ஸ்ரீரங்கத்து ராட்சசி அத்தியாயம் 1

2
1619

ஸ்ரீரங்கத்து ராட்சசி கதை முழுக்க முழுக்க சஸ்பென்ஸ் மற்றும் திரில்லரை அடிப்படையாகக் கொண்டு எழுதி இருக்கிறேன். இதில் இருக்கிற அனைத்தும் என்னுடைய சொந்த கற்பனை மட்டுமே. யாரையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப்பட்டது அல்ல. வெறும் புனைவுக் கதை.

இந்த கதையை படித்து விட்டு வாசகர்கள் தங்களுடைய கருத்தை என்னுடைய மெயில் ஐடியில் பகிர்ந்து கொள்ளலாம்.

[email protected]

 

அன்புடன்,

மதுமதி பரத்

 

  அத்தியாயம் 1

 

பச்சை பளிங்கு கற்களினால் செதுக்கியது போல இருந்த  அரங்கநாதன் பள்ளி கொண்டிருக்கும் ஸ்ரீரங்கம் காவேரி ஆற்றில் பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் நீந்தி மகிழ்ந்து கொண்டிருக்க, ஒரே ஒரு கன்னி மட்டும் ஆற்றின் கரையில் இருந்தவாறே பலத்த சிந்தனையில் இருந்தாள்.

‘காலை உள்ளே வைக்கலாமா? இல்ல… வழக்கம் போல கரையில் உட்கார்ந்து கப்பில் தண்ணியை எடுத்து ஊத்தி குளிச்சுக்கலாமா?’

“அடியே மது… எவ்வளவு நேரம் இப்படியே இருப்ப… ஆத்துக்கு குளிக்க வந்து அரைமணி நேரம் ஆகுது… இன்னும் யோசிச்சுகிட்டே இருந்தா விளங்கிடும்.. சீக்கிரம் வாடி”

“இல்லை சாந்திக்கா… தண்ணியில் இறங்கினா மீனு கடிக்கும், நண்டு பிறாண்டும், பாம்பு…”

“ஆமா காவேரில அனகோண்டா பாம்பு வந்து உன்னை மட்டும் முழுங்கப் போகுது. இத்தனை பேர் இங்கே குளிக்கறோம்.. உன்னை மட்டும் தனியா வந்து மீன் கடிக்கப் போகுதா? ஒழுங்கா வந்து குளி… ஸ்ரீரங்கத்தில் பிறந்துட்டு இப்படி தண்ணியைக் கண்டு பயப்படுறியே.. வெளியே தெரிஞ்சா சிரிக்கப் போறாங்க… சீக்கிரம் கிளம்பு… நேரமாகுது பார்”

‘ஹுக்கும்… இவங்களுக்கு என்ன? நான் எங்க வீட்டுக்கு ஒரே பொண்ணு… மீனு கடிச்சு ஏதாவது ஆச்சுன்னா… அப்புறம் எங்கப்பாவுக்கும், அம்மாவுக்கும் யார் பதில் சொல்றது?’என்று மனதுக்குள் நொடித்துக் கொண்டாள் நம் கதையின் நாயகி மதுர வாணி.

“அதெல்லாம் யார் கேட்க போறாங்க அக்கா.. நீங்க இந்த ரகசியத்தை காப்பாத்துங்க … அது போதும்” என்று அசட்டையாக சொல்லியபடி கரையில் அமர்ந்தே குளித்து முடித்தாள். துவைத்த துணிகளை வாளியில் எடுத்து வைத்து விட்டு, மறைவான இடத்திற்குப் போய் வேறு உடையை மாற்றிக் கொண்டு வந்து சேர்ந்தாள்.

வீடு வந்து சேரும் வரையிலும் சாந்தி அக்கா ஏதேதோ பேசிக் கொண்டே வந்தார்கள். அவளின் கவனம் தான் அங்கே பதியவே இல்லை.

சந்தோச மிகுதியில் தரையில் கால் பதியாமல் குதித்துக் கொண்டிருந்தாள் மதுர வாணி. பின்னே சும்மாவா? அன்றைய தினம் சாதாரணமான நாள் அல்லவே! அவளுக்கும், அவளின் அருமை மாமா மகன் சிரஞ்சீவிக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெறப் போகும் நாள் அல்லவா…

முக்கியமான நாளிற்காக எத்தனை தூரம் அவள் மெனக்கெடுகிறாள் என்பது உங்களுக்குத் தெரியாது இல்லையா? அதிகாலை(!) ஒன்பது மணிக்கே எழுந்து விட்டாள் மதுர வாணி. ஆம் அவளைப் பொறுத்தவரை ஒன்பது மணி அதிகாலை தான். அதற்கு காரணம் அவளது பழக்கம்.

கல்லூரி படிக்கும் வரையிலும் அவளுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. படிப்பை முடித்த கையுடன் சென்னையில் ஒரு கால் சென்டரில் வேலைக்கு சேர்ந்தாள். அங்கே இரவு, பகல் மாறி மாறி வேலை நேரம் அமைய… கொஞ்சம் கொஞ்சமாக அவளின் தூக்கம் கெடத் தொடங்கியது.

திருச்சியில் இருந்து சென்னைக்குப் போய் ஹாஸ்டலில் தங்கி வேலை பார்த்து வந்த மகளைப் பார்த்த வாணியின் பெற்றோர்கள் முருகனும், காமாட்சியும் அவளின் தோற்றத்தைக் கண்டு அரண்டு போனார்கள். சரியாக தூங்காமல் கண்களை சுற்றி கருவளையம் தோன்றி இருக்க… சாப்பிட்டு பத்து நாள் ஆனதைப் போல இருந்த அவளின் தோற்றத்தைக் கண்டு பயந்து போய் கையோடு அவளை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு திரும்பி விட்டனர். அத்தோடு அவளின் சென்னை வாழ்க்கை முடிவுக்கு வந்து விட்டது.

ஊருக்கு திரும்பிய பிறகு அவளுக்கு சரியாக தூக்கம் வருவதற்காக சிகிச்சை எடுத்துக் கொள்ள துவங்கி இருந்தாள். ஆனால் பலன் என்னவோ பூஜ்ஜியம் தான்.

பெற்றோர்கள் அவளது உடல்நிலை குறித்து கவலை கொள்ள… மருத்துவர்கள் நாளாக நாளாக இது தானாகவே சரியாகிவிடும் என்று உறுதி அளித்து இருந்ததால் தங்களின் கவலையை குறைத்துக் கொண்டனர்.

இன்று மாலை அவளுக்கும், சிரஞ்சீவிக்கும் திருமண நிச்சயதார்த்தம். அவளின் வீடே பரபரப்பாக இருந்தது. சொந்த பந்தங்களில் ஆண்கள் வீட்டினுள் ஏதேதோ பொருட்களை ஏற்றுவதும், இறக்குவதுமாக இருக்க… பெண்கள் தங்களின் ராஜாங்கமான சமையல் அறையில் கூடி இருந்தனர்.

எளிமையான அந்த வீடு முழுக்க… அன்பான மனிதர்களால் நிரம்பி வழிந்தது. ஒவ்வொருவரும் தங்களுக்கு பிடித்த ஒரு வேலையை இழுத்து போட்டுக்கொண்டு செய்ய… விருந்தினர்கள் அனைவருக்கும் வீட்டிலேயே காலை டிபனும், மதிய உணவும் தயாரானது.

வாணிக்கு என்று தனியே எந்த விதமான வேலைகளும் இல்லாததால் அவளது கவனம் முழுக்க முழுக்க அவளின் மொபைலில் மட்டுமே இருந்தது.

‘ஜீவா இன்னும் மெசேஜ் பண்ணவே இல்லையே… மத்த நாள் தான் வேலை.. வேலைன்னு இருப்பார்… இன்னிக்கு கூடவா?.. வரட்டும்.. இன்னிக்கு இருக்கு மகனே உனக்கு கச்சேரி… அத்தை மகளையே கல்யாணம் செஞ்சுகிட்டா இப்படித்தான் அக்கறை இல்லாத மாதிரி இருப்பியா? ஒரு போன் இல்லை.. மெசெஜ் இல்லை.. அடேய்! போலீஸ்காரா… நீ வா உனக்கு இருக்கு தீபாவளி’ என்று திட்டித் தீர்த்தவள் போனையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

‘நாமளே போன் செஞ்சு பேசிட வேண்டியது தான்…’ என்று எண்ணியவள் போனில் அவனுக்கு அழைப்பு விடுக்க…முழு ரிங் போனது. ஆனால் அவன் எடுக்கவில்லை. மேலும் சில முறைகள் முயன்று பார்த்து விட்டு சோர்ந்து போனாள் மதுர வாணி.

‘என்னாச்சு? ஏன் எடுக்க மாட்டேங்கிறான்? ஒருவேளை போனை மறந்து எங்கேயும் வச்சுட்டானோ? ம்ஹும்… அதுக்கு வாய்ப்பே இல்லையே… போலீஸ் டிபார்ட்மெண்டில் சேர்ந்த பிறகு… எந்த நேரம் யார் வேணும்னா கூப்பிடலாம்னு சொல்லி போனை பக்கத்திலேயே வச்சு இருப்பான்… ஒண்ணுக்கு இரண்டு போன் வேற… அப்புறமும் ஏன்?’ தனக்குத்தானே கேள்வி கேட்டுக் கொண்டாள் மது.

மாலை ஐந்து மணி அளவில் நிச்சயதார்த்தம்… மணி ஒன்றை நெருங்கிக் கொண்டிருக்கிறது இன்னும் மாப்பிள்ளை வீட்டினர் யாரும் வந்து சேரவில்லை. மதிய உணவு அவர்களுக்கும் சேர்த்து தான் தயாராகிக் கொண்டிருக்கின்றது. எல்லாருமே உறவினர்கள் தான் எனும்போது இதுவரையில் சின்ன முணுமுணுப்பு கூட இல்லாமல் எல்லா வேலையும் கிரீஸ் போட்ட இயந்திரம் போல நடந்து கொண்டிருக்கிறது.

மகளின் சோர்ந்த முகத்தை பார்த்த முருகேசன் , மாப்பிள்ளை வீட்டினருக்கு போன் செய்து பேச… இன்னும் சில நிமிடங்களில் அவர்கள் வந்து சேர்ந்து விடுவார்கள் என்பது தெரியவரவே… விஷயத்தை வீட்டினருக்கு சொல்லிவிட்டு அடுத்த வேலைகளை பார்க்கத் தொடங்கினார்.

ஓரக்கண்ணால் மகளின் நிம்மதி பூத்த முகத்தை அளவிட்டபடியே …

‘நீ வாடா… உன்னை கவனிச்சுக்கிறேன்’ என்று மனதுக்குள் அவனை திட்டித் தீர்த்தாள். சமையல் முடிந்ததும் முதல் ஆளாக அவளை உண்ண வைத்து விட்டு அவளுக்கு அலங்காரம் செய்யத் தொடங்கினார்கள்.

பார்லரில் இருந்து யாரும் வராமல் உறவுப் பெண்களே அவளது மேக்கப் விஷயத்தை கையாண்டு கொண்டிருந்தார்கள். சுவற்றில் வெள்ளையடிப்பது போல இல்லாமல் அவளின் கருந்திராட்சை விழிகளுக்கு மையிட்டு லேசாக பவுடரால் ஒற்றி எடுத்ததுமே அவளது அழகை பன்மடங்காக கூடியது.

மதுரவாணிக்கு ஆளை தூக்கி அடிக்கும் நிறம் இல்லை… தென் தமிழகத்திற்கே உரிய மாநிறம். களையான முகம். இன்றைய அவளது விசேஷ அலங்காரம் அவளது அழகை மேலும் கூட்டிக் காட்டியது.

அவளது அலங்காரம் முடிவடைந்த அதே நேரம் வீட்டு வாசலில் ஒரே பரபரப்பு…

“மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்தாச்சு…. யம்மாடி காமாட்சி என்ன தான் வர்றது உங்க அண்ணனா இருந்தாலும் இப்போ மாப்பிள்ளை வீட்டு ஆளுங்க… முருகனும் நீயும் வாசலுக்குப் போய் சந்தனம், குங்குமம் கொடுத்து உள்ளே அழைச்சுட்டு வாங்க” என்று உறவில் வயதில் மூத்த பெண்மணி அறிவுறுத்த… வேலைகளை எல்லாம் அப்படியே போட்டு விட்டு பெற்றவர்கள் இருவரும் படபடப்புடன் ஓடுவதை வியப்புடன் பார்த்தாள் மதுரவாணி.

‘நேற்று வரை அண்ணன் வீடாக இருந்த பொழுது வராத பரபரப்பு இப்பொழுது சம்பந்தி ஆனதும் வந்துவிட்டதோ’ என்று எண்ணி சிரித்துக் கொண்டாள்.

அவளது அறையில் இருந்த ஜன்னல் வழியாக மெதுவாக எட்டிப் பார்த்தாள். மாமா தர்மராஜ், அத்தை ரேணுகாதேவி, பாட்டி ரஞ்சிதம் … அப்புறமாய் சில முக்கிய உறவுகளும் அவர்களோடு சேர்ந்து வேனில் இருந்து இறங்க…

‘எல்லாம் சரி…. முக்கியமான கடன்காரனைக் காணோமே’ கோபமும், பரிதவிப்பும் போட்டி போட வாசலில் எட்டிப் பார்த்தாள் மதுரவாணி.

எல்லாரும் இறங்கிய பின் கடைசியாக இறங்கினான் அவளது அருமை மாமா மகன் சிரஞ்சீவி.

முகத்தில் மருந்துக் கூட சிரிப்பில்லை.

‘இவன் தான் கல்யாண மாப்பிள்ளைன்னு யாரும் சத்தியம் செஞ்சு சொன்னா கூட நம்ப முடியாது. இப்ப என்ன இவனுக்கு கட்டாய கல்யாணமா நடக்குது’ அவளுக்கு கோபம் துளிர் விட்டது.

அவளது பார்வை அவன் மீதே பதிந்திருக்க… சந்தனத்தைக் கூட தொட்டுக் கொள்ளாமல் வேகமாக வீட்டுக்குள் வந்தவன் நேராக வீட்டின் பின்புறத்தில் உள்ள குளியலறையை நோக்கி விரைய… அவள் திருதிருத்தாள்.

‘இப்போ எதுக்கு பாத்ரூம்குள்ளே போறார்?’

ஐந்தே நிமிடங்களில் குளித்துவிட்டு மாற்றுடை அணிந்து வந்தவன் மறக்காமல் மதுரவாணி நின்று கொண்டிருந்த ஜன்னல் புறம் பார்வையை செலுத்தி அவளை நோக்கி குறும்புடன் கண் சிமிட்டினான்.

‘திருடன்’ கன்னம் சிவக்க அவசரமாக ஜன்னலில் இருந்து நகர்ந்து கட்டிலில் அமர்ந்து கொண்டாள் மதுரவாணி.

நெஞ்சம் படபடக்க சில நிமிடங்கள் அமர்ந்து இருந்தவள் பிறகு தான் உணர்ந்தாள் அவன் வேண்டுமென்றே கண் சிமிட்டி தன்னுடைய கோபத்தை திசை திருப்பி இருக்கிறான் என்பது புரிய… முன்னைக் காட்டிலும் அதிக கோபம் துளிர் விட்டது.

மேல் மூச்சு , கீழ் மூச்சு வாங்க… காதில் புகை வராத குறையாக  தன்னை மறந்து அமர்ந்து இருந்தவளை வித்தியாசமாக பார்த்தார் காமாட்சி…

“என்னாச்சுடி உனக்கு? ஏன் இப்படி உட்கார்ந்திருக்க?”

“ம்ம்ம்..வேண்டுதல்… எல்லாம் உங்க அருமை அண்ணன் மகனால தான்.”

“அவனுக்கு என்னடி? அருமையான பிள்ளை… எங்க அண்ணனை மாதிரியே சொக்கத் தங்கம்” தாயின் குரலில் இருந்த பெருமிதம் அவளை தீவிர கோபத்திற்கு உள்ளாக்கியது.

“ஏம்மா…ஏற்கனவே நான் அவன் மேல கடுப்பில் இருக்கேன். இப்போ வந்து உங்க அண்ணன் பெருமையை பேசிட்டு இருக்கீங்களா?”

“வாயிலேயே போடுவேன்… அந்த வீட்டுக்கு மருமகளா போகப் போற.. இனி எப்பவும் அவங்க வீட்டு ஆட்கள் எல்லாரையும் மரியாதையா பேசணும் புரிஞ்சுதா?” என்றார் குரலில் கண்டிப்புடன்.

“முதல்ல அவன் என்ன செஞ்சான்னு தெரியுமா?”

“எடு விளக்கமாத்த…. இன்னும் கொஞ்ச நேரத்தில் இரண்டு பேருக்கும் கல்யாணம் நிச்சயம் ஆகப் போகுது… இன்னமும் என்ன கொஞ்சம் கூட மட்டு மரியாதை இல்லாம அவன், இவன்னு பேசிக்கிட்டு இருக்கே…” என்று அவளை வறுத்து எடுத்த காமாட்சியின் குரலில் அனல் தெறித்தது.

“இன்னும் நிச்சயம் ஒண்ணும் நடந்து முடியலை… தெரியும் தானே… இதோ பாருங்கம்மா.. என்னை அடக்குற வேலை எல்லாம் வச்சுக்காதீங்க… இதுநாள் வரை நான் எப்படி இருந்தேனோ… அப்படித்தான் இப்பவும் இருப்பேன்…”

“எப்படி பேசுறா பாரு… ராட்சசி…கொஞ்ச நேரம் வாயை மூடிக்கிட்டு சும்மா  இருக்கிறாளா பாரு… பொண்ணா நீ?”

“நான் எதுக்கு சும்மா இருக்கணும்?… நிச்சயம் நடந்தா நான் வாயைத் திறந்து பேசக் கூடாதா என்ன?..” சிலுப்பிக் கொண்டாள் மதுர வாணி.

“இப்படி பேசிப்பேசியே என்னை அரை உசுரு ஆக்கிடுவா போலவே…கர்த்தரே!”

“நீ துணைக்கு அல்லாவை கூட கூப்பிட்டுக்கோ எனக்கு பிரச்சினை இல்லை… எனக்கு இப்போ அந்த தடியனோட பேசி ஆகணும்”

“நிச்சயம் முடிஞ்ச பிறகு பேசிக்கோ”

“அதெல்லாம் முடியாது… நான் முதல்ல பேசணும்..அப்புறம் தான் நிச்சயம் எல்லாம்”

“பிடிவாதம் பிடிக்காதே வாணி…”

“அம்மாஆஆஆ….”

“ரொம்ப முக்கியம்னா போனில் பேசித் தொலைக்க வேண்டியது தானே…”

“காலையில் இருந்து ஒரு நூறு முறையாவது போன் செஞ்சு இருப்பேன். உங்க அருமை அண்ணன் மகன் எடுத்தா தானே”

“சரி… நான் வேணும்னா ஜீவாவை உனக்கு பேச சொல்றேன்… போதுமா?”

“முதல்ல அவனை பேச சொல்லுங்க.. அப்புறம் பார்க்கலாம்”

“வாயை அடக்க மாட்டியா நீ… சரி சரி… நான் போய் உனக்கு போன் பண்ண சொல்றேன்… நீ அதுவரை கொஞ்சம் அடங்கி ஒடுங்கி உட்கார்” என்றவர் வேறுவழியின்றி சிரஞ்ஜீவியைத் தேடிப்பிடித்து தகவலை தெரிவிக்க… லேசான சிரிப்புடன் போனை எடுத்து அவளுக்கு அழைத்தான்.

 

 

 

 

 

Facebook Comments Box
Click to rate this post!
[Total: 0 Average: 0]

2 COMMENTS

  1. ரொம்ப நாளா படிக்கனும் நினச்ச கதை வாவ் சூப்பர் மதுரா செம வாலு போலவே சூப்பர் பேபி😍👌👌👌👌

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here