அரூப மோகினி தமிழ் நாவல் அத்தியாயம் 15

1
156

ஆவிகளைப் பற்றி:

எங்கிருந்தாவது திடீரென ஒரு இறகு நம் மீது விழுவதை நாம் காணலாம். இது எதார்த்தமான செயலாக கூட இருக்கலாம். ஆனால் தொடர்ந்து இதே போல நிகழ்ந்து இறகுகள் உங்களை நோக்கி விழுந்து கொண்டே இருந்தால்  இறந்தவர்கள் உங்களை தொடர்பு கொள்கிறார்கள் என்று அர்த்தம்.

சந்திரனும் ராஜாவும் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்த நேரத்தில் ராமனை அனுமதித்து இருந்த மருத்துவமனையில் இருந்து போன் வரவே இருவரும் உடனடியாக புறப்பட்டு மருத்துவமனைக்குச் சென்றார்கள். ராமனின் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருப்பதோடு மட்டுமல்லாமல் உடல்நிலை மேலும் மோசமடைந்து வருவது சரியான அறிகுறியாக தெரியவில்லை என்று அந்த மருத்துவமனையின் தலைமை மருத்துவர் சந்திரனிடம் தெரிவித்தார்.

தந்தையின் நிலை குறித்து அறிந்த சந்திரனுக்கு மோகினியின்  மீது இன்னமும் ஆத்திரம் அதிகமானது. இதே நிலை நீடித்தால் அன்று இரவுக்குள் கோமாவிற்கு செல்லவும் வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்க என்ன செய்வது என்று புரியாத நிலையில் தவிக்க தொடங்கினான் சந்திரன்.

ஒரு பக்கம் மனைவியின் உடலில் பேய், ஒரு பக்கம் உயிருக்கு ஆபத்தான நிலையில் தந்தை… இன்னொரு பக்கம் தன்னை சுற்றி நிகழும் மோகினியின் அமானுஷ்யம் நிறைந்த அட்டூழியங்கள்…

மன அழுத்தம் தாங்க முடியாமல் கண்கள் கலங்க உதடுகள் துடிக்க மருத்துவமனை வராண்டாவில் சற்று நேரம் அமர்ந்து இருந்தான் கைகளால் தலையை தாங்கியபடி.

அந்த நேரம் ஒரு கரம் அவனது தோள்களை ஆதரவாக தொட்டது.

‘யார் இந்த நேரத்தில்?’ என்று கேள்வியுடன் நிமிர்ந்து பார்க்க அங்கே நின்று இருந்த மனிதரை அவன் அப்போது எதிர்பார்க்கவே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அவன் எதிரே இருந்தது ஏற்கனவே அவனுக்கு அறிமுகமான அவரது குடும்ப டாக்டரான தாமோதரனின்  மருத்துவமனையில் வேலை பார்க்கும் டாக்டர் கிருஷ்ணன்.

“கிருஷ்ணன் சார்… நீங்களா? எப்படி இங்கே வந்தீங்க? ஹாஸ்பிடல் நேரத்தில் ஒரு நிமிஷம் வெளியே போனாலும் டாக்டர் சாருக்கு கோபம் வரும்னு சொல்லுவீங்க… இப்போ எப்படி வெளியே வந்தீங்க… அதுவும் இந்த ஹாஸ்பிடலுக்கு? உங்களுக்கு தெரிஞ்சவங்க யாரும் இங்கே அட்மிட் ஆகி இருக்காங்களா?” என்று கேட்க சோகையாக புன்னகைத்தார் டாக்டர் கிருஷ்ணன்.

“இந்த ஹாஸ்பிடல்ல ஒரு வேலை காலியா இருக்குன்னு கேள்விப்பட்டேன். அதான்  ஜஸ்ட் இன்டர்வியூ அட்டண்ட் செஞ்சிட்டு போகலாம்னு  வந்தேன்” என்று சாதாரணமாகச் சொன்னவரை  வியப்புடன் பார்த்தான் சந்திரன். சந்திரனுக்கு சற்று பின்தங்கி வந்த ராஜாவும் அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருப்பதை கவனித்துக்கொண்டே அவர்கள் அருகில் வந்து சேர்ந்தான்.

“என்ன கிருஷ்ணன் சார் இப்படி சொல்றீங்க! எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கு. நீங்க டாக்டர் தாமோதரன்  சாரோட  ஹாஸ்பிடல்ல தானே வேலை பார்த்தீங்க… அப்புறம் ஏன் இங்கே வேலைக்கு? என்ன ஆச்சு?” என்று அடுக்கடுக்காக கேள்விகளை தொடுக்க புன்னகை மாறாத முகத்துடன் மீண்டும் பதில் அளித்தார் டாக்டர் கிருஷ்ணன்.

“ உங்களுக்கு  விஷயமே தெரியாதா  சந்திரன்? நீங்க  உள்ளூர்ல இல்லையா இல்ல நியூஸ் பேப்பர் எதுவும் பார்க்கலையா” என்று சிரித்தபடி கேட்க… குழம்பிப் போனான் சந்திரன்.

“என்ன டாக்டர் சொல்றீங்க… எனக்கு புரியல கொஞ்சம் புரியற மாதிரி சொல்லுங்க” என்று அழுத்திக் கேட்க… அவனது அருகில் அமர்ந்தபடியே பேசத் தொடங்கினார் டாக்டர் கிருஷ்ணன்.

“என்னன்னு சொல்றது சந்திரன்… டாக்டர் சார் காணாமப் போய் ரொம்ப நாள் ஆச்சு… திருப்பதிக்கு போய்ட்டு வர்றேன்னு சொல்லிட்டு கிளம்பினவர் தான். அதுக்கு அப்புறம் திரும்பி வரவே இல்லை. அடுத்த நாள் ஒரு முக்கியமான ஆபரேஷன் வேற இருந்தது.. ஆனா அவர் வரலை…

முதல்ல நாங்க யாரும் அதை பெருசா எடுத்துக்கலை… வயசானவர்.. அவ்வளவு தூரம் காரை தனியா ஓட்டிட்டு வந்ததுனால கொஞ்சம் டயர்டு ஆகி இருப்பார்… ரெஸ்ட் எடுத்துட்டு மறுநாள் வருவார்னு நினைச்சோம். ஆனா அவர் அடுத்த நாளும் வரலை.. அப்புறம் தான் அவரோட வீட்டுக்கு ஆளை அனுப்பி பார்த்தோம்.. வீடு பூட்டியே இருந்தது. அக்கம்பக்கம் வீட்டில் விசாரிச்சப்போ அவர் ஊரில் இருந்து திரும்பவே இல்லைன்னு சொன்னாங்க… அதுக்கு அப்புறம் தான் போலீசில் கம்ப்ளைண்ட் கொடுத்தோம்…”

“ஏன் சார்… நீங்க முதல் நாளே அவரோட வீட்டுக்கு போய் பார்க்கலையா?” என்று சந்திரன் கேட்க… அதற்கும் பொறுமையாகவே பதில் அளித்தார்.

“உங்களுக்கு தெரியாதா சந்திரன்? டாக்டரோட கோபத்தைப் பத்தி.. அவர் ஓய்வெடுக்கும் பொழுது யாரும் அவரை தொந்தரவு செஞ்சா அவருக்குப் பிடிக்காது. அதனால தான் நாங்க யாரும் போகலை.போன் செஞ்சப்பவும் நாட் ரீச்சபிள்னு வந்துச்சு… சரி ஒருநாளில் என்ன ஆகிடப் போகுதுன்னு கொஞ்சம் அசால்ட்டா இருந்தோம்… ஆனா இப்படி ஆகிப் போச்சு” என்று சொன்னவரின் குரலில் உண்மையான வருத்தம் இருந்தது.

“போலீஸ் விசாரிச்சுட்டு இருக்காங்க. ஆனா யாருக்கும் அவர் எங்கே போனார்? என்ன ஆனார்னு தெரியலை? இப்ப வரைக்கும் கேஸ் விசாரணையில் போயிட்டு இருக்கு” என்று சொல்ல சந்திரனுக்கு குழப்பமானது.

“என்ன சார் இத்தனை  நாளா காணோம் சொல்றீங்க? எப்படி இவ்வளவு அஜாக்கிரதையா இருந்தீங்க?” என்று கேட்க…

“அவருக்கு குடும்பம் குழந்தைனு ஒண்ணும் கிடையாது. ஒருவேளை வீட்ல யாராவது அவருக்கு சொந்தக்காரங்க  இருந்திருந்தால் கூட  அவர் வர லேட்டானதும்  உடனே தெரிந்திருக்கும். ஹாஸ்பிடல்ல அடுத்த நாள் காலையில் ஆறு மணிக்கு பண்ண வேண்டிய ஒரு ஆபரேஷனுக்கு அவர் விடிஞ்சு ரொம்ப நேரம் ஆகியும் வரவே இல்லை அப்படின்னு தான் தேட ஆரம்பிச்சோம்.

போன் பண்ணி பார்த்தோம்.. லைன் கிடைக்கலை. போலீஸ் விசாரணையில் அவரோட போன் கடைசியா இருந்தது உங்க வீட்டுக்கு பக்கத்துல ஒரு மாந்தோப்பு இருக்குமே.. அந்த ஏரியாவைத் தான் காட்டியிருக்கு .” என்று சொல்ல சந்திரனும் ராஜாவும் பீதியுடன் ஒருவர் முகத்தை மற்றவர் மாறி மாறி பார்த்துக் கொண்டார்கள்.

“சார் நீங்க சொல்றது xxxxxx அந்த ஏரியாவையா?” என்று கேட்க அவரது தலை ஆமென்று அசைந்தது.

“நல்ல மனுஷன்.. என்ன ஆனார்? என்னாச்சுன்னு யாருக்குமே தெரியல! சீக்கிரமே நல்லபடியா திரும்பி வரணும். ஆனா பாருங்க… அவரோட போன் உங்க ஏரியாவில் இருந்துருக்கு.. ஆனா அவர் ஊருக்கு எடுத்துட்டுப் போன கார் திருச்சி ஹைவேஸ்ல அனாதையா நின்னு இருக்கு.  நான் மட்டும் இல்லை ஹாஸ்பிடலில் வேலை பார்த்த எல்லாருமே வெளியே வேலை தேட ஆரம்பிச்சாச்சு.

ஹாஸ்பிடல் பேர் வெளியில் கெட்டுப்போச்சு. மறுபடியும் டாக்டர் நல்லபடியா வந்தாலும் கூட பழையபடி பேஷண்ட்ஸ் வர்றது சந்தேகம் தான்.  ஹாஸ்பிடல் முழுக்க முழுக்க அவருக்கு கீழே தான் இருந்துச்சு.. மருந்து சப்ளை செய்றவன்ல இருந்து பாத்ரூம் கழுவுறவங்க வரை பண பாக்கிக்கு ஹாஸ்பிடல் வந்து சத்தம் போடவும் ஒரே அசிங்கமா போச்சு.

ஒரே வாரம் தான் மொத்த ஹாஸ்பிடலில் இருந்த எல்லா பேஷண்டும் காலி பண்ணிட்டு போய்ட்டாங்க. யாருமே இல்லாத ஹாஸ்பிடலில் யாருக்கு வைத்தியம் பாக்குறது? என்னோட தொழிலை  நான் பார்த்தா தானே… என் வயிறும்… என் குடும்பத்தோட வயிறும் நிறையும்… இந்த ஹாஸ்பிடலில் ஒருவேலை காலியா இருக்குனு சொன்னாங்க அதான் டீனைப் பார்த்துட்டு போகலாம்னு வந்தேன்” என்று சொன்னவர் இருவரிடமும் விடைபெறும் விதமாக தலை அசைத்து சென்றுவிட, இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடியே வெகுநேரம் அமைதியாக இருந்தனர்..

“ராஜா… எனக்கு வந்திருக்கும் அதே சந்தேகம் தான் உனக்கும் வந்து இருக்கா?” என்று சந்திரன் ராஜாவைப் பார்த்து கேட்க அவன் தலையை இடமும் வலமுமாக அசைத்து இல்லை என்று சொன்னான்.

“இல்ல… சந்திரா இது எதேச்சையா நடந்த சம்பவமாகக் கூட  இருக்கலாம். ஒரே இடம் அப்படிங்கறது வச்சி மட்டுமே நம்ம எந்த முடிவுக்கும் வரமுடியாது. பொறுத்திருந்து பார்க்கலாம்” என்று ராஜா சொல்ல சந்திரன் மறுத்துப் பேசினான்.

“இல்ல ராஜா.. நல்லா யோசிச்சுப் பாரு… டாக்டர் கிருஷ்ணன் சொன்னது தாமோதரனோட கார் திருச்சி பக்கத்துல எங்கேயோ கிடைச்சிருக்கு. ஆனா அவரோட செல்போன் மோகினி வீட்டுக்கு பக்கத்தில்  கிடைச்சிருக்கு. காரை அப்படியே திருச்சி தாண்டி வெளியில் நிறுத்திட்டு ஊருக்குள்ளே  ஓடியா வந்திருப்பார். அந்த இடத்திலிருந்து இந்த இடத்துக்கு கிட்டத்தட்ட 30 கிலோ மீட்டர் இருக்கும்… எப்படி சாத்தியம்?

கண்டிப்பா இந்த விஷயம் பகல்ல நடந்திருக்க வாய்ப்பே இல்லை ஏன்னா ஆளே இல்லாம ஒரு கார்  பொது இடத்தில் இப்படி இருக்கிறது தெரிஞ்சா போலீஸ் உடனே அந்த இடத்துக்கு வந்து இருப்பாங்க. ஒரு நாள் ராத்திரி பூரா அந்த கார் அங்கேயே தான்  இருந்திருக்கு. விடிஞ்சு ஒரு பத்து மணிக்கு மேல தான் இந்த விஷயம் போலீஸுக்குத் தெரிஞ்சிருக்கு” என்று சொல்ல… ராஜா தன்னுடைய கருத்தில் தெளிவாக இருந்தான்.

“உனக்கு பைத்தியம் தான் பிடிச்சு இருக்கு… மோகினியால நீ சம்பந்தமே இல்லாம மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட்டுட்டு இருக்க…”

“ராஜா உனக்கு தான் விஷயம் புரியல. அவரோட கார் வேறு எங்கேயோ காணாமல் போயிருக்க.. அவருடைய போன் மட்டும் எப்படி நம்ம ஏரியா டவரை காட்டும். இன்னிக்கு பார்த்து பேசினோமே  அந்த இன்ஸ்பெக்டர் மோகினி வீட்டுக்கு பின்னாடி ரோட்டுல இருந்து கொஞ்சம் உள்ளே  தள்ளி இருக்கிற அந்த மாந்தோப்புல தான் கணேசனோட பாடி கிடைச்சதுன்னு  சொன்னாங்க. இப்ப போனும் அந்த ஏரியா டவரில் தான் கடைசியா இருந்து இருக்குனு சொன்னாரே.. எல்லாமே எப்படி எதேச்சையாக நடந்ததா இருக்க முடியும்.”  

“டேய்! உனக்கு பைத்தியம் முத்திடுச்சு… சம்பந்தம் இல்லாம உன் மனசு எல்லா விஷயத்தையும் ஒண்ணா போட்டு குழப்பிக்குது. விட்டா நீ அந்த ஏரியாவில் எது நடந்தாலும் அதுக்கும் மோகினி உன்னை பழி வாங்கத் தான் அதை செஞ்சானு சொல்லுவ போல…” என்று காட்டமாக பேசினான் ராஜா.

“டேய்! ப்ளீஸ்!.. எனக்காக டா… ஒரே ஒருமுறை… நம்ம எதுக்கும் அந்த இடத்துக்கு போய் பார்ப்போமே… ஒரே ஒரு சான்ஸ் குடுடா… என்னோட உள் மனசு சொல்லுது… அந்த இடத்துக்கு போனா மோகினி சம்பந்தப்பட்ட ஏதோ ஒண்ணு இருக்கும்னு. ப்ளீஸ்” என்று கெஞ்ச தொடங்க ராஜா பதில் கூறும் முன்னரே சந்திரனின் போன் ஒலித்தது.

அவர்களது வாக்குவாதத்தை  தற்காலிகமாக ஒத்தி வைத்தனர். அழைப்பது யார் என்று பார்க்க, முனியனின் பெயர் வரவே அவசர அவசரமாக எடுத்து பேசினான் சந்திரன்.

“ஹலோ சொல்லுங்க சாமி எதுக்கு போன் செஞ்சீங்க?”

“…..”

“என்ன சொல்றீங்க… எப்படி சாமி? உங்கள நம்பி தானே  நாங்க வீட்டை விட்டு வெளியே கிளம்பி வந்தோம்”

“…..”

“நான் உடனே வரேன்” பதட்டமாக பேசினான். ராஜாவையும் அந்த பதற்றம் தொற்றிக்கொண்டது.

“என்னடா சொல்றார் முனியன்..ஏன் இவ்வளவு டென்ஷன் ஆகுற?”

“அனுவை காணோம்னு சொல்றாருடா”

“என்னதுதுது!”

“ஆமாடா… வா.. நாம முதல்ல கிளம்பி அனுவைப் போய் தேடலாம்” என்று சொல்லி விட்டு அங்கிருந்து கிளம்ப… அவனின் பதட்டத்தை அவனது தலைக்கு மேலே இருந்த விட்டத்தின் வழியாக பார்த்து ரசித்த  மோகினி சிரித்தாள்.

அரூபமாய்…

கோரமாய்….

சிரித்தபடி இருந்த அவளது முகம் நொடிப்பொழுதில் பயங்கரமாக மாறியது.

Facebook Comments Box
Click to rate this post!
[Total: 0 Average: 0]

1 COMMENT

  1. இந்த பேய்க்கு வேற வேல இல்லை எப்பபாரு முறச்சிக்கிட்டு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here