மின்னல் விழியே 27
ராம் அழைப்பேசியில் கூறும் விஷயங்களை கேட்க கேட்க கிருஷ்ண குமாருக்கு நெஞ்சு கொதித்தது.. தான் இல்லாத சமயத்தில் தன் பிள்ளைகள் செய்து வைத்திருக்கும் காரியத்தை நினைக்க நினைக்க ஆத்திரம் தலைக்கேறியது அவருக்கு. ராம் கூறுவதை கேட்டுக் கொண்டிருந்தாலும் அவரது கரம் என்னமோ அவர் முன்னால் இருந்த அவரது மடிக்கணினியில் இந்தியா திரும்புவதற்கான ப்ளைட் டிக்கெட்டுகளை ஆராய்ந்துக் கொண்டிருந்தது..
தான் இந்தியா செல்வது எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவுக்கு ராமின் வாயை அடக்குவதும் அவசியம் என்று தோன்றியது அவருக்கு.. அவனை தான் வரும் வரை அமைதியாக இருக்கும்படி கூறியவர் அழைப்பேசியை அணைத்துவிட்டார்..
அவரை பொறுத்தவரையில் அவர் குடும்ப விஷயத்தில் மற்றவர்களை அனுமதிக்க மாட்டார்… தொழில் தன்னை வீழ்த்த முடியாதவர்கள் தன் குடும்பத்தில் நிகழும் தவறுகளுக்காக கழுகு போல் காத்திருப்பார்கள் என்பது அவரது எண்ணம். அதனால் எதையும் தப்பித்தவறி கூட வெளியே கூறிவிட மாட்டார்..
அகில் விஷயம் கூட இன்று வரையில் அவருக்கு மட்டுமே தெரிந்த உண்மை… அவரது தோழரான ராமின் தந்தை ரகுவிற்கு கூட அது தெரியாது… அந்த அளவிற்கு குடும்பம் வேறு தொழில் வேறு என்பதில் கவனமாக இருப்பார்..
அவரிடமிருந்து எதாவது பதில் கிடைக்கும்.. என ராம் பலவாறாக எண்ணியிருக்க, குமாரின் பொறுமையில் அவன் எரிச்சலடைந்தான்.. அவர் வரும் வரைக்கும் அவனுக்கு பொறுமையும் இல்லை..
அகில் மற்றும் சுமியின் திருமணத்தை முன்னிட்டு தான் வினுவின் திருமணம் நடந்துள்ளது என அறிந்துக் கொண்ட ராம், சுமியையும் திருவையும் பற்றி விசாரிக்க, அப்போது தெரிந்தது தான் அகிலின் காதலும் அதில் கிருஷ்ண குமார் உண்டாக்கிய குழப்பமும்.. அதையே தனக்கு சாதகமாக எடுத்துக் கொண்டவன் அவரது பெயரை கூறியே அனைத்தையும் செய்தான்…
சொந்த மகனின் காதலையே எதிர்த்தவர் நிச்சயம் வினுவின் காதலை ஒத்துக்கொள்ளமாட்டார் என்று எண்ணியவன் வினுவை கடத்த, அங்கே கிருஷ்ண குமார் இந்தியா திரும்பிக் கொண்டிருந்தார்..
அவர் வந்து இறங்கியதும் ராம் அவருக்கு அழைத்து நடக்க போகும் கட்டாயத் திருமணத்தை பற்றி கூறிவிட்டான்… ஏனென்றால் அவனுக்கு அவரை பற்றி தெரியும்.. அவரின் துணை இல்லாவிட்டால் நிச்சயம் அவர் சொத்துகள் அவனுக்கு கிடைக்காது.. அதனால் அவனது இடத்திற்கு அவரை வர வைத்து அவரின் கோபத்திற்கு தூபம் போட நினைத்தான்.. அதே சமயம் திருவையும் அங்கே வர சொல்லிவிட்டு அவனை விபத்தில் சிக்க வைக்க முயன்றான்…
தன் சொந்த மகளை கடத்தி வைத்துவிட்டு தன்னிடமே அதை தைரியமாக கூறுபவனை நினைத்து கோபம் கொப்பளித்தாலும் அவன் செயலுக்கு உடன் படுவது போல் பேசி மகளை காண விரைந்தார் கிருஷ்ண குமார்….
என்ன தான் அவருக்கு வினுவின் திருமணம் பிடிக்கவில்லை என்றாலும் ராம் இப்படி கடத்தியதையும் அவரால் ஒத்துக் கொள்ள முடியவில்லை… ராம் ஒருவேளை இந்த கடத்தல் திட்டத்தை நிகழ்த்தாமல் போயிருந்தால் அவரே வந்து வினுவையும் திருவையும் பிரிக்கும் முயற்சியை தான் எடுத்திருப்பார்.. ஆனால் தன் குடும்பத்தின் மீது ஒருவன் கை வைப்பதை விரும்பவில்லை அவர்.
அவனது வீட்டை அடைந்தவர், வினுவை தன்னோடு அழைத்து செல்ல தான் நினைத்தார் அதற்குள் ராம் அவரது கண் முன்பே அகிலை சுட்டுவிட, குமார் அதிர்ந்து போனார்.. என்ன தான் அவனது காதல் பிடிக்காவிட்டாலும், அகில் உயிருக்கு போராடும் நிலையில் அவரது பெற்ற மனம் துடிக்கவே செய்தது.
தி பெஸ்ட் ஃபாதர் என்று அவருக்கு எப்போதுமே ஒரு கர்வம் உண்டு.. தன் பிள்ளைகளுக்கு அனைத்தும் பெஸ்ட்டாக கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர் முதல் முறையாக வினுவின் முகத்தில் தெரிந்த வெறுப்பில் செத்துப்போனார்… அவர் பாசத்தை காண்பிக்க தெரியாத மனிதர் தான் ஆனால் பாசமற்றவர் இல்லை…
மருத்துவமனை என்றோ, தான் சமூகத்தில் உயரமான இடத்தில் இருப்பவர் என்றோ பாராமல் ஹனியை அணைத்துக் கொண்டு அவர் அழ, அவர் குடும்பத்தினருக்கும் கண்கள் கலங்கியது…
“மன்னிச்சிடு குட்டிமா.. இந்த தாத்தாவை மன்னிச்சிடுவ தானே????” கண்ணீர் வழிய அவர் ஹனியிடம் கேட்க, அவள் அவரை ஒன்றும் புரியாமல் பார்த்தாள்..
“சாரி சொல்றிங்களா தாத்தா????” அவர் கன்னத்தில் வழிந்த கண்ணீரை துடைத்தவள், “இனி என்னை மாதிரி ஐஸ்கிரிம் திருடி சாப்பிடாதிங்க.. அப்போ மம்மி திட்ட மாட்டாங்க சரியா??….” ஹனி எப்போதும் நிறைய ஐஸ்கிரிம் உண்பதால் வினு அவளை மிரட்டுவாள்… அதற்காக தான் இப்போது தாத்தாவையும் திட்டிவிட்டாள் என்று எண்ணிக் கொண்டாள் ஹனி..
ஹனி கூறியதில் குமார் அதிர்ந்தாலும் அவளது அன்பை கண்டு நெகிழ்ந்து போனார்… அவளின் கன்னத்தில் முத்தமிட்டவர்,
“உன் பெயர் என்ன டா” என்க,
“என் பெயர் உங்களுக்கு தெரியாதா???” கண்களை விரித்து கேட்டவள், “நான் தான் ஹனி அகில் குமார்…” என்றாள் பெருமையாக… நான்கு நாட்களுக்கு முன்பு தான், ஹனியை பள்ளியில் சேர்க்க வேண்டும் என்பதற்காக அப்படி சொல்லிக் கொடுத்திருந்தாள்…..
“அழகான பெயர் மா” என்றவர், சுற்றி தன் குடும்பத்தை பார்க்க அனைவரும் முறைத்தவாறு என்றாலும் அவரை தான் பார்த்துக் கொண்டிருந்தனர்… அவரது நாடியில் கை வைத்து தன் பக்கம் திருப்பியவள்,
“தாத்தா.. என் அப்பா அங்க ஏன் படுத்திருக்காங்க??? அவரை எழும்ப சொல்லுங்க..” அகில் இருந்த அறையை சுட்டிக் காண்பித்தவள் அங்கே அழைத்துப் போக கூறினாள்…
அவள் அப்படி கேட்கவும், நின்றிருந்த கண்ணீர் மீண்டும் உடைப்பெடுத்தது அவருக்கு….
“வயசு கோளாறுல லவ் பண்றாங்க.. பிரிச்சிட்டா மறந்துடுவாங்கன்னு நினைச்சேன் ஆனா இப்படி அவங்க வாழ்க்கையே அழிச்சிடுவேன்னு நினைக்கல மா.. என் பையனை நான் அமெரிக்கா அனுப்பினதுமே நான் மத்தவங்களை கண்காணிக்கிறதை விட்டுட்டேன்.. எதுவா இருந்தாலும் என்னை தாண்டி தான் அகிலை நெருங்க முடியும் அப்படிங்கிற நம்பிக்கை..”
“அதோட அந்த பொண்ணு அன்னைக்கு அகிலோட சட்டையை பிடிச்சி திட்டினப்போ புரிஞ்சிக்கிட்டேன்…. இனி எப்பவும் அவ என் பையன் வாழ்க்கையில் வர மாட்டான்னு… அந்த தைரியம் தான் என்னை ஒரு வருஷம் கழிச்சி அகிலை வெளியே அனுப்ப வச்சுது.. அகில் இங்க வந்த பிறகு அவன் இவங்களை தேட ஆரம்பிச்சான்… எல்லாத்தையும் தடுத்தேன்… ஆனா எல்லாத்தையும் மீறி இவங்க திரும்ப சேர்ந்திருக்காங்க… பாசம் வச்சவங்களை பிரிக்க முடியாதுன்னு புரிஞ்சிக்கிட்டேன்…” ஹனியை மடியில் வைத்துக் கொண்டு அவர் அவளிடம் அனைத்தையும் கூற, மற்றவர்கள் அனைவரும் அவர் கூறுவதை கவனித்துக் கொண்டிருந்தனர்…
அனைவருக்கும் ஆத்திரமாக வந்தது அவர் செய்து வைத்திருக்கும் வேலையை பார்த்து ஆனால் எப்போதும் அவரை எதிர்த்து பேசியிராதவர்கள் இப்போதும் அமைதியாக இருந்தனர்…
“நான் செஞ்சது தப்பு தான்.. அன்னைக்கு எனக்கு கௌரவம் தான் பெரிசா தெரிஞ்சிது.. அதனால தான் அப்படி பண்ணிணேன்.. அதை நியாயப்படுத்த முடியாது தான்.. ஆனா இன்னைக்கு நடந்ததுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை மா..”. அனைவரும் கவனிக்கிறார்கள் என்று உணர்ந்தவர் ஹனியிடமே கூற, ஹனி அவர் மடியில் அமர்ந்து அவர் விரல்களை மடக்கியும் விரித்தும் விளையாடிக் கொண்டிருந்தாள்..
“ராம் எனக்கு போன் பண்ணி இவங்க கல்யாணத்தை பத்தி சொன்னப்போ எல்லாரையும் ஒரு வழி பண்ணிடணும்னு தான் வந்தேன்.. ஆனா வினுவை கடத்தி வச்சிருக்கேன்னு அவன் சொன்னப்போ எனக்கு அவ்வளவு கோபம் வந்துச்சு… ராம் கிட்ட இருந்து அவளை காப்பாத்த தான் வீட்டுக்கு கூட வராம பதறியடிச்சிட்டு அங்க வந்தேன்… இவங்க யாரும் வராட்டாலும் நான் என் பொண்ணை காப்பாத்திருப்பேன்.. கண்டிப்பா அவனுக்கு என் மகளை கட்டி கொடுத்திருக்க மாட்டேன்… இந்த அப்பாவை நம்புடா வினு குட்டி…” நிஜமான வருத்தத்துடன் கூறியவறை பார்க்க அனைவருக்கும் பாவமாக இருந்தது.. எவ்வளவு தான் அவர் மீது கோபம் இருந்தாலும், எப்போதும் கம்பீரமாகவே பார்த்த மனிதரை இப்படி காண சகிக்கவில்லை….
அனைவரும் அவர்கள் நிலையிலே நிற்க, திரு தான் முதலில் தெளிந்தது… அவரை நோக்கி வந்தவன் அவர் அருகில் அமர்ந்து அவர் தோளில் கை வைத்தான்… இதற்கு முன்பு அவரை அவன் பார்த்தது இல்லை. ஆனால் அவரின் புகைப்படத்தை பார்த்திருக்கிறான்… அதில் தெரியும் அவரது ஆளுமையும் கம்பீரத்தையும் கண்டு வியந்திருக்கிறான்… இப்போது அனைத்தையும் நினைத்து அவர் மறுகும் போது அவனால் அமைதியாக இருக்க முடியவில்லை.. அதோடு அவனால் அவரை மட்டும் குற்றம் சொல்ல முடியவில்லை.. காதலுக்காக போராடாமல் ஒதுங்கிய சுமியில் தொடங்கி, நண்பனை நம்பாமல் போன தான் வரைக்கும் அனைவரின் மேலும் தப்பு இருக்கும் போது அவரை மட்டும் தப்பு சொல்ல தோன்றவில்லை….
“மாமா…. அழாதீங்க ப்ளீஸ்…” தன்னை ஏற்றுக் கொண்டாரா என்றெல்லாம் அவனுக்கு தெரியாது.. தன்னையும் மீறி உரைத்துவிட்டான்…
அவன் அருகில் வரும் போதே அவனை நிமிர்ந்து பார்க்க துணிவில்லாமல் அமர்ந்திருந்தவர், அவன் மாமா என்று அழைத்ததும் மேலும் உடைந்தார்… தன்னால் தான் தந்தையை இழந்து நிற்கிறான் ஆனாலும் தன்னை மன்னித்து விட்ட அவன் செயலில் அவர் தான் சிறுமை பட்டு போனது போல் தோன்றியது…
“இதெல்லாம் நடக்கனும்னு இருந்திருக்கு… நீங்க இப்போ புரிஞ்சிக்கிட்டதே போதும். இதுக்க மேல யாரும் அழக் கூடாது.. அகில் வந்தாலும் இதையே தான் சொல்வான்.. என் அப்பாவோட ஆத்மா கூட இதை தான் விரும்பும்” அவர் கண்களை பார்த்து அவன் கூற, அவர் நெகிழ்ந்து, அவன் கரத்தை பற்றிக் கொண்டார்.
திரும்பி சுமியை பார்த்தவர், அவள் அகில் இருக்கும் அறையின் வாயிலை வெறித்துக் கொண்டிருப்பதை பார்த்து, ஹனியை கையில் ஏந்திக் கொண்டு அவளிடம் சென்றார்….. அவளுக்கு பெரிய அநியாயம் செய்துவிட்டதாக மனம் அடித்துக் கொண்டது..
சுமியை நெருங்கியவர் அவளிடம் எப்படி பேசுவது என்று புரியாமல் நிற்க,. ஹனி தான் அவரிடம் இருந்து இறங்கி சுமியின் மடியில் ஏறி அமர்ந்துக் கொண்டாள். ஹனியின் ஸ்பரிசத்தில் சுமி திரும்பி பார்க்க, ..
“மன்னிப்பு அப்படிங்கற ஒரு வார்த்தையால நான் பண்ணினது சரியாகிடாது மா… வியாபாரத்துல கணக்கு போட தெரிஞ்ச எனக்கு என் பிள்ளைங்களோட மனச பத்தி தெரியாம போச்சு.. முடிஞ்சா என்னை மன்னிச்சிடு மா” என்றவர் தன் இரு கரங்களை கூப்பி மன்னிப்பை வேண்ட, சுமி பதறிப் போனாள்…
ஹனியை தன் மடியில் இருந்து இறக்கி விட்டவள் வேகமாக எழுந்து அவர் கரத்தை கீழே இறக்கிவிட்டாள். மேலும், “எனக்கு உங்க மேல கோபமே இல்லை மாமா.. என் மேல தான் கோபம்.. நான் என்னோட அகியை நம்பாம போய்டேன்.. அவன் சொல்றதுக்கு பின்னாடி எதாச்சும் காரணம் இருக்கும்னு அவனுக்காக காத்திருந்திருக்கணும்.. ஆனா நான்…” என்றவள் முகத்தை மூடி அழ, குமாருக்கு வேதனையாக இருந்தது..
சுதா வந்து சுமியை ஆறுதல்படுத்த அவரை அணைத்துக் கொண்டவள், “அத்தை எனக்கு என் அகி வேணும் அவனை எழும்ப சொல்லுங்க” என்றாள் விசும்பலுடன்..
“வந்துடுவான் மா.. உன்னை விட்டுட்டு என் பையனால இருக்க முடியாது.. கண்டிப்பா வந்துடுவான்..” சுதா அவனை தைரியப்படுத்த… ஆபரேஷன் முடிந்து டாக்டர் வெளியே வந்தார்…
மொத்த குடும்பமும் அவரை சூழ்ந்துக் கொள்ள, அகில் நலமாக இருப்பதை கூறியவர், அறைக்கு மாற்றிய பின் சென்று பார்க்குமாறு கூறிவிட்டு நகர்ந்தார்.. அதன்பின் தான் அனைவரும் ஆசுவாசம் அடைந்தார்கள்…
சிறிது நேரத்தில் அகில் அறைக்கு மாற்றப்பட, அவன் கண் விழித்ததும் சென்று பார்க்குமாறு டாக்டர் அறிவுறுத்தியிருந்தார்,…
மேலும் நான்கு மணி நேரம் அனைவரையும் தவிக்க விட்ட பின் தான் கண் விழித்தான் அகில்.. அவன் கண் விழிக்க போகிறான் என நர்ஸ் கூறியவுடனே அவன் அறைக்குள் அனைவரும் பிரவேசித்துவிட்டார்கள்…
சுதா கலங்கிய கண்களோடு அவன் தலையை கோதியவாறு நின்றிருக்க… சுமி அவனது கையை பற்றிக் கொண்டு நின்றிருந்தாள்.. வினுவும் திருவும் அவள் அருகில் நிற்க., விக்கி, நிகில் மற்றம் அனுவோடு ஒரு பக்கம் நின்றனர்…
மெதுவாக கண்ணை திறந்த அகில், தன் மொத்த குடும்பத்தையும் அங்கே கண்டதும் லேசாக புன்னகைக்க, அனைவருக்கும் கண்ணீர் பெருகியது…
சுமி அவன் கைகளை பற்றிக் கொண்டு அழுதேவிட்டாள்.. “என்னை மன்னிச்சிடு அகி.. என்னை மன்னிச்சிடு.. என்னை விட்டுட்டு போய்டாத.. நானும் உன் கூட வந்துடுவேன்… “ எங்கே அவன் தன்னை வெறுத்துவிடுவானோ.. அல்லது ஒதுக்கிவிடுவானோ என்ற பயத்தில் சுமி புலம்ப துவங்க,
“சுமி.. என்னை பா..ருமா.. எ..னக்கு ஒன்னும் இல்லை.. அழுறதை நிறுத்து..” அவள் அழுவது தாங்க முடியாமல் திக்கி திணறி அவன் உரைக்க, அவன் செய்யும் சமாதானங்களை ஏற்காமல் அவள் அழுதுக் கொண்டே இருந்தாள். அருகில் நின்றிருந்த வினு தான் அவளை சமாதானம் செய்தாள்..
“அண்ணி அழாதீங்க.. அண்ணாவுக்கு தான் எதுவும் ஆகலையே..” என்றவள் சுமியை தன்னோடு அணைத்துக் கொண்டாள்.. அதில் சுமியின் அழுகை மட்டுப்பட, கலங்கிய கண்களோடு அகிலை பார்த்திருந்தாள்…
மனைவி அமைதியாகிவிட்டாள் என்ற பின் தான் திரும்பி அனைவரையும் பார்த்தான்… விக்கி சிரித்தவாறு நின்றிருந்தாலும் கண்கள் கலங்கியிருந்தது… நிகில் வந்து அவன் தலையை கோத.. அவர்களது அன்பில் அகிலின் கண்களும் பனித்தது..
அனைவரும் பாசத்தை பிழிந்துக் கொண்டிருக்க, விக்கி தான் சூழ்நிலையை சகஜமாக்கும் பொருட்டு, நிகிலை கிண்டல் செய்தான்..
“ஹப்பா நம்ம அண்ணாவோட பாசத்தை பாரேன்..”
தன் கணவனை கூறியதும் அனு பொங்கி விட்டாள்..
“அவருக்கு தெரிஞ்ச மாதிரி என் அவர் பாசத்தை காண்பிக்கிறார்.. உனக்கு என்னடா??” அனு முறுக்கிக் கொள்ள, விக்கி நகைத்தான்.. அவன் எதிர்ப்பார்த்ததும் இதை தானே…
“இதோ அவரோட தவப்புதல்வி வந்துட்டாங்க.. இனி அவரை எதுவும் சொல்ல விட மாட்டாங்க” அவன் கேலி செய்ய, அனுவுக்கு அவன் அனைவரையும் இயல்பாக்க முயல்வது புரிந்தது…
“என் புருஷனுக்காக நான் தான்டா வரணும்… அதெல்லாம் பச்சை சுடிதார் கிட்ட அடி வாங்கின உனக்கு புரியாது..” விக்கியை பார்த்து அனு கண்ணடிக்க, அவன் பல்லை கடித்தான்.. அனைவருக்கும் தெரியும் என்றாலும் இன்னும் சுதாவிற்கு தெரியாதே… வேகமாக திரும்பி தாயை பார்த்தவன், அவரது கவனம் அகிலிடம் இருப்பதை உணர்ந்து நிம்மதியடைந்தான்.. அவன் பாவனையில் சுதாவை தவிர அனைவரும் சிரிக்க, அகில் கூட புன்னகைத்தான்…
அவர்கள் அனைவரையும் கதவருகே, ஒரு ஓரமாக நின்று பார்த்துக் கொண்டிருந்தார் கிருஷ்ண குமார்.. ஏனோ அதை தாண்டி செல்ல அவருக்கு தைரியமில்லை.. அதோடு அந்த இடத்தில் தான் மட்டும் ஒட்டாமல் இருப்பது போல் ஒரு பிரம்மை.. அவர் இருக்கும் போது வீடு எப்போதும் அமைதியாக தான் இருக்கும்.. சில நேரம் தான் வீட்டில் இருப்பது தெரியாமல் வினுவும் விக்கியும் அரட்டை அடிப்பார்கள் ஆனால் அவரது தலை தெரிந்ததும் அமைதியாகிவிடுவார்கள்… இப்போதும் அவர் ஒருவர் இல்லாதது போல் அவர்கள் நடந்துக் கொள்வரை பார்த்தவருக்கு இதயம் முழுதும் வலித்தது…
ஏதோ ஒரு உணர்வில் கதவின் அருகே பார்த்த அகில் அங்கு தன் தந்தை நிற்பதை பார்த்து திகைத்தான். அவரை காணும் முன்னே அவன் மயக்க நிலைக்கு சென்றிருந்ததால் அவன் அவரை பார்க்கவில்லை.. திடிரென்று காணவும் அவன் கரம் தானாக சுமியின் கரத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டது.. இந்த முறை எந்த காரணத்திற்காகவும் தன் குடும்பத்தை இழக்க அவன் தயாராக இல்லை…
பார்வையை விலக்காமல் குமார் தன் மகனை பார்க்க, அதில் தெரிந்த பரிதவிப்பு, மன்னிப்பு, யாசகம் எல்லாம் அகிலை கட்டிப் போட்டது.. அவர் மீது நிறைய கோபம் இருந்தாலும் அப்பா என்பதை அவனால் ஒரு நாளும் விட்டுக் கொடுக்க முடியாது… அதே சமயம் சுமியையும்… ஆனால் அவர் கண்களில் தெரியும் மன்னிப்பு பொய்யில்லை என்பதை உணர்ந்தவன்,
“அப்பா…” இதழ்களை பிரித்து அழைத்து விட, அதற்காகவே காத்திருந்தாற் போல் குமார் வந்து அவன் கரத்தை பற்றிக் கொண்டார்… அவர் கண்களில் இருந்து விழுந்த கண்ணீர் துளி அவன் கன்னத்தில் பட்டு தெறித்தது..
அவர் தனக்காக துடிக்கிறார் என்பதை நம்ப முடியாமல் பார்த்தவன்.. “அப்பா..” என்க,
அவரோ மன்னித்து விடு என புலம்ப தொடங்கிவிட்டார்.. அந்த அளவிற்கு மகனது உயிர் போராட்டம் அவரை மாற்றியிருந்தது…
“பழசை பத்தி பேச வேண்டாம் ப்பா.. இந்த நிமிஷம் நான் என் குடும்பத்தோட சந்தோஷமா இருக்கேன்..” என்றவன் மற்றொரு கரத்தில் இருந்த சுமியின் கரத்தை அழுத்தமாக பற்றியிருந்தான்…
ஒருவருக்கு தண்டனையளிப்பதை விட அவரை சரியான தருணத்தில் மன்னத்து ஏற்றுக் கொள்வதே சரியானது என்று திருவும் அகிலும் நிருபித்தார்கள்.. தன்னை தண்டித்துவிட்டால் கூட மனது ஆறிவிடும் போல் இருந்தது… ஆனால் அவர்களின் மன்னிப்பு அவரை பெரிதளவு பாதித்தது…
அவர் அருகில் நின்றுக் கொண்டிருந்த சுதாவும் அவர் தோளில் கை வைக்க, அவரின் அன்புக்கு தான் தகுதியானவர் இல்லை என்று மனம் அடித்து சொன்னது…
வினுவாலும் ஒரு கட்டத்திற்கு மேல் தந்தை கலங்கியவாறு நிற்பதை காண முடியவில்லை..
“நீங்க எல்லாரும் என் மேல பாசமா இருக்கிங்க ஆனா நான் உங்களுக்காக எதுவுமே செய்யல” ஸ்டேட்டஸ், கௌரவம் என பிதற்றுபவர் முதல் முறையாக குடும்பம் தான் எல்லாவற்றையும் விட பெரிது என புரிந்துக் கொண்டார்..
“மாமா.. ப்ளீஸ் எல்லாத்தையும் மறந்துடலாம்.. நீங்க எப்பவும் போல கம்பீரமா இருக்கணும்.. அது தான் எங்க எல்லாருக்குமே சந்தோஷம்..” அகிலின் சார்பாக சுமி கூற, வினுவும்,
“நீங்க எங்களுக்காக தானே அப்பா சம்பாதிக்கிறிங்க.. நீங்க இல்லாட்டி நாங்களும் இல்லைப்பா… நாங்க எந்த கவலையும் இல்லாம வளர்ந்ததுக்கு காரணம் உங்க உழைப்பு தான் ப்பா.. இன்னொருக்கா எங்களுக்காக எதுவும் பண்ணலன்னு சொல்லாதிங்க..” என்றாள் சிறு கோபத்துடன்..
குமார் நிஜமாகவே நெகிழ்ந்து போனார்.. அவர் உணர்வுகளை கூற வார்த்தைகள் கூட வரவில்லை.. தன்னை ஏற்றுக் கொண்டார்கள் என்பதே அவருக்கு பெரும் ஆறுதலாக இருந்தது…
“அப்பா அவளை நம்பாதிங்க.. அவ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி உங்களை திட்டினா…” விக்கி அவளை கோர்த்துவிட, வினு அவனை முறைத்தாள்.
இதற்கு மேலும் யாரும் அழுவது அவனுக்கு பிடிக்கவில்லை.. அதனால் சரியாக அவன் வினுவிடம் வம்பை வளர்க்க, அது சரியாக வேலை செய்தது…
“ஹேய் நீ கூட தான் திட்டின…” சிறுபிள்ளைகள் போல் இருவரும் அடித்துக் கொள்ள, அனைவரின் முகத்திலும் புன்னகை… கடைசியில் சிஸ்டர் வந்து அனைவரையும் வெளியே துரத்த, சுமி மட்டும் அகிலோடு இருந்தாள்…
வெளியே வந்ததும் அனைவரும் இத்தனை மணி நேர தவிப்பு எல்லாம் நீங்கியவர்களாக வெளியில் இருந்த நாற்காலியில் அமர்ந்தனர்… சுதாவும் குமார் அருகே சென்று அமர்ந்துக் கொண்டார்… குமார் அவரிடம் கண்களாலே மன்னிப்பை வேண்ட, சுதா அவரின் கரத்தில் தன் கரத்தை கோர்த்துக் கொண்டார்… மன்னித்துவிட்டேன் என்பதற்கு சான்றாக…
அனைவரின் முகத்திலும் களைப்பை கண்ட திரு, அனைவருக்கும் காஃபி வாங்கி வருவதாக கூறி வினுவையும் இழுத்து செல்ல, அனுவும் விக்கியும் அவர்களை கிண்டலாக பார்த்தனர்…
அதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் திரு அவளை இழுத்துச் செல்ல, வினுவிற்கு வெட்கமாக இருந்தது..
“டேய் அரசு.. என்னடா பண்ற??? எல்லாரும் என்னை பார்த்து சிரிப்பாங்க டா.. காஃப்பி வாங்குறதுக்கு நான் எதுக்கு???” அவனை திட்டிக் கொண்டிருந்தாலும் அவன் இழுத்த இழுப்பிற்கு சென்று கொண்டு தான் இருந்தாள்…
“என்னை கொஞ்சமாச்சும் கவனிக்கிறியா டி நீ.. உன்னை காணோம்னு நான் எவ்வளவு பயந்தேன் தெரியுமா????” என்றவன் அவனை தன் தோளோடு அணைத்துக் கொண்டான்…
அவளுக்கும் அவனது உணர்வுகள் புரிந்தது.. அவளும் தான் இரண்டு மணி நேரம் என்றாலும் அவனை காணாமல் தவித்தாளே… என்னதான ராமிடம் தைரியமாக காட்டிக் கொண்டாலும் அவள் பயந்தது நிஜம். அவன் அணைப்போடு ஒன்றியவள்,
“நானும் உனக்கு எதாச்சும் ஆகிடுமோன்னு பயந்துட்டேன்” என்றாள் மெல்லிய குரலில்…
அவன் தன் அணைப்பை இறுக்க, இருவரும் மருத்துவமனையின் பக்கவாட்டில், அமைக்கப்பட்டிருந்த பூங்காவில் சென்று அமர்ந்தனர்..
இருவரும் மௌனமாக சிறிது நேரம் அமர்ந்திருக்க, வினு தான் அந்த அமைதியை முதலில் கலைத்தாள்..
“என் அப்பாவை மன்னிச்சிட்டியா அரசு???” அவன் கண்களை சந்திக்க முடியாமல் எதிரே இருந்த பூச்செடியை பார்த்தவாறு அவள் கேட்க, திரு தன் இரு கரத்தாலும் அவள் முகத்தை மென்மையாக பற்றி தன் பக்கம் திருப்பினான்…
“அவர் உன் அப்பா புஜ்ஜி மா… என்னால எப்படி உன்னை வெறுக்க முடியாதோ அதே மாதிரி உன் குடும்பத்தையும் வெறுக்க முடியாது… அதோட ஒருத்தங்க திருந்தி மன்னிப்பு கேட்கும் போது நாம மன்னிக்குறது தான் சரி.. உன் அப்பா பேசும் போது கவனிச்சியா???” என்றவன் கேள்வியாக அவளை பார்க்க, வினு என்னவென்று பார்த்தாள்..
“வயசுக்கோளாறுல காதலிக்கிறாங்க.. பிரிச்சா மறந்துடுவாங்கன்னு நினைச்சேன்னு சொன்னாங்க.. அவங்க சொன்னது சரி தான்.. உன் அண்ணாவும் சரி.. என் தங்கச்சியும் சரி, அவங்க வாழ்க்கைக்காக போராடவே இல்லை.. இப்போவும் நீ வராம போயிருந்தா???? ரெண்டு பேரும் ஒருத்தரையொருத்தர் நினைச்சிட்டு எங்கேயாச்சும் இருந்திருப்பாங்க” என்றான் தெளிவாக…
அவன் விளக்கத்தில் வினு ஆச்சரியப்பட்டு போனாள்… அன்று அகிலின் தங்கை என்று தெரிந்ததும் தன்னை வேண்டாம் என்றவன் இன்று தனக்காக தன் மொத்த குடும்பத்தையும் ஏற்றுக் கொள்கிறேன் என்கிறான்…திருவை பற்றி நினைக்கும் போதே அவளுள் ஒரு சிலிர்ப்பு ஓடி மறைந்தது…
“லவ் யூ டா அரசு.. நிஜம்மாவே நான் லக்கி” கண்கள் முழுதும் அவன் மீது காதலை பிரதிபலிக்க, வேகமாக அவன் கன்னத்தில் தன் இதழை ஒற்றி எடுத்தாள்… அவள் முத்ததிற்கு பதிலடி கொடுக்க அவனுக்கும் ஆசை தான் ஆனால் தாங்கள் இருக்கும் இடம் சரியில்லை என்பதால் பெருமூச்சு விட்டவன்..
“என்னால இப்படியெல்லாம் கிஸ் பண்ணிட்டு உடனே விலக முடியாது… அதனால நான் வீட்ல போய் என் கோட்டாவை கவனிச்சிக்கிறேன்…” வருத்தமாக திரு கூற, வினு சிரித்தாள்…
அவள் சிரிப்பை ஆசை தீர பார்த்தவன், “புஜ்ஜி மா.. அதான் எல்லாம் சரியாகிடுச்சே….” என்றவன் அவளது கரத்தை வருடியவாறே, “நாம எப்போ… வாழ்க்கையை துவங்குறது..” என்க, அவனது செய்கையில் கரைந்துக் கொண்டிருந்தவள் அவன் கேள்வியில் புரிந்து அவன் முதுகிலே நான்கு அடியை போட்டாள்… கை என்னமோ அவனை அடித்தாலும் முகம் சிவந்துவிட்டது திருவை நினைத்து..
“முதல்ல எங்க அண்ணா வீட்டுக்கு வரட்டும் அப்புறம் பார்த்துக்கலாம்” என்றாள் அவன் முகம் காணாமல்.. அவள் கூறியதும் பிரகாசமானவன், உடனடியாக எழுந்து அவள் கையையும் பற்றி இழுத்தான்..
“என்னடா???” அவன் செய்கை புரியாமல் வினு பார்க்க,
“இப்போவே உன் அண்ணாவை வீட்டுக்கு கூட்டிட்டு போய்டுவோம்..” என்றான் படு சீரியஸாக…
முதலில் திகைத்தவள் அவன் எதற்காக அப்படி கூறுகிறான் என்று புரிந்ததும் அவனை அடிக்க வர, அவன் தப்பித்து ஓடி ஆரம்பித்தான்… வினுவும் சிரித்தவாறே அவன் பின் ஓடினாள்…
காஃப்பியை மறந்து இருவரும் அகிலின் அறை பக்கம் வந்துவிட, வெறுங்கையுடன் வந்த இருவரையும் பார்த்து அனு கலகலத்து சிரித்தாள். அவள் சிரிப்பை கண்டு இருவரும் அசடு வழிந்தவாறு மீண்டும் காஃப்பி வாங்க சென்றனர்..
இந்த முறையாச்சும் காஃப்பி வருமா வினு??? அனு பின்னால் நின்று குரல் கொடுக்க, இருவரும் திரும்பி பாராமல் ஓடி விட்டனர்.. …
அன்று முழுவதும் அகில் மயக்கத்திலும் தூக்கத்திலும் இருக்க, சுமி அவனை விட்டு அகலவில்லை.. இரவு சுமியும் திருவும் அவனை பார்த்துக் கொள்வதாக கூறிவிட, மற்றவர்கள் வீட்டிற்கு சென்றுவிட்டு காலையில் வந்தனர்.. அப்போதும் திரு மட்டுமே வீட்டிற்கு செல்ல.. சுமி அவன் அருகிலே அமர்ந்திருந்தாள்.. அன்று மாலையே அகில் சற்று தேறிவிட, சுமி அவன் கையை பற்றியவாறு அமர்ந்திருந்தாள்..
இன்னும் இருவரும் மனம் திறந்து பேசிக்கொள்ளவில்லை.. அகில் விழித்திருப்பதை பார்த்த மற்றவர்கள் இருவருக்கும் தனிமையளித்து சென்றிருந்தனர்…
நிறைய பேச வேண்டும் என்றாலும் இருவரும் கண்களாலே பேசிக் கொண்டிருந்தனர்… மௌனம் தாங்க முடியாமல் இருவருமே ஒன்று போல் சாரி என்க, இருவருக்கும் புன்னகை அரும்பியது…
“சாரி சொல்ல வேண்டிய அவசியமே இல்லை சுமிம்மா…. எல்லா தப்பும் என்னோடது தான்.. எப்படியாச்சும் உன்கிட்டே பேச முயற்சி பண்ணியிருக்கணும்..” நேற்றை விட பேச்சு சரளமாக வந்தது அகிலுக்கு…
“இல்லை என்மேல தான் தப்பு.. நீ ஏன் அப்படி பேசினன்னு நான் நிதானமா யோசிச்சிருக்கணும்… உன்கிட்ட இன்னொருக்கா பேசியிருக்கணும்… நான் தான் அவசரப்பட்டு உன்மேல கோபத்த வளர்த்துக்கிட்டேன்… உன்னை நம்பாம போய்ட்டேன்…”
“அப்படி சொல்லாத சுமிம்மா.. என்னை வெறுக்கவும் முடியாம ஏத்துகவும் முடியாம நீ கஷ்டப்படுறதை நான நேர்ல பார்த்திருக்கேன்… உனக்கு நம்பிக்கை கொடுக்காம போனது என்னோட தப்பு தான்.. வயித்துல நம்ம குழந்தையோட நானும் அப்படி பேசவும் நீ வேற என்ன பண்ணிருப்ப??? எல்லாம் என் தப்பு தான்… “
“இல்ல.. என் தப்பு தான்…” இருவரும் மாற்றி மாற்றி அதையே கூறிக் கொண்டிருக்க, அகில் தான் கடைசியில் இறங்கி வந்தான்…
“சரி உன் தப்பு தான்.. அதுக்கு தண்டனை கொடுத்திடலாமா????“ முகத்தை தீவிரமாக வைத்துக் கொண்டு அவன் கேட்க,
“என்ன தண்டனை அகி?? எதுவா இருந்தாலும் பரவாயில்ல நான் ஏத்துக்கிறேன்… “ சுமியின் முகமும் தீவிர பாவத்துக்கு மாறியிருந்தது..
“ஹ்ம்ம்.. தண்டனை என்னன்னா… ம்ம்.. நான்… எனக்கு…” தொண்டை வரை வந்த வார்த்தைகள் அதை தாண்டி வர மாட்டேன் என சதிராட்டம் புரிய, அகில் திண்டாடிப் போனான்…
“சொல்லு அகி.. நீ… உனக்கு????”
“அது.. நான் ஹனியோட சின்ன வயசை மிஸ் பண்ணிட்டேன்.. அதனால எனக்கு இன்னொரு பொண்ணு வேணும்… ஒரு வழியாக அவள்” முகத்தை பார்த்து கூறிவிட்டான்.. அவள் முகத்தில் கோபம் எதாவது தோன்றுகிறதா என் கவனித்தவன் அதில் திகைப்பு மட்டுமே இருக்கவும் சற்று நிம்மதியானான்..
“இல்லை.. எனக்கு…” சுமி மறுப்பாக கூறவும் அகிலின் முகம் விழுந்துவிட்டது… தான் அவசரப்பட்டு கேட்டுவிட்டோமோ என்று எண்ணி அவன் மறுக, சுமியோ,
“எனக்கு பையன் வேணும்” என்றாள் வெட்கத்தோடு… அவள் வெட்கத்தை ரசித்தவன், சுமியின் கரத்தை பற்றிக் கொண்டான்… இனி உன்னை விட மாட்டேன் என்பது போல்….
அதன்பின் இருவரும் ஐந்து வருடங்களாக விட்டுப்போன கதைகளை பேச ஆரம்பித்திருந்தனர்… சுமி அவன் தலையை கோதியவாறே பேசிக் கொண்டிருக்க, அசதியில் அகில் கண்ணயர்ந்திருந்தான்… அவன் நெற்றியில் மென்மையாக முத்தமிட்டவள் அவனை கண்ணெடுக்காமல் பார்த்தவாறு அமர்ந்திருந்தாள்…
புல்லட் அதிக ஆழம் துளைக்காததால் அகில் வேகமாகவே குணமடைந்தான் அதற்கு அவன் மனைவியும் ஒரு காரணம் என்றால் மிகையில்லை… நான்கு நாட்கள் மருத்துவமனை வாசம் முடிந்து அகில் வீடு திரும்ப, அவனுக்காக வீட்டில் அனைவரும் காத்திருந்தனர்…
அவனை டிஸ்சார்ஜ் செய்து அழைத்து வரும் பொறுப்பை அகிலின் தந்தையும், நிகிலும் ஏற்றுக் கொண்டதால் மற்ற அனைவரும் அவனுக்காக காத்திருந்தனர்.. அனைவரின் முகத்திலும் நிம்மதி இருந்தாலும் திருவின் முகம் மட்டும் அதிகமாக மின்னிக் கொண்டிருந்தது.. அனைத்து பிரச்சனையும் ஓய்ந்து இனி தாங்கள் தங்கள் வாழ்க்கையை தொடங்க வேண்டியது தான் என்று பயங்கர சந்தோஷத்தில் இருந்தான்.. அதனால் வினுவையும் சீண்டிக் கொண்டிருக்க, அவனது மகிழ்ச்சி எதற்காக என்று புரிந்தவளும் கண்டுக் கொள்ளாமல் இருந்தாள்…
ஒரு வழியாக அகில் வீடு வந்து சேர, அவனையும் சுமியையும் ஒன்றாக நிற்க வைத்து ஆலம் சுற்றியே இருவரையும் வீட்டினுள் நுழைய விட்டனர்…
ஹாலில் அமர்ந்தவர்கள் பொதுவாக பேசிக் கொண்டிருக்க, குமார் யோசனையாக அமர்ந்திருந்தார்… அவரை கவனித்த திருவும்,
“என்ன மாமா?? என்ன யோசிச்சிட்டு இருக்கிங்க???”
“என் பிள்ளைங்களோட கல்யாணத்தை நான் பார்க்கவேயில்லை மாப்பிள்ளை… அதனால நான் ஒரு முடிவு செஞ்சிருக்கேன்…” குமார் நிறுத்தி நிதானமாக கூற, திருவின் உள்ளுணர்வு அடித்து கூறியது… ஏதோ பூகம்பம் வரப் போகிறது என்று…
“எ..ன்..ன மாமா????” கேள்வி அவரிடம் இருந்தாலும் பார்வை வினுவை துளைத்தது.. அவள் சிரிப்பை வாய்க்குள் அடக்குவதிலே அவளுக்கு தெரிந்திருக்கிறது என்பது புரிய, பார்வையை தன் மாமனாரிடம் பதித்தான்…
“உங்க ரெண்டு ஜோடிக்கும் திரும்ப கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு நினைக்கிறேன் மாப்பிள்ளை… இன்னும் பதினைஞ்சு நாள்ல நல்ல முகூர்த்த நாள் வருது.. அன்னைக்கே சொந்த பந்தங்களை கூப்பிட்டு நடத்தலாம்னு நினைக்கிறேன்.. நீங்க எல்லாரும் என்ன சொல்றிங்க???” குமார் கேட்க, திரு தான் முதலில் ஆமோதித்தான்.. வினுவின் திருமணத்தை விமர்சையாக நடத்த முடியவில்லை என்று யாரும் அவனிடம் குறைபடவிட்டாலும் அவன் அறிவானே அதனால் உடனடியாக ஒத்துக் கொண்டான்..
ஆனால் வினு அப்போதும் சிரித்தவாறு நிற்க, திரு குழப்பமாக ஏறிட்டான்…
திரு ஒத்துக் கொண்டதும் சுதாவுக்கும் குமாருக்கும் சந்தோஷமாகிவிட, “சரிங்க மாப்பிள்ளை.. கல்யாணத்தை சிறப்பா நடத்திடலாம்.. அதுவரைக்கும் நீங்களும் மருமகளும் நம்மளோட கெஸ்ட் ஹவுஸ்ல தங்கிக்கோங்க..” குமார் அலுங்காமல் குலுங்காமல் ஒரு குண்டை போட, திரு பேயறைந்தது போல் பார்த்தான்… வினுவின் சிரித்ததின் அர்த்தம் அப்போது தான் அவனுக்கு புரிந்தது…
புஜ்ஜி மா… ஏக்கமாக மனதில் நினைத்தவன் அவளை திரும்பி பார்க்க, அவள் வாயை மூடி சிரித்துக் கொண்டிருந்தாள்… அகிலோ திருவை பாவமாக பார்த்துக் கொண்டிருந்தான்..
விழிகள் தொடரும்……
Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html
மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…
கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…
அத்தியாயம் 4 பெற்றவர்களிடம் விவரத்தை தெரிவித்த அபிநய வர்ஷினி அவர்களை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு விரைந்தாள். அவள் பாதி தூரம்…
அத்தியாயம் 3 விடிவதற்கு இன்னும் நேரம் இருந்ததால் அறைக்குள்ளேயே நடை பழகிக் கொண்டிருந்தாள் அபிநய வர்ஷினி. ‘அவன் இங்கே வந்தது…
ஊட்டியில் இருந்த தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் சால்வையை தோளில் போர்த்தியபடி இயற்கை அழகை கண்களால் பருகிக் கொண்டிருந்தாலும் அபிநய வர்ஷினியின்…