ஸ்ரீரங்கத்து ராட்சசி அத்தியாயம் 3

0
152

அத்தியாயம் 3
நிச்சயதார்த்த விழா இனிதே நிறைவடைந்து மற்ற உறவினர்கள் சென்று விட… சிரஞ்ஜீவியின் பெற்றோரும், அவனது பாட்டியும் மட்டும் வாணியின் வீட்டிலேயே அவனது வருகைக்காக காத்திருந்தார்கள். நள்ளிரவைத் தாண்டிய பிறகு… அதீத களைப்புடன் வீடு வந்து சேர்ந்தான் சிரஞ்ஜீவி.
“என்னடா இவ்வளவு லேட்டா வர்ற? சாப்பிட்டியா இல்லையா?” என்றார் சற்றே வருத்தத்துடன் அவனது தாயார் ரேணுகா.
திருமண நிச்சயதார்த்த உணவைக் கூட உண்ணாமல் … அவனுடைய வாழ்வில் முக்கியமான ஒரு நாளை சரி வர கொண்டாட முடியாமலும் இப்படி ஒரு வேலையில் மகன் இருப்பது அவருக்கு உள்ளுக்குள் ஒரு வருத்தம் உண்டு.
“எங்கேம்மா சாப்பிட… ஏதாவது கொடுங்க.. ரொம்ப பசிக்குது.. வர்ற வழியில் தள்ளுவண்டி கடை கூட இல்லை”
“இருடா எடுத்துட்டு வர்றேன்” என்று சொன்னவர் நிச்சயத்திற்காக சமைத்த உணவை சூடு செய்து எடுத்து வர அடுப்படிக்கு நுழைய… பேச்சு சத்தம் கேட்டு வீட்டில் இருந்த மற்றவர்களும் எழுந்து வந்தனர்.
ஜீவா சாப்பிட்டு முடிக்கும் வரை யாரும் எதுவும் பேசவில்லை. அதீத பசியில் இருந்தவன் வேகமாக உணவை உண்ணுவதை கவலையுடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள் அனைவரும்.

“சரி ஜீவா… என்னோட ரூமில் நீ வந்து தூங்கு… உங்க அம்மாவும், அத்தையும் மது கூட தூங்கட்டும்”
“இல்லை மாமா எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு… நீங்க எல்லாரும் போய் படுங்க…” என்று சொன்னவன் மற்றவர்கள் பேச இடம் கொடுக்காது தன்னுடைய லேப்டாப்பை எடுத்து வைத்து வேலை செய்யத் தொடங்கினான். அவனை தொந்தரவு செய்ய மனமில்லாமல் எல்லாரும் அங்கிருந்து விலகி விட… மதுர வாணி மட்டும் அங்கேயே தேங்கி நின்றாள்.
“என்னாச்சு ஜீவா?”
“ம்ச்… என்னத்த சொல்ல?”
“ஏன் இவ்வளவு சலிப்பு?”
“மார்ச்சுவரில இருந்த டேவிட்டோட பாடி காணாம போய்டுச்சு”
“அதெப்படி காணாம போகும்… அங்கேயே வாட்ச்மேன் இருந்து இருப்பார் தானே?”
“பாடியை மார்ச்சுவரி உள்ளே கொண்டு வந்து வைக்கிறதுக்கு முன்னாடி ஹாஸ்பிடல் டீன் கிட்டே பேசுறதுக்கு கான்ஸ்டபிள் போய் இருக்கார். அந்த நேரத்தில் பாடி காணாம போய்டுச்சு”
“பாடி பக்கத்தில் ஒருத்தரும் இல்லையா? அவர் நிவிஷாவோட பழைய மேனேஜராச்சே”
“ஹ… கவர்ச்சி கன்னி சில்க் ஸ்மிதா இறந்து போனப்போ அவங்க உடம்பை கண்டுக்கவே ஆள் இல்லாம இருந்துச்சாம்… தெரியுமா? உயிரோட இருக்கிற வரைக்கும்தான் இங்கே எல்லாருக்கும் மதிப்பு. இறந்த பிறகு அது எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும் சரி… அவங்களுக்கு இங்கே மதிப்பு இருக்காது.”
“ஹாஸ்பிடலில் சிசிடிவி இருக்குமே?”
“நம்ம கவர்ன்மென்ட் ஹாஸ்பிடலில் எப்போ அதெல்லாம் சரியா இருந்துச்சு? இரண்டு நாள் முன்னாடி வரை நல்லா இருந்துச்சாம்… அதுக்கு அப்புறம் ஏதோ ரிப்பேர் ஆகிடுச்சாம்” என்றவனின் குரலில் அத்தனை ஆதங்கம் இருந்தது.
“சரி ஜீவா… தடம் தெரியாம மறைஞ்சு போறதுக்கு அதென்ன சின்ன பொருளா? பிணத்தை எப்படி துளி கூட யாருக்கும் சந்தேகம் வராத மாதிரி அங்கே இருந்து எடுத்துட்டு போக முடியும்? கண்டிப்பா யாராவது ஒருத்தர் பார்த்து இருப்பாங்க தானே?”
“சின்னப் பிள்ளை மாதிரி பேசாதே மது… ஜி.ஹெச்ல ஒரு நாளைக்கு எத்தனையோ ஆயிரம் பேர் வர்றாங்க… அதுல யாரை கண்டுபிடிச்சு எப்படி விசாரிக்கிறது?”
“அது கஷ்டம் தான். நீ அங்கே வேலை செய்ற ஆட்களை விசாரிச்சு பார்க்கலாமே?”
“அதைத்தான் இவ்வளவு நேரம் செஞ்சுட்டு வர்றேன்… யாருக்கும் கவனிக்கலையாம்… வந்து இருக்கிற நோயாளிகளை பார்க்கவே எங்களுக்கு நேரம் போதலை… இதுல இதையெல்லாம் நாங்க எங்கே பார்க்கிறதுன்னு என்னையே திருப்பி கேள்வி கேட்கிறாங்க”
“நியாயம் தானே ஜீவா”
“என்ன நியாயம்? அங்கே வேலை பார்க்கிற அத்தனை பேரில் ஒருத்தர் கூட பார்க்கலை… அப்போ டேவிட்டோட பாடி எங்கே போச்சு?… எப்படி போச்சு? வர்ற வழியில் என்னோட மேலதிகாரி கண்ணனை பார்த்துட்டு தான் வர்றேன். மனுஷன் கிழிகிழின்னு கிழிச்சு தோரணம் போட்டுட்டார். மேற்கொண்டு இந்த கேசை எப்படி கொண்டு போறதுன்னு தெரியாம முழிச்சுட்டு இருக்கேன்”
“ரொம்ப யோசிக்காதே ஜீவா… கொஞ்ச நேரம் தூங்கி எழுந்திரி… காலையில் தெளிவா உட்கார்ந்து யோசிச்சா… கண்டிப்பா ஏதாவது க்ளு கிடைக்கும்”
“ம்ம்ம்…” என்றவன் மேற்கொண்டு வேலை செய்ய தோன்றாமல் அவளுடைய தந்தை உறங்கிக் கொண்டிருந்த அறைக்குள் சென்று விட்டான். மதுவும் கேஸ் குறித்து யோசித்தபடியே உறக்கத்தில் ஆழ்ந்து விட்டாள்.
காலையில் எழுந்ததும் முதல் வேலையாக சிரஞ்ஜீவியைத் தேடிப் போனாள் மது. ஆனால் அவன் விடியும் முன்னரே கிளம்பிப் போய் விட்டதாக தகவல் தெரியவர… ஏனோ அவளுக்குள் லேசான வருத்தம்.
காலை உணவை உண்டு முடித்து விட்டு அவனின் பெற்றோரும், பாட்டியும் கிளம்பி சென்று விட… வீடே அமைதியில் மூழ்கியது. அடுத்த ஒரு வாரம் ஜீவாவிடம் இருந்து அவளுக்கு எந்த தகவலும் இல்லை. அவள் போனில் அழைத்தாலும் கூட ஜீவா அவளது அழைப்பை ஏற்கவே இல்லை.
மதுவின் அழைப்பை அவன் நிராகரித்ததால் அவளுக்கு ஜீவா மீது கோபம் ஏற்படவில்லை. மாறாக அவனைப் பற்றிய கவலை எழுந்தது.
‘என்ன மாதிரியான பிரச்சனையில் இருக்கிறானோ’ என்று. டேவிட்டின் பிணத்தை கண்டுபிடித்தானா இல்லையா? என்று தெரியாமல் அவள் தவித்தாள்.
நாட்கள் கடந்து சென்றன… சரியாக பத்தாம் நாள் அவளது வீட்டில் எல்லாரும் கோவைக்கு கிளம்பிக் கொண்டிருந்தார்கள்.
அன்றைய தினம் சிவ ராத்திரி… கோவையில் இருக்கும் பிரபல சாமியார் ரூபாநந்தாவின் ஆசிரமத்தில் விசேச பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். பெரும் கூட்டமாக பக்தர்கள் அலை மோதுவார்கள். ஆறு மாதத்திற்கு முன்பே முன்பதிவு செய்து இருந்ததால் அவர்களால் இந்த முறை அங்கே போக முடிகிறது. ஏற்கனவே சில வருடங்கள் வெகுவாக முயன்றும் அவர்களுக்கு டிக்கெட் கிடைக்கவில்லை. இந்த வருடம் மதுர வாணி தான் ஆன்லைனில் டிக்கெட் பதிவு செய்திருந்தாள்.
“அம்மா எல்லாரும் ரெடியா? அத்தையும், மாமாவும் வழியில வண்டியில் ஏறிப்பாங்க தானே?”
“ஆமா மது… அதெல்லாம் சொல்லியாச்சு… அவங்க ரெடி… நாம கிளம்புவோம்” என்று வேனில் கிளம்பியவர்கள் ஜீவாவின் வீட்டிற்கு போனால் அங்கேயே நிலைமை வேறுவிதமாக இருந்தது.
வாசலில் இருந்த ஜீவாவின் பைக் அவன் வீட்டில் இருப்பதை சொன்னது.
‘இந்நேரம் வீட்டில் இருக்க மாட்டானே! என்னாச்சு? ஒருவேளை உடம்பு சரி இல்லையோ’ என்ற ரீதியில் மது யோசித்தாள்.
“வாங்க அண்ணி… போகலாம்..” காரில் இருந்து இறங்காமல் காமாட்சி அழைக்க… வீட்டின் வெளியே கூட வராமல் தர்மராஜ் மட்டும் உள்ளிருந்தே குரல் கொடுத்தார்.
“நாங்க வரலை தங்கச்சி… நீங்க போய்ட்டு வந்துடுங்க” என்று குரல் மட்டுமாக வர… முருகனும், காமாட்சியும் ஒருவரையொருவர் அர்த்தத்துடன் பார்த்துக் கொண்டார்கள்.
மதுர வாணிக்கு காரணம் புரியவில்லை.
‘ஏன் இப்படி?… வெளியே வந்து கூட பேசாமல்’
“நான் உள்ளே போய் அவங்களை கூட்டிட்டு வர்றேன்மா” என்று சொல்லிவிட்டு வேனை விட்டு இறங்க முயல… அவளை இருவரும் தடுத்தனர்.
“வேண்டாம் மது… நேரம் ஆகிடுச்சு. நாம போகலாம்”
“இல்லப்பா… மாமா…” தயக்கத்துடன் வெளிவந்தது அவள் குரல்
“அவங்க தான் வரலைன்னு சொல்றாங்களேமா…”
“என்னாச்சுன்னு கேட்டுட்டு வரலாமே”
“திரும்பி வரும் பொழுது பேசிக்கலாம் மது” என்று குரலில் அழுத்தத்தைக் கூட்டி அவர் பேச, மேலும் வாதாட மனமில்லாமல் மௌனமாகி விட்டாள் மதுர வாணி.
இரவு முழுக்க ரூபாநந்தாவின் ஆசிரமத்தில் பூஜையில் இருந்தாலும் அவள் மனது அதில் லயிக்கவில்லை.
‘ஏன் இந்த ஒதுக்கம்? நாளைக்கு டிரஸ் எடுக்க வேற போகணும். இப்படி ஒதுங்கிப் போனா என்ன அர்த்தம்? இதை பேசியே தீரணும்’ என்று முடிவெடுத்தவளால் வெகுநேரம் அங்கே இருக்க முடியவில்லை. ஒருவழியாக பொழுதை நெட்டித் தள்ளிவிட்டு விடியற்காலை மீண்டும் வீட்டுக்கு திரும்பும்போது டிரைவரிடம் வண்டியை நேராக ஜீவாவின் வீட்டிற்கு ஓட்டுமாறு சொல்ல… தூக்க கலக்கத்தில் இருந்த மதுவின் பெற்றோர்களும் அதை கவனிக்கவில்லை.
காலை ஏழு மணி அளவில் ஜீவாவின் வீட்டு வாசலில் வேன் நிற்க… யாரையும் எழுப்பாமல் டிரைவரிடம் காத்திருக்கும்படி சொல்லி விட்டு அவள் மட்டுமாக வீட்டுக்குள் நுழைந்தாள்.
காலை நேரத்திலேயே ஜீவாவின் பாட்டி ரஞ்சிதத்தின் குரல் தெருமுனை வரை கேட்டது.
“இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போகலை. ஒழுங்கா இந்த கல்யாணத்தை நிறுத்துங்க. இந்த கல்யாண பேச்சை ஆரம்பிச்சதில் இருந்து எல்லாமே தப்பும் தவறுமா தான் நடக்குது. அந்த மது ஒரு ராசி கெட்டவ. நம்ம ஜீவா எப்படி இருந்தான்? இப்போ பையன் முகத்தில் களையே இல்லை. தங்கச்சி பொண்ணு வாழ்க்கையைப் பார்த்து உங்க பையன் வாழ்க்கையில் மண்ணு அள்ளி போடாதீங்க மாப்பிள்ளை”
வீட்டிற்குள் நுழைவதற்காக காலை தூக்கியவள் மின்சாரத்தால் தாக்கப்பட்டதைப் போல அப்படியே நின்று விட்டாள்.
‘என்ன சொல்றாங்க இவங்க… என்ன நடக்குது இங்கே… கல்யாணத்தை ஏன் நிறுத்தணும்? நான் என்ன செஞ்சேன்?’ அவளின் அனுமதியின்றி கண்களில் இருந்து கண்ணீர் நிற்காமல் வழியத் தொடங்கியது.

Facebook Comments Box
Click to rate this post!
[Total: 1 Average: 4]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here