MEV Tamil novels 13

0
5471
Madhumathi Bharath Tamil Novels

அது பார்த்திபனின் ஒன்று விட்ட மாமா ராமன் தான்…அவருக்கு வெகுநாட்களாக தன்னுடைய மகளை பார்த்திபனுக்கு மணம் முடித்துக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.சுபத்ராவின் கல்யாணத்திற்கு முதல் நாள் கூட இதைப் பற்றி அவர் ராஜனிடம் பேசினார்.


ராஜன் அவர் பேசியதை மறுத்தும் பேசவில்லை..அதே சமயம் விருப்பம் இருப்பது போலவும் பேசவில்லை.எதுவாக இருந்தாலும் சுபத்ராவின் திருமணம் முடிந்தவுடன் பேசிக் கொள்ளலாம் என்று அவர் சொல்லி விட ராமனும் மௌனமாகி விட்டார்.


‘எப்படியும் தனது மகளைத் தான் பார்த்திபன் மணந்து கொள்வான்’ என்று எண்ணிக் கொண்டிருக்க அவரது கற்பனைகளை தவிடு பொடியாக்கி விட்டு அவர் கண் முன்னாலேயே பௌர்ணமியின் கழுத்தில் தாலி கட்டி விட்டான் பார்த்திபன்.அந்த ஆத்திரம் முதல் நாள் இரவில் இருந்தே அவர் மனதில் இருந்தது.இப்பொழுது நடந்த இந்த சம்பவத்தால் மனம் மகிழ்ந்து போனவர் அவர் மட்டுமே.


‘ஹப்பாடா…காட்டில் தொலைந்து போய் விட்டாள்.இந்நேரம் அந்த காட்டெருமை அவளை குத்தி கொன்று இருக்கும்.அடுத்த முஹூர்த்தத்திலேயே பார்த்திபனுக்கும் என்னுடைய மகளுக்கும் திருமணத்தை நடத்தி விட வேண்டியது தான்.’என்று அவர் மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டு இருக்க…இந்த பார்த்திபன் அவளை மீட்டுக்கொண்டு வந்து விட்டானே…’ என்ற ஆத்திரத்தில் இருந்தவர் அவரின் கோபத்தை எல்லாம் பௌர்ணமியின் மீது காட்டி அதன் மூலம் பார்த்திபனை பழி வாங்கத் துடித்தார்.


அவருடைய பாம்பு நாக்கு தன்னுடைய விஷத்தை கக்கத் தொடங்கியது.


“என்ன பார்த்திபா…உண்மையில் உன்னுடைய பொண்டாட்டி காட்டெருமைக்கு பயந்து ஒடி தான் அடிபட்டதா?இல்லை உன்னுடன் வாழப் பிடிக்காமல் ஓடிப் போக முயற்சி செய்யும் பொழுது இப்படி அடி பட்டு விட்டதா?”குரூரத்துடன் வினவ உறவினர்களின் மொத்த பார்வையும் பார்த்திபனின் மேல் விழுந்தது.


“மாமா”ஒற்றை விரல் உயர்த்தி எச்சரித்தவனை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து பேசினார் ராமன்.


“என்னை ஏன் மிரட்டுற பார்த்திபா…இவ குடும்ப லட்சணம் ஒரு மாதிரியானது தானே…இவங்க அம்மாக்காரி எப்படியெல்லாம் இருந்தாளோ…வயித்துல பிள்ளையை உருவானதும் ஏற்கனவே கல்யாணமாகி மனைவியை இழந்த மனுஷனை மயக்கி கைக்குள்ளே போட்டு இல்ல இரண்டாம் தாரமா வாக்கப்பட்டு வந்தா…”என்று அமிலம் போன்ற சொற்களை வீச…பார்த்திபன் கை முஷ்டிகளை இறுக கட்டிக் கொண்டு தன்னுடைய கோபத்தை அடக்கிக் கொண்டான்


‘பேசுவது அவனுடைய அம்மாவின் அண்ணன் முறையில் இருப்பவர்…அதுவுமில்லாமல் தன்னை விட வயதில் மூத்தவரை எப்படி கை நீட்ட முடியும்’ என்று எண்ணி அவன் அமைதி காக்க…அதையே சாதகமாக எடுத்துக் கொண்டார் அவர்…


“அம்மாவை மாதிரியே தானே பொண்ணும் இருப்பா…நீ பாட்டுக்கு சட்டுன்னு அவ கழுத்தில் தாலியை கட்டிட்டியே…எதுக்கும் டாக்டர் கிட்டே போய் ஒரு செக்கப் பண்ணி பார்த்துடு…இல்லைன்னா…வேற யாரோட பிள்ளைக்காவது உன்னோட பேரை இனிசியலா போட்டுடப் போறா”என்றார் வக்கிரமாக…


“மாமா”என்று ஆத்திரத்துடன் எழுந்த பார்த்திபனைக் கண்டு அவரின் சப்த நாடியும் ஒடுங்கியது.மதம் கொண்ட யானையின் ஆக்ரோஷத்துடன் தன் முன்னே வந்தவனைக் கண்டு அவர் உள்ளே பயந்தாலும் வெளியே தைரியமாக இருந்தார்.


‘என்ன தான் இருந்தாலும் பார்த்திபன் வயதில் பெரியவர்கள் மீது மரியாதை வைத்து இருப்பவன்.கண்டிப்பாக கை நீட்ட மாட்டான்’ என்று நினைக்க பார்த்திபனுக்கு முன் ராமனை ஓங்கி ஒரு அறை விட்டார் ராஜன்.


“ஏதோ உன் பொண்ணை என் பையன் கல்யாணம் செஞ்சுக்கலையே அப்படிங்கிற வருத்தத்தில் பேசுற…போனா போகுதுன்னு விட்டா…ரொம்ப பேசுற…அவ என்னோட மருமக..அவளைப் பத்தி இனி ஒரு வார்த்தை பேசினா ஊருக்குள்ளே நீ காலடி எடுத்து வைக்க முடியாது சொல்லிட்டேன்”


“மாப்பிள்ளை…நேத்து வந்தவளுக்காக என்னை கை நீட்டி அடிச்சுட்டீங்களே…இது உங்களுக்கே நல்லா இருக்கா? தங்கச்சி…நீயாவது உன் புருஷனை ஒரு வார்த்தை கேட்க மாட்டியா?”சண்டையை ஊதி பெரிதாக்க முயன்றார் ராமன்.


“நான் சொல்லி என்னைக்கு அண்ணா உங்க மச்சான் கேட்டு இருக்காரு…அவர் எப்பவுமே அம்மா பிள்ளை தானே…இன்னைக்கு காலையில கூட சொன்னேன்…இந்த ராமன் அண்ணா மூஞ்சியில் நேத்தில இருந்து எள்ளும் கொள்ளும் வெடிக்குது..அவரைக் கோவிலுக்கு கூட்டிட்டு போக வேணாம்னு தலைப்பாடா அடிச்சுகிட்டேன்…கேட்டா தானே…
எங்க மாமியார் தான் சொன்னாங்க…ஆயிரம் தான் இருந்தாலும் அவனும் எனக்கு பையன் மாதிரி…அப்படி எதுவும் செய்ய மாட்டான்னு…இப்ப பாருங்க கடைசியில் நான் பயந்த மாதிரியே ஆகிடுச்சு” சாந்தமாக பேசிக் கொண்டே முகத்தில் கரியை பூசுவது எப்படி என்று நிரூபித்தார் செல்வி.


இது அத்தனையும் ஒருபுறம் இருக்க கோபத்தோடு பார்வையை திருப்பிய பார்த்திபன் அரண்டு போனான்.


பௌர்ணமி மயக்கத்தில் இருந்து விழித்து இருந்தாள்.அங்கே நடந்த அத்தனை பேச்சுக்களையும் கேட்டு விட்டாள் என்பது அவளது வெளிறிய முகத்திலேயே தெரிய வேகமாக அவளின் அருகில் சென்று மண்டியிட்டு அமர்ந்தான் பார்த்திபன்.


“பொம்மிம்மா…இப்போ எப்படி இருக்குடா….கொஞ்சம் தண்ணி குடி”என்று சொன்னவன் தண்ணீரை அவளுக்கு புகட்ட முயல இயந்திரமென அதை பருகி முடித்தாள் பௌர்ணமி.
பார்த்திபனின் உள்ளம் பதறியது.இப்படியான பேச்சுக்களை இவள் கேட்க வேண்டி வந்து விட்டதே…இவள் மனம் என்னவெல்லாம் பாடுபடுகிறதோ என்று நினைத்தவன் அவளின் தலையை இதமாக கோதி விட்டான்.


இவ்வளவு தூரம் நடந்த பிறகும் ராமனால் தன்னுடைய தோல்வியை ஒத்துக் கொள்ள முடியவில்லை.யாரோ ஒரு கேடு கெட்ட பெண்ணின் வயிற்றில் பிறந்தவளுக்காக மொத்த குடும்பமும் தன்னை உதாசீனம் செய்வதை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.பௌர்ணமியை கதற வைத்தே தீர வேண்டும் என்ற வெறுப்புடன் தொடர்ந்து பேசினார்.


“மச்சான்.. யாரோ ஒரு கேடு கெட்ட பெண்ணுக்காக என்னையே நீங்க எல்லாரும் அசிங்கப்படுத்திட்டீங்க இல்ல…நான் சொல்றேன் எழுதி வச்சுக்கோங்க…இவ அம்மாவை மாதிரியே இவளும் தரம் கெட்டவளா தான் இருப்பா…அதனால் இப்பவே அவளை வீட்டை விட்டு…” என்று பேசிக் கொண்டே போனவரின் குரல் வளையை பிடித்து நெறித்து பாதியிலேயே பேச்சை நிறுத்தி இருந்தான் பார்த்திபன்.


“சொந்தக்காரங்களா போயிட்டீங்களேன்னு மேலே கை வைக்காம இருந்த ரொம்ப பேசறீங்க? எங்க பேசுறோம்…யார் முன்னாடி பேசுறோம்னு எந்த அச்சமும் இல்லாம பேசிக்கிட்டே போறீங்க…நான் நினைச்சா ஊருக்கு திரும்புறதுக்கு முன்னே உங்க மொத்த குடும்பத்தையும் காலி பண்ண முடியும்…செய்யட்டுமா? செஞ்சு காட்டட்டுமா?”என்று குரல் உயர்த்தி சிம்மக் குரலில் கர்ஜித்தவனைக் கண்டு ராமனின் முதுகுத்தண்டு சில்லிட்டது.


“வேணாம் பார்த்திபா..விட்டுடு…ஆயிரம் தான் இருந்தாலும் நம்ம சொந்தக்காரங்க அவங்க…மன்னிச்சு விட்டுடு…”பார்த்திபனின் கரங்களை விலக்க முயன்றபடி ராஜன் எடுத்து சொல்ல வேண்டா வெறுப்பாக கைகளை விலக்கிக் கொண்டான் பார்த்திபன்.


“இனியொரு நீங்க என்னோட வீட்டுக்கு வரக் கூடாது…எங்க வீட்டு விசேஷத்தில் கூட இனி நீங்க முகம் காட்டக் கூடாது…அப்படி வந்தா அதுக்கு அப்புறம் உங்களுக்கு வாழ்க்கைன்னு ஒண்ணு இல்லாமலே போய்டும் என்று இறுகிப் போன குரலில் எச்சரித்தவன் அவரை ஒதுக்கித் தள்ளிவிட்டு பௌர்ணமியின் அருகில் போய் ஆதரவாக அமர்ந்து கொண்டான்.


“அம்மா நான் இவளை வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்…இந்த பொங்கல் வைக்கிறது எல்லாம் இன்னொரு நாள் செஞ்சுக்கலாம்”என்று சொல்லி கிளம்ப முயன்றவனை தடுத்து விட்டாள் பௌர்ணமி.


“எனக்கு ஒண்ணும் இல்லை…இருந்து பொங்கலை வச்சு முடிச்சுட்டே கிளம்பலாம்”


“விளையாடுறியா நீ?தலையில் அடிபட்டு காயமாகி இருக்கு..உடம்புல அங்கங்கே சிராய்ச்சு இருக்கு…இதோட எப்படி பொங்கல் வைக்கிறது?”


“இல்லை…கல்யாணம் ஆன பிறகு முதல் தடவை வந்து இருக்கேன்..வெறுமனே திரும்பிப் போனா எனக்கு கஷ்டமா இருக்கும்”


“சொன்னா கேளேன் பொம்மிம்மா”என்றான் கெஞ்சலாக


“ஏன்…என்னைப் போல ஒருத்தி உங்க குலதெய்வ கோவிலில் பொங்கல் வைக்க தகுதி இல்லாதவன்னு நினைக்கறீங்களா?”கண்களில் கண்ணீர் வழிய கேட்டவளை இழுத்து அணைத்து ஆறுதல் கூறத் துடித்தவன் சூழ்நிலை கருதி அப்படியே அமைதியாக இருந்தான்.


“உனக்கு உடம்பு சரியில்லையேன்னு சொன்னா…இப்படி அடம்பிடிக்கறியே சரி பொம்மிம்மா…வேணும்னா இப்படி செய்யலாம்…பொங்கல் வைக்கிறது எல்லாத்தையும் அம்மா பார்த்துப்பாங்க…நீ உன் கையால அரிசி மட்டும் போடு”


“தேங்க்ஸ்” என்றாள் முகம் மிளிர…
அவளின் முகத்தையே மகிழ்ச்சியாக பார்த்துக் கொண்டிருந்தான் பார்த்திபன்.


‘எவ்வளவு ஏக்கம் உள்ளுக்குள் இருந்து இருந்தால் இப்படி மகிழ்ந்து போவாள் அவள்’என்று எண்ணியவாறே அவளைக் கைத்தாங்கலாக பிடித்து அவள் பொங்கல் செய்வதற்கு உதவி செய்தவன் அதன் பிறகு மற்றவர்கள் கிளம்பும் முன் அவளை தன்னுடைய ஜீப்பில் அழைத்துக் கொண்டு போனான்.


உடன் கூடவே வரத் துடித்த பாஸ்கரை ஒற்றைப் பார்வையில் தடுத்து நிறுத்தி விட்டான்.


பாஸ்கருக்கு உள்ளுக்குள் பயம்…தவிப்பு எல்லாம் கலந்து இருந்தது.தங்கைக்கு விருப்பம் இல்லாத திருமணம் அவளது வாழ்வு ஒழுங்காக இருக்குமோ இல்லையோ என்ற தவிப்பு அவனை அதிகமாக ஆட்டி வைத்தது என்று தான் சொல்ல வேண்டும்.முதல் நாள் பார்த்திபன் தாலி கட்டியதில் இருந்து அவனால் இயல்பாக சுகன்யாவிடம் கூட பேச முடியவில்லை.
தங்கையின் வாழ்க்கை நன்றாக இருக்குமா என்ற பயமே அவனை ஆட்டுவித்துக் கொண்டிருந்தது.ஆனால் இப்பொழுது அவளுக்கு ஒரு ஆபத்து என்றதும் நொடியும் தாமதிக்காமல் காட்டை நோக்கி ஓடிய பார்த்திபனைக் கண்டதும் பாஸ்கருக்கு ஓரளவிற்கு தெளிவு வந்து இருந்தது.


அவளை கைகளில் ஏந்திக் கொண்டு தன்னிடம் கொடுக்க மறுத்து தானாக அவளை சுமந்து கொண்ட விதமும்,அவளைத் தரக் குறைவாக பேசிய ஒருவரை அடிக்கப் பாய்ந்த அவனது ரௌத்திரமும் கண்டு அவனுக்கு திருப்தியாகத் இருந்தது.
தங்கை வாழ்க்கையை நன்றாக வாழுவாள் என்று நம்பத் தொடங்கியதுமே அவன் முகத்தில் ஒரு நிறைவு வந்து இருந்தது.

Facebook Comments Box
What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Previous PostSahara Saral Poothatho Kindle Ebook
Next PostMEV Final
Hi Readers, This is Madhumathi Bharath. I am one of the Tamil romance novel writers.This page created for my novel readers.In this blog i am going to provide you link for my tamil new novels updates.This is not a writer's website,This is for you people who would like to read Tamil new novels.keep following this page for further updates.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here