தணலை எரிக்கும் பனித்துளி அத்தியாயம் 15

0
1136

அத்தியாயம் 15

‘***** பழங்குடி கிராமத்தில் கொடிகட்டி பறக்கும் விபசாரத் தொழில்… உள்ளூர் மக்களின் பலத்த ஆதரவோடு’ என்ற தலைப்புக்குக் கீழே கௌதமும் மருதாணியும் இணைந்திருக்கும் அந்த போட்டோ வெளியாகி இருக்க… முற்றிலும் உடைந்து போனான் கெளதம்.

அது ஒரு நாலாந்தர பத்திரிக்கை தான். அந்த விஷயம் அவனுக்குத் தெரியும். இவர்களுக்குத் தெரிய வாய்ப்பு இல்லையே.

அவனுக்கு நன்றாகத் தெரிந்தது இது அந்த குமரனின் வேலை தான் என்று… அவனது இந்த செயலுக்கு பின்னால் விசாலத்தின் தூண்டுதலும் இருக்கும். ஆனால் இதை எல்லாம் இவர்களிடம் சொன்னால் இங்கே ஒருவராவது  நம்ப வேண்டுமே…

அவனுக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை. அவன் சமாளித்துக் கொள்வான். ஆனால் அவனுக்கு வலிக்க செய்வதின் பொருட்டு மருதாணியை அல்லவா அவர்கள் குறி வைத்து இருக்கிறார்கள்.

உயிர்வலியை கண்களில் தேக்கியபடி அவனையே பார்த்துக் கொண்டிருந்த மருதாணியை பார்த்தவனின் ஆவி துடித்தது.

‘அவளது இந்த நிலைக்கு காரணமானவர்கள் இதற்கு பதில் சொல்லியே தீர வேண்டும்’ என்று மனதுக்குள் சூளுரைத்தவன் ஊர் மக்களை நோக்கி நிமிர்ந்த தோற்றத்துடன் அதட்டலாக பேசத் தொடங்கினான்.

“எவனோ ஒரு குப்பை பத்திரிக்கையில் பப்ளிசிட்டிக்காக எதையும் போட்டா அதை அப்படியே நம்பி இந்த பொண்ணை அடிக்க ஆரம்பிச்சுடுவீங்களா? என்ன ஏதுன்னு விசாரிக்க மாட்டீங்களா? நல்லா இருக்கு உங்க ஊர் நியாயம்?”பற்களை கடித்தபடி வார்த்தைகளை சிதற விட மொத்த ஊரும் அவனுக்கு எதிராக குரல் கொடுத்தது.

 

“ஏய்! என்ன விட்டா ரொம்ப பேசுற? இந்த போட்டோவில் இருக்கிறது நீயும் இந்த சிறுக்கியும் தானே?… கையும் களவும் மாட்டிகிட்ட பின்னாடியும் எங்க முன்னாடி நின்னு இப்படி எதிர்த்து பேசுறன்னா உனக்கு எவ்வளவு நெஞ்சழுத்தம் இருக்கணும்?”

“எங்க கிட்டே எந்த தப்பும் இல்லாதப்போ நாங்க எதுக்கு தலை குனியணும்?” என்றவனின் குரலில் இருந்த அழுத்தமும் கண்களில் தெறித்த நேர்மையும் கண்டு ஊர் தலைவர் கொஞ்சம் யோசிக்கத் தொடங்கினார். அவரின் முகத்தில் யோசனையைக் கண்டு முத்தையா உஷாரானான்.

‘இவர் யோசிச்சா ஆபத்தாச்சே… அப்புறம் இவளை நான் எப்படி பழி வாங்குறது?’

“செய்றதெல்லாம் செஞ்சுட்டு கதை அளக்கறியா? நீங்க இரண்டு பேரும் செஞ்சு வச்சு இருக்கிற வேலையால மொத்த ஊருக்கும் இல்ல கெட்ட பேரு… எங்க ஊரில் இருக்கிற ஒரு பொண்ணாவது இனி வெளியே தனியா போக முடியுமா? இந்த ஊர் ஆம்பிளைங்க யாரும் தலை நிமிர்ந்து நடக்க முடியாத மாதிரி செஞ்சிட்டியேடா” என்று கூறி உள்ளூர் மக்களை மேலும் தூண்டி விட்டான்.

“எவனோ ஒருத்தன் தப்பான நியூஸ் போட்டு இருக்கான்… உங்களுக்கு கோபம் வர்றதா இருந்தா அவன் மேலே தானே வந்து இருக்கணும்.”கிடுக்குப்பிடி போட்டான் கெளதம்.

“அவன் எங்க ஊரை பத்தி தப்பா சொல்லி இருக்கான் தான்… அவனையும் நாங்க சும்மா விடப் போறதில்லை… ஆனா கண்ட நாய் எல்லாம் எங்களைப் பத்தி தப்பா எழுதுற மாதிரி இடம் கொடுத்தது யாரு? நீயும் இந்த சிறுக்கி மவளும் தானே?” மீண்டுமாய் கொக்கி போட்டான் முத்தையா.

“நாங்க இரண்டு பேரும் உங்க ஊர் மரியாதையை கெடுக்கிற மாதிரி எந்த ஒரு சின்ன வேலையையும் செய்யலை.. நம்புங்க” ஊர் தலைவரின் பக்கம் திரும்பி மன்றாடினான் கெளதம்.

“இவ்வளவு தூரம் நடந்த பிறகும் கூட எங்களை ஏமாத்த பார்க்கறியே? உன்னை எல்லாம் உயிரோடவே விடக் கூடாதுடா” என்று பற்களை கடித்தபடி பேசியவனால் கௌதமை நெருங்க முடியாமல் அவனது கையில் இருந்த துப்பாக்கி தடுத்தது.

“நான் சொல்றது தான் நிஜம்”

“நீ சொல்றது உண்மையாவே இருக்கட்டும். அதுக்காக உங்க இரண்டு பேரையும் உயிரோட விட்டு வச்சா அதுக்கு அப்புறம் எவன் எங்களை மதிப்பான்?”

“அதுக்கு?” கௌதமின் பார்வையில் கூர்மை கூடியது. அவனது கரங்கள் துப்பாக்கியை அழுந்தப் பற்றியது.

“நீ எங்க ஊர் ஜனங்க எல்லார் காலிலயும் விழுந்து மன்னிப்பு கேட்டா உன்னை விட்டுடுவோம்… தப்பிச்சு ஓடிடு.. மறுபடி இந்த ஊர்ப்பக்கம் வரவே கூடாது”

“நான்… மன்னிப்பு கேட்கணும்… அதுவும் எல்லார் காலுலயும் விழுந்து” வார்த்தைகளை கடித்து துப்பினான்.

“ஆமா.. பின்னே இங்கிருந்து நீ உயிரோட போக வேண்டாமா?”

“என் கையில் இருக்கிற துப்பாக்கியை மறந்துட்டு பேசறீங்க போல”

“ஹ… உன் கையில் இருக்கிற துப்பாக்கியில் மிஞ்சிப் போனா ஒரு பத்து குண்டு இருக்குமா? அதுக்கு அப்புறம் மிச்சம் இருக்கிற எங்க ஊர் ஆட்கள் உன்னை கொன்னு புதைச்சுடுவாங்க”என்று இறுமாப்புடன் பேசினான் முத்தையா.

“அது சரி தான்… ஆனா என்னோட துப்பாக்கிக்கு உயிரைத் தர தயாரா இருக்கிற அந்த பத்து பேர் யாரு? எங்க இரண்டு பேரை நோக்கி யார் முதல்ல வரீங்களோ அவங்களுக்கு கண்டிப்பா என் துப்பாக்கி பரிசு கொடுக்கும். யார் வரப் போறீங்க? ஏன் இவ்வளவு பேசறியே… முதல் ஆளா நீ வந்து பாரேன்” என்றவனின் வார்த்தைகளைக் கேட்டதும் வேகமாக பின் வாங்கினான் முத்தையா.

‘இவன் என்னை கொல்லாம விட மாட்டான் போலவே’

‘அது’

“என்னை கொல்லணும்னா அதுக்கு முன்னாடி உங்க ஊர் ஆட்கள் பத்து பேர் உயிரை விட்டாகணும்.. அதை நியாபகம் வச்சுக்கோ” என்று உறும முத்தையா உஷாரானான்.

‘அதுல முதல் பலி நான் தான் போலவே… இவனை அப்புறமா கவனிச்சுக்க வேண்டியது தான்.. முதல்ல இந்த சிறுக்கியைப் பார்ப்போம்’என்று எண்ணியவன் ஊர் தலைவரின் காதுகளில் ரகசியம் பேசினான்.

“தலைவரே இவன் கையில் துப்பாக்கி வச்சு இருக்கான். இவனோ காவாளிப் பய… இவனை இப்போ பிடிக்க முயற்சி செஞ்சா நம்ம ஊர் ஆளுங்க பத்து பேரை நாம இழக்க வேண்டி இருக்கும். இவனை இப்போ விடுற மாதிரி விட்டுட்டு ஊர் எல்லையை தாண்டுறதுக்குள்ளே நம்ம ஆளுங்களை வச்சு தூக்கிடுவோம்” என்று இரகசியம் பேச… அவருக்கும் அதுவே சரியென தோன்றியது.

“சரி தம்பி… நீ வெளியூர்க்காரன்… உன்னை நாங்க விட்டுடறோம்… ஆனா அவளை எங்க கிட்டே ஒப்படைச்சுட்டு நீ கிளம்பு”

“அது முடியாது… இப்பவே அவளையும் என்னோட அழைச்சுட்டு நான் போறேன்”

“தம்பி… நாங்க பொறுமையா பேசிட்டு இருக்கிறதால  என்ன வேணா செய்யலாம்னு நினைக்காதீங்க.. இவ எங்க ஊர் பொண்ணு… அவளை எதுக்கு நீங்க அழைச்சுட்டு போகணும்? அப்படின்னா அந்த பேப்பரில் சொல்லி இருக்கிறது உண்மை தானோ?”

“நிறுத்துங்க” மொத்த ஊரே அதிரும்படி கத்தினான் கெளதம்.

“…”

“எப்படிங்க வாய் கூசாம அவளைப் பத்தி இப்படி ஒரு வார்த்தை சொல்றீங்க? இந்த ஊர் பொண்ணுங்க அவ… எப்படி கொஞ்சம் கூட யோசிக்காம இப்படி வார்த்தையில் நெருப்பை அள்ளி கொட்டுறீங்க? அந்த பொண்ணு அப்படி என்ன தான் தப்பு செஞ்சுது?”

“தப்பு செஞ்சது இந்த பொண்ணு இல்லை… அவளை பெத்தவங்க”

“அதுக்கு இந்தப் பொண்ணை எதுக்கு இப்படி பாடாய் படுத்தறீங்க?”

“டேய்! நீ வெளியூர்க்காரன்… போனா போகுதுன்னு உனக்கு உயிர் பிச்சை கொடுக்கிறோம்… முதலில் அவளை எங்க கிட்டே ஒப்படைச்சுட்டு ஒழுங்கா ஓடிடு”

“இனியும் இந்த ஊரில் மருதாணியை விட்டு வைக்க எனக்கு என்ன பைத்தியமா பிடிச்சு இருக்கு”

“என்ன செய்றதா உத்தேசம்?”

“என்னோட அழைச்சுட்டுப் போகப் போறேன்”

“எதுக்கு… வெளியே போய் எங்க ஊர் மானத்தை வாங்குறதுக்கா? அவளை இந்த ஊரை விட்டு உயிரோட வெளியே அனுப்பினா எங்க ஊரை ஒரு பய மதிக்க மாட்டான்”

“என்னைத் தாண்டி அவ மேல ஒரு துரும்பு கூட விழ அனுமதிக்க மாட்டேன்”

“அதையும் பார்ப்போம்”

“வந்து பாருங்கடா தெரியும்”

“டேய்! கல்யாணமாகாத பொண்ணை நீ கூட்டிட்டுப் போய் என்ன செய்ய போற? அந்த பேப்பரில் சொல்லி இருக்கிறதை உண்மையாக்கப் போறியா?” என்று அதீத நக்கலுடன் கேட்ட முத்தையா கௌதமின் அனல் தெறிக்கும் பார்வையில் வாயை இறுக மூடிக் கொண்டான்.

“நான் என்ன கேடு கெட்ட குடும்பத்தில் பிறந்தவனா? அடுத்த வீட்டு பெண்ணை கூட்டிட்டுப் போக… என் பெண்டாட்டியை கூட்டிட்டுப் போறேன்.. உங்களால முடிஞ்சா தடுத்துப் பாருங்க” என்று சொன்னவன் இங்கே வந்த புதிதில் மருதாணி சொல்லி இருந்த அந்த கருகமணி மாலையை எடுத்தவன் ஊராரின் கண் முன்னாலேயே துவண்டு போய் படுத்திருந்த மருதாணியின் கழுத்தில் போட்டு விட்டான்.

நொடிப்பொழுதில் நடந்து விட்ட இந்த செய்கையை அந்த ஊரில் இருந்த யாருமே எதிர்பார்க்கவில்லை என்பது அவர்களின் அதிர்ந்த தோற்றத்தில் இருந்தே தெரிந்தது.

“உங்க ஊர் வழக்கப்படி இது ஒருமுறை கட்டிட்டா அந்த பையனுக்கும், பொண்ணுக்கும் கல்யாணம் நடந்ததா தானே அர்த்தம்… இனி நான் என் பொண்டாட்டியை அழைச்சிட்டுப் போறேன். இனி யாரும் உங்க ஊரைப் பத்தி தப்பா பேச மாட்டாங்க. மீறி பேசுனா சொல்லுங்க… அவங்க இரண்டு பேரும் கணவன், மனைவின்னு” அழுத்தத்துடன் சொன்னவன் மருதாணியை தன்னுடைய கரங்களில் தாங்கியவாறே… தனக்கு வேண்டிய அத்தியாவசிய பொருட்களை மட்டும் எடுத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்ப முற்பட்டான்.

ஊர் மக்கள் அனைவரும் உறைந்து போய் நிற்க முதலில் மீண்டது முத்தையா தான்.

‘அவளை பழி வாங்க எனக்கு கிடைச்சு இருப்பது இந்த சந்தர்ப்பம் மட்டும் தான்.. இதையும் கை நழுவ விட்டுட்டா அதுக்கு அப்புறம் இவளை ஒண்ணும் செய்ய முடியாது.’

“அய்யா… அவன் பாட்டுக்கு ஏதேதோ பேசுறான்… அவ கழுத்தில நம்ம மக்கள் கட்டுற கருகமணி தாலியையும் கட்டிட்டான்… இப்போ கூடவே கூட்டிட்டு போறேன்னு சொல்றான்.. நீங்க எதுவுமே பேசாமல் சும்மா இருக்கீங்களே? அவனை தடுத்து நிறுத்துங்க… மருதாணி எனக்கு நிச்சயம் செஞ்ச பொண்ணு”

“முத்தையா… புரிஞ்சு தான் பேசறியா? எப்போ அவன் தாலி கட்டிட்டானோ இனி நம்ம ஊர் வழக்கப்படி அவங்க இரண்டு பேரும் புருஷன் பொண்டாட்டி… உனக்கு நிச்சயம் செஞ்சது எல்லாம் இனி கணக்கில் வராது. அதுவும் இல்லாம அந்த பையன் சொல்ற மாதிரி இவங்க இரண்டு பேரையும் வெட்டி கொன்னாலும் கூட ஊர் உலகம் என்ன சொல்லும்? விஷயம் வெளியே தெரிஞ்சதால கொன்னுட்டோம்ன்னு தான் சொல்வாங்க. ஆனா இனி அப்படி யாரும் சொல்ல முடியாது… அவங்க இரண்டு பேருக்கும் இப்போ கல்யாணம் முடிஞ்சிடுச்சு”

“தலைவரே… நீங்களே இப்படி சொன்னா எப்படி? அவன் என்ன நம்ம ஊர்க்காரனா? அவன் எப்படி நம்ம கருகமணியை எடுத்து அவளுக்கு கட்டலாம்? அது எப்படி செல்லும்?”

“முத்தையா… அவன் எந்த ஊரா இருந்தா என்ன? அவன் கட்டினது தாலி தானே.. அதை யாராலயும் மறுக்க முடியாது. கல்யாணம் செஞ்சுகிட்டவங்களை பிரிச்சு வைக்கிற பழக்கம் நம்ம இனத்தில கிடையாது. அவ புருஷன் கூட போகட்டும்”

“அப்படின்னா அவ செஞ்ச தப்புக்கு தண்டனை…”

“போதும் முத்தையா.. இதுநாள் வரை அவளுக்கு நாம செஞ்சதே போதும்” என்றவரின் கண்கள் மருதாணியின் தந்தையை நினைத்து ஒரு நிமிடம் கலங்கியது.

உள்ளூர் மக்கள் தலைவரின் பேச்சுக்கு கட்டுப்பட்டு விலகி வழி விட, மருதாணியை அணைவாக தாங்கிக் கொண்டிருந்த கௌதமின் நெஞ்சில் புயல் வீசிக் கொண்டிருந்தது.

‘வீட்டில் எல்லாரையும் எப்படி சமாளிக்கிறது… முக்கியமா அம்மா… ரொம்பவே கலங்கிப் போய்டுவாங்களே’

அதே நேரம் விசாலம் அடுத்த கட்டத்திற்கு காய்களை நகர்த்தி விட்டு கௌதமின் வருகைக்காக ஆவலுடன் காத்திருக்கத் தொடங்கினார்.

Facebook Comments Box
Click to rate this post!
[Total: 1 Average: 4]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here