக்காது என்பது ஒரு புறம் இருக்க, ஜெனிபர் வளர்ந்த பின் ஜார்ஜை குறித்தான இந்த அவதூறை அவள் அறிய நேர்ந்தால் அவளது மனம் வீணாக வருத்தப்படக்கூடாது என்று இப்பொழுதே யோசித்து அந்த முடிவுக்கு வந்திருந்தான்.
தன்னுடைய தந்தை ஒரு தீவிரவாதி என்று அடையாளப்படுத்திக் கொள்ள ஜெனிஃபர் எப்போதுமே விரும்ப மாட்ட விரும்ப மாட்டாள். அந்த அவல நிலை அவளுக்கு வரவே கூடாது என்று யோசித்தவன் , அங்கே இருந்து அந்த கேசை முடித்து விட தன்னால் முடிந்த எல்லா வழிகளிலும் முயற்சி செய்து கொண்டிருந்தான்.
ஜெனிபருக்காக வெகுவாக முயன்று எல்லாவற்றையும் முடிந்த அளவுக்கு சீர் செய்து விட்டு ஊருக்கு கிளம்பியவனுக்கு அன்றைய தினம் தன் வாழ்நாளில் மறக்க முடியாத கறுப்பு தினம் என்பதை அறியாமல் மன நிம்மதியுடன் ஊருக்கு கிளம்பினான்.
வீட்டின் தெருமுனையில் திரும்பும் பொழுதே அவன் வீட்டு வாசலில் குமிந்திருந்த போலீசை கண்டதும் யாருக்கு என்ன ஆனதோ என்ற பதட்டத்துடன் வேகமாக நுழைந்தவன் முதலில் கண்டது உயிரற்ற சடலமாக ஹாலில் கிடத்தி வைக்கப்பட்டு இருந்த ஜெனிபரைத் தான்.
ஆணி அடித்ததைப் போல அப்படியே நின்று விட்டான். அவன் முகத்தில் இருந்தது அதிர்ச்சி இல்லை. அதையும் தாண்டிய ஒன்று. அவன் கண்களால் தன்னுடைய பெற்றவர்களை ஒற்றை பார்வை தான் பார்த்தான். அவன் கண்களில் இருந்த குற்றசாட்டு இருவருக்கும் நன்றாகவே புரிந்தது. சுபத்ராவின் கண்களில் இருந்து கண்ணீர் நிற்காமல் வழிந்தது.
“தம்பி… நான் வேணும்னு செய்யலைப்பா… எனக்கு நிஜமா தெரியாது.”அழுதபடியே தன்னுடைய கரங்களை பற்றிய தாயை வெறித்துப் பார்த்தான் அக்னி.
“பாப்பா வீட்டுக்குள்ளே தான் விளையாடிட்டு தான் இருந்தா… அம்மா அவளுக்கு சாப்பாடு எடுத்துட்டு வர கிச்சனுக்கு போன நேரம் பாப்பா தோட்டத்துக்கு போனதை அவ கவனிக்கல போல… நானும் குழந்தைக்கு பழம் வாங்கிட்டு வர கடைக்கு போய் இருந்தேன். அப்போ ஜெனிபர்… ஜெ… ஜெனிபர்” என்றவர் அதற்கு மேல் தொடர முடியாமல் தடுமாற… அக்னியின் கரங்கள் அவரது தோளை இறுக பற்றியது.
“நம்ம தோட்டத்தில செயற்கையா அல்லி குளம் ஒன்னு இருக்கே. அழகுக்காக வச்சு இருந்ததுல குழந்தை தவறி விழுவானு நாங்க சத்தியமா எதிர்பார்க்கலைப்பா… அம்மா வீடு முழுக்க எவ்வளவோ தேடி இருக்கா… நான் வந்த பிறகு நானும் கூட தேடினேன். ஆனா நாங்க அவளை கண்டுபிடிக்கும் பொழுதே கு… குழந்தை… நம்மளை விட்டு போய்ட்டா தம்பி” என்று அவர் அழுகையுடன் சொல்லி முடிக்க அக்னியின் பார்வை பெற்றவர்கள் இருவரையுமே உணர்ச்சி இல்லாமல் பார்த்துக் கொண்டிருந்தது.
போலீஸ் அதிகாரிகளும் விசாரித்து விட்டு இது தற்செயலாக நடந்த விபத்து என்று முடித்து விட்டு ஜெனிபரின் உடலை அக்னியிடம் ஒப்படைத்தனர்.
பெற்றவர்கள் இருவரையும் ஜெனிபரின் உடலுக்கு அருகில் கூட செல்ல விடாமல் ஒருவித இறுக்கத்துடன் ஜெனிபரின் இறுதி சடங்குகளை செய்து முடித்தான் அக்னி. எல்லாவற்றையும் முடித்த பின்னும் கூட அவன் கண்ணில் ஒரு துளி கண்ணீர் இல்லை. உள்ளுக்குள்ளேயே இறுகிப் போய் விட்டான்.
பெற்றவர்களை யார் நீ என்று அந்நியப் பார்வை பார்த்தவாறு உள்ளே நுழைந்தான்.
சுபத்ராவின் மனம் மகனது அந்த பார்வையில் செத்தே போனது.
“தம்பி… என்கிட்டே பேசுடா… இப்படி யாரோ மாதிரி இருக்காதே… நான் வேணும்னு எதையும் செய்யலை… உன் பார்வை என்னை உயிரோட கொல்லுதுடா” அழுகையால் கரைந்தார் சுபத்ரா.
“நினைச்சதை சாதிச்சுட்டுட்டீங்க சந்தோசம் தானே மா” அவன் குரலில் இருந்த உச்சபட்ச வெறுப்பு மின்சாரமாய் பெற்றவர்கள் இருவரையும் தாக்கியது.
“தம்பி… கோபத்துல வார்த்தையை விட்டுடாதே…”மனைவிக்கு பரிந்து கொண்டு பேசிய தந்தையை அவன் பார்த்த பார்வையில் அவர் தானாகவே ஓரடி பின்னோக்கி சென்றார்.
“எதுக்காக இப்படி செஞ்சீங்க… நான் கல்யாணம் , குடும்பம்னு செட்டில் ஆகாம ஜெனிபர் கூடவே இருந்துடுவேன்னு தானே…” அக்னி தொடர்ந்து குற்றம் சாட்ட மகனின் வெறுப்பு நிறைந்த குரலையும், முகத்தையும் தாங்கிக் கொள்ள முடியாமல் சுபத்ரா அழுதே கரைந்தார். ஏனெனில் அவருக்கு நன்றாக புரிந்து போனது. இனி மகன் தன்னை நம்ப மாட்டான் என்று.
“இனி உங்க மகன் உங்களுக்கு சொந்தம் இல்லை. என்னோட வாழ்க்கையில் கல்யாணம், குழந்தைன்னு எதுக்கும் இடமில்லை. எது நடக்கக் கூடாதுன்னு பயந்து ஜெனிபரை கொலை செஞ்சீங்களோ… அதுதான் உங்க தப்புக்கான தண்டனை” என்றவன் பெற்றவர்களை திரும்பியும் பாராமல் சென்று விட அந்த அதிர்ச்சி தாளாமல் மயங்கி விழுந்த சுபத்ரா அதன் பிறகு படுத்த படுக்கையானார்.
