அரூப மோகினி தமிழ் நாவல் அத்தியாயம் 11

3
451

அத்தியாயம் 11

ஆவிகளைப் பற்றி:

டீமன்ஸ்

இவை சக்திவாய்ந்த, இயற்கைக்கு அப்பாற்பட்ட ஆவிகள். இந்த வகை ஆவிகள்  மன மற்றும் உடல் ரீதியான சித்திரவதைகளை செய்யலாம். இந்த பேய்கள் எந்த வடிவத்தில் வேண்டுமானாலும்  உருவாகும். இந்த பேய்களிடம் ஒருபோதும் சவால் விடக்கூடாது. ஏனெனில் அவை உயிரை எடுக்கும் அளவுக்கு சக்தி  கொண்டவை.

கறுப்பில் புகையாக அலைபாய்ந்து கொண்டிருந்தது அந்த உருவம் அந்த உருவத்தை பார்க்கவே முடியவில்லை மூவராலும். கண்கள் இருக்கும் இடத்தில் ஒரே ஒரு வெள்ளை புள்ளி மட்டும் தெரிந்தது.

அனு, சந்திரன் கரங்களை மேலும் இறுக்கமாகப் பற்றிக் கொண்டாள். இதுதான் நடக்கப் போகிறது என்று தெரிந்தாலும், அந்த நிமிடத்தை எதிர்கொள்வதற்கு வேண்டிய துணிவு அவளிடம் இல்லை. அதுநாள் வரையில் ஒரு ஆத்மாவை நேரடியாக பார்த்தது இல்லை. கண்ணாடியில் தெரிந்த அந்த உருவத்தின் கோர முகத்தை காண முடியாமல் சந்திரன் தோளில் முகத்தை அழுந்த புதைத்துக் கொண்டாள்.

மூவரும் பயத்தில் நடுங்கிக் கொண்டு இருக்க அவர்களின் பயத்தில் துளியளவு கூட பாதிக்கப்பட்டவராக, முனியன் அந்த உருவத்திடம் பேசத் தொடங்கினார்.

“யார் நீ? உனக்கு என்ன வேணும்? எதுக்காக அவங்களுக்கு தொந்தரவு  கொடுக்கிற? என்ன காரணத்துக்காக இந்த மாதிரி  தொடர்ந்து வர்ற நீ? இந்த குடும்பத்தை சேர்ந்தவளா? இல்ல உனக்கு இவங்களுக்கு தெரிவிக்க வேண்டிய ஏதாவது தகவல் இருக்கா? இல்லை வேறு ஏதாவது காரணமா?” என்று முனியன் கேள்விகளை தொடுக்க அந்த உருவத்திடம் பதிலே இல்லை.

“உன் கிட்ட தான் கேட்கிறேன்… ஒழுங்கா பதில் சொல்லு… பிடிவாதம் பிடிச்சு  வேறு ஏதாவது வேலை செய்யலாம்னு நினைச்சே… அவ்வளவு தான். என்னைப் பத்தி தெரியாது உனக்கு. எத்தனையோ ஆவிகளை அடக்கி, ஒடுக்கி இருக்கேன். உன்னையும் பிடிச்சு வேப்ப மரத்துல ஆணி அடிச்சுடுவேன் ஒழுங்கா சொல் பேச்சு கேளு” மிரட்டினான் முனியன்.

சில நொடிகள் அமைதியாய் கழிய, அடுத்த நொடியே  வீடு முழுக்க அந்த உருவத்தின் சிரிப்பு எதிரொலித்தது.

பேய்ச் சிரிப்பு… என்று ராஜா கேள்விப் பட்டிருக்கிறான். அன்று தான் முதல்முறையாக நேரடியாக கேட்கிறான். அந்த வீடு மொத்தமுமே அதிர்ந்து அவன் தலை மேல் விழுவது போன்ற ஒரு உணர்வு.

“என்ன மிரட்டி பார்க்கிறாயா? உனக்கு பயந்து நான் வரல… உன் பூச்சாண்டி வேலையெல்லாம் வேற யார்கிட்டயும் வச்சுக்கோ” கொஞ்சமும் அலட்டல் இல்லாத அந்த பதிலில் முனியன் லேசாக பயந்தாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் இருக்க வெகுவாக முயற்சி செய்தான்.

“சும்மா பயப்படாத மாதிரி நடிக்காதே… என்னோட மந்திரம் தான் உன்னை இப்போ இங்க இழுத்துட்டு வந்திருக்கு. இங்க இழுத்துட்டு வர முடிஞ்சா என்னால, உன்னை என்ன வேணா பண்ண முடியும். ஆணி அடித்து மரத்தில் கட்டி வைப்பேன். பாட்டிலில் அடைத்து கடலில் தூக்கி போடுவேன். இல்லனா உருவம் செஞ்சு உன்னோட ஆவியை அதுக்குள்ள புகுத்தி அந்த உருவத்தை அழுச்சி உன்னை அழிக்கவும் என்னால முடியும். என்னோட சக்தி தெரியாம சும்மா பேசாதே” என்றான் முனியன்.

“முட்டாள் நீ என்னை வர வச்சியா? நீ என்னை வரவழைக்கல. நான் தான் உங்களைத் தேடி வந்திருக்கேன்.” கரடுமுரடான அந்த குரலில் இருந்த வார்த்தைகள் அந்த ஆவி பேசுவது பொய்யில்லை என்பதை அங்கிருந்த எல்லோருக்கும் உணர்த்தியது. அந்த குரலில் இருந்த அமானுஷ்யத்தை உணர்ந்த அனு, சந்திரனும் ராஜா மூவரும் லேசாக நடுங்கத் தொடங்கினர். ‘அவளின் பலி யார்? அடுத்ததாக அந்த ஆவி தாக்கப் போவது யாரை?’ என்று மூவருமே ஒரு வித பயத்துடனே அந்த இடத்தில் இருந்தார்கள்.

“சும்மா பேசிட்டு இருக்காதே… கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு. தொடர்ந்து வந்து தொந்தரவு தர காரணம் என்ன? இனிமேலும் இவங்களை தொந்தரவு பண்ணாம இருக்குறது உனக்கு நல்லது. அதுக்கு ஒத்துக்கிட்டா நீ என்ன கேட்டாலும் தர்றோம்.

ஆடு, கோழி, சாராயம்.. என்ன வேணும் உனக்கு? எது கேட்டாலும் தரேன் ஆனா இனி மேற்கொண்டு உன்னால இந்த குடும்பத்துக்கோ, இந்த குடும்பத்தை சேர்ந்தவங்களுக்கோ எந்தவிதமான தொந்தரவும் இருக்கக்கூடாது. அதை மனசுல வச்சிக்கிட்டு உனக்கு என்ன வேணுமோ கேளு. எதுவா இருந்தாலும் அவங்ககிட்ட கேட்டு நான் நிறைவேற்றுகிறேன் என்ன புரிஞ்சுதா?” என்று அழுத்தமான குரலில் கேட்க மீண்டும் அவள் சிரித்த சிரிப்பில் அந்த வீடே அதிர்ந்து போனது.

“முட்டாள்னு மறுபடியும் நிரூபிக்கிறே… உன்னோட  மந்திரத்துக்கு கட்டுப்பட்ட நான் வரலைன்னு சொன்னா உனக்கு புரியாது” என்று ஆங்காரமாக கத்திய மோகினி சிரித்த சிரிப்பில் முன்னைக் காட்டிலும் அதிக ஆக்ரோஷத்துடன் அவள் இருப்பதை அங்கிருந்தவர்கள் உணர முடிந்தது.

அவள் வருவதற்கு முன்னர் வீட்டில் தரையில் உருண்டு விழுந்த பாத்திரங்கள் இப்போது அந்தரத்தில் மிதக்க தொடங்கியது. யாரை வேண்டுமானாலும் காயப்படுத்தி விடக்கூடும் என்ற பயத்துடன் வேகவேகமாக அங்கிருந்தவர்கள் ஓடி ஒளிந்து கொண்டனர்.

பொருட்கள் முன்னும் பின்னுமாக, இடமும் வலமுமாக மாறி மாறி பறக்கத் தொடங்கியது. முனியனின் உதவியால் ஒருவரின் தலையை பதம் பார்த்தது ஏதோவொரு பாத்திரம். அவர் தலையில் இருந்து ரத்தம் கொட்டியது.அதைக் கண்ட முனியனின் முகத்தில் உஷ்ணம் ஏற தொடங்கியது. கையில் கொஞ்சம் மஞ்சளை  எடுத்துக்கொண்ட முனியன், “ சொன்னா கேக்க மாட்ட இல்ல என் ஆளு மேலேயே கை வைக்கிற அளவுக்கு  தைரியம் வந்துருச்சா இனி உன்னை விடமாட்டேன்” என்று சொன்னவன் ஏதேதோ மந்திரங்களை உச்சரிக்க, அடுத்த நொடியே அவனது உடல் அந்தரத்தில் மிதந்து சென்றது.

வீட்டின் சீலிங்(கூரை) வரை மிதந்தவன்  தரையில் பொத்தென்று விழுந்தான் முனியன். அவனிடம் அசைவில்லை முனியனின் உதவியாளர்கள் பயந்துபோய் முனியனின் அருகில் வந்து பார்த்தார்கள். அந்தரத்தில் கூரையில் இடித்துக்கொண்டதால் பின் தலையிலும் கீழே விழும்போது அவனது முன்னந்தலையிலும் அடிபட்டதால் தலையின் இரண்டு பகுதிகளில் இருந்தும் ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. லேசான மூச்சு முனியன் இன்னும் உயிரோடு இருப்பதை அவர்களுக்கு எடுத்துச் சொன்னது.

முனியனின் வேலையாட்கள் அவன்  முகத்தில் தண்ணீர் தெளித்து அவரை எழுப்பி அமர வைக்க உதவி செய்ய, லேசான மயக்கத்துடன் இருந்தாலும் முனியன் பின்வாங்க முயலவில்லை. மீண்டும் மந்திரங்களை உச்சரிக்க தொடங்கினான். முன்னர் நடந்தது போலவே முனியனின் தலைமுடி பின்னாலிருந்து கொத்தாக  பற்றப்பட்டது.

ஆனால் முன்பு நடந்ததைப் போல அவனால் அத்தனை எளிதாக அந்த பிடியில் இருந்து விடுபட முடியவில்லை. பின்னால் இருந்து இழுக்கத் தொடங்கிய அந்த சக்தி தரதரவென இழுத்துக் கொண்டு வீட்டின் வெளியே கொண்டு போய் தள்ளி விட்டது. முனியனின் உதவி ஆட்கள் கதறிக்கொண்டே முனியனை நோக்கி ஓட, அவர்கள் மூவரும் வீட்டை விட்டு வெளியேறியதும் வீட்டின் கதவுகள் தானாகவே உட்புறமாக அடைத்துக் கொண்டது.

மோகினி உருவம் இருந்த அந்த ஆளுயர கண்ணாடி சில்லு சில்லாக நொறுங்கி விழுந்தது. அது கீழே விழுந்து நொறுங்கியதுமே அனு சற்று பயந்து போய் ‘வீல்’ என்று கத்திவிட்டாள். மூவரின் கைகளும் ஒருவரோடு ஒருவர் பிணைத்தபடி இருக்க, அந்த ஆளுயர கண்ணாடியில் இருந்து வெளியேறிய அந்த கருப்பு உருவம் வீட்டின் ஒவ்வொரு திக்கிலும் மாறி மாறி நின்று அவர்களுக்கு காட்சி அளித்தது.

 இடது பக்கம், வலது பக்கம், வீட்டின் கூரையில், தெற்கிலும், மேற்கிலும் கிழக்கிலும், வடக்கில்  என்று எண்திசையிலும் மாறி மாறி காட்சியளித்து அகோரமாக சிரித்தது. அளவுக்கதிகமான பயத்தில்  மீண்டும் அலறி மயங்கி சரிந்தாள் அனு.

அத்தனை நடந்தும் அந்த உருவம் அவர்கள் யாருக்கும் அருகில் கூட வரவில்லை. தூரத்திலிருந்தே அவர்களை மிரட்டியது… பயமுறுத்தியது.

“மந்திரவாதியை கூட்டிட்டு வந்தா  என்கிட்ட இருந்து தப்பிச் செல்ல முடியும்னு நினைப்பா? விடமாட்டேன்… விடவே மாட்டேன்.” என்று அந்த குரல் வீடு முழுக்க  எதிரொலிக்க, மடியில் மயங்கியபடி இருந்த அனுவின் புறம் ஒரு பார்வையை செலுத்திய சந்திரன், அந்தக் குரளின் பொருளை உணர்ந்து கொண்டு பேசினான்.

“ என்னதான் வேணும் உனக்கு? என்று ஆற்றாமையுடன் கத்தத் தொடங்கினான்.

“ மனுஷனா இருந்தா பேசிப்பார்க்கலாம் உனக்கு என்ன வேணும்? மிஞ்சி போனா என் உயிர் வேணுமா… எடுத்துக்க ஆனா என் மனைவியை தொந்தரவு பண்ணாத… அவள விட்டுடு… நான் என்ன தப்பு பண்ணினேன்னு எனக்குத் தெரியல. ஆனா என்னால நீ எப்படியோ பாதிக்கப்பட்டிருக்கிறது மட்டும் என்னால உணர முடியுது.

அதனால்தான் என்ன சேர்ந்தவர்களாக பார்த்து நீ தாக்குற. உனக்கு தேவை நான் தானே… நான் வரேன்… என்னோட உயிரை எடுத்துக்க… என்னோட மனைவியை விட்டுவிடு” என்று கைகூப்பி கதறினான் சந்திரன். ஒரு நொடி அந்த அமைதியாய் இருந்த அந்த வீடு மறுநொடியே மோகினியின் சத்தத்தால் அதிர்ந்தது.

“என்னை வாழவிடாமல் பண்ணிட்டு உன் பொண்டாட்டியோட வாழ்க்கையை பத்தி மட்டும் அவ்வளவு கவலையா உனக்கு? மந்திரவாதியோட உயிர்  ஏழு கடல், ஏழு மலை தாண்டி இருக்கிற கிளிக்குள்ளே  இருக்கிற மாதிரி உன்னோட உயிர் உன் பொண்டாட்டிகிட்ட இருக்குன்னு தெரிஞ்சிருச்சு. இனி நான் பாத்துக்குறேன்” என்றவள் வெறித்தனமாக சிரிக்க தொடங்கினாள். அந்த சத்தத்தில் வீட்டில் இருந்த ஜன்னல் கண்ணாடிகள் அனைத்தும் சுக்குநூறாக உடைந்து நொறுங்கியது.

“இந்த முனியன் மட்டுமில்ல இந்த உலகத்துலஎ சக்தியாலயும் என்னை கட்டுப்படுத்த முடியாது. இந்த மோகினியை கட்டுப்படுத்த எந்த மந்திரமும் கிடையாது. என் சாவுக்கு காரணமாக எல்லாரையும் அழிக்காமல் நான் ஓயமாட்டேன். ஆனா சந்திரா நீ எனக்கு ரொம்பவே ஸ்பெஷல்.. அதனால் தான் உன்னை இத்தனை நாள் உயிரோடு விட்டு வச்சிருக்கேன்.

மத்தவங்க எல்லாம் என்ன பார்த்த அடுத்த நிமிஷமே உயிரை விட்டுட்டாங்க. அதேமாதிரி உன்னையும் கொன்னுடுவேனா என்ன? மாட்டேன் உன்னை துடிக்க வைக்கணும்… ஏங்கி தவிக்க வைக்கணும்…  அது அத்தனையும் உன் பக்கத்துல இருந்து இரசிக்கணும்…   நான் இல்லாம எப்படி என்னை சேர்ந்தவங்க தவிச்சு… வருத்தப் படுறாங்களோ… அதே மாதிரி நீயும் உன்னை சேர்ந்தவர்களுக்கு நடக்கிறதைப்  பார்த்து தவிக்கணும்… துடிக்கணும்.. அதுதான் எனக்கு வேணும்” என்று சொன்னவள் பெரும்புயல் வீட்டுக்கு வந்தது போல காற்றாக மாறி எல்லாரையும் கீழே தள்ள முயற்சித்தாள்.

‘ஏன் இப்படி செய்கிறாள்’ என்பது யாருக்கும் புரியவில்லை ஆனால் பெரும் காற்று மூவரையும் தள்ளியது. சந்திரனும் ராஜாவும் வீட்டின் மூலையில் இருந்த ஒரு தூணைப் பிடித்துக் கொண்டார்கள். மயங்கிய நிலையில் இருந்த அனு படுத்த வாக்கிலேயே காற்றின் வேகத்திற்கு தள்ளப்பட்டாள்.

அவளின் உடல் மெல்ல மெல்ல அருகில் இருந்த அறையை நோக்கி காற்றினால் தள்ளப்பட்டது. அனுவை காப்பாற்றுவதற்காக எத்தனையோ முயற்சிகள் செய்தும் சந்திரனால் ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியவில்லை பிடித்திருக்கும் பிடியை  விட்டால் அடுத்த நிமிடம் சந்திரன் எதிலாவது மோதி கொள்வதற்கும் வாய்ப்புகள் அதிகம் என்பதை உணர்ந்து ராஜா சந்திரனின் கைகளை இறுகப் பற்றிக்கொண்டான்.

“ராஜா என்னை விடு தடுக்காதே… நான் அனுவை காப்பாற்றணும்” என்று சந்திரன் ராஜாவை தள்ள முயல அனுவை காப்பாற்றியாக வேண்டியதன் அவசியத்தை உணர்ந்த ராஜா கண்களாலேயே தேடினான்.

வீட்டில் இருந்த பொருட்கள் எல்லாம் அங்கும் இங்குமாக சிதறி கிடந்தது வீட்டு வாசலில் காயப்போட்டிருந்த அனுவின் புடவை ஒன்று காற்றில் பறந்து அவனுக்கு அருகில்  வந்து விழுந்து இருந்ததை கவனித்த சந்திரன் அதை எடுத்து தான் பிடித்துக் கொண்டிருந்த தூணோடு சேர்த்து இறுக கட்டிக்கொண்டு மறுமுனையில் தன்னுடைய வயிற்றில் கட்டிக்கொண்டு அனுவை நோக்கி செல்ல முயற்சித்தான். காற்று முன்னிலும் அதிக ஆவேசத்துடன் வீசியது.

பெரும் முயற்சி செய்து சந்திரன் , அனுவின் அருகில் செல்ல… அவனது கண் முன்னாலேயே அந்த கரிய உருவம் அனுவை தரதரவென்று இழுத்துக் கொண்டு அறைக்குள் சென்று கதவை  உட்புறமாக பூட்டிக் கொண்டது.

“அனுனூ” அலறினான் சந்திரன்.

மோகினி வருவாள்….

Facebook Comments Box
Click to rate this post!
[Total: 0 Average: 0]

3 COMMENTS

  1. Achoo anoooo…. Sis please seekirama adutha UD podunga… Anuku enna achoo.. Wait panna mudiyala, konjam periya UD podunga.. Plzzzz

  2. அனு பாவம் லூசு மோகினி காரணத்தை சொல்லிட்டு போயேன் என்னன்னு தெரியாம எங்களுக்கு ஒரே குழப்பமா இருக்குல்ல

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here