யாரோடும் சொல்லாத சொந்தம்

0
126

‘கெட்டிமெளம்… கெட்டிமேளம்…’ என்ற குரலை தொடர்ந்து அவளின் சங்கு கழுத்தில் மாங்கல்யம் ஏறுவதையே பார்த்திருந்தான் அகிலன்.

மீண்டும் ரிவைண்ட் செய்து அந்த காட்சியை பார்த்தான்.

மீண்டும்.. மீண்டும்… என பார்த்திருக்க அவன் கண்ணில் பட்டது என்னவோ?
வெட்கம் கலந்த முகத்தோடு தாலியை தலை குனிந்து வாங்கும் அவளது செம்முகம் தான்..
வெறியேறிய கண்களோடு அதை மீண்டும் பார்த்தவனின் கோபம் தலைக்கேற அந்த டேபிளை ஓங்கி குத்தினான்.
கண்ணாடி துகள்கள் சிதறியது சில அவன் கையோடும்.

சத்தம் கேட்டு பக்கத்து அறையில் இருந்து ஓடி வந்தான் கௌதம். அகிலனின் ஆருயிர் நண்பன்…

ரத்தம் கசிந்து கொண்டிருந்தாலும் அவனின் முகம் மட்டும் அவள் மீதே… அவளை கொன்று விடும் அளவுக்கு திணவேறி இருக்க

“டேய்… அறிவில்ல உனக்கு… எத்தனை தடவ தான் இந்த வீடியோவ பாப்ப… அவ தான் உன்னை விட்டுட்டு வேற ஒருத்தனை கல்யாணம் பண்ணி போயிட்டாளே.. அப்புறமும் எதுக்கு இதையே பார்த்து தொலையிற… இதுக்கு தான் உன்னை ஊருக்கு வராதனு சொன்னேன்… பேசாம மலேஷியாவிலேயே இருக்க வேண்டி தானே…” என்று அவன் கையை பிடித்து ரத்தம் துடைத்து மருந்திட்ட வண்ணம் அவன் கூற அவன் அதை காதில் ஏற்றினால் தானே.

“எனக்கு அவளை பாக்கணும்டா… ஏற்பாடு பண்ணு..” என்று கூற
“ டேய்.. லூசாடா நீ? அவ இப்போ வேற ஒருத்தன் பொண்டாட்டிடா… இதுக்கு அப்புறம் அவளை பாத்து உனக்கு என்ன ஆக போகுது?” என்று கேட்டான்.

“எனக்கு அவ கிட்ட ஒரே ஒரு விஷயம் கேக்கணும் மச்சான்.. என்னை ஏமாத்த எப்டி அவளுக்கு மனசு வந்துச்சுன்னு எனக்கு தெரிஞ்சே ஆகணும்?” அவன் குரல் தடுமாறி ஒலிக்க நண்பனை அணைத்து கொண்டான் கௌதம்.
அவனுக்கு ஒன்றும் விளங்கவில்லை.

‘என்ன செய்ய?’ என்று யோசித்து கொண்டிருந்தவன் முன் ஒரு காகித தாளை எடுத்து நீட்டினான் அகிலன்.

“இது கவிதாவோட மொபைல் நம்பர்…” என்று.
அதை வாங்காமல் அவனை முறைத்து கொண்டு,
“இது உனக்கு எப்டி கிடைச்சது?” என்று கேட்க
“அசோக் கிட்ட கேட்டேன்..” என்றான் எங்கோ பார்த்த வண்ணம்.
“அவன கொன்னா சரியா இருக்கும்.. அவன் தானே இந்த வீடியோவயும் உனக்கு அனுப்பினது… அவன் மட்டும் உனக்கு இதை அனுப்பலைனா இந்நேரம் நீ இப்படியா பைத்தியம் மாறி பேசிட்டு இருப்ப?” என்று கேட்க
இப்போது அகிலன் அவனை முறைத்தான்.

“அப்போ, அவ என்னை ஏமாத்திட்டு இன்னொருத்தனை கல்யாணம் பண்ணது உனக்கு தப்பா படலையா? அசோக் எதேச்சையா தான் இந்த வீடியோ எனக்கு சென்ட் பண்ணது.. அதுல இவளை பாத்தும் என்னால எப்டி அங்க வேலை செய்ய முடியும் சொல்லு? அதான் உடனே கிளம்பி வந்துட்டேன். அப்படியும் சீக்கிரம் வர முடியல… ஒரு வாரம் ஆகிப்போச்சு… எனக்கு ஆத்திரமா வருதுடா… அவளை நாலு கேள்வி கேட்டாவாச்சும் என் மனசு ஆறுதா பாக்கலாம்… அதுக்கு தான் அவன் கிட்ட கவிதா நம்பர் வாங்குனேன். நீ என்ன பண்ணுவியோ எனக்கு தெரியாது? நா அவளை… அந்த சஞ்சனாவை பார்த்தே ஆகணும்…” என்று கூறிவிட்டு கடகடவென மாடியேறி சென்று விட்டான்.

மறுபடியும் அவன் தலையில் கை வைத்து கொள்ள வேறு வழியில்லாமல் கவிதாவுக்கு போன் செய்தான்.

கவிதா… சஞ்சனாவின் மூத்த அக்கா.
அகிலன், கௌதம் மற்றும் அசோக்கின் உடன் பயின்றவள்.
“ஹலோ…”

“ஹலோ கவி, நான் கௌதம் பேசுறேன்…”

“ஹேய் கௌதம்… வாட் அ சர்ப்ரைஸ்… எப்டி இருக்க? என்னடா ஆளே பாக்க முடியல… இப்போ எங்க இருக்க? அகில் எப்டி இருக்கான்?” என்று ஆச்சர்யத்தோடு கேட்டாள்.

“நாங்க நல்ல இருக்கோம் கவி… நா இப்போ சென்னையில தான் இருக்கேன்… என்னோட பழைய வீடு இருக்குள்ள அங்க தான் இருக்கேன்.. ஃப்ரீயா இருந்தா வாயேன்” என்று கேட்க

அவளோ, “டேய் மதியம் அவரு லன்ச் சாப்பிட வருவாரடா… நான் ஒரு 2.30 மணிக்கு மேல் வரேன்…” என்று கூற அவன் சரியென ஒத்துக்கொண்டான்.
***

சரியாக சொன்னது போல 2.30 மணிக்கு கௌதமின் வீட்டு காலிங் பெல்லை தட்டினாள் கவிதா.
கதவை திறந்த கௌவுத்தமிற்கு இன்ப அதிர்ச்சி.

மேட்டிட்ட வயிரோடு தன் இடது கையால் வயிற்றை தாங்கி பிடித்தபடி நின்று கொண்டிருந்தாள் கவிதா.

“கவி… சொல்லவே இல்லை… வா உள்ள வா…”என்று அழைத்து சென்றான்.
ஒருபக்கம் சந்தோஷமும் மறுபக்கம் பயமும் சேர்ந்தபடி
அவளை அமர சொல்லி விட்டு குடிக்க ஜூஸ் எடுத்து வந்தான்.

“எப்டி இருக்க கௌதம்? அகில் எப்டி இருக்கான்? உங்க பிஸினஸ் எப்டி போகுது? அகிலுக்கு என்ன இந்தியா பக்கம் வரதா எண்ணமே இல்லையா?” என்று ஜூஸ் பருகிய படி அவள் கேட்க

“எனக்கு வர எண்ணம் இல்லாட்டாலும் உன் தங்கச்சி என்னை வர வச்சிட்டாளே கவி..” என்று பின்னே மாடியிறங்கியபடி கூறினான் அகிலன்.

“ஹேய் அகில், நீயும் வந்தாச்சா? ஏன்டா எருமை இதை அப்போவே சொல்ல என்ன?” என்று கௌதமை முறைத்தாள் கவிதா.

“எப்டி இருக்க அகில்?” என்ற அவளின் கேள்விக்கு

“நல்லா இல்லை கவி…” என்று பட்டென பதில் அளித்தான்.

அவனின் அந்த பதிலில் புரியாமல் விழித்தவள் அப்போது தான் அவனை முழுமையாக கவனித்தாள்.

ஷேவ் செய்யப்படாத முகம்.. எப்போதும் இருக்கும் பொலிவு கூட இப்போது இல்லை.

“என்ன ஆச்சு அகில்? ஏன் ஆளே மாறிட்ட?” குழப்பமாக அவள் கேட்க

“இன்னும் ஆக ஒன்னும் இல்லை கவி… நானா மாறலை. நான் இப்போ இப்டி இருக்க ஒரே காரணம் சஞ்சனா…” என்று அவன் கூற கேட்டவளுக்கோ இது பேரிடி.

“என்ன? ஸ்ஸ்ஸ்ச… ஞ்சனா..?” என்று தனக்குள் கூறியவள்

“ஆமா, அவளே தான்… சஞ்சனா தான்..”

“ஆனா சஞ்சனாக்கு கல்யாணம் ஆகிட்டுடா…”என்றாள் குழப்பமாக.

“ஷிட்…” என்று அவளின் கையில் இருந்த கண்ணாடி டம்ளரை தட்டிவிட்டவன் கோபமாக

“என்னை காதலிச்சு ஏமாத்திட்டு… இப்போ கல்யாணம்ன்ற பேர்ல இன்னொருத்தனை ஏமாத்துறா… நாடக்காரி… சதிகாரி…” என்று கத்தி கொண்டிருக்க கவிதா அதிர்ந்து போய் நின்றாள்.

“டேய் ஏன்டா? கவி… கவி… இங்க பாரு?” என்று கௌதம் அவளை உலுக்க தன்னிலை மீண்டவள் அகிலனை முறைத்துவிட்டு

“கௌதம், நான் கிளம்புறேன்” என்றாள் கோபமாக.

“உன்னை போறதுக்காக வர சொல்லல கவி…” என்றான் அகிலன் சோபாவில் அமர்ந்தவாறே.

“என்ன?” என்று விழிக்க

“ஆமா, உன்னை வர வச்சதே… சஞ்சனாவை இங்க வர வைக்க தான்… இப்போ நீ ஒழுங்கா அவளுக்கு கால் பண்ணி இங்க வரச்சொல்ற.. இல்லனா?…” என்று இழுக்க

“இல்லனா என்ன பண்ணுவீங்க அகிலன்? என்ன கௌதம் நடக்குற எல்லாத்துக்கும் நீங்களும் கூட்டா? என்னை கடத்துறதுக்கு தான் கால் பண்ணி வர சொன்னிங்களா?” என்று கேட்க

“கவி… நீயும் கோபபட்டா என்ன பண்றது? கொஞ்சம் யோசிச்சு பாரு… அகிலன் சஞ்சனாவை உயிருக்கு உயிரா காதலிச்சான்.. இவன் சொல்ற மாதிரி சஞ்சனாவும் இவனை விரும்பி இருக்க வாய்ப்பிருக்கு… எனக்கு என்னவோ அவங்களோட இந்த கல்யாணத்துல ஏதோ தப்பா தெரியுது? இதை இவங்க ரெண்டு பேரும் பேசி தீர்த்துக்குறது தான் நல்லதுன்னு எனக்கு படுது..” கௌதம் விளக்க தலையில் கை வைத்து அமர்ந்து கொண்டாள் கவிதா.

“பாவம்டா சின்னு…” அவள் குரல் உடைந்து ஒலித்தது.
அவளையே பார்த்த அகிலன் அவளின் கையில் இருந்த போனை பிடுங்கி அதில் இருந்து ”சின்னு” என்ற எண்ணிற்கு கால் செய்து இருந்தான்.
“டேய் அறிவில்லை உனக்கு… ஏன்டா இப்டி பைத்தியம் மாதிரி பிஹேவ் பண்ற?” என்று கோபத்தில் கவிதா கத்த அதற்குள் மறுமுனையில் போன் எடுக்கப்பட்டது.

“ஹலோ அக்கா…” என்ற தேன் குரல்.

எப்போதும் போலவே அந்த குரலில் மயங்கிய தன் மனதை விரல்களை அழுத்தி பிடித்து அவன் சமன்படுத்த
“சின்னு..” கவிதா எவ்வளவு முயன்றும் குரல் தன் வேதனையை காட்ட

“அக்கா என்ன ஆச்சு? உடம்புக்கு ஒன்னும் பண்ணல தானே… டேப்லெட் எடுத்தியா? வலி ஏதும் இருக்கா? ஏன் குரல் ஒரு மாதிரி இருக்கு?” என்று அவள் பதற இங்கோ அகிலன் ஸ்பீக்கரில் இருந்த போனை பிடுங்கி

“உன் அக்கா ரொம்பவே நல்ல இருக்கா…” என்று குரலில் மறுமுனையில் சில நொடிகள் மௌனம்.

“என்ன மேடம் போனை எப்டி கட் பண்ணலாம்னு யோசிக்கிறீங்களா?” என்ற குரலில் அவள் என்ன நினைத்தாளோ

“நீங்க எப்டி அக்கா போன்ல?” என்று தயங்கியபடி கேட்டாள்.

“ஏன் என்னை எதிர்பாக்கலையா சஞ்சனா?” என்று கேட்க

“சின்னு..” என்று கவிதா இடைப்புக அவளை வாயில் கை வைத்து அடக்கியவன்

“இதோ பாரு… இன்னும் பத்து நிமிஷத்துல நீ நான் சொல்ற இடத்துக்கு வர… இல்ல உன் அக்கா உனக்கு இல்ல…” என்று கூற அவனை முறைத்தவள்

“சின்னு, நீ வராத… இவன் என்னை ஒன்னும் செய்ய மாட்டான்.. சும்மா பூச்சாண்டி காட்டுறான். நீ வராத தங்கம்…” என்று அவள் கூற

“அக்கா, நீ பேசாம இரு.. நான் வர வரைக்கும் நீ எதுவும் பேசக்கூடாது… நான் வந்துட்டே இருக்கேன்.. புரியுதா?” என்று அதட்டி கூறினாள்.

“ குட், சீக்கிரம் வாங்க மேடம்” என்று அவனும் போனை கட் செய்ய கௌதமை முறைத்தாள் கவிதா.
அவனோ ஏதும் செய்ய இயலா நிலையில் அவளிடம் பார்வையில் மன்னிப்பை மட்டும் வேண்டினான்.
***

“அக்கா…” என்ற குரலில் விருட்டென நிமிர்ந்த கவிதா

“சின்னு, நீ ஏன் இங்க வந்த? உன்னை வராதன்னு தானே சொன்னேன்” என்று ஆற்றாமையில் அவளை அணைத்து கொண்டாள்.

“இல்ல அக்கா, அவர் கிட்டயும் நான் பேச வேண்டி இருக்கே… வந்து தான் ஆகணும்” என்று அக்காவை பார்த்து கூற அவளும் மெதுவாய் கன்னத்தை வருடி விட்டு,

“இனி எதுவும் மாறாதே சின்னு” என்று கூறினாள்.
கவிதாவின் விழி நீரை துடைத்தபடி புன்னகையை மட்டும் சிந்தினாள்.

இங்கு சோபாவில் அமர்ந்திருந்த அகிலனோ
அவளை தான் வந்த நொடியில் இருந்து இமை கொட்டாமல் பார்த்திருந்தான்.
காட்டன் புடவையில் மெல்லிய ஒப்பனையில் அப்போதும் ஒரு மனம் அவளை ரசிக்க சொல்ல
மறுமனம் அந்த கெட்டி மேளச் சத்தத்தில் அவள் வெட்கத்தோடு ஏந்தி கொண்ட அந்த நாணை தேடியது…

அவள் இன்னொருவனின் மனைவி என்பதை அவனுக்கு உணர்த்தவோ என்னவோ??
கழுத்தை ஒட்டி போட்டிருந்த ப்ளவுஸால் அவனால் ஏனோ அந்த மஞ்சள் கயிறை காண முடியவில்லை.

நெற்றி வகுட்டு குங்குமமும் இல்லாதிருக்க அவளை முறைத்தான்.

‘காதலை தான் கடைபிடிக்க தவறினாள் என்றால்?
காலம் தொட்டு வரும் கடமையை கூட கடைபிடிக்க மாட்டாளாமா?’

அவன் முகம் காட்டிய கோபத்தில் அவள் கொஞ்சமும் அசரவில்லை.
“சொல்லுங்க சார், என் கிட்ட என்ன பேசணும்?” என்று அமைதியாக அவள் கேட்க அவனுக்குள் தீ மூண்டது.

“ஏன் உனக்கு தெரியாதா?” என்றான் அவளின் விழியை கூர்ந்து பார்த்தபடி.

“வர சொன்னது நீங்க.. நீங்க சொல்லாம எனக்கு எப்டி தெரியும் சார்?” என்று கேட்க

அவளையே முறைத்து கொண்டிருந்தவன் ஒரு பெரு மூச்சுடன்
“என்னை காதலிச்சு… எனக்காக காத்திருப்பேன்னு கண்ணால் காதல் வசனம் பேசிட்டு என்னை ஏமாத்த உனக்கு எப்டி மனசு வந்துச்சு சஞ்சனா?” என்று அவன் கேட்க
இவள் முகம் ஏனோ வலியை மறைத்தது.

“அகில், நான் திரும்பவும் சொல்றேன்… சஞ்சனா உன்னை காதலிச்சு இருக்க மாட்டா… இது என் தங்கை மேல எனக்கு இருக்க கூடிய அதிக பட்ச அன்பு மேலே நான் செய்யும் சத்தியம்…” என்று கவிதா கூற அவன்
அதற்கு மறுப்பதாய் ஏதும் அவளிடம் தெரிகிறதா? என்று தேடினான்.

அவளின் பார்வை அவன் மேல் மட்டுமே…
குற்ற உணர்வு ஏதும் இல்லாமல் அவள் நிற்க அவனுக்கு தன்னை கண் முன்னே ஏமாத்தி கொண்டிருக்கும் அவளை கொல்லும் வெறி வந்தது.

“ஏய்..” அவளின் கழுத்தை நெறிக்க கௌதமும் கவிதாவும் தான் அவனை பிடித்து இழுக்க முயன்றனர்.
அவளோ சிலையாய் சமைந்து நின்றாள்.

“சொல்லுடி… நீ என்னை விரும்பல.. எனக்காக காத்து இருப்பேன்னு கண்ணால சம்மதம் சொல்லல… ரெண்டு முறை மட்டுமே பார்த்து இருந்தாலும் உன்னை தானடி என்னோட மனைவியா நினைச்சு வாழுறேன்.. உன்னால என்னை ஏமாத்த எப்டி மனசு வந்துச்சு?” என்று கேட்டான்.
அவனின் ஒவ்வொரு கேள்விக்கும் அவன் பிடி இறுக கவிதா தான்..
“அய்யோ சின்னு…” என்று அவனை பிடித்து தள்ளினாள்.
அவளின் கண்கள் விழிநீரை சிந்தியது.
அதன் காரணம் நிச்சயம் வலியில் தான்… ஆனால் உள்ளத்தில் உண்டான வலியோ?

“டேய், சும்மா சும்மா சொன்னதையே சொல்லிட்டு இருக்காத… சொல்லு… சஞ்சனா உன்னை எப்போ பாத்தா?? உனக்கு சஞ்சனா எப்டி பழக்கம்… நீ சொல்றது மட்டும் உண்மையானா நானே அவளை வெட்டி போடுவேன்… ஆனா அது உண்மையில்லை அது வேற விஷயம்… சொல்லு” என்று அவன் மேல் பாய்ந்தாள் கவிதா.

“அவளை நான் முதல் முறையா பாத்தது… சிக்னல்ல வச்சி தான்…” என்றான்.

கவிதா கேள்வியாக சின்னுவை பார்க்க அவள் ‘இல்லை’ என்பதாய் தலையசைத்தாள்.

நினைவுகளில் இருந்து,

அன்று…
மந்திரியின் வருகைக்காக நிறைய இடங்களை ட்ராபிக் ஹோல்ட் பண்ணி வைத்திருந்தது.

அப்படி ஒரு சிக்னலில் காத்து கொண்டு இருந்தான் அகில்.
அருகில் ஒரு கார் வந்து நிற்க அதில் இருந்த குழந்தை அவனை பார்த்து அழகாய் சிரிக்க அவனும் அதோடு சேர்ந்து சிரித்து.. செய்கையில் ஏதோ பேசி கொண்டிருந்தான்.
திடீரென அந்த குழந்தை தன் தந்தையிடம் ஏதோ காட்டி அழுகவும் அவர் அதை மறுப்பதாய் தலையசைக்க மேலும் அடம் பிடித்து அழுகையை தொடர வேறு வழியின்றி அவர் காரை ஓரமாக நிறுத்தி விட்டு வெளியே வந்து ரோட்டை கடந்தார். அவரோடு அந்த குழந்தையும் வந்தபடி இவனை பார்த்து சிரித்தது.

அவன் அவர்களையே பார்த்திருக்க குழந்தையின் தந்தை ஒரு ஷாப்பிற்குள் நுழைந்தார்.

‘ஐஸ்க்ரீம் கேட்டு அடம்பிடித்து இருப்பான் போல’ மெலிதாய் சிரித்தபடி பார்வையை திருப்ப அவன் கண்களில் பட்டாள் அவள்.
வெள்ளை நிற யூனிபார்மில் கல்லூரி மாணவர்கள் சிலர் போக்கு வரத்து விதிமுறைகள் பற்றி விழிப்புணர்வு நடத்தி கொண்டிருந்தனர்.
அவன் விழி அவளை ரசனையோடு பார்க்க காரணம்?
சற்று நேரத்திற்கு முன் அவன் அந்த குழந்தையிடம் என்ன விளையாட்டு காட்டினானோ அதையே தான் அவளும் பிரதிபலித்து கொண்டிருந்தாள்.
அவனின் மூக்கு நுனியை பிடித்து இப்படியும் அப்படியும் ஆட்டி நெற்றியை முட்டி சிரித்தவள் குழி விழும் அவன் கன்னத்தில் இரு விரல்களையும் வைத்து திருகினாள்.
அதுவே அவளை மேலும் பார்க்க தூண்டியது.
ட்ராபிக் விலக அவசரமாக இந்த சாலையில் இருந்து அந்த பக்கம் திரும்பி வர அவள் அவர்கள் வந்த பஸ்ஸில் ஏறி கொண்டிருந்தாள்.
யாரோ ஒரு பெண் அழைப்பது மட்டும்,
“சஞ்சனா உன்னோட பேக்…” என்று சொல்லி கொண்டே பின்னால் ஏறியது காதில் விழ மனதிற்குள் சொல்லி கொண்டான்.
“சஞ்சனா…” என்று.

நிஜங்களில் இன்று:

அகிலன் சொல்ல கேட்டு கொண்டிருந்த சின்னுவின் முகம் வேதனையில் சுருங்க விழியும் நீரை சிந்தியது.

“சின்னு..” கவிதா ஆறுதலாக அவள் கை பற்றினாள்.

இருவரையும் பார்த்த அகிலன் மேலும் தொடர்ந்தான்.

“மொத்தமே ரெண்டு தடவை தான் பார்த்தேன்…
மறுபடியும் அவளை அவளோட காலேஜ்ல பாத்தேன்… அன்னைக்கு தான் உன்னையும் பார்த்தது… இவ உன் தங்கைன்னது எனக்கு சர்ப்ரைஸ் தான்.”

நினைவுகளில் மீண்டும்:

கௌதம் அப்போது மலேசியாவில் இருக்க இவன் மட்டும் தான் சிறு வேலை விஷயமாக தங்களின் சென்னை கிளைக்கு வந்திருந்தான்.

அவளை அகிலன் சந்தித்த நாளில் இருந்து மூன்று நாட்கள் கழித்து..
அன்று…

தோழியரோடு ஒன்றாய் குழாமிட்டு கொண்டிருந்தவளை ஹெச்.ஓ.டி. அழைப்பதாய் செய்தி வர அவரை தேடி சென்றாள்.

“காலேஜ் டே ஃபங்க்ஷன்க்கு எல்லாம் ரெடி பண்ணிட்டீங்களா… வேற ஏதும் விட்டு போகலயே” என்றார் அவர் இவளையும் மாணவர்களில் ஒருவனையும் பார்த்து.

“எல்லாம் முடிஞ்சது சார்…” என்றனர் இருவரும்.

“சார், நான் கேட்டது?” என்று இவள் இழுக்க

“ரீ யூனியன் ஃபங்க்ஷன் தானேமா… ப்ரின்ஸி மேம்ட்டசொல்லி இருக்கேன்… அடுத்த முறை பாத்துக்கலாம்னு சொல்லிட்டாங்க… இப்போ பக்கத்துல வச்சிக்கிட்டு ஒன்னும் பண்ண முடியாது…” என்று கூற இவளுக்கு வருத்தம் தாளவில்லை.

அவள் படிக்கும் கடைசி வருடம் இது.
இனி விட்டால் இவளும் தான் பழைய மாணவியாக இந்த கல்லூரிக்குள் வர வேண்டும்.
‘அதற்கு முன்னே தன் சீனியர்களை அழைத்து விழா ஏற்பாடு செய்யலாம்’ என்று எண்ணி இருந்தாள்.
“சரி சார்” என்று கூறியிருந்தாலும் அவளின் முக வாட்டம் கண்ட அருகில் இருந்தவன்,

“ஹேய் சின்னு, இதுக்கு போய் பீல் பண்ற… வேணும்னா ஒன்னு செய்வோமா? நம்ம கிட்ட இருக்க டிக்கெட்ஸ் வச்சு அட்லீஸ்ட் ஒரு பத்து சீனியர் மட்டும் இன்வைட் பண்ணலாம் ஓகேவா?” என்று கேட்க

வேகமாக சரியென தலையாட்டினாள்.

“சின்னு… நிஜமாவே நீ சின்ன பிள்ளை தான் போ…” என்று அவன் தலையை தட்டி சிரிக்க
“போடா…” என்று அவளும் சிரித்தாள்.

மீண்டும் நட்போடு வந்து அமர்ந்தவள் தங்கள் எண்ணத்தை கூற
ஒருவருக்கு இலவச 5 டிக்கெட் பாஸ் வீதம் என அவர்கள் பத்து பேரும் தங்கள் பாஸை தருவதாக கூற 50 சீனியர்களை வரவேற்க போதுமானதாக இருந்தது.

எப்படியோ? யார் மூலமோ? ஒரு டிக்கெட் அகிலனின் கைக்கு வந்திருந்தது. அவனுக்கும் அதில் ஏக குஷி…
அன்று அவளை காண முடியாமல் போகும் போது அவர்களின் கல்லூரி வாகனம் பார்க்க அது தன் கல்லூரி தான் என்பதில் திருப்தி அடைய
‘அவளை எப்படியும் கண்டு கொள்ளலாம்’ என்று எண்ணி கொண்டிருந்தவன் கையில் அதற்க்கு வகை செய்வது போன்று வந்து இருந்தது அந்த டிக்கெட்.
***

அவசரமாக கிளம்ப எண்ணினாலும் கழுத்தை முட்டிய வேலைகளில் இருந்து விடுபட்டு தாமதமாகவே வந்து சேர்ந்திருந்தான்.

மாணவர் கூட்டம் அங்கொன்றும் இங்கொன்றுமாய் வட்டமிட்டு அமர்ந்தபடி தங்கள் கல்லூரி நினைவுகளை பற்றி பேசி சிரித்து கொண்டிருக்க
கவிதாவின் அருகில் அமர்ந்து கொண்டு மேடையில் பாடி கொண்டிருப்பவர்களை ரசித்த வண்ணம் பார்த்திருந்தாள் சின்னு.

“எவ்ளோ அழகா இருக்கு… அவளும் வந்திருக்கலாம்?” என்று ஒருத்தி கூற
“உடம்பு சரியில்லாதவ எப்டி வருவா? விடு.. பாத்துக்கலாம்” என்று கவிதா கூறி கொண்டிருக்கும் போதே அருகில் நிழலாட திரும்பி பார்த்தாள்.

“ஹேய் அகில், எப்டி இருக்க? இங்க தான் இருக்கியா? கௌதம் வரல… ஏன்டா படிச்சு முடிச்ச உடனே ரெண்டு பேரும் காணாம போயிட்டிங்க?” என்று கவிதா கேட்க

“நாங்க நல்ல இருக்கோம் கவி… ஒரு வேலை விஷயமா வந்தேன்… நம்ம காலேஜ் ஃபங்க்ஷன் சொல்லி இன்வைட் பண்ணாங்க… அதான் உங்களை எல்லாம் பாக்கலாம்னு வந்தேன்… நீ எப்டி இருக்க?” என்றான் நொடிக்கு ஒருமுறை தன்னவளை ஏறிட்டு பார்த்தபடி.

அவனுக்கும் ஒரு இருக்கையை கொண்டு வர அவர்களோடு அமர்ந்து கொண்டான்.
சின்னுவோ அவன் நொடிக்கு ஒரு தரம் தன்னை ஓர விழி கொண்டு பார்ப்பது புரிய அவனை தவிர்த்து தோழியோடு குனிந்து அவள் காதில் கிசுகிசுத்து கொண்டிருந்தாள்.

“அப்புறம் கவி, உன்னோட பிரண்ட்ஸ எல்லாம் எனக்கு இன்ட்ரோ பண்ணி வைக்க மாட்டியா?” என்று கேட்க

அவள், ‘களுக்’ என்று சிரித்து தனக்குள் அடக்கி கொண்டாள்.
“என்னது? இதுங்க என்னோட பிரண்ட்ஸா? ஒரு மூஞ்சியாவது நம்ம செட் மாதிரி இருக்கா? ஏன்டா டேய்?” என்று கவிதா கூற அவனுக்கும் அது புரியாமல் இல்லையே…
‘வேறெப்படி தன்னவளோடு பேசுவதாம்?’

“ அகில், இது என் தங்கை… இதுங்க எல்லாம் இவளோட தோழிங்க…” என்று கூறும் போது ஒருவன் சின்னுவின் அருகில் வந்து,

“சின்னு, அர்ஜெண்ட் இங்க வா… சீக்கிரம்…” என்றபடி அவளின் கை பிடித்து அழைத்து சென்றான்.
ஒரு கணம் திரும்பி அகிலின் பார்வையை அவள் காண அவன் முகத்தில் அப்படி ஒரு கோவம்…

‘எதற்காக இந்த கோவம்? இவன் எனக்கு யார்? என் கையை என் நண்பன் பிடித்தால் அதற்கு இவனுக்குள் ஏன் கோவம் வர வேண்டும்?’ என்று திடுக்கிட்டு எண்ணி கொண்டாள்.
அதை விட அதிர்ச்சி…
‘அவன் கோபப்பட்டால் நான் ஏன் இவன் கையை விலக்கி கொண்டேன்?’ என்று தான்.

மேசை மேல் இருந்த கூலிங் க்ளாஸ் வழியே தன் பின்னால் நின்று கொண்டிருந்த அவளை பார்த்து ரசித்து கொண்டே கவிதாவின் கேள்விக்கு ‘ம்ம்’ கொட்டி கொண்டிருந்தான் அகிலன்.

இங்கு இவளோ,
‘கூடாது…’ என்று மூளை தடுத்தாலும் விழியோ அவனை ஓர பார்வை பார்த்தது.
இருவரின் நடுவிலும் ஏதோ ஒரு உணர்வு உறவாய் விரிய அதை இன்னதென்று யோசிக்க தோணாமல் அந்த நொடியை ரசித்து கொண்டது மனம்.
தோழனோடு சென்ற வேலையை முடித்து கொண்டு கவிதாவின் அருகில் வந்து அமர்ந்தாள்.
ஏனோ, அவன் முகம் ஏறிட்டு பார்க்க தயக்கம்.
நிலம் பார்த்து குனிந்து கொண்டாள் அவள்.
“டேய், அடுத்த மாசம் 9 எனக்கு கல்யாணம்டா…” என்று கவிதா கூற

“ஹேய் சூப்பர், அட்வான்ஸ் வாழ்த்துக்கள் கவி..” என்று அவன் கூற

“தேங்க்ஸ்… நீ கண்டிப்பா வரணும் சொல்லிட்டேன்…” என்று கூற

“சாரி கவி, நான் இன்னைக்கு நைட்டே கிளம்பியாகனும்…” என்று கூற அவள் முறைத்தாள்.

“கொன்றுவேன்… எனக்கு அதுலாம் தெரியாது… நீ வர அவ்ளோ தான்…” என்று கூறினாள்.

தான் கிளம்புவதாய் சொன்னதும் சடக்கென நிமிர்ந்த தன்னவளின் விழியை பார்த்து ரசித்து கொண்டே,

“அப்படினா… அதுக்கு நீ ஒரு வருஷம் காத்து இருக்கணும்… என்ன காத்து இருப்பியா?” என்று கவிதாவிடம் கேட்டாலும்
அந்த கேள்வி என்னவோ அவளுக்கு தான்…
‘தனக்காக காத்து இருப்பாயா?’ என்ற மறை பொருளில்.

தன்னிச்சையாக அவளின் தலை அசைந்து விழி சரியென்று சிமிட்டி கொண்டது…
அது அவளுக்கே ஆச்சர்யம் தான்…
‘ஏன் இப்படி தலையசைத்தோம்?’ என்று.
அவளின் செய்கையில் வானில் பறந்தவன் அதே சந்தோஷத்தோடு மலேசியாவுக்கு பறந்தான்.

நிகழ்வுகளில் மீண்டும்:

அகிலன் கூறுவதை மெல்ல விழி நீரோடு கேட்டு கொண்டிருந்தவள் அவன் கூறி முடிக்கவும் பெரிய கேவலோடு முகத்தை மூடி அழ தொடங்கினாள்.

“சின்னு…” என்று அழைப்போடு கவிதா அவளின் தோளை பற்ற

“அக்கா…” என்ற அழுகையோடு அவள் மேல் சரிந்தாள்.

என்ன தான் அவள் மேல் கோவம் இருக்குமானாலும் அவளின் அந்த அழுகை அவனை ஏதோ செய்ய

“சஞ்சனா…” என்று அழைத்தான் இதமாக.
அவ்வளவு தான் அடுத்த நொடி அவனை பாய்ந்து அடிக்க தொடங்கினாள்.

“யூ இடியட்… பேசாத… இனியொரு வார்த்தை பேசாத… உன்னால தான்… எல்லாமே உன்னால தான். காதலிக்குற பெண்ணுக்கும் மத்த பெண்ணுக்கும் வித்யாசம் தெரியாது உனக்கு? அவளை காதலிச்சிட்டு… என் கிட்ட வந்து எனக்கும் ஆசையை வளர்த்து விட்டு… நீ காணாம போனதும் இல்லாம…
இப்போ வந்து நாங்க ஏமாத்துனோம்னு சொல்றியா? என்ன என்னை கொல்லனுமா? கொல்லுடா வந்து கொல்லு… கொன்னு புதைச்சிட்டு போ… உன்னை இத்தனை நாளா மனசுக்குள்ள சொந்தம் கொண்டாடுனேன்ல எனக்கு இது தான் தண்டனை…” என்று மாறி மாறி அவனை அடித்து கொண்டே கூறியவளை கவிதா தான் தடுத்தாள்.

“அக்கா… என்னால முடியல அக்கா.. இவரை எனக்கு மட்டும் சொந்தம்னு நினைச்சிட்டு வாழ்ந்து இருந்தேனே? இவர் காதல் எனக்கு சொந்தமானதுன்ற கர்வத்தோட உன் கிட்ட சொன்னேனே? எதுவுமே எனக்கு சொந்தமானது இல்ல அக்கா… அவள்ன்னு நினைச்சு என் கிட்ட….” மேலும் பேச முடியாமல் கவிதாவை கட்டி கொண்டாள்.

“சின்னு…??” என்ற அழைப்போடு அவளை கட்டி கொண்டவள் அகிலனை முறைத்தாள்.
அவனோ பிரமை பிடித்தவனாய் நின்று கொண்டிருந்தான்.
அவள் சொல்வது செவிக்கு சென்றாலும் சிந்தைக்குள் செல்லாமல் சிலையாக நின்றிருந்தான்.

“ச… சஞ்சனா? என்ன சொல்ற??” என்ற அதிர்வோடு அவன் அழைக்க
“முட்டாள், இவ சஞ்சனா இல்லைனு சொல்றா… இவ சாதனா… ரெண்டு பேரும் இரட்டை பிறவிங்க…” என்ற இடியை அவன் தலையில் இறக்கினாள் கவிதா.

“என்ன?” என்ற அதிர்ச்சி கௌதமிற்கும் அகிலனுக்கும்.


எந்த தைரியத்தில் அன்று அவனிடம் ‘காத்திருப்பேன்’ என்று கூறினாளோ அதே தைரியத்தோடு தன் வீட்டில் பார்த்த வரன்களை “வேண்டாம்” என தட்டி கழித்தாள் சாதனா.

ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு காரணம் கூறினாலும்
‘உண்மை காரணம் அதுவாய் இருக்க வாய்ப்பில்லை?’ என்று எண்ணிய கவிதா இவளிடம் அதட்டி உருட்டி கேட்க கூறியிருந்தாள் அவன் மீதான தன் காதலை.
அவனுக்கான தன் காத்திருப்பை.

முதலில் பலமாய் மறுத்தாள் கவிதா.
அவள் ஒன்றும் காதலுக்கு எதிரி இல்லை. ஆனால் இயன்றவரை நட்புக்களிடம் விசாரித்து பார்க்க அகிலனை பற்றிய தகவல் ஏதும் கிடைக்கவில்லை.
‘அவனுக்காக காத்திருந்து தன் தங்கை எதிர்காலத்தை தொலைத்து விட கூடாதே’ என்ற பயம் தான்.
ஆனாலும் சாதனாவின் உறுதி அவளை ப்ரமகிக்க செய்தது.
‘இத்தனைக்கும் இவர்கள் ஒன்றும் மற்றவர்கள் போல காலம் காலமாக பழகிய காதலர்கள் இல்லையே?
பழகிய காதலே பாழும் கிணற்றில் விழும் காலம் இது…
இதில் தன் தங்கையின் காதல் தான் கை கூடுமா?
இது சாத்தியமா?’ என்று பலவாறு உழன்று கொண்டாள்.

“அதான் இவளுக்கு இப்போ கல்யாணத்துல விருப்பம் இல்லைனு சொல்றாளே… விடுங்க அப்பா… உங்க கூட கொஞ்ச நாள் பிஸ்னஸ்க்கு உதவியா இருக்கட்டும்… சஞ்சனாவுக்கு வேணா கல்யாணம் பண்ணுவோம்… ஏற்கனவே பேசி வச்சாச்சு தானே… கல்யாணத்தை முடிப்போம்…” என்று தன் வீட்டிலும் சாதனாவிற்கு சாதகமாக பேசி வைத்திருந்தாள்.

ஆனால் இப்போது நடந்து கொண்டிருப்பது என்ன?
இவன் சொல்வதை வைத்து பார்த்தாலும் சஞ்சனாவை இவன் மட்டுமே பார்த்திருப்பான் போல…
மறுமுறை சாதனாவை சஞ்சனா என்று எண்ணி கொண்டு
இவ மனசுல காதலை ஏற்படுத்தி இப்போ காயத்தையும் உண்டு பண்ணிட்டானே…’ என்று எண்ணியவள்

‘இவனை மட்டுமே நம்பி இருந்த இவளோட நிலை இனி??’ என்ற கேள்வியாக இருவரையும் பார்க்க
அவன் என்ன நினைத்தானோ?
முகம் மூடி அழுது கொண்டிருந்த சாதனாவின் கையை பிடித்து இழுத்து சென்றான்.

“டேய்…” என்று கவிதாவின் அழைப்பில் நின்றவன்

“கவி, எனக்கு ஒரு அரை மணி நேரம் டைம் கொடு… உன் தங்கையை உன் கிட்ட பத்ரமா ஒப்படைப்பேன்… என் மேல நம்பிக்கை இருக்குல்ல…” என்று கூறிவிட்டு பதிலுக்கு கூட காத்திராமல் அவளை அழைத்து வந்திருந்தான் அருகில் இருக்கும் பூங்காவிற்கு.

சாதனா சொன்னது போல… ‘தன் மேல் தான் தவறா? அவசரப்பட்டு ஒரு பெண்ணுக்கு ஆசையை வளர்த்து விட்டோமோ?’ என்று ஒரு மனம் கூற
அவனின் காதல் கொண்ட மனமோ,

‘இவளே கூறியது போல… மத்த பெண்ணுக்கும் என் காதலிக்கும் வித்தியாசம் தெரியாதவன் இல்லயே நான்…’

“சாதனா, எனக்கு தெரியும் என் காதலி யாருன்னு?
இப்போ நான் சொல்றது எல்லாமே உனக்கான என் தன்னிலை விளக்கம் மட்டும் தான்…
நீ சொன்னது மாதிரி காதலிக்கும் மத்த பெண்களுக்கும் வித்தியாசம் தெரியாதவன் இல்லை நான்.
உன்னை போல ஆயிரம் பேர் வந்தாலும் உன் அருகில் எனக்கு தோன்றும் ஒரு உணர்வு… அது யார்கிட்டயும் எனக்கு தோணாது.
நீ இப்போ என் வீட்டுக்கு வரும் போது கூட வந்த உணர்வை நான் தான் “மாற்றான் மனைவி” என்று சமாளிச்சேன். அதனால எனக்கு குழப்பம் இல்லை.
இப்போ உன்னோட குழப்பம் ‘சஞ்சனா’ ன்ற பேர்ல தான் இருக்கு.

உன்னை அன்னைக்கு பாத்துட்டு ரோட் க்ராஸ் பண்ணி வர சமயம் பஸ் கிளம்பிடுச்சு… தூரத்துல வரும் போது தான் கேட்டது.
யாரோ உன்னை சஞ்சனான்னு கூப்பிட்டது.
அது தான் உன் பேர்னு நான் நினைச்சது தான் என்னோட முட்டாள் தனம்.
என் யூகம் சரின்னா? அன்னைக்கி சஞ்சனாவோட பேக்கை நீ வந்து வாங்கிருக்கணும்” என்று கூற
இவள் சிந்தனையிலும்,
அன்று சஞ்சனா ‘கால் வலிக்கிறது என்று சொல்லி இருக்கையில் அமர்ந்து விட்டதாய் கூறி தன்னை வாங்கி வருமாறு பணித்தது’ வந்து போனது.
“காலேஜ்ல உங்க ரெண்டு பேரையும் பக்கத்துல பக்கத்துல பார்த்திருந்தாலும் எனக்கு குழப்பம் வந்து இருக்காது… அன்னைக்கு உன்னை மட்டுமே தான் நான் பாத்தது. சஞ்சனா உன் பக்கத்துல இருந்து இருந்தாலும் என் கண்ணுக்கு தெரிஞ்சு இருக்க மாட்டா” என்று கூற
‘அன்னைக்கு சஞ்சனாக்கு உடம்பு சரியில்லை. அதனால் அவன் அவளை பாக்க முடியல…’ என்று எண்ணினாள்.

அப்படியானால் இவன் கூறுவது போல

‘நான் தானா? இவன் காதலி நானா? இவன் காதல் எனக்கு சொந்தமானதா?’ என்று எண்ணும் போதே தன் காதல் மீண்டு விட்ட நிறைவு நீராய் பொழிய
அவளின் விழி நீரை துடைத்து விட்டவன் அவளை தோளோடு சேர்த்து அணைத்து கொண்டான்.
இருவருக்குள்ளும் தங்கள் காதல் தங்களுக்கே சொந்தமான நிம்மதி.

நிறைவின் உலகில் வலம் வர அமர்ந்து இருந்தவர்களிடம் ஓடி வந்தனர் இரு இளம் சிட்டுக்கள்.
ஏற்கனவே மனம் பூரிப்பில் இருந்தவர்கள் அவர்களை கண்டதும் மேலும் பூரிப்போடு இருவரும் ஒரு சேர அவர்களை பற்றி இழுத்து
மூக்கை பிடித்து திருகி நெற்றியை முட்டி கன்னம் கிள்ளி சிரித்தனர்.

நேரம் கரைந்து கொண்டிருக்க அகிலன் தான் மனமில்லாமல் கூறினான்.

“டைம் ஆச்சு பேபி, உங்க அக்கா தேடுவா… வா போகலாம்” என்று.

*** 

இருவரும் கை பற்றிய படி உள்ளே வருவதை கண்ட கவிதாவும் கௌதமும் புரியாமல் விழிக்க அவர்களுக்கு புரியும்படி விளக்கினான் அகிலன்.

முழுதும் கேட்டு கொண்ட கவிதாவிற்கு தான் சந்தோஷம்.
‘எப்படியோ? தங்கை வாழ்க்கைக்கு விடிவு வந்ததே’ என்று.

அகிலன் கவிதாவிடம்,

“உங்க வீட்ல சொல்லி சீக்கிரம் நல்ல நாளா பாரு கவி..” என்று கூற
இவளோ, “எதுக்கு?” என்றாள் குறும்பாக.

“ம்ம், எங்க கெட்டிமேள சத்தத்தை கேக்குறதுக்கு தான்…” என்று வெட்கத்தோடு கூறினான் அகிலன்.

அந்த வெட்கத்தில் தன்னையும் இணைத்து கொண்டாள் சாதனா.

     **முற்றும்**
Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here