சஹாரா சாரல் பூத்ததோ 3

0
254

அன்றைய நாளுக்குப் பிறகு அவனை அவள் பார்க்கவே இல்லை. உண்மையில் தன்னுடைய தைரியத்தை நினைத்து அவளுக்கு கர்வமாகக் கூட இருந்தது. அப்பா இல்லாத நேரத்தில் வீட்டிற்கு பெண் பார்ப்பதற்கு என்று தனியே வந்து நின்றவனை பேசியே விரட்டி விட்டாள் இல்லையா அந்த சந்தோசம் தான்.

வளர வளர ஓரளவிற்கு பக்குவம் வந்து இருந்தாலும் மீண்டும் அந்த வீடு இருக்கும் தெரு வழியாக செல்வதற்கு மட்டும் ஏனோ தைரியம் வரவில்லை. அதற்குக் காரணம் அந்த வீடா? அல்லது அந்த கிடா மீசைக்காரனா என்பது அவளுக்கு மட்டும் தான் தெரியும்.

அவளது கல்லூரி வீட்டில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் இருந்தது. ஒருநாள் கல்லூரியில் மாலை நேர வகுப்பு முடிந்து கொஞ்சம் தாமதமாகவே வீடு வந்து கொண்டிருந்தாள் தாமரை. பாதி தொலைவு தான் தாண்டி இருப்பாள். சட்டென்று வானம் எங்கும் கருமை பூசி பேய் மழை வெளுத்து வாங்கத் தொடங்கியது.

ஒதுங்குவதற்கும் எங்கேயும் இடமில்லாமல் போகவே சரி வீட்டிற்கு வேகமாக போய் விடுவோம் என்று எண்ணியவள் மழையில் நனைந்த படியே வண்டியை வேகமாக ஓட்ட பாதி வழியில் சைக்கிள் செயின் அறுந்து அவளை வெகுவாக சோதித்து வைத்தது.

கண்ணுக்கு எட்டிய தூரம் வரை இருட்டு மட்டுமே… மழையும் நிற்காமல் பெய்து வைக்க சைக்கிளை தள்ளிக் கொண்டே வீடு போய் சேர்ந்து விட வேண்டியது தான் என்று எண்ணிக் கொண்டவள் மனதுக்குள் தைரியத்தை கூட்டுவதற்காக கந்தசஷ்டி கவசத்தை சொல்லிக் கொண்டே வந்தாள்.

அவளுக்கு முன்னால் ரோட்டில் தெரிந்த அவளது நிழல் சொல்லியது அவளுக்கு பின்னால் வண்டியில் யாரோ வருவதை…

பயத்தை மென்று முழுங்கியபடி வேகமாக அவள் நடக்க முயல, அவள் முன்னே வழியை மறைத்தபடி நின்றான் சங்கர பாண்டியன்.

‘அய்யயோ.. இவனா! போச்சு… பகல்லயே இவனைப் பார்த்தா ராட்சசன் மாதிரி தான் இருக்கும். ராத்திரியில் அச்சு அசல் பிரம்ம ராட்சசன் தான்’ என்று உள்ளுக்குள் நினைத்துக் கொண்டவள் மறந்தும் கூட அவனை நிமிர்ந்து பார்க்கவில்லை.

‘ஆமா.. அப்படியே பார்த்துட்டாலும்… அப்புறம் யாரு எனக்கு மந்திரிச்சு விடுறது’ என்று நொடித்துக் கொண்டாள்.

“மழை பெய்யுறது தெரியலை… இப்படியே மெதுவா அன்னநடை நடந்து போனா எப்ப வீட்டுக்கு போய் செருறதா உத்தேசம்…” என்றான் மிரட்டலாக…

‘உனக்கு பதில் சொல்லிட்டுத் தான் மறுவேலை பார்ப்பேன் ’ என்று உதட்டை சுளித்தவள் அவனை கடந்து செல்ல முயல…. சைக்கிளை அவனது கரங்கள் இறுக பற்றி இருந்ததால் அது முடியாமல் போனது.

“கையை எடுங்க” என்று கோபத்துடன் சொன்னவளை அவன் பார்த்த பார்வையில் அவளுக்கு உச்சி முதல் பாதம் வரை நடுங்கத் தொடங்கியது.

“அறிவு இருக்கா உனக்கு? மழை பெய்யுது… தொப்பலா நனைஞ்சுக்கிட்டே இப்படி ராத்திரி நேரத்தில் தனியா போறியே.. எவனாவது ரவுடிப் பய கண்ணில் பட்டா என்ன ஆகும்னு அச்சம் வேண்டாம்” என்று நாக்கை லேசாக துருத்தி அவன் அதட்ட அவள் அரண்டு போனாள்.

“சை…சைக்கிள் செயின் பிஞ்சுடுச்சு” என்றாள் திணறலாக…

வண்டியை தள்ளிக் கொண்டு போய் அவனது வண்டியின் ஹெட் லைட் வெளிச்சம் படும் இடத்தில வைத்து சோதித்தவன் அவள் சொன்னது உண்மை என்பதை புரிந்து கொண்டதும் மீசையை தடவியபடி யோசித்தான்.

“இந்த நேரத்தில் உன்னை இங்கே தனியா விட்டுட்டு போறதும் சரியா வராது… மழை வேற பெய்யுது…. ஒண்ணு செய்… சைக்கிள் இங்கேயே இருக்கட்டும்… நீ என்னோட வண்டியில் வந்து வீட்டில் இறங்கிக்கோ.. அப்புறம் மழை விட்டதும் உங்க அப்பா கிட்டே சொல்லி வண்டியை எடுத்துக்கோ” என்று சொன்னவனை வேற்றுகிரகவாசியைப் போல வெறித்துப் பார்த்தாள் தாமரை.

“நா..நான் வர மாட்டேன்”

“ஏன்” என்றான் உறுமலாக…

“உங்க கூட ஒண்ணா வண்டியில் போனா அப்பா திட்டுவாரு…”

“அப்ப உனக்கு சம்மதம் தான்னு சொல்லு”

“எனக்கு கடுகளவு கூட விருப்பமில்லை.”

“உங்க அப்பா கிட்ட நான் பேசிக்கிறேன்… சீக்கிரம் வந்து வண்டியில் ஏறு” என்று அதட்டியவனை அலட்சியப்படுத்தி விட்டு அவள் நகர மீண்டும் அவள் முன்னே வந்து நின்றான் சங்கர பாண்டியன்.

“மழையில் நனைஞ்சு ஈரத்தோட உன்னைப் பார்க்கும் போது அப்படியே ஜிவ்வுன்னு இருக்கு தெரியுமா…” என்று அவன் ஒரு மார்க்கமாக பேச அவளது நடை சுத்தமாக நின்றே போய் விட்டது.

இருட்டு தான் என்றாலும் கூட மழையின் காரணமாக அவ்வபொழுது தெறிக்கும் மின்னலில் ஒரே ஒரு முறை குனிந்து தன்னைப் பார்த்தவள் அரண்டே போனாள். மழையின் உபயத்தால் தாவணி உடலோடு ஒட்டி அவளது அழகை பளிச்சென காட்டிக் கொண்டு இருந்தது.

‘இந்த கோலத்திலா இவ்வளவு நேரம் இவன் முன்னாடி நின்னோம்’ என்ற எண்ணம் தோன்ற… செய்வதறியாது சைக்கிளை கீழே போட்டு விட்டு இருளில் தலைதெறிக்க ஓடத் தொடங்கினாள்.

“ஹே…லூசு” என்று அவன் கத்துவது பின்னால் கேட்டாலும் நிற்காமல் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருந்தவள் கால் தடுமாறி கீழே விழுந்தாள்.

“அப்படி என்ன பயம் உனக்கு… இப்படியா இருட்டில் ஓடி வருவ…” என்று கடிந்து கொண்டவன் கை கொடுத்து மெல்ல அவளை தூக்கி நிறுத்த வேகமாக அவனிடம் இருந்து இரண்டடி தள்ளி அவனுக்கு முதுகு காட்டி நின்று கொண்டாள் தாமரை.

அவனை இந்த கோலத்தில் எதிர்கொள்ள முடியாமல் தடுமாறினாள் தாமரை… அவனிடம் அவளுக்கு தோன்றிய உணர்வு வெட்கமா அல்லது பயமா … புரிந்து கொள்ளக் கூட அவள் முயலவில்லை என்பது தான் நிஜம்.

“எவ்வளவு நேரம் மழையில் நீயும் நனைஞ்சு என்னையும் நனைய வைக்கிறதா உத்தேசம்?”

“நீ..நீங்க போங்க…” குளிரில் லேசாக பற்கள் நடுங்கத் தொடங்கியது.

“அப்போ என்னோட வர மாட்ட.. அப்படித் தானே” என்றவனின் குரலில் சலிப்பும் ஆத்திரமும் சரிபாதியாக கலந்து நின்றதை அவள் உணர்ந்தாள்.

“உங்களோட வண்டியில் வர எனக்கு விருப்பம் இல்லை” என்று சொன்னவளை வெறித்துப் பார்த்தவன் எதுவுமே பேசாமல் பின்னோக்கி சென்று கீழே விழுந்து கிடந்த அவளது சைக்கிளை ஒரு கையிலும் அவனது பைக்கை ஒரு கையிலும் வைத்து தள்ளிக் கொண்டே அவளுக்கு அருகில் வந்தான்.

“உனக்கு என்னைப் பிடிக்காமல் இருக்கலாம். அதுக்காக என்னால உன்னை இந்த நேரத்தில் இப்படியே விட்டுட்டு போக முடியாது….வா” என்றவன் முன்னே நடக்க அவன்  கூறிய வார்த்தைகளை மனதுக்குள் அசை போட்டபடியே நடக்கத் தொடங்கினாள்.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here