லக்ஷ்மி விலாசம்

0
43

༺♦️༻
*
༺♦️༻

பெரும் பணக்காரரான ஒரு
வியாபாரியின் வீட்டில் செல்வத்திற்கு
பஞ்சமில்லை. எல்லா செல்வமும் அவர்
வீட்டில் கொட்டி கிடந்தது. ஒருநாள்
அந்த வியாபாரியின் கனவில்
தோன்றிய மகாலட்சுமி, ‘பக்தனே! நீயும்
உன் முன்னோர்களும் செய்துள்ள
புண்ணியங்களின் காரணமாகவே
இது வரை நான் உன் வீட்டிலேயே
தங்கியிருந்தேன். நீ செய்த
புண்ணியம் அனைத்தும் தற்போது
தீர்ந்து விட்டது.
எனவே இன்னும் ஓரிரு நாளில் உன்
வீட்டை விட்டு வெளியேற உள்ளேன்.
அதற்கு முன் உனக்கு ஏதாவது வரம்
வேண்டும் என்றால் கேட்டுப்
பெற்றுக்கொள். ஆனால் என்னை
இங்கேயே தங்கியிருக்கக் கேட்கக்
கூடாது’ என்றாள்.

༺♦️༻
மறுநாள் பொழுது விடிந்தது.
வியாபாரி வீட்டில் உள்ள
அனைவரையும் அழைத்து கனவில்
நடந்தவற்றைக் கூறினார்.
மகாலட்சுமியிடம் என்ன வரம்
கேட்கலாம் என்று அவர் தம்
குடும்பத்தினரிடம் ஆலோசனை
கேட்டார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு
விதமாக ஆலோசனை கூறினர்.
ஆனால் அவர்கள் அனைவரும் ஒரே
கருத்தையே வெளிப்படுத்தினர். ‘நவ
ரத்தினங்களை வரமாக கேளுங்கள்;
ஏராளமான பொற்குவியல்களை
கேளுங்கள். நிறைய உணவு
பொருட்களை கேளுங்கள், மாட
மாளிகைகள் பலவற்றை கேளுங்கள்’
என்று அடுக்கிக் கொண்டே
போனார்கள்.

༺♦️༻
அப்போது அந்த வீட்டின் கடைசி பெண்
தன் தந்தையிடம், ‘அப்பா நமக்கு
தேவையான பொன், வைரம்,
வைடூரியம், மாணிக்கம், வீடு என
எவற்றை வரமாக கேட்டு
வாங்கினாலும், அது நம் வீட்டில்
நிலைக்கப் போவதில்லை. ஏனெனில்
எப்போது நம் வீட்டில் இருந்து
மகாலட்சுமி தேவி வெளியேறப்
போகிறேன் என்று எப்போது கூறி
விட்டாளோ, அவள் வெளியேறியவுடன்
அவளது ஐஸ்வரியம் பொருந்திய
இந்த பொருட்களும் வெளியேறி
விடும், அல்லது நிலைக்காமல்
போய்விடும்.
எனவே எப்போதும் எங்கள் வீட்டில்
பரஸ்பரம் அன்பு நிலைத்திருக்கும்படி
வரம் அருளுங்கள் என்று மகாலட்சுமி
தேவியை கேளுங்கள்’ என்று
கூறினாள்.

༺♦️༻
இளைய மகள் கூறியதே சரி என்று
வியாபாரிக்கு தோன்றியது. அதையே
இறுதி முடிவாகக் கொண்டு, இரவு
தூங்கச் சென்றார் வியாபாரி.
அன்றைய தினம் இரவில், அவர்
கனவில் மகாலட்சுமி தோன்றினாள்.
அவளிடம், ‘அன்னையே! எங்கள்
குடும்பத்தில் உள்ளவர்களிடம்
எப்போதும் பரஸ்பரம் அன்பு நிலைத்திருக்க வேண்டும். இதுவே
நான் உன்னிடம் கேட்கும் வரம். இந்த
வரத்தை மட்டும் தாங்கள் அருளினால்
போதுமானது’ என்று வியாபாரி
கேட்டார்.

༺♦️༻
லட்சுமிதேவி சிரித்தபடி ‘மகனே! இப்படி
ஒரு வரத்தைக் கேட்டு மீண்டும் உன்
வீட்டிலேயே என்னை கட்டிப்போட்டு
விட்டாய். எந்த குடும்பத்தில் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் அன்பு செலுத்தி வாழ்கிறார்களோ, எந்த குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் இல்லையோ, அந்த வீட்டில் நிச்சயமாக நான் இருப்பேன். எனவே நீ கேட்ட இந்த
வரத்தால் மீண்டும் நான் உன்
வீட்டிலேயே தங்கி இருந்து
விடுகிறேன்’ என்று கூறி அங்கேயே
தங்கிவிட்டாள்.

༺♦️༻
‘எந்த வீட்டில் குடும்பத்து பெரியவர்களை மதித்து வழிபடுகிறார்களோ,எங்கு நாகரீகமான முறையில் மற்றவர்களுடன் மரியாதையோடு பழகுகிறார்களோ, பிறருடைய செய்கையால் மனதில் கோபம் ஏற்பட்டாலும் எவர் தங்கள் வாயால் சண்டை செய்யாமல் இருக்கிறார்களோ அந்த இடங்களில் எல்லாம் நான் வசிக்கிறேன்’ என்று
இந்திரனிடம் ஒருமுறை லட்சுமி
கூறியதாக புராண வரலாறு –
தெரிவிக்கிறது. ஆகையால் *தங்கள் இல்லத்தை லட்சுமியின் விலாசமாக மாற்ற விரும்புபவர்கள், தங்கள் இல்லத்தை உடனே அன்பால் நிரப்புங்கள்

Click to rate this post!
[Total: 0 Average: 0]
Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here