வனமும் நீயே வானமும் நீயே 6

0
730

முதல் நாள் தனக்கு தாலி கட்டிய கணவனுடன் இத்தனை நாள் இருந்த அதே ஊரில் தான் வசிக்கப் போகிறோம் என்ற நினைவுடன் அவள் இருக்க… வண்டியோ திசை மாறிப் போனது. எங்கே போகிறோம் என்ற அவளின் கேள்விக்கு நேரடியாக  பதில் சொல்லாமல் அவன் பேசியது அவளை குழப்பத்திற்கு உள்ளாக்கியது.

அவள் கேள்வி கேட்கத் தொடங்கியதுமே அவன் வண்டியின் வேகத்தை அதிகரித்தது அவள் மேற்கொண்டு எதையும் கேட்டுவிடக் கூடாது என்பதற்காகவா? என்ற குழப்பத்தில் ஆழ்ந்தாள் ராசாத்தி . சில மணி நேர பயணத்திற்கு பிறகு வண்டி பூவனம் கிராமத்திற்குள் நுழைந்தது.

‘இந்த ஊரில் யார் இருக்கிறாங்க? இவரிடம் கேட்டாலும் வாயைத் திறந்து பதில் சொல்லுவார்னு எனக்குத் தோணலை’ என்று அவள் யோசித்துக் கொண்டிருக்கும் பொழுதே ஒரு வீட்டிற்குள் அவனது பைக் நுழைந்தது.

‘இது யார் வீடு?’

அவன் இறங்கவும் அவனது பின்னாலேயே அவளும் இறங்க… அவனது பைக் சத்தம் கேட்டு உள்ளே இருந்து ஒரு பெண்மணி வெளியே வந்து எட்டிப் பார்த்தார்.

“முகத்தை சிரிச்ச மாதிரி வச்சுக்கோ” என்ற அவனின் அதட்டலுக்கு காரணம் புரியவில்லை அவளுக்கு. இதுநாள் வரை யார் எது சொன்னாலும் மறுத்து பேசி பழக்கம் இல்லாததாலோ என்னவோ அவன் பேச்சை அப்படியே பின்பற்றுபவள் போல முயன்று முகத்தை சிரித்தார் போல வைத்துக் கொண்டாள்.

“மாப்பிள்ளையும் , பொண்ணும் வந்தாச்சு… ரேவதி அக்கா ஆரத்தி எடுத்துட்டு வாங்க” என்று உள்ளிருந்து ஒரு குரல் கேட்க திருதிருத்தாள் ராசாத்தி.

அவளது வியப்பிற்கு காரணம் இல்லாமல் இல்லை. அவளது சொந்த தாய் மாமன் வீட்டில் கூட அவர்கள் இருவரும் திருமணம் முடிந்து வந்த பிறகு, ஆரத்தி எடுப்பது, பால், பழம் சாப்பிடுவது போன்ற எந்த சம்பிரதாயமும் அவர்களுக்கு செய்யவில்லை.

அது போன்ற சம்பிரதாயங்கள் செய்ய வேண்டும் என்பது மறந்து போனதோ அல்லது விருப்பம் இல்லையோ என்ற ஆராய்ச்சியில் இறங்க ராசாத்தி இப்பொழுது தயாராக இல்லை. ஆனால் அதுகுறித்து அவளது மாமா  வீட்டு ஆட்கள் யாரும் கவலைப்பட்டதாகவும் அவளுக்கு தோன்றவில்லை.

அப்படி இருக்கையில் இந்த வீட்டு மனிதர்கள் எதற்காக அவளுக்கு செய்ய வேண்டும்? என்ற கேள்வி வண்டாய் தலையைக் குடைந்தது. அருகில் இருப்பவனின் இறுகிப் போன தோற்றம் அவன் வாயில் இருந்து கண்டிப்பாக முத்துக்கள் உதிராது என்று சொல்லி விட முயன்று பொறுமையை இழுத்து பிடித்துக் கொண்டு நிற்க… அந்த வீட்டின் உள்ளிருந்து கும்பலாக சிலர் வெளியே வந்தனர்.

அவர்களில் ஒரு நடுத்தர வயது பெண்மணியின் கைகளில்  இருந்த ஆரத்தி தட்டு ராசாத்தியின் வயதை ஒத்த ஒரு பெண்ணால் தட்டிப் பறிக்கப்பட்டது.

“ஏய்! லதா… என்ன செய்ற?”

“ம்.. பாண்டியன் மாமா பக்கத்தில் மாலையும் கழுத்துமா நிற்கத் தான் கொடுத்து வைக்கலை எனக்கு… ஆரத்தி கூட எடுக்கக் கூடாதா நான்?” என்றவளின் பார்வை ராசாத்தியின் மீது வெறுப்பைக் கக்கியது.

‘இந்தப் பொண்ணு ஏன் என்னை இப்படி பார்க்குது… ஏதோ அவளோட சொத்தை நான் எடுத்துக்கிட்ட மாதிரி’ என்று எண்ணியவள் விதிர்விதிர்த்துப் போனாள். அவளது சொத்து பாண்டியனா? அதை தான் உரிமை கொண்டாடுவதால் தான் இப்படி பார்க்கிறாளா?’

“ஏய்! பைத்தியக்காரி முதன்முறையா பொண்ணும், மாப்பிள்ளையும் வீட்டுக்கு வரும் பொழுது என்னடி உன்னோட ரோதனையா போச்சு… இதெல்லாம் கல்யாணம் ஆனவங்க செய்யணும்டி” என்று மறுத்து பேச… பாண்டியன் அவர்களை இடைமறித்தான்.

“விடுங்க கல்யாணி அக்கா… சின்னப் பிள்ளை ஆசைப்படுது செஞ்சுட்டு போகட்டும்” சிரித்த முகத்துடன் சொல்ல ராசாத்திக்கு தான் நடப்பதெல்லாம் கனவா அல்லது நிஜமா என்று புரியாத நிலை.

‘இவருக்கு யாருமே இல்லைன்னு தானே சொன்னாங்க… இப்போ என்ன இங்கே இருக்கும் அத்தனை பேரும் இவரை முறை வைத்து பேசுறாங்க…’

“ஏய் லதா… உனக்கு மட்டும் தான் அவரு மாமன் முறையா.. எனக்கும் தான் மாமன் முறை நானும் உன்னோட சேர்ந்து ஆரத்தி எடுப்பேன். தட்டை குடுடி” என்று இன்னொரு பெண்ணும் அங்கே வந்து வழக்கு வைக்க.. சுற்றி இருந்த எல்லாரும் சிரித்து வைத்தனர். பாண்டியன் உட்பட… ஏனோ அவளுக்கு அந்த சூழலை ரசிக்க முடியவில்லை.

பாண்டியனுக்கு யாருமே இல்லை என்ற அவளது நினைவு தவறானது மட்டும் இல்லாமல் இங்கே இருக்கும் வயசுப் பெண்கள் அவனை மாமன் முறை வைத்து கொஞ்சுவது அவளுக்குள் அனலைக் கிளப்பியது என்று தான் சொல்ல வேண்டும்.

“அடியே… உங்க சண்டை எல்லாம் அப்புறம்.. முதல்ல என் பையனையும், மருமகளையும் உள்ளே வர விடுங்கடி” என்ற குரலில் எல்லாரும் அமைதியாகி விட அவசர அவசரமாக ஆரத்தி எடுத்து அவர்களை உள்ளே அழைத்து சென்றனர். ராசாத்தி முதன்முதலாக அதிர்ந்தாள்.

‘அவரை பையன்னு சொல்றாங்களே..அப்படின்னா அவரோட அம்மாவா இவங்க? ஆனா… பார்த்தா அப்படி தெரியலையே… ரொம்ப சின்னவங்களா தான் இருக்காங்க… இவருக்கு அக்கா மாதிரி இருக்காங்க… இவங்க எப்படி அம்மா?’

“நல்லவேளை… ராகு காலம் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே வந்துட்டீங்க… முதலில் போய் பூஜை அறையில் விளக்கேத்தும்மா…” என்று ஒரு பெண்மணி சொல்ல… புரிந்தும் புரியாமலும் பூஜை அறையில் இருவரும் விளக்கேற்றி சாமி கும்பிட… பூஜை அறையில் இருந்த குங்குமத்தை எடுத்து அவளது நெற்றி வகிட்டில் அழுத்தமாக வைத்து விட்டான் பாண்டியன் . ராசாத்தியின் உடலில் மெல்லியதாக ஒரு சிலிர்ப்பு ஓடியது.

முதல் நாள் தயாளன் வீட்டில் அவர்களுக்கு என்னென்ன சடங்குகள் செய்யாமல் இருந்தார்களோ அது அத்தனையும் அங்கே செய்தார்கள்.

வெட்கமா, கூச்சமா, புது சூழலா, கணவனின் அருகாமை தந்த மயக்கமா? அல்லது புதிதாக அவள் மனதில் ஏற்பட்டு இருக்கும் குழப்பமா? இன்னதென்று இனம் பிரிக்க முடியாமல் அவர்கள் சொன்ன அத்தனையும் மறுபேச்சு பேசாமல் செய்தாள் ராசாத்தி.

“எழுந்திரு ராசாத்தி அம்மா கிட்டே ஆசிர்வாதம் வாங்கிக்கலாம்” என்று சொன்னவன் அவளது கலக்கத்தை  கவனிக்காதவன் போல அவளது கையைப் பற்றி இழுத்துக் கொண்டு ரேவதியின் கால்களில் விழுந்து ஆசி வாங்கினான்.

“தீர்க்க சுமங்கலியா இரும்மா…” என்று வாழ்த்தியவர் இருவரையும் சாப்பிட வைத்து ஒரே அறையில் ஓய்வெடுக்க சொல்லி அனுப்ப… தனிமையில் அவளது கேள்விகளை எப்படி எதிர்கொள்வது என்று பயந்தானோ என்னவோ “எனக்கு வெளியில் வேலை இருக்கு” என்று சொல்லிவிட்டு காற்றாக அந்த இடத்தை விட்டு மறைந்தான்.

தயாளனின் வீட்டை ஒப்பிடும்போது இது ஒன்றும் அந்த அளவிற்கு ஒன்றும் பெரிய வீடில்லை தான். ஆனாலும் ஓரளவிற்கு வசதியான வீடு தான். கீழே பெரிய ஹாலும், ஒரு படுக்கை அறையும், மாடியில் இரண்டு அறைகளும் கொண்ட சாதாரண வீடு தான். வீட்டின் முன்னும், பின்னும் காலியாக இருந்த இடத்தில் தோட்டம் போட்டு முறையாக பராமரித்து வருவது அதன் அழகிலேயே தெரிந்தது.

ஏதேதோ யோசித்தபடி படுக்கையில் படுத்தவள் அப்படியே உறங்கியும் போனாள். மாலை ஆறு மணி அளவில் ரேவதி வந்து எழுப்பும் வரையில் அவளது உறக்கம் தொடர்ந்தது.

“ராசாத்தி … எழுந்திரிமா…” என்ற குரலில் அலறியடித்துக் கொண்டு எழுந்தாள் பழைய நினைவில்…

“இதோ காபி போட்டு எடுத்துட்டு வர்றேன் மாமா” என்று சொன்னவள் தன்னையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த ரேவதியைப் பார்த்ததும்தான் , தான் இருக்கும் இடமே அவளுக்கு நினைவுக்கு வந்தது.

“எதுக்கு இத்தனை பதட்டம் ராசாத்தி… எழுந்து முகம் கழுவிட்டு வந்து இந்த காபியை குடி… ஊர்க்காரங்க யாராவது வந்தாலும் வரலாம்… தம்பியும் இப்போ வந்துடுவான்… அதுக்குள்ள தலையை சீவி பளிச்சுன்னு தயாராகி இரு” என்று சொல்ல.. தலையை மட்டும் ஆட்டி வைத்தவளை யோசனையுடன்  பார்த்துக் கொண்டே  அங்கிருந்து கிளம்பினார்.

வேகமாக போய் முகம் கழுவியவள் முகத்தையும், தலையையும் திருத்திக் கொண்டு காபியை குடிக்கத் தொடங்கும் பொழுது உள்ளே வந்தான் பாண்டியன். உல்லாசமான அவனுடைய விசில் சத்தம் கேட்டு திரும்பியவள் அசந்து போனாள் கணவனைப் பார்த்து.

இதுநாள் வரை ஒரு அழுக்கு லுங்கியுடனும், புதர் போல மண்டிக் கிடந்த தாடியுடனும், அழுக்கான முகத்துடனும் இருந்தவன் இவன் தானா? சத்தியம் செய்து யாரும் சொன்னாலும் கூட நம்புவது கடினம். திருமணம் அன்று கூட அவன் சவரம் செய்யாத முகத்துடன் தான் இருந்தான் என்பது அவளின் நினைவில் வந்து போனது.

தலைமுடியை சீராக வெட்டி… தாடியை சுத்தமாக எடுத்து விட்டு… சந்தன நிறத்தில் முழுக்கை சட்டையும், வெள்ளை நிறத்தில் வேட்டியும் அணிந்து கம்பீரத்தின் மறு இலக்கணமாக இருந்தவனை கண் சிமிட்டாமல் பார்த்தாள் ராசாத்தி.

“என்னடி பார்வை எல்லாம் பலமா இருக்கு…” என்று பேசியபடி நெருங்கிய கணவனைப் பார்த்தவளின் முகத்தில் பிரமிப்பையும் தாண்டி கேள்வியும், குழப்பமும் இருந்தது.

“அம்மா கோவிலுக்கு போய்ட்டு வர சொன்னாங்க… போகலாமா?” என்று கேட்டவன் அவளது கன்னங்களை மெல்ல வருட… ராசாத்தியிடம் அதற்குண்டான எதிர்வினையே இல்லை. அவள் பார்வை இன்னமும் அவன் முகத்திலேயே பதிந்து இருந்தது.

‘பார்ப்பதற்கு கண்ணியவான் தோற்றம் கொண்ட இவன் இத்தனை நாளாய் அப்படி ஒரு அழுக்கு உருவத்தில் ரவுடியாக இருந்தது ஏன்? மாமாவின் மீது இருக்கும் அன்போ அல்லது மரியாதையாகவோ இருக்கும் பட்சத்தில் இன்று காலையில் நடந்த சிறு விவகாரத்தை காரணமாக வைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்புவானேன்?’

ராசாத்தியை பொறுத்தமட்டில் அது சின்ன விஷயம் தான்.. எப்பொழுதும் அவளுக்கு நடப்பது தான். காபி தாமதமாக வந்தாலோ, சாப்பாடு செய்ய தாமதம் ஆனாலோ அந்த வீட்டு ஆட்கள் அதை அவள் மேல் பல முறை ஊற்றி இருக்கிறார்கள். எனவே அவளைப் பொறுத்தவரை அது ஒரு அன்றாட அலுவல்… அதற்கு கோபித்துக் கொண்டு கிளம்பியவன் அவனது வீடாக அந்த ஊரில் இருந்த குடிசை வீட்டில் இருந்து கோணிப்பை நிறைய பணத்தை வைத்திருக்கிறான். அந்தப் பணத்தையும் செலவழித்து ராசாத்திக்கு வேண்டியவற்றை வாங்கிக் குவிக்கிறான். இது அத்தனையும் தாண்டி இங்கே அவனுக்கு என்று ஒரு குடும்பமும், உறவினர்கள் பட்டாளமும் இருக்கிறது. அவளுக்குத் தெரிந்து இது எதுவும் தயாளனுக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.

‘இதை எல்லாம் ஏன் மறைத்தான்? எதற்காக அவளது மாமா  வீட்டில் வேலை பார்த்தான்? எதற்கு அவளை திருமணம் செய்து கொண்டான்?’ இப்படி கேள்விகள் சரம் தொடுக்க யோசிக்க முடியாமல் கலங்கி நின்றாள் அவள்.

அவளது பார்வையில் ஒரு கணம் தடுமாறியவன் அடுத்த நொடியே தன்னை சமாளித்துக் கொண்டான்.

“இந்தப் பார்வை எல்லாம் ராத்திரிக்கு பார்த்துக்கலாம்.. இப்போ கிளம்பு” என்றவன் அவளை இழுத்துக் கொண்டு கீழே செல்ல… ஹாலில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்த ரேவதியிடம் சொல்லிக் கொண்டு இருவரும் கோவிலுக்கு பைக்கில் சென்றனர்.

பாண்டியன் கோவில் வரும் வரையிலும் அவளிடம் எதுவும் பேசவில்லை.

கோவில் வாசலில் இருந்த பூக்கடையில் அவளுக்காக பூ வாங்கிக் கொடுத்தவன் அதை அவள் வைத்துக் கொண்டதும் திருப்தியான பாவனையுடன் உள்ளே சென்றான். ஆனால் அதன்  பிறகும் கூட ஏதோ தீவிர சிந்தனையில் இருப்பதைப் போலவே இருந்தான்.

ராசாத்திக்கு ஆண்டவனின் சந்நிதானத்தில் எதையுமே வேண்டிக் கொள்ள வேண்டும் என்று தோன்றவில்லை. அவளுக்கு வாய்த்திருக்கும் இந்த புது வாழ்வு அவளுக்கு வரமா,சாபமா என்பதைக் குறித்து தெளிவில்லாமல் இருந்தாள்.

“சாமி கிட்டே என்ன வேண்டிக்கிட்டே” இருவருக்கும் இடையில் இருந்த மௌனத்தை கலைத்தான் பாண்டியன். ஏதோ சொல்வதற்கு வாயை திறந்தவள் வீம்புடன் வாயை இறுக மூடிக் கொண்டாள்.

“என் கிட்டே சொல்ல மாட்டியா?” கெஞ்சலும், கொஞ்சலுமாக ஒலித்த குரலில் ராசாத்தியின் வீம்பு இன்னமும் முறுக்கிக் கொண்டது.

“வேண்டினதை வெளியே சொன்னா பலிக்காது” என்றாள் மொட்டையாக…

“அது மத்தவங்களுக்கு… நான் உனக்கு புருஷன்… என்கிட்டே என்ன ரகசியம் வேண்டி இருக்கு… சும்மா சொல்லு” என்று அவளை ஊக்க… ராசாத்தி நடப்பதை நிறுத்தி விட்டு திரும்பி அவனை ஒரு பார்வை பார்த்தாள்.

‘நானும் உன்னுடைய பொண்டாட்டி தான். எனக்குத் தெரியாமல் உன்னுடைய மனதில் எந்த ரகசியமும் இல்லையா?’

நேருக்கு நேராக அவள் பார்த்த பார்வையின் பொருள் என்னவென்று அவன் அறிய மாட்டானா என்ன? அசட்டையாக தோளைக் குலுக்கிக் கொண்டு முன்னே நடக்க ஆரம்பித்தான்.

“நான் என்ன வேண்டிக்கிட்டேன்னு கேட்க மாட்டியா ராசாத்தி?”

“…”

“என் பொண்டாட்டி கூட சேர்ந்து நூறு வருஷம் வாழணும்… அப்புறம் வருசத்துக்கு ஒண்ணுன்னு ஒரு பத்து பிள்ளை பெத்துக்கணும்… அப்புறம்…” என்று அவன் பேசிக் கொண்டே போக ஏனோ அவனது பேச்சு ராசாத்தியின் மனதை கொஞ்சமும் அசைக்கவில்லை. அன்று காலையில் ஆற்றங்கரையில் அவளுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியில் பத்தில் ஒரு பங்கு கூட இப்பொழுது அவள் மனதில் இல்லை.

அவளது கவனம் அங்கில்லாததை உணர்ந்த பாண்டியன் மேற்கொண்டு எதுவும் பேசாமல் வீட்டுக்கு அழைத்து சென்றான். வேகமாக அறைக்குள் நுழைந்தவளின் பின்னோடு வந்தவன் அவளது தோளை தன்புறமாக திருப்பி மென்குரலில் பேசினான்.

“கல்யாணம் ஆகி முதன்முறையா கோவிலுக்கு போய்ட்டு வர்றோம்… கொஞ்சம் சிரிச்ச முகமா இருக்கலாம் இல்லையா” என்றான் தணிவாக.

“…”

“ராசாத்தி… உன்கிட்டே தான் கேட்கிறேன்… பதில் சொல்லு” அவன் கைகளில் அழுத்தம் கூடியது.

“எல்லாம் வேசம்… எதுவும் நிஜமில்லே… என்னவோ பொய்யா…” என்று ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் பேசினாள் ராசாத்தி. அவள் மனதில் கணவனின் உருவ மாற்றமே பெரும் குழப்பமாய் இருந்தது.

“போதும் நிறுத்துடி… என்னடி விட்டா ரொம்ப பேசுற… சின்னப் பொண்ணாச்சேன்னு பார்த்தா நீ அளவுக்கு அதிகமா பேசுற… எது பொய்? எது நிஜமில்லை? எது வேசம்? நமக்கு நடந்த கல்யாணம் நிஜம்… நான் உன்னோட புருஷன் அதுவும் நிஜம் தான்… இதுல எதுவும் இனி மாறாது… உன்னால இனி மாற்றவும் முடியாது. இன்னொருமுறை இப்படி பேசினே… கொன்னுடுவேன் ராஸ்கல்” என்று வெறி பிடித்தவன் போல கத்தியவன் அவளை கீழே தள்ளி விட்டு அறையை விட்டு வெளியேற ராசாத்தி அப்படியே சுவற்றில் சாய்ந்து அழத் தொடங்கினாள்.

 

 

 

 

 

 

 

 

Facebook Comments Box
What’s your Reaction?
+1
4
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here