Arooba Mohini Tamil Novel 18

0
115

அத்தியாயம் 18
ஆவிகளைப் பற்றி:
விபத்து,கொலை, தற்கொலை மூலம் இறந்தவர்களின் ஆவிகள் அவர்களின் மரணத்திற்கு உரிய நீதி கிடைக்கும் வரையிலும் அமைதி அடைவதில்லை. உறங்காமல் அவைகள் அலைந்தபடியே இருக்கும்.

 • மோகினி அமைதியான பெண் யாரிடமும் அதிர்ந்து கூட பேச மாட்டாள். தான் உண்டு தன் வேலை உண்டு என்பது போன்ற ரகம் அவள். அக்கா, தங்கை இருவருமே நல்ல அழகிகள். இரட்டையர்கள் இருவருமே ஒரே படிப்பை தேர்ந்தெடுத்து வெற்றிகரமாக படிப்பை முடித்தார்கள்.
  ஏற்கனவே அவரின் உடன் பிறந்த உடன் பிறந்தவள் தனித்து வெளியூர்களில் தங்கி வேலை பார்த்துக் கொண்டிருந்ததால் தானும் தாயை விட்டுப் பிரிந்து செல்ல மனமின்றி வீட்டிலேயே இருந்து ஆன்லைனில் சில வேலைகள் செய்து சம்பாதித்துக் கொண்டிருந்தாள்.
  மோகினியின் வீடு கிராமப்புறத்தில் உட்புறமாக இருந்தது. நல்ல சம்பளத்தில் வேலை பார்க்க வேண்டுமெனில் அவள் நகர் புறத்திற்கு வரவேண்டும். பஸ்ஸில் வந்து போவதாக இருந்தாலும் காலையில் 7 மணிக்கு கிளம்பினால் தான் வேலைக்கு செல்வதற்கு சரியாக இருக்கும் இரவு வீட்டிற்கு வருவதற்கு 9 மணிக்கு மேல் ஆகிவிடும் என்பது அவளது தாயாரை கவலை கொள்ளச் செய்தது.
  மோகினிக்கு வண்டி ஓட்டத் தெரியாது. எனவே பெண்ணை தனியே வேலைக்கு அனுப்ப மிகவும் யோசித்தார் அவளது தாயார். ஒரு கட்டத்திற்கு மேல் மோகினிக்கும் அது சரியென தோன்றினாலும் அவள் செய்து வந்த ஆன்லைன் வேலையில் அவளுக்கு போதிய வருமானம் கிடைக்கவில்லை. வருமானத்திற்கு வேறு என்ன வழி என்று யோசித்தவள் வீட்டிலிருந்தபடியே அந்த ஏரியாவில் இருக்கும் அனைத்து பெண்களுக்கும் பிளவுஸ் ,சுடிதார் போன்றவற்றை தைத்து கொடுக்கத் தொடங்கினாள்.
  மோகினி தன்னுடைய தாயிடம் இருந்தே டைலரிங்கின் அடிப்படையை கற்றுக்கொண்டவள் டவுனுக்கு சென்று புதுவிதமான முறையில் தைக்கவும் பயிற்சி எடுத்துக் கொண்டாள். சிறப்பான முறையில் செய்து எளிய மக்களிடம் நற்பெயரும் வாங்கினாள். ஓரளவு பணத்தை மிச்சம் பிடித்து சேமிக்கவும் தொடங்கினாள். எந்தவித கவலையும் இன்றி அவர்களது குடும்ப வாழ்க்கையில் ஓடியது
  மோகினியின் தயாரிப்புக்கு நல்ல வரவேற்பு ஏற்பட்டது. எம்பிராய்டரி முறையில் புதுப்புது விதங்களைப் புகுத்தி நன்றாக வருமானம் ஈட்ட தொடங்கினாள் மோகினி. ஆன்லைன் வருமானத்தை காட்டிலும் அவளது டைலரிங் கடையில் வேலை சூடுபிடிக்கத் தொடங்கியது. பட்டப்படிப்பு முடித்திருந்தாலும் , வேலைக்கு போகாமல் வீட்டில் இருந்தே வேலை செய்ய நினைத்தது தவறோ என்ற அவளின் எண்ணம் மாறும் அளவிற்கு அவளது வளர்ச்சி கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்தது.
  சரியாக சொல்ல வேண்டும் எனில் அனுவுக்கும், சந்திரனுக்கும் திருமணம் நடப்பதற்கு சரியாக ஒரு வருடத்திற்கு முன்பு வரை எல்லாமே சரியாகத் தான் இருந்தது. அதுநாள் வரையிலும் மோகினிக்கும், சந்திரனுக்கும் எந்தவிதமான தொடர்பும் கிடையாது.
  தான் உண்டு தன் வேலை உண்டு என்று குடும்பத்தைப் பற்றி மட்டுமே நினைத்து வாழ்ந்து வந்து கொண்டிருந்த மோகினி ஒரு நாள் எதிர்பாராதவிதமாக சந்திரனை சந்தித்தாள். மோகினி ஒரு நாள் ஒரு சுடிதாரில் எம்பிராய்டரி செய்வதற்கு வேண்டிய பொருட்களை வாங்குவதற்காக கடைக்கு செல்லும்போது ஒரு ஞாயிற்றுக்கிழமை டவுனில் வைத்து சந்திரனே சந்தித்தாள்.
  எல்லா பொருட்களையும் வாங்கிக் கொண்டு முடித்துவிட்டு களைப்பாக இருந்ததால் ஒரு கடையில் அமர்ந்து ஜூஸ் அருந்திக் கொண்டு இருந்தாள். அதேநேரம் யாரோ ஒரு கட்சி பிரமுகரை அரசாங்கம் கைது செய்து இருந்ததால் அவருடைய அடியாட்கள் அந்தப் பகுதியில் இருந்த கடைகளை அடித்து நொறுக்கிக் கொண்டிருந்தார்கள். அவளின் நல்ல நேரமோ, கெட்ட நேரமோ சந்திரனும் அதே கடையில் தான் இருந்தான்.
  ரவுடிகளின் அட்டகாசத்தை பார்த்து எல்லாரும் பயந்து கடையை மூடி விட்டு வெளியேறத் தொடங்க சந்திரனும் வெளியே வந்து ஊருக்கு செல்வதற்கு பஸ்ஸை தேடினான். ஆனால் ஏற்கனவே இரண்டு, மூன்று பஸ்கள் அடித்து அதன் கண்ணாடிகள் நொறுக்கப்பட்டிருக்க… மற்ற பஸ்கள் எதையுமே அங்கே காணவில்லை.
  வேறு வழியின்றி அவன் ஆட்டோவிற்கு அழைக்க அதே நேரம் இங்கேயே இருந்தால் வேறு ஏதும் பிரச்சனை வந்துவிடுமோ என்ற பயத்தில் மோகினி குடித்த பழச்சாறுக்கான பணத்தைக் கொடுத்து விட்டு வேகமாக எதிரே வந்த ஆட்டோவை அழைத்தாள். ஏற்கனவே சந்திரனும் அதே ஆட்டோவை நிறுத்தி இருக்க… அவர்கள் இருவரில் யாரை வண்டியில் ஏற்றுவது என்பது புரியாமல் தடுமாறினார் ஆட்டோ டிரைவர். மோகினி தனக்கு பின்னால் நிற்பதை கவனியாமல் சந்திரன் முதலில் வண்டியில் ஏறி விட , புறப்பட தயாராக இருந்த ஆட்டோவின் முன் கிட்டத்தட்ட மோகினி பாய்ந்து வந்து வண்டியில் இருந்த டிரைவரிடம் கெஞ்சத் தொடங்கினாள்.
  “சார் சார் நான் தான் உங்களை முதல்ல கூப்பிட்டேன். நீங்க என்னை விட்டுட்டு போறீங்க? என்னை கூட்டிட்டு போங்க சார்… மீட்டருக்கு மேல நூறு ரூபாய் வேணும்னாலும் தர்றேன். தயவு செஞ்சு முதலில் என்னை இந்த இடத்தை விட்டு கூட்டிட்டு போங்க சார்” என்று கலவர முகத்துடன் பேச ஆட்டோ டிரைவருக்கு பாவமாக இருந்தாலும் வண்டியை அந்த மாதிரி ஒரு கலவரம் நிறைந்த இடத்தில் வைத்து இருவரிடமும் பஞ்சாயத்து பேசிக் கொண்டிருக்க முடியாது என்று அவரும் ஒரு வேகத்தோடு பேசினார். கொஞ்சம் விட்டாலும் அவருடைய ஆட்டோவையும் அடித்து நொறுக்கி விடக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது என்ற பயமும் அவர் முகத்தில் தெரிந்தது.
  “பாருமா இந்த தம்பி தான் என்னை முதலில் கூப்பிட்டார். அவர் கூப்பிட்டதைப் பார்த்து தான் நான் இங்கே வந்தேன்” என்று சொல்ல மோகினியின் பயம் இன்னும் அதிகமானது.
  “ நீங்க சொல்றதெல்லாம் சரிதான் அண்ணா… ஆனா இப்ப நிலைமை கொஞ்சம் யோசிச்சு பாருங்க … அந்த ரவுடிங்க எல்லாரையும் அடிச்சிக்கிட்டிருக்காங்க. ஆம்பள அவரால சமாளிக்க முடியும் .ஆனா நான் ஒரு பொண்ணு … எப்படி என்னால சமாளிக்க முடியும்? தயவு செஞ்சு உங்க தங்கச்சியா நினைச்சு காப்பாத்துங்க அண்ணா.. இந்த இடத்தை விட்டு என்னை கூட்டிட்டு போய்டுங்க. அட்லீஸ்ட் கொஞ்சம் பாதுகாப்பான இடத்தில் இறக்கி விட்டாப் போதும். இப்போதைக்கு இந்த இடத்தில் இருந்து என்னை கூட்டிட்டு போங்க அண்ணா…” என்று கெஞ்ச அவளின் அண்ணா என்ற அழைப்பில் அவரின் மனது உருகியது. இப்படிப்பட்ட இடத்தில் ஒரு பொண்ணை விட்டுட்டுப் போறது என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என்பதை அவர் அறிவார்.
  வேறு வழியின்றி அவர் மோகினிக்காக சந்திரனிடம் பேசத் தொடங்கினார். நல்ல வேளையாக இருவரும் ஒரே பகுதியாக இருந்ததால் சந்திரனும் மோகினியை அந்த வண்டியில் ஏறுவதற்கு அனுமதித்தான் நன்றி சொல்லக் கூட நேரமின்றி அவள் ஆட்டோவில் ஏறிக் கொள்ள அடுத்த நொடியே அந்த ஆட்டோ பறந்தது. ரவுடிகளின் கண்ணில் படாமல் வீட்டுக்கு போய் சேர வேண்டுமே என்ற பரபரப்பில் ஆட்டோவில் இருந்து இறங்கும் வரை அங்கே யாருமே எதுவும் பேசிக் கொள்ளவே இல்லை.
  தன்னுடைய வீட்டிற்கு வந்ததும் அங்கு இறங்கிக்கொண்டு டிரைவரிடம் முழுப் பணத்தையும் கொடுத்து நன்றியுடன் சந்திரனின் முகத்தைப் பார்த்தாள். அப்பொழுது தான் இருவரும் ஒருவரை ஒருவர் நன்றாக பார்த்தார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
  சந்திரன் அழகன். நல்ல அமைதியான சுபாவம் கொண்டவன். மெலிதாகப் புன்னகைத்தவனைப் பார்த்து, “நன்றி சார் நீங்க மட்டும் சம்மதிக்கலேன்னா பெரிய பிரச்சனையில் மாட்டி இருப்பேன்” என்று சொன்னவள் தலையசைத்து டிரைவரிடம், சந்திரனிடமும் விடைபெற்று தன்னுடைய வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினாள்.
  சந்திரனும் தன்னுடைய வீட்டிற்கு அதே ஆட்டோவிலேயே சென்றவன் அதன் பிறகு மோகினி சுத்தமாக மறந்து விட்டான் என்று தான் சொல்ல வேண்டும்.
  ஆனால் மோகினியால் அப்படி இருக்க முடியவில்லை. சந்திரனை அவ்வப்போது நினைத்துக் கொள்வாள். ஒரு பெண்ணிடம் பேச எப்போதடா சாக்கு கிடைக்கும் என்று இருக்கும் ஆண்களுக்கு இடையில் உதவி செய்ததோடு அதை மறந்துவிட்டு தன்னுடைய வேலைகளை பார்த்துக் கொண்ட சந்திரனைப் பற்றி அவள் மனதில் நல்ல அபிப்ராயம் வந்தது. அவளையும் அறியாமல் சந்திரனை அவள் மனம் நாடியது.
  எதேச்சையாக ஒரு நாள் கோவிலுக்கு போய்விட்டு திரும்பும் போது சந்திரன் அதே பகுதியை சேர்ந்தவன் என்பதை தெரிந்து கொண்டாள். அதன் பிறகு தினமும் ஏதோ ஒரு காரணத்தை தன் தாயிடம் சொல்லி விட்டு சந்திரன் இருக்கும் ஏரியாவின் பக்கம் போய் சந்திரனைப் பார்க்க முடியுமா? என்று கண்களால் தேடி அலைவாள். சந்திரனைப் பார்ப்பது மட்டும்தான் அவளுக்கு ஆசை. அவனை ஒருமுறை கண்ணால் பார்த்து விட்டால் அத்தோடு மீண்டும் வீட்டுக்கு திரும்பி விடுவாள் மோகினி.
  இது ஏதோ ஒரு கடமை போல நாள் தவறாமல் செய்து வந்தாள். ஒரு கட்டத்திற்கு மேல் தினமும் சந்திரனை பார்க்காவிட்டால் அவளால் என்றுமே செய்ய முடியாது என்ற நிலைக்கு வந்து விட்டாள் மோகினி.தன்னுடைய நல்ல குணத்தினாலும், மற்றவர்கள் மீது காட்டும் அன்பினாலும் மெல்ல மெல்ல அவள் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்து போனான் சந்திரன். அது குறித்து நேரில் அவனிடம் பேச தான் அவளுக்கு தைரியம் இல்லை.
  மோகினியின் இந்த நடவடிக்கைகளை சந்திரன் கவனித்தானோ இல்லையோ அவளின் பக்கத்து வீட்டு கணேசன் கவனித்துவிட்டான். கணேசனுக்கு என்று பெரிதாக வேலை எதுவும் இல்லை. எப்போதும் தெருவில் இருக்கும் குட்டி சுவர் மேல் அமர்ந்து கொண்டு போவோர் வருவோரை வேடிக்கை பார்ப்பதுதான் அவனது அதிமுக்கியமான வேலை. வயது வந்த பெண்களை கிண்டல் செய்வதும் அதில் அடக்கம்.
  ஊதாரித்தனமாக திரிந்தவனுக்கு வீட்டில் துளியளவு கூட மரியாதை கிடையாது. சில நேரங்களில் அவனது வீட்டில் அவனுக்கு சாப்பாடு கூட போடாமல் துரத்தப்பட்ட சம்பவங்களும் உண்டு. அந்த நாட்களிலெல்லாம் மோகினி தான் அவன் மீது பரிதாபப்பட்டு அவனுக்கு சாப்பாடு கொடுப்பாள். அவளது வீட்டில் சாப்பாடு இல்லை என்றால் கையில் நூறு ரூபாய் பணத்தை கொடுத்து எங்கேயாவது போய் சாப்பிடச் சொல்லி அனுப்பிவிடுவாள்.
  கணேசனின் மீது யாருக்கும் நல்ல அபிப்பிராயம் இல்லாவிட்டாலும்… வேலை கிடைத்து குடும்ப பொறுப்பை ஏற்று செய்ய ஆரம்பித்தால் சரியாகி விடுவான் என்று எண்ணினாள் மோகினி. கணேசனுக்கு அவள் மீது பாசம் எல்லாம் எதுவும் கிடையாது. வேண்டிய நேரத்தில் அவளிடம் கேட்டு பணம் வாங்கிக் கொள்ளலாம் என்று அவளை ஒரு பணம் காய்ச்சி மரமாக மட்டுமே நினைத்தான்.
  ஒருநாள் மோகினி சந்திரனை பின்தொடர்ந்து போவதை கவனித்த கணேசன் அவள் அறியாமல் அவளை கண்காணித்தான்.
  சந்திரனை பின் தொடர்ந்து போகும் மோகினி அவன் நின்று விட்டால் அவள் நிற்பதும் , அவன் யாரிடமும் பேசும் போது திரும்பி பார்த்தால் மறைந்து கொள்வதுமான அவளின் கண்ணாமூச்சி ஆட்டத்தை கவனித்து விட்டான். இதை வைத்து அவளை மிரட்டி பணம் பறிக்கலாம் என்ற எண்ணத்துடன் தான் அவன் மோகினியுடன் அது குறித்து பேசத் தொடங்கினான். ஆனால் நடந்ததோ வேறு.
  ஆனால் மோகினியோ அவனை கண்டு அஞ்சாமல் உடனடியாக அவளது காதலை ஒத்துக் கொண்டாள். அவளை மிரட்டி அவளிடம் பணம் பறிக்கலாம் என்று எண்ணி வந்த கணேசனுக்கு அது அதிர்ச்சியாக இருந்தது. இவளிடம் மிரட்டி பணம் வாங்க முடியாது என்பதை புரிந்துகொண்டு கணேசன் ‘வேறு என்ன செய்யலாம்’ என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது மோகினியே அதற்குண்டான வழியை அவனுக்கு காட்டினாள்.
  மோகினியைப் பொறுத்த அளவில் கணேசனை தன்னுடைய சகோதரனாக நினைத்தாள். ஆனால் அப்படி ஒரு பாசம் கணேசனிடம் இருக்கிறதா என்பதை அவள் உணராமல் போனது தான் வேதனையின் உச்சம். அவனுடைய சொந்த தங்கையின் படிப்பு செலவுக்காக வைத்திருந்த பணத்தையே குடித்து அழித்தவன் மோகினியிடம் உண்மையான பாசத்தை காட்டுவான் என்று அவள் எதிர்பார்த்தது இமாலயத் தவறு இல்லையா?
  என்ன செய்வது? விதி தன்னுடைய வலையில் மோகினியை விழ வைத்தது.அவளும் அறியாமலேயே அதில் வந்து மாட்டிக் கொண்டாள்.
  சந்திரனிடம் தன்னுடைய காதலை நேரடியாக தெரிவிக்க தயக்கமாக இருப்பதால் கணேசனை தனது காதல் பற்றி சந்திரனிடம் எப்படியாவது தெரிவிக்கும்படி கேட்டுக் கொண்டாள். கணேசனுக்கோ பழம் நழுவி பாலில் விழுந்ததைப் போல ஆனது. என்ன தான் மிரட்டினாலும் மோகினியிடம் பணம் வாங்க முடியாது. அதற்கு பதிலாக சந்திரனின் பெயரைச் சொல்லி அவளிடம் கொஞ்சம் கொஞ்சமாக பணம் கறக்கலாமே என்று எண்ணியவன் உடனடியாக அவளது திட்டத்திற்கு ஒத்துக் கொண்டான்.
  “சந்திரன் வீட்டுக்கு அடங்கிய பிள்ளை… எடுத்த எடுப்பில் காதல் என்று சொன்னால் அவன் ஒத்துக்கொள்ள மாட்டான். எனவே கொஞ்சம் கொஞ்சமாக உன்னைப் பற்றி நல்லவிதமாக சொல்லி அவன் மனதில் பதிய வைப்போம்.அதன் பிறகு சொன்னால்தான் ஒத்துக் கொள்வான்” என்று சொல்லி மோகினியை நம்ப வைத்தான்.
  தினமும் சந்திரனை பார்ப்பதாக சொல்லி அவளை ஏமாற்றி கொஞ்சம் கொஞ்சம் பணம் வாங்கத் தொடங்கினான். அவன் தன்னை ஏமாற்றுவது தெரியாமல் சந்திரன் சீக்கிரமே தன்னை ஏற்றுக் கொள்வான் என்ற நம்பிக்கையில் நாட்களை கடத்தத் தொடங்கினாள் அந்த ஏமாளி மோகினி.
  “ மோகினி இன்று சந்திரனிடம் உன்னுடைய அழகை பற்றி வர்ணித்தேன்” என்று ஒரு நாள் கூறுவான்.
  அடுத்த நாள்,” நீ எவ்வளவு திறமையாக வீட்டிலிருந்தே பணம் சம்பாதிக்கிறாய் என்று சொன்னேன்” என்று சொல்லுவான் .
  அடுத்த நாள், ” இன்று உன்னுடைய சமையலை பற்றி சந்திரனிடம் பாராட்டிப் பேசினேன். உன்னை திருமணம் செய்து கொள்ள போகும் ஆண் மகன் கொடுத்து வைத்தவன் என்பதுபோல பேசினேன். சந்திரனின் முகத்தில் அப்படி ஒரு சந்தோஷம்” என்று வாய் கூசாமல் புளுகித் தள்ளினான். அவன் கூறுவது அனைத்தையும் அப்படியே நம்பினாள் மோகினி.
  கொஞ்சம் கூட சந்தேகம் ஏற்படவில்லை அவளுக்கு. அனைத்தையும் உண்மை என்று நம்பி, ‘சந்திரனின் மனதிற்குள் தான் கொஞ்சம் கொஞ்சமாக நுழைந்து கொண்டிருக்கிறோம்’ என்று எண்ணி சந்தோஷக் கடலில் முக்குளித்துக் கொண்டிருந்தாள். ஆனால் இவ்வளவு தூரம் சென்ற பிறகும் ஏனோ மோகினிக்கு நேரில் சந்திரனைப் பார்த்து பேச வெட்கமாகவும்,தயக்கமாகவும் இருந்தது.
  கணேசன் மோகினியிடம் பணத்தை கறக்க இது தான் சரியான சந்தர்ப்பம் என்று எண்ணி சந்திரனுக்கு வீட்டில் பணக் கஷ்டம் என்ற புளுகு மூட்டையை அவிழ்த்து விட்டு அவ்வப்போது அவளிடம் பணத்தை பீராய்ந்தான். மோகினியும் கணேசன் மீது இருந்த நம்பிக்கையால் கொஞ்சம் கூட சந்தேகம் ஏற்படாமல் அவன் கேட்ட போதெல்லாம் அவனுக்கு பணத்தை கொடுத்து வந்தாள். ஒரு கட்டத்தில் மோகினியின் கையிருப்பு மொத்தமாக கரைந்து போனது. வெளியேயும் கொஞ்சம் கொஞ்சமாக கடன் வாங்கத் தொடங்கினாள் மோகினி. ஆனால் அப்பொழுதெல்லாம் மோகினிக்கு அது ஒரு சுமையாகவே தெரியவில்லை.
  சந்திரனுக்கு தானே செய்கிறோம் எப்படியும் சந்திரனின் கஷ்டம் தீர்ந்தால் போதும் என்ற நிலைக்கு வந்தவள் கணேசன் கேட்கும்போதெல்லாம் எப்படியாவது பணத்தை ஏற்பாடு செய்து கொடுக்கத் தொடங்கினாள். அவள் பணம் வாங்கிக் கொடுப்பது எல்லாம் அவளது வாடிக்கையாளர்களிடம் என்பதால் மோகினியின் தாயார் காதுகளுக்கு அவள் கடன் வாங்கிய விவரங்கள் எதுவுமே தெரியாமல் போனது.
  வாங்கிய பணத்திற்கு பதிலாக அவர்களுக்கு தைத்துக் கொடுப்பதன் மூலம் அந்த கடனை அடைத்து விட்டாள் மோகினி. வீட்டில் வேறு எந்த பிரச்சினையும் இல்லாமல் இருந்தாலும் மோகினியின் கையிருப்பு கரைந்தது. தொழிலில் மேற்கொண்டு புதிய வருமானம் என்று எதுவுமே இல்லாமல் போனது. அவள் அத்தனை வேலை செய்தும் அத்தனையுமே அவள் வாங்கிய கடனுக்கு ஈடாக போய்க்கொண்டே இருக்க வருமானம் இல்லாமல் வீட்டுச் செலவுகளுக்கு என்ன செய்வது என்று தடுமாற தொடங்கினாள் மோகினி.
  அப்போது உடன் பிறந்தவளிடம் தாய்க்குத் தெரியாமல் வாங்கிய பணத்தைக் கொண்டு வீட்டு செலவுகளுக்கு அதை வைத்து சமாளித்துக் கொண்டிருந்தாள் மோகினி. அப்பொழுது கூட அவளுக்கு சந்திரன் மீது வருத்தம் வரவில்லை.
  ஒரு கட்டத்தில் மோகினியிடம் இருந்து இனி பைசா கூட வாங்க முடியாது என்ற நிலை வந்ததும் கணேசன் மெல்ல மெல்ல அவளிடம் இருந்து ஒதுங்கத் தொடங்கினான். மோகினி காரணம் கேட்டபோது, “சந்திரனுக்கு அதிகமாக கடன் இருப்பதாகவும் அதை நீ எப்படியும் ஏற்பாடு கொடுத்து விடுவாய் என்று மிகுந்த நம்பிக்கையுடன் சந்திரன் இருப்பதாகவும் தெரிவித்தான். இப்படி தொடர்ந்து சந்திரனுக்கு பண உதவி செய்வது நல்லது இல்லை. மேலும் அவளிடம் அதிக பணத்தை எதிர்பார்க்கக் கூடும்” என்றும் கூறினான் கணேசன்.
  “ இப்போது போய் நான் சந்திரனிடம் பேசினால் கூட மோகினி பணம் கொடுத்து விட்டாளா என்றுதான் கேட்பான்… அந்த அளவிற்கு அவனுக்கு பணத் தேவை இருக்கிறது” என்று சொல்லி மோகினியின் வாயை அடைத்துவிட, மோகினியின் மனமோ தவிக்கத் தொடங்கியது.
  தன் மனம் கவர்ந்தவனுக்கு ஒரு பிரச்சனை எவ்வளவோ முயன்றும் தன்னால் முழுதாக உதவ முடியவில்லையே என்று எண்ணி தவிக்க தொடங்கினாள். அதே கவலையுடன் ஒருநாள் அந்த தெருவில் இருந்த கோவிலுக்குப் போனாள். கோவில் பிரகாரத்தில் அமர்ந்து யாருமறியாமல் கண்ணீர் விட்டு கதறினாள். மோகினி மட்டும் அந்த பணத்தை தந்து விட்டால் அடுத்த மாதமே திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்றும் சந்திரன் சொன்னதாக அன்று காலையில் கணேசன் சொல்லி இருந்ததும் ஒரு காரணம்.
  எப்படி பணத்தை புரட்டுவது? என்று புரியாமல் மோகினி மலைத்துப் போய் இருந்தாள். கடவுளிடம் சென்றாலாவது கொஞ்சம் நிம்மதி கிடைக்காதா? ஏதாவது வழி பிறக்காதா? என்ற எண்ணத்தில் தான் கோவிலுக்கு போனாள். வீட்டுக்கு திரும்பலாம் என்று எண்ணி கிளம்பியவள் அப்பொழுது தான் கோவில் வாசலில் சந்திரன் புதிதாக வாங்கிய பைக்கிற்கு பூஜை போட்டுக்கொண்டு இருப்பதை பார்த்தவள் அதிர்ந்து போனாள்.
  இவ்வளவு பணப் பிரச்சினை இருக்கும் போது சந்திரனால் எப்படி புதிதாக வண்டி வாங்கி இருக்க முடியும்? ஒருவேளை வேறு யாருடைய வண்டியாகவும் இருக்குமோ என்று எண்ணம் வந்தது அவளுக்கு.
  அன்று சந்திரன் பூஜையை போட்டு விட்டு வண்டியை எடுத்துக் கொண்டு நகர்ந்து விட , அவன் முகத்தில் இருந்த சந்தோசம் மோகினியை வெகுவாக பாதித்தது. இலட்சக்கணக்கில் பணம் கடன் வைத்து இருப்பவன் எப்படி இத்தனை சந்தோசமாக இருக்க முடியும்? அப்போதும் அவளுக்கு கணேசன் மீது சந்தேகம் வரவில்லை.
  நாளை கணேசனையும்,அழைத்துக் கொண்டு போய் சந்திரனிடம் நேரில் பேசி விட வேண்டியது தான் என்று எண்ணினாள். அப்படி அவள் எண்ணியது அவள் வாழ்வையே மாற்றப் போகிறது என்பதை அவள் அப்பொழுது அறியவில்லை.
Facebook Comments Box
Click to rate this post!
[Total: 2 Average: 3]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here