வனமும் நீயே வானமும் நீயே 4

0
597

“ஏன் என்னை தள்ளி விட்டீங்க…”

“இதுக்குத் தான் “ என்று சொன்னவன் அவளை மேலும் நெருங்கி அவளது தோளில் கை போட்டு அவளின் கண்ணோடு கண் கலக்க முயன்றான்.

“எ..என்ன இது? பட்டப்பகலில்… ஆற்றங்கரையில் வச்சு இப்படி அநியாயம் செய்றீங்க?”படபடத்தாள் அவள்.

“என்ன அநியாயம் செஞ்சுட்டேனாம்…”

“அ..அது.. நீங்க  என் மேல… கை…”

“ம்ம்ம்.. முழுசா சொல்லு.. அப்போ தானே எனக்குத் தெரியும்”கண்களில் கள்ளச்சிரிப்புடன் அவன் கேட்க… என்னவென்று அவனிடம் விளக்குவது  என்று புரியாமல் திணறினாள் ராசாத்தி.

“இப்போ எதுக்காக என்னை ஆத்துக்கு கூட்டிட்டு வந்து இருக்கீங்க… அங்கே வீட்டில் எத்தனை வேலை இருக்கு தெரியுமா?” பேச்சை மாற்றுவதற்காகத் தான் அவள் அப்படி பேசியது. ஆனால் அவளின் பேச்சைக் கேட்டதுமே அவன் முகம் மாறிய விதத்தில் பயந்து போய் வாயை இறுக மூடிக் கொண்டாள்.

“காபியை குடிச்சுட்டு நான் மட்டும் கிளம்பி ஆத்துக்கு வரணும்னு நினைச்சு தான் வெளியே வந்தேன்.. ஆனா… அதுக்கு அப்புறம் உன்னை அங்கே தனியா விட்டுட்டு வர இஷ்டம் இல்லை. அதான்… என்னோடவே கூட்டிட்டு வந்துட்டேன்…”

தனியாக அங்கே இருந்து இருந்தால் இந்நேரம் அந்த வீட்டில் எல்லாருமாக சேர்ந்து என்னை கொன்று புதைத்து இருப்பார்கள் என்ற எண்ணம் அவள் மனதில் தோன்றி மறைய… அதன் காரணமாகவோ என்னவோ அவள் உடல் லேசாக நடுங்கியது.

“ஹேய்! உனக்கு குளிருதா என்ன? சரி சரி.. நீ தண்ணியை விட்டு வெளியே போய் மேலே நில்லு… நான் குளிச்சு முடிச்சதும் இரண்டு பேரும் சேர்ந்து வீட்டுக்கு போகலாம்” என்று சொல்ல அவள் மெலிதாக சிணுங்கினாள்.

“இப்படி ஈரப் புடவையோட எப்படி போறதாம்”

“யார் ஈரப் புடவையோட நிற்க சொன்னது? அங்கே மறைவில் போய் புடவையை காய வச்சுட்டு வா.. அதுக்குள்ளே நான் குளிச்சு முடிச்சிடறேன்”

“இங்கேயா? யா… யாரும் பார்த்துட்டா?”

“எவன் பார்ப்பான்? எவனாவது பார்த்தா… குடலை உறுவிடுவேன்” என்று கண்கள் செந்தணலாக ஜொலிக்க அவன் கர்ஜித்த விதத்தில் அவள் பூமேனி மீண்டும் ஒருமுறை நடுக்கத்திற்கு உள்ளானது.

“இல்லை.. யாராவது தெரியாம அந்தப்பக்கம் வந்துட்டா…”

“என்னை மீறி ஒருத்தரும் நீ இருக்கும் திசைப்பக்கம் கூட நெருங்க முடியாது.. போய் புடவையை உலர்த்து” என்று சொன்னவன் ஆற்றுக்குள் இறங்கி குளிக்கத் தொடங்க.. வேறுவழியின்றி  அவளும் மறைவான இடத்திற்கு சென்று புடவையை காய வைத்தாள்.

ஓரிருமுறை அவள் திரும்பிப் பார்க்கும் பொழுது பாண்டியன் குளித்துக் கொண்டிருந்தாலும் அவன் பார்வை நாலாபுறமும் அலசிக் கொண்டிருந்தது. சொன்னதோடு நில்லாமல் அவளுக்கு காவலாக அவன் நிற்பதே அவளுக்கு பெரும் நிம்மதியை அளித்தது. குளித்து முடித்து அவன் கரை ஏறும் பொழுது அவனது போன் ஒலி எழுப்ப, சுற்றிலும் பார்வையை செலுத்தி விட்டு ராசாத்தி இருந்த இடத்தை விட்டு கொஞ்சம் தள்ளி நின்று கவனத்துடன் யாருடனோ போனில் பேசினான்.

‘யார் கிட்டே இப்படி ஒளிஞ்சு மறைஞ்சு பேசறார்?’

புடவை காய்ந்ததும்… கொசுவம் வைத்து கட்டி முடித்தவள்… மாராப்பை போடுவதற்கும், பாண்டியன் அவளுக்கு அருகில் வருவதற்கும் சரியாக இருக்கவே ஒரு நிமிடம் பயந்து போனாள் பெண்ணவள்.

“அதுக்குள்ளே புடவை கட்டிட்டியா… சே! ஏமாந்துட்டேனே” என்று அவன் சொல்ல… அவளுக்கு வெட்கம் தாளவில்லை.

‘முன்னாடியே வந்து இருந்தால் என்ன செய்து இருப்பானாம்’ கன்னம் சிவந்தது அவளுக்கு… ஒற்றை விரலால் அவள் கன்னத்தை வருடினான்.

“இப்போ எதுக்குடி இத்தனை வெட்கம் உனக்கு… ஊரில் உள்ள எல்லா பெண்களின் வெட்கத்தையும் நீ ஒருத்தியே குத்தகைக்கு எடுத்து வச்சு இருக்கியா என்ன? எம்புட்டு அழகா வெட்கப்படறடி” மேலும் நெருங்கி அவள் காதோரம் கதை பேசினான்.

தாபம் நிறைந்த அவனது மூச்சுக்காற்று அவளை ஏதோவொரு மாய உலகிற்கு அழைத்து செல்ல… முதல் நாள் இரவு வரை அவனிடம் இருந்து தப்பிப்பதற்காக அவள் ஓடியதெல்லாம் அந்த நொடியில் அவள் மறந்தே போனாள்.

ஒருவேளை முதல் நாள் இரவு அவளது காயத்தை மதிக்காமல் வெறி கொண்ட மிருகத்தைப் போல அவளுடன் அவன் கூடி இருந்தால் அவளுக்கு அவனைப் பார்த்தால் வெறுப்பு வந்திருக்குமோ என்னவோ? அவன் ஒதுங்கியது அவளின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்தால்தான்  என்ற நினைவே அவளுக்கு இனித்தது.

முதல் நாள் இரவு வரை அவள் எதிர்பார்த்து காத்திருந்தது ஆறு மாதமாக அவள் பார்த்து வந்த அந்த அடிதடிக்காரனைத் தான்… ஆனால் இப்பொழுது அவள் பார்க்கும் பாண்டியனின் புதிய முகம் அவளுக்கு ஆச்சரியத்தையே கொடுத்தது.

இதற்கு முன் தயாளன் வாய் திறந்து ஒரு வார்த்தை சொல்ல வேண்டும் என்ற அவசியம் கூட இன்றி அவர் கண் அசைத்தால் போதும் அடுத்த நொடியே அதை செய்து முடித்திருப்பான் பாண்டியன். அப்படிபட்டவன் இன்று காலையில் அவளுக்காக அத்தையின் முகத்தில் சூடான காபியை ஊற்றியதை அவளால் இன்னமும் நம்ப முடியவில்லை.

மேற்கொண்டு அவள் யோசிப்பதற்கு பாண்டியன் அனுமதிக்கவில்லை. இடையில் பதிந்த அவன் கரங்கள் அவளது வெற்றியிடையில் ஊர்வலம் நடத்த… பதறிப்போய் அவன் கைகளைத் தடுத்தாள்.

“ஏன்டி” என்றான் பாவமாக…

“இங்கே இருந்து கிளம்பலாம்” என்று சொன்னபடி அவனுக்கு முன்னால் அவள் நடக்கத் தொடங்க… அவளின் பின்னலை  அவன் இழுத்ததில் மீண்டும் புதர் மறைவில் அவனது நெஞ்சில் அடைக்கலம் ஆனாள்.

“உனக்காகத் தானே கண்ணு நேத்து ராத்திரி நான் சைவப் பூனையா இருந்தேன்… அதுக்காக இப்படி சுத்தமா பட்டினி போட்டா… என்னடி அர்த்தம்? கொஞ்சமே கொஞ்சம் மச்சானை கவனிக்கலாம் இல்ல” என்று கிசுகிசுப்பான குரலில் தாபத்துடன் கேட்டவனுக்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமல் வெட்கத்துடன் தலை குனிந்தாள் ராசாத்தி.

“வீட்டுக்குப் போகலாம்”

“போகணுமா” என்று லேசாக அழுத்தி அவன் கேட்ட விதத்தில் அவன் மார்பிலேயே மீண்டும் முகத்தைப் புதைத்துக் கொண்டாள். சற்று நேரம் அவளது எலும்புகள் நொறுங்கிப் போகும் அளவுக்கு அவளை இறுக்கியவன் , அதே வேகத்தில் அவளை விடுவித்தான்.

“சரி வா. நம்ம வீட்டுக்கு போகலாம்” என்று அழுத்தி சொன்னவன்  அவளுக்காக கையை நீட்ட… அவன் கரங்களோடு தன் கைகளை பிணைத்துக் கொண்டு சைக்கிளில் பின்னால் அமரப் போனவளை வம்படியாக முன்னால் அமர வைத்துக் கொண்டான். சைக்கிள் ஓட்டும்போது வேண்டுமென்றே அவள் மீது படிந்து  அவளை இழைந்து கொண்டே அவன் ஓட்டிய விதத்தில் அவன் முகம் செவ்வானமானது. வீட்டுக்கு திரும்பும் வரையில் ராசாத்தி ஏதோவொரு மாய உலகில் சஞ்சரித்தாள். சைக்கிளை நிறுத்தி விட்டு இருவரும் வீட்டுக்குள் நுழைந்த மறுநொடியே தயாளனின் குரல் ஓங்கி ஒலித்தது.

“அந்தப் பய இன்னிக்கு வரட்டும்” என்று ஏகத்தும் கத்திக் கொண்டிருக்க… ராசாத்தி பயத்துடன் பாண்டியனின் கரங்களை பற்றிக் கொண்டாள்.

“என் மூஞ்சியில் காபியை கொதிக்க கொதிக்க ஊத்திட்டான்ங்க… அவனை சும்மா விடக்கூடாது” வேணியின் குரலில் ஆத்திரம் நிரம்பி வழிந்தது.

“இன்னிக்கு என் மேலே ஊத்தினவன் நாளைக்கு உங்க மேலயும் ஊத்துவான்… சந்திரா மேலயும் ஊத்துவான்… பார்த்துக்கோங்க” என்று வேணி மேலும் தூபம் போட… தயாளனின் கோபம் மேலும் அதிகரித்தது. வீட்டின் உள்ளே இருந்து கலவையாக வந்த குரல்கள் ஊரில் இருக்கும் பெரிய மனிதர்கள் சிலர் உள்ளே இருப்பதை தெளிவாக எடுத்துக் காட்டியது.

‘இப்போ உள்ளே போனா என்னாகுமோ?’ என்று எண்ணி அஞ்சியவள் பாண்டியனையும் உள்ளே போக விடாமல் தடுத்தாள்.

“நாம அ.. அப்புறமா போகலாம்”

“ஏன்” என்றான் புரியாமல்…

“காலையில் நீங்க அத்தை மூஞ்சியில் காபி ஊத்தினதுக்கு நான் பஞ்சாயத்து நடக்குதுன்னு நினைக்கிறேன். இப்போ போனா உங்களைத் தான் எல்லாரும் குற்றம் சொல்வாங்க…”

“சொல்லட்டும்… “

“இல்லை.. வேண்டாம்” என்று அவள் மறுத்துக் கொண்டிருக்கும் பொழுதே அவள் கையை இறுக்கமாக  பற்றி வேகமாக இழுத்துக் கொண்டு வீட்டின் உள்ளே நுழைந்தான் பாண்டியன்.

யார் பேச்சை ஆரம்பிப்பது என்று வந்து இருப்பவர்கள் அனைவரும் மாறி மாறி மற்றவர் முகத்தைப் பார்த்துக் கொள்ள… வேறுவழியின்றி ஒருவர் பேச்சைத் தொடங்கினார்.

“என்னப்பா பாண்டியா… தயாளன் ஊருக்குள் பெரிய மனுஷன்” என்று பேச்சைத் தொடங்க… பாண்டியனின் முகத்தில் வந்து போன அலட்சியமும் நக்கலும் கலந்த சிரிப்பில் அவர் கப்பென்று வாயை மூடிக் கொண்டார்.

“வ.. வந்து நேத்து தான் அவரோட தங்கச்சி பொண்ணை உனக்கு கல்யாணம் செஞ்சு வச்சு இருக்கார்.. அதுக்குள்ளே இப்படி நடந்துக்கலாமா?”

“எப்படி நடந்துக்கிட்டேனாம்?” ஓடத் துடித்த ராசாத்தியை பார்வையாலேயே அடக்கி விட்டு எதிரில் இருந்தவர்களுக்கு பதில் அளித்தவன் அத்தோடு நிறுத்தி இருக்கலாம்.

‘அவர்கள்  எல்லாரும் அமர்ந்து கொண்டு பேச… தான் மட்டும் நிற்பதா?’ என்று நினைத்தவன் அங்கே இருந்து இரண்டு சேர்களை எடுத்துப் போட்டு ஒன்றில் ராசாத்தியை தோளைப் பிடித்து அமர வைத்து விட்டு அவனும்  அருகில் அமர்ந்தான். அவனது இந்த செய்கையை தயாளன் கொஞ்சமும் விரும்பவில்லை என்பது அவரது முகபாவனையிலேயே தெரிந்தது.

“இதென்ன பழக்கம்… ராசாத்தியை இப்படி சபையில் இத்தனை ஆம்பிளைகள் இருக்கும் பொழுது உட்கார வச்சு இருக்கீங்க?”

“அவளுக்கு காலில் காயம் இருக்கு.. இந்த பஞ்சாயத்து முடிய எவ்வளவு நேரம் ஆகுமோ? அதுவரை  அவளை நிற்க வச்சே பேச முடியுமா?” அவருக்கு கொஞ்சமும் அஞ்சாமல் அவன் பதில் அளிக்க… அப்பொழுதும் விடாமல் மட்டம் தட்ட முயன்றார் தயாளன்.

“அப்படி அவசியம்னா அவளை உள்ளே உட்கார வைக்க வேண்டியது தானே? பஞ்சாயத்து நடக்கும் இடத்தில் பெண் பிள்ளையை வச்சுக்கிட்டு.. இதெல்லாம் நல்ல குடும்பத்து பழக்கமா?”

“உங்களோட ‘ரெண்டு’ பொண்டாட்டிகளும் கூட இங்கே தான் இருக்காங்க…” அவருக்கு வெகுநக்கலாக நினைவூட்டினான்.

“அவங்க என்னோட பொண்டாட்டி”

“அதே போல ராசாத்தி என்னோட பொண்டாட்டி…” என்று ஒரே போடாக போட… வந்தவர்கள் அனைவரும் வாயைப் பிளந்து கொண்டு நடப்பதை நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

‘பாண்டியன் தயாளனை எதிர்த்து பேசுகிறானா? இந்த செய்தியை ஊரில் இருக்கிற எல்லாருக்கும் சொல்லியாகணுமே’ என்ற பரபரப்பு அங்கே இருந்த அத்தனை பேரின் முகத்திலும் தெரிவதில் தயாளனின் கோபம் அதிகரித்தது.

“இது அவங்க சம்பந்தப்பட்ட விஷயம்.. அதனாலத் தான் இங்கே இருக்காங்க”

“அதில் ராசாத்தியும் சம்பந்தப்பட்டு இருக்கிறாள். அதனால அவ இங்கே தான் இருப்பா” என்று அழுத்தமாக சொல்லி விட , அந்த இடமே சில நொடிகள் அமைதியாக இருந்தது.

“எல்லாம் சரி தான் தம்பி… ஆனா கல்யாணம் ஆன மறுநாளே ராசாத்தியின் அத்தை முகத்தில்  காபியை ஊத்தி இருக்கீங்க.. அதுவும் கொதிக்க கொதிக்க…”

“ஆமா…ஊத்தினேன்…” என்று ஒத்துக் கொள்ள… ராசாத்திக்கோ மயக்கமே வந்து விடும் போல இருந்தது. ஊர்ப் பெரியவர்கள் முகத்தில் வந்து போன பாவனை எதுவும் அவளுக்கு உவப்பானதாக இல்லை.

“தம்பி நாங்க இங்கே வந்தது இந்த வருச கோவில் திருவிழாவைப் பத்தி பேசத் தான்… ஆனா இப்போ இங்கே நடந்து இருக்கிற சம்பவம் ஒண்ணும் சரியாப்படலை எங்களுக்கு”

“என்ன சரியாப்படலை?”

“ஆயிரம் தான் அவங்க உங்களுக்கு அம்மா முறை வருவாங்க… அவங்க மேல காபியை…”

“சும்மா நிறுத்துங்க… அந்தம்மா என்ன செஞ்சாங்கன்னு உங்களுக்கு தெரியுமா? கொதிக்க கொதிக்க காபியை என் பொண்டாட்டி மேல ஊத்தினாங்க… அதுக்கு தான் நானும் பதிலுக்கு செஞ்சேன்… என்னவோ பெருசா பேசறீங்களே… ரெண்டு மாசத்துக்கு முன்னாடி இதே ராசாத்தியோட மாமாவை ஒருத்தன் எதிர்த்து பேசினான்னு அவனோட கையை உடைச்சவன் நான்… இன்னிக்கு என்னோட பொண்டாட்டி மேலேயே ஒருத்தர் கை வைச்சா.. நான் சும்மா இருப்பேனா” என்று கேட்டபடி அவனது மீசையை முறுக்கி விட வந்து இருந்தவர்கள் ராசாத்தியின் முகத்தை  ஊன்றி கவனித்தார்கள்.

 அவள் முகத்தில் இருந்த திட்டுத்திட்டான சிவப்பே அவன் சொன்னது உண்மையென்று சொல்லிவிட… நம்ப முடியாத திகைப்புடன் தயாளனின் குடும்பத்தாரை பார்த்தார்கள். அந்த வீட்டில் ராசாத்திக்கு எந்த மாதிரியான வாழ்க்கை என்பது எல்லாருக்கும் தெரியும் தான். ஆனால் இந்த அளவு மோசமாக இருக்கும் என்பதை யாரும் எதிர்பார்க்கவில்லை போலும். தயாளனின் குடும்பத்தாரோ மற்றவர்களின் பார்வையை தவிர்த்து வேறு திசையில் பார்க்க… அதுவே வந்தவர்களுக்கு எது உண்மையென்று சொன்னது.

அதே நேரம் விஷயத்தை அப்படியே விடவும் சந்திராவுக்கு மனமில்லை… பாண்டியனுக்கு எதிராக குரலை உயர்த்தினாள்.

“அக்கா ஏதோ தெரியாம கை தவறி காபி கொட்டிட்டாங்க.. அதுக்காக நீ வேணும்னே அக்கா  முகத்தில் ஊத்துவியா?”

“கண்டிப்பா ஊத்துவேன்” என்றான் நொடி கூட தாமதிக்காமல்…

“என் பொண்டாட்டி மேல கை வைக்கிறது யாரா இருந்தாலும் வெட்டி பொலி போட்டுடுவேன்”என்றான் ரவுத்திரத்துடன் . அத்துடன் பேச்சு வார்த்தை முடிந்தது என்று சொல்லாமல் சொல்வது போல  எழுந்தவன் மறக்காமல் ராசாத்தியையும் கையோடு இழுத்துக் கொண்டு தங்களின் அறைக்குள் சென்று விட்டான். வந்தவர்கள் ஒன்றுமே பேசாமல் கலைந்து செல்ல… வேணியும், சந்திராவும் தயாளனிடம் ஓடி வந்தார்கள்.

“என்னங்க.. நாம என்னென்னவோ கணக்கு போட்டு இந்த பயலை ராசாத்திக்கு கட்டி வச்சா.. இப்போ எல்லாமே மாறுதே…” சந்திரா பதறினார். அதே எண்ணம் தான் வேணிக்கும் என்பது அவரது அமைதியிலேயே புரிய தயாளன் கொஞ்சமும் அலட்டாமல் பதில் சொன்னார்.

“ஹ… அஞ்சாயிரம் தர்றேன்னு  சொன்னா கையை வெட்டுறவன் அந்த பாண்டியன் .. இப்போ புதுசா கல்யாணம் ஆகி இருக்குல்ல… புதுப் பொண்டாட்டி மோகம்… முகத்தில் காபி கொட்டியதை காரணமா சொல்லி படுக்கையில் அவனை தள்ளி வச்சுட்டா என்ன செய்றது?… அது தான்… வேற ஒண்ணுமில்லை… மோகம் தீர்ந்ததும் அந்த பய மறுபடி நம்ம முன்னாடி கையை கட்டிக்கிட்டு நிற்பான்.. இப்போ போய் வேலையைப் பாருங்க” என்று சொல்லிவிட்டு நகர… ஏனோ வேணிக்கு மட்டும் அதில் நம்பிக்கை வர மறுத்தது. காலையில் அவனது ஆத்திரத்தை நேராக பார்த்தவர் அவர் தானே…

‘இந்தப் பய நம்ம பக்கம் வருவானா?’

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Facebook Comments Box
What’s your Reaction?
+1
5
+1
0
+1
3
+1
1
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here