Arooba Mohini 7

0
494

அத்தியாயம் 7

ஆவிகளைப் பற்றி:

சில குழந்தைகள் பேய்களை தங்களின் கற்பனை நண்பர்களாக எடுத்துக் கொள்வார்கள். எனவே யாருமே இல்லாத இடத்தில் குழந்தைகள் யாரோ இருப்பது போல கற்பனை செய்து கொண்டு விளையாடினால், அது வெறும் விளையாட்டு என்று நினைத்து அஜாக்கிரதையாக இருக்காதீர்கள்.

கணவனின் நிலையை பார்த்து அதிர்ந்து போனாள் அனு. காதுகளில் ரத்தம் வழிய சந்திரன் நின்ற தோற்றம் அவளது நெஞ்சை உறைய வைத்தது பயத்தோடு பேச ஆரம்பித்து இருந்தாலும் நண்பரிடம் போனில் பேசிக்கொண்டு இருந்த பொழுது நன்றாகத் தானே  இருந்தான்!. அதற்குப் பின் என்ன ஆனது? எதனால் இப்படி ஒரு நிலை? என்று என்று சில நொடிகள் குழம்பிப் போய் நின்றாள் அனு.

ஆனால் உடனேயே  அடுத்து கணவனைக் காப்பாற்ற வேண்டிய அவசியத்தை உணர்ந்து கணவனின் அருகில் ஓடினாள். சந்திரனோ  ஒரு பக்க காதுகளை அழுந்த மூடியவாறு வலியில் கதறிக் கொண்டிருந்தான். உடனடியாக வீட்டு வேலையாட்களின் உதவியோடு  உள்ளூர் மருத்துவமனைக்கு சந்திரனை அழைத்து சென்றாள்.

இதுநாள்வரையில் சந்திரன் செய்த செயல்களும் அவன் அதற்குப் பின்னால் இருப்பதும் வெறும் கற்பனை என்று அவள் நினைத்துக் கொண்டிருந்தாள். ஆனால் இன்று நடந்த சம்பவம் அவனது பயம் வீணான கற்பனை அல்ல என்பதை அனுவுக்கு தெளிவாக புரிய வைத்தது..

கடைசியாக அவனது நண்பனுக்கு அழைத்தது நினைவுக்கு வர ராஜாவுக்கு வேகமாக போனில் அழைப்பு விடுத்தாள்  அனு. ராசாவிற்கு போனில் அங்கே நடந்த விவரங்களை தெளிவாக கூறி நிலைமையின் வீரியத்தை கூற… திருச்சியில் இருந்த ராஜாவிற்கும் ஒன்றுமே புரியாத நிலை.

ராஜாவின் கணிப்புப்படி சந்திரன் தான் கொடுத்து அந்த எண்ணிற்குத் தான்  அழைப்பு விடுத்து பேசியிருக்க வேண்டும் என்பது வரை அவனுக்கு புரிந்தது. ஆனால் அப்படி அவன் பேசிய பொழுது நடந்த சம்பவமாக அனு சொன்னதைத் தான் அவனால் நம்ப முடியவில்லை.

 அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் ராஜா குழம்பிப் போயிருக்கும் பொழுது… அவனை  உடனே கிளம்பி ஊட்டிக்கு வருமாறு வேண்டுகோள் விடுத்தாள் அனு. ராஜாவும் அங்கேயே இருந்து கொண்டிருந்தால் நண்பனுக்கு உதவி செய்ய முடியாது இப்போது நண்பனுக்கு தன்னுடைய உதவியும் அருகாமையும் தேவை என்று தோன்ற உடனடியாக கிளம்பி ஊட்டிக்கு செல்ல முடிவெடுத்தான்.

ராஜாவுக்கு செல்வதற்கான எல்லா ஏற்பாடுகளையும் அனுவே செய்து முடித்தாள். அன்று மாலையே விமானம் மூலம் ராஜா ஊட்டிக்கு வந்து சேர்ந்தான். ஊட்டியில் இருந்து விமானத்தில் வந்து இறங்கி அவனை அனுவின் வீட்டு டிரைவர் நேராக அழைத்து சென்ற இடம் சந்திரனை அனுமதித்து இருந்த மருத்துவமனைக்கு தான்.

மருந்தின் உபயத்தினால் சந்திரன் உறங்கிக் கொண்டிருக்க அவனது ஒரு காதுகளைச் சுற்றி பேண்டேஜ் சுற்றப்பட்டிருந்தது. ராஜாவின் வருகை பற்றி அறிந்திருந்ததால் ராஜாவிற்க்காக  காத்திருந்தாள் அனு. அவனை கண்டதுமே  போனில் கூறிய விவரங்களை மீண்டும் ஒருமுறை தெரிவித்தாள் அனு.

ராஜாவிடம் போனில் பேசியது… அதன் பிறகு வேறு ஒரு எண்ணிற்கு மீண்டும் அழைத்துப் பேசியது கடைசியில் பயங்கரமாக கத்திக்கொண்டே சந்திரன் கீழே விழுந்தது வரை ஒன்று விடாமல் எல்லாவற்றையும் கூறி முடித்தாள்.

இதில் ராஜாவிற்கு புரியாத விஷயம், சந்திரன் எதற்காக அலற வேண்டும்? சந்திரனின் காதில் இருந்து ரத்தம் வழிந்ததே.. எதனால் காது ஜவ்வு கிழிந்தது? ரத்தம் வருமளவிற்கு என்ன நடந்தது? போனில் அந்தப் பக்கம் என்ன நடந்தாலும் சந்திரனை அந்த அளவிற்கு பாதிக்கப்பட கண்டிப்பாக வாய்ப்பேயில்லையே. அவன் வைத்திருப்பது நல்ல உயர் தரமான போன்.. எனவே அவனது போன் கோளாறினால் அவனது காது சவ்வு கிழிந்திருக்க வாய்ப்பு இல்லை.

“ராஜா அண்ணா தயவு செய்து உண்மையை சொல்லுங்க… அவர் யார் கிட்ட பேசினார்? என்கிட்ட எதுவும் மறைக்காதீங்க… எனக்கு அவரோட நடவடிக்கைகளையும், அவருக்கு நடக்கிறதையும் பார்க்கும்போது ரொம்ப பயமா இருக்கு. ப்ளீஸ்” என்று கெஞ்சினாள் அனு.

ஒரு நிமிடம் யோசித்த ராஜாவிற்கு அனுவிடம்  மறைப்பது சந்திரனுக்கு ஆபத்தாக முடியும் என்று எண்ணி உடனே அவனுக்கு தெரிந்த விஷயங்களை எல்லாம் மறைக்காமல் அவளிடம் கூறத் தொடங்கினான்.

“அனு சந்திரன் உங்க கல்யாணத்துக்கு முன்னாடி இருந்தே கொஞ்சம் டிஸ்டர்ப்டா இருந்தான். என்ன காரணம் அப்படின்னு எனக்குத் தெரியல. அப்போ நான் வெளியூரில் தங்கி வேலை பார்த்தேன். போன்ல மட்டும் நானா கால் செஞ்சா அப்பப்போ பேசுவான். என்கிட்ட கூட பேசாம… ஒரு மாதிரி விலகித் தான் இருந்தான். இப்போ போன வாரம் உங்க வீட்டுக்கு வந்து இருந்தேன்  இல்லையா?

அப்ப தான் என்கிட்ட இந்த விஷயத்தை சொன்னான். அவனுக்கு ஏதோ அமானுஷ்ய நிகழ்வுகள் நடக்கிறதோ என்கிட்ட சொன்னான். அப்போ அவனை நான் நம்பல. அவன் ஏதோ குழப்பத்துல இருக்கான் அப்படின்னு நினைச்சு நானும் அதை பெருசா எடுத்துக்கலை.

ஏன் உங்க கல்யாணத்தப்போ கூட  அவன் ரொம்ப குழப்பமாத் தான் இருந்தான். அவனோட குழப்பத்துக்கு காரணம் ஒரு பொண்ணு அவ பேரு மோகினி.

அந்த பொண்ணுக்கும், அவனுக்கும் பெருசா எந்த சம்பந்தமும் கிடையாது. அவங்க அண்ணன் கணேஷ் அந்த பொண்ணை கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி கேட்டபிறகு  அதுக்கப்புறம் அந்த வீட்டு பக்கம் போவதை கூட நிறுத்திட்டான்.

என்ன ஆச்சுன்னு தெரியலை சந்திரன் கொஞ்ச நாளைக்கு முன்னாடி உங்க வீட்டில் மயங்கி விழுந்தான் இல்லையா? அன்னைக்கு அவன் ஒரு உருவத்தை பார்த்ததா  சொல்றான். அந்த உருவம் அந்த பொண்ணு தான்னு  அவன் முழு மனசா நம்புறான். அதுக்கு ஏதாவது காரணம் இருக்கலாம்.

அந்த பொண்ணு நம்ம வீட்டிற்கு வந்ததற்க்கோ… இவனை பார்த்தற்க்கோ எந்த சாட்சியும் இல்லை. ஆனால் ஏதோ ஒரு விதத்தில் அது மோகினி தான்னு ஆணித்தரமா  நம்பறான். இதைப்பற்றி என்னை விசாரித்து வரச் சொல்லி தான் அந்த பொண்ணோட வீட்டுக்கு அனுப்பி வைச்சான்.

நானும் அந்த பொண்ணோட வீட்டுக்கு போய் விசாரித்து வந்த அவன் கிட்டே தகவல் சொன்னேன். அந்த பொண்ணு இப்போ பெங்களூர்ல வேலை பார்க்கிறா.. மாசத்துக்கு ஒரு முறை அவங்க வீட்டுக்கு வந்துட்டு போறதா அவங்க அம்மா சொன்னாங்க. நான் அந்த பொண்ணு கிட்டயும் போன்ல பேசினேன். அந்த பொண்ணு வரும் வாரம் இந்த ஊருக்கு வரப் போறதா  சொன்னாள்.

இந்த விஷயத்தை நான் காலையில சந்திரன் கிட்ட சொன்னேன். ஆனா அப்பவும் அவன் நம்பலை. அவன் மனசளவில் ரொம்ப குழம்பிப் போய் இருக்கானு மட்டும் தான் நினைச்சேன். இது ஏதோ சைக்காலஜிகல் ப்ராப்ளம். நல்ல டாக்டரா பார்த்து கூட்டிட்டு போகணும்னு கூட நினைச்சேன்.

ஆனா இப்பத்தான் அவனோட அந்த நம்பிக்கைக்குப் பின்னாடி ஏதோ ஒரு காரணம் இருக்கு. இது மனசு  மட்டும் சம்பந்தப்பட்ட விஷயம் இல்லை. இதுக்கு பின்னாடி ஏதோ ஒரு மர்மம்… ஒரு அமானுஷ்யம் கண்டிப்பா இருக்குன்னு எனக்குப் புரியுது. ஆனா இப்படியே விட்டா… அது சந்திரனுக்கு ஆபத்தாக முடிஞ்சுடும். சந்திரனுக்கு உதவி செஞ்சு அவனை காப்பாத்த வேண்டியது என்னோட பொறுப்பு நீ கவலைப்படாதே தங்கச்சி… நான் பார்த்துக்கிறேன்” என்று அவளுக்கு ஆறுதல் கூறினான்.

மருத்துவரின் அறிவுரைப்படி சந்திரன் முழுதாக இரண்டு நாட்களும் மருத்துவமனையிலேயே இருந்தான். கண்விழித்ததும் ராஜாவை பார்த்த அவன் முகத்தில் பெரும் நிம்மதி தென்பட்டது. பயத்தையும் தாண்டிய அமைதி. அவன் முகபாவனைகளை மனதில் குறித்துக் கொண்டாள் அனு.

ஆனால் கண் ஜாடையில் கூட எதையும் காட்டி கொள்ளவில்லை. இப்போதைக்கு கணவனை இந்த இக்கட்டில் இருந்து மீட்டு எடுப்பது மட்டுமே அவள் முன்னால் இருந்த விஷயம். வீணாக சந்திரனை கோபத்திற்கு ஆளாக வேண்டாம் என்று நினைத்தவள் சந்திரனின் முகபாவனைகளை கண்டும் காணாதது போல் இருந்து கொண்டாள்.

மருத்துவமனையில் இருந்து சந்திரன் வீட்டுக்கு திரும்பியதும் நண்பர்களுக்கும் தனிமையை கொடுத்துவிட்டு ஏதோ வேலை இருப்பது போல நானும் அடுப்படிக்குள் நுழைந்து கொண்டாள் அனு. ராஜா பேச முயற்சி செய்வதற்கு முன்னரே அவரை முந்திக்கொண்டு சந்திரன் பேசினான்.

“ராஜா நான் சொல்றத நம்புடா… அந்த பொண்ணு மோகினி… அவ பொண்ணே இல்லைடா… அவ… அவ… வேற ஏதோ.. அவ என்னைக்  கொல்ல பார்க்கிறா… என்னை பயமுறுத்துறா… ஒவ்வொரு நிமிஷமும் எனக்கு உயிர் பயத்தை காட்டுறா… ஆனா எனக்கு புரியாத விஷயம் இதெல்லாம் எனக்கு ஏன் பண்றா?

ஒருவேளை நான் அவளை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொன்னதால இப்படி எல்லாம் பண்றாளா? எனக்கு புரியலடா.. வேற என்ன காரணமா இருக்கும்?

நான் எதுவும் பண்ணலையே… அவ இந்த மாதிரி நடந்துக்க… என்ன காரணம்? ஆனா ஒண்ணு மட்டும் நிச்சயம் ராஜா. கண்டிப்பா அவ பொண்ணு இல்ல. அவ ஒரு அமானுஷ்யம். அவ கிட்டே இருந்து என்னை எப்படி காப்பாத்திக்கப் போறேன்னு தெரியலை.

ஆனா நான் என்ன தப்பு செஞ்சேன் எதுக்காக என்னை தொடர்ந்து வந்து தொல்லை கொடுக்கிறா இருக்கா அப்படின்னு தெரிஞ்சா தானே எதுவும் பண்ண முடியும்?. உனக்கு எதுவும் தெரியுமா? என்று அடுக்கடுக்காக கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனான் சந்திரன்

“சந்திரா கொஞ்சம் அமைதியாக இரு… இப்படி ஓவரா எமோஷனலா ஆகாதே… நீயும் குழம்பி மற்றவர்களையும் குழப்பி டென்ஷன் ஆக்காதே. நான் சொல்றதை கொஞ்சம் கேளு. அன்னைக்கு காலையில அந்த பொண்ணு கிட்ட நான் பேசினேன் . உன்கிட்ட கொடுத்து அதை நம்பர்ல நான் பேசினேன் அந்த பொண்ணு ரொம்ப அமைதியா ரொம்ப சாப்ட்டா தான்டா பேசினா. நீ சொல்ற மாதிரிலாம் எதுவும் இல்லையே… நீயாக போட்டு குழப்புக்கிறே” நண்பனை மேலும் பயமுறுத்தாமல் அவனை சமாதானம் செய்ய முயன்றான் ராஜா.

“டேய்! விளையாடுறியா நீ கொடுத்த அதே நம்பர்ல தான்  நானும் பேசினேன். என்கிட்ட பேசினது நிச்சயமா ஒரு பொண்ணு இல்லை. அவ குரலில் இருந்தது  வெறி… இரத்தவெறி… கொலைவெறி… அதையும் தாண்டி… ப்ளீஸ்டா… நான் சொல்றதை கொஞ்சமாவது நம்பு” என்று கிட்டத்தட்ட கெஞ்சினான் சந்திரன்.

“சந்திரா நான் எவ்வளவு சொல்லியும் நம்ப மாட்டேங்கறியே… அந்த பொண்ணு கிட்டே நான் பேசினேன். அந்த பொண்ணு வரும் வாரம் ஊருக்கு வர்றேன்னு சொல்லிச்சு. அந்த பொண்ணு கிட்ட நான் ஒரு பேங்கர் மாதிரி பேசி அந்த பொண்ணை ஏமாத்தி தகவல் விசாரிச்சேன். அந்த பொண்ணு நான் ஊருக்கு வந்து இதை சரி செய்யுறேன்னு சொல்லுச்சு. நீ சொல்ற மாதிரி அந்த பொண்ணு அமானுஷ்யமாக இருந்தால் அந்த பொண்ணு எப்படி அடுத்த வாரம் ஊருக்கு வர முடியும்?

ராஜா தன்னால் முடிந்த வரை எத்தனையோ விதமாக பொறுமையாக எடுத்துச் சொல்லியும் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை சந்திரனால். மனம் முழுவதும் எத்தனையோ குழப்பங்கள் இருந்தாலும் தன்னை ஒரு அமானுஷ்யம் தொடர்ந்து வருவதை அவன் உறுதியாக நம்பினான். அந்த அமானுஷ்யம் மோகினி தான் என்பதிலும் அவன் தெளிவாகவே இருந்தான். எனவே ராஜாவின் சமாளிப்புகள் எதுவும் எடுபடவில்லை

இது எல்லாவற்றையும் விட சந்திரன் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு திரும்பிய பிறகு அவர்கள் இருந்த அந்த ஊட்டி பங்களாவில் வழக்கத்திற்கு மாறாக சில அமானுஷ்ய சம்பவங்கள் நடைபெறத் தொடங்கியதால் அனு, ராஜா, சந்திரன் மூவருமே கவலைக்கு உள்ளாகினார்கள்.

ஏன்? இதை எப்படி சரி செய்வது? என்று சந்திரனைவிட அனுவும் ராஜாவும் கலங்கிப் போய் இருந்தனர்.

அனு தன்னுடைய திருப்திக்காக உள்ளூரில் இருந்து சில சாமியார்கள் மூலம்  வீட்டிற்குள் ஏதேதோ ஹோமங்களும், பூஜைகளும் செய்து பார்த்தாள். ஆனால் அதற்கெல்லாம் பலன் பூஜ்யமே. இரவு நேரங்களில் வீட்டில் அமானுஷ்யங்கள் தொடர்ந்து நடைபெற்றவண்ணம்  இருந்தன.

ஒருநாள் இரவு சந்திரன் மாடியிலிருந்த அவனது அறையில் ஓய்வாக படுத்திருந்தான். தண்ணீர் குடிப்பதற்கு அருகிலிருக்கும் பாட்டிலை பார்க்கும்போது அது காலியாக இருக்கவே கீழே சமையல்கட்டில் சமைத்துக் கொண்டிருந்த அனுவிற்கு குரல் கொடுத்தான்.

“அனு குடிக்க தண்ணீர் தீர்ந்து போச்சு… கீழே இருந்து கொஞ்சம் கொண்டு வர்றியா?” என்று சந்திரன் கேட்க… கிச்சனிலிருந்து அவள்  பதிலளிக்கும் முன்பாகவே மாடியில் இருந்து  இன்னொரு குரல் அவனது கேள்விக்கு பதில் அளித்தது.

“இதோ ஒரே நிமிடத்தில் கொண்டு வருகிறேன்” என்று அழகாக சொல்லிச் சிரித்தது அந்த குரல்.

அந்த குரல் அனுவின் குரல் தான். ஆனால் பேசியது அவள் அல்ல. ஒரே நேரத்தில் ராஜாவும், அனுவும் திகைத்தனர். ஹாலில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்த ராஜா… ‘அனு இங்கே இருக்க மாடியிலிருந்து அவள் குரல் வருவது  எப்படி சாத்தியம்?’ என்று எண்ணி அனுவை முந்திக்கொண்டு  மாடிக்கு வந்து சேர்ந்தான் ராஜா.

அங்கே மாடியில் அவன் கண்ட காட்சியில் அவனுக்கு வார்த்தை வர மறுத்தது.

மோகினி வருவாள்.

Facebook Comments Box
Click to rate this post!
[Total: 1 Average: 5]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here