சஹாரா சாரல் பூத்ததோ 14

0
174

அத்தியாயம் 15

சில பல நிமிடங்கள் அவனை தவிக்க விட்ட மருத்துவர்கள் வெளியே வந்ததும் சொன்ன சேதியில் அவனுக்கு தலை கால் புரியவில்லை. தாமரை கருவுற்று இருக்கிறாள் என்ற செய்தி அவனை மகிழ்ச்சிக் கடலில் தள்ளியது என்றே சொல்லலாம். ஆவலுடன் அறைக்குள் நுழைந்தவனைக் கண்டதும் வெடுக்கென முகத்தை திருப்பிக் கொண்ட தாமரையைக் கண்டதும் ஒரு நொடி அசைவற்று நின்று விட்டான்.

சற்று முன் அவளை அடித்தது நினைவுக்கு வர குற்ற உணர்ச்சியில் தலையை குனிந்து கொண்டான். அவனைக் கண்டதும் அவள் வேகமாக கட்டிலை விட்டு இறங்க முற்படுவது தெரிய பாய்ந்து சென்று அவளை தடுத்து நிறுத்தினான் சங்கரபாண்டியன்.

“எதுக்கு இம்புட்டு வேகம் ராசாத்தி…. இந்த நேரத்தில் பூமி நோகாம நடக்கணும்…. புரிஞ்சுதா?” என்று குழந்தையிடம் பேசுவது போல மென்மையாக பேச அவளுக்கு கண்ணைக் கரித்துக் கொண்டு வந்தது.

அவளின் அழுகை நிறைந்த முகத்தைப் பார்த்து அவனுக்கு மெல்ல கோபம் எட்டிப் பார்த்தது.

“ம்ச்.. இப்போ எதுக்கு இந்த அழுகை ராசாத்தி…. டாக்டர் நல்ல சேதி சொல்லி இருக்காங்க… இந்த மாதிரி நேரத்தில் அழலாமா?” என்று உரிமையுடன் கடிந்து கொண்டான்.

அவர்கள் இருவரும் பேசிக் கொண்டு இருக்கும் பொழுதே தகவல் தெரிந்து தாமரையின் பெற்றவர்களும், செங்கமலமும் அங்கே வந்து வந்து சேர்ந்தனர். வந்தவர்கள் விஷயத்தை கேட்டதும் துள்ளிக் குதிக்காத குறையாக தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்த அந்த இடமே கலகலப்பாக இருந்தது.

எல்லாரும் மகிழ்ச்சியாக இருந்தாலும் தாமரையின் முகம் மட்டும் இறுகிப் போய் இருந்தது. மற்றவர்கள் அதை சோர்வு என்று நினைத்தாலும் சங்கரபாண்டியனுக்கு மட்டும் காரணம் அது இல்லை என்று தெளிவாக புரிந்தது.

சற்று நேரம் பொறுத்து வீட்டிற்கு கிளம்ப ஆயத்தமாக தாமரை தளர்ந்த குரலில் பேசினாள்.

“அம்மா… என்னை நம்ம வீட்டுக்கு கூட்டிக்கிட்டு போறீங்களா?”

அந்த நேரத்தில் அவள் அப்படிக் கேட்டது தாமரையின் பெற்றோருக்கு தர்ம சங்கடத்தையும், செங்கமலத்திற்கு கோபத்தையும் உண்டு பண்ணியது.

“நல்லா இருக்குடி நீ சொல்றது… எங்க வம்சத்தை வயித்தில் சுமக்க ஆரம்பிச்சுட்ட… இன்னும் புகுந்த வீடு பக்கம் எட்டிப் பார்க்கணும்னு உனக்கு தோணலையா? அய்யா பொண்ணைப் பெத்தவரே நீங்களே சொல்லுங்க நியாயத்தை?” என்று அய்யாதுரையிடம் பஞ்சாயத்தை கொண்டு சென்றார்.

அய்யாதுரை தவிப்புடன் மகளை கண்டிக்க முன்வரும் பொழுது அவரை தடுத்துப் பேசினான் சங்கரபாண்டியன்.

“விடுங்க அப்பத்தா… இப்ப அவ மனசு கோணுற மாதிரி யாரும் நடந்துக்க வேண்டாம். எனக்கு அவ விருப்பம் தான் முக்கியம். அவளுக்கா எப்ப தோணுதோ அப்ப வரட்டும்”

“டேய்! சங்கரா உனக்கு என்னடா பைத்தியம் பிடிச்சு இருக்கா? அவ வர மாட்டேன்னு சொன்னா அப்படியே விட்டுடுவியா? நாலு சாத்து சாத்தி இழுத்துட்டு வர்றதை விட்டுட்டு இப்படியா பேசுவ” என்றார் ஆத்திரமாக…

“வேண்டாம் அப்பத்தா… அது அவ வீடு.. அவ எப்போ அங்கே வர விருப்பப் படுறாளோ அப்போ வரட்டும்…. இந்த நேரத்தில் எந்த சண்டையும் வேண்டாம்.அது அவ வயித்தில் இருக்கும் என்னோட குழந்தையைப் பாதிக்கும்.” என்று அழுத்தம் திருத்தமாக சொல்லி விட யாரும் அதற்கு மேல் மறுத்து பேச முடியாமல் போனது.

ஹாஸ்பிடல் தாமரையின் வீட்டிற்கு அருகில் இருப்பதால் நடந்தே அனைவரும் தாமரையின் வீட்டிற்கு சென்று விட யாரிடமும் ஒரு வார்த்தை பேசாமல் அறைக்குள் போய் முடங்கிக் கொண்டாள் தாமரை.

“அந்த கழுதைக்கு கொழுப்பை பார்த்தியா தம்பி” என்று மீண்டும் செங்கமலம் எகிற அவரை அடக்க சங்கரபாண்டியனின் ஒற்றை பார்வை போதுமானதாக இருந்தது.

“அத்தை உங்களுக்கும் தான் சொல்றேன்… அவளை யாரும் திட்டக்கூடாது. அவளுக்கு எது விருப்பமோ அதையே செய்யட்டும். இந்த மாதிரி நேரத்தில் என்னோட பொண்டாட்டி மனசு வருத்தப்படற மாதிரி யார் பேசினாலும் எனக்குப் பிடிக்காது. ஒருவேளை உங்களுக்கு அவள் இங்கே தங்குறது பிடிக்கலைன்னா சொல்லுங்க நான் வேற ஏற்பாடு செஞ்சுக்கறேன்” என்று அழுத்தமாக கூற தாமரையின் பெற்றோர்கள் இருவருமே பதறி விட்டார்கள்.

“நாங்க எதுவுமே சொல்ல மாட்டோம் மாப்பிள்ளை”

“அப்பத்தா கொஞ்ச நேரம் இருங்க…. நான் வந்து உங்களை வீட்டில் விடறேன்” என்று சொன்னவன் அவரின் பதிலை எதிர்பார்க்காமல் அறைக்குள் சென்று விட்டான். அறைக்குள் கட்டிலில் படுத்து இருந்த அவன் மனைவி குலுங்கி குலுங்கி அழுது கொண்டு இருந்த காட்சியை காண சகிக்காமல்  விருட்டென்று சென்று அவளை அணைத்துக் கொண்டான்.

“இந்த மாதிரி நேரத்தில் அழக் கூடாது தாமரை”

“…”

“நம்ம இரண்டு பேரோட காதலுக்கு சாட்சியா ஒரு உயிர் வரப் போகுது… அதை கொண்டாடணுமே தவிர… இப்படி அழுது வடியக் கூடாது” என்றான் உத்தரவிடுவது போல…

“…”

“ம்ச்… சொன்னா கேளு தாமரை… இப்படி அழாதே… எனக்கு கஷ்டமா இருக்கு… நான் போய் அப்பத்தாவை வீட்டில் விட்டுட்டு வர்றேன்” என்றவன் மெல்ல அவளை விட்டு விலகி செல்ல முயல பதட்டத்துடன் நிமிர்ந்து பார்த்தவளின் முகத்தில் இருந்த கலக்கதிற்கான காரணம் அவனுக்கு புரியாமல் இல்லை.

“சீக்கிரம் வந்துடறேன் தாமரை” என்று அவளை சமாதானம் செய்து படுக்கையில் படுக்க வைத்தவன் அப்பத்தாவை அழைத்துக் கொண்டு அவனது வீட்டிற்கு சென்று விட்டு உடனே அங்கிருந்து கிளம்ப மனமில்லாமல் அந்த வீட்டு முற்றத்தில் அப்படியே அமர்ந்து விட்டான் சங்கரபாண்டியன்.

அவன் மனம் முழுக்க பாரமாக இருந்தது. அந்த சுமையை இறக்கி வைக்கும் வழி தெரியாமல் திணறினான். பிறந்ததில் இருந்து அவன் வாழ்ந்து வந்த அந்த வீடு…. தன்னுடைய தாயும் தந்தையும் இறந்த பின்னர் அந்த வீட்டில் எங்கோ ஒரு மூலையில் அவர்களது ஆத்மா அவனை பார்த்துக் கொண்டு இருப்பதாகவே நினைத்து வந்தான். இத்தனை வருடங்களில் வீட்டில் என்ன பிரச்சினை வந்தாலும் அந்த வீட்டை அவன் இடித்து கட்ட வேண்டும் என்று ஒருநாள் கூட நினைத்தது இல்லை.

அந்த வீட்டில் இருக்கும் ஒவ்வொரு செங்கலும் அவனது அப்பாவின் உழைப்பினால் வந்தது. அந்த வீட்டு தோட்டத்தில் இருக்கும் ஒவ்வொரு மரமும் அவனது தாயின் கரங்களால் வளர்க்கப்பட்டது. அந்த ஊரிலேயே அவர்கள் வீடு அளவிற்கு பெரிய வீடு எதுவுமே கிடையாது.

‘கோட்டை வீடு’ என்று ஊரார் பெருமையோடு சொல்லும் வீட்டை அவனது அருமை மனைவி பேய் வீடு என்று சொல்கிறாள். இந்த கொடுமையை எங்கே போய் சொல்வது?

அந்த வீட்டின் ஒவ்வொரு இடமும் அவனைப் பொறுத்தமட்டில் அவனது தாய் , தந்தையின் நினைவு சின்னங்கள் அப்படி இருக்க அவனால் அவன் மனைவி பேசிய பேச்சை தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதே நேரம் மனைவி அதை விளையாட்டாகவோ, மனதில் எதையோ வைத்துக் கொண்டு வன்மமாகவோ சொல்லவில்லை என்பதும் அவனுக்குப் புரியத் தான் செய்தது.

வீட்டு வாசலின் முன்பு இறங்கி வீட்டை பார்த்த அந்த நொடி அவள் கண்களில் தோன்றிய திகிலும், கலவரமும் அவள் பொய்யுரைக்கவில்லை என்பதைக் கூற இந்த விஷயத்தை எப்படி கையாள்வது என்று புரியாமல் குழம்பிப் போனான் சங்கரபாண்டியன். நேற்று வரை மனைவி பிறந்த வீட்டை விட்டு வர விரும்பாமல் தான் இப்படி எல்லாம் நடந்து கொள்கிறாள் என்று அவள் நினைத்துக் கொண்டு இருக்க… இங்கே விஷயமே வேறாக அல்லவா இருக்கிறது என்று எண்ணி தவித்துப் போனான்.

பெற்றவர்களின் நினைவுகளுக்கும் , மனைவியின் பயத்திற்கும் இடையில் போராடிக் கொண்டு இருந்தான்  சங்கரபாண்டியன்.

 

 

 

 

 

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here