01. நீயின்றி நானும் இல்லை

0
16

“குக்கூ” என்ற குயிலின் இன்னிசையை தவிர அந்த அறையில் வேறெந்த சுவடும் இல்லை.
ஆளுக்கொரு மூலையில் அமர்ந்து தத்தமது சிந்தனையை ஒரே விஷயத்தில் செலுத்தி கொண்டிருந்தனர்.

‘ அவளை எப்டி வரவழைக்க?’ இது தான் அப்போதைய அவர்களின் பெரும் கவலை.
அவர்கள் பவித்ரா, ரிஷி, பரணி.
கல்லூரிதொட்டு நால்வர் வட்டமாய் சுற்றி திரிந்து வருபவர்கள்.

பிரபல தொலைக்காட்சி ஒன்றிலும் ஒரு சேர பணியில் அமர்த்தபட்டனர்.
தூயதோர் நட்பை கண்டாலும் தூற்றி பேசும் சமூகத்தை கருத்தில் கொள்ளாமல் இணை பிரியாமல் வலம் வந்தனர்.
ஆனால் இப்போது ஒரு கையிழந்தவர்களாக அமர்ந்து இருந்தனர்.
அவர்களை விட்டும் தூர சென்று விட்டாள் நம் நாயகி வினயா.

வேகமாக ரிஷியின் அருகில் வந்த பவித்ரா,
“ எல்லாம் உன்னால தான்.. உன்னால தான் அவ இப்போ நம்மள விட்டு போயிட்டா.. உன்னை யார் காதலிக்க சொன்னது? இந்த கருமம் பிடிச்ச காதல் நமக்கு நடுவுல வராத வரை நாம எவ்ளோ நிம்மதியா இருந்தோம்.. இப்போ பாரு அவ… அவ நம்ம கிட்ட இனி வர மாட்டேன்னு சொல்லிட்டு போயிட்டா.. நம்ம வாழ்க்கையை நாம பாத்துக்கணுமாம்.. அவ இல்லாத நமக்கு என்னடா வாழ்க்கை இருக்கு? அவ நமக்கு நடுல பாரமா இருக்க விரும்பலயாம்.. சொல்லுடா அவ நமக்கு பாரமா?” மேலும் மேலும் அடித்து கொண்டே கூறியவள் தாள மாட்டாமல் அவன் மேலே சரிந்தாள்.

அழுது கொண்டிருந்தவளை ஆறுதலாய் அணைத்து தேற்றினர் இருவரும்.
“அழாத பவி, அவளை எப்படியாவது வர வைப்போம்..” பரணி கூற

“உனக்கு அவளை பத்தி தெரிஞ்சுமா இப்டி சொல்ற? அவளால யாருக்கும் கஷ்டம் வர கூடாதுன்னு நினைக்குறவ.. இப்போ இதோ இந்த சார்க்கு கஷ்டத்தை கொடுத்துற கூடாதுன்னு போயிட்டா..” என்று மீண்டும் விசும்பலுடன் கூற

“இது என்னால வந்த பிரச்சனை பவி.. இதை சரி பண்ண வேண்டியது என் பொறுப்பு.. என்னை நம்பு.. ஆனா நாம இப்போ சீனியர்க்கு என்ன பதில் சொல்ல போறோம்? அதை பத்தி யோசிப்போம்..’ என்று ரிஷி கூற பரணியும்

“நீ சொல்றது சரி தான்.. இப்போ சீனியர் வந்து கேட்டா என்ன சொல்ல? அவ பாட்டுக்கு கிளம்பி போயிட்டா.. மாடிக்கிட்டது நாம..” என்று புலம்பினான்.

பவியோ, “ பயமா இருக்கு ரிஷி..” என்று கூற இருவரும் அவளையே பார்த்தனர்.

இயல்பிலேயே பயந்த சுபாவம் பவித்ரா..
அதிலும் வேலை என்று வரும் போது அவர்களின் சீனியர் காட்டும் கடும் முகம் கண்டு பல நாட்கள் பீதியில் சிலையாகி நிற்பவளை அவள் தான் தேற்றி திருப்புவாள்.

இப்போது அவளாலேயே பூகம்பம் வர காத்திருக்க இவளை தேற்றும் வழி இருவருக்கும் தெரியவில்லை இருந்தும்,

“ பயப்படாத பவி, நம்ம குயின்(queen) சொல்ற மாதிரி தைரியமா எந்த விஷயத்தையும்ஃ பேஸ் பண்ணனும்” பரணி கூற

“வேணா என்னை வெறியேத்தாத.. இப்போ சீனியர் வந்து என்ன சொல்ல போறாங்கன்னு நினைச்சாலே பயமா இருக்கு..” என்று கூறினாள்.

“ நாம அன்னைக்கு அவளை தனியா விட்டுட்டு போயிருக்க கூடாது ரிஷி… இல்லனா இப்போ இப்டி நடந்திருக்காது..” பரணி தான் கூறினான்.

மற்றவர்கள் எண்ணமும் கூட அதுவே..
அன்றைய அந்த இரவிற்கு பிறகு அவளை அவர்களால் மீட்ட முடியாமலே போனது தான் உண்மை.
இயல்பிலேயே படு சுட்டியாக வலம் வந்தவள்..
பள்ளி காலத்தில் தாயை பறிகொடுத்த துக்கத்தில் இருந்து நண்பர்கள் அவளை மெல்ல இயல்புக்கு திருப்ப அன்றில் இருந்தே கூறுவாள்
“தனிமைன்றது பெரிய போதை.. அத தேடி போனா.. அது கடைசி வரை நம்மள விடாது..” என்று.

யார் தனிமையில் நின்றாலும் அவர்களை தனித்து விடாது தன் அன்பில் அரவணைப்பவள்..
அந்த இரவின் பின் தம் தோழமைகளை தவிர்த்தாள்.

அறையின் தனிமையில் தன்னை தொலைத்து கொண்டிருந்தாள்.
இரண்டு நாட்கள் கழித்து அலுவலகத்திற்கு வந்தவள் நேராக சென்றது அவர்கள் சேனலின் மற்றொரு டீம் ஹெட் விக்டரிடம் தான்.

விக்ட்ரின் டீம் எடுத்து இருக்கும் “கிராமிய சிறப்புகள்” எனும் நிகழ்ச்சிக்கு ஒப்புதல் தெரிவித்து.

முன்பு கேட்டபோது, “ எங்க நாலு பேரையும் ஒரே டீம்ல போடுங்க சார். சிறப்பா செஞ்சிடலாம்” என்று சிரிப்பாக கூறினாலும்
“ சாரி சார், இப்போ சீனியர் சாரோட “லவ் பேர்ட்ஸ்” ஷோ போயிட்டு இருக்கு. அல்மோஸ்ட் முடிஞ்சிட்டு… எங்க டீம் கிட்ட பேசிட்டு சொல்றேன் சார்” என்று கூறி இருந்தாள்.

விக்டரும் அதற்கு மேல் வற்புறுத்தவில்லை.
ஆனால் இப்போதோ அவளாக வந்து நிற்க விக்டர் மறுக்க வழியில்லாமல் நின்று கொண்டிருந்தான்..
அவர்கள் சேனலின் அதி பிரபல ஹோஸ்ட் இவள்.
அதிக பேன் ஃபாலோவிங் பெற்று இருப்பவள்.
“நம்ம குயினோட ஷோ” என்றே மக்கள் மத்தியில் பேர் பெரும்.

ஆகவே இந்த வாய்ப்பை நழுவ விட மனமில்லை அவனுக்கு.. ஆனால் இவளை தன் டீமில் இணைத்து விட்டு “அவனிடம் யார் மாட்டி கொள்வது?” என்ற பயம்..

‘தன்னை போல ஒருவனுக்கு தான் ஏன் இவ்வளவு பயப்பட வேண்டும்’ என்ற எண்ணமெல்லாம் கிடையாது..
அந்த முரடனை பொறுத்த வரை அவனுடைய டீமை யாரிடமும் விட்டு கொடுக்க விரும்பமாட்டான்.

‘குயினை தன்னுடைய ஷோவிற்கு கேட்டதற்கே தன்னை வழியெங்கும் முறைத்து திரிபவன் இனி கேட்கவா வேண்டும்?’ விக்டர் வெகுவாக தயங்க

“டோன்ட்வரி சார், என் டீம் கிட்ட நான் பேசிக்கிறேன்.. நா எப்போ கிளம்பனும் அதை மட்டும் சொல்லுங்க?” என்று அவள் கூறவும் தான் விக்டர் சமாதானம் அடைந்ததே.

இரண்டு நாட்கள் வேலைக்கும் வராமல் தங்களையும் சந்திக்காமல் போக்கு காட்டி கொண்டிருந்தவளை மூவரும் சுற்றி கொண்டனர்.

“வினு.. என்ன ஆச்சு? நாங்க கேள்வி பட்டதெல்லாம் உண்மையா?” பவி தான் கேட்டாள்.
பரணியும் ரிஷியும் விழியில் அதே கேள்வியை தேக்கி நிற்க

“ அதுக்குள்ள விஷயம் உங்க காதுக்கு வந்துடுச்சா? ப்பா… இந்த காசிப் பேசுறதுல நம்ம ஆபிஸை அடிச்சுக்க ஆள் இல்லை..” என்று கிண்டலாக சிரித்தாள்.

“சிரிச்சது போதும்.. எதுக்காக இந்த திடீர் முடிவு? நாம எந்த சூழ்நிலையிலயும் பிரிய கூடாதுன்னு சொல்லிட்டு நீயே அதை மீறலாமா?” பரணி கேட்டான்.

“ஹாஹா, பரணி நா என்ன நாட்டை விட்டே போறேனா இல்லை உலகத்தை விட்டே போறேனா? ரெண்டுமே இல்ல.. நம்ம சேனல்ல தான் ஒர்க் பன்றேன்.. ஆனா வேற ஷோவுக்கு தட்ஸ் ஆல்” என்று கூறினாள்.

ரிஷி மட்டுமே ஏதும் பேசாமல் அவளையே பார்த்த வண்ணம் நின்றிருந்தான்.
அவனுக்கு தெரியும் ‘அவளின் இந்த முடிவு எதனால் என்று?’

“ நீ எங்க பக்கத்துல இல்லாத எந்த ஒரு விஷயமும் எங்களுக்கும் வேணாம் வினு.. அந்த டீம்ல எங்களுக்கும் இடம் கேளு.. போறதா இருந்தா மொத்தமா போயிடுவோம்” என்று கூறினான்.

அவன் செய்தியில் மெல்ல சிரித்தவள்,
“ எல்லா இடத்துக்கும் அப்டி ஒன்னா போக முடியாது ரிஷி.. உங்க வாழ்க்கைய நீங்க தான் பாத்துக்கணும்.. நான்.. நான் யாருக்கும் பாரமா இருக்க விரும்பல.. இதுக்கு மேல என்னை கம்பல் பண்ண ட்ரை பண்ணாதீங்க..” என்று கூறியவள் வேகமாக வெளியேறினாள்.

இருவரின் பூடக பேச்சையும் கேட்டு கொண்டிருந்தவர்கள் புரியாமல் ரிஷியை பார்க்க அவன் தனக்கு வந்த தகவலை கூறியிருந்தான்.

அதன் பின் நடந்தவைகளே நாம் முன் கண்டவை.
மூவரும் செய்யும் வழியறியாது முழித்து கொண்டிருக்க
அவர்கள் எதிர்பார்த்து கொண்டிருந்த புயலும் வந்து சேர்ந்தது.
வாசலில் ‘சர்’ரென்ற வேகத்தோடு வந்து நின்ற காரின் சத்தத்தில் மூவரும் பீதியாகி நின்றிருந்தனர்.

‘டக் டக்’ என்ற அழுத்தமான காலடியோசை கேட்ட சில நொடிகளில் காற்றில் பறந்து வந்து விழுந்தது அந்த நீல வண்ண ஃபைல் (file)
அவன் வந்த வேகமே அவனின் கோபத்தை படம் பிடித்து காட்ட

‘ அவனை எப்படி எதிர் கொள்வது?’ அவர்கள் எண்ணி கொண்டு இருக்கும் போது பவியோ மேலும் பயந்தவளாய் ரிஷியின் பின்னால் தன்னை மறைத்து கொண்டாள்.

“என்ன ரிஷி? நான் கேள்வி பட்டதெல்லாம் உண்மையா?” என்று கடும் கோபம் குரலில் கொப்பளிக்க கேட்டான்.

ரிஷி எதுவும் பேசாமல் தலையை குனிய எழுந்து அவன் விழிகளை பார்த்த படி ஓர் நெடிய மூச்சோடு,
“ சொந்த பிரச்சனைகளை தூர தள்ளிட்டு நாம வேலை விஷயமா பேசலாமா?” என்று கேட்டான்.

மூவரிடம் இருந்தும் மௌனம் மட்டுமே பதிலாய் வர,
“ நம்ம டீம்ல இருக்க ஒருத்தர் திடீர்னு விலகி போறாங்க அப்படினா.. உங்களோட ஹெட்ன்ற முறையில என் கிட்ட நீங்க சொல்லி இருக்கணுமா வேணாமா? இந்த விஷயம் யாரோ ஒரு தர்ட் பெர்சன் சொல்லி தான் எனக்கு தெரியனுமா? இது தான் நீங்க என் மேல வச்சிருக்க மரியாதையா?”
வார்த்தைகளில் அழுத்தம் கொடுத்தபடி அவன் கேட்டான்.

“ யாராவது வாயை தொறந்து பதில் சொல்ல போறீங்களா? இல்லையா? இப்படியே சைலண்ட்டா இருந்தா என்ன அர்த்தம்?”

இது வரை இல்லாத வகையில் அவன் குரலில் இருந்த கடுமை அவர்களை பயமுறுத்த
“சீ… சீனியர்… அது….” என்று ரிஷி தான் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தவித்தான்.

“ சொல்லு ரிஷி, உங்க குயின் உங்களை விட்டு போகும் போது நீங்க ஏன் எனக்கு இன்ஃபார்ம் பண்ணல..” என்று கேட்டான்.

“ சீனியர், நான் உங்களுக்கு கால் பண்ணேன் பட் உங்க மொபைல் நாட் ரீச்சபில்…”

“காட், ரிஷி நம்ம ஷோவோட கெஸ்ட் மீட்டிங்ல இருக்கும் போது நம்ம மொபைல் சுவிட்ச் ஆஃப்ல இருக்கும்ன்னு உனக்கு தெரியாதா? இதென்ன சின்ன பிள்ளை மாதிரி காரணம் சொல்ற?” என்று கேட்டான்.

“அது…. சாரி சீனியர்… அதுக்குள்ள இங்க நிலைமை கைய மீறி போயிட்டு இருந்துச்சு.. முதல்ல அவளை ஸ்டாப் பண்ணிட்டு உங்க கிட்ட சொல்லலாம்னு இருந்தேன்.. பட் நாங்க எவ்ளோ முயற்சி பண்ணியும் அவளை தடுக்க முடியல..” பரணி கூறினான்.

மூவரையும் முறைத்தவன் பவியிடம் திரும்பி,

“உங்க குயினுக்கு போன் போடு..” என்று கூறினான்.

“ஆங்… இதோ..” என்றபடி அவள் நடுங்கிய கைகளை இருத்தி பிடித்து கொண்டு அவளுக்கு அழைத்தாள்.
மறுமுனை ரிங் சென்ற சில நொடிகளுக்கு பிறகு எடுக்கப்பட

“ சொல்லுங்க சீனியர்?” என்ற குரலே எடுத்த மாத்திரத்தில் ஒலித்தது.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here