Kadhal Kathakali Tamil Novels 24

0
1572
Kadhal Kathakali Tamil Novels
www.madhunovels.com Kadhal Kathakali Tamil Novels

அத்தியாயம் 24


ஒரு வழியாக பொய் சொல்லி அஞ்சலியை சமாதானம் செய்து விட்டு காரை மறுபடியும் கடற்கரைக்கே செலுத்தினான் அபிமன்யு.அவன் இருந்த மனநிலையில் அவனால் வீட்டிற்கும் செல்ல முடியவில்லை,அகாடமிக்கும் செல்ல முடியவில்லை.அவன் மனம் அமைதியை நாடியது. நடந்த பிரச்சினை அனைத்திற்கும் அவன் தான் காரணம் என்று அவனுடைய மனச்சாட்சி அவனை குத்திக் கிழித்தது.

ஊரில் சிவனே என்று இருந்தவளை அவளுடைய அண்ணன் சொன்னான் என்று இங்கே அழைத்து வந்து விட்டு எப்படி எல்லாமோ பேசி அவளை இங்கேயே வேலையில் சேர வைத்த தான் முன் தினம் அவளிடம் நடந்து கொண்டது எவ்வளவு பெரிய தவறு.தன் மீது அவளுக்கு எப்படிப்பட்ட எண்ணம் உருவாகி இருக்கும் என்று நினைத்தவனின் மனம் ஆற மறுத்தது.

www.madhunovels.com

அதை விட இப்பொழுது வீட்டில் இருக்கும் அப்பாவை எப்படி சமாளிப்பது என்பது அவனது பெரும் கவலை ஆனது. ‘அப்பாவிடம் உண்மையை சொல்லலாமா வேண்டாமா? சொன்னால் அப்பா அதை அப்பா எப்படி எடுத்துக் கொள்வார்? நான் அவளை விரும்புவதை பற்றி அவர் ஒன்றும் சொல்ல மாட்டார்’ என்று அபிமன்யுவின் உள்ளம் ஆழமாக நம்பியது.

ஏனெனில் தந்தையை பற்றி அவனுக்கு நன்றாக தெரியும்.பிள்ளைகளின் ஆசைக்கு அவர் எப்போதும் குறுக்கே நின்றதே இல்லை.சில சமயங்களில் பார்வதி மறுத்து பேசினால் கூட அவரிடம் எடுத்து சொல்லிவிட்டு பிள்ளைகளின் விருப்பதிற்கு தான் முக்கியத்துவம் கொடுப்பார்.ஆனால் இப்பொழுது அவருக்கு தெரியாமல் தான் செய்து வைத்து இருக்கும் இந்த செயலை அவர் எப்படி எடுத்துக் கொள்வாரோ என்று புரியாமல் கொஞ்சம் தடுமாறினான் அபிமன்யு.
எந்த காரணத்திற்காகவும் சஹானாவை இழக்கவோ இனி தன்னால் அவள் வேதனை படுவதோ நடக்கக் கூடாது என்று முடிவு செய்தான்.

காரில் அமர்ந்தபடியே தொலைவில் தெரிந்த கடலை வெறித்துக் கொண்டு இருந்தான் அபிமன்யு.இன்று அப்பாவிடம் எப்படியாவது நேரம் பார்த்து எல்லாவற்றையும் சொல்லி விட வேண்டும் என்று முடிவு செய்தவன் அடுத்து அவனின் கெஸ்ட் ஹௌசிற்கு போன் பண்ணி வீட்டு வேலைக்காரியிடம் சஹானா சாப்பிட்டாளா என்று விசாரித்துக் கொண்டவன் அவள் மறுத்தாலும் அவளை வற்புறுத்தியாவது உணவை உண்ண வைக்க வேண்டும் என்ற கட்டளையை இடவும் மறக்கவில்லை.

மதியம் வரை கடற்கரையில் இருந்தவன் அதற்கு மேலும் அங்கே இருக்க பிடிக்காமல் அகாடமிக்கு சென்றான்.அங்கே அவனுக்கு முன் அவனை வரவேற்ற அவனுடைய தந்தையை அவன் எதிர்பார்க்கவில்லை.அதிர்ச்சியுடன் அவரை பார்த்தவன் காரை விட்டு கீழே இறங்கிய சில நொடிகளில் தன்னை சமாளித்துக் கொண்டு நேராக தந்தையை நோக்கி சென்றான்.

இன்று தான் சஹானா வரவில்லையே என்பதும் அவனது நிம்மதிக்கு ஒரு காரணம்.ஆனால் அவனது நிம்மதிக்கு ஆயுள் மிகக் குறைவு என்பதை அப்பொழுது அவன் உணரவில்லை. வாசலில் நின்ற தந்தையை சிரித்த முகத்துடன் வரவேற்றான் அபிமன்யு.

“வாங்கப்பா… என்ன திடீர்ன்னு வந்து இருக்கீங்க? எனக்கு முன்னாடியே ஒரு போன் பண்ணி இருக்கலாமே?”

தனக்கு முன் ஒன்றுமே பேசாமல் நடந்த தந்தையின் செயலுக்கு உண்டான காரணம் புரியாமல் அவர் பின்னாலேயே சென்றான் அபிமன்யு.சுற்றிலும் அவனுடைய அகாடமியை சேர்ந்த மாணவர்கள் வழி நெடுகிலும் அவனுக்கும் அவனுடைய தந்தைக்கும் மாறி மாறி விஷ் செய்த வண்ணம் இருந்தனர்.மற்றவர் முன்னிலையில் எதையும் பேச வேண்டாம் என்று நினைத்தவன் அங்கிருந்து நேராக அவனுடைய தனி அறைக்கு சென்றான்.

அபிமன்யு இல்லாத சமயங்களில் மட்டும் தான் எப்பொழுதும் ராஜேந்திரன் அந்த முதலாளி சேரில் அமர்வார்.மற்றபடி மகன் இருக்கும் நேரத்தில் அந்த சேரில் அமர மாட்டார்.ஏன் என்று அபிமன்யு கேட்டதற்கு அது உன் உழைப்பால் உருவானது என்று நாசுக்காக அதை மறுத்து விடுவார்.எப்பொழுதும் போல அறைக்குள் வந்ததும் நடராஜரை வணங்கி விட்டு தன்னுடைய சேரில் அமர்ந்தான் அபிமன்யு.

“சொல்லுங்க டாடி”அவரிடம் இருந்து விசாரணை வரும் என்று ஏற்கனவே தெரிந்து இருந்ததால் தயக்கம் இன்றி அவரிடம் பேசினான் அபிமன்யு.

அவனையே உற்றுப் பார்த்துக் கொண்டு இருந்த ராஜேந்திரனின் முதல் கேள்வியிலேயே அபிமன்யு கொஞ்சம் நொந்து தான் போனான்.
“அந்த சீட் யாரோடது?” அவர் கேட்டது சஹானாவிற்காக தன்னுடைய அறையிலேயே அவன் போட்டு இருந்த டேபிள் சேரை தான்.

‘இதை மறந்து போனேனே! சஹானா தான் இன்று வரவில்லை.ஆனால் அவளுக்காக தான் தன்னுடைய அறையில் செய்த மாற்றங்களை மறந்து போனோமே என்று தன்னை தானே நொந்து கொண்டான் அபிமன்யு.இனி மறைக்க முடியாது என்ற முடிவுக்கு வந்தவன் தந்தையின் கண்களை நேருக்கு நேராக பார்த்து பேச ஆரம்பித்தான்.

“சஹானாவோட சீட்”

“அது யார்? புதிதாக வேலைக்கு சேர்த்து இருக்கிறாயா?” அவர் பட்டும் படாமலும் கேள்வி கேட்ட விதமே அவர் அதற்குள் அனைத்தையும் விசாரித்து விட்டார் என்பதை அபிமன்யுவிற்கு சொல்ல, இல்லை என்று மறுப்பாக தலை அசைத்தான்.

“என் பிரண்டோட தங்கச்சிப்பா.டான்ஸ் கத்துக்க இங்கே வந்து இருக்காங்க”

“அவ்வளவு தானா?அப்படி என்றால் அந்த பெண்ணிற்கு உன்னுடைய அறையிலேயே சீட் அமைத்துக் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன?” அபிமன்யுவின் முகத்தையே கூர்ந்து பார்த்தபடி கேட்டார் ராஜேந்திரன்.

“என் பிரண்டு என்னோட பாதுகாப்பில் என்னை நம்பி விட்டு இருக்கிறான்.அந்த பெண்ணின் பாதுகாப்பிற்காக என்னுடைய கண் பார்வையிலேயே வைத்து இருக்கிறேன்.” அமர்த்தலாக பதில் சொன்னான் அபிமன்யு.

“அந்த பெண்ணை உன்னோட பர்சனல் டான்ஸ் ரூம்க்கு வேறு கூட்டிக் கொண்டு போனாயாமே?” ராஜேந்திரனின் குரலில் இருந்து அவன் மனதை அறிந்து கொண்டான் அபிமன்யு.அந்த அறைக்கு ஒரு சில முறை மட்டுமே தந்தையான அவரையே அவன் அழைத்து சென்று இருக்கிறான்.முக்கியமான நபர்களை மட்டும் தான் அவன் அங்கே அழைத்து செல்லுவான் என்பது அவர் அறிந்ததே.

‘இந்த விஷயம் இவருக்கு எப்படி தெரியும் என்று யோசித்தவன் மனதில் உடனடியாக வந்து நின்றவன் உதயன்.இது அவன் வேலையாகத் தான் இருக்கும்.இந்நேரம் சஹானா இந்த ஊருக்கு வந்தது முதல் நேற்று நடந்தவரை எல்லாவற்றையும் சொல்லி இருப்பான்’ என்று மனதுக்குள் அவனை திட்டி தீர்த்தவன் “எல்லா கேள்விகளுக்கும் எல்லா நேரத்திலும் பதில் சொல்ல முடியாது டாடி”அழுத்தம் திருத்தமாக பதில் அளித்தான்.

“அப்படினா என்ன அர்த்தம் அபி?”

“இது என்னோட அகாடமி டாடி இதுல நான் செய்ற ஓவ்வொரு விஷயத்திற்கும் உங்களுக்கு நான் விளக்கம் சொல்லனும்னு அவசியம் இல்லை.” தந்தையின் மனது புண்படும் என்று தெரிந்தே சொன்னான் அபிமன்யு. ஏனெனில் இப்பொழுது தந்தையிடம் சொன்னால் எப்படியும் அந்த விஷயம் தாயிற்கும் அஞ்சலிக்கும் தெரிந்து விடும் என்பதாலேயே இந்த முடிவு.

ராஜேந்திரனுக்கு அவருடைய மனைவி பார்வதியிடம் எதையும் மறைத்து பழக்கம் இல்லை.இப்பொழுது சஹானாவை பற்றி இவரிடம் சொன்னால் நிச்சயம் அது அவர்களின் காதுக்கு போய்விடும். பார்வதியை பொறுத்தவரை அவர் மகன் அவருக்கு உசத்தி.யாரோ ஒரு கிராமத்துப்பெண் அவருடைய அருமை மகனை வளைத்து போட முயற்சிப்பதாக எண்ணி சஹானாவின் மனம் நோகும் படி ஏதாவது செய்து விட்டால் என்ன செய்வது என்றே அவ்வாறு கடுமையாக பேசினான் அபிமன்யு.

அவனின் மனதில் இப்பொழுது இருந்தது எல்லாம் சஹானாவை யாரும் புண்படுத்தி விடக்கூடாது என்பதே.என்று சத்யனிடம் சஹானா அவனது பொறுப்பு என்று சொன்னானோ அன்றில் இருந்து அவளை அவளுக்கே தெரியாமல் பாதுகாத்து வருகிறான்.இப்பொழுது அவளை காயப்படுத்த போவது அவனது குடும்பத்தாரே என்றாலும் கூட அவனால் அதை அனுமதிக்க முடியாது.

ஒருவேளை தானாகவே தன்னுடைய தந்தையிடம் இதை பற்றி சொல்லி இருந்தால் நிலைமை வேறு விதமாக இருந்து இருக்கலாம்.ஆனால் இப்பொழுது உதயனின் மூலமாக இவ்வளவும் தெரிந்த பின்பு தான் சொல்வதை தந்தை எப்படி எடுத்துக் கொள்வார் என்று அவனுக்கு தெரியவில்லை.வீணாக இங்கே இதை பற்றி பேசி வீண் வாக்குவாதம் வேண்டாம் என்று நினைத்தான்.

அபிமன்யுவின் பதிலில் அவனை ஒருமுறை ஆழ்ந்த பார்வை ஒன்று பார்த்து விட்டு ஒன்றுமே சொல்லாமல் வெளியேறி விட்டார் ராஜேந்திரன்.
இங்கே அபிமன்யு தனக்காக தன்னுடைய சொந்த குடும்பத்தில் உள்ளவர்களை வருத்திக்கொண்டு இருக்கிறான் என்று தெரியாமல் அங்கே சஹானா தனிமையில் அழுது கரைந்து கொண்டு இருந்தாள்.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here