வனமும் நீயே வானமும் நீயே 2

0
720

கையில் ஏதோ ஒரு மருந்துடன் நின்று கொண்டிருந்தான். அவளுடைய துணியை விலக்கி காயத்திற்கு மென்மையாக மருந்திட்டவன் மருந்தை அவளது கையில் திணித்தான்.

“இது நெருப்புக் காயத்துக்கு போடுற மருந்து… வேற எங்கே எல்லாம் காயம் இருக்கோ… தடவிக்கோ” என்றவனின் கட்டிலில் அமர்ந்து இரு கைகளையும் தலைக்கு பின்னால் அணைவாக கொடுத்து கண்களை மூடிக் கொள்ள… அவனிடம் இருந்து மருந்தை வாங்கியவள் எப்படி போடுவதென்று திருதிருவென விழித்தாள்.

பின்னே அதென்ன பங்களாவா? அறைக்குள்ளேயே உடை மாற்ற தனி அறை, அட்டாச்சுடு  பாத்ரூம் வசதி எல்லாம் இருப்பதற்கு… அளவில் பார்த்தால் அந்த வீடு பெரியது தான். ஆனால் எளிமையான  கிராமத்து வீடு… அதுவும் மற்ற அறையில் ஆட்கள் தங்கி இருக்க… இந்த அறையைத் தான் அவர்களின் இன்றைய இரவுக்காக ஒதுக்கி இருக்கிறார்கள்.

அந்தமட்டிலும் அவளுக்கு கொஞ்சம் சந்தோசம். ஏனெனில் வழக்கமாக அவளுக்கு தூங்குவதற்கு என்று ஒதுக்கப்பட்டு இருந்த இடம் அந்த வீட்டின் சமையற்கட்டு தானே.

மெல்ல தயக்கத்துடன் திரும்பி கணவனைப் பார்க்க அவனோ கண்களை மூடி தூங்குவது போல இருந்தான். அவனுக்கு முதுகு காட்டி நின்றபடி… அவளின் நெஞ்சில் அவளது அத்தை போட்ட சூட்டிற்கு மருந்தை தடவிக் கொண்டவள் அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் மருந்தை கையில் வைத்துக் கொண்டு அப்படியே நின்றாள்.

“மருந்தை தடவியாச்சா?”இப்பொழுதும் கண் திறக்கவில்லை அவன்.

“ம்…” அதற்கு மேல் அவனிடம் பேச அவளுக்கு பயமாக இருந்தது.

“இங்கே வா”

‘மறுபடியும் முதல்ல இருந்தா’ பயத்தில் எச்சிலை விழுங்கியபடி மெல்ல நடந்து கட்டிலின் அருகில் போய் நின்றாள்.

‘இப்போ என்ன செய்றது? வழக்கம் போல கீழே படுத்துக்கலாமா… இல்லை கட்டிலில் படுக்கணுமா? கீழே படுத்தால் திட்டுவானோ… கொஞ்ச நேரம் முன்னே செஞ்ச மாதிரி கையில் தூக்கி கட்டிலில் படுக்க வைப்பானோ… அதுக்கு அப்புறம் கொஞ்ச நேரத்திற்கு முன்னே நடந்த மாதிரி’ என்ற ரீதியில் அவளது எண்ணம் நாலு திக்கிலும் பறக்க… கண்களை திறந்து அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்த கணவனின் பார்வையை உணராமல் போனாள்.

“விளக்கை அணைச்சுட்டு கட்டிலில் வந்து படு” என்று சொன்னவன் மறுபக்கம் திரும்பி படுத்து விட, நிம்மதி பெருமூச்சுடன் விளக்கை அணைத்து விட்டு மறுபக்கம் வந்து படுத்தவளின் கண்களில் இருந்து கண்ணீர் வழியத் தொடங்கியது.

‘எனக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்குது?’ என்று எண்ணியவள் சிறுவயதிலேயே தன்னை விட்டு இறைவனிடம் சேர்ந்த தாய், தந்தையை நினைத்து அவளின் அழுகையில் கரைந்தவளின் இடுப்பில் வலுவான கரம் வந்து விழுந்து தன்னை நோக்கி இழுத்தது.

மிரட்சியுடன் பார்த்தவளின் கண்களில் இருந்த வழிந்த கண்ணீரை பார்த்தான். மென்மையாக இதழ்களால் அவளது கண்ணீரை ஒற்றி எடுத்து, அவளின் நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டான். அவளை அணைத்துக் கொண்டே அப்படியே உறங்கியும் போனான். அவன் உறங்கியதை உறுதிபடுத்திக் கொண்டவள் மெல்ல அவனது அணைப்பில் இருந்து விலக முயற்சித்தாள். பாதி தூக்கத்தில் இருந்தவன் தெரிந்து செய்தானோ… தெரியாமல் செய்தானோ… முன்னை விட அதிக வேகத்துடன் அவளை இழுத்து அணைத்தவன் அவளது தலையை எடுத்து  அவனது மார்பில் புதைத்துக் கொண்டு  உறங்கிப் போனான்.

ராசாத்தியால் தான் அவனுடைய செய்கையை துளியும் நம்ப முடியவில்லை.

எப்படி நம்ப முடியும்?… ஆறு மாதமாக அவள் பார்த்த பாண்டியன் வேறு ஒருவன் ஆயிற்றே… இன்று அவன் காட்டும் முகமும் அவளுக்கு புதிதாக இருந்தது.

பாண்டியன்… அழகன்… சிரித்தால் கம்பீரமாக இருப்பான். ஆனால் அவன் சிரித்து அவள் பார்த்தது இல்லை. அவன் அந்த வீட்டுக்கு வந்து சேர்ந்த அந்த ஆறு மாதத்தில் எத்தனையோ முறை கண் மண் தெரியாமல் அவளை அடித்து இருக்கிறான். அவள் பார்த்தது எல்லாம் அவனின் கட்டுக்கடங்காத கோபத்தை மட்டுமே…

கலைந்த தலையும், அழுக்கு தாடியுடன் தான் இருப்பான். திருமணத்தின்போது கூட அப்படியே தான் அவளுக்கு தாலி கட்டினான். முகத்தைக் கூட  சவரம் செய்யாமல் அவன் தாலி கட்டிய பொழுது இந்த திருமணத்திற்கு அவன் எந்த அளவிற்கு மதிப்பு கொடுக்கிறான் என்பது புரிய அவள் வயிற்றில் புளியைக் கரைத்தது.

அன்று காலையில் திருமணம் முடிந்த பிறகும் சரி… அதற்கு பின்னாலும் சரி அவனிடம் பேசவோ… ஏன் நிமிர்ந்து கூட பார்க்கக் கூட ராசாத்திக்கு தைரியம் இல்லையே.

அவளது குறிக்கோள் முழுக்க அந்த வீட்டில் இருந்து தப்பியோடுவதாகத் தான் இருந்தது. எப்படியும் திருமணத்திற்குப் பின் பாண்டியன் அவளை அடித்தே கொன்று விடுவான் என்று அவள் மனப்பூர்வமாக உறுதியாக நம்பினாள். அதன் விளைவே அவள் ஓட முயன்றதும்… அத்தைகளின் கண்களில் மாட்டி அவள் சூடு வாங்கியதும்.

ராசாத்தி இருப்பது அவள் மாமன் தயாளன் வீட்டில்… அவளது பத்தாவது வயதில் தாயும், தந்தையும் விபத்தில் இறந்த பிறகு அவளுக்கு தன்னுடைய வீட்டில் அடைக்கலம் கொடுத்தார் தயாளன்.

தயாளன் பேருக்கும்… அந்த மனிதருக்கும் துளி கூட சம்பந்தமே கிடையாது. நச்சுப் பாம்பை விட மோசமான மனிதன்.

சொந்த தங்கையின் மகள் என்று கூட பாராமல் அவளை கிட்டத்தட்ட ஒரு அடிமையாகவே நடத்தினார். அவரது முதல் மனைவி நீலவேணி… கல்யாணம் ஆகி ஐந்து வருடங்கள் குழந்தை இல்லாமல் இருந்ததை காரணம் காட்டி… மனைவியின் தங்கை சந்திராவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். செய்த பாவத்தின் பலனோ என்னவோ… சந்திராவிற்கும் குழந்தை இல்லை…

தம்பதிகள் மூவரும் எத்தனையோ கோவில்கள் ஏறி , இறங்கியும் அவர்களுக்கு குழந்தை பிறக்காமல் போகவே… வெளியில் எல்லாரிடமும் தங்கை மகளை தத்தெடுத்து வளர்க்கப் போவதாக சொல்லி அழைத்து வந்து தன்னுடைய வீட்டில் வைத்துக் கொண்டார்.

வெளியில் ஏதோ தியாகம் செய்வதைப் போல காட்டிக் கொண்டாலும் அதற்கு பின்னால் இருந்தது தங்கையின் கணவன் பேரில் இருந்த சொத்துக்கள்… அத்தனையையும் ராசாத்தி வீட்டுக்கு வந்த சில நாட்களிலேயே தன்னுடைய பெயருக்கு மாற்றி விட்ட நல்ல (!)உள்ளம் கொண்ட மனிதர் அவர். இப்பொழுது அவரிடம் இருக்கும் சொத்துகளில் பாதி சொத்து ராசாத்தியின் சொத்து தான். பாகம் பிரித்த சொத்துகளில் அவரது தங்கைக்கும், அவருக்கும் சரிபாதி பிரிக்கப்பட்டது. ராசாத்தியின் தந்தையின் சொத்துக்களும் சேர்ந்தாலும் தயாளன் ஊரில் உள்ளவர்களை ஏமாற்றி சேர்த்த சொத்தும் சேரவே அந்த ஊரிலேயே அவர் தான் பணத்தை பொறுத்தமட்டில் பெரிய மனிதராக இருந்தார்.

அந்த வீட்டில் இருந்த எல்லாரையும் பொறுத்தவரை ராசாத்தி அந்த வீட்டில் இருக்கும் உயிரற்ற ஒரு பொருள். அந்த வீட்டு வேலைகள் அனைத்தையும் ஒன்று விடாமல் செய்வது அவளின் பொறுப்பு.எல்லா வேலைகளையும் செய்தாலும்கூட அந்த வீட்டில் அவளுக்கு அடி கிடைக்கும். எந்தவிதமான அலங்காரமும் இன்றி பழைய பாவாடை சட்டையிலேயே ரதி போல நிற்பவளை

அத்தைகள் இருவரும் அளவுக்கு அதிகமாகவே வெறுத்தனர். குழந்தை இல்லாத அவர்கள் அவளை தங்களுடைய குழந்தையாகவே பாவித்து இருக்கலாம். ஆனால் அப்படி  உண்மையான பாசத்தை கொட்டுவதற்கும் மனதில் கொஞ்சமாவது மனித தன்மை இருக்க வேண்டும் இல்லையா?

அர்த்த ராத்திரியில் அந்த வீட்டிற்கு யாரேனும் வந்தாலும் கூட அவர்களுக்கு சமைத்து போட வேண்டியது அவளின் பொறுப்பு தான். துணி துவைப்பது, பாத்திரம் விளக்குவது என்று அத்தனை வேலைகளும் அவள் தலையில் தான். அவள் அந்த வீட்டிற்கு வந்த பிறகு அவளது இரு அத்தைமார்களில் ஒருவர் கூட வேலை செய்து அவள் பார்த்தது இல்லை. வேணியும், சந்திராவும் ஒருநாள் கூட அவள் மீது இரக்கம் காட்டியது கிடையாது. அவர்களின் இரக்கமில்லாத மனதை அறிந்ததால் தான் ஆண்டவன் அவர்கள் இருவருக்கும் குழந்தை பேற்றை கொடுக்கவில்லை என்று ஊரே பேசியது.

சின்னக் குழந்தையாக இருக்கும் பொழுதே அங்கே வந்தவளின் மீது இரக்கம் காட்டவோ, பாசம் வைக்கவோ அந்த வீட்டில் யாருமே இல்லாமல் போனார்கள். வீட்டு வேலையாட்கள் யாராவது அவளிடம் கொஞ்சம் பாசத்துடன் நடந்து கொண்டாலும் அடுத்த நாளே அவர்களின் வேலை இல்லாமல் போய் இருக்கும். வீட்டில் எத்தனையோ விஷேசம் நடக்கும்.. யார் யாரோ வந்து போவர்கள். எல்லாருக்கும் விதவிதமாக சமைத்து போடும் ராசாத்திக்கு கிடைப்பதென்னவோ பழைய சோறு தான். அதுவும் அவளுக்காக அவர்கள் கொடுத்த புழு வைத்த அரிசியைத் தான் சமைத்து சாப்பிடுவாள்.

முதல் நாள் வகை வகையாக சமைத்த சாப்பாட்டை சாப்பிடக் கூட நேரம் இல்லாமல் அடுத்த நாள் பழைய சோறைத் தான்  சாப்பிடுவாள். மறந்து போய்கூட நல்ல சாப்பாட்டை அவள் உண்டது கிடையாது.

புழுத்துப் போன அந்த சாதம் முதல் நாள் சாப்பிடுவதே கொடுமையாக இருக்கும். இரண்டாவது நாள் எனில் கேட்கவும் வேண்டுமா? நாற்றம் குடலைப் பிரட்டும். தெருவில் போட்டால் நாய் கூட சாப்பிடாத ஒன்று தான் அவளின் உணவு… அதையும் ஒருவேளை சாப்பிட மட்டும் தான் அவளுக்கு நேரம் இருக்கும் நள்ளிரவு ஒரு மணி வரை வேலையை முடித்து விட்டு படுப்பவளுக்கு தூங்கினால் போதும் என்று தான் இருக்கும்.

விடியற்காலை நாலு மணிக்கு எழுபவள் குளித்து விட்டு அந்த சாதத்தைத் தான் வாயில் திணித்துக் கொண்டு வேலையை பார்க்க ஆரம்பிப்பாள். வித விதமான சமையலை செய்யும் பொழுதெல்லாம் ஒரு யோகினியைப் போல செய்து முடிப்பாள். வருடக்கணக்கில் சமைத்த அனுபவம் சமையலில் அசத்தி விடுவாள். உப்பு, உறைப்பு எல்லாம் சரியாக இருக்கும். சாப்பாட்டில் உப்பு பார்ப்பதைக் கூட தன்னுடைய பதினைந்தாவது வயதோடு நிறுத்திக் கொண்டாள்.

மறக்கக் கூடிய நாளா அது… அன்றைய தினம் அவளுக்கு பிறந்த நாள்… அன்று சமைத்த உணவில் தனக்காக சாப்பிடுவதற்கு கொஞ்சத்தை ஒரு தட்டில் போட்டுக்கொண்டு வந்து அமர்ந்தவள் சாப்பிடும் நேரம் பார்த்தா அவளது அத்தைகளின் கண்ணில் பட  வேண்டும்?

“அதுக்குள்ளே வாய்க்கு உணக்கையா சோறு கேட்குதா உனக்கு? இப்ப வாய்க்கு ருசி கேட்கும்… அடுத்து உடம்புக்கா?” என்ற ரீதியில் அவர்கள் பேசிய பேச்சுக்கள் அவளது இதயத்தை யாரோ சூட்டுகோலால் திருகியதைப் போல இருந்தது.

அப்பொழுது அவள் அடைந்த சித்திரவதைகள் எதுவும் வார்த்தையில் அடங்காது. அந்த நாளை நினைக்கும் பொழுதே அவள் கண்களில் இப்பொழுது கூட கண்ணீர் நிற்காமல் வழியத் தொடங்கியது. அவளின் கண்ணீர் நிற்காமல் வழிந்து கொண்டே இருந்ததால் சட்டையில் படிந்த ஈரத்தின் விளைவாக ஒரு கட்டத்தில் தூக்கத்தில் இருந்து விழித்துக் கொண்டான் பாண்டியன்.

“தூங்கலையா நீ…” லேசான ஆச்சரியம் அவன் குரலில். மறுப்பாக தலை அசைத்தாள்.

“இப்படியே விடியற வரை பிழிஞ்சு பிழிஞ்சு அழுதுகிட்டே இருக்கப் போறியா?” என்று கேட்டவனுக்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமல் அவள் மௌனமாக இருக்க… இவளை இப்படியே விட்டால் சரிப்பட்டு வராது என்று புரிந்து கொண்டான்.

“ம்ச்… இப்போ எதுக்கு இந்த அழுகை… இன்னிக்கு தான் நமக்கு கல்யாணம் ஆகி இருக்கு… ஓ… இவன் எல்லாம் நமக்கு தாலி கட்டிட்டானேன்னு அழறியா?” என்று கேட்டவனின் கேள்வியில் பயந்து போய் மிரட்சியுடன் பார்த்தாள்.

“அதானே… நீ தான் என்னை கல்யாணம் செஞ்சுக்கப் பிடிக்காம வீட்டை விட்டு ஓட முயற்சி செஞ்சவளாச்சே… உன்கிட்டே இந்த கேள்வியை கேட்கிறதே தப்பு தான்…” என்று வார்த்தையால் சுட… தலை கவிழ்ந்து அவனின் வசவுகளை வாங்கிக் கொண்டாள் ராசாத்தி.

“ஆமா… இத்தனை நேரமா தூங்காம ஏன் முழிச்சுட்டு இருக்க… ஒருவேளை நான் தூங்கினதும் வீட்டை விட்டு ஓடலாம்ன்னு திட்டம் வச்சு இருக்கியோ”  என்று கேட்டவனின் கோபக் குரலில் அவளுக்கு தூக்கிவாரிப் போட்டது.

‘அப்படி ஒரு எண்ணம் அவள் மனதில் இருந்தது நிஜம் தானே… தாலி கட்டிய பிறகும் கூட தப்பி ஓட சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து அல்லவா அவள் காத்துக் கொண்டிருந்தாள்.

“என்னடி முழிக்கிற முழியே சரியில்ல.. அப்போ அப்படித் தான் திட்டம் போட்டு வச்சு இருந்தியா?” என்று அதட்ட… நின்று போன அழுகை மீண்டும் வரத் தொடங்கியது அவளுக்கு.

அவள் கண்களில் இருந்து வழியும் கண்ணீரைக் கண்டவன் சில நிமிடங்கள் பொறுத்துப் பார்த்தான். ஒரு கட்டத்திற்கு மேல் சகிக்க முடியாமல் அவளை இழுத்து அணைத்தவன் அவளின் இதழோடு இதழ் பொருத்தினான்.

கோபம், தாபமும் போட்டி போட… எதற்காக இதை செய்கிறான் என்பதை புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு இருந்தது அவன் செய்கை. அழுகையில் துடித்துக் கொண்டிருந்த அவள் இதழ்களின் துடிப்பு நிற்கும் வரை அவனது முற்றுகை தொடர்ந்தது. ஒற்றை முத்தத்தில் அவன் காட்டிய வேகம் அவளின் இதயத்தை குதிரை வேகத்தில் ஓட வைத்தது.

“எனக்கு அழுதா பிடிக்காது… இன்னொரு முறை உனக்கு  நேரடியா என்கிட்டே முத்தம் வேணும்னு கேட்க கூச்சமா இருந்தா மட்டும் அழு” என்று அழுத்தமாக சொன்னவன் அவள் முகத்தையே உற்றுப் பார்த்தான். பேயறைந்தது போல இருந்த அவள் முகத்தைப் பார்த்து உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான்.

“இப்போ வந்து படுத்து தூங்கு…” என்றவன் சட்டென்று அவளது புடவை முந்தானையை கையால் இழுக்க… ஒரு கையால் புடவையை இறுக பற்றியபடி பயத்தில் அவனை மிரட்சியோடு பார்த்தாள் ராசாத்தி.

“உன்னை எல்லாம் நம்ப முடியாது. என்கிட்டே இருந்து தப்பிக்கிறதா நினைச்சு ராத்திரி நான் தூங்கும் பொழுது ஓடினாலும் ஓடுவ…” என்று சொன்னவன் அவளது புடவை முந்தானையை தன்னுடைய கையை சுற்றி கட்டிக் கொண்டான்.

“புடவையை என்கிட்டே கொடுத்துட்டு அதே கோலத்தோட வெளியே போக மாட்டேனு நம்புறேன்” என்று சொன்னவன் மீண்டும் அவளை இழுத்து நெஞ்சில் சாய்த்துக் கொண்டு உறங்கத் தொடங்கினான்.

“நிம்மதியா தூங்கு… எதுவா இருந்தாலும் காலையில் பேசிக்கலாம்” என்று சொல்லிவிட்டு உறங்க… வெகுநேரம் அழுது கண்கள் சோர்ந்து இருந்ததாலோ அல்லது பாண்டியன் அவளின் வலி அறிந்து இதமாக நடந்து கொண்டதின்  காரணமாகவோ அவளையும் அறியாமல் கண்களை மூடி உறங்கத் தொடங்கினாள் ராசாத்தி.

 

 

Facebook Comments Box
What’s your Reaction?
+1
5
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here