ஸ்ரீரங்கத்து ராட்சசி தமிழ் குறுநாவல் அத்தியாயம் 2

2
234

அத்தியாயம் 2
“ஆக மாமியார் தூது அனுப்பினா தான் போனை எடுத்து துரைக்கு பேசத் தோணுதோ?”
“ஹே… அப்படியா எல்லாம் இல்லை செல்லக்குட்டி”
“செல்லம், வெல்லம்னு சொன்னே… மண்டையை உடைச்சுடுவேன்”
“என்னடா …கோபமா?”
“ச்சே.. ச்சே… உன் மேல லவ்வு உருகி வழியுது… வந்து கொஞ்சத்தை வாங்கிட்டு போறியா?…”
“ஹி… ஹி…”
“சிரிச்சு சமாளிக்காதே… நேத்துல இருந்து எத்தனை முறை போன் செஞ்சேன்… ஏன் எடுக்கலை?”
“நேத்து ஒரு கொலை கேஸ் பேபி… அதுல பிஸியா இருந்துட்டேன்.”
“இன்னிக்கு போன் எடுக்காததுக்கு என்ன காரணம் வச்சு இருக்கே?”
“இன்னிக்கு அந்த கேஸ் பத்தி போஸ்ட் மார்ட்டம் செய்யுற டாக்டர் கிட்டே கொஞ்சம் பேச வேண்டி இருந்தது. அதனால ஹாஸ்பிடலில் இருந்து ரிப்போர்ட் வாங்கிட்டு… அப்படியே ஃபாரன்சீக் ரிப்போர்ட் எல்லாம் வாங்க வேண்டி இருந்தது”
“சின்ன வயசில மாவு மெசின்ல முறுக்கு மாவு அரைக்கப் போய்ட்டு லேட்டா திரும்பி வந்தா எப்படி காரணம் சொல்லுவியோ… அதே மாதிரி இப்பவும் சொல்றியா?”
“ஹே…புரிஞ்சுக்கோடி… என்னோட வேலையைப் பத்தி உனக்குத் தெரியுமே”
“எனக்கு அது தெரிஞ்சதால தான் நீ இப்போ தப்பிச்சே… இன்னிக்கு நமக்கு நிச்சயம்… வந்த உடனே இப்படியா பாத்ரூம்குள்ளேயா ஓடுவே…”
“ஹே…அதான் சொன்னேனேடி … ஹாஸ்பிடல்… மார்ச்சுவரி எல்லாம் போய்ட்டு வந்தேன்… அப்படியே வர்ற வழியில் வேனில் ஏறிட்டேன்… வீட்டுக்குப் போய் குளிச்சுட்டு தனியா வண்டியில்  வர்றேன்னு சொன்னா… யாரும் கேட்கலை. அதான் உள்ளே வந்ததும் நேரா பாத்ரூம் போய் குளிச்சுட்டு வந்தேன்.”
“காரணம் எல்லாம் வாயில் வடை மாதிரி ரெடியா வச்சு இருப்பியே”
“சும்மா டீச்சரம்மா மாதிரி மிரட்டிகிட்டே இருக்காதேடி… கொஞ்சம் ரொமான்டிக்கா பேசேன்டி.”
“எனக்கு வாயில சுளுக்கு… போனை வை..”
“மாமா வேணும்னா வந்து சுளுக்கை எடுத்து விடவா?” விஷமம் தெறித்தது அவன் குரலில்.
“ஒண்ணும் தேவையில்லை… நீங்க உங்க அலுவலைப் பாருங்க…” என்றவள் சட்டென்று போனை வைத்து விட்டாள்.
அந்தப் பக்கம் ஜீவாவின் முகம் மௌன சிரிப்பில் மினுங்கியது. அவனுக்குத் தெரியும். சாதாரணமாக பேசினால் எட்டூருக்கு வாய் கிழிய பேசுபவள் அவனின் குரலோ பார்வையோ கொஞ்சம் மாறினாலும் கூட நொடியில் உணர்ந்து கொள்வாள். அவளுக்கு நன்றாகத் தெரியும். ஜீவா ஒருநாளும் எல்லை மீற மாட்டான் என்பது… ஆனாலும் தன்னளவில் அதற்கு துளி கூட இடம் கொடுக்காமல் விலகியே இருப்பாள்.
என்ன தான் மாமன் மகன் என்றாலும் உறவுகள் அவர்களுக்கு சுதந்திரம் கொடுத்து அவர்களை அனுமதித்தாலும் பெற்றவர்களுக்கு ஒரு சிறு துளி அளவு கூட கெட்ட பெயர் வந்து விடக்கூடாது என்பது அவளது பெற்றோர் அவளுக்கு இட்ட கட்டளை. அதே நேரம் அவர்கள் கொடுத்திருக்கும் சுதந்திரத்தை கெடுத்துக் கொள்ள அவளுக்கு மனமில்லை என்பது ஜீவாவும் நன்கு அறிந்த விஷயம்.
வந்தவர்கள் அனைவரும் மதிய உணவை உண்டதும், இதமான மாலைப்பொழுதில் அவர்களின் திருமண நிச்சயதார்த்தம் நடைபெறத் தொடங்கியது.
பச்சை நிற பட்டுப்புடவையில் தேவதை என மிளிர்ந்தவள் அழைத்து வரப்பட… அவளையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் சிரஞ்ஜீவி. மதுர வாணிக்குத் தெரியும். இப்பொழுது அவன் பார்வை அவள் மீது மட்டும் தான் இருக்கும் என்று…
அவள் வயதுக்கு வந்த நேரத்தில் வீட்டில் சடங்கு சுற்றும் பொழுது கூட அவள் புடவை அணிய மறுத்து விட்டாள். அதன் பிறகு வீட்டில் உள்ளவர்களும்… ஏன் ஜீவாவே கூட பலமுறை ஆசையாய் கேட்டும் கூட அவள் புடவை அணிய மறுத்து விட்டாள்.
என்னவோ… புடவை அணிவதில் அவளுக்கு ஏக தயக்கம்… சுடிதார் அணிந்தால் வெளியே தெரியாத பாகங்கள் கூட புடவையில் வெளிப்பட்டு விடக்கூடும் என்ற பயம் அவளுக்கு. நிறைய பெண்கள் அதை கண்ணியமான முறையில் உடுத்துகிறார்கள் தான். ஆனால் அவளுக்குத் தான் அது சிம்ம சொப்பனமாகவே இருந்து வருகிறது.
ஏகப்பட்ட பின்(Pin)களை குத்தி சோளைக் கொல்லை பொம்மை போல நிற்பதில் பிடித்தம் இல்லாமல் இத்தனை நாள் தவிர்த்து வந்தவள் இன்று புடவை உடுத்தி இருக்கிறாள்.
ஜீவா அவளை விட்டு வேறுபுறம் பார்த்து விடுவானா என்ன?
கண்களாலேயே அவளை கபளீகரம் செய்து கொண்டிருந்தான். சுற்றி இருக்கும் உறவுகள் இரு வீட்டினருக்கும் பொதுவானவர்கள் என்பதால் நிச்சயதார்த்த விழா கலகலப்புடன் இனிதே நிறைவு பெற்றது.
ஜீவாவும், வாணியும் முதலில் உண்டு முடித்து விட… மற்ற உறவுகள் பந்தியில் அமர்ந்து உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். யாரும் அவர்களை தொல்லை செய்ய வழி இல்லை என்பது முடிவான பிறகு மொட்டை மாடியில் சாமியானா பந்தலின் கீழ் அமர்ந்து இருவரும் பேசத் தொடங்கினார்கள்.
“என்ன மேடம்… மூக்கணாங்கயிறு போட நாள் குறிச்சுட்டாங்க போல?” என்றான் கிண்டலாக…
“ஆமா… எனக்கு மட்டும் நாள் குறிச்சு இருக்காங்க பாரு… உனக்கும் ஆப்பு அன்னிக்குத் தான் செருகப் போறாங்க மகனே” என்றாள் அவனை விடவும் கூடுதல் கிண்டலை குரலில் தேக்கி…
“வாய் குறையுதா பாரு…”
“ஏன்? எதுக்கு குறையணும்? நானும் பார்க்கிறேன்… எல்லாரும் வாயைப் பத்தியே பேசுறீங்க? கல்யாணம் முடிவானா பொண்ணு வாயை குறைச்சுக்கணுமா? அப்படினா கல்யாணம் செஞ்சுக்க ஒரு ஊமை பெண்ணா பார்த்து இருக்க வேண்டியது தானே?
உங்களுக்கு அழகான பொண்ணு வேணும்… வீட்டை சுத்தம் செய்ய பொண்ணு வேணும், பாத்திரம் விலக்க, துணி துவைக்க, சமைக்க… உங்களோட தேவைகள் ஒவ்வொண்ணையும் பார்த்து பார்த்து செய்ய ஒரு பொண்ணு வேணும். ஆனா அந்த பொண்ணுக்கு வாய் மட்டும் கம்மியா இருக்கணும். என்னா தெளிவுடா சாமி” என்று மூச்சு வாங்க… கொடி பிடிக்காத குறையாக முழங்கியவளைப் பார்த்து கையெடுத்து கும்பிட்டான் ஜீவா.
“அம்மா… தாயே … ஆயிரம் கண்ணுடையாளே… அங்காள பரமேஸ்வரி… தெரியாம பேசிட்டேன்… மலை இறங்கிடும்மா” என்று கெஞ்ச… போனால் போகிறது என்ற பாவனையுடன் வேறு பேச்சிற்கு தாவினாள்.
“ஆமா.. நேத்து என்ன கேஸ்?”
“அதான் சொன்னேனே ஒரு கொலை கேஸ்”
“அது தெரியும்… ஆள் யாரு?” என்று கேட்க, மர்மமான பார்வையுடன் பேசத் தொடங்கினான்.
“உனக்கு ரொம்ப பிடிச்ச ஹீரோயின் யாரு?”
“நான் உன்னை கேள்வி கேட்டா நீ என்னை கேட்கறியா?”
“ம்ச்… கேட்டா சொல்லு”
“எனக்கு எப்பவும் நிவிஷாவைத் தான் பிடிக்கும்”
“அவங்களோட மேனேஜர் டேவிட் தான் நேத்து இறந்தது”
“என்ன ஜீவா இப்படி குண்டை தூக்கிப் போடுற… எப்படி நடந்துச்சு? கொலையா? தற்கொலையா?”
“உடம்பு இருந்த கோணம்… வீட்டில் இருந்த சூழ்நிலை எல்லாம் வச்சு பார்க்கும் பொழுது கொலை மாதிரி தான் தெரியுது.”
“கொலை மாதிரி தான் தெரியுதுன்னு இழுக்கறீங்க?.. அப்போ தற்கொலை மாதிரி காட்ட எதுவும் முயற்சி செஞ்சு இருக்காங்களா?”
“ம்ம்ம்… துப்பாக்கியால் அவரே சுட்டுக்கிட்ட மாதிரி தான் இருந்தது. ஆனா வீட்டில் அங்கங்கே பொருள் எல்லாம் கலைஞ்சு போய் கிடந்தது.”
“இது ஒரு மேட்டரா? ஒருவேளை அந்த ஆளே சாகுறதுக்கு முன்னாடி துப்பாக்கியை தேடி எல்லாத்தையும் கலைச்சு போட்டு இருக்கலாம்”
“துப்பாக்கி வச்சு இருக்கிறவனுக்கு அது எங்கே வச்சோம்னு தெரியாதா? அதுக்கு எதுக்காக எல்லா பொருளையும் போட்டு உடைக்கணும்?”
“என்ன ஜீவா? தற்கொலை செஞ்சுக்கிற மனநிலையில் இருக்கிறவனால தெளிவா யோசிக்க முடியுமா? குழப்பத்தில் இருந்து இருப்பான்… ஒவ்வொரு இடத்துலயும் பொறுமையா, நிதானமா தேடிப் பார்க்கிற மனநிலையிலா இருந்திருப்பான்.” அவனை சமாதானம் செய்ய முயன்றாள் மதுர வாணி.
“அது சரி தான்… ஆனா?”
“இன்னும் என்ன ஜீவா? இப்படி யோசிச்சு பாருங்களேன். உண்மையிலேயே யாராவது கொலை செஞ்சுட்டு பொருளை எல்லாம் கலைச்சு போட்டுட்டு போய் இருந்தா கூட போலீஸ் வந்து இதை பார்த்தா சந்தேகம் வருமேன்னு கூடவா யோசிச்சு இருக்க மாட்டாங்க”
“ஒருவேளை கொலை செஞ்சவனுக்கு அந்த அளவுக்கு நேரமோ…. புத்திசாலித்தனமோ இல்லாம இருந்து இருக்கலாம்”
“நீ ரொம்ப குழப்பிக்கிறனு தோணுது ஜீவா”
“எனக்கு சொல்லத் தெரியலை மது… ஆனா போலீஸ் மூளை இதுல என்னவோ இருக்குன்னு என்கிட்டே சொல்லுது”
“நீ வேலைக்கு சேர்ந்தே ஆறு மாசம் தான் ஆகுது… அதுக்குள்ளே என்னமோ ஜென்ம ஜென்மமா போலீசாவே இருந்த மாதிரி பில்டப் கொடுக்கக் கூடாது சாரே”
“ஹே… அப்படி இல்லை மது… எனக்கு இந்த கேஸ் கொலை தான்னு உள்ளுக்குள்ளே ஒரு பட்சி கூவிகிட்டே இருக்கு”
“அந்த பட்சியை அந்த பக்கம் பத்தி விட்டுட்டு நம்ம மேட்டருக்கு வருவோம்”
“எது மேட்டரா?” என்றவனின் கண்கள் விசேச பளபளப்பிற்கு மாற…
“எருமை… எருமை… புத்தியை புல் மேய விடாதே… இந்த மாசம் இருபதாம் தேதி எல்லாரும் சேர்ந்து டிரஸ் எடுக்கப் போறாங்க. ஒழுங்கா வந்து சேர்”
“சொல்லணுமா? அதெல்லாம் வந்துடுவேன்.”
“இப்போ வெண்ணெய் மாதிரி உருகி உருகி பேசிட்டு நாளைக்கு போனை எடுக்காம இருந்தே… மவனே அப்புறம் கல்யாணத்துக்கு அப்புறம் குழம்பில் நீ தான் கொதிப்ப… ஜாக்கிரதை”
“ஹே… ஏதோ ஒரு நாள் அப்படி ஆகிப்போச்சு.. அதுக்காக…”
“கரெக்ட்… இன்னிக்கு நடந்தது தான் கடைசியா இருக்கணும். இன்னொரு முறை நடந்ததுன்னு வச்சுக்கோ… அப்புறம் வாழ்க்கை முழுக்க உனக்கு கஞ்சி தான்டி” என்றாள் ஒற்றை விரலை உயர்த்தி மிரட்டலாக…
“அதெல்லாம் மறக்க மாட்டேன். எனக்கு நீ தேர்ந்தெடுத்து வைப்பியாம். என் செல்லத்துக்கு முஹூர்த்தப் புடவை நான் தான் செலக்ட் செய்வேனாம்.”
“போதும்…”
“அப்புறம் கூரைப்புடவை..”
“போதும்… போதும்”
“அப்புறமா இராத்திரி சடங்குக்கு…”
“அந்த தேங்காயை இங்கே கொடுங்க… இங்கே ஒருத்தன் மண்டையை உடைக்க வேண்டி இருக்கு”
“ராட்சசி…. கொஞ்சமாவது ரொமாண்டிக்கா பேசுறாளா பாரு” என்று சிடுசிடுத்தாலும் அவன் முகம் முழுக்க புன்னகையே நிரம்பி வழிந்தது.
மதுவைப் பற்றி அவனுக்குத் தெரியும் .தன்னுடைய வெட்கத்தை அவன் அறிந்து கொள்ளாமல் இருக்க… அவள் கையில் எடுக்கும் ஆயுதம் தான் இந்த கோபம். உள்ளுக்குள் அவளது வெட்கத்தை மறைக்க முடியாமல் அவள் தடுமாறுவதை அவன் வெகுவாக ரசிப்பான்.
இருவரும் பேசிக்கொண்டு இருக்கும் பொழுதே… அவனது போன் அடிக்க… எடுத்து பேசியவனின் முகம் மாறியது.
“என்னாச்சு ஜீவா?”
“நான் உடனே கிளம்பணும் மது… டேவிட்டோட பாடியை காணலைன்னு சொல்றாங்க” என்று பதட்டமாக சொன்னவன் மறுமொழி கூறாமல் அங்கிருந்து கிளம்பினான்.
என்ன ஏதென்று கேட்டவர்களிடம் காரணத்தை தெரிவித்த மதுர வாணி வருத்தத்துடனும், குழப்பத்துடனும் தனியே போய் அமர்ந்து கொண்டாள்.

Facebook Comments Box
Click to rate this post!
[Total: 2 Average: 4.5]

2 COMMENTS

  1. எரும எரும புத்திய புல் மேய விடாத 😂😂 எங்க பேபி கண்டு பிடிச்ச இந்த லைன சத்தமா சிரிச்சுட்டேன் சூப்பரா இருக்குடா கதை 👌👌👌👌

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here