ஸ்ரீரங்கத்து ராட்சசி அத்தியாயம் 4

0
240

 

அத்தியாயம் 4
பிரபல துணிக்கடையின் உள்ளே பட்டுப் பிரிவில் புடவை எடுத்துக் கொண்டு இருந்தார்கள் இரு வீட்டாரும் சேர்ந்து. ஒருவர் முகத்திலும் துளி கூட மகிழ்ச்சி இல்லை. ஜீவா கண்களால் மதுவிடம் கெஞ்சிக் கொண்டிருந்தான். அவனை அவள் பார்த்தால் தானே?
அவன் மட்டும் இல்லை… அவனது தாய், தந்தை இருவருமே கண்களில் லேசான மன்னிப்பை வேண்டியபடி தான் இருந்தார்கள். காமாட்சி அவர்களை மன்னித்தாலும் முருகன் அந்த விஷயத்தை எளிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்பது அவரது முக பாவனையிலேயே தெரிந்தது.
“மது இந்த சிகப்பு கலர் புடவையைப் பாரேன்… உனக்கு ரொம்ப பொருத்தமா இருக்கும்” பேசியபடியே புடவையை அவளது தோளில் வழிய விட்டு கண்ணாடியில் அவளது பிம்பத்தை அவளுக்கு காட்டினான்.
அவளது பிம்பத்தை அவன் ரசிக்க… அவளோ ஏறெடுத்தும் பார்க்காமல் வேறொரு புடவையை தேர்ந்தெடுத்தாள்.
“அப்பா… அந்த பச்சை கலர்ல இருக்கிற புடவையை பாருங்களேன். அது எனக்கு அழகா இருக்குமா?” என்று தந்தையை முன்னிலைப்படுத்தி பேச… ஜீவாவின் முகம் கறுத்தது.
அவனது மன்னிப்பை அவள் ஏற்கவே இல்லை.
அவனுக்கு உடை தேர்ந்தெடுக்கும் பொறுப்பையும் அவளது பெற்றோரின் வசம் ஒப்படைத்துவிட்டு ஒரு ஓரமாக அமர்ந்து போனை நோண்டத் தொடங்கினாள்.
துணி, நகைகள் எல்லாம் எடுத்த பிறகு ஒரு உணவகத்தில் உண்டு முடித்து வீடு திரும்பிய பின்னரும் கூட அவளின் பாராமுகம் தொடர்ந்தது. ஜீவாவின் முகம் வேதனையில் சுருங்க… அவனது பெற்றோரை தனியாக வண்டியில் அனுப்பி விட்டு மதுர வாணியின் வீட்டிற்குள் நுழைந்தான்.
அவன் வீட்டிற்குள் நுழைந்ததும் அவனை உறுத்தியது வீட்டினுள் நிலவிய அசாத்திய அமைதி. மது இருக்கும் இடத்தில் எப்பொழுதும் கலகலப்பு நிறைந்து இருக்கும். மாறாக இன்று நிலவிய அமைதி அவனுக்கு குற்ற உணர்வை எழுப்பியது.
“மாமா நான் மது கிட்டே கொஞ்சம் பேசணும்”
முருகன் மறுத்து பேசாமல் அமைதியாக இருந்ததே அவனுக்கு போதுமானதாக இருக்க… மதுவின் அறைக்குள் நுழைந்தான் சிரஞ்ஜீவி. கட்டிலில் காலை கட்டிக்கொண்டு அமர்ந்திருந்தவள் அவனது வருகையை உணர்ந்தாலும் அவனை நிமிர்ந்தும் பார்க்கவில்லை.
“மது” தயக்கத்துடன் அழைத்தான்.
“…”
“பேச மாட்டியா?”
“…”
“அம்மாச்சி அப்படி பேசினதுக்கு என் மேல என்னடி கோபம்”
“அவங்க பேசினப்போ நீ வாயை மூடிட்டு இருந்தியே.. அதுக்கு என்ன அர்த்தம்? நீயும் என்னை ராசி இல்லாதவள்னு நினைக்கறியா?” சுய பச்சாதாபத்தில் அவளுக்கு கண்கள் குளம் கட்டியது.
“நான் பேசாம இருந்ததுக்கு காரணம் இருக்கு மது… ஆனா கண்டிப்பா அம்மாச்சி சொன்ன காரணம் இல்லை”
‘நீயே பேசு’ என்பது போல அவள் பார்க்க… அவன் தொடர்ந்தான்.
“முதல் காரணம் நான் சஸ்பெண்டு ஆகி இருக்கிற இந்த நேரத்தில் நம்ம கல்யாணம் நடக்கிறதில எனக்கு இஷ்டம் இல்லை. கல்யாணத்துக்கு வர்ற எல்லாரும் இதை ஒரு விஷயமா எடுத்து பெருசு பண்ணி பேசுவாங்க. அது எனக்கு பிடிக்கலை.
இரண்டாவது காரணம் நீ நம்ம வீட்டுக்கு வரும் பொழுது அந்த நிமிஷத்தை நம்மை சுத்தி இருக்கிற எல்லாரும் கொண்டாடணும்னு ஆசைப்படறேன். மனசில சின்ன உறுத்தல் கூட யாருக்கும் வரக் கூடாதுன்னு நினைச்சேன்.”
“அதுக்காக அந்த கிழவி என்ன பேசினாலும் நீ வாயை மூடிக்கிட்டு இருப்பியா?” கோபம் இன்னமும் குறைந்தபாடில்லை அவளுக்கு.
“ஹே… வயசானவங்க அம்மு… அவங்க கிட்டே நம்ம மறுத்து பேசினா அவங்களுக்கு கோபம் தான் ஜாஸ்தி ஆகுமே தவிர… நம்ம சொல்றதை புரிஞ்சுக்க மாட்டாங்க. அம்மாச்சிக்கு ஆரம்பத்தில் இருந்தே இந்த கல்யாணம் பிடிக்கலை. அவங்க சொந்தத்தில் பெண் எடுக்காம அப்பா வழி சொந்தத்தில் எடுக்கிறோம்னு அவங்களுக்கு கோபம். அதை அப்பப்போ இப்படி வெளியே காட்டுவாங்க.. அதை எல்லாம் பெருசா எடுத்துக்கலாமா?” தணிந்தே பேசினான்.
“அப்படித் தான் எடுத்துப்பேன்… உனக்கு வேலையில் சஸ்பென்ஷன் ஆர்டர் கொடுத்தா.. அதுக்கு நான் என்ன செய்ய முடியும்? எதுக்கு அந்த கிழவி என்னை ராசி இல்லாதவள்னு திட்டுச்சு… அதை கேட்டுட்டு அந்த வீட்டில் எல்லாரும் வாயை மூடிக்கிட்டு தானே இருந்தீங்க”
“ஹே… அதுக்குத்தான் எல்லாரும் சாரி சொல்லிட்டோமேடி… இன்னுமா கோபம் தீரலை”
“அது எப்படி தீரும்? கல்யாணம் முடிஞ்சு வீட்டுக்கு வந்த பிறகு அந்த கிழவியோட மண்டையை அம்மியில் வச்சு அரைக்கலை… என் பேரு மதுர வாணி இல்லை” அவசர சபதம் ஒன்றை எடுத்தாள்.
“ஹா ஹா”
“என்னோட கோபத்தைப் பார்த்தா உனக்கு சிரிப்பா இருக்கா?”
“ஒண்ணுமில்லைடி. கல்யாணத்துக்கு அப்புறம் நம்ம வீட்டில் நீயும், அம்மாச்சியும் இந்தியா, பாகிஸ்தான் ரேஞ்சுக்கு அடிச்சுக்கிட்டா வீடு எப்படி இருக்கும்னு இமாஜின் செஞ்சு பார்த்தேன்”
“பார்ப்படா … பார்ப்ப”
“என்னடி பொசுக்குன்னு மரியாதை இல்லாம ‘டா’ போட்டு பேசுற”
“அப்படி தான்டா பேசுவேன்”
“ஹும்… இனி உனக்கு கோபம் தீரும் வரை என் நிலைமை இப்படி தானா?” சோகம் போல காட்டி அவன் பேச… மதுரவாணியின் கோபம் கொஞ்சம் குறைந்தது.
“அதுல உனக்கு சந்தேகம் வேறயா? அந்த கிழவி மட்டும் இல்லை… அந்த கிழவி பேசினப்போ வாயில் கொழுக்கட்டை வச்சு அடைச்ச மாதிரி இருந்த எல்லாரையும் நான் வச்சு செஞ்சுட்டு தான் மறுவேலை பார்ப்பேன்”
“அடியே… வில்லி வேலை எதுவும் பார்த்துடாதே… நம்ம கல்யாணம் முடியட்டும். அம்மாச்சி கிட்டே நான் பொறுமையா எடுத்து சொல்லுறேன்.”
“அதெல்லாம் நீ ஒண்ணும் கிழிக்க வேண்டாம்… நானே அந்த ஆணியை புடுங்கிக்கறேன்”
அவள் கோபம் அத்தனை எளிதில் தீராது என்பது அவனுக்கு புரிந்து போனது. மதுர வாணி அப்படித்தான். அவளால் வீண் பழிச் சொல்லை தாங்க முடியாது. அந்த குற்றத்தை நிரூபிக்காமல் அவள் ஓய மாட்டாள். எதையும் நேருக்கு நேராக ஒப்புக் கொள்பவள் தன் மீது வீணான அவச்சொல் வரும்போது சீறி எழுந்து விடுவாள். அவளது குணத்தை அறிந்து வைத்து இருந்ததாலேயே சிரஞ்ஜீவியும் பொறுத்துக் கொண்டான்.
“சரி சரி… நான் வீட்டுக்குப் போறேன்… அப்பாவும், அம்மாவும் ரொம்ப கவலையில் இருந்தாங்க”
“ஏனாம்”
“பின்னே என்னடி… நீங்க யாருமே முகம் கொடுத்துக் கூட பேசலை. நான் உனக்காக எடுத்த புடவையை நீ திரும்பிக் கூட பார்க்கலை… எனக்கு நானே தான் டிரஸ் செலக்ட் செஞ்சேன்” என்றவனின் குரலில் நிஜமான வருத்தம் இருந்தது.
“ஓ… நான் கூட நேத்து நடந்த விஷயத்துக்கு தான் கவலையா இருக்காங்க போலன்னு நினைச்சேன்”
“ஊஊப்ப்ப்… அதை விடவே மாட்டியா நீ”
“ஏன் விடணும்? எதுக்கு விடணும்?” என்று மீண்டும் போர்க்கொடியை தூக்க… இவள் மனதில் இருக்கும் காயம் இப்பொழுதைக்கு ஆறாது என்பதை உணர்ந்து கொண்டவன் அங்கிருந்து கிளம்ப எத்தனித்தான்.
“சரி நான் கிளம்புறேன்”
“எங்கே போற? முதல்ல உன்னை எதுக்கு சஸ்பெண்டு செஞ்சாங்கன்னு சொல்லிட்டு போ”
“அது எதுக்குடி உனக்கு?”
“அந்த கிழவி அதுக்கு நான் தான் காரணம்னு தானே சொன்னுச்சு… அப்போ எனக்கு என்ன நடந்ததுன்னு தெரிஞ்சு இருக்கணும் இல்லையா?”
“எல்லாம் உனக்குத் தெரிஞ்சது தான்டி..”
“பரவாயில்லை மறுபடி சொல்லு”
“அந்த டேவிட் பாடி காணாம போச்சு இல்லையா?”
“ஆமா அதுக்கென்ன.. நீ கூட விசாரணை செஞ்சுட்டு இருந்தியே?”
“போன வாரத்தில் மறுபடியும் ஒரு கொலை… அதுவும் கிட்டத்தட்ட டேவிட் கொலை மாதிரியே தான் நடந்து இருந்தது.”
“ம்ம்ம்”
“பிரச்சினை என்னன்னா அந்த லேடியின் பாடியும் காணாம போய்டுச்சு”
“என்னது?” அதென்ன நீ ஹேண்டில் செய்ற கேஸ்ல பிணம் காணாம போகுது… அதை எடுத்துட்டு போய் என்ன செய்வாங்க?”
“ம்ம்ம்… அது தெரிஞ்சா இந்நேரம் நான் குற்றவாளியை பிடிச்சு இருக்க மாட்டேனா?” என்றான் சலிப்பாக
“இறந்தது யார்?”
“நம்ம ஏரியா சர்ச்ல இருந்த ஒரு கன்னிகாஸ்திரி… பேரு ஏஞ்சல்”
“என்னது? சிஸ்டரா? அவங்களுக்கு யாரோட என்ன பகை இருக்க முடியும்?”
“அதை விசாரிக்க கிளம்பிப் போனதுக்கு அப்புறம் தான் பாடி காணாம போய்டுச்சு… ஏற்கனவே ஒருமுறை அந்த டேவிட் பாடி காணாம போய் இருந்தப்பவே என்னோட ஆபிசர் என்னை பயங்கரமா வார்ன் செஞ்சு அனுப்பி இருந்தார். மறுபடியும் அதே மாதிரி நடக்கவும்… என்னை பிடிக்காதவங்க எல்லாரும் சேர்ந்து கட்டம் கட்டி இப்படி பண்ணிட்டாங்க”
“நீ ஒரு விஷயம் கவனிச்சியா ஜீவா? இரண்டு கேஸ்லயும் இறந்து போனவங்க கிறிஸ்டியன் சமூகத்தை சேர்ந்தவங்க… நீங்க வழக்கை அந்த கோணத்தில் விசாரிச்சு பாருங்க…”
“வர்ற திங்கள்கிழமை டுயுட்டியில் ஜாயின் பண்ணிட்டு தான் ஆரம்பிக்கணும்.”
“ஆக மொத்தம் எங்கேயோ… எப்படியோ யாரோ கொலை பண்ணுவான்… அந்த கேஸை நீ விசாரிப்ப… அந்த பொணத்தையும் எவனோ … எப்படியோ தூக்கிட்டு போய்டுவான்… ஆனா இதுக்கெல்லாம் காரணம் என்னோட ராசின்னு உங்க வீட்டு கிழவி என் மேலே பழி போடுமா?” எங்கே போனாலும் அவள் மீண்டும் அங்கேயே வந்து நிற்க… ஜீவா சோர்ந்து போனான்.
“எந்தப் பக்கம் போனாலும் அணை கட்டினா என்னடி அர்த்தம்?”
“நான் கோவமா இருக்கேன்னு அர்த்தம்”
“அம்மா தாயே… ஆளை விடு”
“அதெல்லாம் முடியாது… இனி தினமும் அந்த கேஸை பத்தின தகவல் எல்லாம் எனக்கு வந்தாகணும். இந்த கேஸ் விஷயத்தில் உனக்கு மேலதிகாரி நான் தான். எனக்குத் தெரியாம ஒரு புள்ளி கூட நீ வைக்கக் கூடாது சொல்லிட்டேன்”
“ஹேங்… அது எதுக்குடி?”
“இந்த கேஸில் இனிமே நீ சின்னதா எதுவும் சொதப்பினாக் கூட அந்த கிழவி என்னை தான் குத்தம் சொல்லும். அதனால இனி எல்லா தகவலும் எனக்கு வந்தாகணும்… அப்படி மட்டும் நடக்கலை… இந்த கல்யாணம் கேன்சல்” என்றாள் தடாலடியாக
“என்னடி மிரட்டுற?”
“இனி எல்லாம் அப்படித்தான்” என்றவள் வேகமாக அறையை விட்டு வெளியேற… அவளை எப்படி மலை இறங்க செய்வது என்று புரியாமல் கொஞ்சம் தடுமாறித் தான் போனான் சிரஞ்சீவி.
ஏற்கனவே அவளது வீட்டினர் மீது மதுவின் பெற்றோருமே கொஞ்சம் வருத்தத்தில் இருப்பதை அறிவான்.
அம்மாச்சியின் கோபம் அதிகரிக்கக் கூடுமே என்று எண்ணி எல்லாரும் அமைதியாக இருந்தது இங்கே எல்லாரின் மனதையும் வருத்தி விட்டதை உணர்ந்து வருந்தினான். அந்த நேரத்தில் இவர்கள் யாரும் அங்கே வந்து நிற்பார்கள் என்பதை எதிர்பாராத ஜீவாவின் வீட்டு ஆட்கள் நிலைமையை எப்படி சமாளிப்பது என்பது புரியாமல் சில நொடிகள் திணற… அதற்கு மேல் அங்கே தாமதிக்காமல் மது கிளம்பி வந்து விட்டாள்.
அம்மாச்சியின் பேச்சு எந்த அளவிற்கு அவளை காயப்படுத்தி இருக்கும் என்பதை அவன் நன்கு அறிவான். எனவே கோபத்தில் அவள் பேசும் பேச்சுக்களை அவன் பெரிதுபடுத்த விரும்பவில்லை. அவளின் கோபத்தை குறைக்கவே அவன் முயற்சி செய்தான்.
அவளின் கோபத்தை குறைப்பதற்காக அவன் செய்த விஷயங்கள் அவளுக்கே ஆபத்தாக முடியும் என்பதை அவன் அறிந்திருக்கவில்லை. ஒருவேளை தெரிந்திருந்தால் அவன் அவளை ஒரு நொடி கூட பிரியாமல் காவல் காத்திருப்பான்.

Facebook Comments Box
Click to rate this post!
[Total: 0 Average: 0]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here