திருமணம் இந்த சொல்லை கேட்ட நொடி அனைவரும் சொல்லும் வாக்கியம் “இருமனங்கள் இணையும் நாள்” என்று.. நன்கு யோசித்தால் அத்திருமணத்தால் இரு பெரும் உறவுகள் இணைகின்றனர்.. சிறு வயதில் பார்த்த உறவுகள் கூட உரிமையாய் அளவளாவி கொள்வர்.. இன்பமோ துன்பமோ அந்த உறவுகளே துணை நிற்பார்கள்.. அப்படிபட்ட உறவுகளை இணைக்கும் அம்மன்றல் விழாவிற்கு தன் உறவுகளை ஒன்று சேர்க்க நினைக்கும் இளைஞனின் கதையே இக்கதை..
அடர் பகலவன் தன் கதிர்களை பிரகாசமாய் வீசி கொண்டு இருந்த பகல் வேளை தன் தந்தையின் அர்ச்சனைகளை வாங்கி கொண்டு துயில் கொண்டு இருந்தான் நம் நாயகன் அம்ரீஷ். மாநிறம் கொண்ட அழகன், திடமான தோள்கள் கூர் நாசி, கறுத்த உதடுகள், சிவந்த கண்கள், பார்ப்பவரை பயம் கொள்ள செய்யும் அவனின் ஆளுமை..
கார்ப்பரேட் கம்பெனியில் துறை தலைவராக இருக்கிறான். கை நிறைய சம்பளம், எந்த கெட்ட பழக்கமும் இல்லை ஆனாலும் அவனின் தந்தைக்கு அவனை விட அவனின் அண்ணன் விஷ்வாவின் மீதே பாசம் அதிகம் என்பது அவன் எண்ணம்.. ஆனால் விஷ்வா பெற்றோர் சொல் கேளாமல் அவன் மனதிற்கு பிடித்த பெண்ணை திருமணம் செய்து பெங்களூரில் தன் மனைவி மக்களுடன் வசித்து வருகிறான்.
உண்மையில் சிவநாதன்( நாயகனின் தந்தை) பார்வதி (நாயகனின் தாய்) இருவருக்கும் அவர்கள் பெற்ற மூன்று பிள்ளைகளும் விலையுயர்ந்த முத்துக்கள் தான்.. மூத்த மகன் தன் ஆசையை நிறைவேற்ற முடியாமல் போனது அவர்களின் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதை தன் மகளின்(அமிர்தா) திருமணத்தின் மூலம் சிறிது ஆறுதல்படுத்தி கொண்டனர்..
மூத்த மகனால் பிரிந்த உறவுகள் இன்று வரை அவர்களிடம் சேரவில்லை அதனை அம்ரீஷ் திருமணத்தின் மூலம் ஒன்று கூட்ட எண்ணினார்கள்.. சொந்தத்தில் ஒரு பெண்ணை பார்த்து உறவினர்கள் சூழ அவனின் திருமணத்தை நடத்தி அதனை கண்குளிர காண எண்ணினர்.. அதனால் அவனின் தன் கட்டுக்குள் வைக்க நினைத்து ஏற்படுத்தி கொண்டது தான் இந்த முகசுளிப்பு.. முதலில் சிவநாதன் பேச்சில் அவன் கோபம் கொள்ள பார்வதியால் உண்மையை அறிந்தவன், அதன் பின் அவரின் பேச்சை சிரித்தபடி உள்வாங்க தொடங்கினான் சில நேரங்களில் அவரை பார்த்து சிரித்து அதற்கும் சேர்த்து வசவை வாங்கி கொள்வான் இது அன்றாடம் நிகழ்வது தான்..
சரி கதைக்குள் செல்வோம்.. பெற்றோர்கள் ஆசைப்படி தான் திருமணம் செய்து கொள்வேன் என்று மார்தட்டிக் கொண்டான் அவளை பார்க்கும் வரை..
வித்யுதா, அமைதியின் மறு உருவம் அப்படி என்றால் என்ன என்று கேட்கும் அளவிற்கு கலகலப்பானவள், அழகு, திறமை, ஒருங்கே பெற்ற மங்கையிவள்.. அம்ரீஷ் வேலை பார்க்கும் அதே கம்பெனியில் மார்க்கெட்டின் ஹெட்டாக இருந்தாள்.. மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே அவனை பார்க்கும் சந்தர்ப்பம் அமையும்.. அப்பறம் எப்படி லவ் பண்ணாங்கனு கேட்டா சொல்றேன்.. ஒரு ஆக்சிடென்ட் அது தான் அவர்களை சந்திக்க வைத்து நட்பாக்கி காதல் வரை கொண்டு வந்து சேர்த்தது..
இன்று இருவரும் காதல் கிளிகளாக சிறகின்றி பறந்து கொண்டு இருந்தனர்.. இன்று அம்ரீஷின் 27வது பிறந்த நாள்.. தன் காதலை தன் பெற்றொரிடம் சொல்லி சம்மதம் வாங்குவேன் என்று அவர்கள் சம்மத்தோடு தான் திருமணம் செய்து கொள்வேன் என்று இரண்டு வருடம் கடத்தி விட்டான்.. நேற்று வித்யுதாவை பெண் பார்க்கும் படலம் நடக்கவே எங்கே அவள் தன்னை விட்டு சென்று விடுவாளோ என்று அவள் வீட்டில் தைரியமாக தங்கள் காதலை தெரிவித்து விட்டான்..
வித்யுதா, “அம்ரீஷ் எங்க வீட்ல நீங்க தைரியமா பேசினதுனால நம்ம காதலை ஏற்றுக்கிட்டாங்க அதே மாதிரி உங்க அப்பா அம்மா கிட்டயும் பேசுங்க..”
அம்ரீஷ், “அட நீ வேற ஏன்டி எங்க அப்பாவை பார்த்தாலே வயித்த கலக்க ஆரம்பிச்சிடுது”
வித்யுதா, “அட ஏங்க நீங்க இப்படி பயப்படுறீங்க அவர் உங்க அப்பா தான போங்க.. எங்க அப்பா கிட்டயே தைரியமா பேசிடீங்க அப்பறம் என்ன?”
சரி ஏதாவது ஐடியா பண்றேன்.. என்று அன்று இரவு அவளிடமிருந்து விடை பெற்று கொண்டான்.
மறுநாள் தன் தந்தையை நினைத்து உள்ளுக்குள் அடைந்து கிடந்து தன் காதலை எவ்வாறு தெரிவிப்பது என்று யோசித்து கொண்டு இருந்தவனின் சிந்தனையை கலைத்தது அந்த குரல்.. ‘ஐய்யயோ இவ எங்க இங்க வந்தா’ என்று அலறியபடி ஓடியவன் அவள் இருந்த நிலை கண்டு மயங்கி விழாத குறைதான்.
‘இது எப்படி நடந்தது? நான் எதும் தப்பு பண்ணலையே கடவுளே என்ன நடக்க போகுதோ கூடவே இருப்பா’
சிவநாதன், “அம்ரீஷ் என்ன இது?இந்த பொண்ண நீ லவ் பண்ணிட்டு கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு ஏமாத்துறனு சொல்றா? குடும்ப மானத்தை இப்படி காற்றுல பறக்க விட்டு இருக்கியே! உன்னை நல்லவன்னு நினைச்சோம் ஆனா இப்படி பண்ணிட்டு வந்து நிற்பன்னு கனவுல கூட நினைக்கல.. ச்சே” என்றார் கோபமாக
பார்வதி, “டேய் நீ என் வயித்துல தான் பொறந்தியா? பாவி பயலே.. இப்படி பண்ண உனக்கு எப்படி மனசு வந்தது?” தலையில் அடித்து கொண்டு அழுதார் அவர்.
அம்ரீஷ், ” அய்யோ அம்மா அப்பா சத்தியமா நான் எந்த தப்பும் பண்ணல என்னை நம்புங்க.. நான் உங்க பிள்ளைம்மா இப்படி எல்லாம் தப்பு பண்ணுவேன்னு நீங்க நினைக்கிறீங்களா? என்று கதறியவன், தீடீரென்று ஏதோ தோன்ற “வித்யு என்ன இது? இது எப்படி? உன்னோட வயிறு எப்படி இப்படி இருக்கு?ஏதாவது சொல்லு.. இவங்க என்னை சந்தேகப்படுறாங்க பாரு” என்று பொரிந்து தள்ளினான்.
வித்யுதா, “என்ன அம்ரீஷ் இப்படி சொல்றீங்க நீங்க தானே இதுக்கு காரணம் இப்ப வந்து இப்படி பேசறீங்களே உங்களுக்கே நியாமாக இருக்கா?”என்று கண்ணீர் சிந்தினாள்.
” ஏய் என்னடி நீ இப்படி பேசுற? இத்தனை வருஷத்துல நான் உங்கிட்ட ஒரு வார்த்தையாவது தப்பா பேசி இருப்பேனா இல்ல ஒரு பார்வையாவது தப்பா பார்த்து இருப்பேனா? அநியாயமா பொய் சொல்லாத வித்யுதா”
” நான் ஏன் பொய் சொல்லனும்? இதுக்கு காரணம் நீங்க தான். உங்களால தான் இதை சுமந்துக்கிட்டு இருக்கேன்”
இதை வித்யுதா சொன்னதும் அவனுக்கு அடிகள் சரமாரியாக விழுந்தது.. அன்பையும் அரவணைப்பையும் அள்ளி கொடுத்தவர்கள் இன்று ஆக்ரோஷமாய் அவனை அடிப்பதை தடுக்க கூட தோன்றவில்லை அவனுக்கு..
“ச்சே மூத்தவன் தான் எங்களை ஏமாத்தினான்னு பார்த்தா நீ அவன விட மோசமா இருக்க. ஒரு பொண்ண காதலிச்சு ஏமாற்ற உனக்கு எப்படி மனசு வந்தது. உன்னை நாங்க அப்படியா வளர்த்தோம்? இந்த மாதிரி நீ செய்வேன்னு நாங்க நினைச்சு கூட பார்க்கல.. இந்த விசயம் அந்த பொண்ணு வீட்டுக்கு தெரிஞ்சா என்ன ஆகும்? உன்னை வெட்டி போட்டுவாங்க!” எனும் போதே அவசர அவசரமாக நிறைய ஆட்கள் கட்டையும், அரிவாளுமாய் அங்கு வந்தனர்.
“ஏன்டா நல்லவன்னு நினைச்சி எங்க வீட்டு பொண்ண கல்யாணம் பண்ணி வைக்க சம்மதம் சொன்னா கல்யாணத்துக்கு முன்னாடியே நீ இப்படி ஒரு காரியம் பண்ணி வச்சி இருக்க. உன்னை என்ன செய்யுறோம் பாரு” என்று அவர்களும் அவனை அடித்து துவைக்க தொடங்கினர்.. வித்யுதா எவ்வளவு தடுத்தும் அவர்கள் அவனை அடிப்பதை தடுக்க முடியவில்லை.. பெற்றவர்களால் ஒரு கட்டத்திற்கு மேல் அவன் அடி வாங்குவதை காண முடியவில்லை..
” ஏங்க விடுங்க என் பையன் மட்டும் தான் தப்பு பண்ண மாதிரி அவனை அடிக்கிறீங்க! ஏன் உங்க பொண்ணு தப்பு பண்ணலையா? அவளையும் என்னன்னு கேளுங்க”
‘அய்யோ நாங்க தப்பே பண்ணலையே இந்த அப்பா வேற சும்மா இருக்க சங்க ஊதி விடுறாரே.. கடவுளே என் பிறந்த நாள் அதுவுமா இப்படியா என்னை வாட்டுவ.. நான் அப்படி என்ன பாவம் பண்ணேன் வாய்விட்டு அழ கூட முடியல.. பிரச்சினையை நீங்க தான அனுப்பி வச்சீங்க நீங்களே முடிச்சி வையுங்க’ என்று மனதிற்குள் புலம்பி கொண்டு இருந்தவனின் சிந்தனையை கலைத்தது அவன் தாயின் குரல்..
பெற்ற மகனின் இந்த நடத்தையை, அவன் மீது சொல்லும் அவதூறுகளை பொறுக்க முடியாத சராசரி தாயாய் அவனை காப்பாற்ற எண்ணி தன்னை தாக்கி கொள்ள துணிந்தார்.. பழம் வெட்டும் கத்தியை தன் கையில் எடுத்தவர் “இப்ப என் பையன அடிக்கறத நிறுத்தல நான் என்னை வெட்டிக்கிட்டு இந்த இடத்துல உயிரை விடவும் தயங்க மாட்டேன்.. அவங்க பண்ணது தப்பு தான். அதுக்காக இப்படியா அடிப்பீங்க? மார்லயும் தோள்ளையும் போட்டு ஊட்டி வளர்த்தது இதுக்காகவா? முதல்ல அவங்க மேல இருக்க கைய எடுங்க”
“இங்க பாருங்க இந்த மிரட்டுற வேலை எல்லாம் வேண்டாம். உங்க மேல போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்து குடும்பத்தோட உள்ள தூக்கி வைக்கல நான் ராஜலிங்கம் இல்லை.. என் பொண்ண ஏமாத்தவா பார்க்குறான்?” என்று அவரும் அவர் பங்கிற்கு கர்ஜித்தார்.
அம்ரீஷும், சிவநாதனும் பார்வதியை தடுக்க அவரை நோக்கி ஓடிய வேளை “நான் மிரட்டுறேனா? என் பையன் தப்பு பண்ணி இருக்கலாம். ஆனா நாங்க தப்பானவங்க இல்லை. இது நாள் வரையில் இந்த சமுதாயத்தில நல்ல பெயரோட இருந்திட்டோம். இன்னைக்கு அது மொத்தமா போச்சி இந்த அவமானத்தை என்னால தாங்க முடியாது” என்று தன் கையை கத்தியால் அறுத்து கொண்டு சரிந்தார்..
“அம்மா” என்று அலறியபடி ஓடியவன் எதன் மீதோ மோதி கண் விழித்தான்..
சுற்றும் முற்றும் பார்த்தவன் தான் கண்டது கனவென்று புரியவே வெகு நேரமாயிற்று “கடவுளே பிறந்த நாள் அதுவுமா இது என்ன கனவு? என் காதல் விசயத்தை இன்னைக்கு சொல்லாம்னு நினைச்சு இருந்தேனே.. இப்ப இப்படி ஒரு கனவு வருதுன்னா அதுக்கு என்ன அர்த்தம் நல்லது நடக்க போகுதா இல்லை கெட்டது நடக்க போகுதா?
இந்த விஷ்வா கிட்ட ஐடியா கேட்டது தப்பா போச்சி ஏதேதோ சொல்லி பயத்தை கிளப்பி விட்டுட்டான். அவனுக்கு இருக்கு இன்னைக்கு.. கால் பண்ணுவான்ல அப்ப வைக்குறேன் பூசை.. அதன் பின் மணியை பார்த்தவன் அது 8 ஐ காட்டவும் அலறியபடி வெளியே ஓடியவன் தன் தாய் பூஜையறையில் தன் காந்த குரலால் கந்த சஷ்டி கவசம் சொல்லி கொண்டு இருந்தார்.. பெருமூச்சோன்றை வெளியிட்டவன் அமைதியாக சோபாவில் அமர்ந்தான்..
“என்ன இன்னைக்கு ரொம்ப அமைதியா இருக்க பிறந்த நாள் அதுவும் குளிக்காம கொள்ளாம இப்படி வந்து நடு வீட்டில உட்கார்ந்து இருக்க போ போய் குளிச்சிட்டு கோவிலுக்கு போயிட்டு வா”
“ஏங்க இன்னைக்காவது அவனை திட்டாம இருங்க பாவம் அவன்”
“எனக்கு என்ன அவனை திட்டனும்னு ஆசையா பாரு.. எப்படி இருக்கான் இன்னைக்காவது இந்த தாடியை எடுக்க சொல்லு.. புது டிரஸ் வாங்கி வச்சி இருக்கேன் அப்பறம் அவர் கேட்ட புது பைக் வாசல்ல நிக்குது போய் பிடிச்சி இருக்கான்னு பார்க்க சொல்லு”
அதை கேட்டதும் சந்தோஷத்தில் சிவநாதனின் கன்னத்தில் முத்தத்தை அளித்து அதற்கும் சேர்த்து திட்டை வாங்கி கொண்டு வெளியே ஓடியவன் வித்யுதா எதிரில் வரவும் அவளை சிரித்தபடி வரவேற்க நினைத்தவன் காலையில் கண்ட கனவின் தாக்கம் இருக்கவே பயத்துடன் அவள் வயிற்றை பார்த்தவன் அது மேடிட்டு இருக்கவும் அப்படியே மயங்கி சரிந்தான்..
அவன் சரிந்ததும் பயந்தவள் “அம்ரீஷ் என்ன ஆச்சு உனக்கு எழுந்திரு ப்ளீஸ்” இவள் குரல் கேட்டு அவனின் பெற்றோரும் ஓடி வந்தனர்.. வந்தவர்கள் இவளை பார்த்ததும் ஒன்றும் புரியவில்லை என்றாலும் தன் மகனின் நிலை கண்டு அவனை உள்ளே அழைத்து சென்று மயக்கத்தை தெளிய வைத்தனர்..
மயக்கம் தெளிந்து எழுந்தவன் முதலில் பார்த்தது வித்யுதாவை தான்..” ஏய் வித்யு உன்னோட வயிறு அது.. அது இப்ப..”
“என்ன ஆச்சு உனக்கு எதுக்கு மயங்கி விழுந்த ஓஓ இது தான் அழகுல மயங்குறதா?”
“அது இல்லை கனவு.. உன் வயிறு.. அது இப்ப எப்படி?”
பார்வதி, “என்னடா ஒளறிக்கிட்டு இருக்க? இந்த பொண்ணு யாரு நீ என்னவோ ரொம்ப உரிமையா பேசுற? என்ன வயிறு? நீ ஏன் மயங்கி விழுந்த?மாசமா இருக்கியாம்மா?”
அம்ரீஷ், “என்னது?”
வித்யுதா, ” இல்ல இல்ல.. என்ன நடந்ததுன்னு நான் சொல்றேன்” என்று தன் புடவையில் மறைத்து வைத்திருந்த பரிசு பொருளை கொடுத்தாள்.
” இதை ஏன்மா வயிற்றுக்குள்ள மறைச்சி வச்சீ இருக்க? “
“அதான ஏன் மறைச்சி வச்சீ இருக்க?”-அம்ரீஷ்
சிவநாதன், ” டேய் முதல்ல இந்த பொண்ண யாருன்னு சொல்லிட்டு பேசு.. உங்க அண்ணன் மாதிரி ஏதாவது ஏடாகூடமாக பண்ணி வச்சீ இருக்கியா?”
“அய்யோ அப்பா அது வந்து.. இவ பெயர் வித்யுதா என் கூட தான் வேலை பார்க்குறா”
” அவ்வளவு தானா நான் கூட என்னவோனு பயந்து போயிட்டேன்.. அதெல்லாம் சரி நீ ஏன் இதை மறைச்சு எடுத்துக்கிட்டு வந்த? “
” அதுவா அத்தை வெளியே மழையா இருக்குல அதான் மறைச்சு எடுத்துக்கிட்டு வந்தேன்..அப்பறம் இந்த கிப்ட் உங்களை இம்ப்ரஸ் பண்ண தான்..ப்ளீஸ் இதை வாங்கிட்டு எங்க கல்யாணத்துக்கு ஓகே சொல்லிடுங்க”என்று அம்ரீஷூடன் அவர்கள் காலில் விழுந்தாள் வித்யுதா.
சிவநாதனும் பார்வதியும் செய்வதறியாது நின்றிருந்தனர்..
“கண்களின் பாஷையில்
கடிதங்கள் எழுதிடவே
இருமனம் பேசியதே
மௌனத்தின் வழிகளிலே..
சிந்தனையில் ஓர் மனம்
வேதனையில் தவிக்கிறதே
சொந்தங்கள் கூடிடவே
பந்தத்தின் நிகழ்வினிலே
சம்மதங்கள் கேட்டிடவே
இரு மனங்கள் துடிக்கிறதே
உறவுகளின் ஆசியிலே
திருமணமும் நடந்திடுமோ?”
தொடரும்..