02.நீயின்றி நானும் இல்லை

0
17

மதுரைக்கு அருகில் இருக்கும் புதுபட்டி என்ற கிராமம்.

சிறு கிராமம் தான் என்றாலும் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.

சுற்றிலும் வயல் வரப்பு..

யானைமலை அடிவாரத்தில் இருக்கும் இந்த கிராமம் கொள்ளையழகு.

எந்த பொருட்கள் வாங்க வேண்டும் என்றாலும் ‘ஒத்தகடை’ வரை செல்ல வேண்டும். எளிமையான குடிசைவீடுகளையும் குழாயடிகளையும் காணும் போது இன்னும் இப்படி பட்ட கிராமங்கள் அழியவில்லை என்பதை காட்டும்.

சுற்றி இருக்கும் ரம்மியமான நிலை மனதை மயக்காமல் மனதில் தோழர்கள் சூழ அமர்ந்து இருந்தாள்.

‘ இன்னேரம் அவனுக்கு செய்தி போய் சேர்ந்திருக்கும்” என்று எண்ணி கொண்டாள்.

‘ அவன் தன் நண்பர்களை என்ன பாடு படுத்தி கொண்டிருப்பான்’ என்று அவள் எண்ணி கொண்டிருக்கும்போது தன் செல் அழைக்க எடுத்து பார்த்தாள்.

பவியின் எண்.

மெல்ல உதட்டில் தோன்றிய குறு நகை..

அவன் தான் என்று உணர்த்த எடுத்த எடுப்பில் கேட்டாள்.

“ சொல்லுங்க சீனியர்” என்று.

அவள் அழைத்த தோரனையே அவனுக்குள் இருந்த கோபத்தை மேலும் கிளற

“மேடம், எப்பல இருந்து பெரிய பெரிய முடிவு எடுக்க ஆரம்பிச்சிங்க.. எங்களுக்கு தெரியாமலே?” என்று கேட்டான்.

“அது என் தனிப்பட்ட விருப்பம் சீனியர் அதை நான் எடுக்க யாரோட பர்மிஷன் கேட்டு நிக்கணும்?” என்றாள்.

“உங்க தனிப்பட்ட விஷயத்தில நீங்க எந்த முடிவு வேணா எடுங்க அது பத்தி ஐ டோன்ட் கேர்.. ஆனா எனக்கு என் ஷோ முக்கியம்.. யாரை கேட்டு நீங்க இப்டி பாதிலே போனீங்க.. உங்க அக்ரிமெண்ட்ல அப்டி தான் சைன் பண்ணி இருக்கீங்களா?”

‘தனிப்பட்ட விஷயத்தில்’ என்று அவன் கொடுத்த அழுத்தத்தில் இவள் உதடு கடித்து தன் உணர்வுகளை அடக்கி கொண்டு

“இப்போ என்ன வேணும் உங்களுக்கு? நான் நிம்மதியா இருக்குறது பிடிக்கலையா” என்றாள்.

“எனக்கு வேண்டியது என் ஷோ… அதுக்கு எந்த ஒரு இடைஞ்சல் வர விடமாட்டேன்… நீ ஒழுங்கா திரும்ப வர வழிய பாரு…”

“முடியாது சீனியர்,”

“முடியாதா? நான் நினைச்சா உன்னை இந்த வேலையில இருந்து தூக்க முடியும் பண்ணி காட்டவா?” என்று அவன் கத்த தொடங்கினான்.

கேட்டு கொண்டிருந்த நண்பர்கள் பதறியபிடி அவனை பார்க்க அதை கருத்தில் கொண்டதாய் தெரிய வில்லை.

“ பண்ணிக்கோங்க…” என்று பட்டென கூறிவிட்டு செல்லை அணைக்க இங்கு இவன் கோபத்தில் சிக்கி கொண்டது என்னவோ மூவரும் தான்.

அடுத்த சில நிமிடங்களை அவர்கள் மேல் பொழிந்து விட்டு

“திமிரு.. உடம்பெல்லாம் திமிரு…நான் யாருன்னு காட்டுறேன்… அவளை எப்டி இங்க திருப்பி வர வைக்கணும்னு எனக்கு தெரியும்..” என்று வெளியேறினான்.

என்ன செய்ய காத்திருக்கானோ???

இங்கு வினயாவோ தன் கைகளுக்குள் முகத்தை மூடி அமர்ந்து கொண்டு இருந்தாள்.

அவளின் மனதில் அந்த அன்பான வார்த்தை தான் ஒலித்தது.

“ஹே லூசு டோன்ட் வொரி உனக்காக நாங்க இருக்கோம்” அவளின் தாயை இழந்த சமயம் தன் நண்பர்கள் கூறிய வார்த்தை இது.

பரணி நான்கு சகோதரிகளுக்கு ஒற்றை ஆண் மகனாய் நடுத்தர குடும்பத்தை கொண்டவன்.

பவித்ரா, வீட்டிற்க்கு ஒற்றை மகள். படிக்க வைத்ததே அபூர்வம் என இருக்க அவளை வேலைக்கு அனுமதித்தது அதிசயம் தான். இனி ஒரு வருடத்தில் அவளை கட்டி கொடுக்கும் எண்ணம் தான் அவள் பெற்றோருக்கு.

ரிஷி, அவனுக்கு எல்லாமே நண்பர்கள் மட்டும் தான்.

சிறு வயதில் இருந்தே ஆசிரமத்தில் வளர்ந்தவன். அன்பை மட்டுமே எதிர்பார்த்து இருப்பவன். அன்பை மட்டுமே கொடுத்து வருவான்.

அவனுக்காக என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம்?

ஆக தன் இந்த முடிவும் சரி தானோ?

‘எந்த இடத்தில் தான் தவறு செய்தோம்? அவளுக்கு நம்மை பிடிக்காமல் போக காரணம்?’ என்று எண்ணியபடி இருந்தாள்.

கையில் அன்றைய இரவு உணவாக தயிர் சாதம் கொடுக்கப்பட்டது. தட்டில் தயிர்சாதத்தை கண்டதும் அவளின் “செல்லமான தயிர்சாதம்” ஞாபகத்தில் நின்றாள்.

காலேஜில் பவியை அனைவரும் ‘தயிர் சாதம்’ என்று தான் அழைப்பார்கள். எதற்கெடுத்தாலும் பயம். அதனாலேயே சீனியர் வட்டம் அவளை அப்டி அழைக்கும். பவி அக்மார்க் ஐயராத்து பொண்ணுதான் “அசடு அசடு” என தன்னை எதற்கெடுத்தாலும் திட்டும் அவள் நினைவு அன்றைய உணவை இரவில் காணும்போதே அவள் கண்ணில் நீர்வழிந்தது. பவி அடிக்கடி கொண்டு வர்ற தயிர்சாதத்தை அடிச்சுபிடிச்சு சாப்பிடும்போது கிடைத்த சுகமே தனிதான்.

வழிந்த கண்ணீரை துடைத்து கொண்டவள் காதில் அவன் குரல்..

‘வினு நீ இப்படி இருக்கிறது நல்லா இல்லை’ என அவன் கூற,

‘விஜி ப்ளீஸ்’ என சத்தமாக கூறிவிட்டாள்.

அருகில் இருந்தவர்கள் அவளை ஒரு மாதிரியாக பார்க்க தன்னை உணர்ந்தவளாய் விறுட்டென்று தன் அறைக்குள் சென்றுவிட்டாள்.

அவன் “விஷ்வஜித்”

‘சீனியர்’ என்ற அடைமொழியிட்டு அனைவராலும் அழைக்கப்படுபவன்.

‘லவ்பேர்ட்ஸ்’ என்ற ஷோ அவர்களுக்கு மறக்க முடியாத பல தருணங்களை கொடுத்தது அழகானதொரு காதலையும் சேர்த்தேதான்.

இருவரும் ஒருவருக்கொருவர் சொல்லாவிட்டாலும் அவர்களின் மொத்த டீம் மெம்பர்களுக்குமே அது தெரிந்த ஒன்றுதான்.

யாரும் பேசப்போய் பயப்படும் விஷ்வஜித்திடம் இவள் போய் பேசினாலே பிரச்சனை சரியாகிவிடும் என்று அவர்கள் எண்ணம்.

‘டீயில் சர்க்கரை கம்மியாயிடுச்சு மேம் சார்கிட்ட இருந்து காப்பாத்துங்க”வில் ஆரம்பித்து

“ இரண்டு பேர்ல(pair) ஒரு பேர்(pair) வர லேட்டாகுது மேடம் சார்கிட்ட இருந்து காப்பாத்துங்க” என்பது வரை அவளிடம் வந்து நிற்பார்கள்.

அவளுள் எப்படி விஷ்வஜித்தின் நினைவுகள் ஆட்கொண்டதோ அதே போன்றுதான் விஷ்வஜித்தின் நினைவுகளும் அவளை தேடியது.

“ஏன்டி இப்படி கொல்ற உன்னை பார்க்காம இருக்க முடியலை” கடைசியாக இருவரும் எடுத்த செல்ஃபியை நோக்கி வருந்தினான்.

அவனின் எண்ணமெல்லாம் அவளோடான முதல் சந்திப்பை நினைவு படுத்தியது.

மூன்று வருடங்களுக்கு முந்தைய நினைவுகளை அசை போட்டான்.

அன்றொரு நாள் காலேஜில் வெல்கம் பார்ட்டி நடந்த போது வினயாவை வேறு டிபார்ட்மெண்ட் சீனியர்ஸ் ரேகிங் செய்ய ஆரம்பிக்க அங்கு வந்த விஷ்வஜித் போட்ட சத்தத்தில் ஓடோடிப்போனார்கள்.

“எவன்டா எங்க டிபார்ட்மெண்ட் ஜூனியரை ரேகிங் பண்றது” என்று உரத்த குரலில் கத்தினான் விஷ்வஜித்.

அந்த சின்ன விழிகள் “ காலேஜில் முதல்நாளே இப்படியா?” என்பதுபோல் மிரட்சியில் இருந்தன. அவளின் பவ்யமான முகம் விஷ்வஜித்திற்கு பிடித்துபோனது.

“தேங்க்ஸ்…அ” என்று வினயா பேச்சை ஆரம்பிக்கும் போதே,

“அண்ணாலாம் வேணாம் சீனியர்னே கூப்பிடு” என்றான் விஷ்வஜித்.

அவளை ஏனோ மனதுக்கு பிடித்திட திரும்பி நடந்தவன் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்ப் எரிந்தது.

விஷ்வஜித்திற்கு வினயாவின் மேல் ஒரு ஈர்ப்பு அப்பொழுதிலிருந்தே இருந்தது. ஆனால் அவன் அதனை வெளிக்காட்டவில்லை.

எதற்கெடுத்தாலும் “சீனியர்” என்று வந்து நிற்கும் அவளை தொடர்ந்து இப்பொழுது ரிஷி, பரணி, பவித்ரா ஆகியோரும் சீனியர் பாட்டு பாட ஆரம்பித்தார்கள். விஷ்வஜித்தும் பல நேரங்களில் உதவி செய்தான் அதில் வினயா என்றாள் கூடுதல் பிரியமிருந்தது அவனுக்கு.

அவனின் அந்த கூடுதல் கவனிப்பை மற்ற மூவரும் அறிந்தே இருந்தனர்.

அவர்களாய் சொல்லும் வரை ஏதும் கேட்டு கொள்ள வேண்டாம் என அமைதியாகி விட்டனர்.

வினயாவும் அவள் நண்பர்களும் கல்லூரி முடிந்து ஆங்கர்(anchor) ஜாபில் ஜாய்ன் செய்தார்கள்.

சீனியரின் அலுவலகத்தில் வேலை என்ற குதூகலம் அடைந்தவர்கள் அங்கே விஷ்வஜித்தின் தலைமையில் வேலை பார்க்கப்போகிறோம் என்று நால்வரும் குத்தாட்டம் போடாத குறையாக குதித்தனர்.

விஷ்வஜித் டோட்டலாக மாறியிருந்தான்,

‘வேலை என வந்துவிட்டால் அதில் கவனம் மிக அவசியம்’ என அனாவசியமான பேச்சுக்களை தவிர்ப்பான்.

அதுவரை இனம் புரியா உணர்வோடு இருந்த இருவரும்

ஒருவர் மீது ஒருவர் கொண்டது காதல் தான் என்பதை இந்த லவ்பேர்ட்ஸ் ஷோவில் மெல்ல உணர ஆரம்பித்தார்கள்.

அவள் இவனை பார்க்கும் நேரம் சீனியர் கண்டு கொள்ளாமல் இருப்பான்,

ஆனாலும் அவள் கண்கள் அவனுடைய ஒவ்வொரு நடவடிக்கையையும் கண்காணிக்க மறந்ததில்லை. அவளிடம் பார்க்காமல் பாசாங்கு செய்வது அதை ரசிப்பது அவனுக்கு விருப்பமான ஒன்று.

லவ்பேர்ட்ஸ் ஷோவிற்காக ரிகர்சல் நடந்த வேலையில் பவியோடு பேசி சிரித்தவாறே வினு ஓடிவந்தாள் கீழே தடுமாறி விழ நேர்ந்திட, அவளை தாங்கிப்பிடித்தான் விஷ்வஜித் இருவரின் கண்களும் நயன மொழி பேசிக்கொண்டன. பத்துநிமிடம் அவன் அவளை தாங்கியவாறே நிற்க இருவர் கண்களும் ஒருவரையொருவர் நோக்கியது அன்றுதான். அவள் விழிகளில் அவன் முழுவதுமாய் கரைந்து போனான்.

அவசரமாக இருவரும் விலகி ஒருவருக்கொருவர் “சாரி” என்று முனகி கொண்டே நகர்ந்தனர்.

இருவரின் இந்த காதல் லீலைகளையும் மொத்த செட்டும் வாயை பிளந்து வேடிக்கை பார்க்க பவியும் ரிஷியும் பரணியும் தான் வாயிக்குள் சிரித்து கொண்டனர்.

அந்த நாட்களை நினைக்கும்பொழுதே அவன் மனம் புழுங்கித்துடித்தது.

அதற்குள்,

“சார் டீ” பணிப்பெண் டீயுடன் அருகில் வந்து சத்தமிட.

“டேபிள்ல வைங்க”என்று சுயநினைவு வந்தவனாய் பதிலளித்தான் தலையில் கை வைத்தவாறு.

இவர்கள் ஒரு புறம் என்றால் மறு புறம்

இதோ வினயாவின் நண்பர்கள் சோகமாக அமர்ந்திருந்தனர்.

“யார் கண்ணு பட்டுச்சோ தெரியலை? நம்மள்ள ஒருத்தி தனியா பிரிஞ்சு போய்ட்டா… நம்ம சேர்ந்து சுத்துறதை பார்த்தே புகையுறாங்க சிலர். நம்ம மூன்று பேரையும் பிரிக்கவும் பிளானிங் நடக்கும் போல இனி.. பரணி கவனமா இருந்துக்கோடா…” என குத்தலோடு ரிஷியின் மேல் கோபப்பார்வை வீசியபடி பரணியிடம் பேசினாள் பவித்ரா.

ரிஷி முகம் வாடியது, “ யார் நினைச்சாலும் சரி.. யார் குறுக்க வந்தாலும் சரி நம்ம பிரெண்ட்ஷிப் பிரியாது இது ப்ராமிஸ்” பவித்ராவை பார்த்து பதிலளித்தான் ரிஷி.

“அப்புறம் ஏன் வினு போனப்ப சும்மா இருந்த? இந்த வீர வசனம்லா பேசி அவளை தடுக்க வேண்டி தான? அவளை போக விட்டுட்டு இப்போ பெரிசா டயலாக் பேசுற?” கண்களில் வலியோடு ரிஷியிடம் பேசினாள் பவித்ரா.

அவளுக்கு அவன் மீது தான் அதீத கோபம்.. ஆனால் பாவம் அவன் தான் என்ன செய்வான்?

‘இப்படி நடக்கும்’ என கனவா? கண்டான்.

“பவி, உனக்கு எந்த அளவுக்கு வருத்தம் இருக்கோ அதே அளவுக்கு எனக்கும் வினு போனதுல வருத்தம் இருக்கு… அதுக்காக என்னையே குத்தம் சொல்லிட்டு இருக்கிறது என்ன நியாயம் சொல்லு?” ரிஷியும் தன் பங்குக்கு கத்த தொடங்கினான்.

“ஹே பக்கிகளா ரெண்டு பேரும் சண்டை போடுறதை விட்டுட்டு வினுவை கூட்டிட்டு வர்ற வழியை யோசிங்க?” பரணி இருவரையும் ஒவ்வொரு பக்கமாக பிரித்து விட்டபடி கூறினான்.

“அதான் சீனியர் வந்துட்டாங்கள்ல… இனி அவங்க பாத்துப்பாங்க” ரிஷி எங்கோ பார்த்த படி கூறி கொண்டிருக்க திரும்பி அவனை தீயாக முறைத்தவள் அவன் முதுகின் பின்னால் வந்து கொண்டிருந்தவளை கண்டதும் கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டாள்.

அவளின் பார்வை திக்கில் திரும்பிய பரணியுமே முகம் கருத்தான்.

ரிஷியின் நிலை???

“ஹே என்னடி உனக்கு இப்போ சந்தோஷமா? எப்படி மிச்ச கூட்டத்தையும் கலைக்கலாம்ன்னு பிளானோட வந்து இருக்கியா? நீயெல்லாம் ஒரு பொண்ணானே தெரியலை!! எங்க வாழ்க்கையில வந்த வினயமே நீதான்… போ உன் ஆசைப்படி எல்லாமே நடந்துடுச்சு இனி சந்தோஷமா இரு…” எனக்கோபத்தில் பவி அவளை அடிக்க முடியாமல் தன் தலையில் அடித்து கொண்டு வேகமாக நடக்க ஆரம்பித்தாள் பரணியும் ரிஷியும் ஓடிச்சென்று பவித்ராவை சமாதானப்படுத்தினர்.

ரிஷி தன் ஓரவிழியால் அவளை கோபத்தோடு முறைத்தான் ஆனால் எதுவும் பேசவில்லை.

யாரிவள்???

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here