ரத்தினம்

0
139

நான் வசிக்கும் வீதியில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தவறாமல் கேட்கும், ‘அம்மா…’ என்னும் கரகரப்பான குரலும், ‘டிங் டிங்’ எனும் மணியோசையும். எனக்கு விவரம் தெரிந்த நாட்களிலிருந்தே இவ்விரண்டும் விடுப்பு எடுத்ததில்லை, புயலடித்தாலும் சரி, பனி சூழ்ந்தாலும் சரி. இத்தனை நாட்களாக நானும் இக்குரலை குறிப்பாய் கவனித்ததில்லை. ஆனால் இன்று ஏனோ கவனிக்கத் தோன்றியது. பதினொன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் நான்… விமல். திடீரென என்கவனத்தை ஈர்த்த அக்குரல்… ‘குப்பை வண்டி’ தாத்தா – இவ்வாறே நான் அவரை அறிந்து வைத்திருந்தேன்.

வண்டியில் குப்பையைக் கொட்டிவிட்டு, மாடிப்படியருகே கூடையை கவிழ்த்துவிட்டு உள்ளே நுழைந்த அம்மாவிடம் கேட்டேன், “அந்த தாத்தா பேரென்னமா?” என்று.

“எந்த தாத்தா?”

“அந்தக் குப்பை வண்டி ஒட்டுறவர்”

“அவரா…” என்று அலட்சியமாய் சிரித்த என் அம்மா, நெற்றி சுருங்கி சில நொடிகள் யோசித்துவிட்டு, “தெரியலையே டா!” என்றாள் பரிதாபமாய் முகத்தை வைத்துக்கொண்டு.

“இத்தனை வருஷமா நம்ம காலனியில குப்பை வண்டி தள்ளிட்டு வரார். ஆனா, அவர் பேர தெரிஞ்சுக்காம விட்டுட்டேனே. பக்கத்து வீட்டு மாமிக்கு தெரிஞ்சிருக்கும், இல்லை எதிர்த்த வீட்டு மேரி அக்காவுக்கு தெரிஞ்சிருக்கும்…” என்றாள், அவள் முகத்தில் சொட்டிக்கொண்டிருந்த பரிதாபங்கள் மறையும்முன்.

தினமும் பள்ளி முடிந்து வீடு திரும்பியதும் முதல் வேலையாக என் நண்பர்களோடு என் சைக்கிளிலிருந்து இறங்காமல் அரைமணி நேரம் அரட்டை அடித்துவிட்டுத் தான் வீட்டினுள்ளே நுழைவேன். உள்ளே நுழைந்ததுமே என் வாயில் தீனிகளைத் திணித்துவிட்டு டியூஷனுக்கு துரத்தி விடுவாள் என் அம்மா. என் நண்பர்களின் இல்லத்திலும் இதே கதை தான். நாங்கள் பஞ்சபாண்டவர்கள் – கிரி, ராபர்ட், ‘முறுக்கு’ முருகன் (எப்பொழுதும் அவன் தின்றுகொண்டே இருப்பான்… அதிலும் குறிப்பாக அவனுக்கு நெய் முறுக்கு என்றாலே அலாதி பிரியம்… அதனாலே அவன் அன்போடு ‘முறுக்கு’ முருகன் என்று அழைக்கப்படுகிறான்!!), அப்துல் மற்றும் நான். நாங்கள் ஏறக்குறைய 14 முதல் 17 வயதிற்குட்பட்டவர்கள். நாங்கள் அடிக்கும் ரகளைகளைக் கண்டு, பஞ்ச ‘பூதங்கள்’ என்றும் எங்களுக்கு செல்லப்பெயர் வைத்துள்ளனர், எங்களால் இம்சிக்கப்பட்டவர்கள்.

அன்றும் அதே போல் நாங்கள் ஐவரும் பள்ளிச்சீருடையில் கதையடித்துக்கொண்டிருந்தோம். எங்களது தெரு துவக்கத்தில் இருந்த வீட்டின் வாயிலில் அவ்வீட்டிற்கு புதிதாகக் குடிவந்திருந்த கருப்புக்கண்ணாடிக்காரர் கத்திக்கொண்டிருக்க, இருவர் சமாதானம் பேச, ‘குப்பை வண்டி’ தாத்தாவும் அங்கே நின்றிருந்தார்.

“என்னடா பிரச்சனை?” என்றான் அப்துல்.

“அவர் வீட்டு காம்பவுண்ட் பக்கத்துல முனிசிபாலிட்டி காரன் குப்பைத்தொட்டி வச்சுட்டானாம்…” என்றான் கண்ணாடிக்காரரின் பக்கத்து வீட்டு முருகன்.

கண்ணாடிக்காரர் கோபமாய் கையாட்டி பேச, மற்ற மூவரும் ஏதோ கூறிக்கொண்டிருக்க, சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் எட்டிப்பார்க்கத் தொடங்கினர். கண்ணாடிக்காரரின் கையை தாத்தா பிடிக்க, வெடுக்கென கையை உறுவிக்கொண்டவர், தாத்தாவின் நெஞ்சின் மீது கை வைத்துத் தள்ள, கீழே விழச்சென்றவர் மற்ற இருவரின் பிடியால் சுதாரித்துக்கொண்டார்.

“என்ன சார் வயசானவர் மேல கை வைக்கறீங்க?” என்று அவ்விருவருள் ஒருவர் குரல் உயர்த்த, வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவர்கள் அவ்விடம் குழுமத்தொடங்கினர். பஞ்ச பாண்டவர்களும் அங்கே ஆஜர் ஆனோம்.

“என்ன சார் நீங்க? பேசிக்கிட்டு இருக்கும்போதே அவர் மேல கை வைக்கறீங்க?” என்றார் எங்கள் தெருவின் முந்தைய தலைமுறை பஞ்ச பாண்டவர்களில் ஒருவர்.

“பின்ன என்ன சார்? போயும் போயும் குப்பை அள்ளுறவன் என் மேல கை வைக்கறதா?”

கண்ணாடிக்காரர் முகத்தை சுழித்துக்கொண்டார்.

“குப்பை அள்ளுனா என்ன? அவரும் மனுஷன் தான்.”

“தராதரம்’னு ஒன்னு இருக்கு…”

“பிரச்சனைய சுமூகமா பேசி முடிக்காம கைய ஓங்குற நீங்க தராதரம் பத்தி பேசறீங்களா? படிச்சவர் மாதிரி நடந்துக்கோங்க…”

“ஆமா நான் படிக்காத காட்டான் தான். சார் ஜில்லா கலெக்டர்’னா இந்தக் குப்பைத்தொட்டிய உங்க வீட்டு வாசல்ல வச்சு அழகு பார்க்க வேண்டியது தானே… அடுத்தவனுக்கு அட்வைஸ் மட்டும் பண்ண வந்துடுங்க…”

கண்ணாடிக்காரருக்கு பதில் கூற முடியாமல், தாத்தாவுடன் நின்றிருந்த இருவரை நோக்கி, “இங்க குப்பைத்தொட்டிக்கு என்ன சார் அவசியம்? ரெண்டு நாளைக்கு ஒரு தரம் தவறாம தாத்தா வந்து குப்பையெல்லாம் கலெக்ட் பண்ணிடறார். இது தேவை இல்லை சார்…” என்க, அவர்களோ, “சார், நாங்க எங்க வேலையைத் தான் செய்யறோம்” என்றனர் கறாராக.

“அய்யா, நான் பேசலாமா?” என்றார் தாத்தா. அனைவரும் அவரை நோக்க, “இந்தக் குப்பைத்தொட்டிய சுத்தமா வச்சுக்கறது என் பொறுப்பு. ரெண்டு நாளைக்கு ஒரு தரம் நான் இங்க வரும்போது தொட்டியையும் சுத்தம் பண்ணிடறேன்…” என்றவர் கண்ணாடிக்காரரைப் பார்க்க, அவரோ “முடியாது!” என்றார் விடாப்பிடியாக.

“சார், பிரச்சனை வேண்டாம் எடுத்துட்டு போயிடுங்க…” என்று தெரு வாசிகள் ஒரே குரலாகக் கூற, ‘சரி’ என்று மண்டையாட்டிவிட்டுச் சென்றனர்.

நாட்கள் பத்து உருண்டோடியது, ஆனால், தொட்டி மட்டும் அகற்றப்படவே இல்லை. தாத்தா தெருவிற்கு வரும்பொழுதெல்லாம் கண்ணாடிக்காரர் அவரிடம் சண்டை இழுக்கவே ஜரூராக வாயிலில் காத்திருந்தார். தாத்தாவோ சிறிதும் கோபமின்றி அதிகாரிகளிடம் பேசுவதாகக் கூறிச் சென்றார்.

அன்று வாயிலில் குப்பை வண்டி மணி சத்தம் கேட்டதும் என் அம்மா, “இன்னைக்கு அந்தக் கண்ணாடிக்காரன் என்னென்ன பேச்செல்லாம் பேசப்போறானோ?!” என்று என் அப்பாவிடம் முனுமுனுத்தபடி வீட்டு வாயிலில் சென்று நின்றாள். எனக்கும் ஆர்வம் தாளாமல் எனது பிசிக்ஸ் புத்தகத்தை மேஜை மேலே கவிழ்த்துவிட்டு வாயிலுக்குச் சென்றேன். அந்தக் கண்ணாடிக்காரர் வீட்டு வாயிலில் இருந்த தொட்டியில் பச்சை வர்ணம் பூசப்பட்டு, மண் நிறைக்கப்பட்டு பூச்செடிகள் நடப்பட்டு இருந்தது.

நான் அதிசயித்து வாய் பிளந்து நிற்க, என்னைப்போல் தெருவில் நின்றிருந்த சில பல பேரும் அதிசயித்துப்போயிருந்தனர்.

எங்கள் வீட்டருகே தாத்தா வண்டியைத் தள்ளிக்கொண்டு வந்ததும், பக்கத்து வீட்டு கிரி அம்மா, “தாத்தா எப்போ பெயிண்ட் அடிச்சு செடி நட்டேள்?” என்றார் ஆர்வமாக.

“காலைல தான்மா… வெள்ளாள வந்து மண்ணு கொட்டி செடி நட்டு வச்சுட்டு, அப்படியே பெயிண்டும் அடிச்சு விட்டேன். யாரும் தொட்டுடாதீங்க… இன்னும் பெயிண்டு காயல” என்று கூறிக்கொண்டே தனது பணியில் கண்ணாயிருந்தார்.

“உங்களுக்கு எதுக்கு இந்த வீண் வேலை? வேணும்னா அவர் முனிசிபாலிட்டி கிட்ட பேசிக்கட்டும்னு விடவேண்டியது தான… பாருங்க சட்டையெல்லாம் பெயிண்டு…”

என் அம்மாவும் தன் பங்கிற்கு பொங்கினாள்.

“அவரு மேல எந்தத் தப்பும் இல்லையே மா… வீட்டு வாசல்ல ஈ, கொசு மொச்சுக்கிட்டு, குப்பை கொட்டியிருந்தா நல்லாவா இருக்கும்? சுத்தமா இருக்கும்போதே ஆயிரம் வியாதி வருது… அதான் ரெண்டு பூச்செடி வச்சேன், சாமிக்காச்சுல…” என்று சிரித்தபடியே கடந்து சென்றார்.

என்னைப்போல் எதிர் வீட்டு ராபர்ட்டும் வியந்து நின்றான்.

“தரமான சம்பவம் மச்சி” என்று கட்டை விரலைக் காட்டி சிரித்துக்கொண்டே உள்ளே சென்றான்.

அவர் எவ்வித சலனமுமின்றி மக்கும் குப்பை, மக்காத குப்பைகளைப் பிரித்துக் கொட்டி, “அம்மா முடிஞ்சா ரெண்டு கூடைய வச்சு, இலை, தளை காய்கறியெல்லாம் ஒரு கூடைல போடுங்க, பிளாஸ்டிக் பொருட்களை, பைகளை இன்னொரு கூடைல போடுங்க” என்று பல ஆண்டுகளாக வலியுறுத்துவதையே மீண்டும் வலியுறுத்திச் சென்றார், எவ்வித சலிப்புமின்றி.


“நாம் அறநெறிகளைக் கற்க புத்தகங்களைத் தேட வேண்டாம். நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களையும், அவர்களின் சொற்களையும், செயல்களையும் கவனித்தாலே போதும். எது சரி எது தவறு என்பது பகுத்தறிவிற்குத் தெரியும்!”

தினமும் காலையில் பள்ளியில் ஒரு கருத்தைக் கூறி விட்டு பாடத்தைத் தொடங்குவார் வகுப்பாசிரியர். என்றுமே அவற்றை காதோடு நிறுத்திவிட்டு புறந்தள்ளிவிடும் மூளை, இன்று முதல் முறை உள்வாங்கிக்கொண்டு அக்கருத்தினை அலசி ஆராய்ந்தது. ஆராய்ச்சியின் முடிவில் ‘குப்பை வண்டி’ தாத்தாவின் முகம் நினைவுக்கு வர, அனிச்சையாய் ஒரு சின்னச்சிரிப்பு என் முகத்தில் தோன்ற, “முதல் பீரியடுலயே கனவா?” என்று முறைத்து நின்ற ஆசிரியர் மேற்கொண்டு பேசுவதற்கு முன் நானே எழுந்து சென்று வகுப்பறையின் வெளியே நின்றுகொண்டேன். அவரும் இதைத்தான் சொல்லியிருப்பார்… சற்று காரம் கூடுதலாக.

வெளியே நின்றிருந்த எனது கவனத்தை ஈர்த்தது, பள்ளியின் எதிரே கருமாரியம்மன் கோவிலின் அருகே வைக்கப்பட்டிருந்த பதாகை. புது வருடத்தை முன்னிட்டு கருமாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை, பூச்சொரிதல், சொற்பொழிவு மற்றும் கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக போடப்பட்டிருந்தது. ‘அடேய், கருமாரி அம்மனுக்கும் கலை நிகழ்ச்சிக்கும் என்னடா சம்மந்தம்??!!’ என்று சலித்துக்கொண்டபோது, உச்சியில் முளைத்தது ஓர் யோசனை. எனது நண்பர்களோடு அதைப்பற்றி உடனே பேசிட வேண்டும் என்ற தவிப்பு அடங்குவேனா என்று அடம் பிடித்தது. ஒரு வழியாக அன்றைய தினத்தை முடித்துவிட்டு வீட்டிற்குத் திரும்பியதும் வழமையான மாநாடு கூட்டப்பட்டது.

“மச்சான், எனக்கு ஒரு யோசனை…”

நால்வரும் என்னை நோக்கினர்.

“இன்னும் கொஞ்ச நாள்ல அரையாண்டு பரீட்சை. அது முடிஞ்சதும் லீவு அப்புறம் புது வருஷம்…”

“அப்புறம் திரும்பவும் ஸ்கூல் திறந்துடுவாங்க… என்னடா சொல்ல வர?” என்று பொறுமை இழந்தான், அப்துல்.

“டேய் கொஞ்சம் பொறுமையா கேளு மச்சான்… புது வருஷத்துக்கு நாம மாமூலா கேக் வெட்டி கொண்டாடாம சின்னதா கலை நிகழ்ச்சி ஏற்பாடு செஞ்சா என்ன?”

“கலை நிகழ்ச்சி’னா?” என்றான் ‘முறுக்கு’ முருகன், கையில் காராசேவ் பாக்கெட்டோடு.

“ப்ச்… ஆடல், பாடல் அந்த மாதிரி டா… நம்ம காலனில நாலு தெரு இருக்கு… தெருவுக்கு பத்து பதினஞ்சு வீடு இருக்கு… எல்லார் கிட்டயும் கலெக்ஷன் செஞ்சு, சின்னதா ஒரு மேடை போட்டு, மைக் செட்டு, சேர் (chair) போட்டு, காலனி பசங்கள சேர்த்து சின்னதா கலை நிகழ்ச்சி ஏற்பாடு செஞ்சு…”

“வர்றவங்களுக்கு சாப்பாடு?”

நான் ஆர்வத்தோடு கூறிக்கொண்டிருக்க, தனது கவலையை கேள்வியாய் முன்னிறுத்தினான் ‘முறுக்கு’ முருகன். நாங்கள் நால்வரும் சேர்ந்து முறைக்க, தனது வாயை மூடிக்கொண்டான்.

“முக்கியப்பட்டவங்களுக்கு ஒரு பரிசு கொடுக்கலாம்னு தோணுச்சு… எல்லா செலவும் போக மிச்ச காசுக்கு எல்லாருக்கும் ஒரு சமோசாவும், ஜூசும் கூட ஏற்பாடு பண்ணலாம்” என்று நான் நினைத்ததை கூறி முடிக்க, கடைசி வரியைக் கேட்டதும் துவண்டிருந்த முருகனின் முகம் பளிச்சென்றானது.

“ஆனா மாப்ள செலவு பெருசா ஆகுமே… காசுக்கு என்ன பண்றது?” என்றான் கிரி யோசனையாய்.

“எல்லார் வீட்லயும் கலெக்ஷன் பண்ணி செய்ய வேண்டியது தான்” என்று ராபர்ட் கூற, “ஆமாம் மச்சான், கண்டிப்பா எல்லாரும் குடுப்பாங்கன்னு தோணுது” என்று உற்சாகமானான், அப்துல்.

நிகழ்ச்சியை எவ்வாறு நிகழ்த்த வேண்டும் என்று ஒரு திட்டம் தீட்டி, எங்கள் காலனியைச் சேர்ந்த பிற நண்பர்களுடனும் கலந்துரையாடி, ஒரு முடிவிற்கு வந்தோம். செலவுகளை பட்டியலிட்டு, தோராயமாக ஒவ்வொரு இல்லத்திலும் எவ்வளவு நன்கொடை பெற வேண்டும் என்பதையும் முடிவு செய்தோம்.

‘போங்கப்பா.. வேற வேலை இல்லையா உங்களுக்கு’ என்று காலனியில் ஓரிருவர் சலித்துக்கொண்டாலும், ‘புதுசா என்னமோ முயற்சி பண்றீங்க, சிறப்பா செய்ங்க’ என்று பலரும் எங்களை வாழ்த்தவே செய்தனர்.

மேடை அமைத்து, மேஜை நாற்காலி வாடகைக்குவிடும் கடைகாரர், எங்களை ஊக்குவிக்கும் வகையில் பணம் வாங்க மறுத்துவிட்டார். எங்கள் காலனியின் உலக பேமஸ் ‘தீனா பேக்கரி’ அண்ணனோ, மிகக் குறைந்த விலையில் நாங்கள் கேட்கும் பண்டங்களை வழங்குவதாகக் கூறினார். நண்பர்கள் பட்டாளம் அவரவர் சிறு சிறு குழுக்கள் அமைத்து, நடனம், நாடகம், பாட்டு என்று ஆர்வமாயினர். பரீட்சைகள் முடிந்து முழு வீச்சில் ஏற்பாடுகளைத் தொடங்கினோம்.

நாங்கள் நினைத்ததைவிட அதிகக் கையிருப்பு இருந்தது. ஆகையால், நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் பரிசளிப்பது என்று முடிவு செய்து அனைவருக்கும் பரிசுப் பொருட்கள் வாங்கி வந்தோம்.

“மச்சான், கிப்ட் பேப்பரை கசக்காம தூக்கிட்டு வாடா…”

‘குச்சி சிப்ஸ்’ சுவையில் தன்னை தொலைத்திருந்த முருகனை கடிந்துகொண்டான், ராபர்ட். விழாவிற்குத் தேவையான அனைத்தயும் ஒரே மூச்சில் வாங்கிவிட்டு, பைகளைத் தூக்க முடியாமல் தூக்கி வந்தோம், நாங்கள் ஐவரும்.

“டேய் மச்சான் அங்க பாரு, நம்ம ‘குப்பை வண்டி’ தாத்தா…” என்றான் கிரி என்னிடம்.

மெயின் ரோட்டின் அருகே குப்பைத்தொட்டியிலிருந்த குப்பைகளை வாரி குப்பை லாரியில் போட்டுக்கொண்டிருந்தார். லாரிக்காரனோ பொறுமை இழந்து வண்டியை மெல்ல நகர்த்த, கீழே சிந்திய குப்பைகளை அருவருப்பின்றி மீண்டும் அள்ளி வண்டியில் வீசினார், ‘குப்பை வண்டி’ தாத்தா.

“இவரைக் கூப்பிடவே இல்லையே?!” என்றான் அப்துல். சிறிதும் யோசனையோ தயக்கமோ இன்றி, மறுநொடியே சாலையைக் கடந்து தாத்தாவின் அருகே சென்று விழாவைப் பற்றியும், அவர் நிச்சயம் வருகைத் தர வேண்டும் என்றும் கூறிவிட்டு வந்தேன்.

வாங்கிவந்த பரிசுப் பொருட்களை வர்ண காகிதங்களில் சுற்றி அடுக்கி வைக்கத் தொடங்கினோம்.

“மாப்ள, நமக்கு நாமே கொடுத்துக்கப்போற கிப்ட்’கு எதுக்கு டா கலர் பேப்பர் சுத்தி ரிப்பன் ஒட்டிக்கிட்டு?”

அயர்ந்துகொண்டான் ‘முறுக்கு’ முருகன், பொரிகடலை கொறித்தபடி.

“ஆமா மச்சான், நமக்கு எதுக்கு கிப்ட்? வேற யாருக்காவது கொடுக்கலாம்…” என்றான் ராபர்ட். மேலும்,

“‘குப்பை வண்டி’ தாத்தா, நம்ம காலனி பார்க்’ல வேலை செய்யற தோட்டக்காரர், படிச்சுக்கிட்டு, பகுதி நேரம் நியூஸ் பேப்பர் போடற நம்ம ராஜா… இந்த மாதிரி இருக்கறவங்களுக்கு கொடுக்கலாமே” என்று நல்லதொரு யோசனையும் அவன் கூற, ஒரு மனதாய் அனைவரும் அதற்கு இணங்கினோம்.

புது வருடமும் சில மணி நேர தொலைவில் நெருங்கி நின்றது. மேடையமைத்து, மேடையின் பின் புறம் புது வருட வாழ்த்துச் செய்திகளின் பேனர்கள் வைத்து, வரிசையாய் நாற்காலிகள் இடப்பட்டு, மேடையின் பக்கவாட்டில் இரண்டு மேஜைகள் போடப்பட்டிருந்தன. நாங்கள் எண்ணியதை விட மிகச் சிறப்பாய் அனைத்தையும் செய்து கொடுத்திருந்தார், பந்தல் கடைக்காரர். சுடச் சுட சமோசாவும், ப்ரூட்டி பாக்கெட்டுகளும் வந்திறங்கின. பேக்கரி கடை தீனா அண்ணனும் அவர் பங்கிற்கு அனைவருக்குமாய் மில்க் ஸ்வீட்களை இலவசமாய் கொடுத்துவிட்டு, எங்களை வாழ்த்திவிட்டுச் சென்றார். இறை வணக்கத்துடன் தொடங்கிய விழா, பரதம், ‘நீர் இன்றியமையாதது’ எனும் தலைப்பில் நாடகம், ‘தல’ மற்றும் ‘தளபதி’ ரசிகப் பட்டாளங்களின் நடனம், ‘மாணவர்களே மண்ணின் மன்னர்கள்’ எனும் தலைப்பில் எங்கள் காலனியில் வசித்துவரும் தமிழாசிரியரின் சிறப்புரை என்று விறுவிறுப்பாக நகர்ந்து, இறுதியில் எங்கள் ஐவரின் நடனத்தோடு கலகலப்பாக முடிந்தது. பெரியோர் ஒரு சிலர் தாமாகவே முன் வந்து மேடையேறி எங்கள் ஐவரை பாராட்டிச் சென்றனர். ஒருவித மதிப்பு கூடிவிட்ட பெருமிதம் எங்களுக்கு. இறுதியாய் கலந்து கொண்ட அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டு, ‘குப்பை வண்டி’ தாத்தா உட்பட மற்ற சிலருக்கு சிறப்புப் பரசுகள் வழங்கப்பட்டது.

எப்பொழுதும் காக்கி உடையில் மட்டுமே காட்சி தந்த தாத்தா, முதல்முறையாக கருப்பு கால்சராய் மற்றும் சந்தன நிற சட்டையில் வந்திருந்தார். அவருக்கு மட்டும் நாங்கள் ஐவரும் ஒன்று சேர்ந்து பரிசளித்தோம். வயதில் சிறியோர் என்றாலும், அவர் மீது கொண்ட அன்பால் அந்த நொடி நாங்களே அவருக்கு பரிசு வழங்கிடவேண்டும் என்று ஒரு மனதாய் மேடை ஏறினோம். எங்களோடு சேர்ந்து முகம் மலர புகைப்படம் ஒன்றும் எடுத்துக்கொண்டார். எங்களது மேடை முன் வந்து நின்ற அந்தக் கண்ணாடிக்காரர் தனது நான்கு வயது மகனை மேடை ஏற்றிவிட, அவனோ தனது கையிலிருந்த ஒரு பையினை தாத்தாவிற்கு பரிசளித்தான். அனைவருமே யோசனையாய், கேள்வியாய் கண்ணாடிக்காரரை நோக்க,

“சார், இனிமே வெறும் கையால குப்பை எடுக்காதீங்க. இதைப் போட்டுக்கோங்க” என்றார் அவர்.

பையினுள் இருந்தவற்றை வெளியே எடுத்த தாத்தா, அதில் ரப்பர் கையுறைகளும், தூசியிலிருந்து கண்களைக் காக்கும் கண்ணாடியும் இருந்ததைக் கண்டு நெகிழ்ந்து போனார். “ரொம்ப நன்றி தம்பி!” என்று தாத்தா கூற, “இருக்கட்டும் சார்!” என்ற கண்ணாடிக்காரர் குழந்தையை அழைத்துக்கொண்டு சென்று அமர்ந்துகொண்டார். “ச்ச… இந்த யோசனை நமக்கு தோணலையே…” என்று முருகன் முனுமுனுக்க, “எந்தக் கடைல திங்க என்ன விக்கறான்’னு உன் மூளை தான் மேய போயிடுச்சே… அப்புறம் எப்படி யோசிக்கும்?” என்று ராபர்ட் கலாய்க்க, புதுவருட வரவை மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் வரவேற்கத் தயாரானோம். சினிமாப் பாடல்களை ஒலிக்கவிட்டு குழுமியிருந்தோரை நடனமாடச் சொல்ல, முதலில் தயங்கியவர்கள் மெல்ல மெல்ல உற்சாகமானார்கள். சிலர் ஆர்வ மிகுதியில் மேடை மீதேறி ஆடவும் தொடங்கினர். ‘குப்பை வண்டி’ தாத்தாவோ அனைவரும் வியக்கும் வண்ணம் எம்.ஜி.ஆர். மற்றும் சிவாஜியின் பாடல்களைப் பாடி, அவர்களைப் போலவே நடித்தும் காட்டினார். சிரிப்பும் கும்மாளமுமாய் இனிதே விழா நிறைவுற்றது.

விடுமுறைகளும் கொண்டாட்டங்களும் முடிந்து மீண்டும் பள்ளி தொடங்கியது. அதி முக்கிய பரீட்சைகள் சில மாதங்களில் எட்டிப் பார்க்க இருந்ததால் அனைவருமே அவரவர் படிப்பில் கவனமானோம். விழாவில் எடுத்த புகைப்படங்களை அவ்வப்போது புரட்டிப்பார்த்து ஒருவரையொருவர் பரிகாசம் செய்து சிரித்துக்கொள்வோம். ‘குப்பை வண்டி’ தாத்தாவும் அன்பளிப்பாய் பெற்ற கையுறைகளையும், கண்ணாடியையும் தவறாது அணிந்துகொண்டார்.

ஓர் மாலை, பள்ளி முடிந்து நான் வீடு திரும்பிக்கொண்டிருந்த வேலை மெயின் ரோட்டின் அருகே குப்பை லாரியைச் சுற்றி கூட்டம் கூடியிருந்தது. சிலர் லாரியின் ஓட்டுனரைப் பிடித்து வசை பாட, அங்கு வந்த ஆம்புலன்ஸ் வண்டியில் ‘குப்பை வண்டி’ தாத்தா ஏற்றப்பட்டதைக் கண்டு கலவரமானேன். அவரது காக்கி கால்சராய் செந்நிறம் பூண்டிருந்தது. அவரோ பேச்சு மூச்சின்றி கிடந்தார். பதட்டமாய் அந்த ஆம்புலன்ஸை நோக்கியபடி நின்றிருந்தேன். சற்றே கூட்டம் கலைந்ததும், எங்கள் ஆஸ்தான தீனா பேக்கரி கடைக்குச் சென்று நடந்ததை தீனா அண்ணனிடம் விசாரித்தேன்.

“என்னத்த சொல்ல… பெரியவரு எப்பொழுதும் போல குப்பைய அள்ளி லாரியில கொட்டிக்கிட்டிருந்தாரு. அந்த ட்ரைவர் பய தான் கொஞ்சம் வண்டிய நிறுத்தினா என்ன… எப்பவும் போல அவன் மொள்ள லாரிய உருட்டிட்டு போக, பெரியவரு குப்பையை வாரிக்கிட்டு ஓடிப்போய் கொட்டினாரு. பாவிப்பய எதிர்ல வேன் வந்துச்சுனு பின்னாடி யாரு எவரு நிக்கறாங்கனு கூட பார்க்காம அப்டியே ரிவர்ஸ் கீர் போட்டான். பெரியவரு மேல லாரி மோத, நிலை தடுமாறி அவரு கீழ விழ, கண்ண மூடித்தொறக்கறதுக்குள்ள லாரி பின்னாடி டயரு கால்ல ஏறிடுச்சு. பாவம் மனுசன்… வயசான காலத்துல இப்படியெல்லாம் நடக்கணும்னு அவரு தலையில எழுதியிருக்கு… ஹ்ம்ம்…”

அவர் கூறியதைக் கேட்டு எனது தொண்டைக்குழிக்குள் ஏதோ ஒன்று அடைத்துக்கொண்டது போல் இருந்தது. பயத்தில் எனது கால்களில் சிறு நடுக்கம். சைக்கிளை ஓட்டாமல் தள்ளிக்கொண்டு நடக்கத் தொடங்கினேன். சில நாட்களுக்கு முன் புத்தாண்டு விழாவில் அவர் எங்களோடு மேடையில் ஆடியது நினைவிற்கு வந்து என்னை அச்சுருத்தியது. வீடு வந்து சேருவதற்குள் வியர்த்து நனைந்திருந்தேன்.

“என்னடா மச்சான் இப்படி வந்து நிக்கற?”

எனது நண்பர்கள் கேட்டது கூட என் காதில் விழவில்லை. தெருவின் தொடக்கத்தில் தாத்தா வண்ணம் பூசி, பூச்செடி நட்டு வைத்திருந்த குப்பைத்தொட்டியே என் கண்ணில் பட்டது.

மீண்டும் என் நண்பர்கள் என்னை உலுக்கி காரணம் கேட்க, சற்றுமுன் நிகழ்ந்தவற்றை கூறினேன். அவர்களும் என்னைப்போல் அதிர்ச்சி கொண்டனர்.

உடனே அச்செய்தியை நாங்கள் எங்கள் வீட்டில் கூற, அது காட்டுத்தீயென காலனி முழுதும் பரவியது. அவர் எங்கே எடுத்துச் செல்லப்பட்டார் என்றும், அவரின் தற்போதைய நிலை என்ன என்றும் தெரியாமல் அனைவருக்குமே சிறு மன வருத்தம்.

மறுநாள் காலை பள்ளிக்கு கிளம்பிச் சென்றும் ஏனோ அவரது நிலையை எண்ணியபடியே மனம் உழன்றுகொண்டிருந்தது. எனது பள்ளியின் எதிரே இருந்த கருமாரியம்மனிடம் அவர் குணம் பெற வேண்டிக்கொண்டேன். சிலர் நமக்குப் பிடித்துப்போவதற்கான காரணம் சொல்லத் தெரியாது. பிடித்தவர்களை எது வாட்டினாலும் அதை நம் மனம் ஏற்காது. நமக்காக இறைவனிடம் மன்றாடும் பொழுது ஏற்படாத இறை நம்பிக்கை, நமக்குப் பிடித்தவருக்காக வேண்டுதல் வைக்கும்பொழுது பன்மடங்கு பெருகி நிற்கிறது. என்னுள்ளும் அத்தகையதொரு நம்பிக்கை. ‘நல்லவங்களுக்கு எப்பவும் தெய்வம் துணை இருக்கும். பாவம் ரொம்ப நல்ல மனுஷன் அவரு…’ என்று அம்மா நேற்று அடுத்த வீட்டு மாமியிடம் கூறியது நினைவிற்கு வந்தது. மாலை வீடு திரும்ப மனம் பரபரத்தது.

என்னைப் போல் எனது நண்பர்களும் அவரைப் பற்றி பேசிக்கொண்டு நாங்கள் வழக்கமாகக் குழுமும் இடத்தில் எனக்காக காத்திருந்தனர்.

“விமலு, அவரு மிஷன் ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆயிருக்காராம் டா…” என்றான் ராபர்ட்.

“பாவம் டா… ஒரு காலு போயிடுச்சு டா… அம்பியூடேட் பண்ணிட்டாங்களாம்…” என்றான் முருகன், சுருதி இழந்து.

“விடுடா உயிர் பொழைச்சுட்டாரு’னு சந்தோஷப்படுங்க…”

மனம் துவண்டாலும், அப்துல் கூறியது போல் அவர் உயிர் பிழைத்த செய்தியே நிம்மதி தந்தது.

சில நாட்கள் கடந்த நிலையில், தாத்தாவை மருத்துவமனைக்குச் சென்று சந்திப்பது என்று நாங்கள் ஐவரும் தீர்மானித்தோம். அவருக்குத் தேவையான பழ வகைகளை வாங்கிக்கொண்டு, அவர் அனுமதிக்கப்பட்டிருந்த மிஷன் ஆஸ்பத்திரிக்குச் சென்றோம்.

“வாங்கப்பா, எல்லாரும் நல்லா இருக்கீங்களா?”

அவர் முகத்தில் எப்பொழுதும் பசை போட்டு ஒட்டியிருக்கும் புன்னகை, இந்த நிலையிலும் மாறாது இருந்தது.

“நல்லா இருக்கோம் தாத்தா… நீங்க…”

நான் நீட்டிமுழக்கினேன்.

“நல்லா இருக்கேன் பா… நாலஞ்சு நாள்ல டிஸ்சார்ஜ் பண்ணிடுவாங்க… வேலைக்கு தான் எப்படி வருவேன்னு…”

“இந்தா உசுரு பொழைச்சதே பெருசு… வேலையாம் பெரிய வேலை” என்று இடைமறித்தார், தாத்தாவின் அருகே அமர்ந்திருந்த பாட்டி. நரை பூசி, சுருக்கங்கள் சூழ்ந்து துவண்டிருந்த பாட்டிக்கு, தாத்தாவின் இந்த நிலை எத்தகைய மன வேதனையை கொடுத்திருக்கும் என்று என்னால் ஓரளவு யூகிக்க முடிந்தது.

“அடிப்போடி… போ, பிள்ளைங்களுக்கு காப்பித்தண்ணி வாங்கிட்டு வா” என்று தாத்தா கூற,

“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் தாத்தா…” என்று மறுத்த ராபர்ட், “பாட்டி, உங்களுக்கு எதுவும் வேணும்னா சொல்லுங்க, வாங்கிட்டு வந்து கொடுக்கறோம்” என்றான்.

“எதுவும் வேண்டாம் பா” என்று பாட்டியும் நெகிழ்ந்து போக, அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு வீடு திரும்பினோம்.

“இந்தத் தாத்தாவ இப்படிப் பார்க்கவே பாவமா இருக்குல்ல?”

நங்கள் ஐவரும் பேக்கரி கடை வாசலில் அமைதியாய் நின்றிருக்க, முருகன் முதலில் அமைதியை உடைத்தான்.

“ஏதாவது உதவி பண்ணனும்னு தோணுது மச்சான்…” என்றான் அப்துல்.

“தாத்தா பாட்டிக்கு ஒரே ஒரு பொண்ணாம். அந்த அக்காவுக்கு கல்யாணமாகிடுச்சாம். அவங்க கல்யாணத்துக்கு வாங்குன கடனை அடைக்க தாத்தா வேலைக்கு வராறாம். பாட்டி கூட ஏதோ ரெண்டு வீட்ல வேலை செய்யறாங்கலாம். நம்ம ஏரியாவ கூச்சம் பார்க்காம சுத்தம் செய்யறாரு. எத்தனை பேரு இவ்வளவு பொறுப்பா வேலை செய்யறாங்க?! நிச்சயம் உதவனும் டா…”

கிரியும் தனக்குத் தெரிந்ததைக் கூற, தாத்தாவிற்கு எவ்வகையேனும் உதவவேண்டும் என்று முடிவெடுத்தோம்.

புத்தாண்டு விழாவிற்கு ஒவ்வொரு வீடாகச் சென்று பணம் வசூலித்தது போல், தாத்தாவிற்காக நாங்கள் ஐவரும் பணம் திரட்ட முடிவெடுத்தோம். சிறிதோ, பெரிதோ, இந்த நிதி உதவி நிச்சயம் பெரும் உதவியாக இருக்கும் என்று நம்பினோம். புத்தாண்டிற்கு பணம் கொடுக்க யோசித்தவர்கள் கூட, “அந்த மனுஷன் நாள் கிழமைக்கு கூட காசு கேட்டதில்லை, கொடுத்தாலும் வாங்கினதில்ல” என்று அவரது நல்லுள்ளத்தைப் புகழ்ந்து, முடிந்தவரை உதவ முன்வந்தனர்.

மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டு வீடு திரும்பியிருந்த தாத்தாவின் விலாசத்தை விசாரித்துக்கொண்டு, நாங்கள் சேகரித்த தொகையை எடுத்துக்கொண்டு அவரது இல்லத்திற்கு சென்றோம்.

மீண்டும் கனிவு குறையா புன்னகையோடு எங்களை வரவேற்றார் தாத்தா. படுக்கையில் கிடந்தவரின் வலக்கால் பாதிக்கு மேல் துண்டிக்கப்பட்டு கட்டு போடப்பட்டிருந்தது. எங்களைக் கண்டதும் அவசரஅவசரமாக போர்வையை இழுத்துவிட்டு காலினை மூடிக்கொண்டார்.

“தாத்தா நாங்க…”

வந்த காரியத்தை எப்படி உரைப்பது என்று தயங்கி நின்றோம்.

“சொல்லுங்கப்பா…” என்றார் தாத்தா பரிவாக.

“தாத்தா… உங்களுக்காக காலனில எல்லாரும் சேர்ந்து பணம் கலெக்ட் பண்ணி… உங்களுக்கு ஒரு தொகையை குடுக்கணும்னு முடிவு பண்ணி… உங்களுக்கு உதவியா இருக்கும்னு நினைச்சு… ரொக்கம் எடுத்துட்டு வந்திருக்கோம்…”

ஒருவழியாக திக்கித்திணறி கூறிமுடித்தான், அப்துல்.

“எனக்கு எதுக்குப்பா இதெல்லாம்?”

தாத்தா தயங்க,

“ப்ளீஸ் வாங்கிக்கோங்க தாத்தா… எல்லாரும் பிரியப்பட்டு கொடுத்தது…” என்று முருகன் நிர்பந்திக்க, நாங்கள் அனைவரும் கேட்டுக்கொண்டதின் பேரில் தாத்தா எங்களது உதவியைப் பெற்றுக்கொண்டார்.

நாட்கள் உருண்டோட தேர்வுகளும் அதிவிரைவில் நெருங்கின. தாத்தாவைக் கண்டு ஏறத்தாழ இரு மாதங்கள் ஆகியிருந்தது. மணி சத்தமும், கரகரப்பான அழைப்பும் இல்லாமல் போனது எங்கள் வீதிகளில். அதற்கு நேர் மாறாக இங்கொன்றும் அங்கொன்றுமாய் வாக்குவாதங்களும், வாய்தகராறுகளும் அரங்கேறின. புதிதாக வந்திருந்த குப்பை வண்டிக்காரர் ஒருவர், குப்பைகளை பிரித்துப்போடாமல் வைத்திருந்த வீட்டுப் பெண்மணிகளிடம் தனது கோபத்தை கொட்டிவிட்டுச் சென்றார். நிதானமின்றி காலில் சக்கரம் கட்டி பறப்பதும், எங்கள் காலனி வீதிகளை துப்புரவு செய்ய மறுப்பதுமென அவர் மீது ஏகப்பட்ட புகார்களை முன் வைத்தனர் அக்கம்பக்கத்தினர். ஆனால் அதற்கெல்லாம் அவர் அசரவில்லை. ‘தாத்தா இருந்தவரை ஒரு கவலை இல்லை… இந்தாளு வந்தாலும் வந்தான், ஒண்ணுத்துக்கும் பிரயோஜனம் இல்லை’ என்று முனகிக்கொண்டே எங்கள் வீட்டின் எதிரே சாலையில் கிடந்த குப்பையை வாரி மூலையில் குமித்து வைத்தார் என் அம்மா.

தேர்வுகள் ஒருவழியாக முடிந்து நாங்கள் ஐவரும் வெகு நாட்கள் கழித்து குழுமினோம். இங்கும் அங்குமாய் குமிந்து கிடந்த குப்பைகளைக் காண என்னவோ போல் இருந்தது.

எங்களை நோக்கி கண்ணாடிக்காரர் வந்தார்.

“தம்பி, எனக்கு சொந்த ஊர்ல வேலை கிடைச்சு நாங்க வீட்டை காலி பண்ணிட்டு போறோம். அந்தத் தாத்தா கிட்ட ஒரு வார்த்தை சொல்லணும்னு நினச்சேன். நீங்க அவரை பார்த்தா சொல்லிடுங்க. வாசல்ல இருக்கற பூச்செடிக்கு தண்ணி ஊத்தி கொஞ்சம் பார்த்துக்கோங்க பா…” என்றவர், எங்கள் ஐவருடனும் கைகுலுக்கி வாழ்த்து கூறிவிட்டுச் சென்றார்.

வெகு நாட்கள் கழித்து தேர்வுகள் முடிந்துவிட்ட நிம்மதியில் நான் உறங்கிக்கொண்டிருக்க, மிகவும் பரிட்சயமான குரல் கேட்டு கண் விழித்தேன். விருட்டென எழுந்து வெளியே வந்து பார்த்தால் குப்பை வண்டி தாத்தா காக்கிச் சீருடையில் கையில் ரப்பர் கையுறையுடன் நின்றிருந்தார்.

“எப்படி இருக்கீங்க?” என்று அவரை நலம் விசாரித்தபடி பலர் சூழ்ந்துகொள்ள நானும் அங்கு சென்று நின்றேன்.

“நான் நல்லா இருக்கேன். நீங்க எல்லாரும் சௌக்கியம் தானே? காலு போச்சுன்னு எப்படி வீட்டுலையே முடங்கி இருக்கறதுனு கட்டை கால் வேணும்னு ஆபிசருக்கு மனு கொடுத்தேன். அவர் உடனே ஏற்பாடு செஞ்சுட்டாரு. முந்தி மாதிரி வேகமா நடக்க முடியாட்டியும், எழுந்து நடமாட முடியுதேன்னு சந்தோஷமா இருக்கு. உடனே வேலைல சேர்ந்துட்டேன்” என்று கூறிமுடித்தவர், என்னைக்கண்டு,

“தம்பி, அன்னைக்கு வீடு வரைக்கும் வந்தீங்க… உதவி செஞ்சீங்க… ரொம்ப சந்தோஷம் பா… இந்தாங்க நீங்க கொடுத்த பணம்” என்றவர், அன்று நாங்கள் கொடுத்த ரொக்கத்தினை என் கையில் திணித்து, “வீடு தேடி உதவி செய்ய வந்த பிள்ளைங்களை வேண்டாம்னு சொல்லி திருப்பி அனுப்ப மனசு வரல, அதான் வாங்கிக்கிட்டேன்… இந்த காசை வேற ஏதாவது நல்ல விஷயத்துக்கு பயன்படுத்திக்கோங்கப்பா… எனக்கு கடவுள் புண்ணியத்துல பெருசா தேவைன்னு எதுவும் இல்லை… நாலு புள்ளைங்கள படிக்க வைங்க பா” என்றுவிட்டு உற்சாகத்துடன் தனது பணியைத் தொடர்ந்தார்.

தெருவின் தொடக்கத்திற்கு சென்றவர், அங்கு குப்பைத்தொட்டியில் வளர்ந்திருந்த பூக்களைக் கண்டு சிரித்துவிட்டு, தான் பருக வைத்திருந்த பாட்டில் நீரை செடிக்கு ஊற்றிவிட்டு, தாங்கித்தாங்கி நடந்து சென்றார்.

யோசனை வந்தவனாய், “தாத்தா உங்க பேர் என்ன?” என்று நான் குரல் கொடுக்க, “‘ரத்தினம்’ தம்பி…” என்று பதிலுக்கு குரல் கொடுத்துவிட்டுச் சென்று மறைந்தார்.

‘பொருத்தமான பேரு தான்’ என்றபடியே தெருவில் குழுமியிருந்தோர் கலைந்து சென்றனர்.

எளிமையான மனிதர்கள் உயர்ந்துவிடுகின்றனர்… வாழ்விலும் பிறரது மனதிலும்!

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here